கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு
காதலுக்குக் காத்திருக்கும் ஆபத்து
ஆணும் பெண்ணும் ‘நாடு’, ‘அரசு’ என்ற கருத்துகள் ஏற்படுவதற்கு முன்பிருந்தே சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர். உலகின் எந்தப் பகுதியிலும் யாரும் சட்டம் இயற்றுவதற்கு முன்னாலிருந்தே - சேர்ந்து வாழ்வது நடந்துகொண்டிருக்கிறது. சட்டங்கள் அவற்றை அங்கீகரிக்கும் வேலையை மட்டுமே செய்து, அதற்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுத்தன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயர் ‘திருமணம்’. மணமான இணையர்களுக்குச் சில உரிமைகளையும் சலுகைகளையும் சட்டங்கள் தந்தன.
மானுட வாழ்க்கை – நடத்தை குறித்து நமக்கு இப்போதுள்ள அறிவைக் கொண்டும், ஆல்பிரட் கின்ஸி (பாலியல் வல்லுநர் - உயிரியலாளர்) காலம் தொடங்கி மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகளிலிருந்தும் பார்க்கும்போது, ஆணும், ஆணும் மட்டுமல்லாமல் பெண்ணும் – பெண்ணும்கூட சேர்ந்தே வாழ்ந்துள்ளனர். ‘தன்பாலின’ சேர்க்கையில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் – சொல்லக் கூடாத கெட்ட வார்த்தைகளாக இப்போது பார்க்கப்படுவதில்லை.
தன்பாலின ஈர்ப்புள்ள ஆண் – பெண், இருபால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள் – திருநம்பிகள், பால்புதுமையினர், ஊடு பாலினர், பாலீர்ப்பு அற்றவர்கள் (அல் பாலினர்) என்று பல்வகைப் பால்புதுமையினர் மக்களில் உண்டு என்பதை இப்போது ஏற்கிறோம். அவர்களும் மானிடர்கள்தான், இதர மக்களைப் போலவே அவர்களும் அன்பு செலுத்துகிறவர்கள் – அன்பு செலுத்தப்படுபவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் பாலுறவும் கொள்கின்றனர்.
மற்ற இணையர்களைப் போலவே தங்களுக்கும் உரிமைகளும் சலுகைகளும் வேண்டும் என்று பால்புதுமையினர் கோரியபோது அரசு அளித்த பதில் எப்படிப்பட்டது? பால்புதுமையினர்களுக்கு இடையிலான உறவு தொடர்பாக இந்திய நாடாளுமன்றம் இதுவரை சட்டம் இயற்றியதில்லை.
அதற்கு மாறாக, இந்திய தண்டனைச் சட்டத்தில் 377வது பிரிவு அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தொடர்கிறது; ‘இயற்கைக்கு மாறான உடலுறவு’ தண்டிக்கத்தக்கது என்று அது கூறுகிறது. நவ்தேஜ் சிங் ‘எதிர்’ ஒன்றிய அரசு வழக்கில்தான் (2018), 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதற்கும் முன்னால் 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு (2013) வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று அறிவித்து அதை ரத்துசெய்தது; ‘இருவரும் ஒப்புதல் தெரிவித்த பிறகு பாலுறவு கொண்டாலும் அது குற்றமே’ என்று இரட்டை நீதிபதிகள் அமர்வு முன்னதாகத் தீர்ப்பளித்திருந்தது.
பல கேள்விகளும் விடைகளும்
ஐந்தாண்டுகள் கழித்து, பால்புதுமையினர் சமூகம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்த மனுவில் பல கேள்விகளை எழுப்பியது; குறிப்பாக பால்புதுமையினரின் மனித உரிமைகள் (சிவில்) தொடர்பாக, குறிப்பாக அவர்களுக்குள் நடைபெறும் திருமணம் தொடர்பாகக் கேட்டிருந்தது. இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இந்த ஆண்டு அக்டோபர் 17இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் தரப்பட்டன.
