கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சொல் நன்று

பெருமாள்முருகன்
25 Mar 2023, 5:00 am
4

சேலம், பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் முதுகலை பயின்ற மாணவர்கள் அறுவருக்கு மாற்றுச் சான்றிதழில் நடத்தையைக் குறிப்பிடும் பகுதியில் 'திருப்தியில்லை' (Not satisfactory) என்று எழுதிக்கொடுத்துள்ளனர். வரலாற்றுத் துறை ஆசிரியர் மீதான பிரச்சினை ஒன்றில் அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடந்துகொண்டனர் என்பதால் பழிவாங்கும் விதமாக மாற்றுச் சான்றிதழில் ‘கைவைத்திருப்பதாக’த் தெரிகிறது.

ஆசிரியர்களும் கல்வி நிறுவன நிர்வாகமும் மாணவர்களை மிரட்டுவதும் பழிவாங்குவதும் புதிதல்ல. ஆசிரியர்களிடமோ நிர்வாகத்திடமோ மாணவர்கள் கேள்வி எதையும் கேட்கக் கூடாது; எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அம்மாணவர்களைக் கட்டம் கட்டுவதும் சந்தர்ப்பம் பார்த்துப் பழிவாங்குவதும் நடக்கும். மாணவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். சுயமாக எதையும் சிந்திக்கக் கூடாது. சுயமாகப் பேசக் கூடாது. சுயமாகச் செயல்படக் கூடாது. சுயம் என்பதே இருக்கக் கூடாது. இதுதான் இன்றைய கல்விச் சூழ்நிலை. 

பிடிக்காத மாணவர்களைப் பழி வாங்குவதற்குப் பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அகமதிப்பீட்டுத் தேர்வில் மதிப்பெண்ணைக் குறைத்துப் போடுவது, செய்முறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் செய்வது, சான்றிதழ்களைக் கொடுக்கத் தாமதித்து இழுத்தடிப்பது என்றெல்லாம் பலவற்றை ஆசிரியர்களும் நிர்வாகமும் வைத்திருக்கின்றனர். அவற்றில் ஒன்று மாற்றுச் சான்றிதழில் ‘திருப்தியில்லை’ என்று எழுதிக் கொடுப்பது. இன்னும் வாழ்க்கைக்குள் நுழையாத பதின்பருவத்தினரான மாணவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது? 

அதிகார பீடங்களின் செயல்பாடுகள்

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மீது ஏதேனும் பிரச்சினை என்று வந்தால் உடனடியாக மாற்றுச் சான்றிதழ் கொடுத்துப் பாதியிலேயே படிப்பை முறித்து அனுப்பிவிடுவார்கள். அரசுக் கல்லூரிகளில் அப்படி உடனடியாக மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிட முடியாது. விசாரணைக் குழு அமைத்து அம்மாணவர் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும். குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுத்தான் செய்ய வேண்டும்.

படிப்பின் இடையிலேயே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அனுப்புவது சாதாரணமாக நடக்கக்கூடியது அல்ல. ஆகவே, மாணவரையே மிரட்டிக் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தாமே பெற விரும்புவதாகக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து வெளியே அனுப்பிவிடும் தந்திரம் தெரிந்த ஆசிரியர்களும் கல்லூரி முதல்வர்களும் உண்டு.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கல்வி நிறுவனத்துக்குள் கொண்டுவர எத்தனை போராட்டங்களை நம் தலைவர்கள் நடத்தியிருக்கிறார்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிறிது அறிவிருந்தாலும் எக்காரணம் கொண்டும் மாணவர்களை வெளியே அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

பெருமாள்முருகன் 18 Mar 2023

நூற்றாண்டு காலப் போராட்டத்தின் பயனைத் துய்த்துப் பணி வாய்ப்புப் பெற்ற சாதிப் பிரிவு ஆசிரியர்களே மாணவர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெரிதும் வருந்தத்தக்கது. பதின்வயது மாணவர்களை அணுகும் முறைகள் பற்றி எதுவுமே தெரியாத வறட்டு அதிகாரப் பித்துப் பீடித்த பிறழ் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் அனேகம். மாற்றுச் சான்றிதழில் ‘நாட் சாட்டிஸ்பேட்ரி’ (Not satisfactory) என்று எழுதிக் கொடுத்திருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையும் இத்தகையதே. கல்வி பற்றியும் மாணவர் குறித்தும் அடிப்படை அறிவற்ற வெற்று அதிகார பீடங்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். 

