கட்டுரை, கலை, கலாச்சாரம், இலக்கியம் 10 நிமிட வாசிப்பு

நாராயண குரு: இன்னொரு முகம்

சுகுமாரன்
10 Oct 2021, 5:00 am
1

நாராயண குரு என்ற பேராளுமைக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. தத்துவ ஞானி, ஆன்மிகப் பெரியார், கேரள மறுமலர்ச்சியின் விடிவெள்ளி, சமூகச் சீர்திருத்தங்களின் முன்னோடி, ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்த போராளி, சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட மனிதப் பற்றாளர் என்று அவரைப் பல நிலைகளில் காண முடியும். அவை அனைத்துக்குமான பேருருவாக இருந்தவர், இருப்பவர் குரு.

காந்தியைப் பற்றி பாரதி எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘மகாத்மா காந்தி பஞ்சக’த்தின் நான்காவது பகுதி அது.

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்

பிறனுயிர் தன்னையும் கணித்தல்

மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்

கடவுளின் மக்களென் றுணர்தல்

இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு

இழிபடு போர், கொலை, தண்டம்

பின்னியே கிடக்கும் அரசிய லதனில்

பிணைத்திடத் துணிந்தனை பெருமான்.

காந்தியைச் சிறப்பித்து பாரதி சொல்லும் இயல்புகள் எழுத்துப் பிசகாமல் நாராயண குருவுக்கும் பொருந்தக் கூடியவை. 

இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில் நாணு சுவாமி கேரளத்தில் குரு நாராயணராக அறியப்பட்டிருந்தார். அவரது சிந்தனையின் சாரம் வெளிப்பட்ட ஒன்றாகச் சொல்லப்படும் ‘தெய்வ தசகம்’ என்ற படைப்பு வெளியாகிக் கவிஞராகவும் போற்றப்பட்டிருந்தார். பாரதி எழுதிய ‘காந்தி பஞ்சகம்’ இதற்கெல்லாம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது. காலத்தால் பிற்பட்டது. இன்னொரு ஆளுமையைப் பற்றிப் பேசப்பட்டது என்பதெல்லாம் இருந்தாலும், பாரதி சொல்லும் குணங்களான தன்னுயிர்போலப் பிறன் உயிரைக் கணித்தவர்; பூமியில் உள்ள உயிர்கள் யாவும் கடவுளின் வடிவம் என்று உணர்ந்தவர் நாராயண குரு என்பதால் இந்தப் புகழ் அவருக்கும் பொருந்தும். 

அரசியல் விடுதலையை முன்னிருத்திச் செயல்பட்ட காந்தி கைக்கொண்ட ஒன்றை சமூக விடுதலைக்காகப் போராடிய நாராயண குருவும் முன்னமே கொண்டிருந்தார். அதற்கு அவரை ஊக்குவித்தது பாரதி குறிப்பிடும் ‘மெய்ஞ் ஞானத் துணிவு’ என்று நம்புகிறேன்.

நாராயண குருவின் ஆன்மீகத்தின் அடிப்படை இந்த மெய்ஞ்ஞானத் துணிவு என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். ‘அவனவன் தன் சுகத்துக்காக விரும்புவது பிறனொருவனின் சுகத்துகாகவும் வர வேண்டும்’ (அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்) என்ற குரு வாசகம் மெய்ஞ்ஞானத் துணிவின் அடையாளம். 

ஆன்மிகர் என்ற நிலையில் அத்வைத தத்துவத்தைக் கடைப்பிடித்தவராகக் கருதப்படுபவர் நாராயண குரு. அவரே அப்படிக் கருதியவர். தோற்றத்தில் பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்துவிட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின் விளக்கம்.

ஆழியும் திரையும் காற்றும்

ஆழமும்போல நாங்களும்

மாயையும் நின் மகிமையும்

நீயும் என் உள்ளத்தில் ஒன்றாகுக

என்று தெய்வ தசகத்தின் நான்காவது பாடலில் குரு குறிப்பிடுவது அதைத்தான். எல்லாமறக் கலந்த ஒன்றுக்குப் பேதமில்லை என்பதைத்தான். 

ஆதிசங்கரர் முதல் இன்றைய ஆன்மிக விற்பனையாளர்கள் வரை இதை உபதேசமாகச் சொன்னவர்களே பெரும்பாலும் அதிகம்; இதை நடைமுறையில் காட்டிய பெருமை நாராயண குருவுக்கு உரியது. அவரது வாழ்வே அதற்கு உதாரணம் ஆகும்.

