கட்டுரை, அரசியல், வரலாறு 7 நிமிட வாசிப்பு

அடுத்த காங்கிரஸ் தலைவர்

ப.சிதம்பரம்
26 Sep 2022, 5:00 am
1

காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கத்துக்கு மாறாக – அழைப்பே இல்லாமல் மூக்கை நுழைக்கிற அளவுக்கு – இந்த முறை கட்சிக்கு வெளிவட்டாரங்களில் ஆர்வம் காட்டப்படுகிறது. பாஜகவின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டபோது’ அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் சரி - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவருமே சரி – அதை ஒரு பொருட்டாகவே கருதி கவனம் செலுத்தியதே இல்லை. நட்டாவைத் தேர்ந்தெடுத்த ‘வாக்காளர்கள் மன்றம்’ எது, ‘வாக்காளர் பட்டியல்’ என்று ஏதாவது இருக்கிறதா என்று யாருமே கேட்கவும் இல்லை.

பாஜகவின் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் யார் என்றோ, நட்டா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாரா என்றுகூட எவருமே கவலைப்படவில்லை. பாஜக  ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும் உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக தன்னைப் பெருமையுடன் அறிவித்துக்கொண்டபோதிலும் - அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் என்பது எவராலும் பேசப்படாமலேயே மிகச் சாதாரணமாக நடந்து முடிந்தது.        

இப்போது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜகவும் ஊடகங்களும் காட்டும் அசாதாரண ஆர்வம் இரண்டு உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. ‘காங்கிரஸ் கட்சியே இல்லாத இந்தியா’ என்ற முழக்கமானது சிலருடைய கற்பனை - என்றைக்கும் நிறைவேறாத ஆசை என்பது முதல் உண்மை; இரண்டாவது, காங்கிரஸ் கட்சி நிகழ்த்திவரும் ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ (பாரத் ஜோடோ யாத்ரா) பாஜகவின் நிம்மதியைக் குலைத்து, அதை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது; காங்கிரஸ்  என்றாலே சில ஆண்டுகளாக அசட்டையாக இருந்த செய்தி ஊடகங்களை எழுந்து உட்கார்ந்து, என்ன நடக்கிறது என்று உற்று கவனிக்க வைத்திருக்கிறது.

கட்சியும் காந்திகளும்

காங்கிரஸ் தன்னுடைய தேசியத் தலைவரை அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்போகிறது. யார் தலைவராக வருவார் என்று என்னால் கூற முடியாது. கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும், 2019 ஜூலை மாதம் தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்திதான் மீண்டும் கட்சித் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும் என்பதில் ஒரு மனதாக இருக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தியோ, கட்சியின் தேசியத் தலைவராக மீண்டும் பதவியேற்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடக் கூறிவிட்டார்.

ராகுல் காந்தி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் மேலும் ஒருமுறை இறுதியாக முயற்சிப்பார்கள்; அதற்குப் பிறகும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டால், அவருடைய எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து கட்சித் தலைவர்கள் தங்களுடைய வற்புறுத்தலை நிறுத்திக்கொண்டு கட்சிப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியுள்ள கட்சியின் ‘வாக்காளர் மன்றம்’ புதியவரை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்து, இடைக்காலத் தலைமைத்துவம் என்ற இப்போதைய நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதால் கட்சி அவர்களை ஒதுக்கிவிட்டது என்றோ, அவர்கள் கட்சியைக் கைவிட்டுவிட்டார்கள் என்றோ பொருள் அல்ல என்பதே என் கருத்து.

மக்கள் தலைவரும் கட்சித் தலைவரும்

காங்கிரஸின் வரலாறு அரிய பாடங்களைத் தன்னகத்தே கொண்டது. இந்திய அரசியல் வானில்  காந்தி தோன்றிய பிறகு, காங்கிரஸின் தன்னிகரில்லா 'மக்கள் தலைவர்' அவர் அங்கீகரிக்கப்பட்டார். காங்கிரஸுக்குக் கிடைத்த அரும்பெரும் தலைவர்கள் பலரில் காந்தியே மிக உயர்ந்த மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். அதேசமயம், 1921 முதல் 1948 வரையில் காங்கிரஸ் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட 14 ஆளுமைகளைக் 'கட்சித் தலைவர்' ஆகப்  பெற்றிருந்தது. சித்தரஞ்சன் தாஸ், சரோஜினி நாயுடு, எஸ்.சீனிவாச ஐயங்கார், முக்தார் அகமது அன்சாரி, மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திரபோஸ், அபுல்கலாம் ஆசாத், ஆசார்ய கிருபளானி போன்ற மதிப்புமிக்க ஆளுமைகள் கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்தனர்.

