கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு
மத மைய அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்
உத்தர பிரதேச அரசியல் மீண்டும் மீண்டும் இந்திய அரசியலுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு முக்கியமான பாடத்தைப் போதிப்பதாகவே தோன்றுகிறது. மீண்டும் அங்கே ‘மந்திர் - மஸ்ஜித் அரசியல்’ மேலோங்கும் நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் எது நோக்கிச் செல்லும் என்ற கேள்வியானது பாஜக எதிர்த் தரப்புகள் அனைத்திடமுமே எழுப்பியிருக்கிறது. அரசியல் கட்சிகள் எத்தகைய உத்திகளை முன்னெடுக்கும் என்பது தனிக் கதை. ஒரு சமூகமாக இந்திய முஸ்லிம்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது: இனியும் ‘பாஜக எதிர்ப்பு’ என்ற ஒற்றைச் செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்தல்களை அணுகக் கூடாது!
பாஜகவின் யூகத்துக்கு பலிகடா
உத்தர பிரதேச மொத்த வாக்காளர்களில் 20% பேர் முஸ்லிம்கள். இவர்களில் பெரும்பாலானோர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். அக்கட்சி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 34 பேர் இன்றைய சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜகவின் தோற்கடிக்கப்படுவதற்கு மாறாக மேலும் வலுப்பெற இந்தத் தேர்தல் வழிவகுத்தது.
மோசமான பாகுபாடுகளையும், பிளவு அரசியலையும் கையாண்டபோதிலும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் நிர்வாகரீதியாக சில நல்ல விஷயங்களும் பேசப்பட்டன. முக்கியமாக இதுவரை மின் வசதியைப் பார்த்திராத கிராமங்களுக்கு அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மின்சார இணைப்புகள், முறையான ரேஷன் விநியோகம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம், கடன் தள்ளுபடி, ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கைகள் இவையெல்லாம் முன்னிறுத்தப்பட்டன.
ஆயினும், யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் அலங்கோலத்தை நினைவூட்டும் அவலமாக கரோனா மரணங்கள் மக்களுடைய நினைவுகளில் நின்றன. இந்தத் தேர்தலில் வெல்வதைப் பெரும் சவாலாகவே பாஜக பார்த்தது. பாஜக ஜெயிப்பது சுலபம் இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர்களுக்கே வெளிப்பட்டது. அந்த நிலையில்தான் பலர் வெளியேறி மாற்றுக் கட்சிகளுக்கு சென்றனர்.
தன்னுடைய ஆட்சி நிர்வாகத்தை முன்னிறுத்தி தேர்தலை வெல்ல முடியாது என்று தெரிந்தபோது, யோகி ஆதித்யநாத் வழக்கமான பிளவு அரசியலை முன்னுக்குக் கொண்டுவந்தார். தேர்தலை ‘80% எதிர் 20% போர்’ என்று அவர் அறிவித்தார். அதாவது, மாநிலத்திலுள்ள 20% முஸ்லிம்களுக்கு எதிராக மிச்சமுள்ள 80% மக்களையும் ஒன்றிணைத்துப் பேசினார்.
இது எடுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் எடுபட்டது என்றால், பாஜக தேர்தல் மேடைகளில் பேசியதுபோல, முஸ்லிம்களின் ஓட்டு ஒன்றுபோல மதரீதியில் திரட்டப்பட்டது.
முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெற சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மூன்றுமே முயன்றன. முஸ்லிம்களுக்கு என்று விசேஷ செயல்திட்டம் எதையும் இந்தக் கட்சிகள் அறிவிக்காதபோதும், அடையாளரீதியிலான அணுகுமுறையைக் கையாண்டன. கூடவே அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் தேர்தலில் நின்றது. முஸ்லிம்கள் தங்களுடைய ஓட்டுகளை சமாஜ்வாதிக்கு அளிக்க முடிவெடுத்தனர். பல இடங்களில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்தச் சூழலை பாஜக முழுமையாகத் தனக்கானதாகப் பயன்படுத்திக்கொண்டது.
