கட்டுரை, அரசியல், சட்டம், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

பணமதிப்பிழப்பு: மூன்று பரிமாணங்கள்

ப.சிதம்பரம்
09 Jan 2023, 5:00 am
1

ண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய வழக்கில் ஒன்றிய அரசு வெற்றி பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு 4:1 என்று அளித்த தீர்ப்பில், அந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுத்த அனைவரின் கருத்துகளையும் நிராகரித்துவிட்டது. தீர்ப்பின் முடிவு அனைத்துக் குடிமக்களையும் கட்டுப்படுத்தும். மாறுபட்ட கருத்து தெரிவித்த ஒற்றை நீதிபதியின் தீர்ப்பு, எதிர்காலத்தில் புதிய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பு தொடர்பாக தனது மனதை மாற்றிக்கொள்ளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டப் பரிமாணம்

இந்த வழக்கில் நீதிமன்றம் கேட்டுக்கொண்ட ஆறு கேள்விகள் தொடர்பாக, தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

  1. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26, உட்பிரிவு (2)இன் கீழ், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள், அனைத்து வரிசைகளிலும் செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.
  2. பிரிவு 26, உட்பிரிவு (2) ஆகியவை செல்லத்தக்கவையே; ஒப்படைப்பு அதிகாரத்தை அரசு மிதமிஞ்சிப் பயன்படுத்தியதாக ரத்துசெய்துவிட முடியாது.
  3. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவில் குறைபாடுகள் ஏதுமில்லை.
  4. முறையான இரண்டு உரிமைகளுக்கு இடையில் மோதல் ஏற்படும் வேளையில், நீதிமன்றம் எந்த முடிவை ஆதரிக்க வேண்டுமோ அது ஆதரிக்கப்பட்டுள்ளது.
  5. செல்லாது என்று அறிவித்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள கொடுத்த கால அவகாசம் நியாயமானது.
  6. அரசு அளித்த காலக்கெடுவுக்கும் அப்பால், செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது.

நுணுக்கமான சட்டக் கேள்விகளைத் தவிர, வாசகர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய கேள்விகள் மூன்றுதான். ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் இருக்கிறது, ஆனால் அது நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரம் - அந்த முடிவை இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருந்தால்’ என்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம், அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்திருக்கிறது, முடிவு தொடர்பான அனைத்தையும் ஒன்றிய அரசின் அமைச்சரவையும் பரிசீலனை செய்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை அறிய வாசகர்களுக்கு விருப்பம் இருக்கும். ‘நோக்கம் நிறைவேறியதா – இல்லையா என்று ஆராய்ந்து கூறும் அளவுக்குத் தனக்கு அதில் நிபுணத்துவம் இல்லை’ என்று கூறிவிட்டது நீதிமன்றம். இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்த கேள்விக்கு, ‘சில பிரிவினருக்கு துயரங்கள் ஏற்பட்டன என்பதற்காக எடுத்த முடிவே சரியில்லை என்று கூற சட்டம் இடம் தராது’ என்று கூறிவிட்டது.

இவ்விதமாக, சட்ட நோக்கில் அனைத்துமே ஒன்றிய அரசுக்கு சாதகமாக முடிவுசெய்யப்பட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பொருளாதாரம் எப்போது மீளும்?

ப.சிதம்பரம் 06 Jun 2022

அரசியல் பரிமாணம் 

சட்டம் தொடர்பான கேள்விகளுக்குக் கிடைத்த பதில்கள், வழக்கை முடிவுக்குக் கொண்டுவரலாம், ஆனால் இதர இரண்டு பரிமாணங்கள் தொடர்பான வாதங்கள் அப்படியல்ல என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தி இந்து’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆகிய நாளிதழ்களின் தலையங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த காலங்களில் - 1946, 1978 ஆகிய இரு ஆண்டுகளில் - உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அவசரச் சட்டம் மூலம் அது அறிவிக்கப்பட்டு, பிறகு நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக இயற்றப்பட்டது. எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கு உள்ள வரம்பற்ற அதிகாரத்தின் கீழ், அந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரிக்க மறுத்துவிட்டார். அதனால் நாடாளுமன்றம் சட்டமியற்றியது. அந்த முடிவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், மக்கள் அனுபவிக்க நேரும் துயரங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பொறுப்பு என்பது அன்றைய நிலை. (அப்போது மக்களுக்கு மிக மிகக் குறைந்த துயரமே ஏற்பட்டது). அந்த முடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதமும் நடந்தது. அனைத்து அம்சங்களும் மக்களுடைய பிரதிநிதிகளால் பரிசீலிக்கப்பட்டு, பிறகு அந்த முடிவை ஏற்று ஒப்புதல் தரப்பட்டது.

அதேபோலத்தான் நடந்தது என்று 2016 நவம்பர் 8இல் எடுக்கப்பட்ட முடிவு குறித்துக் கூற முடியுமா? இங்கே நாடாளுமன்றத்துக்கு பங்கு ஏதுமில்லை. ஒப்படைப்பு அதிகாரத்தை நிர்வாகத் துறை ஏற்றுக்கொண்டு, இந்த முடிவை எடுத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் தோல்வியுற்றது தொடர்பாகவோ, மக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளுக்காகவோ, அதன் பொருளாதார பாதகங்களுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது. 