℧ 

னிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர் நாராயண குரு. இதைத் தத்துவ அறிவுநிலை என்பதைவிடக் கவித்துவ உணர்வுநிலையாகக்  காணவே விரும்புகிறேன். தத்துவத்தில் சிந்திக்கும் திறனில்லாத ஒன்றுக்கு இடம் இல்லை. தர்க்கத்துக்கு விளங்காத ஒன்றுக்குத் தகுதியில்லை. கவிதையில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எல்லாமும் கவிதைக்கான உயிர்ப் பொருள்கள்தாம். 

தன்னை இன்னொன்றாகவும் இன்னொன்றைத் தானாகவும் மாற்றுகிற கவிதையின் தர்க்கத்தையே நாராயண குரு ஆன்மிகத்தின் வெளிப்பாடாக ஆக்கினார். ஆற்றில் மூழ்கிக் கிடந்த ஒரு கல். அந்த வெறும் கல் தத்துவக் கண்ணோட்டத்தில் நிச்சலனமான பொருள். ஆனால், அதைக் கடவுளாகக் கண்டதும் காணச் செய்ததும் அவருக்குள் ஆழ்ந்திருந்த உணர்வு நிலைதான். கவித்துவ நிலைதான். 

எல்லாரையும் எல்லாவற்றையும் நிகரானதாகக் கொண்ட மனநிலையிலிருந்துதான் மனிதனுக்கு ஒரு கடவுள் போதும் என்று சொல்ல நாராயண குருவால் முடிந்தது. ‘ஒரு ஜாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்குப் போதும்’ என்று சொன்னதும் தன்னில் பிறரையும் பிறரில் தன்னையும் காணும் உணர்வு நிலையில்தான். அவரது கவித்துவம் முகிழ்ப்பது அந்தத் திட்பமான தருணத்தில்தான் என்று கருதுகிறேன். 

சிற்பக் கலையின் அத்தனை சிறப்புகளும் வெளிப்படும் உருவச் சிலையின் இடத்தில் எளிய கல்லைக் கடவுளாக நிறுவியதுதான் அவரது பெருமைக்கு உரிய கவிச்செயல். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைக் காலத்தின் அடையாளமாகக் கண்டால் அதில் கிடக்கும் கல்லை அழிவற்ற ஒன்றின் சின்னமாகக் கருதலாம். நிலையில்லாத ஒன்றுக்குள் வாழ்வின் அடையாளத்தைப் பிரதிஷ்டை செய்த உணர்வைக் கவிதையிலிருந்துதானே பெற்றிருப்பார்?

℧ 

ன்மிகர்களாக அறியப்பட்ட பலரும் கவிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பலரும் உபதேசங்களால் தெரிய வந்ததுபோலவே கவிதைகளாலும் அறியப்பட்டவர்கள்தாம். அவர்களிடமிருந்து நாராயண குருவை வேறுபடுத்துவதாக ஒரு அம்சத்தைக் கருதுகிறேன். அது மரபார்ந்த ஆன்மிகர்கள் கடவுளிடம் மனிதர்களைக் கொண்டு சேர்க்க உபாயங்களை முன்வைத்தார்கள். மாறாக குரு மனிதர்களிடையில் கடவுளைக் காண விரும்பினார்.

நிலவில் மனிதன் உலவுவது அரிய சாதனைதான். ஆனால், அதைவிட நிலவின் ஒளியில் எல்லா மானுடர்களும் பிரகாசிப்பது மேலானது. மகத்தானது. இதை ஒரு கவித்துவக் கற்பனையாகச் சிந்தித்தால் குருவின் கவிமனம் விளங்கும். அந்த நிலைதான் அவரிடமிருந்து ‘மதம் ஏதாயாலும் மனுஷன் நன்னாயால் மதி’ ( மதம் எதுவானாலும் மனிதன் மேம்பட்டால் போதும்) என்ற எளிய வாசகமாக வெளிப்படுகிறது. அவர் இங்கே முன்னுரிமை அளிப்பது மதத்துக்கு அல்ல; மனிதனுக்குத்தான். 

இதைக் குறிப்பிடும்போது கூடவே பாரதியின் வரியொன்றும்நினைவுக்கு வருகிறது. ‘பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிப்பீரோ?’ என்ற வரி. பாரதி முதன்மையளிப்பதும் மதத்துக்கல்ல; மனிதர்களுக்குத்தான்.