இரண்டு செய்திகள் இந்துக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டன: 1. எல்லாக் கட்சிகளும் முஸ்லிம்களுக்காக நிற்கின்றன; பாஜக மட்டுமே இந்துக்களுக்காக நிற்கிறது. 2. முஸ்லிம்கள் எப்போதும் ஒன்றுபோல சிந்தித்து மதரீதியாக ஓட்டு போடுகிறார்கள். இந்துக்களும் அப்படி ஓட்டு போடுங்கள்!
மத அணித் திரட்டல் தேவையா?
இந்திய முஸ்லிம்கள் நாம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். மதரீதியிலான அணித் திரட்டலுக்கு நம்முடைய அரசியல் வழி நாமும் காரணமாக இருக்கிறோம்!
இப்படி ‘மதரீதியான அணித் திரட்டலானது முஸ்லிம்கள் வெல்லக் கூடிய உத்திதானா?’ என்ற கேள்வியை அறிவுத் தளத்திலும், ‘அரசில் மதச்சார்பின்மையை வலியுறுத்துபவர்களே தம் அளவில் அரசியலில் மதரீதி அணித்திரட்டலில் ஈடுபட முடியும்?’ என்பதைத் தார்மிகத் தளத்திலும் இந்திய முஸ்லிம்கள் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
முஸ்லிம் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் உள்பட பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் இதைச் சங்கடமாகக் கருதலாம். உண்மை இதுதான். இது முஸ்லிம்களுக்கு ஒருபோதும் வெற்றியைத் தராத உத்தி மட்டும் இல்லை; பாஜகவுக்கு யானை பலத்தைத் தரும் உத்தியும் ஆகும்.
ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பதால் மட்டும் தாங்கள் விரும்பும் தேர்தல் முடிவைப் பெற்றுவிட முடியாது என்பதே உத்தர பிரதேசம் இன்று முஸ்லிம்களுக்கு சொல்லும் பாடம்.
முஸ்லிம்களுக்கான நேர்த்திக் கடனா மதச்சார்பின்மை?
இந்திய அரசியலின் மையத்துக்கு பாஜக வந்துவிட்ட 2014க்குப் பின் உருவாகி இருக்கும் மேலும் இரண்டு போக்குகளையும் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும். 1. பாஜகவை எதிர்த்துக் களத்தில் பிரதான இடத்தில் நிற்கும் கட்சியானது முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிப்பது அவர்களுடைய கட்டாய கடமை என்ற மனநிலைக்கு வந்தடைந்திருக்கின்றன. 2. பாஜகவை எதிர்கொள்ள மென்மை இந்துத்துவப் போக்கைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்ற மனநிலைக்கும் வந்திருக்கின்றன.
இந்த இரண்டு போக்குகளையும் கூட்டிக் கழித்தால், ஒரு விஷயம் நமக்குக் கிடைக்கும்: இந்தியாவில் மதச்ச்சார்பின்மையைக் கட்டிக் காப்பது முஸ்லிம்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட கடமை. இதன்படி பாஜகவை எதிர்த்து நிற்கும் கட்சியானது முஸ்லிம்களுக்கு ஒன்றுமேகூட செய்யாமலும் இருக்கலாம். ஆனால், தேர்தல் களத்தில் அவர்களுக்கு வாக்களிப்பது முஸ்லிம்களின் கடமை.
