கட்டுரை, அடையாள அரசியல் 15 நிமிட வாசிப்பு

துரத்தப்பட்டார்களா பிராமணர்கள்?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
18 Jan 2022, 5:00 am
19

மூக நீதி இயக்கத்தின் மூலமாக இணையற்றதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப்படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது!

அமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது என்ன?’ என்ற தலைப்பில் துமே எழுதிய கட்டுரையே இப்படி ஒரு கட்டுரையை என்னை எழுதத் தூண்டியது. மிக மேலோட்டமானதாகவும், சிக்கலான பிரச்சினைகள் குறித்த தவறான புரிதலோடு இருந்த அந்தக் கட்டுரைக்கு மட்டும் அல்லாது, இப்படி ஒரு பிரச்சாரத்தைத் திட்டமிட்டு மேற்கொண்டுவருவோருக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே இதை எழுதுகிறேன்.

 கமலா ஹாரிஸும் துமேவும்

கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் பிறந்த பிராமணர்கள் சமூகம் தொடர்பில் அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் துமே. இந்தக் கருத்தின் உள்கூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் ‘Cautionary Tale of Excess’ என்பார்கள், அதாவது அதைப் படிப்பவர்களுக்கு ஓர் அதிகப்படியான அபாய எச்சரிக்கையை உண்டாக்கும். அதற்கு மாறாக, விரிவான தமிழ் அரசியல் வரலாற்றைப் படித்தால், அது பயனுள்ள மற்றும் பின்பற்றுவதற்கான படிப்பினைகளை வழங்கும்.

ஒரு விவாதத்துக்கான தொடக்கப் புள்ளிக்கு ஏதுவாக, நான் புரிந்துகொண்ட அளவில் துமேவின் வாதங்களையும் முடிவுகளையும் இங்கே முன்வைக்கிறேன்:

  • தமிழ்ப் பிராமண சமூகம் தங்கள் சொந்த மாநிலத்தில் நியாயமற்ற விதத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் துமே.
  • இந்த விளிம்புநிலையாக்கலுக்கு கமலா ஹாரிஸுடைய தாய் சியாமளா கோபாலன் (புலம்பெயர்வு 1958) போன்ற தமிழ்ப் பிராமணர்களின் புலம்பெயர்வு சான்றாகிறது; மேலும், முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி (புலம்பெயர்வு 1978), ஆல்பபெட் நடப்புத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை (புலம்பெயர்வு 1993) மற்றும் துமேவால் பெயர் குறிப்பிடப்படாத பலர், நோபல் பரிசு பெற்ற இருவர் உட்பட பலரின் எடுத்துக்காட்டுகள் துமேவின் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • குறிப்பிடத்தக்க சாதனை படைத்த, பெயர் குறிப்பிடப்பட்ட மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தமிழ்ப் பிராமணர்களின் புலம்பெயர்வு... அவர்களின் பூர்விகமான தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் குறிப்பிடத்தக்க இழப்பு என்கிறார் துமே.

  • இந்த விளிம்புநிலையாக்கலின் விளைவான புலம்பெயர்வுக்குக் காரணங்கள்: அ) சோஷலிஸம் (இந்தியா முழுவதும் -1947-ல் சுதந்திரத்துக்கு பின்), ஆ) 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அரசியலின் சின்னமாக விளங்கிய அடையாள அரசியல்; அதாவது திராவிட அரசியல் என்கிறார் துமே.

  • கடைசியில் துமே இத்தகு கொள்கை முடிவுகளுக்குச் செல்கிறார்: சோஷலிஸ கோட்பாடும் அடையாள அரசியலும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் கேடு – இதற்கு தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதே சான்று!

இதற்கெல்லாம் எந்தப் புள்ளிவிவரத்தையும் துமே காட்டவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நானே சாட்சியம் துமே 

துமேவின் கட்டுரையில் சில தகவல் பிழைகள் உள்ளன. தரவுகள் அடிப்படையிலான பிழைகளை விட்டுவிட்டு அவருடைய வாதத்திலும் அனுமானத்திலும் உள்ள குறைபாடுகளின் மீதும், அவரது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் உள்முரண்பாடுகளின் மீதும் கவனம் செலுத்த விழைகிறேன்.

ஓர் அடிப்படையும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என்பதற்காக நான் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறேன் – நான் 1916-ல் ஓர் அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் நான்வது தலைமுறை உறுப்பினர், மற்றும் மூன்றாவது தலைமுறையாக மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இந்த இயக்கத்தின் கொள்கைகளைத் தற்போது பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் நான். (இட ஒதுக்கீடுகள் முதலில் 1920-களில் சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இரட்டையாட்சி முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் (இந்தியர்களால்) மாண்டேக்-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களின் விளைவாக உருவாக்கப்பட்டது. ஆக, துமே சுட்டும் ‘சமூக அநீதி’யோடு நெருக்கமான பிணைப்பை நான் கொண்டிருக்கிறேன்.)