நாராயண குருவைப் பற்றிய பேச்சில் பாரதி இடம் பெறுவது நிறையப் பேருக்கு  வியப்பை அளிக்கலாம். அதற்கு வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் சில இருக்கின்றன. பாரதி பிறந்த காலத்துக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து அவர் மறைந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் மறைந்தவர் நாராயண குரு. இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்திருக்கவில்லை. இரண்டு நாடோடிகள் சந்தித்துக்கொள்வது அரிதான செயல்தான். ஆனால் தமிழ் உலகத்துக்கு நாராயண குருவை அறிமுகப்படுத்திய முதல் ஆளுமை பாரதி!

நாராயண குரு பின்பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப்படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. பிற்காலத்தில் அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்களின் பிரதிமைகள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் நாராயண குரு இந்து மதச் சாமியாராக இருக்கவில்லை என்பதை பாரதி எடுத்துச் சொன்னார்.

தனது கட்டுரைகளில் பாரதி இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே  தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். கேரளத்தைப் பற்றி பாரதி ஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அவற்றில் மூன்றில் பேசப்படும் பாத்திரமாக இருப்பவர் நாராயண குரு. அவரை ‘ஸ்ரீ நாராயண ஸ்வாமி’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.  

ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சம்ஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரணகர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.

நாராயண குருவைப் பற்றி யோசிக்கும் சந்தர்ப்பங்களில், அவரது படைப்புகளை வாசிக்கும் வேளைகளில், தவிர்க்க இயலாமல் பாரதி குறுக்கிடுவதற்குத் தனிப்பட்ட காரணம் எனக்கு இருக்கிறது. நாராயண குரு என்ற பெயரை, அவரது ஆளுமையை நான் பாரதி வாயிலாகவே தெரிந்துகொண்டேன். இருவரும் அத்வைத சித்தாந்தத்தின் நடைமுறையாளர்கள். அவர்களது சிந்தனை மையங்கொண்ட இடம் சித்தாந்தங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட சுதந்திரமான ஒளி பொருந்திய பகுதி. 

கவிதையும் கலைகளும் அந்த இடத்தைத்தான் இலக்காகக் கொள்கின்றன. ஏனெனில், அந்த மையத்தில்தான் மனிதர்களையும் சராசரங்களையும் இணக்கமாகக் காண முடிகிறது. இந்த மானுட இணக்கமே நாராயணன் என்ற குருவை நிறுவுகிறது. அதுவே அவரது கவிதையின் ஊற்று முகமாகவும் பெருகுகிறது.

℧ 

விஞராக நாராயண குருவை அறிய நேர்ந்த சம்பவத்தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தனிப்பட்ட அனுபவம் அது. நான் மலையாளம் அதிகம் புழங்காத மலையாளிக் குடும்பத்தில் பிறந்தவன். தமிழில் பிறந்து தமிழுடன் வளர்ந்து தமிழால் வாழ்பவன். என்னைச் சிறுவயதில் வளர்த்தவர் என்னுடைய அத்தை. அப்பாவின் அக்கா. எங்கள் குடும்பத்துக்கு மாறாக அவர் தனி மலையாளியாக அதன் நல்லதும் கெட்டதுமான பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்தவர். மாலையில் விளக்கேற்றி வைத்ததும்  நாராயணீயத்திலிருந்தோ ஞானப் பானையிலிருந்தோ வேறு ஏதாவது பக்தி இலக்கியத்திலிருந்தோ பாடலைச் சொல்வதும் சுலோகங்களைப் பாராயணம் செய்வதும் அவருடைய பழக்கம். 

மலையாளம் தெரிந்த அதே அளவுக்குத் தமிழும் தெரியும். ஆகவே அவ்வப்போது தமிழ்ப் பாடல்களும் பாடப்படும். அப்படி ஒருநாள் அவர் பாடக் கேட்ட பாடல் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. அன்றைக்கு அத்தைக்குச் சஞ்சலம் முட்டி நின்ற நாளாக இருந்திருக்க வேண்டும். ‘தெய்வமே காத்து கொள்கங்ஙு கைவிடாதிங்ஙு ஞங்களெ’ என்ற இரண்டு வரிகளை மட்டும் கண்ணீர் வழியத் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கும் துக்கம் தொண்டையை நெரித்தது.

இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் பின்பு தற்செயலாக ஒரு படம் கைக்குக் கிடைத்தது. பளபளப்பான தாளில் அச்சிட்ட வண்ணப் படம். படத்தில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மழிக்கப்பட்டுப் பாதி வளர்ந்த தலைமுடி. மழிக்காத முகத்தில் குற்றுத் தாடி. காவிப் போர்வையுடன் அமர்ந்திருக்கும் படம். அந்தக் கண்கள் என்னைப் பார்ப்பது போலத் தென்பட்ட அதே சமயத்தில் என்னைத் தாண்டியும் பார்ப்பதுபோல சுடர்கொண்டிருந்தன. தலைக்குப் பின்புறம் ஒளிவட்டம்  இருந்தது. தலைக்குப் பின்னால் ஒளிவட்டமிருந்தால் நிச்சயம் கடவுளாகத்தானே இருக்க முடியும். எனவே படத்தை சுவரில் அத்தை மாட்டியிருந்த மற்ற தெய்வப் படங்களுக்கு இடையில் வைத்தேன். அத்தை கோபித்துக்கொண்டார். ‘இவர் படத்தையெல்லாம் நாம் நம் வீட்டில் வைக்கக்கூடாது’ என்றார். 

‘யார் இவர்?’ என்று கேட்டேன். 

‘நாராயண குரு. நான் எப்போதும் பாடுவேனே ஒரு பாட்டு. தெய்வமே காத்துகொள்கங்ஙு என்று. அந்தப் பாட்டை எழுதினவர் அவர்தான்’ என்று பதில் சொன்னார்.

‘நீங்கள் அழுதுகொண்டே பாடுகிற பாட்டுத்தானே?’ என்று மறுபடியும் கேட்டேன்.

‘ஆமாம்’ என்றார் அத்தை. 

‘நீங்கள் உருகிப் பாடுகிற பாட்டை எழுதியவர் படத்தை வைத்தால் என்ன தப்பு?’ என்றேன்.

அத்தை பதில் சொல்லவில்லை. ஆனால், மாமாவிடம் சொல்லி அந்தப் படத்தைக் கண்ணாடிச் சட்டமிட்டு வாங்கி முப்பத்து முக்கோடி தெய்வங்களுக்கு நடுவில் மாட்டி வைத்தார். நாராயண குரு இப்படியாக எங்கள் வீட்டிலும் என்னுடைய மனதிலும் குடியேறினார். ஊர்களும் வீடுகளும் மாறிப் போன பின்பும் மரணம் வரையும் அத்தையின் கடவுள் வரிசையில் குரு வீற்றிருந்தார்.

நாராயண குருவை முதன்முதலில் கவிஞராகவே அறிந்துகொண்டேன். அவரது பன்முக ஆளுமையில் அதுவும் முக்கியமானது. இறுதிக் காலத்துக்குச் சில ஆண்டுகள் முன்புவரையும்  கவிதையுடனான உறவைக்  கைவிடவில்லை என்று அவருடைய வரலாறு தெரிவிக்கிறது. அவருடைய வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் அவர் கவிஞராகவே வாழ்ந்திருக்கிறார். 

டாக்டர், சுகுமார் அழீக்கோடு குருவின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பகுக்கிறார். நாராயண குரு அவதூதராக வாழ்ந்த காலம், தவமுனியாக வாழ்ந்த காலம், அனுபூதி நிலையை - அனுபவித்த அறிந்த நிலையை - அடைந்த காலம் என்று மூன்று. இந்த மூன்று காலங்களிலும் குரு கவிதை இயற்றும் செயலில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அந்த மூன்று காலங்களும் அவரது கவிதைகளில் இயல்பாகவே வெளிப்படுகின்றன. 

முதலாவது கட்டத்திலிருந்து  மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும்போது உண்டான நிலைகள் கவிதையின் வளர்ச்சியையும் ஆன்மிக முன்னேற்றத்தையும் காட்டுகின்றன. அவதூத நிலையிலும் தவநிலையிலும் இயற்றியவை அனுபூதி நிலையை அடைவதற்கான படிநிலைகளாகக் காணப்படுகின்றன. அனுபவமே கவிதையை உருவாக்குகிறது என்ற ஆகப் பழைய, ஆனால் என்றென்றும் நிரந்தரம் பெற்ற இலக்கியக் கருத்துக்கு இது வலுவூட்டுகிறது.

