கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

அரசமைப்புச் சட்டத்தில் கை வைக்க நயவஞ்சகத் திட்டமா?

ப.சிதம்பரம்
23 Jan 2023, 5:00 am
1

கடந்த காலத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள், அதே தவறுகளைச் செய்ய சபிக்கப்பட்டவர்கள் என்றொரு முதுமொழி உண்டு; எட்மண்ட் பர்க், ஜார்ஜ் சன்டியானா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதைக் கூறியதாக மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், கார்ல் மார்க்ஸ் இதே பின்னணி தொடர்பாகக் கூறியிருப்பது அதிகம் செறிவானது, “வரலாறு திரும்பும் – முதல் முறை சோகமாக, பிறகு கேலிக்கூத்தாக!”

அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிக்கும் மூவர், சமீபத்திய வாரங்களில் அரங்க நாயகர்களாக இடம்பெற்று அரசமைப்புச் சட்டம் தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஜகதீப் தன்கர், இந்தியக் குடியரசின் துணைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், பிறந்த ஆண்டு 1951; ஓம் பிர்லா, மக்களவைத் தலைவர், பிறந்த ஆண்டு 1962; கிரண் ரிஜிஜு, சட்டம் – நீதித் துறை அமைச்சர், பிறந்த ஆண்டு 1971. முதலில் கூறப்பட்டவர், நெருக்கடிநிலை காலம் (1975-77) என்றால் என்ன என்று நேரடியாக அனுபவத்தில் தெரிந்து வைத்திருப்பார், இரண்டாமவர் அதைப் பற்றிக் கேள்விப்பட்டும் படித்தும் இருப்பார், மூன்றாமவர் அதை வரலாறாகப் படித்திருப்பார்.

அதிக சுவாரசியம் இல்லாததொரு சொத்து வழக்கு, 1967இல் உச்ச நீதிமன்ற விசாரணைக்குச் சென்றது. ‘கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநில அரசு’ என்ற அந்த வழக்கு பின்னாளில் சட்ட வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகளை, நாடாளுமன்றம் சட்டம் இயற்றி ரத்துசெய்யவோ, சுருக்கவோ முடியாது என்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மாற்றிவிட முடியுமா என்ற நோக்கிலான இந்த வழக்கில், ஆறு நீதிபதிகள் ஆதரவாகவும் ஐந்து நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர். இந்த வழக்கின் மையக் கருத்து ‘சொத்துரிமை’ பற்றியது ‘சுதந்திரம்’ பற்றியது அல்ல. எனவே, இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் சித்தாந்தரீதியிலாக ஆகிவிட்டது.

மாற்றவே முடியாத அம்சங்கள்

‘கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு’ வழக்கில் (1973) அதிர்ச்சி அளிக்கக்கூடிய அம்சம் ஏதும் இருந்ததில்லை. அந்த வழக்கிலும் மையப் பிரச்சினை ‘சொத்து’ பற்றியதுதான். கேரள அரசு இயற்றிய நிலச் சீர்திருத்த சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் தோற்றார். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்றாதிருக்கும் பட்சத்தில், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு, அதுவும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகக்கூட சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘அடிப்படைக் கட்டமைப்பு’ என்றால் என்ன என்று நீதிமன்றம் கூறிய உதாரணங்கள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவை.

கூட்டரசுக் கொள்கை, மதச்சார்பின்மை, சுதந்திரமான நீதித் துறை ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் என்றால் அது சரியல்ல என்று யாரால் கூற முடியும்? இந்த வழக்கு தொடர்பாகவும் விவாதங்கள் தொடர்ந்தன, ஆனால் கோலக்நாத் வழக்கில் ஏற்பட்ட வாதங்களைப் போல அல்லாமல் இதில் சித்தாந்த வேகம் குறைவு.

நெருக்கடிநிலையை 1975 ஜூன் 25இல் அறிவிப்பதற்கான உடனடியான காரணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்துக்கு தொடர்பே இல்லாதது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பானது. இந்திரா காந்தி சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவருக்காக வாதாட நானி பால்கிவாலா ஒப்புக்கொண்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு மேல் விசாரணைக்கு வந்திருந்தால் அலாகாபாத் தீர்ப்பை தனது வாதத் திறமையால் ரத்துசெய்வதில் அவர் நிச்சயம் வெற்றி கண்டிருப்பார். அந்தத் தீர்ப்பினால் ஏதும் நேர்ந்துவிடாமல் இருக்க, அதிர்ச்சி அளிக்கும் வகையில் பரபரப்படைந்து செயல்பட்டு, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது உள்பட பல நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டுவிட்டன; அவை நீண்டிருந்தால் இந்தியாவும் சர்வாதிகார நாடாக கி இருக்கும், அரசும் கொடுங்கோன்மைக் கொண்டதாக மாறியிருக்கும்.

