கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது!
மதச்சார்பற்ற, பல இன–கூட்டாட்சித் தத்துவம் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் மீது கடந்த பத்தாண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடியும், பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடைவிடாமல் நடத்திவரும் தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் தயாராக இருக்கும் என்ற மக்கள் அமைப்புகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் அடுத்தடுத்து பல தீர்ப்புகளை அது வழங்கிவந்தது; அந்தத் தீர்ப்புகள் யாவும் ‘இதற்கு முன்னால் ஒன்றுமில்லை’ என்று சொல்லும் அளவுக்கு காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து தந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை 2019 ஆகஸ்ட் 5இல் ரத்துசெய்தது தொடர்பாக அளித்துள்ள சமீபத்திய தீர்ப்பு அமைந்திருக்கிறது.
என்னுடைய அறுபதாண்டு கால ஊடக வாழ்வில் நான் படித்ததிலேயே பொட்டில் அறைந்ததைப் போன்ற – மன உளைச்சல்களை மிகவும் அதிகப்படுத்தும்படியான தலையங்கத்தை இது தொடர்பாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் எழுதியிருக்கிறது; மோடியின் இந்த முடிவை ஆதரித்ததன் மூலம், எதிர்காலத்தில் எந்த ஓர் அரசும் நாடாளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வலு இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லாமல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திவிடலாம் என்ற துணிச்சலைத் தரும் வகையில் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
இனி வழிமுறை எளிது: ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கெட்டிருந்தால் – அல்லது தேவைப்பட்டால் கெட வைத்து, அரசமைப்புச் சட்டத்தின் 356வது சட்டக்கூறின்படி அங்கு மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்துவிடலாம், மாநில சட்டப்பேரவையின் அதிகாரம் அனைத்தும் இப்போது குடியரசுத் தலைவரிடம் அல்லது மாநில ஆளுநரிடம் இருக்கிறது என்று கூறி – அந்த மாநில அரசு விரும்பாத மாற்றங்களைக்கூட அதில் செய்துவிடலாம்!
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இனி மாநிலங்களின் நிலை?
இந்தத் தீர்ப்பின் மூலம் அரசமைப்புச் சட்டத்துக்குத் தரப்பட்டிருக்கும் விளக்கத்தை மோடி அரசு இனி எப்படிப் பயன்படுத்தும் என்று தீர்மானிப்பதற்கு அதிக கற்பனா சக்தி அவசியமில்லை. பாஜக நியமித்த ஆளுநர்கள், மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைகள் நிறைவேற்றிய மசோதாக்களில் அல்லது சட்டங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் அரசமைப்புச் சட்டத்தை மீறும் வகையில், சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய மசோதாவில்கூட கையெழுத்திட மாநில ஆளுநர் மறுத்துவிட்டார். இது அரசமைப்புச் சட்டத்தை வெளிப்படையாகவே மீறும் செயல், ஆனால் ஒன்றிய அரசால் நேரடியாகத் தூண்டிவிடப்படுவதன் விளைவு.
இதற்கும் முன்னதாக மோடி அரசு 40 சிபிஐ (மத்திய குற்றப் புலனாய்வு) அதிகாரிகள் கொண்ட குழுவை கொல்கத்தா நகருக்கு அனுப்பி மேற்கு வங்க மாநிலத்தின் காவல் துறை ஆணையரை விசாரணைக்காகக் கைதுசெய்து தில்லிக்கு அழைத்துவர முயன்றது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தலையிட்டு, காவல் துறை மூலம் பதிலடியாக சிபிஐ அதிகாரிகளைக் கைதுசெய்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதியாக தில்லி இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லி மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்த மணீஷ் சிசோடியாவை, மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது, பத்து மாதங்கள் கடந்தும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆதாரம் கிடைக்காமல் தவிக்கிறது. அதிலும் திருப்தி அடையாமல் இப்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையே கைதுசெய்ய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் பிரதமர் மோடி.
இவையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவரால் அல்ல - ஒரு சர்வாதிகாரியால் மேற்கொள்ளப்படும் செயல்கள்; இவை அனைத்துமே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அவருடைய சக நீதிபதிகளின் கண்கள் முன்னாலேயே நடக்கின்றன.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
10 Jul 2016
உச்ச நீதிமன்றத்தின் வாதங்கள்
காஷ்மீர் வழக்கில் அவர்கள் வழங்கிய தீர்ப்பைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கவிழ்க்கவும், அப்படிக் கவிழ்த்துவிட்டு இந்தியா முழுவதையுமே தன்னுடைய இந்துத்துவ சித்தாந்த சகாக்களின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு நாடு முழுவதற்கும் நெருக்கடி தர அவருக்கு எவ்வளவு நாள்கள் தேவைப்படும் என்று நீதியரசர்கள் நினைக்கின்றனர்?