பல நூற்றாண்டுகளாக நிலவுடைமையாளர்களாக இருந்த, பிராமணரல்லாத ஒரு மேல் சாதி குடும்பத்தில் நான் பிறந்தேன். தமிழ்ப் பிராமணர்களுக்கு இருக்கும் சாதி அடிப்படையிலான அதே இட ஒதுக்கீடுதான் எனக்கும். நான் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் (1987 முதல் 2007 வரை) வாழ்ந்தேன், பட்டபடிப்புக்காக முதன்முதலில் சென்று, பின்னர் ஆலோசகராகவும் முதலீட்டு வங்கியிலும் தொழில்வாய்ப்பைப் பெற்றேன். சட்டமன்றத் தேர்தலின்போது நான் தாக்கல்செய்தவை உட்பட கூடுதல் விவரங்கள் மக்கள் பார்வைக்குப் பொதுவெளியில் உள்ளன.

இந்த அடிப்படையில், மேற்கண்ட துமேவின் அடிப்படையற்ற வாதங்களை ஒவ்வொன்றாக நான் கருத்தில் கொள்கிறேன், நியாயமற்ற விளிம்புநிலையாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு அமெரிக்காவுக்குக் புலம்பெயர்ந்ததால் கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன், இந்திரா நூயி மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோர் தமிழ்நாட்டுக்கும் (இந்தியாவுக்கும்) பெரும் இழப்பு எனும் வாதத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.

வாய்ப்புகளே தமிழ்ப் பிராமணர்களை நகர்த்தின

பிராமணர்கள் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்ததற்காகக் கூறப்படும் ‘துரத்தல் காரணம்’ அற்பமானதாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு உலகெங்கிலுமிருந்து புலம்பெயர்வு நிகழ்கிறது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் நிலவும் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், இது பெரும்பான்மையாக ஒடுக்குமுறையின் காரணமாக அல்ல, வாய்ப்புகளின் அடிப்படையிலான புலம்பெயர்வே என்பதுதான்.

அமெரிக்காவின் குடிவரவு சேர்க்கைக்கான முன்னுரிமைகளெல்லாம் பெருமளவில் அதிக திறன்-பங்களிப்பு-மதிப்பு கொண்டவர்களுக்கு சாதகமான வகையில் இருப்பதால் இந்தப் புலம்பெயர்வு சாத்தியமாகிறது. ஆனால், இந்தப் பொதுச் சட்டகத்துக்கு அப்பால், துபேவால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பேருமே பொதுவான ஒன்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பட்டதாரி மாணவர்களாக அமெரிக்காவில் நுழைந்தனர் - நானும் அவர்களைப் போல மாணவனாகத்தான் அமெரிக்கா சென்றேன்.

பல ஆண்டுகளாக நீடிக்கும் உண்மை என்னவென்றால், இன்று அமெரிக்காவில் உலகிலேயே சிறந்த பட்டதாரிக் கல்வி முறை உள்ளது (எண்ணிக்கை, தரத்தின் அடிப்படையில்). எனவே, இது உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களை அதிக அளவில் தன்வசம் ஈர்க்கிறது.

குறைந்தது 19-ம் நூற்றாண்டிலிருந்து சிறந்த சர்வதேசக் கல்வியை நோக்கிச் செல்வதற்குத் தமிழ்நாட்டின் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நீதிக் கட்சியின் தலைவர்கள் பலர், பெரும்பாலும் பிராமணரல்லாத மேல்தட்டு வர்க்கத்தினர், அப்போதைய சிறந்த உயர் கல்வியிடமாக கருதப்பட்ட ஆக்ஸ்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் (ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும்) கல்வி கற்றனர். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான என் தாத்தா 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லண்டனில் உள்ள தி லேஸ் பள்ளி, இயேசு கல்லூரி (ஆக்ஸ்போர்டு) மற்றும் லண்டன் இன்னர் டெம்பிள் ஆகியவற்றில் கல்வி கற்கும் வசதியைப் பெற்றிருந்தார்.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தமிழ்ப் பிராமணர்களின் வசதி வாய்ப்புகள்

சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் பெரும் முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியக் கல்விச் சூழல் என்பது அமெரிக்கக் கல்வி அமைப்புடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை. தேவையுள்ள அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு இந்தியக் கல்வி அமைப்பு இல்லை. இதன் விளைவாக மிகச் சிறந்த திறமைசாலிகள் மட்டுமே அமெரிக்காவுக்குப் பட்டப் படிப்பு படிப்பதற்குச் செல்ல முடிந்தது. எனவே, சியாமளா கோபாலன், இந்திரா நூயி, சுந்தர் பிச்சை மற்றும் பல தமிழ்ப் பிராமணர்களால் இத்தகைய விசாலமான லட்சியத்தை நோக்கிச் செல்ல முடிந்தது; பெரும்பான்மையினரால் அப்படிச் செல்ல முடியவில்லை, என்பதே தமிழ்ப் பிராமணர்கள் நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்ற தவறான கோட்பாட்டைப் பொய்யாக்குகிறது.