காங்கிரஸின் நேரடி உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியே இருந்துகொண்டு முழு மனதோடு அதன் நடவடிக்கைகளை ஆதரித்துவந்த சாமானியர்களுக்கும் கட்சியின் மக்கள் தலைவருக்கும், கட்சியின் நிர்வாகத் தலைவருக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருந்தது, காங்கிரஸ் கட்சியின் மக்கள் தலைவர் காந்தி, மற்றவர் தேர்ந்தெடுக்கப்படும் கடையின் நிர்வாகத் தலைவர் என்று. இப்படிச் செயல்படும் இருவருமே ஒருவர் மீது  இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்த முனைவது  இல்லை.

காங்கிரஸின் இந்த ஏற்பாடு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும்கூட 1948 முதல் 1964 வரையிலும் தொடர்ந்தது. ஜவாஹர்லால் நேருவை காங்கிரஸின் மாபெரும் மக்கள் தலைவராக அனைவரும் அங்கீகரித்தார்கள். அவர் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத் தலைவர் பதவியில் ஏழு பேர் அடுத்தடுத்து  காங்கிரஸை நிர்வகித்தார்கள். இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1965 முதல் 1984 வரையிலும்கூட இதே நிலைதான் நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மக்கள் தலைவராக இந்திரா காந்தி செயல்பட்ட அதே காலத்தில் எட்டு பேர் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டார்கள்.

மிகப் பெரிய நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கத்தில் இத்தகைய ஏற்பாடுகளே அர்த்தச் செறிவானவை.

கட்சியின் மக்கள் தலைவர் கட்சிக்குத் தலைமைத்துவத்தை அளிப்பதுடன், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுத்து அதை மக்களுடனும் கட்சித் தொண்டர்களுடன் பகிர்ந்துகொள்வார், கட்சிக்குத் தேர்தலில் ஆதரவு தர மக்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்வார். கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத் தலைவரோ கட்சியின் அமைப்புகள் அனைத்தையும் பழுது நீக்கி – ஒருங்கிணைத்துச் செயல்பட வைப்பதுடன் தேர்தல் காலத்தில் மக்களுடைய ஆதரவை அப்படியே தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையை மேற்கொள்வார்.

இந்த இரு பதவிகளும் ஒன்றுக்கொன்று ஆதரவானவை, ஒன்றையொன்று வலுப்படுத்துபவை. இவ்விரு பதவிகளுக்குரிய பணிகளையும் செய்யும் ஆற்றலுடன் ஒரு தலைவர் கிடைத்துவிட்டால் அது அந்த அரசியல் கட்சியின் அதிருஷ்டம்; அப்படியில்லை, இரு வெவ்வேறு தலைவர்கள்தான் அந்தக் கடமையைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றால் - அதுவே புத்திசாலித்தனம், நடைமுறைக்கு அதிகம் ஏற்றது.

மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்

மக்கள் தலைவர்கள் ஈர்த்திழுப்பவர்களாக இருப்பார்கள். காந்தி தன்னுடைய புதுமையான அரசியல் சித்தாந்தம் மூலம் அகிம்சை, ஒத்துழையாமை, சட்ட மறுப்பு இயக்கம் ஆகிய போராட்ட முறைகளைக் கையாண்டு, இறுதியாக ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற விரிவான இயக்கம் மூலமாக வெற்றி கண்டார். 

இப்படி நேரு உலக அரங்கில் அணிசாராக் கொள்கை, அரசு நிர்வாகத்தில் மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய உயர்ந்த லட்சியங்களைக் கடைப்பிடித்து மக்களுடைய மனங்களில் நீங்காத இடம்பிடித்தார். நாட்டை முன்னேற்ற முடியும் என்று வலுவாக கற்பனை செய்யுங்கள் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்த இந்திரா, வங்கிகளைத் தேசியமயமாக்குவது – அனைவருக்கும் வீட்டு வசதி செய்து தருவது போன்ற சோஷலிஸ நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் மேற்கொண்டார். பாஜகவிலும்கூட இதற்கு ஓர் உதாரணம் உண்டு.  குமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும், தங்க நாற்கரத் திட்டத்தைக் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சிப் பாதையை விரிவுபடுத்தினார் வாஜ்பாய். உத்வேகம் தரும் ஒரு சொற்சொடர் (நேரு - விதியுடன் ஒரு பயணம்) அல்லது பிடித்திழுக்கக்கூடிய ஒரு முழக்கம் (இந்திரா - வறுமையே வெளியேறு) அல்லது விரிவான ஒரு தொலைநோக்கை வெளிப்படுத்தும் சொல்லாடல் (வாஜ்பாய் - இன்சானியாத்-ஜமூரியாத்-காஷ்மீரீயாத்) மூலம் தன்னோடு சேர்த்துக் கட்சியையும் ஒரு பெரும் உயரத்துக்குத் தலைவரால் கொண்டுசெல்ல முடியும்.

கட்சியின் செல்வாக்குமிக்க மக்கள் தலைவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத் தலைவர்களுக்கும் கடமைகள் வெவ்வேறானவை.

