கட்டுரை, அரசியல் 7 நிமிட வாசிப்பு
தேர்தல் முடிவுகள் உள்ளடக்கியிருக்கும் சூசக செய்தி
ஒருகாலத்தில், மக்களை ஆட்சி செய்வது மன்னர்களின் ‘தெய்வீக உரிமை’யாக இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளில் அத்தகைய கண்ணோட்டம் இன்று கைவிடப்பட்டுவிட்டது. வெவ்வேறு விதமான ஆட்சி வடிவங்கள், முடியாட்சிக்குப் பதிலாக வந்துவிட்டன. ஜனநாயகம் அவற்றில் ஒன்று. வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை கூறினார், “ஆட்சிமுறைகளிலேயே மிகவும் மோசமானது ஜனநாயகம்தான் – மற்ற எல்லாவற்றுடனும் ஒப்பிடும்போது அது சிறந்தது!”
ஜனநாயகத்துக்குப் பல குறைகள் இருந்தாலும், இந்தியா அந்த ஆட்சிமுறையையே தேர்ந்தெடுத்தது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார், பதிவான வாக்குகளில் அதிகம் பெற்று முதலிடத்துக்கு வருகிறாரோ அவரே வென்றவர் என்ற தேர்தல் முறையை நாம் தேர்வுசெய்தோம் - இதில் வினோதமான சில முடிவுகள் வரும் என்று தெரிந்தும்.
பஞ்சாப்- உபி- கோவா
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததை சமீபத்தில் பார்த்தோம். ஐந்து மாநிலங்களும் நமது கையில் உள்ள ஐந்து விரல்களைப் போல வெவ்வேறானவை. ஐந்து மாநிலங்களில், மூன்று மாநிலத் தேர்தலை மட்டுமே நான் தொடர்ந்து கவனித்துவந்தேன், எனவே, என்னுடைய கருத்துகளை அவற்றோடு கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.
இந்தியாவிலேயே மக்கள்தொகை அதிகமுள்ள, 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்திலும் தேர்தல் நடந்தது. பஞ்சாப் நடுத்தர அளவுள்ளது (117 தொகுதிகள்) – கொந்தளிப்பான எல்லை மாநிலம் இது. கோவா மிகவும் சிறிய மாநிலம், மொத்தம் 40 தொகுதிகள்.
இந்த மூன்று மாநிலங்களையும் இணைக்கும் பொதுவான அம்சம் - இங்கு தேர்தலில் அடிநாதமாக இருந்தது. அது ‘மாற்றம் அல்லது தொடர்ச்சி’ என்பதாகும். இப்போதிருக்கும் ஆட்சியே தொடர வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. காங்கிரஸ் (பஞ்சாபில் ஆஆகவும்) மாற்றம் வேண்டும் என்று விரும்பியது. முடிவு என்ன? மாற்றம் வேண்டும் என்ற சிந்தனைக்கு பஞ்சாபில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதில் கேள்விக்கு இடமில்லாமல் வெற்றி பெற்றிருப்பது பாஜக.
கோவாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் வாக்காளர்களுக்கு இருந்தது. வாக்குகள் எண்ணப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக விமானத்தில் ஏறி என் இருக்கையில் அமர்ந்த பிறகு, பக்கத்து இருக்கைக்கு வந்தமர்ந்த ஒரு பெண் என் காதில் மட்டும் கேட்கும்படியாக, ‘வென்றுவிடுங்கள் – வென்றுவிடுங்கள்’ என்றார். மாற்றம் தேவை என்பதே கோவாவின் பெரும்பாலானவர் மனங்களின் அடியாழத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது 66% பேர் மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது புலனாகியது. ஆனால் முடிவோ தொடர்ச்சி என்றே வந்தது.
மாற்றம் – ஆனால் மாறவில்லை
கோவா சட்டப்பேரவையின் 40 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மிராமர் கடற்கரைப் பகுதியில் உள்ளூர்க்காரர்களும், விடுமுறையைக் கழிக்க கோவா வந்தவர்களும் உலவிக்கொண்டிருந்தனர். இம்மாகுலேட் அன்னையின் தேவாலயப் படிகளிலும் சுற்றியுள்ள இடங்களிலும் நின்றுகொண்டு சுயபடம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆட்சி மாற்றம் தேவை என்ற ஆசை நீரோட்டம் அப்படியே வற்றிப்போய்விட்டதுபோலத் தோன்றியது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுதான் வெற்றி பெறும் என்றால் தேர்தல் என்பது எதற்காக என்ற வியப்பே மேலிட்டது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளால் விதிர்விதிர்த்துப்போனவர்கள், தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர்கள்தான். தோற்றவர்களில் எட்டுப் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மாற்றம் தேவை என்று பிரச்சாரம்செய்த அவர்கள் 169இல் தொடங்கி 1,647 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் அவரவர் தொகுதிகளில் தோற்றிருந்தனர். அப்படித் தோற்ற எட்டு காங்கிரஸ் வேட்பாளர்களில் ஆறு பேர் பாஜக வேட்பாளர்களிடம் தோற்றனர்; அதனால் மாற்றத்துக்குப் பதிலாக பழைய ஆட்சியே தொடரும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அனைத்து வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது. பஞ்சாபில் முதல்வரையே மாற்றியது, ஆதிக்க சக்திகளின் அதிகார பீடத்தை அசைத்துப் பார்க்கும்வகையில் பட்டியல் இனத்தவரை முதல்வர் பதவியில் அமர்த்தியது, அந்த மாற்றத்தை நிகழ்த்திவிட்டு அதே (காங்கிரஸ்) ஆட்சித் தொடர வேண்டும் என்று முயற்சிகளைச் செய்தது. இந்த மாற்றம் போதாது முழு அளவில் மாற்றப்பட வேண்டும் என்று ஆஆக பிரச்சாரம் செய்து வென்றது. பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைத்த ஆஆக, தான் போட்டியிட்ட 117 தொகுதிகளில் 92-ல் வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 400 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. கடந்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் இப்படி அதிக தொகுதிகளில் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ‘பெண்கள்தான் – ஆனால் போராட்டக்காரர்கள்’ என்ற புது முழக்கத்தோடு காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கியது. அந்த முழக்கம் ஆயிரக்கணக்கான பெண்களை ஈர்த்தது. பதிவான வாக்குகளில் 2.68% பெற்று 2 தொகுதிகளில் வென்றது.
