கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

மயிர்ப் பிரச்சினை: அன்பால் திருத்த முடியாதா?

பெருமாள்முருகன்
30 Sep 2023, 5:00 am
5

புதுக்கோட்டை, மச்சுவாடி, முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவர் மாதேஸ்வரன் 2023 செப்டம்பர் 25 அன்று அப்பள்ளிக்குப் பின்னுள்ள காட்டுப் பகுதி மரம் ஒன்றில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அம்மாணவர் தலையில் அதிகமாக மயிர் வளர்த்திருந்தார், தாடியும் வைத்திருந்தார் என்பதால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர் எனத் தெரிகிறது.

கண்டித்ததோடு மட்டுமல்ல, மயிர் வெட்டிக்கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லி அவரை வகுப்பில் அனுமதிக்க மறுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அதன் பிறகுதான் தற்கொலை நடந்திருக்கிறது; பல இடங்களில் தேடிய பிறகு அன்று இரவு உடலைக் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் போராட்டத்தின் காரணமாக காவல் துறை விசாரணைக்குப் பிறகு அப்பள்ளியின் தலைமையாசிரியர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளில் வெளியாகியுள்ள பதினாறு வயதேயான அம்மாணவரின் புகைப்படத்தைக் காணுகையில் இன்றைய இளைஞர்கள் விரும்பும் நவீன பாணியில் அவர் மயிர் வைத்திருப்பது தெரிகிறது. தலையைச் சுற்றிலும் முழுவதுமாகச் சுரண்டி உச்சிப் பகுதியில் நிறைந்திருக்கும்படி வெட்டிக்கொள்ளும் நவீன பாணி அது.  வயதுக்கேற்ற வகையில் மிகச் சிறிய அளவிலேயே தாடி இருக்கிறது.

இந்த பாணியில் தலை மயிர் வைத்திருக்கக் கூடாது என அரசு விதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைக்கு விளக்கெண்ணெய் வைத்துப் படியச் சீவிக்கொண்டு வந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், அது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பாணி. அதை இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவார்களா? 

ஆசிரியர்களின் சகிப்புத்தன்மை?

மாணவர்களின் தலை மயிர் பாணி ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களைக் கண்டிக்கவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்றே வைத்துக்கொள்வோம். ‘கல்வியை விடவும் ஒழுக்கமே முக்கியம்’ என்னும் கோட்பாடு கொண்டவர்கள் நாம்.

ஆக, தலை மயிரில்தான் நம் ஒழுக்கம் குடிகொண்டிருக்கிறது என்றே கொள்வோம். சரி, இன்றைய இளந்தலைமுறையை ஆசிரியர்கள் எப்படி அணுகுகின்றனர்? 

எவ்வகையிலும் அதிகாரமற்ற பதவி ஆசிரியப் பணி என்னும் பெருங்குறை இன்று ஆசிரியர்கள் மனதில் உள்ளது. அலுவலகப் பணியாளர்களிடம்கூடத் தம் அதிகாரம் செல்லுபடியாகாது என்பதால், மாணவர்கள்தாம் அவர்களின் அதிகார இலக்காகக் கருதுகிறார்கள் என்று கொள்ளலாமா?  

மாணவரிடம் பேசும் ஓர் ஆசிரியரின் உடல் மொழி, பயன்படுத்தும் சொற்கள் ஆகியவற்றை மட்டும் கவனித்துப் பார்த்தால் அவற்றில் வெளிப்படும் அதிகாரத்தின் பல பரிமாணங்களைக் காணலாம். வெளிப்படையாகவும் நுட்பமாகவும் செயல்படும் ஆசிரியர் அதிகாரம் ‘பணிவு, அடக்கம், மரியாதை’ என்னும் சொற்களை முன்னிறுத்திக்கொண்டுவரும். தமக்கு எதிராக ஒருவார்த்தைகூட மாணவர் பேசக் கூடாது என்பதே ஆசிரியர் தரப்பு எதிர்பார்ப்பு.