மேலும் இந்தக் கண்ணோட்டம் தவறானது என்பது இந்த தமிழ்ப் பிராமணர்கள் 3 பேரும் அமெரிக்காவுக்கு 35 வருட காலத்தில் - 3 தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்ததன் மூலம் தெரிகிறது. துமே கூறுவதுபோல், இட ஒதுக்கீடு (இது தொடங்கியது 1920-களில்), மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய (1947) சோஷலிஸத்தினால் ஓரங்கட்டப்பட்டதன் விளைவாக இருந்திருந்தால், நிச்சயமாக அது தமிழ்ப் பிராமணர்கள் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கான  ஆரம்பப் புள்ளியான உயர்தரப் பள்ளிக் கல்வியும் மிகச் சிறப்பான இளங்கலைப் படிப்பும் கிடைக்காமல் செய்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

மேலும், அமெரிக்காவில் அதிக அளவு தமிழ்ப் பிராமணர்கள் இருக்கிறார்கள் என்ற அவர் கூற்றை (இது ஆதாரமற்றது என்றாலும் எனது தனிப்பட்ட அனுபவத்தில் உண்மை) நாம் எடுத்துக்கொண்டால், இவ்வளவு சிறிய சமூகத்திலிருந்து இவ்வளவு அதிகமானோரால் அமெரிக்காவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது என்பதே துமேயின் கூற்றை மேலும் பலவீனமாக்குகிறது.

தமிழ்நாட்டுக்கு லாபமே, இழப்பு அல்ல

மற்றொரு கருத்தைப் பொறுத்தவரை, மேலே குறிப்பிடப்பட்ட மூவரும் (பெயர் குறிப்பிடப்படாத மற்றவர்களும்) உண்மையில் தமிழ்நாட்டுக்கு இழப்பா? அப்படியானால், அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் தற்போது அடைந்ததற்கு சமமான உயர் நிலையை இங்கே அடைந்திருப்பார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டும். அதேபோல், அவர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தால் அவர்களுக்குத் தமிழர்களிடையே இதே அளவிலான மதிப்பு கிடைத்திருக்காது / கிடைக்காது என்பதும் உண்மை.

அவர்கள் ஒதுக்கப்பட்டிருப்பார்களோ இல்லையோ… இங்கேயே தங்கியிருந்தால் அவர்களின் தற்போதைய அந்தஸ்துக்கு அருகில் எதையும் சாதித்திருக்க முடியாது. ஏனெனில் இங்கே கிடைக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்பில் ஒரு சிறு பகுதிதான். பெப்சிகோ, ஆல்பபெட் அளவிலான உலகளாவிய தொழில்கள் இங்கே இல்லை.

நாம் இருக்கும் இடம் கொண்டிருக்கும் எல்லைகள் சார்ந்து முன்வைக்க தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒரு உதாரணம் உள்ளது. என் தந்தையின் அகால மறைவால், நான் இந்தியா திரும்பினேன்; என்னுடைய 42 வயதில் வங்கியிலிருந்து ‘பணி ஓய்வு’ பெற்றேன். சில வேறுபட்ட பொறுப்புகளுக்காக சென்னையில் இருந்தேன்.

இருப்பினும், எனக்கு ஒரு நிர்வாக இயக்குநராகவும், 70 நாடுகளில் இயங்கும் உலகளாவிய வங்கியில் சில நிதிச் சந்தை தயாரிப்புகளின் பிரிவின் உலகளாவிய தலைவராகவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பிடத்தக்க அளவு சர்வதேசப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், சென்னையிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கோரினேன்.

ஒரே மகனாக இருப்பதால் கணவரை இழந்த என் தாயை விட்டுப் பிரிந்து வாழத் தயங்கினேன். எனது தாயாரும் வெளிநாட்டில் தங்குவதை விரும்பவில்லை. ஆனால், வங்கியின் தலைமை எனது சூழ்நிலைகளுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வந்த வங்கி விதிமுறைகள்படி நான் நேரடி ஒழுங்குமுறை மேற்பார்வையில் இருக்க வேண்டியிருந்தது, நான் ஒரு வளர்ந்த ஓஇசிடி நாட்டுக்கு (OECD) இடம்பெயர்ந்தால் மட்டுமே அந்தப் பணியை ஏற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே துமே முன்வைக்கும் கருத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். மேலும், கமலா ஹாரிஸ், இந்திரா நூயி, சுந்தர் பிச்சை, மற்ற குறிப்பிடப்படாத உயர் சாதியினர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த அனைவரும் - இத்தகைய பெரிய உயரத்தை அடைந்திருப்பதற்குக் காரணம் எதுவென்றால் உலகின் மிகப் பெரியதும், பாரபட்சமற்றதும், திறமையை மட்டுமே மதிப்பிடுவதுமான சந்தைக்கு அவர்கள் புலம்பெயர்ந்துதான்.