நடத்தைக் குறிப்பு ஏன்?

மாற்றுச் சான்றிதழில் எதற்கு நடத்தை பற்றிய குறிப்பு? அந்தப் பகுதியையே நீக்கிவிட வேண்டும். யாருக்கு யார் நடத்தைச் சான்று கொடுப்பது? ஒருவரின் நடத்தையை அளவிட என்ன அளவுகோல் இருக்கிறது? பெரும்பாலும் ஆசிரியர்கள் காலாவதியான விழுமியங்களைக் கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உகந்தவர்களாக இல்லை என்றால் அம்மாணவர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

வகுப்பறையைக் கடந்து வெளியே வந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவர்களை அடக்கி ஒடுக்க வழியில்லாதபோது கடைசியாக நடத்தை பற்றிய குறிப்பெழுதும் பகுதியைப் பயன்படுத்துவார்கள். பழிவாங்கும் கருவியா நடத்தைச் சான்று? ஒருவரது நடத்தைக்கு அவரே சான்று வழங்கினால் போதுமானது. இன்னொருவர் எதற்குச் சான்று வழங்க வேண்டும்? 

மாணவர்கள் என்னதான் தவறு செய்திருக்கட்டும் (ஆசிரியர்கள் செய்யும் தவறுகளோடு ஒப்பிட்டால் மாணவர்கள் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை), அவர்களின் எதிர்காலத்தை முடக்கும் பழிவாங்கலில் ஆசிரியர்கள் ஈடுபடுவது ஆரோக்கிய மனநிலை அல்ல. ‘திருப்தியில்லை’ என மாற்றுச் சான்றிதழில் எழுதிக் கொடுத்தால் அது அம்மாணவர்களின் உயர்கல்வியைப் பாதிக்கும்; பணி வாய்ப்புகளை முடக்கும். அவர்கள் தவறு செய்திருந்தால் அதை விசாரிக்கக் குழு அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கல்வியை முடித்துச் செல்லும்வரை காத்திருந்து மாற்றுச் சான்றிதழில் கைவைப்பது என்பது பெரும் பாதகச் செயல்.  

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அரசு கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியுள்ளேன். படிப்பை முடித்த பிறகு மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு மாணவர்கள் படும் சிரமங்களை அறிந்திருந்தாலும் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலை. முதல்வர் பணிக் காலத்தில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெறுவதை முடிந்தவரைக்கும் எளிமையாக்கினேன். இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை முன்கூட்டியே தயார்செய்து வைத்தோம். ஒரு மாணவர் தம் கடைசித் தேர்வை எழுதி முடிக்கும் அதே நாளில் அவர் கையில் மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து அனுப்பிவிடலாம் என்னும் என் திட்டம் சில காரணங்களால் செயலுக்கு வரவில்லை.

ஆனால், அடுத்த கல்வியாண்டுத் தொடக்கத்தில் ஒவ்வொரு பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் ஒவ்வொரு நாள் என்று ஒதுக்கித் தகவல் தெரிவித்து மாற்றுச் சான்றிதழை வழங்கினோம். கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு மாணவர்கள் வந்து வாங்கிச் சென்றனர். குறிப்பிட்ட நாளில் வாங்காத இருபது விழுக்காடு மாணவர்கள் அலுவலக நாளில் எப்போது வந்தாலும் வாங்கிக்கொள்ளலாம். 

