கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 8 நிமிட வாசிப்பு
பொருளாதார மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்
இந்தியப் பொருளாதாரக் கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் செய்து 31 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு 1991 ஜூலை 1இல் அரசால் குறைக்கப்பட்டது. அது மிகவும் செயல்திறன் மிக்க முடிவு, பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது, பகிரங்கமாகப் பலராலும் கண்டிக்கப்பட்டதும்கூட; எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமாக எதிர்த்ததால், சீர்திருத்த நடவடிக்கையின் அடுத்த கட்டங்களைச் சில காலத்துக்குக் கிடப்பில் போடக்கூட அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் விரும்பினார். பிரதமரின் விருப்பப்படி அடுத்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதைப் போலக்கூட நிதியமைச்சர் மன்மோகன் சிங் ‘பாவனை’ செய்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் ‘எவர் கண்ணிலும்’ சில நாள்களுக்குச் சிக்கவே இல்லை. அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக மீண்டும் ஒருமுறை ரூபாயின் மதிப்பு மேலும் குறைக்கப்பட்டது. இரண்டே இரண்டு அடிகள் எடுத்துவைத்து ஆடிய அந்த நடனம் - மிகச் சிறப்பாக முன்கூட்டியே ஆடிப் பார்க்கப்பட்டு, உரிய நேரத்தில் பிசிறில்லாமல் அரங்கேற்றப்பட்டது.
அந்த நடவடிக்கைக்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம், ‘முழுக்க முழுக்க துணிச்சல் மிக்கது’. அடுத்தடுத்த நடவடிக்கைகளாக – தடையற்ற வர்த்தகக் கொள்கை, தாராளமயத் தொழில் (உற்பத்தி) கொள்கை ஆகியவற்றை அறிவித்தது அரசு; புதிய பாதையைக் காட்டும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையையும் வரிகளைக் குறைத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் தயாரித்தது. உலகமே நிமிர்ந்து உட்கார்ந்து இந்திய அரசின் துணிச்சலையும் தெளிவையும் வேகத்தையும் கவனத்தில் கொண்டது. கம்பீரமான இந்திய யானை ஆடத் தொடங்கியது.
வெளிப்படையான சந்தைக்கு ஆதரவு
காங்கிரஸ் தலைமையிலான அரசு பொருளாதாரத்தில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இதனால் நாடு பல்வேறு துறைகளில் ஏராளமான நன்மைகளைப் பெற்றது. நாட்டின் செல்வ வளம் பெருகியது, புதிய தொழில்கள், புதிய தொழில் முனைவோர்கள் உருவாக முடிந்தது.
நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை கோடிகளில் பெருகியது. கோடிக்கணக்கான புதிய, உயர் வருவாய் தரும் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டன. ஏற்றுமதி பல மடங்காக உயர்ந்தது. 27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து மீண்டனர்.
வறுமை - பட்டினி அதிகம்
இருப்பினும், கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்கும் கீழேதான் வாழ்கின்றனர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. நாட்டில் உணவு கிடைக்காததால் பட்டினி கிடப்போர் எண்ணிக்கை இன்றைக்கும் இருக்கிறது. உலக பட்டினி குறியீட்டெண் 2021இல், இந்தியா 101வது இடத்தில் உள்ளது, மொத்தமுள்ள பட்டினி நாடுகள் 116. பெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு நாடு முழுக்கப் பரவிக் கிடப்பதை ‘தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5’ தெரிவிக்கிறது.
வருடாந்திர கல்வி ஆண்டறிக்கைப்படி (அசர்), ஏழைக் குழந்தைகள் தாங்கள் பயிலும் வகுப்புக்கேற்றபடிக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடிக்குக் குறைபாடுகள் தொடர்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவில் நிலவுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொருள்களின் விலை கடுமையாக உயர்கிறது. மக்களுடைய வருமானம், செல்வம் ஆகியவற்றிலும் ஆண்கள் – பெண்கள் ஆகியோருக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருகின்றன. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகிவருகின்றன. மக்களில் பல பிரிவினருக்கு நாட்டின் வளர்ச்சியில் நியாயமான – சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
வெளிப்படையான, தடைகள் ஏதுமற்ற, சந்தை அடிப்படையிலான பொருளாதாரப் பாதையிலிருந்து நம்மால் இப்போது விலகிச் செல்ல முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. இருப்பினும் உலக அளவிலும் உள்நாட்டிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளில் மறுசீர்மை செய்வது அவசியம். அதற்கு 1991இல் இருந்ததைப் போன்ற துணிச்சலும், தெளிவான பார்வையும் செயல் வேகமும் அரசுக்கு இருக்க வேண்டும்.
உலக - உள்நாட்டு மாற்றங்கள்
உலக அளவிலான மாற்றங்களைப் பரிசீலிப்போம். பணக்கார நாடுகள் மேலும் பணக்கார நாடுகளாகிவிட்டன. சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துவிட்டது. 2022இல் சீனத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) 16.7 டிரில்லியன் டாலர்களாக இருக்கும். இந்தியாவின் ஜிடிபி 3 டிரில்லியன் டாலர்கள். டிஜிட்டல் (எண்ம) தொழில்நுட்பம் மனிதர்களுடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவிவிடும். தரவுகள்தான் நாடுகளுக்கு இனி புதிய செல்வமாக அமையும்.
