கட்டுரை, ஆரோக்கியம், கல்வி 5 நிமிட வாசிப்பு
ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள் நம் மாணவர்கள்?
இங்கிருக்கும் நம்முடைய பிள்ளைகள் மருத்துவம் படிப்பதற்காக சிறிய நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும். இந்திய பணத்தை ஏன் வெளிநாடுகளுக்கு அள்ளிக் கொண்டு போக வேண்டும். இவர்கள் ஏன் இந்தியாவில் மருத்துவம் படிக்கக் கூடாது?
பிரதமர் மோடி, இப்படியொரு கேள்வியை எழுப்பி தன்னுடைய கருத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். ஆண்டுதோறும் 26 ஆயிரம் இந்திய மாணவர்கள் பிலிபைன்ஸ், சீனா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு மருத்துவம் பயிலுவதற்காகச் செல்கின்றனர். இவர்கள் அந்த அளவுக்கு வசதி படைத்தவர்களா? ஆடம்பரமாகப் படிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்களா?
இந்தியாவில் இன்று 612 மருத்துவக் கல்லூரிகளில், 91,927 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 70 மருத்துவக் கல்லூரிகளில், 10,725 இடங்கள் இருக்கின்றன. நாட்டிலேயே அதிகமான மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் எனக் கணக்கிட்டாலும் நாட்டில் உள்ள மொத்த அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் கிட்டத்தட்ட 15% இங்கேயே உள்ளது.
ஆனால், மருத்துவத்துக்காகப் போட்டியிடும் மாணவர்கள் எண்ணிக்கை இதுபோல பல மடங்கு அதிகம். இதில் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள். ஏனென்றால், அங்குதான் கட்டணம் குறைவு. அப்படிப் பார்க்கும்போது இடங்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துவிடும்.
தமிழ்நாட்டில், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.13,600 மட்டுமே ஆண்டுக் கட்டணம். ஆனால், அரசுக் கல்லூரிகளில் இங்கே 5,225 இடங்கள் மட்டுமே உள்ளன. அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இங்கே குறைந்தது ரூ.5 லட்சம் – ரூ.10 லட்சம் வரை செலவிட வேண்டி உள்ளது. அதே தனியார் கல்லூரிகளில் அவர்களுடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட வேண்டியிருக்கிறது. இது ஒரு ஆண்டுக் கணக்கு. அப்படியென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு என்ன ஆகும்?
வெளிநாடு வாய்ப்புகளின் முக்கியத்துவம்
வெளிநாடுகளில் இவ்வளவு செலவு ஆவதில்லை. நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் வங்கிக் கடன் அல்லது பெற்றோர்களின் சேமிப்பை வைத்து வெளிநாடுகளில் மருத்துவப் படைப்பை முடிக்க, மொத்தமாக ஐந்து வருஷங்களுக்கும் சேர்த்தே ரூ.20 லட்சம் – ரூ.30 லட்சம் செலவில் முடிந்துவிடுகிறது.
இவர்கள் மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் படித்து முடித்த பின், நம்முடைய நாட்டுக்குத் திரும்பியதும் தகுதித் தேர்வும், பயிற்சியும் பெற்றாக வேண்டும். அதன் பின்பே, அவர்கள் மருத்துவராகச் செயல்பட முடியும் என்ற நிலை உள்ளது. இது சரியா என்ற கேள்வி முக்கியமானது.
ஏனென்றால், வெளிநாடுகளுக்கு இப்படிச் சென்று படிப்பவர்கள் எல்லாம் ஏதோ தகுதி குறைவானவர்கள் என்பது போன்றும், உள்நாட்டிலேயே படிப்பவர்கள் எல்லாம் ஏதோ சிறப்புத் தகுதி மிக்கவர்கள் என்பது போன்றும் ஒரு தோற்றம் இதில் உள்ளது. உண்மை அப்படி அல்ல. நீட் தேர்வில் இந்த ஆண்டுக்கான தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கே 117 மட்டுமே. அதாவது 117/720 வாங்கியிருக்கும் ஒரு மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டி மருத்துவம் படிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இப்படிப் பல ஆயிரம் பேர் நாடு முழுவதிலும் படித்து வெளியே வருகிறார்கள்.