இந்த ஏற்பாடு மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கும் நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கும் மாற்றுச் சான்றிதழ் கைகொடுத்தது. இடம் கிடைத்தாலும் மாற்றுச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் சேர இயலாமல் தவித்து அலையும் நிலை எங்கள் மாணவர்களுக்கு ஏற்படவில்லை.

தனியார் கல்லூரிகள் பலவற்றில் கடைசி நேரத்தில் அவர்கள் சொல்லும் கட்டணத்தைச் செலுத்தினால்தான் சான்றிதழ் பெற முடியும். அரசுக் கல்லூரிகளிலோ விண்ணப்பித்த பிறகு ஒருவாரமாவது எடுத்துக்கொள்வார்கள். எங்கள் கல்லூரியில் ‘படிப்பு முடிந்தது; சான்றிதழ் கிடைத்தது’ என்னும் நிலையை உருவாக்கினோம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இட்லி தோசை சுட வரவில்லையா?

பெருமாள்முருகன் 11 Mar 2023

மறக்க முடியாத நாட்கள்…

பழைய மாணவர்கள் சிலர் ஏதோ காரணத்தால் வாங்காமல் இருந்து சில ஆண்டுகள் கழித்து வருவார்கள். காலையில் வந்து விண்ணப்பம் கொடுத்தால் மாலையில் மாற்றுச் சான்றிதழ் வழங்கினோம். வெகுதூரத்திலிருந்து பேருந்துக்குச் செலவுசெய்து வருவோரை இன்னொரு நாள் வரச் சொல்லக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். பட்டக் கல்வி கற்றுவிட்டாலும் பல மாணவர்களின் பொது அறிவுத்திறன் போதுமானதல்ல. அவசியமான அடையாள அட்டைகூட இல்லாமல் வருவார்கள்.

மாலையில் அலுவலக நேரம் முடியும் தறுவாயில் வந்து உடனே சான்றிதழ் வேண்டும் என்பார்கள். சான்றிதழ் தயாராக இல்லாத மாணவர் சிலரை இப்போது பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் அறையில் தங்க ஏற்பாடு செய்து அடுத்த நாள் கொடுத்தனுப்பியதும் உண்டு. மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது என்னும் எண்ணம் இருந்தால் போதும்; சில எளிமையான நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு உதவலாம்.

எங்கள் கல்லூரி மாற்றுச் சான்றிதழில் எல்லா மாணவர்களுக்கும் ‘திருப்திகரம்’ என்று போட்டுத் தருவதே வழக்கமாக இருந்தது. பல்லாண்டு வழக்கம். ஒரு சடங்கு மந்திரம் போலத் ‘திருப்திகரம்’ மாறிவிட்டது. நான் முதல்வராக இருந்த ஆண்டுகளில் மாற்றுச் சான்றிதழ் தயாரிக்கும் பணியை இளநிலை உதவியாளர் கௌதமராஜ் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பொறியியல் பட்டதாரி. இளைஞர். மாணவர்களுக்குத் தன்னாலான வகையில் உதவ வேண்டும் என்னும் உள்ளம் கொண்டவர்.  

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் ‘குழு-4’ தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று இப்பணிக்கு வந்தவர் அவர். இளநிலை உதவியாளர் பணிக்கான அடிப்படைத் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சிதான். என்றாலும் இப்போதைய கல்வி வளர்ச்சியின் காரணமாகப் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள் என உயர்கல்வி பயின்றோர் பலர் இந்தப் பணிகளுக்கு வருகின்றனர். அதனால் கூடுதல் விவரம் கொண்டவர்களாகவும் பணியை நுட்பமாகச் செய்பவர்களாகவும் உள்ளனர். ஒன்றைச் சொன்னால் சட்டென்று பற்றிக்கொள்வார்கள்.

