கரோனா வைரஸால் ஏற்படக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன் நாடாளுமன்றத்தில் 2020 மார்ச் 2இல் தெரிவித்தார். “மக்கள் பீதியடையவோ, அச்சம் காரணமாக எல்லா நேரத்திலும் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் முகக் கவசம் அணியவேண்டிய அவசியமோ இல்லை என்றே நினைக்கிறேன். முகக் கவசம் அணிவதா - வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முடிவு மக்களுடையதுதான்” என்றும் அமைச்சர் அறிவித்தார்.
அமைச்சரின் பேச்சையே ஒரு நல்ல அறிகுறியாகக் கருதிய டாக்டர் நிதின் என்பவர், “மருத்துவம் படித்த ஒருவரே அமைச்சராகவும் பதவி வகித்துக்கொண்டு நிலைமைக் குறித்து மக்களுக்கு அச்சம் நீக்கியதற்கு நான் பெருமைப்படுகிறேன், அதை அந்தக் கோணத்திலேயே பார்க்கிறேன்” என்று சுட்டுரையில் பாராட்டினார். “சக மருத்துவர் என்ற வகையில் உங்களுடைய வார்த்தைகளை அப்படியே நம்புகிறேன், நம்முடைய சுகாதார அமைப்பின் மேலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நாம் அனைவரும் இணைந்து கரோனோ வைரஸை இந்தியாவிலிருந்தே விரட்டுவோம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டார் நிதின்.
2020 மார்ச் 24ஆம் தேதி இரவு நெருங்கிய நேரத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. 2021 ஜூலை 7இல் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு டாக்டர் ஹர்ஷ வர்த்தன் பணிக்கப்பட்டார்!
எதிரொலிக்கும் அரங்கு
ஒன்றிய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை 2022 பிப்ரவரி மாதத்துக்கான நிதி அறிக்கைகளை வெளியிட்டதைப் படித்தபோது டாக்டர்கள் வர்த்தன், நிதின் ஆகியோரின் நினைவுகள் எனக்கு வந்தன. நிதி அமைச்சகமானது, நாட்டின் பொருளாதாரத்தையும் நிதி நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டிய அதிகாரம் கொண்டது. எனவே, அதன் அறிக்கையில் உள்ள சுய தம்பட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ரிசர்வ் வங்கியோ நாட்டின் நிதி சார்ந்த அனைத்து விவகாரங்களையும் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புமிக்கது. அது வெளிப்படையாகப் பேச வேண்டும், பொருளாதார நிர்வாகம் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளை - தேவைப்படும் வேளைகளில் - நடுநிலையோடு விமர்சிக்கவும் வேண்டும்.
இரண்டு அறிக்கைகளிலும் உள்ள பெரும்பாலான தகவல்களும் தரவுகளும் ஒன்று போலவே இருந்தன. தரவுகளும் தகவல்களும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், இரண்டையுமே ஒரே நபர்தான் எழுதினாரோ என்று வியக்கும் அளவுக்கு அவற்றில் ஒற்றுமைகள் இருந்தன!
பொருளாதார நிலை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை அவ்வளவாக உற்சாகமில்லாத குரலில்தான் தொடங்குகிறது: “உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய நிலைமை, வீழ்ச்சி அடைவதற்கான பல அறிகுறிகளுடன் காணப்படுகிறது. ஒமைக்ரான் கிருமியால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலேயே இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் விலைவாசி உயர்வு குறித்து எச்சரிக்கை அடைந்து அதிகப் பணம் சுழற்சியில் இல்லாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் இவ்விதமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் உலக அளவில் பொருளாதாரம் மீட்சி அடைவதே பெரிய சவாலாகத்தான் இருக்கிறது” என்கிறது அந்த அறிக்கை.