அவ்வாறு செய்ததால், அவர்கள் தங்கள் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெரும் சேவையாற்றுவதற்கான நல்ல நிலையில் உள்ளனர். ஆகையால், அத்தகைய திறமைகளை நாம் இழக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் திறன் கொண்டவர்களையும், அதனால் நமக்குப் பெரும் ஊக்கம் அளிப்பவர்களையும் நாம் பெற்றுள்ளோம்.

ஆகவே, துமேவின் 2 கருத்துகளை மட்டும் இனி புள்ளிவிவரங்களைக் கொண்டு பொய்யென்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது - தமிழ்ப் பிராமணர்கள் தற்போது ஒடுக்கப்பட்டுள்ளனர், மற்றும் சோஷலிஸமும் அடையாள அரசியலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கியுள்ளன என்ற இரண்டு கருத்துகள்தான் அவை.

பிராமணர்கள் ஒடுக்கப்பட்டவர்களா?

துமேவின் முதல் கூற்று உண்மையல்ல என்பதற்கு சான்று: 3%-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட (இதைத் துமேவே ஒப்புக்கொள்கிறார்) தமிழ்ப் பிராமணர்கள் இந்திய குடிமைப் பணி, சட்டத் தொழில் (நீதித் துறை உட்பட), பட்டய கணக்கியல் மற்றும் பல பிற உயர்நிலை தொழில்முறை துறைகளில் பெருமளவில் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (எடுத்துக்காட்டு - https://www.businessinsider.in/india/news/social-justice-data-shows-indiangovernment-doesnt-walk-the-talk-on-reservations/articleshow/74223976.cms). மற்றொரு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையானோர் பிராமணர்களும் (அவர்கள் மட்டும் 40%) பிற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களும்தான் என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

மேலும், இன்று இந்தியாவில் மிகப் பெரியதும், மிகவும் மதிப்பிற்குரியதுமான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான (நமது மாநிலத்தின் முதல் 2 அல்லது 3 இடங்களுக்கும் இருப்பதுமான) டிவிஎஸ் நிறுவனம் டி.வி. சுந்தரம் ஐயங்காரால் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, இன்னும் தனியாருக்குச் சொந்தமான குழுவாக அவர்களது பிராமண சந்ததியினரால் நிர்வகிக்கப்படுகிறது.

சரியாகச் சொல்வதானால், இதுபோன்ற சமமற்ற விளைவுகள் பெரும்பாலான உயர் சாதியினருக்குப் பொருந்தும். ஒரு நூற்றாண்டு முழுவதும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இருந்தபோதிலும், அவை போதுமானதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக சாதி அடிப்படையில் முற்பட்ட சாதியினர் அனுபவித்த பலன்களை (இதில் பிராமணர்கள் மட்டுமே கல்விக் கற்கும் உரிமையும் அடங்கும்) முழுவதும் ஒழித்துக்கட்ட தற்போதைய இடஒதுக்கீடு போதவில்லை என்பது தெரிகிறது.

தமிழகத்தின் மேன்மையான குறியீடுகள்

துமேவின் ஈவிரக்கமற்ற, முற்றிலும் தவறான கருத்து என்னவென்றால் அடையாள அரசியல் காரணமாகத் தமிழகத்தில் மோசமான சமூக-பொருளாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன என்பதுதான். இதைவிட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது.

துமே அடையாள அரசியல் என்று சொல்வது நூற்றாண்டு பழமையானதும், சமூக நீதியைக் குறிக்கோளாகக் கொண்டதுமான நமது திராவிட இயக்க அரசியல் ஆகும். 1916-ல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1920-ல் மெட்ராஸ் பிரசிடென்சி சட்டப்பேரவைக்கான தேர்தலின்போது அதன் பத்திரிகையின் பெயரான ‘நீதி’(ஜஸ்டிஸ்) என்பதிலிருந்து நீதிக் கட்சி என்று அரசியல் கட்சியாகப் பெயரிடப்பட்டது ஆகும். அடுத்தடுத்த நீதிக் கட்சி அரசாங்கங்கள் சட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக வழக்கங்களை ஆழமாக மாற்றியது- 1920 – 1926-ல் பெண்கள் சம உரிமைகளைப் பெற்று மெட்ராஸ் மாகாணத்தில் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமையளித்தது, அனைவருக்கும் கல்வி (சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வி), ஏழைகளுக்கு ஊட்டச்சத்து ( மெட்ராஸ் கார்ப்பரேஷனில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி உணவு), மற்றும் உயர்நிலை வேலைகளுக்கான சமத்துவம் (ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகையின் விகிதத்தின் அடிப்படையில் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு) போன்ற மாற்றங்களைச் செய்தது.