இயந்திரங்கள் உதவியுடன் உற்பத்தி செய்தல், மனித இயந்திரப் பயன்பாடு, இயந்திரக் கற்றல் மூலம் பெறப்படும் அறிவு - செயற்கை நுண்ணறிவு ஆகியவைதான் இனி உலகில் ஆதிக்கம் செலுத்தும். மனிதர்களால் செய்யக்கூடியவை இவையிவைதான் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுவிடும். புதிய உலகில் இனி 5ஜி தொழில்நுட்பம், இணையதளம் 3.0, பிளாக்செயின், மெட்டாவெர்ஸ் மற்றும் புற உலகம் அறியாத நவீனங்களுக்குத்தான் இடமிருக்கும்.
பருவநிலை மாறுதல்கள் - விளைவுகளை உலகம் மீது ஏற்படுத்தும்; அதைச் சமாளிப்பது மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகத் திகழும். புதைபடிம எரிபொருள்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு - தட்டுப்பாடு ஏற்படும், பிறகு இந்தப் பூவுலகம் நிலைத்திருக்கவும் நம்முடைய அன்றாடப் பிழைப்பு இடையூறின்றி தொடரவும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.
உள்நாட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம். நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரிப்பு வீதம் 2.0 ஆகக் குறைந்திருக்கிறது. அது மக்கள்தொகையை இட்டு நிரப்பக்கூடிய மாற்று விகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. 15 வயதுக்கும் கீழுள்ள மக்கள் எண்ணிக்கை 2015-16இல் 28.6%ஆக இருந்தது, இப்போது 26.5%ஆகக் குறைந்துவிட்டது. இளவயது மக்கள்தொகையால் சமூகத்துக்குக் கிடைக்கக்கூடிய லாப அம்சம் குறையத் தொடங்கிவிட்டதை இது காட்டுகிறது. விவசாயிகளின் சராசரி உற்பத்தி அளவு அதிகரித்திருக்கிறது. இருந்தும் அவர்களுடைய பொருளாதார அந்தஸ்து மாறாமலேயே நீடிக்கிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மக்கள் கருதுவதில்லை, தங்களுடைய அடுத்த தலைமுறையினரும் விவசாயத்தில் ஈடுபடுவதை இப்போதைய விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
நகரமயமாதல் வேகமாக நடைபெறுகிறது, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்ட விகிதமும் உயர்ந்துவருகிறது. டிஜிட்டல்மயம் விரிவடைகிறது, அதனால் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கம் – பணக்காரர்களுக்கும் இடையிலான பிளவும் அதிகரிக்கிறது. பெரும்பான்மையின ஆதிக்கம், மத அடிப்படையில் மக்களிடையே பிளவு, சமூகத்தில் சில பிரிவினருக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்புணர்வு போன்றவை பொருளாதாரத்தைப் பெருமளவு சேதப்படுத்திவிடும். நாட்டின் அரசியல் – பொருளாதாரக் கட்டமைப்புகளிலிருந்து 20% மக்களை விலக்கி வைக்கும் எந்த நாடும் பொருளாதார வல்லரசாக முடியாது.
தனிமைப்படுத்துவது சுய தோல்விக்கான வழி
எல்லாவிதக் கொள்கைகளையும் மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியது கட்டாயம். வேலைவாய்ப்பு பெருகாத பொருளாதார வளர்ச்சியை நாடு ஏற்காது. அதிலும் குறிப்பாக, வேலைவாய்ப்பில் வளர்ச்சியே இல்லாத கடந்த சில ஆண்டு கால பொருளாதார வளர்ச்சியை ஏற்க முடியாது. பொருளாதார வளர்ச்சி என்பதன் அடிப்படையே வேலைவாய்ப்பு பெருகுவதாகத்தான் இருக்க முடியும்.
வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம்தான் பிற துறைகளில் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியும். ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மிகவும் உன்னதமான வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பக்கோடா தயாரித்து விற்பதுகூட வேலைவாய்ப்புதான் எனப் பரிதாபகரமான விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.
நல்ல எதிர்காலம் அமையும் என்கிற நம்பிக்கையில் கடுமையாக உழைத்து, வருமானத்தையெல்லாம் கொட்டி தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைத்த குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெருகாததால் மோடி அரசால் நட்டாற்றில் விடப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும் மோடி அரசு தேர்தலில் தண்டிக்கப்படாமல் தப்பிக்கக்கூடும், இந்துத்துவக் கருத்துகளைச் சொல்லி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி வெற்றி பெறக்கூடும்.
இந்துத்துவக் கருத்துகளால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிவிட முடியாது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய சமூகத்தவர்கள் அல்லது பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது மதங்களையே விரும்பாத நாத்திகக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விரைவில் உணர்வார்கள்.
