கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
ஜனநாயக வானில் நம்பிக்கைக் கீற்றுகள்
கடந்த காலங்களில் நடந்த பொதுத் தேர்தல்களில், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அதுவே அதிருப்திக்குக் காரணமாக – கழுத்தில் கட்டிய பாறாங்கல்போல – சுமையாகிவிடும்.
சுதந்திரம் பெற்றது முதல் இருபதாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சிக்கு வரத் தொடங்கின; காங்கிரஸின் தனியாதிக்கம் முடிவுக்கு வரலானது. பிறகு ஒன்றிய அரசிலும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இடம்பெறுவது 1977இல் ஆரம்பித்தது.
கூட்டணிக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி வகிப்பது கேரளத்தில் தொடங்கியது. 1990கள் முதல் ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.
ஆட்சியிலிருந்தும் வெல்பவர்கள்
ஆட்சியில் இருக்கும் கட்சி எப்போதுமே மக்கள் செல்வாக்கை இழந்து தோற்றுவிடும் என்ற கருத்தை நிராகரிக்கும் வகையில், செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் சிலர் தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தலைமையிலான அஇஅதிமுக 1977 முதல் 1987இல் அவர் மறையும் வரை தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் வென்றது. ஜெ.ஜெயலலிதா தலைமையிலும் அஇஅதிமுக 2011, 2016 பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து வென்றது.
ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையில் அவருடைய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 2000 முதல் தொடர்ந்து ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி செய்கிறது. இவை எல்லாவற்றையும்விட மிகவும் வியப்புக்குரிய வகையிலும், அச்சமூட்டும்படியாகவும் குஜராத் மாநிலத்தில் 1998 முதல் பாஜக தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வென்றிருக்கிறது. 2002 முதல், முதல்வர் என்ற வகையிலும் - அதன் பிறகு கட்சியின் நிகரற்ற தேசியத் தலைவர் என்ற வகையிலும் அக்கட்சியை மாநிலத்தில் வழிநடத்துகிறார் மோடி.
சில சூழ்நிலைகளில், சில தலைவர்களின் கீழ், தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருப்பது பெரிய சுமையாக இல்லாமல், சுகமான முடிவைத் தரும் வலிமையாகவே மாறிவிடுகிறது. இது எப்படி, எதனால் நிகழ்கிறது என்று அரசியல் பார்வையாளர்களும், சமூக உளவியலாளர்களும், தேர்தல் கணிப்பு அறிஞர்களும் ஆராய வேண்டும்.
புதிய போக்குகள்
இது தொடர்பாக முதலில் என் மனதில் பட்டவற்றைச் சொல்லிவிடுகிறேன்:
இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஐந்தாண்டுக் காலத்தில் பொதுத் தேர்தலில் செலவழிக்க போதுமான அளவுக்கு நிதியையும் இதர வசதிகளையும் தயார் செய்துவிடுகின்றன. கு.காமராஜ், எஸ்.நிஜலிங்கப்பா, கே.பிரம்மானந்த ரெட்டி, ஹிதேந்திர தேசாய், யஷ்வந்த்ராய் பல்வந்த்ராய் சவாண், மோகன் லால் சுகாடியா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் முதல்வர்களாகப் பதவி வகித்தபோது இப்படி நடந்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.
ஆளுங்கட்சிகள் அரசு அதிகாரிகளிடம் – அதிலும் குறிப்பாக காவல் துறையிடம், அரசியல் சார்புத்தன்மையை ஏற்படுத்தத் தயங்குவது இல்லை; குஜராத், உத்தர பிரதேசத்தைத் தவிர வேறெங்கும் இது அவ்வளவு அப்பட்டமாகத் தெரிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் பேரவைத் தொகுதியில் 32%, கடௌளியில் 56% வாக்குகள் பதிவாயுள்ளன. மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 53% வாக்குகளே பதிவாகின. ராம்பூரில் வாக்குப் பதிவு குறைவதற்குக் காரணம் காவல் துறைதான் என்று சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
தொழில்நுட்பமும் அடியாள் பலமும்
அறிவுக்கூர்மையும் எதிர்காலம் குறித்த விசாலமான பார்வையும் உள்ள அரசியல் கட்சிகள் நவீனத் தொழில்நுட்பங்களைத் தேர்தல் பணிக்கு விரிவாகப் பயன்படுத்துகின்றன. அவற்றைக் கொண்டு தங்களுடைய கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்துவதுடன் தேர்தல் பணியைச் சீராக மேற்கொள்ள தயார்படுத்துகின்றன.
பாஜகவும் வேறு சில கட்சிகளும் வாக்குச் சாவடிகளுக்கென்ற தனி தொண்டர் குழுக்களை ஏற்படுத்துகின்றன. தேர்தல் நாளன்று இந்தக் குழுக்கள் மூலம் அதிகபட்ச வாக்காளர்களைத் தேர்தலில் வாக்களிக்க வைக்கின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு குழுவை நியமித்துப் பணியாற்றுகிறது பாஜக.
நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புள்ள அரசியல் கட்சிகள், கடுமையாக உழைக்கக்கூடிய அடியாள்கள் பலத்தையும் சேர்த்துக்கொள்கின்றன. தேர்தலுக்கு முன்னதாகவே, பிற அரசியல் கட்சிகளில் உள்ள செல்வாக்கான தலைவர்களையும், துணிச்சலான அடியாள்களையும் அடையாளம் கண்டு, வளமான எதிர்காலத்தை அளிப்பதாக உறுதியளித்து தங்கள் கட்சிக்குத் தாவச் செய்கின்றன.