அப்படிப் பேசும் மாணவருக்கு அடங்காதவன், ரவுடி என்றெல்லாம் ஆசிரியரே பட்டம் கொடுத்துவிடுவார். மாணவர்களை ஆசிரியர்கள் நடத்தும் விதத்திற்குச் சான்றாகப் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். இரு நிகழ்ச்சிகளை மட்டும் இப்போது பார்க்கலாம். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மயிர்தான் பிரச்சினையா?

பெருமாள்முருகன் 01 Apr 2022

என் மாணவர் பிரபு!

சென்னை, மாநிலக் கல்லூரியில் நான் பணியாற்றியபோது என் உள்ளம் கவர்ந்த மாணவராக இருந்த பிரபு, நான் ஆத்தூர் அரசுக் கல்லூரிக்குப் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றதும் என் பின்னாலேயே முதுகலை படிக்க ஆத்தூர் கல்லூரிக்கு வந்துவிட்டார். அவர் வந்து சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது புதிதாகக் கல்லூரிக்கு முதல்வர் ஒருவர் வந்தார்.

மாநிலக் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியராக இருந்து பதவி உயர்வில் முதல்வரானவர். தம் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் இங்கே வந்து பயில்கிறார் என்னும் செய்தியைக் கேட்டால் ஓர் ஆசிரியராக மகிழ்வார், அம்மாணவரை ஊக்கப்படுத்துவார், ஏதேனும் உதவி வேண்டுமானாலும் செய்வார் என்றெல்லாம் கருதி பிரபுவை அழைத்துப் போய் முதல்வரிடம் அறிமுகப்படுத்தினேன். தம்மைப் போலவே தாம் பயின்ற கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியரே இங்கு முதல்வராக வந்திருக்கிறார் என்னும் உற்சாகத்தில் பிரபுவும் வந்தார்.

சென்னை என்னும் பெருநகரிலிருந்து கிராமத்துக் கல்லூரிக்கு வந்துசேர்ந்து ஒரு மாணவர் பயில்கிறார், தாம் பணியாற்றிய கல்லூரி அது என்னும் சிறுமகிழ்ச்சிகூட முதல்வருக்குத் தோன்றவில்லை. அத்தகவல்களை மனதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிரபுவின் தலை மயிர்தான் முதலில் அவர் கண்ணில் பட்டது. “என்னடா, ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு வர மாட்டயா?” என்று அர்ச்சனையைத் தொடங்கினார். எனக்குப் பெரும் சங்கடம். சென்னையிலிருந்து இங்கே வந்து சேர்ந்தமைக்கு ஒரு வார்த்தை பாராட்டு, ஒரே ஒரு ஆதரவுச் சொல், ஊக்கம் தரும் கனிவுப் பார்வை என வழங்கியிருக்கலாம். அதன் பிறகுகூட இப்படிச் சொல்லியிருக்கலாம்: ‘முடி இப்படி வெச்சிருக்கறது நல்லா இல்லைப்பா. செமஸ்டர் லீவு வரும்போது இப்படி வெச்சுக்கோ. கல்லூரியில வேண்டாம். எல்லாரும் ஒருமாதிரி நெனைப்பாங்க. எல்லாருக்கும் புடிக்கற மாதிரி வெட்டிக்கோ.’ 

முதல்வரின் ‘டா’ விளிப்பும் மிரட்டல் தொனியும் மாணவருக்குப் பிடிக்கவில்லை. அதன் பின் முதல்வர் கண்ணிலேயே படாமல் இருக்க அவர் பழகினார். ஓர் ஆசிரியரைக் கண்டு மாணவர் ஒளிந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா? அதுதான் மாணவரை அணுகும் முறையா?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை

09 Apr 2022

மற்றொரு பெரிய சம்பவம்

அதே முதல்வர் தொடர்பாக இன்னொரு சம்பவம். அவர் கல்லூரியைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். முதல் மணி முடிய இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. வகுப்பறைகள் இருக்குமிடம் கடந்து சற்றே தூர மரத்தடி ஒன்றில் மாணவர் ஒருவர் உட்கார்ந்து செல்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அவர் என் துறையில் இளங்கலை மூன்றாமாண்டு பயின்றுகொண்டிருந்த தினேஷ். அவரை “டேய் பரட்டையா, இங்க வா” என்று கத்தி அழைத்தார் முதல்வர்.