கோவா மாநிலத்தில் காங்கிரஸைவிட்டு கட்சி மாறியவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இளைஞர்கள் – நன்கு படித்தவர்கள் – ஊழல் கறைபடாதவர்கள் – எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாத நல்லவர்கள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தந்தது.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் விரிவான தேர்தல் அறிக்கையை அளித்தது. உற்சாகமாகப் பிரச்சாரம் செய்ததுடன் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அனைவரையும் சென்று அடைந்தது. வாக்களிக்க லஞ்சம் தரும் வேலையை மட்டும் அது செய்யவில்லை. படித்த, தூய்மையான, எந்த ஊழல் கறையும் படியாத, இளம் காங்கிரஸ் வேட்பாளர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் தோற்றுவிட்டனர். மிகவும் மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும், கட்சி மாறிய 8 பேரும் இந்தத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவா தேர்தல் களத்துக்குப் புதியவர்களான ஆஆக, திரிணமூல் காங்கிரஸ் என்ற இரு கட்சிகளும் முறையே 6.77%, 5.21% வாக்குகள் பெற்று முறையே 2 – 0 தொகுதிகளைப் பெற்றன. அப்படி இரண்டும் போட்டியிட்டு - காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பறித்தும்விட்டன.
திசை மாறிய பயணம்
தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, ‘மாற்றம் வேண்டாம்’ என்று நினைத்தவர்கள்தான் சுலபமாகச் செயல்பட்டிருப்பது புரிகிறது. அவர்கள் செய்ய வேண்டிய வேலையெல்லாம் ஒரேயொரு பொத்தானை அமுக்குவதுதான். அதை அவர்கள் உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஒருமுகப்பட்ட சிந்தனையோடு செய்து முடித்துவிட்டனர். மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் அவரவர் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்க, வெவ்வேறு பொத்தான்களை அமுக்கி மாற்றம் ஏற்படாமல் கெடுத்துவிட்டனர்!
போதை மருந்து கடத்தலை எதிர்த்தவர்கள், மதத்தின் புனித நூலை அவமதித்தவர்களைத் தண்டிக்க நினைத்தவர்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தவர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்த பஞ்சாப் வாக்காளர்கள், பழையவர்களை ஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசிவிட்டனர்.
தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க முடிவு செய்துவிட்டவர்கள், வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்வதைத் தொடர முடிவு செய்தவர்கள், தரமற்ற கல்வி – சுகாதார வசதிகள் இருப்பது தெரிந்தும் அதே கட்சிக்கு வாக்களிப்பது என்று உத்தர பிரதேச வாக்காளர்களில் ஒரு பகுதியினர் முடிவுசெய்துவிட்டனர். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாநிலத்தின் அடிப்படையான பண்புநலன்களைக் காக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருதி மாற்றத்துக்காக வாக்களித்தவர்கள், வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்ததால் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போனது குறித்து திடுக்கிட்டுள்ளனர்.
தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றாலும், பெரும்பாலான வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஒரே சிந்தனையில் வாக்களித்திருந்தாலும் பஞ்சாபைத் தவிர வேறு எங்கும் அவர்கள் ஒரே கட்சிக்கு வாக்களித்துவிடவில்லை.
‘ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்று நினைத்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கட்சிகளுக்கு வாக்குகளை பிரித்துப் போட்டதால் வெற்றியைக் கோட்டைவிட்டனர். இந்தக் கட்டுரை ஜனநாயக நடைமுறையையே நொந்துகொள்ளும் புலம்பலாக இருக்காது, இதன் உட்பொருள் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
தமிழில்: வ.ரங்காசாரி
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ramasubbu 3 years ago
Congress katchiyin mootha thalaivar neengal. Ungaludaiya arasiyal arivu visaalamanadhu. Oru maaperum arasiyal kachi, ethanaiyo arivaarndha thalaivarkalai kondulla kachi, thalaimaiyai thodar tholvigalukku piragum Mrs. Soniya, Mr. Rahul pondravargalidam koduthiruppadhu sariya?. Ivargal thiramaiyaanavargal enbadharkku endhavidha mugaandhiramum illai.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.