1920 முதல் இந்த நூறு ஆண்டுகளில், சுமார் 30 ஆண்டுகளைத் தவிர திராவிட இயக்கக் கோட்பாடுகளை ஆதரிக்கும் கட்சிகள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 30 ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிற மாகாணங்களிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைவிட திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக இருந்தன (எ.கா. கோயில் நுழைவுக்கான உரிமைகளை உறுதி செய்வது, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை, மாநிலம் முழுவதும் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல்). (ஆதாரம்: ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், தேசிய சுகாதார அறிக்கைகள் 2019, 2020)

திராவிட இயக்கக் கொள்கைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றியதன் காரணமாக ஒரு தனித்துவமான நிலைக்குத் தமிழ்நாடு (இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்) வந்துள்ளது- இது திராவிட (தமிழ்நாடு) மாதிரி என்று அழைக்கப்படுகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்கள் - தனிப்பட்ட விதத்திலும், மற்ற மாநிலங்களுடனும் இந்தியா முழுமைக்கும் ஒப்பிடும்போதும் - தமிழகத்தின் தனித்துவமான மற்றும் சமத்துவமான முன்னேற்றத்துக்கான சான்றுகளாக உள்ளன.

ஒப்பீட்டளவிலான இந்த முன்னேற்றத்தின் ஆகச் சிறந்த ஆதாரமாக, சென்னையில் 2018-ல் திமுக சார்பாக இந்தியாவின் 15-வது நிதி ஆணையத்தின் விசாரணையின்போது நான் அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லலாம் (https://ptrmadurai.in/15-terms-of-reference).

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைத்தாலும் அது மையப்படுத்தப்பட்டதாகவும் கூட்டாட்சி அல்லாத முறையாகவுமே இயங்குகிறது, அதாவது சீனாவைவிடவும் மையப்படுத்தப்பட்டதாக. இதன்மூலம் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு நேரடி வரிகளில் பெரும்பாலானவற்றை வசூலிக்கிறது, பின்னர், அவற்றை மாநிலங்களுக்கு வழங்குமானால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையங்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி ஒதுக்குகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது அதன் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமாக உள்ளது (இந்திய மக்கள்தொகையில் 6% என்ற விகிதத்தைவிட அதிகமாக). கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பங்களிப்பு பெரும்பாலும் அதிகரித்துவந்தும், மத்திய வரி வருவாய்ப் பங்கிலிருந்து இருந்து நமக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு 7%-க்கும் குறைந்து 4% -ஆக உள்ளது. எளிமையான சொல்வதென்றால், நாம் தொடர்ந்து ஒப்பீட்டளவில் பணக்கார மாநிலமாக வளர்ந்துவருகிறோம், மேலும் பெரிய மொத்த வரிக் கொடையாளர்களாகிவருகிறோம்.

மேலும் ஒரு படி மேலே சென்று, சில குறியீட்டெண்களில், தமிழகம் OECD நாடுகள் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் கூறுவேன்.

உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஸ்காண்டிநேவிய நாடுகள்,  அமெரிக்காவின் ‘சிவப்பு மாநிலங்க’ளுடன் ஒப்பிடும்போது கலிஃபோர்னியா, நியூயார்க் மாநிலங்கள் போன்றவற்றில் சிறந்த மற்றும் சமத்துவமான முன்னேற்றத்துக்கு வழிவகுத்த அதே முற்போக்கு ஜனநாயகக் கோட்பாடுகளால், மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கும் சிறப்பான பயன்கள் கிடைத்துள்ளன.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான தத்துவம் அல்லது ஆட்சி முறை என்று ஒன்று இல்லாத நிலையில், தற்போதுள்ள அனைத்து மாதிரிகளும் ஏதோ ஒரு வகையான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. திராவிட மாதிரியை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவன் நான் என்றாலும், அந்த மாதிரியில் பல பரிமாணங்களில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் துமே சுட்டிக்காட்டும் குறைபாடுகளுடன் தரவுகள் பொருந்திப்போகவில்லை. அவரது அனுமானங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஆயிரம் ஆண்டுகளாக சாதிக் கட்டமைப்புகளில் பொதிந்துள்ள பாகுபாட்டைக் கொண்ட ஒரு மண்ணில் ஒரு நூற்றாண்டுக்குள் அதிவேகமான திராவிட மாதிரியின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தன்னிகரற்ற விளைவுகளை அடைந்துள்ளது என்பதைத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

இது ஒன்றும் சாதாரண சாதனை இல்லை. எனவே, இதுகுறித்து துமே மட்டும் அல்லாது இப்படிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், முழுமையாகக் கற்றுணர்ந்து, முறையான கொள்கைப் பாடங்களைப் புரிந்துகொண்டு பேசுவதே சிறந்தது!

பின்குறிப்பு: முன்னதாக ஆங்கிலத்தில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டு, பின்னர் ‘நியூஸ் மினிட்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் செழுமைப்படுத்தப்பட்ட தமிழ் வடிவம் இது. தமிழுக்கேற்ப கட்டுரையைக் கட்டுரையாளர் மேம்படுத்தியிருக்கிறார். இக்கட்டுரை தொடர்பான இரு தரப்புக் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. தரவுகளோடு எழுதப்படும் கட்டுரைகள் வெளியிடப்படும். ‘விவாதம்’ ஆக இது தொடரும்.
- ஆசிரியர்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசியலர், பொருளியலாளர், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்.

