கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

சீனத்தின் சதுரங்கப் பாய்ச்சல்

ப.சிதம்பரம்
19 Dec 2022, 5:00 am
1

ந்திய எல்லைக்குள் சீன ராணுவம் (பிஎல்ஏ - மக்கள் விடுதலை சேனை) 2020 மார்ச் - ஏப்ரலில் ஊடுருவி ஏற்படுத்திய அவமானத்தை மோடி அரசால் அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்துவிட முடியாது என்று சில அரசியல் பார்வையாளர்கள் நம்புகின்றனர்; இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ‘வரவேற்பறையில் டிராகன்’ (The Dragon in the Room) என்பது கட்டுரையின் தலைப்பு. அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்: 

“தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் 2019 அக்டோபர் 11இல் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபோது அவருடைய உள் மனதின் உண்மையான எண்ணவோட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை பிரதமர் மோடியால் கணிக்க முடியவில்லை. கடலிலிருந்து அப்போது இதமான குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தாலும், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களுடன்தான் சீனத்தின் ‘மக்கள் விடுதலை சேனை’ தயாராக இருந்திருக்கிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குவதற்கான உத்தரவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் 2020 ஜனவரி முதல் நாளில் கையெழுத்திட்டிருக்கிறார். மக்கள் விடுதலை சேனையைச் சேர்ந்த படைகள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை (எல்.ஏ.சி) கடந்து இந்திய எல்லையில் 2020 மார்ச் - ஏப்ரலில் தாக்குதல் நடத்தின.” 

இது தொடர்பாக ஆலோசனை நடத்த 2020 ஜூன் 19இல் தில்லியில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முடிவில் இவ்வாறு கூறினார்: “இந்திய எல்லைக்குள் அன்னியர் யாரும் ஊடுருவவும் இல்லை, இந்திய எல்லைக்குள் அன்னியர்களும் யாரும் இல்லை.” மாண்புமிகு பிரதமர் சொல்வதை நம்புவதற்கே அனைவரும் விரும்புவோம், ஆனால் சான்றுகளோ அந்தக் கூற்றையே மூழ்கடிக்கிற வகையில் எதிர்மறையாக இருக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

வரவேற்பறையில் டிராகன்

ப.சிதம்பரம் 01 Aug 2022

மக்களின் மறதி

நெஞ்சைப் பதறவைத்த அந்த நாள்களை இந்நாட்டு மக்கள் மறந்துவிட்டார்கள் என்றே மோடி நினைக்கிறார். ஒரு வகையில் அவர் நினைப்பதும் சரியே.

மோடி அரசு எடுத்த தவறான முடிவுகளையும், நடவடிக்கைகளையும்கூட மக்கள் மறந்துவிட்டார்கள்; பணமதிப்பிழப்பு, முன்னெச்சரிக்கையே விடாமல் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டையே பொதுமுடக்கத்தில் ஆழ்த்தியது, உணவு - குடிநீர்கூட இல்லாமல் வேலையையும் வருமானத்தையும் இழந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு லட்சக்கணக்கான (புலம்பெயரும்) தொழிலாளர்கள் நடந்தே கடந்தது (அப்படிச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் மேல் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது), மூச்சுத் திணறலுக்கு ஆளான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் ‘செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட’ பற்றாக்குறை, ஆற்றங்கரைகளில் கிடத்தப்பட்ட கணக்கற்ற சடலங்கள், ஆறுகளில் மிதந்த சடலங்கள், டிரம்பை வரவேற்க மிகுந்த பொருட் செலவில் மேற்கொள்ளப்பட்ட ‘நமஸ்தே டிரம்ப்’ பொதுக் கூட்டங்கள் – அவ்வளவு ஏன், குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சமீபத்தில் நடந்த மோர்பி தொங்கு பால விபத்து என்று எதையுமே மக்கள் நினைவில் வைத்திருப்பதைப் போல தெரியவில்லையே!

இந்தியாவுக்கும் சீனத்துக்கும் இடையிலான 3,488 கிமீ நில எல்லையில் நிலைமை 2020 மார்ச் – ஏப்ரலுக்குப் பிறகு மோசமாகிக்கொண்டேவருகிறது. 2022 டிசம்பர் 9ஆம் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் யாங்ஸி என்ற இடத்தில் இரு நாட்டு துருப்புகளுக்கும் இடையில் நடந்துள்ள மற்றொரு கைகலப்பு கசப்பான உண்மையைத்தான் உறுதிப்படுத்துகிறது: இந்தியாவுக்குள் எப்போது ஊடுருவுவது, எங்கே ஊடுருவுவது என்பதை சீனம் முடிவுசெய்கிறது, இந்திய அரசு அடுத்து நடக்கப்போவது என்ன என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கான கொள்கையும் அரசிடம் இல்லை.

