கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!

ப.சிதம்பரம்
03 Jul 2023, 5:00 am
0

ஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகருக்கு கிழக்கில் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆல்திங் என்ற ஊரில் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடம்தான் உலகிலேயே மிகவும் பழமையான நாடாளுமன்றம் என்று நம்பப்படுகிறது. ஐஸ்லாந்து பணக்கார நாடு, அதேசமயம் கண்ணியமானது - ஜனநாயக நாடும்கூட. நாடாளுமன்றம் உள்ள நாடுகள் எல்லாம் ஜனநாயக நாடுகளாகிவிடாது. இதற்கு எவையெல்லாம் உதாரணங்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே.

இந்தியாவில் நாடாளுமன்றம் இருக்கிறது, ஆனால் இந்தியா ஜனநாயக நாடுதானா என்ற கேள்விகளே அதிகம் எழுகின்றன. ‘இந்தியா ஜனநாயக நாடுதான்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது அறிவித்தது நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ‘ஜனநாயகம்’ என்கிற வார்த்தையை 14 முறை பயன்படுத்தியிருக்கிறார் பிரதமர். வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாக வரும் தகவல்கள் குறித்து கேள்வி கேட்ட பெண் நிருபரின் கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற பத்திரிகையின் சப்ரினா சித்திக் என்ற அந்த நிருபர் அதிருஷ்டக்காரர், பிரதமரிடம் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார் – இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் பதில் (இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) அதிசயப்படும்படியாக மிகவும் நீண்டது, விரிவானது:

கேள்வி: உங்கள் நாட்டில் முஸ்லிம்கள் மற்றுமுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டவும் நீங்களும் உங்களுடைய அரசும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க விருப்பமாக இருக்கிறீர்கள்?

பதில்: மக்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது; மக்கள் அப்படிச் சொல்லவில்லை. இந்தியா ஜனநாயக நாடு.”

“சாதி, மதம் அடிப்படையில் இந்திய மக்களை பாரபட்சமாக நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை” என்றும் பிரதமர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் 20.30 கோடி முஸ்லிம்கள் (மொத்த மக்கள்தொகையில் 14.2%). 3.3 கோடி கிறிஸ்தவர்கள் (2.3%), 2.4 கோடி சீக்கியர்கள் (1.7%), இவர்களைத் தவிர வேறு சில சிறுபான்மைச் சமூகத்தவரும் வாழ்கின்றனர். அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்களா என்ற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும். இதற்கான விடையை நீங்களே கண்டுபிடிக்க இதோ சில தகவல்கள்:

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நான் முஹம்மது ஸுபைர்

ப.சிதம்பரம் 18 Jul 2022

மத அடிப்படையில் பாரபட்சம்

ஒன்றிய அரசின் 79 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லை; ஒருவர் கிறிஸ்தவர், ஒருவர் சீக்கியர், பாஜகவுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்ந்து 395 உறுப்பினர்கள் இருந்தும் இந்த நிலைமை.

பாரதிய ஜனதா கட்சி 2019 மக்களவை பொதுத் தேர்தலில் 6 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது, மூன்று பேர் ஜம்மு-காஷ்மீரிலும், இரண்டு பேர் மேற்கு வங்காளத்திலும், ஒருவர் லட்சத்தீவிலும் போட்டியிட்டனர் – அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர்.

மக்களவையில் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் 4.42%ஆக குறைந்திருக்கிறது, நாட்டு மக்களில் அவர்கள் 10.5%ஆக இருந்தும்.

கடைசியாக மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் உத்தர பிரதேசம் (403 தொகுதிகள்), குஜராத் (182), கர்நாடகம் (224) ஆகியவற்றில் ஒரு முஸ்லிமைக்கூட பாரதிய ஜனதா தனது கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் இப்போதுள்ள 34 நீதிபதிகளில் ஒருவர் முஸ்லிம், ஒருவர் பார்சி – கிறிஸ்தவரோ, சீக்கியரோ இல்லை; (பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் போதும் என்று கிசுகிசுப்பது காதில் விழுகிறதா?)

இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரே மாநிலமான ஜம்மு – காஷ்மீர், 2019 மே மாதம் மாநில அந்தஸ்திலிருந்து இறக்கப்பட்டு இரண்டு தனித்தனி மத்திய ஆட்சிக்கு உள்பட்ட நேரடிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுவிட்டது.

குடியுரிமை (திருத்த) சட்டமானது பக்கத்து நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரானது; நேபாளத்திலிருந்து இடம்பெயர்ந்துவரும் பௌத்தவர்கள், கிறிஸ்தவர்களுக்கும் இலங்கையிலிருந்தும் மியான்மரிலிருந்தும் வரும் எந்தச் சமயத்தவருக்கும் எதிராக அந்தத் திருத்தச் சட்டம் இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வளையக் கூடாதது செங்கோல்!

ப.சிதம்பரம் 05 Jun 2023

முஸ்லிம் மகளிர் அணியும் ஹிஜாப், இறைச்சியை இஸ்லாமிய சமய நெறிப்படி சுத்தப்படுத்துவது (ஹலால்), மசூதிகளில் தொழுகை நடத்த வாருங்கள் என்று ஒலிபெருக்கிகள் மூலம் ஒவ்வொரு வேளையும் அழைப்பு விடுப்பது (ஆஸான்) ஆகியவை தொடர்பாக கர்நாடகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வேண்டும் என்றே பிரச்சினைகளை பாரதிய ஜனதாவும் அதன் தோழமை அமைப்புகளும் கிளப்பின.

‘பசுவைப் பாதுகாக்கிறோம்’ என்ற போர்வையில் இஸ்லாமிய பால் பண்ணைக்காரர்களையும் வியாபாரிகளையும் அடிப்பது மிரட்டுவது, ‘லவ் – ஜிகா’த்தைத் தடுக்கிறோம் என்று சொல்லி இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்குவது – அச்சுறுத்துவது ஆகியவை பாரதிய ஜனதா ஆதரவில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களாகும்.

தேசியக் குற்றவியல் ஆவணக்காப்பகத்தின்படி 2017 முதல் 2021 வரையில் சிறுபான்மைச் சமூகத்தவருக்கு எதிராக 2,900 வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2010 முதல் 2017 வரையில் வன்முறை கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தாக்கியதில் மொத்தம் 28 பேர் இறந்துள்ளனர், அவர்களில் 24 பேர் முஸ்லிம்கள். 2017 முதல் தேசிய குற்றச் செயல்கள் ஆவணக்காப்பகம், கும்பல் வன்முறை பற்றிய தகவல்களைத் தனியாகத் திரட்டுவதை நிறுத்திவிட்டது.

‘அவுட்லுக்’ வார இதழின் (2023 மார்ச் 13) சிறப்புக் கட்டுரையின்படி, மத நம்பிக்கைகாக இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள், கிறிஸ்தவர்களுடைய சபைக் கூட்டங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது, தேவாலயங்களும் கிறிஸ்தவர்களுடைய கல்விக்கூடங்களும் அச்சுறுத்தப்படுகின்றன.

சர்வதேச அளவில் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்கா தயாரித்துள்ள அறிக்கை 2022இல் (2023 மே 15 வெளியானது), இந்தியாவில் மத சுதந்திர நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவர் குறிவைத்து தாக்கப்பட்டது குறித்து 49 பக்கமுள்ள அந்த அறிக்கை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்று பல்வேறு நாடுகளை ஆண்டுதோறும் ஆய்வுசெய்து அறிக்கை தரும் நார்வே நாட்டின் ‘வி-டெம்’ ஆய்வு நிறுவனம் 2022இல் உலக அளவில் ஜனநாயக உரிமைகளில் 100வது இடத்தில் இருந்த இந்தியா 2023இல் மேலும் சரிந்து 108வது இடத்துக்குப் போய்விட்டது என்கிறது. இந்தியாவில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்’ நிலவுகிறது என்று அது தரப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பு, இந்தியாவில் சுதந்திரம் என்பது ஓரளவுக்குத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு இந்தியாவின் மதிப்பைத் தன்னுடைய உலக அறிக்கையில் தாழ்த்தியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?