ஒன்றிய – மாநில அரசு உறவுகள்
இந்த உரையாடல், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையில் மாறிவிட்ட உறவு நிலைமைக்கு தவிர்க்க முடியாதபடிக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு முன்னால் எப்போதுமே இப்படி ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு உரசல்கள் - சிக்கல்கள் நிரம்பியதாக மாறியதில்லை. மாநிலங்களின் நிதிநிலைமையும் இதற்கு முன்னால் எப்போதுமே இப்படி கவலைக்குரியதாக இருக்கவில்லை. சுயமாக வருவாய் திரட்டும் மூலங்கள் மாநில அரசுகளுக்கு வற்றிவிட்டன.
பொது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அனைத்து இடங்களிலும் கடுமையான அதிருப்தியே நிலவுகிறது. அதை ஒன்றிய அரசு நிர்வகிக்கும் விதம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை மிகுந்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதைப் போல பொது சரக்கு, சேவை வரி விதிப்பு முறையிலிருந்து மாநிலங்கள் வெளியேற வேண்டும் என்கிற குரல்கள்கூட கேட்கத் தொடங்கிவிட்டன.
மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரங்களிலும் ஒன்றிய அரசு ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு தனது நிர்வாக அதிகாரங்களையும் நிதி அதிகாரங்களையும் பயன்படுத்தி மாநிலங்களின் கைகளை முறுக்கி, எதிர்ப்பு ஏதுமின்றிப் பணிய வைக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் மட்டுமல்ல, அந்தக் கொள்கைகளை அமல்படுத்த அது பயன்படுத்தும் பாதையும்கூட கூட்டாட்சித் தத்துவத்தையே நாசமாக்கிவிடும்.
தமிழில்:
வ.ரங்காசாரி

3






பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
Periasamy 3 years ago
பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாலர் மீது தமிழக அரசால் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து ஒரு கட்டுரை எப்போ எழுதுவீங்க சமஸ் சார்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
நகரமயமாதல் மிகப்பெரும் ஆபத்து. நகரமயமாதல் அதிகரித்தால் அரசாங்களால் காப்பாற்றமுடியாத பிரச்சினைகள் உருவாகும். இதற்கு கொரோனா நல்ல உதாரணம். நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு செய்யும் உள்கட்டமைப்பு சேவைகளி்ன் செலவு மதிப்பில் 10% செலவை கிராமங்களில் செய்தால் 90% வசதிகளை செய்து தரமுடியும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
S.SELVARAJ 3 years ago
கட்டுரையாளர் இன்றைய கள நிலவரத்தை சரியாக சொல்லியிருக்கிறார். இன்றைய கலவரமான நிலவரத்திற்கு அன்றைய சீர்திருத்தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதன் மூலம் உணரமுடிகிறது. அன்றைய காங்கிரஸ் அரசின் சீர்திருத்தங்களை அவர்களைவிட அதிகமான மூர்க்கத்தனத்தோடு அமல்படுத்துவதால் ஏற்பட்டுள்ள வினைகள் என்பதை மறுக்க முடியாது. அப்படியெனில் அன்றைய சீர்திருத்தங்கள் தோல்வி அடைந்ததாக கருத்தில் கொள்ளலாமா?... எல்லாவித கொள்கைகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது சரியான கருத்து. சந்தைப் பொருளாதாரத்தில் மாற்று எப்படி சாத்தியம் என்பதையும் அதற்கான தீர்வையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Thuraivan NG 3 years ago
மிகச் சிறப்பான கட்டுரை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
rajasekaranthirumalaisamy 3 years ago
தலைவர் ப.சி.அவர்கள் இந்த கட்டுரை மூலம் பாமர மக்களுக்கும் மிக எளிதாகப்புரியும் வகையில் இந்தியாவின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் நலன் பற்றிய சிந்தனையை மிக தெளிவாகக் கூறியுள்ளார்கள்..வெறுப்பு அரசியலும்,மத இணக்கத்தை கேள்வியாக்கும் செயல்களும் ,யாரையும் அதிகாரத்தால் அடக்குவதும்,ஊடகங்கள் அறிஞர்கள் கருத்து சுதந்திரமின்றி இருப்பதும் மக்கள் எப்பவும் பரப்பாயும் பயந்தும் இருப்பது நாட்டில் அமைதியின்மையும் பலவீனமாயுள்ள கிராமப்புற இளைஞர்களின் மன நிலை பாதிப்பும் நாட்டுக்கு நல்லதல்ல..நியாயப்படுத்தி கருத்துப்பரவலை செய்து தான் செய்ய விரும்பும் திட்டங்களை மக்களிடம் சேர்த்தால் மக்களின் வளர்ச்சியில் உயர்வு இருக்கும்.. என்பதை இந்த சிறந்த கட்டுரை மூலம் உணர்கிறேன்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவேன்..வாழ்க இந்தியா..வளரட்டும் மனித நல்லிணக்கம்..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.