புழக்கத்தில் இருந்த ரொக்கம் 2016இல் ரூ.17.20 லட்சம் கோடியாக இருந்தது, 2022இல் ரூ.32 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. கறுப்புப் பணத்தை (வருமானக் கணக்கில் காட்டப்படாதது) வருமான வரித் துறை அதிகாரிகளும், ஒன்றிய அரசின் புலனாய்வு முகமை அதிகாரிகளும் திடீர் சோதனைகளின்போது கைப்பற்றியது எத்தனை முறை என்று எண்ண முடியாதபடிக்கு இருக்கின்றன. 

கள்ள நோட்டுகள் பிடிபடுவது தொடர்பாக அன்றாடம் செய்திகள் வருகின்றன. அதிலும் அரசு புதிதாக வெளியிட்ட ரூ.500, ரூ.2,000 நோட்டுகளிலேயே கள்ள நோட்டுகள் வருகின்றன. பயங்கரவாதமும் குறையவில்லை. பயங்கரவாதிகளால் மக்களும், பயங்கரவாதிகளுமே கொல்லப்படுவதாகக் கிட்டத்தட்ட அனைத்து வாரங்களும் செய்திகள் வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக் காரணம் என்று அறிவித்தவற்றில் எந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது? ஒன்றுகூட இல்லை. நாடாளுமன்றம் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி இருக்கிறது. அரசின் ‘ஒப்படைப்பு நிர்வாக அதிகாரம்’, நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் வலிமைக்கு நிகரானதாகிவிடுமா? இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்படியான வழக்கின் கூறு 26, துணைக் கூறு (2) தொடர்பான கேள்விக்கு, ஒன்றிய அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பில் பதில் அளிக்கப்பட்டுவிட்டது. இதர சட்டங்கள் தொடர்பாக இதே கேள்வி எழுப்பப்பட்டால் பதில் அதேபோல கிடைக்குமா? இந்த முக்கியமான கேள்வி குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பை நாடாளுமன்றம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அச்சத்தில் அரசு

ப.சிதம்பரம் 10 Oct 2022

பொருளாதாரப் பரிமாணம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை புத்திசாலித்தனமானதா, மக்கள் அனுபவித்த துயரம், அந்நடவடிக்கையின் நோக்கத்துக்கு நேர் விகிதத்தில்தான் இருந்ததா என்ற கேள்விகளுக்குள் புக விரும்பவில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. நீதிமன்றம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, இது தொடர்பாக எது சரி என்பதை அரசே முடிவுசெய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டது.

ஆனால், மக்களைப் பொருத்தவரை, இப்படியொரு முடிவை எடுத்தது புத்திசாலித்தனம்தானா, நடுத்தர மக்களும் ஏழைகளும், அன்றாடம் சம்பாதித்து பிழைப்பு நடத்தும் 30 கோடி உழைப்பாளர்களும், குறு - சிறு - நடுத்தரத் தொழில் பிரிவுகளும், விவசாயிகளும் அடைந்த துயரங்கள், கிடைத்த பலனுக்குப் பொருத்தமானவைதானா? விளைபொருள்களுக்கு சந்தையில் விலை சரிந்து இழப்பு ஏற்பட்டது தாங்கிக்கொள்ளக்கூடியதா என்ற கேள்விகள் விடையின்றித் தொடர்கின்றன.

பணமதிப்பிழப்பு முடிவு எடுக்கப்பட்ட 2016-17 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலிருந்து நாட்டின் வருடாந்திர ஜிடிபி சரியத் தொடங்கியது; 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்தது. பிறகு கோவிட்-19 பெருந்தொற்று பரவியது. பொருளாதாரத் துயரங்கள் பல மடங்காகின. மக்கள் இதையெல்லாம் தொடர்ந்து விவாதிப்பார்கள்.  

சட்ட நோக்கில், அரசுக்கு ஒட்டுமொத்தமான வெற்றி; அரசியல் நோக்கில், இந்த விவாதங்கள் ஓயவில்லை, நாடாளுமன்றம் இதை மீண்டும் விவாதித்தாக வேண்டும். பொருளாதார நோக்கில், அரசு இதில் நீண்ட நாள்களுக்கு முன்னதாகவே முழுதாகத் தோற்றுவிட்டது, ஆனால் அதை ஒப்புக்கொள்ளவே கொள்ளாது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

அச்சத்தில் அரசு
பொருளாதாரம் எப்போது மீளும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

அரசு செய்த அராஜகம் நியாயமானது, மக்களுக்கு அநீதி இழைப்பதற்கான முழு அதிகாரம் அரசுக்கு இருக்கிறது-நீதிமன்றம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கன்னையா குமார்கையூட்டுக்குப் பல வழிகள்சுயப் பச்சாதாபம்ஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?திட்டமிடுதல்நிதீஷ் குமார்டெல்லி முதல்வர்சேஃப் பிரவுஸிங்சுயசரிதைஅருஞ்சொல் பாலசுப்ரமணியம் முத்துசாமிதங்க.ஜெயராமன் கட்டுரை குற்றங்களும்மாநிலங்கள் அதிகாரம் பெறுவது ஏன் முக்கியமானது?பேரழிவுஅஸ்ஸாம் கலவரம்அதிகபட்ச அநீதிபாதுகாப்பு அமைச்சகம்பிராந்திய பிரதிநிதித்துவம்அரசியல் ஆலோசகர்கள்5ஜி சேவைகள்மூன்று களங்கள்மன்னார்குடி ஸ்ரீநிவாசன்ஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்புஷ்கர் சந்தைஹிந்துத்துவர்தமிழக பாஜகஹெச். பைலோரை கிருமிவந்தே பாரத் ரயில்நிறவெறிசாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!