தமிழில்: தென்யா சுப்

26

15

1


1


பின்னூட்டம் (19)

Login / Create an account to add a comment / reply.

Chola Nagarajan    7 months ago

நல்ல கட்டுரை. தமிழகம் பிராமண சமூகத்தை அரசியல்ரீதியாக எதிர்கொண்ட வரலாற்றை விருப்பு வெறுப்பற்று மிகச் சரியாகத் தொகுக்கவேண்டும். சமூகநீதியின் நியாயத்தை அதே சமூகத்தில் பிறந்த என்னைப்போன்றவர்கள் எண்ணிக்கையில் சற்று குறைவாகவும் நன்கு உணர்ந்திருக்கிறோம். அண்மையில் நான் எழுதி டிஸ்கவரி வெளியீடான "பெரியார் பிராமணர்களின் எதிரியா?" எனும் சிறு நூலில் தகுந்த ஆதாரங்களுடன் பிராமணர்களின் தவறான புரிதல்களை நான் அம்பலப்படுத்தியுள்ளேன் என்பதனையும் பெருமையோடு கூறிக்கொள்கிறேன். முற்போக்கான நவீன மாற்றங்களை விரும்புவோர்க்கு தமிழகத்தின் திராவிட இயக்க வரலாறு நம்பிக்கையளிக்கும் வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.

Reply 1 0

Chola Nagarajan    7 months ago

இந்தப் பின்னூட்டத்தில் 'எண்ணிக்கையில் சற்று குறைவாக இருந்தாலும்' - என்று வாசிக்கவும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

PTR P.Thiagarajan is known for expressing his views without mincing words. This article is yet another example of his greatness. In 1960s and 70s we had about 30 Brahmin families in the Agraharam of our village in Thanjavur district. Today, there are only three families who are working as priests in temples. What happened to the rest? At that time, Brahmins were the only educated people and on finding white-collar jobs in government departments, bank, companies etc,. (early period of India's independence) most of them moved to cities and towns. Brahmins made full use of the emerging opportunities in independent India. In the same way, when opportunities came in foreign countries, they were shrewd enough and the first one to move out of India in search of green pastures. Blaming it on to socialism and Dravidian rule is the outcome of their Sanadhana mentality.

Reply 11 0

Login / Create an account to add a comment / reply.

Narayanamoorthy. C   2 years ago

விரிவானது அனைவருக்கும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் அளவுக்கும் இருக்கிறது - இதில் சிறந்த பாடம் வாய்ப்பை பெற தேடல் மட்டும் இருந்தால் போதாது அதற்கேற்ற சூழ்நிலையும் வேண்டும் அதை ஏற்படுத்தி கொடுப்பதில் ஐடா ஒதுக்கீட்டுக்கு முக்கிய பங்குள்ளது ஆசிரியருக்கு எனது வழுக்களும் பாராட்டுகளும்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

MaalvadiwOn   3 years ago

மாநிலத்தின் அனைத்து பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்களின் மேம்பட்ட போதிக்கும் திறன் கண்டறியப்பட்டு (Expert Team) அவர்களின் ஆற்றல் மாநிலப் பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடையும் வண்ணம் அவர்களை சுழற்சி முறையில் பாடம் நடத்திட செயல் திட்டம் வகுக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தரம் இன்னும் உயர்த்த்டப்பட வேண்டும். பயிற்சி எனும் பேரில் பணம் பறிக்கும் கொள்ளை குறையும். உலகின் எல்லா நாடுகளிலும் அனைவரிலும் திறணாளர்களாக நம் தமிழர்கள் உயர் பொறுப்பில் இன்னும் அமர்வார்கள்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Kadiravan R   3 years ago

படித்த பிராமணர்கள் துரத்தப்படவில்லை , சுயநலத்தின் காரணமாகவே புலம் பெயர்ந்தனர் , சுதந்திர இந்தியாவின் வாய்ப்புகளை முழுமையாக அனுபவித்துவிட்டு குறிப்பாக IIT மற்றும் புகழ் பெற்ற கல்வி நிலையங்களில் படித்துவிட்டு தாய்நாட்டுக்கு சேவைசெய்யமல் புலம் பெயர்ந்தது சுயநலத்தின் காரணமே குறிப்பாக அந்த காலகட்டங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே இருந்தது என்னதான் அரசின் சட்டங்கள் இருந்தாலும் அவை வேண்டியோர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே என் கருத்து.குறிப்பாக இந்தியாவின் சந்தை மிகப்பெரியது, எனவே இந்தியாவை சார்ந்தவர்கள் அமெரிக்க நிறுவங்களின் தலைமை பொறுப்பில் வைக்கப்பட்டனர் என்பதே என் கருத்து

Reply 23 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

ada innaikkum tamilnattil mattum allla indiya muzukka aatchi athikara peedattil melum taniyar turaikalilum koolochik kondu iruppavarkal yar....? inta piramina samookam indiyavai surandi valum ottunni enpathil santekemma illai.... ottunnikal...