சிலசமயம் அவர்களே நல்ல செயல்திட்டங்களை உருவாக்குவார்கள். மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதற்குக் கால அட்டவணை தயாரித்ததும் குறிப்பிட்ட நாளில் அவர்களை வரவைக்கத் துறைத் தலைவர்கள் மூலம் முயற்சி எடுத்ததும் அவர்தான். வந்த மாணவர்களுக்கு உடனுக்குடன் கொடுத்தனுப்ப வேறு சிலரின் உதவியையும் பெற்றுக்கொண்டார்.

மாற்றுச் சான்றிதழ்களில் விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கையொப்பத்திற்குக் கொண்டுவருமாறு கௌதமராஜிடம் சொல்லியிருந்தேன். சம்பந்தப்பட்ட மாணவரும் ஒருமுறை சரிபார்ப்பார். கையொப்பம் இடுவதைத் தவிர எனக்கு அதில் வேறு வேலையில்லை. பார்வைக்குத் தப்பி ஏதேனும் பிழை நேர்ந்தால் அதைச் சரிசெய்து கொடுக்கவும் எளிய வழிமுறைகளைக் கையாண்டார். இவையெல்லாம் அவரது பணி சார்ந்தவை. அவற்றைக் கடந்து ஒரு மாற்றத்திற்கு அவர் காரணமானார். அதுதான் என்னால் மறக்க முடியாத விஷயம். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தனிப்பாடல் எனும் தூண்டில் புழு

பெருமாள்முருகன் 04 Mar 2023

சிறிய திருத்தம் பெரிய மாற்றம்

மாணவர்கள் மீதான என் அணுகுமுறையைக் கவனித்திருந்த அவர் ஒருநாள் தயக்கத்தோடு கேட்டார். “ஐயா, மாற்றுச் சான்றிதழ்ல திருப்திகரம்னு போட்டுத் தர்றோம். அதக் கொஞ்சம் மாத்தலாமாங்கய்யா” என்றார். “ஏப்பா? இதுல ஏதாச்சும் பிரச்சினையா?” என்றேன். “எனக்கு இப்படிப் போட்டுக் குடுத்ததனால இண்டர்வியூவுக்குப் போறப்பச் சிரமப்பட்டிருக்கறங்கய்யா” என்றார். “இத அவ்வளவு பாக்கறாங்களா?” என்றேன். “ஆமாங்கய்யா. சில இடங்கள்ல பாப்பாங்க. ஏன் திருப்தின்னு போட்டுருக்குதுன்னு கேப்பாங்கய்யா. அப்பப் பதில் சொல்ல முடியாத நிக்கணும்” என்றார். “சரிப்பா, மாத்தீரலாம். ஆங்கிலத்தில 'வெரிகுட்'ன்னு போடுங்க. தமிழ்ல ‘மிகவும் நன்று’ன்னு போடுங்க” என்றேன். அவர் முகத்தில் அத்தனை பிரகாசம். ஒரு தலைமுறைக்கே வெளிச்சத்தைக் கொண்டுவந்துவிட்ட மகிழ்ச்சி. 

ஆனாலும் அவர் சொன்னார், “ஐயா, மிகவும் நன்று வேண்டாம். அது ரொம்ப அதிகமாத் தெரியும். நன்றுன்னு போட்டாலே போதும்.” “சரி, உங்க விருப்பப்படியே இனிமே போடுங்க” என்று அனுமதி கொடுத்தேன். அடுத்த நாள் கையொப்பம் வாங்கக் கொண்டுவந்த மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்திலும் ‘நன்று’தான். பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

உண்மையில் அது மிகப் பெரிய மாற்றம்தான். அரசு அலுவலகக் கடிதங்களில் ஒரே ஒரு சொல்லை மாற்றவும் அஞ்சுவார்கள். காலகாலமாக எந்தச் சொல்லைப் பயன்படுத்திவந்தார்களோ அதையேதான் பயன்படுத்த வேண்டும். புதுச் சொல்லைப் போட்டால் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று நினைப்பார்கள். 