ப.சிதம்பரம் 24 Oct 2022

கருத்துச் சுதந்திரம்

இதில், 2022 டிசம்பர் நிலவரப்பட்டி இந்தியாவில் 7 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர், அவர்களில் 5 பேர் முஸ்லிம்கள். இரண்டு பேர் பிணையில் விடுதலை பெற்றனர் அவர்களில் ஒருவர் 14 மாதங்களுக்குப் பிறகு (மன்னான் தர்), இன்னொருவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு (சித்திக் கப்பன்) விடுதலையாகினர்.

பிரதமரையும் முதல்வர்களையும் விமர்சனம் செய்ததற்காக மக்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். ரூ.1,105 விலையில் விற்கப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயனாளிக்குப் பிரதமர் மோடி வழங்குவதைப் போன்ற பதாகையை பொது இடத்தில் காட்சிப்படுத்தியதற்காக 5 பேர் மீது குற்ற வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறார்கள்.

இந்துத் துறவிகளை ‘வெறுப்பை விதைப்பவர்கள்’ என்று முஹம்மது ஸுபைர் விமர்சித்துள்ளார், இது என்னுடைய மத உணர்வைப் புண்படுத்திவிட்டது என்று ஒருவர் அளித்த புகாரின் பேரில் ‘ஆல்ட்-நியூஸ்’ என்ற இணையதளத்தின் இணை நிறுவனர் முஹம்மது ஸுபைர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பழைய சுட்டுரைகள் தொடர்பாக புதிய வழக்குகள் பதியப்படுகின்றன. இந்த முதல் தகவல் அறிக்கைகளை எல்லாம் ஒன்றாக இணைத்த உச்ச நீதிமன்றம், எல்லா வழக்குகளிலும் அவருக்குப் பிணை அளித்தது, இந்தப் பிணை, ‘இனி எதிர்காலத்தில் போடப்படும் வழக்குக’ளுக்காகவும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆக்சஸ் நவ்’ என்ற சர்வதேச எண்ம உரிமைகள் நிறுவனத் தகவல்படி, 2022இல் உலக அளவில் 167 முறை இணையதளம் முடக்கப்பட்டது, அதில் இந்தியாவில் முடக்கப்பட்டது மட்டும் 84.

உலக பத்திரிகைச் சுதந்திர 2023 குறியீட்டெண்படி, 180 நாடுகளில் இந்தியா மிகவும் தாழ்ந்து 161வது இடத்துக்குப் போயிருக்கிறது.

மத அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவது தொடர்பாகவும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியப் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

நான் முஹம்மது ஸுபைர்
வளையக் கூடாதது செங்கோல்!
ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






வினோத் துவாஇலவச மின்சார இணைப்புகள்வர்ணமற்றவர்களும்சி.வி.ராமன்புரோட்டா – சால்னா சந்தேகத்துக்குரியதுவிசிககால்சியம் சத்துஆடி பதினெட்டுஐநா சபைகங்கைச் சமவெளிஅனைத்தையும் பற்றியக் கோட்பாடுஜெர்மானிமுதல் என்ஜின்நவீன காலம்உலகச் சூழலைப் புறக்கணித்த பட்ஜெட் உரைபெரியார் சிலைஎருமைகள்பள்ளி மாணவர்கள்சுயாட்சிஜேன் குடால்சுதந்திரப் போராட்டம்பாஸ்கர் சக்தி கட்டுரைஹிஜாப்உத்தர பிரதேச மாதிரிதாங்கினிக்கா ஏரிசுவேந்து அதிகாரிஎன்சிஇஆர்டிதனிப்பாடல் எனும் தூண்டில் புழுமொழிபெயர்ப்புச் சிறுகதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!