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

S Baskaran   3 years ago

ஜி ன் ராமசந்திரன் என்ற மரபுஅனுவின் வரைவினை கண்டெடுத்த விஞ்ஞானி அன்றைய மதராஸ் பல்கலைக்கழகத்தை விட்டு பெங்களூருக்கு சென்றதன் காரணம் பாப்பான் வெறுப்பே. மேலும் அக்கரை பச்சையை நோக்கி செல்பவர்கள் காரண காரியத்தை திராவிட தலைகளுக்கு சொல்லியா செல்வார்கள்?

Reply 4 10

Login / Create an account to add a comment / reply.

Prinky   3 years ago

தெளிவான விளக்கங்களுடன் தரப்பட்ட அருமையான பதில் கட்டுரை. இங்கிருந்து வாய்ப்புகளுக்காகவே புலம்பெயர்ந்தனர் என்பதை, துரத்தப்பட்டு விட்டதாக புரட்டு எழுதி விட்டற்கு சரியான பதிலடி. இங்கிருந்து போனவர்களெல்லாம் நன்றாக படித்து பட்டத்துடன் சென்றார்கள். கூலி வேலை செய்வதற்கு செல்லவில்லை. இப்படியாக மாற்று மொழிகளில் வரும் கட்டுரைகளுக்கு அந்தந்த மொழியிலேயே பதிலுரை எழுதும் பழக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பரப்ப வேண்டும்.

Reply 28 0

Login / Create an account to add a comment / reply.

Anbarasu Velmurugan   3 years ago

அருமையான எதிர்வினை. தமிழ் பிராமணர்களுக்கு யூதர்களுக்கு நிகரான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறது துமே வின் கட்டுரை. ஹிட்லரின் நாஸி படை யூதர்களை விரட்டியதால் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றைக்கு அங்குள்ள நிறுவனங்களின் மிக முக்கிய பொறுப்புகள் யூதர்கள் வசம் உள்ளன. நிச்சயம் யாரோ ஒரு யூதர் எழுதிய கட்டுரையின் வெட்டி ஒட்டியதன் வடிவம்தான் இது. அடிப்படை ஆதாரமில்லாமல் துரத்தப்பட்டார்கள் என்று பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் இவர்களுக்கெல்லாம் பதிலளித்து உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு இவர்கள் நீலிக்கண்ணீர் வடித்தால் உலகின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பும் என்ற எண்ணம். சந்தேகமே வேண்டாம். உலகின் பார்வை உங்கள் பக்கம் திரும்புகிறது என்பதைப் பொறுக்க முடியாத எரிச்சல்தான் அவர்களை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது.

Reply 32 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

உபி பிராமணர்களின் சராசரி வருமானத்தைவிட சராசரி தமிழ்நாட்டு பிராமணர்களின் வருமானம் அதிகமா அல்லது குறைவா? இதற்கு மட்டும் தம் பதில் சொன்னால் போதும்.

Reply 11 0

Ganeshram Palanisamy   3 years ago

தம் அல்ல. துமே .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

திரு தியாகராஜன் கட்டுரை நல்லதொரு விவாதத் தொடக்கத்தைச் செய்திருக்கிறது. எதிர்வினையாற்றுபவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் கட்டுரையாளர் பின்பற்றிய நயத்தக்க நாகரீகத்தைப் பின்பற்ற வேண்டும். புகழ்வதும் புழுதிவாரித் தூற்றலும் தவிர்க்கப்பட வேண்டும். தரவுகள் அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளது. தான் சார்ந்த இயக்கத்திலும் சரி செய்யப்பட வேண்டிய போதாமைகள் உண்டு என்ற கட்டுரையாளரின் நேர்மை பெரிதும் பாராட்டத்தக்கது. மேல் நிலைக்கு வந்த சில குறிப்பிட்ட ஆளுமைகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்பது ஆய்வுக்குரியது. அமெரிக்காவில் உள்ள வாய்ப்புகள் இங்கே இல்லை என்பது போலவே இங்கே ஒவ்வொருவர் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளாவது கிடைக்கிறதா என்றால் ஆம் என்று சொல்ல இயலவில்லை. தலைமுறையாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தமது கல்வி மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்வியல் அனுபவம் சார்ந்தும் நன்கு எழுதியுள்ளார். அருஞ்சொல் பாராட்டிற்குரியது.