அறிக்கையின் முடிவும் அப்படியே கவலை தோய முடிகிறது: “பண்டங்களின் விலை உயர்வதாலும், சரக்குகளின் விநியோகச் சங்கிலிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுவிட்ட தடைகள் நீடிப்பதாலும் அனைத்துவிதமான பொருளாதாரங்களிலும் பணவீக்க விகித (விலைவாசி) அதிகரிப்பு வலுவாக இடம் பெற்றுவருகிறது. உலக அளவிலான பேரியியல் பொருளாதார நிர்வாகம், நிச்சயமற்ற தன்மைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே தொடர்கிறது. எங்காவது ஏதாவது சிறு தவறு நடந்தாலும் கவிழும் நிலையில்தான் பல நாடுகளின் பொருளாதாரங்கள் வலுவற்று இருக்கின்றன. லாபமா – நஷ்டமா பார்த்துவிடுவோம் என்கிற சாகச மனப்பான்மை முதலீட்டாளர்களுக்குக் குறைந்துவருவதால் முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அருகி வருகின்றன. இதனால் மூலதனம் பெருகுவது நிச்சயமற்ற நிலைக்கு ஆள்பட்டிருக்கிறது, இதனால் பொருளாதாரம் மீட்சியடைந்து மேலும் வலுவடைவதற்கான சூழலும் தடைகளையே எதிர்கொண்டிருக்கிறது” என்று அறிக்கை முடிகிறது.
தொடக்கத்திலும் முடிவுரையிலும் ரிசர்வ் வங்கி அறிக்கைக்கும் நிதியமைச்சக அறிக்கைக்கும் வித்தியாசம் அதிகமில்லை.
நிதியமைச்சகத்தின் அறிக்கை உரத்தும் தற்பெருமை மிகுந்தும் இருப்பது ஏன் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதிலும் ஒற்றை எச்சரிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. “சமீபத்திய புவி-அரசியல் நிகழ்வுகள் - பொருளாதார வளர்ச்சியிலும் விலைவாசி உயர்விலும் புதிய நிதியாண்டில் நிச்சயமற்றத் தன்மையை அதிகப்படுத்தியுள்ளன” என்கிறது அந்த எச்சரிக்கை.
நம்முடைய கவலைகள்
இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக மீட்சியடைய வேண்டும் என்றே வாழ்த்த விரும்புகிறேன், அதேசமயம் பொருளாதார நிலை குறித்து பின்வரும் கவலைகளை – எச்சரிக்கைகளைப் பகிர்வதும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்:
- உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெரிய பொருளாதார வளம் மிக்க நாட்டிலும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) சராசரியாக 1.5% குறையும் என்றே பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜிடிபி 2% அளவும் சீனத்தின் பொருளாதாரம் 3.2% அளவும் குறையும் என்று அது மதிப்பிட்டிருக்கிறது. இப்படியிருக்க இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் மட்டும் 0.5% மட்டுமே குறையும், 2022-23 நிதியாண்டில் அது 9% ஆக இருக்கும் என்று கூறப்படுவதை நம்புவது கடினமாக இருக்கிறது.
- மிகவும் முன்னேறிய பணக்கார நாடுகளிலும், பெரும்பாலான வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களிலும் விலைவாசி உயர்வு (பணவீக்க விகிதம்) கடுமையாக அதிகரித்திருக்கிறது. தங்கம், உணவு தானியம், சரக்குகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் பிப்ரவரி மாதம் 13.1% ஆகவும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 6.1% ஆகவும் உயர்ந்திருக்கிறது. உணவு தானியங்களின் விலைவாசி உயர்வு 5.9% ஆகவும் தொழில்துறை உற்பத்தித் துறையில் விலைவாசி உயர்வு 9.8% ஆகவும் எரிபொருள்கள் தொடர்பான பணவீக்க விகிதம் தொடர்ந்து 8.7% ஆகவும் உயர்ந்து காணப்படுகிறது.
- சந்தைகளில் முதலீட்டாளர்களின் மனவுறுதி தளர்ச்சி அடைந்திருக்கிறது. பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி காண்கின்றன. கடன் பத்திரங்களின் விலைகள் உயர்ந்துவருகிறது. மத்திய வங்கிகள் தாங்கள் தரும் பணத்துக்கான வட்டி வீதத்தை உயர்த்திவிட்டன அல்லது உயர்த்தப்போவதாக எச்சரித்துள்ளன.
- வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை இந்தியாவில், புதிய வேலைகளில் ஆள்கள் நியமிக்கப்படுவது கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஏற்கெனவே வேலைசெய்து வந்தவர்களும் வேலையிழப்பினால் எண்ணிக்கையில் குறைந்துவருகிறார்கள்.