ஆனால், இப்படி நடக்கும் ஒவ்வொரு ஊடுருவலையும் நம்முடைய தீரம் மிக்க ராணுவத்தினர் முறியடிக்கிறார்கள், அப்படிச் செய்யும்போது இந்தியத் துருப்புகளை நாம் பலி கொடுக்கவும் நேர்கிறது. கல்வான் பகுதியில் 2020 ஜூன் மாதம் நடந்த கைகலப்பில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் இறந்தனர். அருணாசலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மோதல்களில் 7 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்ததை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது, ஆனால் அடிபட்டவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று வேறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை

ப.சிதம்பரம் 07 Nov 2022

சீனத்துக்கு இவ்வளவு துணிவு ஏன்?

தான் விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் இப்படி ஊடுருவ சீனத்துக்கு துணிவையும் தன்னம்பிக்கையையும் அளிப்பது எது? மற்ற விஷயங்களோடு இதைத்தான் விவாதிக்க நாடாளுமன்றம் 13, 14, 15 ஆகிய நாள்களில் விரும்பியது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைமை வகித்தவர்கள், இது மிகவும் புறத்தூண்டலுக்கு வித்திடக்கூடிய நுட்பமான விவகாரம், எனவே விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டனர். மிகவும் ‘நுட்பமான விவகாரம்’ என்பதால் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிக வினோதமான விளக்கமாக இருக்கிறது.

நாடாளுமன்றம் நுட்பமில்லாத விஷயங்களைத்தான் விவாதிக்க வேண்டும் என்றால் மாநிலங்களவை அடுத்த முறை அவை விதி எண் 267இன் கீழ், ஆர்ஜென்டீனா – பிரான்ஸ் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி போன்றவற்றைத்தான் விவாதிக்க முடியும். (கடந்த ஆறு ஆண்டுகளாக அவை விதி எண் 267இன் கீழ் ஒரு விவாதமும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஒ’ப்ரையான்). இப்படியே போனால் அவை விதி எண் 267 பயன்படுத்தப்படாமலேயே வழக்கொழிந்து போய்விடும். 

நாடாளுமன்றத்துக்கு விவரம் தெரியாமல் மறைக்கலாம், ஆனால் மக்கள் மன்றத்திடம் மறுக்க முடியாது. மக்களுக்கு இது தொடர்பாகப் பின்வரும் உண்மைகள் தெரிந்தாக வேண்டும்:

  • எல்லைப் பிரச்சினை தொடர்பாக பல சுற்றுப் பேச்சு நடத்தியும் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ (வெந்நீர் ஊற்று) பகுதியைச் சுற்றியுள்ள இடம் இந்தியாவுடையது என்பதை ஏற்க சீனம் மறுத்துவிட்டது.
  • டேப்சாங் சமவெளி, டேம்சாக் சந்திப்பு ஆகிய இடங்களிலிருந்து துருப்புகளை விலக்கவும் சீனம் மறுத்துவிட்டது. இவ்விரு இடங்களிலும் இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகில்தான் சீன ராணுவம் இருக்கிறது என்கிறது ‘தி இந்து’ நாளிதழ். இவ்விரண்டு இடங்களும்தான் இரு நாடுகளுக்கும் இடையில் உரசல்களுக்கு இடம் தரும் பகுதிகள் ஆகும்.
  • லடாக்கின் கிழக்கில் தொடங்கி, அருணாசலப் பிரதேசம் வரையில் சீனம் தனது ராணுவ நிலைகளையும் போருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்தியிருக்கிறது. படைகள், ஆயுதங்கள், சாலை வசதிகள், பாலங்கள், தகவல் தொடர்பு வசதிகள், ஹெலிகாப்டர்கள் வந்து இறங்குவதற்கான தளங்கள், மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் ஆகியவற்றைக்கூட சீனம் நிறுவிவிட்டது.
  • கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகில் சீனம் துருப்புகளைத் தொடர்ந்து குவிப்பதையும் ராணுவ அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவதையும் அமெரிக்காவால் பார்க்க முடிகிறது என்று அமெரிக்க ராணுவத் துறையின் பத்திரிகைச் செயலர் அறிவித்துள்ளார்.
  • இரு நாடுகளுக்கும் இடையில், யாருமே நுழையக் கூடாத ‘தடைசெய்யப்பட்ட பகுதிகள்’ அதிகமாக்கப்படுவதாகவும் தெரிகிறது. அந்தப் பகுதியில் இந்தியத் துருப்புகளால் ரோந்து செல்ல முடியாது. 2020க்கு முன்னர் அந்தப் பகுதிக்கு இந்தியத் துருப்புகளால் செல்ல முடிந்தது. யாங்ஸி பகுதியிலும் இதேபோல இந்தியத் துருப்புகள் ரோந்து செல்லக் கூடாது என்று சீனம் தடை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பாலி நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். அந்தக் காணொலிக் காட்சியில் இரு தலைவர்களும் இந்தோனேசியவின் பட்டுச் சட்டை அணிந்து கை குலுக்குவதைப் பார்க்க முடிகிறது. மோடி ஏதோ பேசுகிறார், ஜி அதைக் கேட்டு புன்னகைக்கவும் இல்லை, முகம் சுளிக்கவும் இல்லை; முக்கியம் தரும் வகையில் எதையுமே அந்தச் சந்திப்பில் அவர் பேசவே இல்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு 6 சவால்கள்