Reply 22 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

திரு தியாகராஜன் கட்டுரை நல்லதொரு விவாதத் தொடக்கத்தைச் செய்திருக்கிறது. எதிர்வினையாற்றுபவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் கட்டுரையாளர் பின்பற்றிய நயத்தக்க நாகரீகத்தைப் பின்பற்ற வேண்டும். புகழ்வதும் புழுதிவாரித் தூற்றலும் தவிர்க்கப்பட வேண்டும். தரவுகள் அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளது. தான் சார்ந்த இயக்கத்திலும் சரி செய்யப்பட வேண்டிய போதாமைகள் உண்டு என்ற கட்டுரையாளரின் நேர்மை பெரிதும் பாராட்டத்தக்கது. மேல் நிலைக்கு வந்த சில குறிப்பிட்ட ஆளுமைகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்பது ஆய்வுக்குரியது. அமெரிக்காவில் உள்ள வாய்ப்புகள் இங்கே இல்லை என்பது போலவே இங்கே ஒவ்வொருவர் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளாவது கிடைக்கிறதா என்றால் ஆம் என்று சொல்ல இயலவில்லை. தலைமுறையாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தமது கல்வி மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்வியல் அனுபவம் சார்ந்தும் நன்கு எழுதியுள்ளார். அருஞ்சொல் பாராட்டிற்குரியது.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   3 years ago

அதிக வேலைவாய்ப்பு மற்றும் சலுகைகளில் அமேரிக்கா நாடும் இந்தியர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் உயரந்து வருகிறது.இவர்களில் பெரும்பாலும் இந்தியாவின் முன்னனி கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள்(IIT,NIT) அல்லது வசதியுடைய குடும்பச்சூழலில் இருந்து மேலே செல்கிறவர்கள். இதனை சாதி ரீதியாகவும் நீங்கள் வகுத்தைப் போல வகுத்துப் பார்த்தல் கல்விமுறைக்கு முரணானது. நீங்கள் ஆற்றியது எதிர்வினை எனபதை புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் மில்லியனர்களை சொந்த நாட்டில் வர்த்தகம் மேற்கொள்ளவும் இங்கிருந்து புரப்பட கனவு காணுபவர்களுக்கு தக்க வாய்ப்பு வசதிகள் வழங்கவும் தனியார் மய கொள்கை ஒன்றை வகுத்தல் அவசியம். நிபுணர்களின் ஆலோசனையில் அமேரிக்கா,ஜப்பான், ஜெர்மனி மாதிரிகளை தமிழகத்தில் பரிசோதனை செய்து பார்போம்!. புதிய திமுக் அரசு long term economic goals உடன் செயல்புரிய வேண்டும்.

Reply 13 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   3 years ago

கூடவே, ஈழம்/ சிங்கை/ மலேசியா/ தென்னாப்பிரிக்கா போன்ற பிறநாடுகளிலிருந்து உலகளவில் உயரம் தொட்ட தமிழர்கள் அதிகம் கவனப்படுத்தப்பட்டால் இத்தகைய வெற்றிகள் ஏதோ ஒற்றைச் சாதியின் பிறப்புக் கூறுபாடு அல்ல என்பது விளங்கும்

Reply 15 1

Login / Create an account to add a comment / reply.

Natesh G   3 years ago

Under the garb of social justice the treatment and the fear psychosis instilled by the dravidian parties on the Brahmins especially in the 60s and 70s and the continued selective targetted humiliation practised till today is not different from the Nazism of Hitler on jews .Nobody can deny that more so PTR who has been a part of vicious and selective abuse on the community.

Reply 5 32

Prinky   3 years ago

Please find a medical shop near by. If you are unable to find, try in google. Go to medical shop by car. Dont forget to switch on the AC. After reaching shop, Greet the person in the shop. Smile at him/her. Say Hello.. Then nicely ask him/her "Jelucel". It comes in Rose colour bottle. Finish the whole bottle today itself. It looks like you have so much of "stomach Burning". Note 1 : Tablets are available. But u have to take 10 strips. Note 2 : Don't suggest poison back... That's very old joke of your's...

Reply 14 6

Login / Create an account to add a comment / reply.

V balasubramaniam   3 years ago

அருமையான ஆய்வுக்கட்டுரை பார்ப்பனிய புரட்டுகளுக்கு உரிய பதிவு தமிழ்ச்சமூகத்தில் பரப்புரை செய்யவேண்டும்

Reply 18 4

Login / Create an account to add a comment / reply.

பால்ய விவாகம்நீதிபதி கே சந்துருநான் அப்பா ஆகவில்லையேஅண்ணா பொங்கல் கட்டுரைமிகெய்ல் கோர்பசெவ் உஷார்!வருமான வரிவதந்திகளும் திவால்களும்குறைந்த பட்ச விலைகுற்றச்சாட்டுகள்சந்தேகத்துக்குரியதுதமிழர்கெவின்டர்ஸ் நிறுவனம்நில உடைமைஇந்துத்துவம்இல.சுபத்ராசோகட்டா குஸ்திஉலகத்தின் முன்னுள்ள பெரிய சவால்!மூத்த சகோதரிபிடிவாதத்தைத் துறத்தல்மறுஇலக்கு அவசியம்அரசுபர்வேஸ் முஷாரப்: அறிவாளியுமல்லபாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம்thulsi goudaமாதொருபாகன்தகுதித்தேர்வுமனு நீதிஸெரெங்கெட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!