கட்சியின் நிர்வாகத் தலைவர், மண்ணில் ஆழ வேரூன்றிய – நாட்டு நடப்புகளில் நல்ல ஞானம் உள்ளவராக இருப்பது அவசியம், கட்சித் தொண்டர்களுக்கு உரமேற்றி வழிநடத்த வேண்டும், கட்சியின் நலன் கருதி கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நிர்வாக இயந்திரம் பழுதுபட்டும் – முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும், மிக விரைவாகவும் - விரிவாகவும் சீர்படுத்தப்பட வேண்டிய நிலையிலும் இன்றைக்கு இருக்கிறது.

இதைச் செய்ய கட்சியின் நிர்வாகத் தலைவருக்கு ஒவ்வொரு நாளும் அதிக மணி நேர உழைப்பும், அதிக மணி நேரப் பயணமும் அவசியம். கட்சியின் ஒவ்வோர் உறுப்பும் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கட்சித் தலைவர் இடைவிடாது கவனிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலையில் உள்ள குழுக்களிலிருந்து வட்டார காங்கிரஸ் நிர்வாகம் வரை, மாவட்ட அமைப்புகள் முதல் – மாநில அமைப்புகள் வரை எப்படிச் செயல்படுகின்றன என்று கண்காணித்து, தகுந்த ஆலோசனைகளையும் சரியாகச் செயல்படுவதற்கான யோசனைகளையும் வழங்க வேண்டும்.

கட்சியின் நிர்வாகத் தலைவர் தொண்டர்களைத் தகுந்த முறையில் வேலை வாங்க அரவணைத்துச் செல்ல வேண்டும் – தவறு செய்யும் நேரங்களில் உறுதியாகக் கண்டித்து திருத்த வேண்டும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் தலைவர்களுக்குப் பதவிகளும் பாராட்டும் தந்து கௌரவப்படுத்த வேண்டும், கடமை தவறுகிறவர்களையும் கட்சிக்கு விரோதமாக நடப்பவர்களையும் கண்காணித்து உரிய வகையில் தண்டிக்க வேண்டும். கட்சி இயந்திரத்தில் இனி பயன்படுத்தவே முடியாமல் பழுதடைந்த பிரிவுகளையும், காலத்துக்கு ஒவ்வாதவற்றையும் கழற்றி அகற்றிவிட்டு புதிய – வலிமையான உறுப்புகளைச் சேர்க்க வேண்டும்.

கட்சியின் நிர்வாகத் தலைவர் பதவி என்பது ஒரு நாளில் 24 மணி நேரம், ஒரு வாரத்தில் ஏழு நாள்கள், ஓராண்டில் 364 நாள்கள் இடைவிடாமல் பணி செய்தாக வேண்டிய பொறுப்பு மிக்கதாகும் (தலைவரின் பிறந்த நாளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு). பல கட்சிகளைக் கொண்ட இந்திய அரசியல் முறைக்கும், துடிப்பான நாடாளுமன்றச் செயல்பாட்டுக்கும் காங்கிரஸ் கட்சி இன்றியமையாதது. காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால் நாட்டில் ‘ஒரு கட்சி ஆட்சி’ அமலுக்கு வரும் – ஜனநாயகம் என்பதும் நடைமுறையில் கண்ணுக்குப் புலப்படாத ‘மாய மான்’ ஆக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியின் மக்கள் தலைவரே, கட்சியால்  தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத் தலைவராகவும் இருப்பாரா அல்லது இரு வெவ்வேறு தலைவர்கள் கட்சியை வழிநடத்துவார்களா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் - காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி ஜனநாயகத்தில் அதிலும் நிர்வாகத் தலைவர் தேர்தலில், மற்றவர்கள் காட்டும் வழக்கத்துக்கு மாறான ஆர்வத்திலும் ஏதோ நியாயம் இருக்கிறது என்றே தோன்றுகிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





பொதுவான குறைந்தபட்ச நிறுவன வரி விதிப்புஅறிவியல் ஆராய்ச்சிகுறை தைராய்டுஜோமிஆங்கிலச் சொல்ஸ்டென்ட்உடல் நலம்அரசின் கொள்கைஇளைஞர் அணிஔவையார்கிழக்கு மாநிலங்கள்குடல்மின் கட்டணம்பொன்முடி - அருஞ்சொல்யாரும் மன்னிப்பும் கேட்கவில்லைகற்பித்தல்தூக்கமின்மைகன்னியாகுமரிவரலாறு நமக்கு ஏன் முக்கியம்கிடைமட்ட நிதி ஒதுக்கீடுபி.ஏ.கிருஷ்ணன்உத்தவ் தாக்கரேகூட்டணி பிரதமர் என்பது பலகீனமா?: மூன்று நிமிடங்களிசட்டப் பேரவைத் தேர்தல் 2022மூன்றே மூன்று சொற்கள்கோர்பசேவ்: கலைந்த கனவாநயன்தாரா சேகல்உண்மையில் ஹிஜாப்தான் பிரச்சினையா?தைவானில் நெருப்பு அலைகள்உள்ளடக்கல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!