கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு
என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாது
சாதியும் இடஒதுக்கீடும் மீண்டும் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீட்டு உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15, 16வது கூறுகள் வழிசெய்துள்ளன.
பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு 2019இல் சேர்க்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது சமூக நீதியை வழங்குவதற்கான அரசின் கொள்கையாகத் தொடரும் வரையில், சாதிவாரியாக மக்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்று துல்லியமாகக் கணக்கெடுப்பது நியாயமே.
இடஒதுக்கீடு தேவை என்று மேலும் மேலும் பல பிரிவினர் எழுப்பும் உரிமைக் குரல்களால், சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டேவருகிறது. பாஜக தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர மாநிலத் துணை முதல்வருமான தேவேந்திர பட்நவிஸ், “என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக இப்போது நடந்துவரும் பெரிய போராட்டப் பின்னணியில், நிருபர்கள் கேட்டபோது, இப்படியொரு பதிலை அவர் கூறியிருக்கிறார். முதல்நோக்கில் பார்க்கும்போது இந்தப் பதில், விதிவிலக்குகளுக்கு மாறானதல்ல என்பது புரிகிறது.
அவர்கள் சாதிகளைக் கடந்தவர்கள்
இந்த விவகாரத்தில் பட்நவீஸின் சாதி ஏன் (அவர் சித்பவன் பிராமணர்) பிரச்சினையானது என்று வியந்தேன். எவருடைய பெயரையும் இங்கு குறிப்பிட விரும்பவில்லை; சில தலைவர்களின் சாதி என்னவென்று பெரும்பாலான மக்கள் பார்த்ததே கிடையாது; ஆனால் வேறு சில தலைவர்களுக்கோ அவர்களுடைய சாதிதான் அவர்களுடைய அரசியலுக்கே மையமான ஆதாரம், அதற்காகவே அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கும் ஆதரவும் தொடர்கின்றன.
காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்களின் சாதி எது என்று எவருமே கேட்டதுமில்லை, கவலைப்பட்டதுமில்லை. சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திர பிரசாத் ஆகியோரைப் பற்றிய நூல்களில், அவர்களுடைய சாதி எது என்று படித்ததாக நினைவில்கூட இல்லை. அவர்கள் அனைவருமே மாபெரும் மனிதர்களாகத்தான் - மரியாதைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். அரசியல்ரீதியாக அவர்களுடைய கருத்துகளை எதிர்த்தவர்கள்கூட அவர்களைச் சாதி என்ற வட்டத்துக்குள் சிறைப்படுத்த முயன்றதில்லை; அப்படிச் செய்வது மிகப் பெரிய நிந்தனையாகக்கூட கருதப்படும்.
துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு சாதி அடையாளத்துடன்தான் பிறக்கிறார், சாதி மறுப்புத் திருமணம் செய்வோருடைய குழந்தைகளும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் விதிவிலக்குகள். படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் - குறிப்பாக நகரங்களில் - தங்களை சாதியுடன் அடையாளப்படுத்திக்கொள்வதில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரே சாதியில் திருமணம் செய்துகொண்ட இணையர்கள் பலர், சாதி மறுப்புத் திருமணங்களைத் தங்களுடைய குழந்தைகளுக்குச் செய்து வைக்கின்றனர் என்பதும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது. அனைவரும் கருதுவதைவிட, சாதி மறுப்புத் திருமணங்கள் இப்போது அதிகமாகவே நடக்கின்றன. இவையெல்லாம் உண்மையான மதச்சார்பற்ற தன்மைக்கு – மதக் கண்ணோட்டத்தில் இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படவில்லை – இட்டுச் செல்வதுடன் முற்போக்கான சமத்துவச் சமூகத்துக்கும் வழிவகுக்கும்.
இல்லாத கட்டமைப்புகள்
இந்தியர்களுடைய மனங்களில் சாதி உணர்வு ஆழ வேரூன்றிவிட்டது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். சாதிக் கட்டமைப்பு ஏன் வலுவிழக்கவில்லை என்றால், அதற்கு மாற்றாக வலுவான சமுதாய அமைப்பு ஏதும் உருவாகவில்லை.
அனைவருக்கும் பொதுவான சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; அது சாதியைக் கைவிட நினைக்கும் மக்களுடைய உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும், துயரகரமான நேரங்களில் அவர்களுடைய உதவிக்கு வரும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடன் கூட இருந்து அதைப் பகிர்ந்துகொள்ளும், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள் என்று கூறும், சட்டப்படி சமமான பாதுகாப்பு கிடைக்கும்’ (அரசியல் சட்டக்கூறு 14) என்று உறுதியளிக்கும். அப்படிப்பட்ட மாற்று அமைப்புகள் ஏதுமில்லாததால் மக்கள் – குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் ‘சாதி’ என்ற வட்டத்துக்குள் அடைக்கலம் தேடுகின்றனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மக்களை அடிப்படையாகக் கொண்ட, மக்களால் ஊக்குவிக்கப்படுகிற அமைப்புகள் இந்தியாவில் மிக மிகக் குறைவு. அப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்க காந்திஜி பாடுபட்டார், அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய அமைப்புகள் வலிமையிழந்து மங்கிவிட்டன. அவர் உருவாக்கிய சமுதாய அமைப்புகள் தங்களுடைய துடிப்பையோ சுயமாகச் செயல்படும் உரிமையையோ இழந்துவிட்டன. குஜராத் தலைநகர் ஆமதாபாதில் உள்ள சாபர்மதி ஆசிரமம் இன்றைக்கு எதிர்கொள்ளும் சவால்களைப் பாருங்கள்.