தன்னுடைய தீர்ப்பு சரியானதே என்று நியாயப்படுத்த உச்ச நீதிமன்றம் இரண்டு வாதங்களை முன்வைக்கிறது.
முதலாவது, அரசமைப்புச் சட்டக்கூறு 370, அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவில் இருக்கிறது, அதன் தலைப்பே ‘தாற்காலிகமான, இடைக்காலத்துக்கான, சிறப்பு சட்டப் பிரிவுகள்’ என்பதாகும் என்கிறது. எனவே, இந்த 370 இயற்றப்படும்போதே அது நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்றப்படவில்லை என்கின்றனர். எனவே, மோடி தலைமையிலான அரசு செய்தது என்னவென்றால் காஷ்மீர் தொடர்பான ஒரு அத்தியாயத்தை முடித்து வைத்திருப்பதுதான்.
இரண்டாவது வாதம் எதுவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் சேர்க்கப்பட்ட நாளிலிருந்தே, காஷ்மீரின் சட்டங்கள் அனைத்துமே நாட்டின் பிற பகுதிகளுடைய சட்டங்களுக்கு இணையாகவே படிப்படியாக மாற்றப்பட்டன என்கின்றனர். அதாவது, அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அளித்த தன்னாட்சி அதிகாரம் என்பது இத்தனை ஆண்டுகளில் படிப்படியாக அரிக்கப்பட்டே வந்திருக்கிறது என்பதாகும்.
மூச்சுத் திணறும் அளவுக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு இப்படி வேண்டும் என்றே திசை திருப்பும் வகையில் ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ‘தாற்காலிகம்’ என்ற வார்த்தைக்கு அது இயற்றப்பட்ட காலம், சூழல், அரசியல் நிலைமைக்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும் என்பதை மெத்தப் படித்த நீதிபதிகள் எப்படி அறிந்துகொள்ளாமல் போனார்கள்?
காஷ்மீர் பிரச்சினை
இந்திய அரசமைப்புச் சட்டம் 1948-49இல் தயாரிக்கப்பட்டு அரசமைப்புச் சட்டப்பேரவையால் 1949 நவம்பர் 26இல் ஏற்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக நீடித்தது இந்தியா. மன்னராட்சியின் கீழ் இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரதேசம் இந்தியாவுடன் சேர்ந்துகொண்டது. ஆனால், அதன் ஐந்தில் இரண்டு பகுதியை சிறிய படையெடுப்புக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது, அந்தப் பிரச்சினை இன்னமும்கூட கொழுந்துவிட்டு எரிகிறது.
இந்தியாவுடன் காஷ்மீர் சமஸ்தானம் இணைந்துவிட்டதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை உறுதிசெய்திருக்கிறது; ஆனால் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிபந்தனையையும் விதித்திருக்கிறது.
ஆக்கிரமித்த பகுதியிலிருந்து வெளியேற பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது, அப்போது பாகிஸ்தானுக்கு பிரிட்டிஷ் ஹை-கமிஷனராக (தூதர்) இருந்த சர் பேட்ரிக் கிராஃப்டி-ஸ்மித், 1947 அக்டோபரிலேயே கராச்சியிலிருந்து லண்டனுக்கு அனுப்பிய தகவலில், “ஆக்கிரமிப்பு தொடங்கியிருக்கிறது - ஆக்கிரமித்த பகுதியிலிருந்து வெளியேறினால் அதுவும் போய்விடும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்” என்று தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரையும் இந்தியா வசமுள்ள காஷ்மீரையும் இணைப்பதாக இருந்தால், அதற்கு மேலும் வலுவான சட்டத் திருத்தங்கள் தேவைப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபைக்கும் தெரியும். எனவே, அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, இரு நாடுகளிடமும் அப்போதிருந்த பகுதிகளின் எல்லையே இரு நாடுகளின் எல்லைக்கோடுகளாக ஏற்கப்பட்டது. ஆசாத் (சுதந்திர) காஷ்மீர் என்று பாகிஸ்தான் அழைக்கும் ஆக்கிரமிப்புப் பகுதி இப்போது பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக ஏற்கப்பட்டுவிட்டது, போர் நிறுத்தக் கோடே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடாக காஷ்மீரில் நடைமுறையில் கருதப்படுகிறது, எனவே ‘தாற்காலிகமான’ என்ற சொல்லுக்கே காஷ்மீரைப் பொருத்தவரை பொருள் இல்லை.
தனது தீர்ப்பை நியாயப்படுத்த உச்ச நீதிமன்றம் முன் வைத்துள்ள இன்னொரு காரணமும் பழுதானது. கடந்த எழுபதாண்டுகளில் காஷ்மீரின் சட்டங்களும் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக படிப்படியாகக் கொண்டுவரப்பட்டிருப்பது உண்மைதான்; காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ராணுவப் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் மட்டும்தான் மத்திய அரசு வசம் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் 1952இல் ஏற்பட்ட தில்லி ஒப்பந்தம்தான் எல்லாத் துறைகளிலும் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கச் செய்தது.