அவதூத காலங்களில் குரு படைத்த கவிதைகள் அனைத்தும் நற்குணங்களைப் போற்றுபவை. தெய்வங்களைத் துதிப்பவை. இவை அனைத்தும் பக்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை. சந்தமும் வர்ணனையும் நிறைந்தவை. அலங்காரச் சுமை மிகுந்தவை. சில சமயங்களில்  அனுபவத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டுச் சொற்களுக்குப் பின்னால் ஓடுபவை. வார்த்தை ஜாலத்தில் திளைப்பவை. சொற்களின் ஓசையால் கவித்துவம் பெறுபவையே தவிர பொருளின் ஆழத்தால் கவிதையானவை அல்ல.

குரு இயற்றிய ஸ்தோத்திரப் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில் அமைந்திருப்பது ஒரு பக்குவமற்ற கவிஞனின் சொல் விளையாட்டு. ஷண்முக ஸ்தோத்திரத்தில் இதைப் பார்க்கலாம். அ, ஆ. இ. ஈ என்று தொடங்கிச் செல்லும் பாடல்கள் ‘ரு’ (ஹ்ரு) என்ற எழுத்தை அடைந்ததும் தடுமாறிவிடுகின்றன. இவற்றை அவதூத எக்களிப்பின் வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். ஊற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் காட்டாற்றைப் போன்றவை இவை.

தூய திங்கட்பிறையும் திருமுடியடியில்

பாம்பெலும்பு உம்பராறும்

திருச்செம்பொன் சிகையுள் திருகி ஒளி

சிந்திச்சிதறும் அந்திச்செம்மையும்

நாமப்பொட்டு இணைந்த நெற்றியில்

சிறுபிறைக்கீற்றும் கார்வில்லும், வெல்லும் அரிய

புருவக்கொடியும் அடியவன் அகக்கண்

முனையால் ஒருமுறை காண்குவேன்.

இது ஷண்முக தசகத்தின் இரண்டாவது பாடல். முருகனை அலங்கார ரூபனாகப் பார்க்கும் பக்தனின் ஆசையைச் சொல்கிறது. அலங்காரமான வார்த்தைகளிலும் துடிப்பான ஓசையிலும் சொல்கிறது. இது ஓசையின் கவிதை. பக்தியின் கவிதை. இதில் தன் அனுபவத்தின் எந்தத் துளியும் இடம்பெறுவதில்லை. குருவின் அவதூத காலக் கவிதைகள் மிகுதியும் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்த தறுவாயில் இயற்றப்பட்டவை. புறத் தேவைகளுக்காக உருவானவை. அதிகமும் அன்றைய காலத்தில் அவருக்கு அறிமுகமாகியிருந்த தமிழ்ப் பக்திக் கவிதைகளின் அடியொற்றி இயற்றப் பட்டவை. அவற்றில் ஒரு கவிஞரைக் காண்பது அரிது.

குருவின் இரண்டாம் கட்டமான தவக் காலக் கவிதைகள் சமதளத்தில் ஓடும் நதிக்கு ஒப்பானவை. முன்கட்டக் கவிதைகள் கொண்டிருந்த பல இயல்புகளை இந்தக் காலக் கவிதைகள் கைவிடுகின்றன. தெய்வங்களைத் துதிக்கும் கவிதைகள் மிக அரிதாகவே உள்ளன. தனக்குள் நிகழும் அனுபவங்களைச் சொல்லும் கவிதைகளாக இவை மாறுகின்றன. ஒரு தீர்க்கதரிசியின் குரலைப் பிரதிபலிக்கின்றன. தனக்குள் நிகழும் மாற்றத்தில் பெற்ற மெய்ஞ்ஞானத்தின் மின்னல்கள் கவித்துவம் பெறுகின்றன. முன்பு குறிப்பிட்ட மெய்ஞ்ஞானத் துணிவு  வெளிப்படுவது இந்தக் கட்டக் கவிதைகளில்தான்.