அரசியல் கட்சிகள்தான் இப்போது மக்களுடைய பெரிய தன்னார்வ சங்கங்கள் அல்லது அமைப்புகள். துரதிருஷ்டவசமாக, கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களுடைய சாதி அடையாளத்தையும் அமைப்புக்குள் கொண்டுவந்துவிடுகின்றனர். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்கள் பிறந்த சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டுவிடுகிறது.
இதுதான் இப்போது தேவந்திர பட்நவீஸுக்கும் ஏற்பட்டுள்ள சங்கடம். பட்நவீஸ் சாதி உணர்வாளர் அல்ல, தன்னுடைய சாதியுடன் அடையாளம் காண விரும்புகிறவர் அல்ல என்று நான் நம்பத் தயாராக இருக்கிறேன். மராத்தா என்ற வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடக்கும்போது, அந்தப் பிரிவைச் சேராத பட்நவீஸ், அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக விமர்சிக்கப்படும்போது அதிலிருந்து மீள, “என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாது” என்று அறிவிக்க நேர்ந்திருக்கிறது.
கூண்டிலிருந்து தப்புங்கள்
சாதி என்ற கண்ணியிலிருந்து தனிநபர்கள் தப்பிக்க பல வழிகள் உள்ளன. அதில் முதல்படி, சாதிப் பெயர்களையும் பின்னொட்டுகளையும் போடாமல் விட்டுவிடுவது. அடுத்தது சாதி அடிப்படையிலான அமைப்புகளில் உறுப்பினர்களாகச் சேராமல் ஒதுங்குவது. சமூக, அரசியல் தலைவர்கள் இதில் மக்களுக்கு வழிகாட்டலாம்.
தேசியத் தலைவர்களை அவரவர்கள் பிறந்த சாதியுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தக் கூடாது. அந்தத் தலைவர்கள் தங்களுடைய வாழ்நாளில் அனைத்து மக்களுக்காகவும்தான் போராடினார்கள், தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தியாகம் செய்தார்கள், தங்களுடைய சாதிக்காரர்களுக்காகப் போராடியதில்லை.
ஒருவர் பிறந்த சாதியை மாற்றுவது சாத்தியமல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம், தான் பிறந்த சாதியை வளர்க்கப் பார்ப்பதோ அதற்கு ஏற்றம் ஏற்படுமாறு செயலில் ஈடுபடுவதோ கூடாது. எந்த ஒரு சாமானியரும் எந்தவிதமான ஆவணத்திலும், தன்னை சாதி அடையாளத்துடன் குறிப்பிடக் கூடாது என்று மறுக்க உரிமையுண்டு. அனைத்து சாதியினரும் வசிக்கும் கட்டிடங்களில் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ முடிவு செய்யலாம்.
தன்னுடைய வாழ்க்கைத் துணையை வேறு சாதியிலிருந்து தேர்வுசெய்யலாம். தன்னுடைய மகன் அல்லது மகளையும் அவ்வாறு மணம்செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் தன்னுடைய சாதிக்காரரிடம் பிரியமாகவும் மாற்று சாதிக்காரர்களிடம் பகை உணர்வோடும் செயல்படாமல் தவிர்க்கலாம். ஒருவருடைய சாதி பற்றித் தெரியவந்தவுடன் அவர் இப்படித்தான் இருப்பார், பேசுவார், சிந்திப்பார் என்றெல்லாம் முத்திரை குத்தாமல் இருக்கலாம்.
இவையெல்லாம் எளிய நடவடிக்கைகள். இவை மிகவும் அற்பமாக இருக்கின்றனவே, இவற்றால் தன்னுடைய சாதியுடன் தன்னை ஒருவர் அடையாளப்படுத்தும் போக்கைத் தடுத்து நிறுத்திவிடாதே என்று கருதலாம். அது உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் நாம் எங்காவது ஒரு தொடக்கத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும் அல்லவா?
சாதியை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஓர் உரையை அம்பேத்கர் தயாரித்தார்; ஆனால், அந்த உரையை அவரால் ஆற்ற முடியவில்லை. சாதியை இந்த மண்ணிலிருந்து வெகு விரைவில் ஒழித்துவிட முடியாது என்று, மற்ற எல்லோரையும்விட அவருக்கு நன்றாகவே தெரியும். சாதிகளை ஒழிக்க முடியாமலிருக்கலாம், ஆனால் சாதிப் பெருமையையும் சாதிப் பற்றையும், சாதி அடையாளத்தையும் தொடர் முயற்சிகள் மூலம் படிப்படியாக வலிமை இழக்கச் செய்யலாம்.
பொதுவாழ்வில் உள்ள பிரபலமானவர்களும், சமூக – அரசியல் தலைவர்களும் உறுதியாக முயற்சிகளை எடுத்தால் இந்திய சமூகத்திலும் அரசியலிலும் சாதிகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை நிச்சயம் குறைத்துவிடலாம். இதுவெல்லாம் லட்சியவாதிகளின் கனவு என்று நீங்கள் கருதினால், அப்படிப்பட்ட லட்சியவாதியாக நான் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
இது ‘அவர்கள்’ குழந்தைகளுக்கான நியாயம்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்
பொருளாதார இடஒதுக்கீடு சரி.. இது சாதி ஒதுக்கீடு
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.