- செலவுத் துறையில் ஒன்றிய அரசு மூலதனச் செலவுகளை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறது. தனியார்கள் அதிக அளவில் முதலீடுசெய்வார்கள் என்கிறது அரசு. அது விவாதத்துக்குரிய கருத்து. ஒன்றிய அரசாங்கம் மூலதனச் செலவாக செலவிடப்போகும் தொகையும் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. ஒரே தொகையை வெவ்வேறு தலைப்புகளில் இரு முறை கூட்டிக் கூறுகிறார்களோ என்ற ஐயம்கூட ஏற்படுகிறது. அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் மூலதனச் செலவுக்கான நிதியும் பெரும் பகுதி சந்தையில் கடனாகத்தான் திரட்டப்படப்போகிறது.
நலவாழ்வியம்தான் வளர்ச்சியா?
இப்போதுள்ள நிலைமையில் மிகவும் திறமையாக பொருளாதாரத்தை நிர்வகித்தாக வேண்டும். உயர் அதிர்வெண் அடையாளக் காரணிகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்களின் நிலையைப் பிரதிபலிக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புதிய வேலைவாய்ப்புகள் - ஏழைகளுக்கும், தொழில்திறன் அல்லது தொழில் பயிற்சி பெறாதவர்களுக்கும் எட்டாக் கனியானவை. ஏழைகளுக்கு விவசாயம் சார்ந்தும், சேவைத்துறையில் கீழ்நிலையில் உள்ள வேலைகளிலும், சிறு – குறு நடுத்தரத் தொழில்பிரிவுகளிலும்தான் வேலைவாய்ப்புகள் அவசியம்.
ஆனால், ஒன்றிய அரசின் கொள்கையோ நடவடிக்கைகளோ அவற்றுக்குச் சாதகமாக இல்லை. ஏழைகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றைத் தருவதைவிட நல்வாழ்வு நடவடிக்கைகளாக மிகச் சில பணப் பயன்களையும், விலையில்லாத சரக்குகளையும் வழங்கினால்போதும் என்று அரசு கருதுகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு சில பிரச்சினைகளிலிருந்து தாற்காலிகமாக மீளும் திருப்தியை அளித்தாலும் நிரந்தரமான வளர்ச்சியை அளிக்காது.
நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள் தொடர்பாக வாக்காளர்களின் விருப்பம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் எடுத்த வாக்கெடுப்புகள் அனைத்திலுமே பெரும்பாலான வாக்காளர்கள் பொருளாதார வளர்ச்சியைத்தான் விரும்பினார்கள், தேர்தலிலோ இப்போதிருக்கும் நிலைமையே (ஆட்சியே) தொடருவதற்காக வாக்களித்திருக்கிறார்கள். நல்வாழ்வுப் பொருளாதாரம் பயனுள்ளதுதான் ஆனால், நிரந்தரமான – உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு அது ஈடானதல்ல.
இப்போதுள்ள நிலையை குலைத்துப்போடுவதன் மூலம்தான் உண்மையான, நிரந்தரமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். புரட்சிகரமான சீர்திருத்தங்கள், குறைவான அரசு கட்டுப்பாடுகள், வளர்ச்சி – உற்பத்திகளில் நிறுவனங்களிடையே போட்டி அதிகரிப்பு, சுதந்திரமாகச் செயல்படும் நிலை, அச்சுறுத்தலுக்கும் பீதிக்கும் ஆளாகாத சமுதாய சூழல், கருத்து வேறுபாடுகளைச் சகித்துக்கொள்ளும் சமூக நிலைமை, உண்மையான கூட்டாட்சி முறையில் நம்பிக்கை ஆகியவைதான் வளர்ச்சிக்கு வழிதரும்.
ஐந்து மாநிலங்களில் நான்கில், ஆட்சி மாற்றம் தேவையில்லை என்றே மக்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். அப்படிச் செய்ததன் மூலம் உண்மையான – நிரந்தரமான வளர்ச்சி வேண்டாம் என்று வாக்களித்துவிட்டார்களா? காலம்தான் இதற்கு பதிலைச் சொல்லும்!
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.