மாண்பமை நீதிபதிகள் ஐவரும் சில அம்சங்களில் தங்களுக்குள் கருத்தொற்றுமையும், சில அம்சங்களில் கருத்து வேற்றுமையும் கொண்டிருந்தனர். இறுதியாக, நீதிபதி ரவீந்திர பட், இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்தார், நீதிபதிகள் ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அவருடைய கருத்துகளை ஏற்றனர், அதுவே இப்போது இந்த வழக்கில், ‘சட்டத்தின் நிலை’யாக இருக்கிறது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன என்று தீர்மானிப்பதில் அரசியல் கட்சிகளுக்குத் தயக்கம் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல் கட்சி என்பது ஆயிரக்கணக்கான தனிநபர்களை உறுப்பினர்களாகக் கொண்டது, மிகவும் தீவிரமானதும் – அந்தரங்கமானதுமான இதில் ஒரு முடிவை எடுப்பது என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இதில் பொதுவான நிலையை எட்டுவது அவ்வளவு எளிதல்ல. இந்த வழக்கில் எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தனிநபர்களால்கூட உறுதியாக ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் என்னால் செய்யக்கூடியது எதுவென்றால், இந்த விவகாரத்தில் பிரச்சினைகள் என்ன என்பதை மட்டும் கூறிவிட்டு, ஆரோக்கியமான விவாதம் தொடரும் என்று எதிர்பார்ப்பதுதான்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நீதிமன்றம்: திருமணம் என்பது எதிர்பாலீர்ப்பினருக்கும் சட்டப்பூர்வமான உரிமை மட்டுமே (அடிப்படை உரிமையல்ல)
உச்ச நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்த பிறகு, பிற முடிவுகளும் - ஒரு மனதாக – அதனதன் இடத்தில் பொருந்திவிடுகின்றன. திருமணம் என்றால் இரண்டு பாலினம் இருக்க வேண்டும். திருநங்கைகளும் திருநம்பிகளும் எதிர்பாலீர்ப்பு வகைத் திருமணங்கள் செய்துகொள்ள உரிமை உண்டு, ஆனால் ஒரே பாலின ஈர்ப்பு உள்ளவர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
இது தொடர்பாக விரிவாக விவாதித்து சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழும்கூட இப்படி ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்து வெகு விரைவில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
‘உறவுகொள்ளும் உரிமை’ அடிப்படை உரிமை
திருமணம் தொடர்பாகத் தாங்கள் எடுத்த முடிவு நீதிபதிகளைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். தங்களுக்கிருந்த தளைகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு மிகத் துணிச்சலாகத்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ‘பாலினம் எதுவாக இருந்தாலும் தங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு’ என்று. ஏற்கெனவே சமுதாயத்தில் நிலைபெற்றுவிட்ட சுதந்திரம், சுய விருப்பம், சுய தேர்வு, அந்தரங்கம், கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். ‘உறவுகொள்ளும் உரிமை’ குறித்து நீதிபதி ரவீந்திர பட் விவரித்திருக்கிறார்.
“வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ளவும், சேர்ந்து வாழவும், உடலால் இணையவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது… எல்லாக் குடிமக்களையும்போல சுதந்திரமாக வாழவும், விருப்பப்படி துணையைத் தேர்ந்தெடுக்கவும், சமூகத்துக்குத் தொல்லை தராமல் தங்கள் முடிவைச் செயல்படுத்தவும் உரிமை இருக்கிறது… அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.”
‘சங்கம் அமைப்பதற்கான உரிமை அல்ல’
தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களுக்குள் உறவுகொள்ளும் உரிமையானது, சங்கம் வைத்துக்கொள்வதற்கு அரசமைப்புச் சட்டம் தரும் உரிமையைப் போன்றது என்று கருத நீதிபதிகள் சந்திரசூட், கௌல் தயாராக இருந்தனர், ஆனால் நீதிபதிகள் பட், கோலி, நரசிம்மா அந்த அளவுக்குத் தயாராக இல்லை. இப்போதைக்கு, தன்பாலின இணையர்கள் உறவுகொள்ள உரிமை கொண்டவர்கள், அதற்கும் மேல் (உரிமை) இல்லை.