தலித் அரசியல் பேசும் கட்சிகள் தனித்து நிற்கும்போது அவை முன்வைக்கும் குரல்கள் பொதுத் தளத்தில் நிற்கும் பிரதான கட்சிகளுக்கு அழுத்தத்தைத் தருகிறது. உதாரணமாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக நிற்பது அவர்கள் அளவில் பலமாக நிற்க உதவுவதோடு, திமுக - அதிமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று ஏனைய கட்சிகளும் தலித்துகள் நலன் பேசும் நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. விடுதலைச் சிறுத்தைகள் நினைத்தால் திமுக பக்கமும் இருக்கலாம்; அதிமுக பக்கமும் செல்லலாம் என்கிற சுதந்திரம்தான் அக்கட்சிக்கான பேரச் சக்தியை வலுவாக்குகிறது. ஆனால், முஸ்லிம் கட்சிகளுக்கு அந்த சுதந்திரம் இன்றைக்கு இருக்கிறதா என்ற கேள்வியை ஒட்டுமொத்த சமூகமும் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
உத்தர பிரதேசத்தையே எடுத்துக்கொள்வோம்.
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி அங்கே போட்டியிட்டது ஓர் அழுத்தத்தை உருவாக்கும் உத்தியே ஆகும். ஆனால், உத்தர பிரதேச தேர்தலின் ஒட்டுமொத்த முடிவையும் (deciding vote) அக்கட்சியே மாற்றிவிட்டது எனும் கருத்து பரவலாக நிறுவப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் இப்படியான பேச்சு உருவாக்கப்படுகிறது. ஆனால், உண்மை என்ன?
உத்தர பிரதேசத்தில் ஓவைசியின் கட்சி 95 இடங்களில் போட்டியிட்டும் 4.5 லட்சம் வாக்குகளையே பெற்றது. அதாவது வெறும் 0.45% ஓட்டுகளையே அக்கட்சி பெற்றது. ஆனால், அதைக் காட்டிலும் பல மடங்கு ஓட்டுகளை காங்கிரஸும், பகுஜன் சமாஜும் பெற்றன. அப்படியென்றால் என்ன அர்த்தம்? மதச்சார்பின்மையைக் காக்கும் கடமை முஸ்லிம்களுக்கு மட்டுமே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறதா?
தேர்தல் ஜனநாயகமானது எல்லா ஆசாபாசங்களும் சங்கமிக்கும் இடம். மாறாக, இந்திய முஸ்லிம்கள் எல்லா அபிலாஷைகளையும் துறந்து, பாஜகவுக்கு எதிரான ஒரு கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்கு இன்று கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இதற்கு பாஜக மட்டுமே காரணம் இல்லை. அதன் எதிரணியில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.
பூசாரி வேலையும் வேண்டாம் பொங்கலும் வேண்டாம்
சுந்திர இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் எந்த ஒரு கட்சியானது முஸ்லிம்களை பிரதானப்படுத்தி சிந்தித்து, செயல்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது? அப்படி எந்தக் கட்சியேனும் பேச முடியுமா? அது தேவையும் இல்லை. எல்லா சமூகங்களையும் எப்படி அணுகுகின்றனவோ அப்படி அணுகியிருந்தாலே முஸ்லிம் சமூகம் இன்றைக்கு சமமான தளத்தில் நிற்கும். ஆனால், நிலைமை என்ன?
எல்லாத் தளங்களிலும் முஸ்லிம்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் காட்டிலும் பின்னடைவிலேயே இருக்கின்றனர். கல்வி - வேலைவாய்ப்பு - பொருளாதாரத்தில் அடிநிலையில் இருக்கின்றனர். சச்சார் ஆணையம்போல இதையெல்லாம் அரசால் நியமிக்கப்பட்ட எத்தனை ஆணையங்கள் இதுவரை தெரிவித்திருக்கின்றன! அப்படியென்றால், இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்களையும், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பின்மை பேசும் கட்சிகளையுமே சமமான பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியுள்ளது. ‘மதசார்பின்மையோடு நாங்கள் செயல்படுகிறோம்’ அல்லது ‘முஸ்லிம்கள் மீது அக்கறையோடு இருக்கிறோம்’ என்பதைக் காட்டிக்கொள்ள இஃப்தார் விருந்தும் நோன்பு கஞ்சியும் ஹஜ் மானியமும் போதும் என்ற நிலையை உருவாக்கியவர்கள் இவர்கள்தானே!