இப்படி மரியாதைக் குறைவாக விளிக்கும் ஓர் ஆசிரியரை எப்படி மாணவர்களுக்குப் பிடிக்கும்? 

முதல்வரின் அழைப்பைக் கேட்டு வெறுப்புடன் தினேஷ் வந்தார். தொடர்ந்து நடந்த உரையாடல் சுமுகமாக இருக்கவில்லை. வகுப்புக்கு வெளியில் இருக்கும் மாணவர் ஒழுங்கீனமானவர் என்பதே ஆசிரியர்களின் பொதுப் பார்வை. இப்படி அவர்கள் வெளியே இருக்க ஏதேனும் சரியான காரணமும்கூட இருக்கலாம் என்னும் யோசனையே இருக்காது.

கல்லூரிக்குத் தாமதமாக வந்ததால் நடந்துகொண்டிருக்கும் வகுப்புக்கு இடையில் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அம்மணி நேரம் முடியட்டும் என்று காத்திருப்பதாகப் பதில் சொன்னார் தினேஷ்.  

“சரி வா, உன் வகுப்புக்குப் போலாம்” என்று அவ்வகுப்புக்கு முதல்வர் அழைத்துள்ளார். தினேஷும் எந்தத் தயக்கமும் இல்லாமல் சென்றுள்ளார். 

இப்போது வகுப்பில் எல்லா மாணவர்களின் பார்வையும் இவர்கள் மீதே. வகுப்பறையின் முதல் வரிசையில் பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். “இந்த வகுப்புத்தான். கேட்டுகங்க” என்று சத்தமாகச் சொல்லியிருக்கிறார் தினேஷ். இத்தகைய பதிலால் சீண்டப்பட்ட முதல்வர் பட்டென்று ஓங்கி மாணவரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். வகுப்பில் இருந்த ஆசிரியரும் மாணவர்களும் அதிர்ந்து நின்றனர். இந்த வகுப்புத்தானா என்று விசாரித்த முதல்வர் “ஒழுங்கா இருந்துக்கோ. பதிலுக்குப் பதில் பேசுவியா நீ” என்று எச்சரித்துச் சென்றுவிட்டார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மயிர் பிரச்சினை: எதிர்வினைக்கு மறுவினை

11 Apr 2022

ஒன்று திரண்ட மாணவர்கள்

அறையைத் தாங்கிக்கொண்டாலும் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தினேஷ் அழுதிருக்கிறார்.  ‘முதல்வராக இருந்தாலும் அவர் எப்படி அடிக்கலாம்?’ என்று நண்பர்கள் கேட்டுள்ளனர். பேச்சு விரிந்து வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போய் முதல்வரைக் கேட்கலாம் என்று முடிவு செய்தனர். அப்போது துறைத் தலைவராக நானிருந்தேன். என் பார்வைக்கு வராமல் முதல்வரிடம் செல்லக் கூடாது என்று கருதி வந்து தகவல் சொன்னார்கள். என் நிலையிலிருந்து, அதிகாரத்தின் பக்கமிருந்தே சமாதானம் சொன்னேன்.  

இந்தக் கல்லூரிக்குப் புதிதாக வந்தவர் முதல்வர், இங்கிருக்கும் மாணவர் இயல்பு அவருக்குத் தெரியாது, நான் அவரிடம் பேசி இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். கடைசியாக இப்படிச் சொன்னேன்: “உன் அப்பாவிட வயசானவரு அவரு. உன் அப்பாவோ தாத்தாவோ உன்னய ஒரு அடி அடிச்சிருந்தா என்ன செய்வ? அப்படி நெனச்சுக்க.” 