அவர்கள் தொல்லைக்கு உள்ளாகாமல் இருப்பார்களா என்பது நிச்சயமில்லை. காரணம் தார்மிக சட்டங்களைத் தங்கள் மனம்போன போக்கில் அமல்செய்யும் ‘தார்மிகக் காவலர்கள்‘ இங்கு அதிகம். சில வகை ஆடைகள், உணவு, நம்பிக்கைகள், மத அடையாளங்கள், வழிபடும் முறைகள் ஆகியவற்றைச் சகித்துக்கொள்ளாத நிலை இருக்கும்போது அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் என்பதும் நிச்சயமில்லை.
‘உறவுகொள்ள உரிமை’ என்பதற்கு சாரமில்லை என்பது அறிஞர்கள் கருத்து
மாண்பமை நீதிபதிகள் மூவருமே, ஒரே பாலின இணையர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஏற்க மறுத்துவிட்டனர், காரணம் இப்போதுள்ள சமுதாயச் சூழலில் அப்படி அனுமதிப்பது மிக மோசமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பது அவர்களுடைய நிலை. அதே சமுதாயச் சூழ்நிலைக்கு எதிராகத்தான், உறவுகொள்ள உரிமை உண்டு என்று அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதை அனுமதித்தவர்கள் அடுத்தபடியாக தத்தெடுக்கும் உரிமை, மணவிலக்கு அல்லது ஜீவனாசம் உரிமை, சொத்துகளைப் பெறும் உரிமை, வாரிசுரிமை ஆகியவற்றுக்கும் சாதகமாகவே தீர்ப்பளித்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கருத்து.
பால்புதுமையினர் சமூகத்தில் பதற்றம்
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பால்புதுமையினர் சமூகத்தில் பதற்றம், ஏமாற்றம், கவலை ஏற்பட்டிருப்பது இயல்பானது. திருமணம் செய்துகொண்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தங்களுடைய உறவைத் திருமணமாக அங்கீகரிக்காவிட்டாலும் மனிதர்களுக்கு இடையிலான உறவாக (சிவில் யூனியன்) சட்ட நோக்கங்களுக்காகவாவது அறிவிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
பெரும் சமூகத்தில் பெரிய சலசலப்பு ஏதுமில்லை
பல சந்தர்ப்பங்களில் சமுதாயமானது நீதிமன்றங்களைவிட – சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் – சட்டமன்றங்களைவிட காலத்தால் முற்பட்ட மனநிலையில் இருக்கிறது. இந்தத் தீர்ப்பு அளித்த சொற்பமான உரிமையையும், வழங்க மறுத்த பெருமளவிலான உரிமைகளைப் பற்றியும் அது கவலையே படவில்லை, சாமானிய மக்களிடையே விவாதப்பொருளாக இது மாறவே இல்லை.
விதியின் கை எழுதுகிறது – எழுதிய பிறகு நிற்பதில்லை
நவீன சமுதாய வாழ்க்கையின் யதார்த்தம் என்னவென்று அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பாக ஒரு அத்தியாயத்தை எழுதிவிட்டது. பாலுறவு, கருத்தடை சாதனம், தன்பாலினச் சேர்க்கை ஆகியவை இப்போது அன்றாட வாழ்க்கையில் பேசக் கூடாத வார்த்தைகளாக இல்லை என்பதற்கு இணையாக, ஒரே பாலின இணையர்கள் சமூகத்தால் அதிக அளவில் இனி ஏற்றுக்கொள்ளப்படுவார்கள், அது அதிகம் வெளிப்படையாகவும் தெரியும்.
நீதித் துறை எழுதிய அத்தியாயப் பக்கங்களைப் புரட்டும் அளவுக்கு நாடாளுமன்றம் அடுத்த அத்தியாயத்தை எழுதும் நாளுக்காகக் காத்திருப்போம்!
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.