ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் வருவாயில் கல்கிக்குப் பங்குண்டா?

ஆசிரியர்
08 Jul 2022, 5:00 am
1

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க  செய்திகள் இங்கே இடம்பெறும். 

யக்குநர் மணிரத்னத்தின் உரையைக் கேட்டேன்; ‘பொன்னியின் செல்வன்’ விழாவில். தன்னுடைய முதல் நன்றியைக் கல்கிக்குத் தெரிவித்து, உரையைத் தொடங்குகிறார். வரவேற்புக்குரிய மரியாதை. 

நாடு தழுவிய படமாக ‘பொன்னியின் செல்வன்’ எடுக்கப்பட்டிருக்கும் சூழலில், அதற்கான எழுத்து சார்ந்த பங்களிப்பைக் கல்கியின் குடும்பத்துக்கு மணிரத்னம் செலுத்துவதே அவர் சொல்லில் வெளிப்படுத்தும் மரியாதைக்கு செயல்பூர்வ அர்த்தம் கொடுக்கும் என்று எண்ணுகிறேன். 

அமரர் கல்கியின் எழுத்துகள் பொதுவுடைமை ஆகிவிட்டதால், சட்டபூர்வ நிர்ப்பந்தங்கள் ஏதும் மணிரத்னத்துக்கு இல்லை. அதேசமயம், தார்மிகரீதியாக இதை அவர் செய்வது அவசியம். 

புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும், மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டையும் அறிந்த ஒருவர் கேட்கக்கூடும்; அவ்வளவுக்கு பெரும் வேறுபாடு இரு படைப்புகளுக்கும் இடையே. ஒருசமயம் மகேந்திரனிடம் உரையாடுகையில், இதைக் கேட்டபோது சொன்னார், “கரு யாருடையது, என் மனதுக்குத் தெரியும் இல்லையா?” 

இயக்குநர் வெற்றிமாறனிடமும் இதே மேன்மையை இன்று காண்கிறேன். அவர் எடுத்தாளும் கதைக்கும், படத்தில் அவர் உருவாக்கும் திரைக்கதைக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள்! ஆனால், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு - அடையாள நிமித்தமாக அல்ல; கண்ணியமான தொகை - செல்வதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவர் கையாளும் ‘வாடிவாசல்’ கதைக்காக சி.சு.செல்லப்பாவின் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொகை பெரியது.

நீதிநாயகம் கே.சந்துருவின் வாழ்க்கையிலிருந்தும், எழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கதை என்பதால், ‘ஜெய்பீம்’ படத்துக்கு அவருக்குப் பெரிய தொகையைக் கையளிக்க முன்வந்தது சூர்யாவின் நிறுவனம். சந்துரு வழக்கம்போல அதை மறுத்துவிட்டார் (அவருடைய இத்தகு அணுகுமுறையை மட்டுமே தனித்து எழுத வேண்டும்). பின்னர் அடையாளபூர்வமாக வெறும் ரூ.100/- பெற்றுக்கொண்டு எழுதிக்கொடுத்தார். சந்துருவின் இந்த மேன்மைக்குப் பதில் மரியாதை செலுத்த முற்பட்டது ‘ஜெய்பீம்’ குழு. 

பழங்குடிகள் வாழ்வைப் பேசும் படம் என்பதால், ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய கதைகளே படமாகி இருப்பதால், தார்மிக அடிப்படையில் அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று இயக்குநர் த.செ.ஞானவேலும், தயாரிப்பாளர் சூர்யாவும் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தனர். சந்துருவின் இந்த முடிவுக்குப் பின்னர் பழங்குடியினருக்கான தொகையை மேலும் அதிகமாக்கினர். விளைவாக ரூ.1 கோடியைப் பழங்குடிகள் சங்கத்தினருக்காகப் பேராசிரியர் கல்யாணியின் கைகளில் கொடுத்தது ’ஜெய்பீம்’ குழு.

மேலே சொன்ன எல்லாமே எழுத்தாளர்கள் / கதைக் கருவைத் தந்தவர்கள் மீதான தம்முடைய மரியாதையைத் தார்மிகரீதியில் கலைஞர்கள்   வெளிப்படுத்தியிருக்கும் தருணங்கள். ‘கல்கி குழுமம்’ இன்று பிரகாசமான நிலையில் இல்லை. சொல்லப்போனால், கடும் நெருக்கடிகளுக்கு இடையில், கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்கி தன்னுடைய உயிரென வளர்த்தெடுத்த ‘கல்கி’ அச்சிதழே நிறுத்தப்பட்டுவிட்டது.

கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும்; நானறிந்த வகையில் மேன்மையான மனிதர்; நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1

1




பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vasanthabala   3 years ago

அற்புதமான அறிவார்ந்த பதிவு சூப்பர்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கூட்டுத் தலைமைதாய்மொழிவழிக் கல்விகவர்ச்சிராம ராஜ்ஜியம்writer samasகவிஞர் விடுதலை சிகப்பிசிறைஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்பார்டர் அண்ட் பௌண்டரீஸ்பிரபாகரன் மரணம்இந்துத்துவ நிராகரிப்பு அல்ல!சரத் பவார்பியூரின்சிறப்பு வரிக்யூஆர் குறியீடுகாந்தி கிராமங்கள்நவீன வேளாண்மைபாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைஜாமியா பல்கலைக்கழகம்இந்து தேசம்அரசின் கடமைதொற்றுப் பரவல்வளர்ச்சிப் பாதைஅஸ்ஸாம் கலவரம்தனித்த உயிரினங்களா அரசு ஊழியர்கள்?பால் சக்கரியாஇண்டியா கூட்டணிவார்ஷாஷிஃப்ட் கணக்குநிப்பர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!