தினேஷின் அழுகை இன்னும் அதிகமானது. அவர் சொன்னார், “எங்கப்பா ஒருமுறகூட என்னய அடிச்சது கெடையாதுங்க ஐயா.” 

என் சமாதானம் வலுவிழந்தது.

ஒரு மாணவர் சொன்னார், “நாங்க போய்க் கேக்கறங்க ஐயா. இன்னமே இப்படி நடக்காதுன்னு அவரு சொல்லிட்டா, நாங்க வந்திர்றங்க ஐயா.” 

அது நியாயமானதாகவே எனக்குத் தோன்றியது. எனினும் முதலில் நான் போய்ப் பேசிவிட்டு வந்து சொல்கிறேன் என்றேன். அதேபோல முதல்வரிடம் சென்று பேசினேன். அவர் அம்மாணவரை ‘ரவுடி’ என்று அடையாளப்படுத்துவதில் குறியாக இருந்தார். “அவனுக்கு வருகைப் பதிவு இருக்காது. ஒழுங்கா வகுப்புக்கு வந்திருக்க மாட்டான்” என்றார். “சரியாக வகுப்புக்கு வரும் மாணவன்தான்” என்றேன். வருகைப் பதிவை எடுத்து வரச் சொன்னார். மூன்றாண்டு வருகைப் பதிவேடுகளையும் அவ்வகுப்பாசிரியருக்குச் சொல்லி எடுத்து வரச் செய்தேன். எந்தப் பருவத்திலும் எண்பது விழுக்காட்டுக்கும் குறையாத வருகைப் பதிவு இருந்தது. அந்தப் பருவத்திலும் அப்படித்தான். முதல்வரின் முதல் அம்பு முறிந்தது.

ஆசிரியர்கள் கையாளும் அடுத்த அம்பை முதல்வர் கையாண்டார். “பொண்ணுங்களப் பாக்கறதுக்காகக் கல்லூரிக்கு வருவான். ஒழுங்காப் படிச்சிருக்க மாட்டான். நெறைய அரியர் வெச்சிருப்பான் பாருங்க” என்றார்.  தேர்வு முடிவுகள் தொடர்பான கோப்பை எடுத்து வரச் சொல்லிக் காட்டினேன். அம்மாணவருக்கு ஒரே ஒரு ஆங்கிலத் தாள் மட்டும் நிலுவை இருந்தது. அது பெரிதல்ல. நன்றாகப் படிக்கும் மாணவர் என்பது உறுதியாயிற்று. முதல்வரின் இரண்டாம் அம்பும் உதிர்ந்தது.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

இப்போது அவர் மூன்றாவது அம்பை எடுத்தார். “அவனோட மொபைல வாங்கிப் பாருங்க. ஆபாசப் படம் பாத்துக்கிட்டு இருந்தான். என்னயப் பாத்ததும் அவசர அவசரமா மூடுனான்” என்றார். அவன் செல்பேசியை எடுக்கச் சொன்னோம். அது இணைய வசதி பெற முடியாத, எளிய பட்டன் செல்பேசி. முதல்வரின் நாகாஸ்திரமும் வீணானதும் சற்றே இறங்கி வந்தார். அம்மாணவரின் சாதி என்ன என்று விசாரித்தார். சொன்னோம். அதே சாதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் பெயரைக் கூறி அவர்களை வைத்து மாணவர்களிடம் பேசும்படி சொன்னார். அவ்வாசிரியர்கள் சென்று மாணவர்களிடம் பேசினர். சாதியைக் கடந்து மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள்தான் அவர்கள். பேச்சு சுமுகமாகவே நடந்தது.