இவர்களையெல்லாம் ஈர்க்க பணம் பயன்படுத்தப்படுகிறது. பணம் மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக உள்ள குற்றவியல் வழக்குகளில் சிறைவாசம் உள்ளிட்ட தண்டனைகளைப் பெறாமல் காப்பதாக, ‘பொது மன்னிப்பு’ வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன. ஆளுங்கட்சிக்குத் தாவிய உடனேயே அவர்கள் மீதான விசாரணைகளும் புலனாய்வுகளும் சட்டென்று நின்றுவிடுகின்றன.
மதரீதியிலான அணிதிரட்டல்
கடந்த சில ஆண்டுகளாக ஆளுங்கட்சியானது மதத்தை, வாக்காளர்களை அணி சேர்க்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. இதற்காகச் சில நடவடிக்கைகளை வெட்கமில்லாமலும் சிலவற்றை நுட்பமாகவும் மேற்கொள்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட குஜராத்திலும் (2012, 2017, 2022), உத்தர பிரதேசத்திலும் (2022) வேட்பாளராக பாஜக நிறுத்தவேயில்லை. குஜராத்தின் மக்கள்தொகையில் 9.7%, உத்தர பிரதேசத்தில் 20% முஸ்லிம்கள். ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது பிற சமூகத்தவருக்கான சமிக்ஞையாகும், இதனால் மத அடிப்படையில் வாக்காளர்கள் அணி திரள்கின்றனர்.
ஆளுங்கட்சியின் நிர்வாகத் தோல்விகளை மூடி மறைக்கும் வகையில் உரத்த குரலில், திசைதிருப்பும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசி சலுகைகளை வாங்கிக்கொள்ளும் ஊடகங்கள், அவற்றை ஊதிப் பெருக்குகின்றன. சுதந்திரமான ஊடகம் என்பது பழங்காலச் சின்னமாகிவிட்டது. இப்போது தொலைக்காட்சி – செய்தித்தாள் என்று அனைத்து ஊடகங்களுமே பெருநிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. சமூக ஊடகம் இவற்றைவிட சுதந்திரமானது. ஆனால் அதில் உண்மையற்ற செய்திகளும், போலியான காணொலிக்காட்சிகளும், விஷமத்தனமான விமர்சனங்களும், இயந்திரத்தனமான இணையதளப் பதிவுகளும் இடம்பெறுகின்றன.
வென்றவர்கள் தோற்கக்கூடும்
நான் சுட்டிக்காட்டிய அம்சங்களைத் தவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அம்சங்களாக வரலாறு, கலாச்சாரம் ஆகியவையும் இருக்கக்கூடும்.
குஜராத்திலும் உத்தர பிரதேசத்திலும் வினோதமான அமைதியும் சமரசமும் நிலவுகின்றன. மயானத்தின் அமைதியா, அடிமைகளின் மௌனமா என்று அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி முன்னொரு காலத்தில் எழுப்பிய அறிவுப்பூர்வமான கேள்வி, இப்போதும் பொருந்துகிறதா? அது அப்படியல்ல என்றே நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்.
ஆட்சிக்கு எதிரான குரல்கள் அரசுகளால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன, ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்கின்றன. இப்படிப்பட்ட சுடுகாட்டு அமைதியும், நிசப்தமான சமரசமும் நிலவினால், இந்தியா என்பது தேர்தலுக்கான ஜனநாயகமாக மட்டுமே, அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகம் அல்ல என்ற நாளை நோக்கி நாம் விரைந்துவிடுவோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் வென்றவர்கள், தோற்றவர்கள் இருவருக்குமே சில பாடங்களைத் தன்னுள் வைத்துள்ளன. பொதுவான பாடம் என்னவென்றால், வென்றவர்கள் வலிமையான கட்சி நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கிறார்கள், கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொண்டர்கள் இருக்கின்றனர், பிரச்சாரத்தில் உற்சாகம் காட்டுகின்றனர், சிறிய வாக்குச் சாவடிக் குழுக்கள் வரையில் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
குஜராத்தில் இந்த நான்கு அம்சங்களும் பாஜகவில் இருந்ததால், பதவியில் இருக்கும் கட்சி மீது வாக்காளர்களுக்கு வழக்கமாக ஏற்படும் சலிப்பும் – வெறுப்பும் பெரிதாகவில்லை; தோல்வியிலிருந்து மாபெரும் வெற்றிக்கு இட்டுச் சென்றன. இமாசலத்தில் காங்கிரஸும், தில்லி மாநகராட்சியில் ஆஆகவும் முக்கிய போட்டியாளர்களாகத் திகழ்ந்தன; அவற்றிடம் இந்த நான்கு அம்சங்களும் இருந்ததால், பதவியில் இருக்கும் கட்சி மீதான வெறுப்பும் சலிப்பும் மிகுந்து, இரு கட்சிகளுக்கும் வெற்றியைத் தந்துள்ளன.
எந்தக் கட்சி வென்றிருந்தாலும் எந்தக் கட்சி தோற்றிருந்தாலும் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தலில், மூன்று வெவ்வேறு கட்சிகள் வென்றன என்பது காரிருளைக் கிழிக்கும் சூரிய ஒளிக்கீற்றைப் போல, ஜனநாயகம் தழைக்கும் என்று நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகின்றன!
தொடர்புடைய கட்டுரை
தமிழில்: வ.ரங்காசாரி
3
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.