இந்த மனப்பான்மையால்தான் அலுவலக மொழி பழமையின் முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. நவீனத் தமிழை அலுவலகத்திற்குள் கொண்டுவருவது அத்தனை சுலபமல்ல. அதற்கு அரசு கவனம் வைத்து நல்ல குழுவை நியமித்து நவீனப்படுத்த வேண்டும். கௌதமராஜிடம் “திருப்திகரத்த விட்டுட்டு நன்று போட நான் ஏன் ஒத்துக்கிட்டன் தெரியுமாப்பா?” என்றேன். அவர் புரியாமல் பார்த்தார். “மாணவர்கள் நலனுக்குத்தாங்கய்யா” என்றார். “ஆமா. அது சரிதான். இன்னொரு காரணமும் இருக்குது. சமஸ்கிருதச் சொல் திருப்திகரம். தமிழ்ச் சொல் நன்று” என்று சிரித்தேன். புரிந்ததோ என்னவோ, அவரும் சிரித்தார்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?
இட்லி தோசை சுட வரவில்லையா?
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4

2





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

raj   1 year ago

சரியான பார்வை. நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம். உயர்கல்விதுறை அமைச்சகத்துக்கு கொண்டு செல்லவும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   1 year ago

தமிழகத்தில் நடந்த இந்த அவலத்தை எந்த ஊடகமும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை! பேராசிரியரின் அறச்சீற்றம் பாராட்டுக்குரியது! 🫡

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

அன்பையும் மரியாதையையும் பெறும் மாணவர்கள் தான் தாமும் அவற்றைப் பிறருக்கு செலுத்தத் தொடங்குவார்கள். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகும் மாணவர்கள் தமக்கும் கீழ் நிலையில் இருப்பவர்க்கு அநீதி இழைக்கப் பெரும்பாலும் யோசிக்க மாட்டார்கள். இந்த அறிவும் பொறுப்புணர்வும் இல்லாத ஆசிரியர்களும் பெற்றோர்களும்தான் சமூகம் சீரழிவதற்கு முதல் காரணம். மாணவர்கள் பால் உங்களுக்குள்ள அன்புக்குத் தலைவணங்குகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

ஐயாவின் இன்னபிற கட்டுரைகளில் காணாத கடுமை கட்டுரையின் முதல் பாதியில் வெளிப்படுவது நம் உயர்கல்வித்துறையின் நிலைக்குச் சான்று. ஆசிரியர் இத்தகு கல்விச்சூழல் அனுபவங்கள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டும். சமகால கல்விச் சுழலில் இருந்து, துறைக்குள்ளிருந்து அதுவும் மாணவர்களுக்காக இப்படியொரு விமர்சனப்பார்வை வருவது நம் உயர்கல்வித்துறைக்கு அவசியமானதாகும்.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்வெளி மாநிலத்தவர்பழங்குடி கிராமம்அகாலி தளத்தின் பல்தேவ் சிங்ஒவைசியை எதிர்க்கும் பாஜகவின் மாதவி லதாஅகிலேஷ் யாதவ்இடைத்தேர்தல்சகஜானந்தர்முள்ளும் மலரும்அற்புதம் அம்மாள் சமஸ் பேட்டிஅதிகார விரிவாக்கம் செயல்பட விடுவார்களா?வணிகச் சந்தைநிப்பர்டி20 போட்டிகள்மேல்நிலைக் கல்விசமஸ் அண்ணாஅரசியல் பழகுபொதுச் செயலாளர்ஹாங்காங்கின் 25 ஆண்டுகள்வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைபற்கள் ஆட்டம்நக்ஸலைட்பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்புவைத் ராய் கட்டுரைசமூக – அரசியல் விவகாரம்கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானநான் அம்மா ஆகவில்லையேபிட்காயின்உக்ரைன் தாய்மொழி - ஆனால் படிக்க வேண்டும்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!