மாணவக் கவிஞரின் முழக்கம்

முதல்வரின் ஒவ்வொரு விசாரணையையும் கவனித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகி இருந்தனர். அவர்கள் சாதியைச் சேர்ந்தவனல்ல என்ற போதும் நான் சொன்னாலே கேட்கக் கூடியவர்கள்தான். என் மாணவர்கள் மீது அத்தகைய நம்பிக்கை எனக்கிருந்தது. குறிப்பிட்ட ஆசிரியர்கள் சமாதானம் பேசியதை ஏற்றுக்கொண்டார்கள். எனினும் முதல்வரைச் சந்தித்து ‘ஏன் அடித்தீர்கள்?’ என்று மட்டும் கேட்பதாகச் சொன்னார்கள். சென்று சொன்னோம். மாணவர்களைச் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டார். சில மாணவர்களை உள்ளே அழைத்து அவர்களிடம் அன்பாகப் பேசியிருந்தாலே போதும். பெரிதுபடுத்தாமல் சரி என்று போயிருப்பார்கள். முதல்வர் அதற்கு இணங்கவில்லை.

முதல்வர் அறை முன் மாணவர்கள் கூடி முழக்கம் எழுப்பத் தொடங்கினர். பிற துறை மாணவர்களும் செய்தி கேட்டுவந்து கூடினர். கூட்டம் அதிகமாகி முழக்கத்தின் ஒலியும் மிகுந்தது. 

அடித்துத் திருத்தாதே
அன்பால் திருத்து...

மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள்
அடித்த அடிக்கு மன்னிப்புக் கேள்... 

முதல்வரே முதல்வரே
வெளியே வா வெளியே வா...

அடிக்கலாமா அடிக்கலாமா?
ஆசிரியர் அடிக்கலாமா?

அறையலாமா அறையலாமா?
ஆசிரியர் அறையலாமா? 

மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள்
அடித்த அடிக்கு மன்னிப்புக் கேள்... 

நான் முதல்வரின் அறைக்குச் சென்று மாணவர்கள் பெருந்திரளாகக் கூடுவதைச் சொன்னேன். ஊடகங்களுக்குத் தகவல் போனால் பிரச்சினை பெரிதாகும் என்றும் சொன்னேன். செல்பேசி மூலமாகப் பலருக்கும் தகவல் தெரிவித்துச் சாதி ஆட்களை எல்லாம் வரவழைத்துவிட்டார்கள் என்று முதல்வர் புகார் சொன்னார். அறைக்குள் அமர்ந்துகொண்டு அப்படிச் சொன்னது அம்மாணவர்களை மோசமானவர்களாகக் கட்டமைக்கும் கடைசி முயற்சி என்றுதான் எனக்குத் தோன்றியது. “நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம். நடந்ததற்கு வருந்துகிறேன், இனிமேல் இப்படி நடக்காது என்று மட்டும் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.” 

இறுகிய முகத்தோடு வெளியே வந்தார். திரளாகக் கூடியிருந்த மாணவர்களை நோக்கிச் சத்தமாகப் பேசத் தொடங்கினார். மாணவர்கள் ஒழுக்கத்தோடு எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லத் தொடங்கினார். மாணவர்களுக்கு அது உவப்பாக இல்லை. சத்தமும் முழக்கமும் அதிகமாயிற்று. வேறு வழியில்லை. “நடந்தமைக்கு வருந்துகிறேன். இனிமேல் இப்படி நடக்காது” என்று சொன்னார். 

உடனே அவரை முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். மாணவர்களுக்கு அது போதுமானதாக இல்லை. மூத்தவர், முதல்வர் பதவியில் இருப்பவர், இந்தளவுக்கு இறங்கிவந்திருக்கிறார், ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நாங்கள் பேசியதும் ஒத்துக்கொண்டனர்.

இப்படியாக அப்பிரச்சினை முடிந்தது. இவ்வளவுக்கும் இடையில் மாணவர்கள் எழுப்பிய முழக்கம் எனக்கு ஈர்ப்பாக இருந்தது.

அடுத்த நாள் அதைப் பற்றிக் கேட்டேன். எங்கள் துறையைச் சேர்ந்த மாணவக் கவிஞர் அருண்மொழியை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். அந்த அவசரத்தில் இத்தனை அழகான முழக்கங்களை எழுதிக் கொடுத்த கவிஞரைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? ‘அடித்துத் திருத்தாதே, அன்பால் திருத்து’ என்கிறாரே.  ‘அருமை அருண்மொழி’ என்று மனதாரப் பாராட்டினேன்.