கடவுளற்ற ஓர் உலகை அல்லது மனிதன் தனக்குள் கடவுளைத் தேடும் ஒரு உலகை குரு கண்டடைகிறார். ‘ஞானம் வெளியே தனித்து வாராது கண் வேண்டும் வருதற்கு. கண்ணுக்கு வெளிச்சம்போல’ என்ற வரிகளுக்கு வரும்போது ஆன்மிக நோக்கில் அத்வைதியாகவும் இலக்கியப் பார்வையில் கவிதையில் விற்பன்னராகவும் மாறுகிறார். இந்தக் கட்டமே மூன்றாவது காலமான, அனுபூதிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. நாராயண குரு மகத்தான கவிஞராகப் பரிணமிப்பது அங்குதான். அவரது ஆகச் சிறந்த கவிதைகள், அவை ஆகச் சிறந்த ஆன்மீகப் படைப்புகளும் கூட, வெளிப் படுவது அப்போதுதான். கடலின் பரப்பும் ஆழமும் கொண்ட ஆளுமை யாகவும் ஆன்மிகராகவும் கவிஞராகவும் பேருருவம் கொள்கிறார் குரு.

℧ 

குரு நாராயணரின் அனுபூதிக் காலக் கவிதைகள் கடவுள்களைத் துறக்கின்றன. அவர்களைப் புகழும் மொழியைத் துறக்கின்றன. தன் வெளிப்பாட்டின் வெளிச்சத்தைப் பரப்புகின்றன. ஆன்மிகம் இந்த நிலையை ஆத்ம சாட்சாத்காரம் என்கிறது. கவிதை தன்னை வெளிப்படுத்தல் என்கிறது. இரண்டும் ஆழ்ந்த பொருளில் ஒன்றுதான். அதனால்தான் ஆன்மிகர்கள் கவிதையை நாடுகிறார்கள். கவிஞர்கள் ஆன்மாவின் தூதுவர்களாகிறார்கள். குருவின் அனுபூதிக் கவிதைகள் பருண்மையிலிருந்து நுட்பத்துக்குச் செல்கின்றன. புற எதார்த்தங்களிருந்து அக உண்மைகளுக்குள் புகுகின்றன. தெய்வீகத்திலிருந்து மானுடத்துக்கு மாறுகின்றன. அவற்றில் கடவுளின் இடத்தை மனிதன் எடுத்துக்கொள்கிறான். 

அவதூத காலக் கவிதைகளிலும் தவக் காலக் கவிதைகளிலும் தெய்வத்திடம் இறைஞ்சுபவனாகவும் வேண்டுபவனாகவும் சித்தரிக்கப்பட்ட மனிதன் தன்னைக் காப்பாற்றும் கடமை அவருடையது என்று விதி வகுக்கிறான். ஆன்மிகப் பொருளில் அத்வைதியின் பார்வையில் எல்லாரும் கடவுள்கள். எல்லா மனிதர்களும் கடவுள்கள். அப்படியானால் ஒரு மனிதனைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் இன்னொரு மனிதன் தானே?

தெய்வமே காத்துகொள்கங்ஙு

கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ

என்று தெய்வதசகத்தில் அவர் சொல்வது கடவுளிடம் அல்ல; மனிதர்களிடம் என்று காணவே விரும்புகிறேன். இந்த மானுட இணக்கத்தையே ஆன்மிகராகவும் சீர்திருத்தராகவும் குரு நாராயணர் காண்கிறார். கவி நாராயணரின் கவிதை நோக்கும் கவிதைப் பொருளும் இந்த மானுடக் கருணைதான்  என்றும் நம்புகிறேன்.

நாராயண குரு கவிதைகளின் தன்மையைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் விளைவாகவே இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கடல் நீரை சிப்பியில் முகந்தெடுப்பது போன்ற செயல் இது. எனினும் சிப்பிக்குள் ஒடுங்கிய நீரும் கடலின் பகுதிதானே?

நாராயண குரு பிறந்து 136 ஆண்டுகளும் மறைந்து 98 ஆண்டுகளும் அவரது முதல் கவிதை இயற்றப்பட்டு 128 ஆண்டுகளும் கடந்து விட்டன. இன்று நவீனமான காலத்திலிருந்து அந்தக் கவிதைகளை வாசிக்கும்போது சில எண்ணங்கள் எழுகின்றன. கவிதையின் தரிசனம் பற்றியும் கவிதையாக்கம் பற்றியும். கவிஞராக குரு செயலாற்றிய முறையைப் பற்றி்யும் எழுகிற கருத்துக்கள். 