டெரிக் ஓ'ப்ரையான் 16 Dec 2022

துண்டிக்க முடியாத சீனச் சார்பு?

இந்தியாவுக்கு எதிராக சீனம் எவ்வளவுதான் விரோதம் பாராட்டினாலும், சீனத்துக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைப் போல நான்கு மடங்கைத் தொடர்ந்து அதனிடமிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா. 2021-22இல் சீனத்துடனான வெளிவர்த்தகப் பற்றுவரவில் பற்றாக்குறை 7,300 கோடி அமெரிக்க டாலர்கள். 174 சீன நிறுவனங்கள் இந்தியாவில் பதிவுசெய்துகொண்டு தொழில் நடத்துகின்றன. 3,560 இந்திய நிறுவனங்களில் சீனர்கள்  இயக்குநர்களாக உயர் பதவிகளில் இருக்கின்றனர். சீனத்தின் தொடர்பைத் துண்டித்துவிடுவோம் என்று கூறிய மோடி அரசின் கூற்று, காற்றில் கலைந்துவிட்டதையே இந்த உண்மைகள் உணர்த்துகின்றன.

சீனம், ‘செக்கர்’ என்று அழைக்கப்படும் விளையாட்டை விளையாடுகிறது. சதுரங்கத்தைப் போலவே இதிலும் 64 கட்டங்கள் இருக்கும். இரண்டு பேர் மட்டுமே ஆடுவார்கள். இருவருக்கும் தலா 12 காய்கள் தரப்படும். கறுப்பு – சிவப்பு நிறங்களில் வட்டக் காய்களாக இருக்கும். இது சதுரங்கம் போல அல்ல; இந்த ஆட்டத்தில் ஆட்டக்காரர் எதிராளியின் காயைத் தாவிச் சென்று வெட்டுவார். பக்கவாட்டிலும் முன்பக்கமாகவும் மட்டுமே செல்ல வேண்டும். இறுதியில் எதிராளியின் காய்களை வெட்டிவிட்டு தன்னுடைய 12 காய்களையும் எதிரியின் இடத்தில் முக்கோண வடிவில் நிறுத்த வேண்டும். இது இந்தியாவின் பகடை ஆட்டம்போல அல்ல. இதற்கு மதிநுட்பம் அவசியம்.

சீனத்தின் உத்தி - வியூகம் என்ன என்று தெரியாமல் இருட்டில் விழிபிதுங்கி நிற்கிறது மோடி அரசு. எனவே, நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உண்மை தெரிந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் அக்கறை செலுத்துகிறது. பாலியில் மோடியிடம் ஜி ஜின்பிங் என்ன சொன்னார் என்று நமக்குத் தெரியாது காரணம், நாடாளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்கவே அனுமதிக்கவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

வரவேற்பறையில் டிராகன்
மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை
பாஜகவுக்கு 6 சவால்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

6

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஒவ்வொரு தாக்குதலுக்கும் இறக்குமதி வரியை ஒரு சதவிகிதம் அதிகரிக்கவேண்டும்.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரைஊர்மாற்றம்பல்வகை மாதிரிகள்விஷ்ணு தியோ சாய்ஒரு நாடு ஒரு செயல்திட்டம்சடலம்தருமபுரிகல்யாணராமன் கட்டுரைகால் பெருவிரல் வீக்கம்ஆளுநர்களின் செயல்களும்லே உச்ச அமைப்புஉணவுமுறைவங்கதேச வளர்ச்சிஜி.குப்புசாமிபத்ரி சேஷாத்ரிபல்லின் நிறம்தேசிய தலைமைதேர்தல் நிதிதேனுகாஎளிமைசம்ஸ்கிருத மந்திரம்பட்டியல் இனத்தவர்சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!பெரியாரும் காந்தி கிணறும்மகிழ்ச்சியற்ற வாழ்க்கைகோதபய ராஜபக்சேகாஸா – உக்ரைன்: தொழில்நுட்பப் போர்சோஷலிஸ்ட்சுயமான தனியொதுங்கல்preparing interviews

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!