ஆனால், மாணவர்களுக்கு முன்னால் வருத்தம் தெரிவிக்க நேர்ந்ததை முதல்வரால் செரித்துக்கொள்ள இயலவில்லை. அதற்குத் துறைத் தலைவராகிய நானும் மாணவர்களோடு பேசிய ஆசிரியர்கள் இருவருமே காரணம் எனக் கற்பித்துக்கொண்டார். அவ்விருவரும் அக்கல்லூரியின் பழைய மாணவர்கள், அதுவும் என் மாணவர்கள் என்பதும் அவருக்குக் கோபத்தைக் கூட்டியிருக்கலாம். 

பத்தொன்பது வயது மாணவரைக் கை நீட்டி அறைந்ததைத் தவறு என்று அவர் உணரவேயில்லை. அம்மாணவரை இழிவுபடுத்திப் பேசியதைத் தம் தவறு என்று அவர் கருதவும் இல்லை. எங்கள் மீதே எல்லாவற்றையும் திருப்பினார். “துறைத் தலைவர் சொன்னால் மாணவர்கள் கேட்க மாட்டார்களா?”, “ஆசிரியர்கள் பேசுவதுபோலப் பேசித் தூண்டிவிட்டனர்” என்றெல்லாம் சொல்வதை அறிந்தேன். எனக்கு வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அங்கு பணியாற்றிய வரைக்கும் அதைச் சமாளிக்க வேண்டியிருந்தது. என் மாணவர்களாகிய ஆசிரியர்கள் இருவருக்கும் அவர் அங்கிருந்து மாறுதலில் செல்லும் வரை தொந்தரவு கொடுத்தபடியே இருந்தார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

பெருமாள்முருகன் 07 Jan 2023

வேண்டும் சுய விமர்சனம்!

ஆசிரியர்கள் ஒருபோதும் தம் தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. சுயவிமர்சனம் என்பதே ஆசிரியர்களிடம் கிடையாது. நான் அப்படியில்லை என்று யாரேனும் சொல்வோர் இருப்பின் மகிழ்ச்சி, மகிழ்ச்சி. நீங்கள் வேண்டுமானால் இந்தத் தொடர்களுக்கு முன்னால் ‘பெரும்பாலான’ என்றோ ‘உங்களைத் தவிர’ என்றோ போட்டுக்கொண்டு வாசியுங்கள். 

மரத்தடியில் அமர்ந்திருந்த மாணவரை ‘வாப்பா’ என்று முதல்வர் அன்பாக அழைத்திருக்கலாம். அங்கே அமர்ந்திருப்பதற்குக் காரணம் கேட்டிருக்கலாம். ‘பத்து நிமிடம் என்றாலும் பரவாயில்லை, வகுப்பிற்குப் போய்ப் பாடம் கேள்’ என்று சொல்லி அனுப்பியிருக்கலாம். ‘நூலகத்திற்குப் போ’ எனச் சொல்லியிருக்கலாம். அந்த அணுகுமுறை இல்லாமைதான் பிரச்சினை உருவாகக் காரணம். உள்ளார்ந்த அன்புடன் அணுகினால் மாணவர்கள் கேட்பர். வெற்று அதிகாரத்துடன் அணுகினால் மாணவர்கள் மீறுவர். 

மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் ந.பாலமுருகன் தம் நூலில் இப்படி எழுதுகிறார்: “குழந்தைகளிடம் பாடம் நடத்தும்போதுதான் நான் ஆசிரியராக இருந்துள்ளேன். பிற நேரங்களில் குழந்தைகளின் நலம் விரும்பியாக, நண்பனாக, அண்ணனாக, இப்போது அப்பாவாக என அவர்களின் குடும்ப உறவுகளாக பல அவதாரங்களில் குழந்தைகளிடம் அன்பாகப் பழகியதால்தான் குழந்தைகளின் மனம் விரும்பிய ஆசிரியராக இதுவரை இருந்துள்ளேன்.” 