அரசமைப்புச் சட்டத்தையும் மக்களுடைய உரிமைகளையும் காக்கும் அரணாகச் செயல்பட கடமைப்பட்டது நீதித் துறை. உண்மை என்னவென்றால் நீதித் துறை அப்போது மக்களைக் காக்கத் தவறிவிட்டது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய வரலாற்றில் தாழ்வான நிலைக்குச் சென்றது ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில்தான்; அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படைச் சுதந்திர உரிமைகளைக் காக்க எதிர்த்து நின்றவர் நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டுமே. உயர் நீதிமன்றங்களில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடியொற்றித் தீர்ப்பளிக்க சில நீதிபதிகளும் மறுத்து, தனிமனித சுதந்திர உரிமைகளைக் காத்துள்ளனர். நீதிபதிகள் ஜே.எஸ்.வர்மா, மத்திய பிரதேசத்தின் ஆர்.கே.தன்கா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மோதும் இரு விவகாரங்கள்

தன்கர், பிர்லா, ரிஜிஜு ஆகியோர் 1967 முதல் 1977 வரையிலான இந்திய வரலாற்றைப் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தன்கர் இரண்டு தனித்தனி விவகாரங்களை மோதவிடுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் எல்லா பிரிவுகளையும் அல்லது எந்தப் பிரிவையாவது நீதித் துறையின் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் நாடாளுமன்றம் திருத்திவிட முடியுமா என்பது ஒரு விவகாரம்; ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையச் சட்டம்’ (என்ஜேஏசி) என்று அழைக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் 99வது திருத்தத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது சரியா என்பது வேறொரு விவகாரம். கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியாக முடிவெடுத்தது, தேசிய நீதித் துறை நியமன ஆணையச் சட்ட வழக்கில் தவறாக முடிவெடுத்தது என்று கருதலாம். பல சட்ட வல்லுநர்களும் அப்படிக் கருதுகிறார்கள்.

துரதிருஷ்டவசமாக, தன்கர் எழுப்பிய விவாதம் - இந்தியா என்பது ஜனநாயக குடியரசு, கூட்டாட்சித் தத்துவத்தைக் கடைப்பிடிப்பது என்பது சரியா என்றே கேட்கும் அளவுக்கு பல கேள்விகளை எழுப்பிவிட்டது; நீதிபதிகள் நியமனம் தொடர்பாக எந்த கொலீஜியம் அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று கோருகிறாரோ அதே அமைப்பில் அரசுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டு குழப்பத்தை மேலும் கூட்டிவிட்டார் ரிஜிஜு. அரசமைப்புச் சட்டத்தையே மாற்றியமைக்க நயவஞ்சகமான திட்டம் உருவாகிவருகிறது என்ற அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தக் கேள்விகளுக்கு ன்ன பதில்?

அரசமைப்புச் சட்டத்தைவிட நாடாளுமன்றம்தான் உயரிய அமைப்பு என்பதை ஏற்பதாகவே வைத்துக்கொள்வோம், அது தொடர்பாக சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:

  • ஒரு மாநிலம் அதன் அந்தஸ்தை இழந்து – இல்லாமலாக்கப்பட்டு, சில மத்திய ஆட்சிப் பகுதியாக பிரிக்கப்பட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? (ஜம்மு – காஷ்மீர் சமீபத்திய உதாரணம்).
  • பேச்சுரிமை, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை, எந்த வேலையையும் தொழிலையும் செய்யும் உரிமை ஆகியவை ரத்துசெய்யப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • ஆண்களையும் பெண்களையும் சமமாக நடத்தாத சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவீர்களா? இந்துக்களையும் இந்து அல்லாதவர்களையும் வெவ்வேறு விதமாக நடத்த அனுமதிப்பீர்களா? பால்புதுமையினரின் உரிமைகளை மறுப்பீர்களா?
  • இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸிக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், யூதர்கள் இன்னும் பிற சிறுபான்மைச் சமூகத்தவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்து அளித்துள்ள உரிமைகளை ரத்துசெய்ய ஒப்புக்கொள்வீர்களா?
  • இரண்டாவது அட்டவணை (மாநிலங்களுக்கானவை) அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது தொகுப்பிலிருந்து நீக்கப்படவும், சட்டம் இயற்றும் அனைத்து உரிமைகளும் நாடாளுமன்றத்துக்கு மட்டும் வழங்கப்படவும் ஒப்புக்கொள்வீர்களா?
  • குறிப்பிட்ட ஒரு மொழியைத்தான் இந்தியர்கள் அனைவரும் படித்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டால் ஒப்புக்கொள்வீர்களா?
  • ஒரு குற்றத்தைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் ஒவ்வொருவரும், தாங்கள் நிரபராதிகள்தான் என்று நிரூபிக்கும் வரை அவர்களைக் குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்று சட்டமியற்றினால் அதை ஏற்பீர்களா?

