கட்டுரை, அரசியல், கல்வி, மொழி 5 நிமிட வாசிப்பு

நிர்மலா ஏன் சண்டைக்கோழி அவதாரம் எடுக்க விரும்புகிறார்?

ப.சிதம்பரம்
03 Oct 2022, 5:00 am
0

ஸ்தூரியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். மத்திய தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர் நல்ல மாணவி, தமிழ்நாடு மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படித்தவர். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாயை அடைக்கவைக்கும் வகையில், அதிர்ச்சிதரும் உண்மையை அவர் பேசியிருக்கிறார். “நான் முதலில் இந்தியையும் பிறகு சம்ஸ்கிருதத்தையும் (தமிழ் அல்ல) மொழிப்பாடமாக எடுத்துப் படித்தேன்; அறிவுத்திறம் வாய்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தையும் நான் பெற்றேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தக் கட்டுரையை நான் எழுதும் வரையில் கஸ்தூரியின் இந்தப் பேச்சை, நிர்மலா சீதாராமன் மறுக்கவில்லை. 

நாகரிகமற்ற இந்த வாய்ச் சண்டையை ஆரம்பித்தவர் நிர்மலா சீதாராமன். உதடுகளைக் கடித்துக்கொண்டு, முகத்தில் கோபம் கொப்பளிக்க, கடுமையான வார்த்தைகளால் கடும் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இந்தி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மறுக்கப்படுவதாகவும், பிற மாணவர்களிலிருந்து அவர்கள் வேறுபடுத்திப் பார்க்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார் நிர்மலா. அத்துடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அவர் அடுக்கினார்:

தமிழ்நாட்டில் நிர்மலா மாணவியாக இருந்தபோது, இந்தி மொழியைப் படித்தவர்கள் ஏளனத்துக்கு உள்ளானதாகவும் பள்ளிக்கூடங்களிலும் வீதிகளிலும் பிறரால் ஏசப்பட்டதாகவும், கிட்டத்தட்ட மற்றவர்களிடமிருந்து விலக்கியே வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். “தமிழக மக்கள் பண்பாடு மிக்கவர்கள். ஆனால் இந்திக்கு எதிரான வெறுப்புணர்வால் இந்தியைத் தேர்வுசெய்து படிப்பதை நிறுத்திவிட்டேன். அது நாகரிகமற்ற எதிர்ப்பால் விளைந்தது” என்று அவர் கூறியிருந்தார்.

நீதிக்கட்சியைத் தொடக்கமாகக் கொண்டவர்களானாலும், திராவிட மாதிரியில் நம்பிக்கை உள்ளவர்களானாலும் இந்திக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்புவதை, தான் நிராகரிப்பதாகக் கூறியிருக்கிறார் நிர்மலா. உண்மையிலேயே மிகவும் கடுமையான வார்த்தைகள் இவை. தொலைக்காட்சித் திரையில் அவரைப் பார்த்தபோது, ஒரு சண்டையை வேண்டுமென்றே தொடங்கும் நோக்கமுள்ளவரைப் போலவே தெரிந்தார்.

கட்சிகள் மறுப்பு

நிர்மலா சீதாராமனின் விமர்சனங்களைத் தமிழ்நாட்டை கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் திமுக, அதிமுக தலைவர்கள் கண்டித்துள்ளனர். ‘நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தாருங்கள்’ என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் (மோகன் குமாரமங்கலத்தின் பெயரன்) சவால் விட்டிருக்கிறார். அத்துடன், ‘எந்தத் தரவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் அரசைச் சேர்ந்தவராயிற்றே அவர்’ என்றும் குத்திக்காட்டியிருக்கிறார் மோகன்.

ஆனால், அனைவரையும் தன்னுடைய பேச்சால் கவர்ந்துவிட்டார் கஸ்தூரி.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ கல்விக் கொள்கை என்னவென்றால், மும்மொழித் திட்டத்தை நிராகரித்துவிட்டு இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதாகும். அரசுப் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. திமுக – அதிமுக இரண்டுமே இதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. ஆனால், அரசு நிதியுதவி பெறும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளிலும் அரசு நிதியுதவியே பெறாத தனியார் பள்ளிகளிலும் இந்தி மொழி கற்றுத் தரப்படுகிறது.

தமிழக அரசு இந்தப் பள்ளிகளின் முடிவில் தலையிடுவதில்லை. மத்தியக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்கள் 1,417, இந்தியக் கல்வி வாரியத்தின் (ஐசிஎஸ்இ) அங்கீகாரம் பெற்ற 76 பள்ளிகள், ஐபி அங்கீகாரம் பெற்ற 8 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆங்கிலோ-இந்திய பள்ளிக்கூடங்கள் 41, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்கள் 51 உள்ளன. அனைத்திலுமே இந்தி ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படுகிறது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் கடைப்பிடிக்கப்படுவது ‘ஒரு மொழிக் கொள்கை’ மட்டுமே; இந்தியே மொழிப் பாடமாகவும், பிற பாடங்களைப் படிப்பதற்கான மொழியாகவும் (மீடியம்) பின்பற்றப்படுகிறது. சம்ஸ்கிருதம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி ஆகியவை இரண்டாவது மொழியாகக் கற்றுத்தரப்படுகிறது. ஆங்கிலமும் இரண்டாவது மொழியாகக் கற்றுத்தரப்படுவதாக பாசாங்கு செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் கற்பிக்க தகுதி வாய்ந்த ஆங்கில ஆசிரியர்கள் இருப்பதில்லை; இதனால் மிகச் சில மாணவர்கள்தான் ஆங்கிலம் படிக்க முன்வருகிறார்கள். தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்றுத்தருவதைப் போல ‘பாவனை’கூட கிடையாது. இந்தி பேசும் மாநிலங்களில் தனியார் பள்ளிக்கூடங்கள், அரசுப் பள்ளிக்கூடங்களின் வழியையே அப்படியே குதூகலமாகப் பின்பற்றுகின்றன.