அன்பாகப் பழகுதல் என்னும் இயல்பு மட்டும் ஆசிரியருக்கு இருந்தால் போதும். பிற எல்லாம் தானாக வந்து சேரும்.

புதுக்கோட்டை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் எப்படியானது என்று தெரியவில்லை. வெறுமனே ஆசிரியர்கள் ‘கண்டித்தனர்’ என்று சொல்லக் கூடாது. ஆசிரியர்கள் பயன்படுத்திய சொற்கள், தொனி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும் மயிருக்காக அம்மாணவர் உயிர் விட்டிருக்க வேண்டியதில்லை. இளைய தலைமுறை இத்தனை பூஞ்சை மனம் கொண்டிருக்கக் கூடாது. மாதேஸ்வரன் இறப்பு பெருவருத்தம் தருகிறது. அம்மாணவருக்கு அஞ்சலி!

பயன்பட்ட நூல்: 

ந.பாலமுருகன், குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?, 2023, திண்டுக்கல், வெற்றிமொழி வெளியீட்டகம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மயிர்தான் பிரச்சினையா?
ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை
மயிர் பிரச்சினை: எதிர்வினைக்கு மறுவினை
மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!
சுதந்திரத்தின் குறியீடு மயிர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


6

1





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   9 months ago

1960களில் நடந்தது. நான் படித்த மெட்ராஸில் ஒரு பிரபல ஆங்கிலோ இந்திய பள்ளியில். ஒரு உயர்நிலை வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் தன் அலுவலகத்திற்கு அழைத்து மிக அமைதியாக அவன் முடியை காதுக்கு மேலே வெட்டும் படி கூறினார். இப்படியும் அவன் முடி காதை மறைக்கும் அளவு தான் இருந்தது. அவனும் அதே அமைதியுடன் வெட்ட விருப்பமில்லை என்றான். முடி வெட்டும் வரை பள்ளிக்கு வர வேண்டாமென்று, அவனை அங்கேயே சஸ்பெண்ட் செய்தார். அதற்கு பிறகு என்ன நடந்து என்று எனக்கு தெரியாது. மேல்மண்டையை கொண்டு காலம் காலமாக ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நடக்கும் சிக்கல் இன்னும் தொடர்கிறது என்பதை பார்க்கும்போது, மாணவர்களின் தலையுள் விவரங்களை திணிக்காமல், மண்டை மேல் இருக்கும் மயிரை பற்றி வருத்தப்படும் இப்படி அறிவிலிகளை கொண்ட தமிழகத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   9 months ago

பள்ளியில் மாணவர் மனநிலையும் கல்லூரியில் மாணவர் மனநிலையும் வேறு வேறு. ஆனால் ஆசிரியரின் மனநிலை ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். ஏனென்றால் அதிகாரத்தின் குரல் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும். மயிர் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்குச் செல்வதில்லை. பள்ளியில் அப்படியல்ல பல தற்கொலைகள் மயிருக்காவும் ஆசிரியர் கண்டித்ததற்கும் நிகழ்ந்திருக்கின்றன. பள்ளியிலும் கல்லூரியிலும் இந்த மயிர் பிரச்சனை தீர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இப்போது விதவிதமாக மயிர் வைத்து அழகு பார்க்கிற மாணவர்கள் ஆசிரியராகவும் அதிகாரத்திற்கும் வரும்போது அவர்கள் இவர்களைப்போல மயிர் வைத்து வருபவர்களை இயல்பாக அணுக வாய்ப்பிருக்கிறது. அது வரையில் இந்த மயிர்ப்பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். முடிவை எட்டும் வரையில் இவற்றை எல்லாம் ஆசிரியர் மாணவர் அன்பும் மாணவர் ஆசிரியர் அன்பும் தான் சரிசெய்ய முடியும். மகா.இராஜராஜசோழன் சீர்காழி.