சரி, வெளிநாடு சென்று படிப்பவர்களின் தகுதி என்ன? இங்குபோலவே அங்கும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களும் இருப்பார்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் இருப்பார்கள் என்பதே உண்மை. ஓர் உதாரணம், அண்மையில் உக்ரைன் போரின்போது ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவர் நவீன் சேகரப்பா. கர்நாடகத்தில் இருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்றிருந்தவர். அவர் பியுசி தேர்வில் பெற்றிருந்த மதிப்பெண் 97% ஆகும்.
வாரிசுகளின் அந்தஸ்து போட்டி
இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கான இவ்வளவு அதிகமான கட்டணங்களை வசூலிக்கக் காரணம் என்ன? அரசியலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் இன்று தங்களுடைய வாரிசுகளுக்கு எப்படி ஒரு விலை உயர்ந்த கார் வாங்கித் தருகிறார்களோ அப்படியே மருத்துவப் படிப்புக்கான இடங்களையும் வாங்கிக் கொடுக்கின்றனர். ‘டாக்டர்’ எனும் பட்டத்துக்காக பிள்ளைக்கு ஒரு கோடி செலவிடுவது பல பணக்காரர்களுக்கு இன்று ஒரு விஷயமே இல்லை. இதுதான் உள்நாட்டுச் சந்தையில் மருத்துவக் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்திட்டிருக்கிறது. அதேசமயம், தகுதியுள்ள – வசதியற்ற பிள்ளைகளை வெளித்தள்ளவும் செய்கிறது.
தெற்காசிய முன்னுதாரணம்
இங்கே விவாதிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ஆகும் செலவு. இங்கே ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கக் குறைந்தது 400 கோடி ரூபாய் வரை மூலதனம் ஆக்கப்படுகிறது.
உக்ரைன் போன்ற பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் இடம் ஒரு பெரிய செலவு கிடையாது. இந்தியாவில் இடத்துக்கான மதிப்பு அதிகம். பல துறைகளையும் உள்ளடக்கிய பெரிய கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. இப்படி அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் சம்பளம் மட்டும் மாதம் சில கோடிகளைத் தாண்டும். இவை எல்லாமும் சேர்ந்தே மாணவர்கள் தலையில் இறக்கப்படுகின்றன.
இதற்கு மாற்றாக மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரு வணிக வளாகம் அளவுக்கான இடங்களில், மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. அந்தக் கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு சேர்க்கப்பட்டு, நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இங்கே 50 ஏக்கர் இடம் ஒரு கல்லூரிக்குத் தேவைப்படுகிறது என்றால், அங்கே 50,000 சதுரடி பரப்பளவு போதுமானதாக இருக்கிறது என்று சொன்னார் ஒரு நண்பர். நாம் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரமும்கூட சில மாதங்களுக்கு ‘அருஞ்சொல்’ இதழில் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
வெறும் மாணவர்கள் விஷயம் அல்ல
குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு கிடைப்பது வெறுமனே மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. ஒரு கோடி செலவிட்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு மாணவர் அதோடு இன்று தொழிலுக்கு வந்துவிட முடியாது. அடுத்து, எம்டி அல்லது எம்எஸ். அடுத்து மல்டி ஸ்பெஷாலிட்டி. குறைந்தது ஒன்பது முதல் பன்னிரண்டு ஆண்டுகள் வரை படிப்பதோடு, பல கோடிகளையும் அவர் செலவிட வேண்டியுள்ளது. இவ்வளவு தொகையைச் செலவிட்ட மருத்துவர் ஆகும் ஒருவர் எப்படி இந்தப் பணத்தைத் திரும்ப எடுப்பார்?
நோயாளிகள், அதாவது மக்கள் தலையில்தான் இந்தச் சுமை விழும்.
ஆகையால், இந்தப் பிரச்சினையின் பின்னுள்ள தீவிரத்தை உணர்ந்து தொலைநோக்கோடு இதை அணுக வேண்டும். இரு தீர்வுகள் உள்ளன. ஒன்று, நம்முடைய பிரம்மாண்ட கட்டமைப்பை மாற்றி சிறிய அளவிலான மருத்துவக் கல்லூரிகளையும், கட்டுப்படியாகும் கட்டணத்தில் மருத்துவப் படிப்புகளையும் உள்நாட்டிலேயே சிந்திப்பது. மற்றொன்று ஏற்கெனவே அப்படிச் செயல்பட்டுவரும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்வது!
வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களை ஏதோ அவர்கள் வசதியானவர்கள் என்பதுபோலவோ, தகுதியற்றவர்கள் போலவோ கருதி, ஒரு தண்டனை கொடுப்பதுபோல அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது அந்தத் தேர்வைச் சுலபமாக்க வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
4
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Latha 2 years ago
மருத்துவம் என்றால் ஆங்கில மருத்துவம் மட்டும் தானா? பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. Siddha, ஆயிர்வேதா, இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர்... மக்களே ஏன் ஆங்கில மருத்துவத்தில் மட்டுமே போய் சிகிச்சை எடுக்கிறீர்கள்? மாற்று மருத்துவ முறைகளை பின்பற்றி செலவுகளை குறைப்போம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
A M NOORDEEN 2 years ago
அறம் சார்ந்த புனித தொழிலாக திகழ்ந்த மருத்துவத் துறை மருத்துவ மாஃபியாக்களின் பிடியில் சிக்குண்டு வணிக தொழிலாக மாறிப் போனதால் நிகழ்ந்தவையே கட்டுரையால் சொல்லப்பட்டவை யாவும். மிக மிக அதிக செலவுகள் செய்து பயில்வோரிடம் சமூக சேவையை எதிர்பார்ப்பது நியாயமில்லை. சேவை வேண்டாம் அறம் என்று ஒன்று வேண்டுமே. அது தொலையக் காரணம் பணம், பணம், பணம். படிக்கத் தகுதி வேண்டு தேர்வாவதிலிருந்து தொடங்கி ஒரு நிபுணராக உருவாவது வரை தேவைப்படுவது அறிவு, மதிப்பெண் மட்டும் போதுமானதல்ல கூடுதலாக அதிக நிதி தேவை. இந்த கட்டமைப்பில் ஊழல் என்பது மேலிருந்து கீழ் வரை பரவி புரையோடிப் போயிருக்கிறது. கேத்தன் தேசாய் மறக்கக்கூடாத ஆனால் மறக்கப்பட்ட பெயர். ஊழல் செய்ததாக பிடிபட்ட இவர் சில மாதங்களுக்குப் பிறகு நமது தேசத்தின் பிரதிநிதியாக உலக சுகாதார மையக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற ஒரு தகவல் போதும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Senthilkumar 2 years ago
அருஞ்சொல்லிற்கு, 1.மருத்துவர்களின் வாரிசுகள், மருத்துவர்கள் ஆகும் நிலையை நீடிக்கிறது. ஆம். அரசியல்,வணிகம் உட்பட எல்லா தொழில் போலவும் இதுவும் ஆகிவிட்டது. மருத்துவம் விதிவிலக்கல்ல. சமூகத்தின் பொதுபுத்தியான ,மருத்துவம் உயர்ந்த தொழில் என்பதை மாற்ற வேண்டும். 2. நம் நாட்டில் , தகுதித் தேர்வு வைக்க வேண்டும் என்பது சரியான முறையே.உதாரணத்திற்கு சிறந்த கட்டமைப்பான இங்கிலாந்து NHS எடுத்துக்கொள்வோம். அங்கு மருத்துவம் செய்ய தகுதித்தேர்வு அவசியம். அது தண்டனை அல்ல. அடிப்படை பயிற்சியை தாண்டி, அந்தந்த நாட்டின் மக்களின் சமூக , உளவியல் போன்றவையும் மருத்துவத்தில் அடங்கும். மேலும் நம் அரசு நம் மக்களுக்கான மருத்துவர்களின் தரத்தை உறுதிப்படுத்துவது தவறல்ல. 3. மருத்துவர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்தல் என்றும் ஒரு தீர்வாகாது. மருத்துவத்திற்கு அரசின் பட்ஜெட்டில் ,அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டு, பல்வேறு உயர் சிறப்பு மருத்துவமனைகள் வர வேண்டும். 4.ஒப்பீட்டளவில், இங்கு மருத்துவ கட்டமைபிற்கான மூலதனம் அதிகம் தேவை என்பது சரியே. 5. குறைந்த பட்ச NEET மதிப்பெண் என்ற விவாதமே தனியாக பேசப்பட வேண்டிய ஒன்று.
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 2 years ago
அருமையான கட்டுரை. ஆஃப்ரிக்காவின் பல நாடுகளில் (உகாண்டா, தான்சானியா), மேற்கிந்தியத் தீவுகளில், மருத்துவம் படிப்பது மிகவும் குறைவாக செலவு பிடிக்கக் கூடியதாகும்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.