இதனால், இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. இரு மொழிக் கொள்கை என்பது குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மாநிலங்களின் பள்ளிக்கூடங்களில் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை வற்புறுத்துவதெல்லாம் தென்னிந்திய மாநிலங்கள் மீதுதான்.

இந்தி பயில்கின்றனர்

இருந்தும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும், ‘தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா’ அல்லது ‘பாரதிய வித்யா பவன்’ மூலம் இந்தி பயில்கின்றனர். 1918இல் தொடங்கப்பட்ட இந்தி பிரச்சார சபா மூலம் லட்சக்கணக்கானவர்கள் இந்தி பயின்றுள்ளனர். 2022இல் தமிழ்நாட்டில் மட்டும் 2,50,000 பேர் வெவ்வேறு நிலைகளில் இந்தித் தேர்வுகளை எழுதினர்.

வேலைக்காக வருவோர் அதிகரிப்பதால் லட்சக்கணக்கான இந்திக்காரர்கள் இப்போது தென்னிந்தியாவில் குடியேறிவருகிறார்கள். வீடுகளில் இந்தியிலும், வேலை செய்யும் இடங்களில் ஆங்கிலத்திலும், கடைவீதி போன்ற பொது இடங்களில் உள்ளூர் மொழிகளிலும் பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

விஷமமான திட்டம்

இந்திக்கு எதிராக வெறுப்பு நிலவுகிறது, இந்தி படிப்பவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள், வசை பாடப்படுகிறார்கள் என்பதெல்லாம் எந்தக் காலத்திலும் உண்மையல்ல, இப்போதும் அப்படி நடப்பதில்லை. ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மோதல் களத்தை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்தி அதில் அரசியல்ரீதியாக ஆதாயம் காண முற்படுகிறார். இந்த திட்டத்துக்கு ஏராளமாக நிதியுதவி உண்டு. ஆந்திரம், தெலங்கானா, கேரளம், தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சிகளைத் தொடர்கிறது.

மொழியின் மூலம் மோதல்களை ஏற்படுத்தும் இந்த வேலையைச் செய்யும் பொறுப்பு நிதியமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது அல்லது அவராகவே விரும்பி முன்வந்து அதைச் செய்ய முற்பட்டிருக்கிறார். பாஜக தொண்டர்கள் ஏற்கெனவே முஸ்லிம் குழுக்களுடன் வீதிச் சண்டையில் இறங்கிவிட்டனர். கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களை, “ஆவேசமாகப் பேசுங்கள், ஆக்ரோஷமாகச் செயல்படுங்கள்” என்று கட்சித் தலைமை ஊக்குவிப்பதைப்போலத் தெரிகிறது.

இதில் முன்வரிசையில் நிற்க நிதியமைச்சர் விரும்புவது குறித்து நான் வியப்படையவில்லை. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணை முட்டும் விலைவாசி, வீழ்ந்துவரும் ரூபாயின் மாற்று மதிப்பு, மாநிலங்களுடன் பொது சரக்கு சேவை வரி, பெட்ரோல் - டீசல் விலை, வரி வருவாயைப் பகிர்ந்துகொள்வது போன்றவை தொடர்பாக இடைவிடாமல் சச்சரவு என்று பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் திணறும் அவர், சண்டைக் கோழியாக புதிய வடிவெடுக்க முற்பட்டு விரும்பியே இப்படியெல்லாம் பேசுகிறார்.

இந்தப் புதிய முயற்சியில் அவருக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன், அதேசமயம், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தன்னம்பிக்கையும், தளர்ச்சியில்லா தீரமும் மிக்க கஸ்தூரிகளை அவர் இனி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5

2





துப்புரவுத் தொழிலாளர்mk stalinஇனப்படுகொலைவர்ணாஸ்ரமம்வாழ்வின் நிச்சயமின்மைவெள்ளப் பெருக்குஞானபீடம்சிறுநீர்க் குழாய்குயில்தாசன்இந்தியன் இனிசித்தராமய்யா அருஞ்சொல்தொன்மமும் வரலாறும்மசாலாடிஜிட்டல்கலைஞர்நாட்டின் வளர்ச்சிமுடியாதா?சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிககலவிதகவல் தொழில்நுட்பம்33% இடஒதுக்கீடுராமசந்திரா குஹா கட்டுரைஅந்தமான் சிறைபிரதாப் சிம்ஹாமறைமுக வரி வருவாய்மதிப்பீடுபெரும்பான்மை சமூகம்விஜயும் ஒன்றா?முன்னோடித் தமிழகம்புற்றுக்கட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!