Reply 0 0

RAJA RAJAMANI   9 months ago

1960களிலேயே இப்பிரச்சனை உண்டு. என் பதிவை தயவு செய்து பாருங்கள். நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Banu   9 months ago

பெருமாள் முருகன் அவர்களின் முந்தைய கட்டுரை "மயிர்தான் பிரச்சனையா?" வாசித்து கட்டுரை ஆசிரியரின் கருத்துகளுக்கு எதிராகவே பின்னூட்டம் பதிவு செய்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையும், இக்கட்டுரையும், ஆசிரியர்கள் அணுகுமுறையை மாற்றுவதே சரியென்பதை உணர்த்துகின்றன. தன் புற ஆளுமையை உயர்த்திக்காட்ட மாணவன் மெனக்கெடுவதன் பின்னே ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையினை கண்டறிதல் அவசியம். கண்டறிய இயலவில்லை என்றாலும், கால அவகாசம் இல்லை என எண்ணினாலும் அம்மாணவனின் செயல்பாடுகள் வகுப்பறை நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்காவிடில் அவன் சிகையலங்காரம் குறித்து விமர்சிப்பதை தவிர்க்கலாம். எதிர்கருத்துடையோர் பதிவிடவும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   9 months ago

நானும் அரசுக் கல்லூரி மாணவன்தான், படிக்கையிலேயே ஆத்திரம் பொங்குகிறது. நமது கல்லூரி வழக்கங்கள் எத்தகைய அயோக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதென்பது நாணத்தக்க செய்தி. கல்லூரி முதல்வர் எய்திய ஒவ்வொரு அம்பும், அந்நிகழ்வுக்குப் பின் எழுத்தாளருக்கு கொடுத்த தொல்லைகளும் ஆசிரியப் பணிக்குத் தகுதியே இல்லாத ஒரு அடிமுட்டாளின் செயல். இவர்கள் முதல் தலைமுறையாகக் கற்க வருகிற பிள்ளைகளை மேலும் சீரழிக்கவே செய்வார்கள். கல்வி உரிமை என்றால் அதில் தரம் இருக்கவேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தரம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களை எழுத்தின்வழி விமர்சிக்கும் உரிமை மாணவர்களுக்கு வேண்டும். இது ஒன்றும் உலகிலேயே இல்லாத முறை அல்ல. இத்தகைய அயோக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பின்னுட்டங்கள் பொதுவெளியில் இருந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரும் என்பதால் மதிப்பெண் முறை போதும், அது மட்டும் பொதுவெளிக்கு வரவேண்டும். ஆசிரியர்கள் ஒன்றும் களங்கமற்ற தூயர்களோ எக்காலத்துக்கும் பொருந்தும் விழுமியப் பொட்டலங்களோ அல்லர், அவர்கள் மேம்படவும் இது வழிவகுக்கும். தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் சுரண்டப்படுவதையும் இது தடுக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சர்வாதிகாரம்அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?கட்சிப் பிளவுபிராகிருத மொழிபட்ஜெட் 2022கிசுகிசுசமஸ் முக ஸ்டாலின்இரும்புசேரன்அரசு கலைக் கல்லூரிசமஸ் புதிய தலைமுறை கடிதம்புதிய உத்வேகம்சி.பி.கிருஷ்ணன் கட்டுரைநாராயண குருமாமன்னன்: நாற்காலிக் குறியீடுநவீன் பட்நாயக்மதவாதப் பேச்சுகள்தணல்நீச்சல்சந்தேகத்துக்குரியதுபாரதிய ஜனதாவுக்கு சோதனைஅதிமுகவின் அதிகார மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்நீதிபதி சந்துருகாவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழிரத்தக்கசிவுஆர்ச்சி பிரௌன் கட்டுரைஅதானிவேளாண் துறைகிறிஸ்துவம்நாகலாந்து துப்பாக்கிச் சூடுசீமாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!