நாடாளுமன்றம் இன்றைக்கு அப்படியெல்லாம் சட்டம் இயற்றிவிட முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றினாலும் அவை நீதித் துறையால் பரிசீலிக்கப்படும். ‘நாடாளுமன்றமே உயர்வானது – நீதித் துறை சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டால் அப்படிப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யவோ, ரத்துசெய்யவோ முடியாது.

“கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் அதன் ஆவி இந்தியாவையே சுற்றிச் சுற்றிவருகிறது, நம்முடைய வளர்ச்சியைத் தடுக்கிறது” என்று சித்தரிக்கப்படுகிறது. நம்முடைய நாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் மக்களுக்கும் காவலாக இருக்கும் தேவதைதான் அந்தத் தீர்ப்பு என்றே நான் நம்புகிறேன்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

1967 லிலிருந்து 1977 வரை பிரதமர் பதவியில் இருந்தவர் இந்திரா காந்தி தான். முறையில்லாமல் ஏ என் ரே(ராய்) யை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமித்ததில் இருந்து தொடங்குகிறது இந்த ஆடு புலி ஆட்டம். உச்ச நீதிமன்றத்தை தனது விருப்பப்படி ஆட்டுவிக்க இந்திரா காந்தி முயன்றதை இக்கட்டுரை வாயிலாக சிதம்பரம் அவர்கள் எடுத்துக் கூறுவது அவரது கட்சியின் பலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருந்தாலும் உண்மையில் அவரது துணிச்சல் போற்றப்பட வேண்டியதே. ஆனால் எவ்வளவு காலத்துக்கு தான் உச்ச நீதிமன்ற அமர்வில் இடம் பெறும் அதிகபட்சம் 13 நீதிபதிகள் மக்கள் உரிமைகள் பேரில் உள்ள அக்கறை, அரசமைப்பு சட்டத்தின் பெயரில் உள்ள விசுவாசம், நேர்மை போன்ற அணிகலன்களை பெற்றிருப்பார்கள் என்பதை நம்பிக் கொண்டே இருப்பது! என் பார்வையில் இதற்கு ஒரே தீர்வு பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் அந்த அணிகலன்களை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் தான் இரட்டைப் பாதுகாப்பாக, கட்சி விசுவாசம் கட்டுப்பாடுகளை கடந்துள்ள வகையில் பாராளுமன்றத்திற்கு அந்த சீரிய அணிகலன்களை தங்கள் இயல்பாக கொண்டுள்ளவர்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ரிலையன்ஸ்க்களவைத் தொகுதிகள்டெஃப்தேசிய சராசரி வருமானம்ஹீரோகாஞ்ச ஐலய்யா கட்டுரைபரிபாடல்மானக்கேடுஹைச்டிஎல்வெண்ணாறுகெவின்டர்ஸ் நிறுவனம்ஒன்று திரண்ட மாணவர்கள்மதம்தடைகள்இணையம்ஆர்.சீனிவாசன் கட்டுரைஅகாலி தளத்தின் பல்தேவ் சிங்தற்செயலான சாதியம்கடன் சுமைவிழுமியங்களும் நடைமுறைகளும்மன அழுத்தப் பிரச்சினை அதிகரிப்பது ஏன்?அண்ணா மாபெரும் தமிழ்க் கனவுஉலகம் ஒரு நாடக மேடைமருத்துவக் கல்விஸ்காண்டினேவியன்தேபஷிஷ் முகர்ஜி கட்டுரைசுவீடன்மண்டல் அரசியல்அரை பிரெஞ்சுக்காரர்அஞ்சல் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!