இப்படிப்பட்ட மேம்பூச்சு அரசியல் சாதித்ததுதான் என்ன? ‘முஸ்லிம்கள் பண்டிகைகளுக்கு என்றால் இவர்கள் போவார்கள், முஸ்லிம்கள் ஆன்மிகப் பயணம் என்றால் உதவுவார்கள்; ஆக, முஸ்லிம்கள் இந்தியாவில் பல்வேறு சலுகைகளைப் பெற்று, பெருவாழ்வு வாழ்கின்றனர்!’ என்று பாஜக எல்லா சமூகத்தினரிடமும் தமுக்க அடிக்கவும் அவர்களை நம்பவைக்கவுமே இதெல்லாம் உதவின.
கடைசியில் எந்த இடத்துக்கு இன்று வந்தடைந்திருக்கிறோம்? முஸ்லிம் இயக்கங்களை அரவணைத்தால், தேர்தலில் இந்துக்கள் ஓட்டு கிடைக்காமல் போய்விடக்கூடும் என்கிற அச்சம் சூழும் இடத்துக்கு அரசியல் கட்சிகள் வந்திருக்கின்றன. இந்துத்துவ மதவெறியைத் தூண்டும் விஷயங்களைப் பேசுவதுகூட இந்துக்களை சங்கடப்படுத்திவிடும் என்ற அச்சத்துக்கு வந்திருக்கின்றன. கடையில் முஸ்லிம்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டுவருகின்றனர். ‘வேண்டாம், மதச்சார்பற்ற சக்திகளின் இந்தப் பூசாரி வேலையும் வேண்டாம்; பொங்கல் சோறும் வேண்டாம்!’ என்ற நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஆக முஸ்லிம்கள், மத அடையாள அரசியலைத் தாண்டி, நாட்டின் தலையாயப் பிரச்சினைகள், தேவைகள், தங்களுக்கான உரிமைகள் போன்றவற்றை முன்னிறுத்திப் பேச வேண்டும். அரசியலிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளை மையப்படுத்தி இயங்க வேண்டும். அதற்கு மதரீதியிலான அணித் திரட்டலுக்கு முடிவு கட்ட வேண்டும். இதன் முதல்கட்டமாக மத மைய அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்!
6
3
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 3 years ago
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் சமஸ் எழுதிய ‘இந்துத்துவத்திற்கு சற்றும் குறைந்ததல்ல வஹாபிஸம்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சியாகவே இதை காண்கிறேன். பிற மதங்கள் நிந்திக்கப்படும் போது நிந்திப்பவர்களை கண்டிக்காமல் இருப்பதுகூட பரவாயில்லை, ஆனால் அவர்களுடன் ‘பாஜக எதிர்ப்பு’ என்ற ஒற்றை முழக்கத்தின் ஊடாக ஆதரவு பாராட்டினால் இசுலாம் அல்ல எந்த மதமும் தார்மிகத்தை இழப்பதாகவே கருதவேண்டும்!
Reply 4 2
Periasamy 3 years ago
நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
விஷ்வ துளசி.சி.வி 3 years ago
மத மைய அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.என்ற கட்டுரையை ஒரு ஹிந்து எழுதியிருந்தால் கடும் விமர்சனக் கணைகளை நிச்சயம் பெற்றிருக்கும். முஸ்லிம்களில் ஒரு சகோதரர் தெளிவான பார்வையுடன் கூடிய தரவுகளோடு எழுதி இருப்பது பெரும் சிறப்பு நண்பர்களே 1.நம்மை விட பாரத நாடு முக்கியம். 2.பிரிவினைவாதம் எதற்கும் தீர்வு அல்ல. 3.பழமைவாதம் மற்ற முடியாததும் அல்ல. 4.நல்ல தலைவன் நம்மில் இல்லை எனில் புதிய நம்பகமான தலைவனை உருவாக்கு. 5.மதத்தை கடந்த மனிதம் அனைத்தையும் விட அற்புதமானது. Reply 1
Reply 13 0
Login / Create an account to add a comment / reply.