அந்த ஒப்பந்தம் எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்தது என்பதை அதன் கீழ் வந்த விஷயங்களைப் பார்த்தாலே புரியும்: மாநிலத்தின் நிர்வாகத் தலைவரை நியமிப்பது (ஆளுநர்), இந்திய மக்களுக்குள்ள அனைத்து அடிப்படை மற்றும் மக்கள் உரிமைகளை ஜம்மு-காஷ்மீரில் வாழ்பவர்களுக்கும் வழங்குவது, உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று ஏற்பது.
நிதி நிர்வாகமும் நாட்டின் பிற மாநிலங்களுடன் காஷ்மீரை இணைத்தது, இதனால் காஷ்மீரிகளுக்கு இந்தியச் சந்தையில் பங்கேற்க முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கு அடையாளமாக இந்திய தேசியக் கொடியும், நெருக்கடி கால அதிகாரங்களைக் காஷ்மீரிலும் பயன்படுத்தலாம் என்ற அதிகாரமும்கூட வழங்கப்பட்டது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தில்லி ஒப்பந்தம் வழியாகத் தொடங்கியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1963இல், அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீர்த்துப்போய்விட்டது, இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக சேர்ந்துவிடும் நடைமுறை செயல்படுகிறது என்று பிரதமர் நேரு சுட்டிக்காட்டினார். ஓராண்டுக்குப் பிறகு அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா பேசும்போது, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுசெல்வதற்கான சுரங்கப் பாதைதான் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு’ என்றார்.
நீண்ட காலம் சிறையிலிருந்த ஷேக் அப்துல்லாவை இந்திரா காந்தி விடுதலை செய்து மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பணியாற்ற அனுமதித்தபோது, அந்த மாநிலத்தை இந்தியாவுடன் மேலும் இணைக்கும் வகையில் 23 அரசமைப்புச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன, மத்திய அரசின் 262 சட்டங்கள் காஷ்மீரிலும் அமல் செய்யப்பட்டன.
கடைசி தூணின் சரிவு
உச்ச நீதிமன்றம் இதில் கவனிக்கத் தவறியது எதையென்றால், இவை அனைத்தும் அப்போது ஆட்சியிலிருந்த காஷ்மீர் மாநில அரசுகளின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்பட்டன. தில்லி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் 75 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையைக் கூட்டி அவற்றின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கையெழுத்திட்டார் ஷேக் அப்துல்லா.
அடுத்த பல பத்தாண்டுகளில் மேலும் மேலும் அனைத்திந்திய சட்டங்கள் பல காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் அல்லது அதன் வேண்டுகோளின்படியே விரிவுபடுத்தப்பட்டன. இந்திரா காந்தியின் தனித்தூதராக அப்போது செயல்பட்ட ஜி.பார்த்தசாரதியிடம் ஷேக் அப்துல்லா நடத்திய பேச்சுகளைப் பார்க்கும்போது, இந்திய அரசின் சட்டங்களிலோ நடைமுறைகளிலோ எந்த மாற்றத்தையும் அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்த நடைமுறைகள் அனைத்தும் - மோடி அரசு 2019இல் கையாண்ட, கையை முறுக்குவதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணான, ஜனநாயகப்பூர்வமான செயல்களாகும். கருத்தொற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் அரசுகள் கொண்டு வந்த மாற்றங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதும் எளிதே; மோடி அரசு எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு வாராவாரம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்புகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள், முன்கூட்டி எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள், வீட்டுக் காவல் சிறைகள், பொதுப் போக்குவரத்துக்கு தடை போன்றவை வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மக்கள் பொதுப் போக்குவரத்து இல்லாமல் பல கிலோ மீட்டர்களுக்கு நடந்தே செல்ல நேர்ந்தது.
காஷ்மீரிகளை அவமதிக்கும் இத்தகைய அப்பட்டமான செயல்களையெல்லாம் உச்ச நீதிமன்றம் பார்க்கத் தவறிவிட்டது. “தங்கள் நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் என்று சந்தேகப்படுவோரை, கூலியாள்களை வைத்துக் கொன்றுள்ளது இந்திய அரசு” என்று கனடா, அமெரிக்கா நாட்டு அரசுகள் மோடி அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தரும் 370வது சட்டப் பிரிவு தொடர்பாக இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது; இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களில் கடைசியாக இருந்த – ஒரு காலத்தில் மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட, பொறாமைப்பட்ட கடைசி தூணும் சரிந்துவிட்டது!
தொடர்புடைய கட்டுரைகள்
காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி
370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு
இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
தமிழில்: வ.ரங்காசாரி
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.