℧ 

குருவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் ஒட்டு மொத்தமாக அடையும் உணர்வு கருணை என்பதை அறிய முடியும். அந்தக் கருணையை நிலைநிறுத்துவதற்கான சிந்தனைகளே கவிதையின் பார்வையை நிர்ணயிக்கின்றன. அவரது படைப்புகளில் அனுகம்ப என்ற சொல்லையும் பொருளையும் பார்க்கலாம். தெய்வத்தை அவர் காண்பது தயா சிந்து என்றுதான். சகல ஜீவராசிகளையும் தனக்குள் காண்கிற காட்சியையே அவரது கவிதையின் தரிசனமாகத் தோன்றுகிறது. இன்றைக்கும் தேவையானது இந்த தன்வயப் படுத்தலும் தரிசனமும். அவைதான் குருவின் கவிதைகளை சமகாலப் பொருத்தமுடையதாக்குகின்றன.   

கவிதைகளில் கையாண்டிருக்கும் உத்திகள் சில அவரை நவீனமானவரா கவும் காலத்துக்கு முன் நடந்தவராகவும் காட்டுகிறது. தெய்வதசகத்தின் முதல் கண்ணியிலிருந்தே இதற்கு உதாரணம் காட்டலாம்.

தெய்வமே காத்துகொள்கங்ஙு

கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ

நாவிகன் நீ பவாப்திக்கோர்

ஆவிதன் தோணி நின் பதம்.

பவக் கடலை - பிறவிக் கடலை - நீந்த உதவும் வாகனத்துக்கு உவமையாக அவர் குறிப்பிடுவது ஆவித் தோணியை; நீராவிப் படகை; ஸ்டீம் போட்டை! அவர் காலத்தில் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்த எந்தக் கவிஞரும் இது போன்ற உவமையை நிச்சயம் கையாண்டிருக்க முடியாது. சுப்ரமண்ய கீர்த்தனத்தின் நான்காவது பாடலில் உடலை எண் சாண் ரோட்டுடன் ஒப்பிடுகிறார். ‘எண்சாண் ரோட்டூடே உள்ள சகடம்’ என்ற வரி அவர் காலத்துக்கு மிகப் புதியதாகவே இருக்க வேண்டும். கவிஞன் அவனது காலத்தின் மொழியுடனும் வாழ்க்கையுடனும் கொண்ட உறவின் அடையாளம் இல்லையா இது?

நாராயண குரு பன்முகமானவர். அதைப் போலவே கவி நாராயணரும் பன்முகமானவர். சம்ஸ்கிருதம், மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதைகளை இயற்றியிருக்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங்களையும் மலையாளப் படைப்புகளையும் தமிழ்ச் செய்யுள்களையும் இயற்றியிருக்கிறார். திருக்குறளுக்கு முதல் மலையாள மொழிபெயர்ப்பைச் செய்தவர் அவர்தான். தேவாரத்துக்கு நிகரான பதிகங்களை இயற்றியிருக்கிறார். அழுத்தமாகச் சொன்னால் தமிழ்க் கவிதை மரபையோ பண்பாட்டு மரபையோ பக்தி மரபையோ தெரிந்துகொள்ளாமல் குருவை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. 

தமிழ்க் கவிதையில் செயல்படுபவனாக என்னை மிகவும் கவர்ந்தவை அவரது தமிழ் ஆக்கங்கள். அவதூத காலக் கவிதைகளில் குரு அடியொற்றி இயற்றியவை தேவாரம், திருவாசகம், பட்டினத்தார், சித்தர் பாடல்களையே. அவரது இரண்டாம் கட்டக் கவிதைகளில் சிறந்ததான குண்டலினிப் பாட்டு சித்தர் பாடல்களின் வடிவும் வனப்பும் கொண்டது. 

ஆடு பாம்பே புனந்தேடு பாம்பே - அருள்

ஆனந்தக்கூத்து கண்டுஆடு பாம்பே

திங்களும் கொன்றையும் சூடும் ஈசன் - பத

பங்கயஞ் சேர்ந்துநின் றாடு பாம்பே

வெண்ணீ றணீந்து விளங்கும் திருமேனி

கண்ணீரொழுகக் கண்டாடு பாம்பே

இது மலையாளப் பாடலின் தமிழாக்கம். இதை நாராயண சித்தர் இயற்றியது என்று குறிப்பிட்டால் குருவை 19 ஆவது சித்தராகத் தமிழ் இலக்கியம் ஏற்றுக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு

எண்ணிய பொருள் முடிந்ததும்

மிஞ்சி நிற்கும் பார்வைபோல்

உனக்குள்ளே துடிப்பாக வேண்டும்

என்ற வரிகளை எழுதிய குரு அதன் சான்றாகவும் கவிதையில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் கவிதைகளை இயற்றியவர் அந்தப் பொருள் முடிந்ததும் பார்வையின் துடிப்பாக மட்டுமே தன்னை வைத்துக்கொண்டார். ஆன்மிகக் கவிஞர்கள் பலரும் தமது கவிதைகளில் அவர்களுடைய முத்திரையை அடையாளமிட்டிருக்கிறார்கள். கபீர், லால்தெத், மீரா, பசவண்ணர் போன்ற கவிஞானிகளின் பாடல்களில் அவர்களது பெயரையோ அடையாளச் சொற்களையோ காணலாம். 

ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்த நாராயண குரு எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கிறது. அவர் கவிதைகளை இயற்றியதோடு சரி. அவற்றைப் பாதுகாக்க முற்பட்டதில்லை. எழுதியவனின் அடையாளமல்ல; கவிதைக்கு முக்கியம். அதைக் கடந்த பொருள்தான் முதன்மையானது என்று அவர் எண்ணியிருக்கலாம். அவர் கவிதை எழுதியதெல்லாம் பயணியாகச் சென்று தங்கிய இடங்களில் கிடைத்த காகிதங்களில் எழுதி அங்கேயே விட்டுச் சென்றுமிருக்கிறார். 

ஒரு கவிஞனின் படைப்பு முற்றுப் பெற்றதும் அவனுக்கு மட்டும் உரியதல்ல என்ற நவீன இலக்கியக் கோட்பாட்டை நாராயண குரு தீர்க்கதரிசனத்தில் அறிந்திருக்க வேண்டும். அவரை உபசரித்தவர்களோ அல்லது அணுக்கத் தொண்டர்களோதான் குருவின் படைப்புகளைப் பாதுகாத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்.

குருவின் படைப்புகளை நவீன கங்கை என்று குறிப்பிடுகிறார் ‘ஸ்ரீ நாராயண குருவின்டெ சம்பூர்ண க்ருதிகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் சுகுமார் அழிக்கோடு. உண்மைதான். கங்கையும் கவிதையும் வற்றாதவை. குருவின் கவிதைகளும் வற்றாதவை. வற்றிவிடக் கூடாதவை. ஏனெனில் அந்தக் கங்கை பெருக்கெடுப்பது மானுடக் கருணை என்ற ஊற்றிலிருந்து அல்லவா!

கோவை, ஸ்ரீ நாராயண குரு கல்லூரி ஆதரவில் நடைபெற்ற ‘ஸ்ரீ நாராயணகுரு - வாழ்வும் வாக்கும்’ பன்னாட்டுக் கருத்தரங்கில், 05.10.2021 அன்று கவிஞர் சுகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சுகுமாரன்

சுகுமாரன், தமிழ்க் கவிஞர். எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து பங்களித்துவருபவர். 'கோடைக்காலக் குறிப்புகள்', 'பயணியின் சங்கீதங்கள்', 'வாழ்நிலம்' உள்ளிட்ட கவிதை நூல்களின் ஆசிரியர். மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   3 years ago

அருமையான உரை. அருஞ்சொல் தனது பொறுப்பான இது போன்ற உரைகளை வெளியிடுவதற்கு நன்றி வாழ்த்துகள். நீலனூர் கே கே தாஸ்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சமஸ் - எஸ்.என்.நாகராஜன்அமலாக்கத் துறைஊழல் குற்றச்சாட்டுடிராம்ப் கதாபாத்திரம்ரவீஷ் குமார்உணவு மானியம்சர்தார் வல்லபபாய் படேல்ஜர்னலிஸம்இரைப்பைப் புண்பகவந்த் மான்புதிய தொழில்கள்தலித் பெண்கள்இளக்காரம்நான் செய்தேன்கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமthiruma interviewஅதிகாரப் பரவலாக்கம்புதிய தாராளமயக் கொள்கைஆழ்வார்கள்அரபுபிறப்பு விகிதம்அருஞ்சொல் உருவான கதைதமிழ்நாடு நௌகிகாகுபாஷோ75இல் சுதந்திர நாடு இந்தியாஇந்தியாவின் குரல்விமர்சனம்கா.ராஜன்பிரதமர் வாஜ்பாய்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!