வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது அனேகமாக உறுதியாகி இருக்கிறது. வாக்குகள் அடிப்படையில் பாஜக பெரும் பலத்துடன் இருப்பதால், அது முன்னிறுத்தும் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிக்கு அருகில் இருக்கிறார்.
காங்கிரஸ் தனித்த அளவில் மிக பலவீனமாக இருந்தாலும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி அதன் அடிப்படையில் பாஜகவுக்கு சவாலை ஏற்படுத்தி இருக்க முடியும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள்கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்னோட்டமாகக் குடியரசுத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளும் தேவையும் காங்கிரஸுக்கு இருந்தது.
அப்படியென்றால், காங்கிரஸ்தான் இந்த விஷயத்தில் முந்திக்கொண்டு நின்றிருக்க வேண்டும். காங்கிரஸோ எந்த அக்கறையையும் துடிப்பாக வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்த முறை பாஜகவின் வேட்பாளராக ஒடிஸாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜகவால் அறிவிக்கப்படுவார் என்பது கணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது; சென்ற முறை ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதுபோல அவ்வளவு ரகசியமாக இல்லை.
ஆதிக்கச் சாதிகளின் பிரதிநிதிக் கட்சி என்ற பிம்பத்தை உடைக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு தலித் / பழங்குடி என்று விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது அடையாள அரசியல் உத்தி என்பது போக பாஜகவுக்கு இம்முறை இன்னொரு தேவையும் அதில் இருக்கிறது. தன்னுடைய வேட்பாளரை வெற்றியடையச் செய்ய தன்னுடன் முரண்படும் கட்சிகள் சிலவற்றின் ஓட்டுகளும் அதற்குத் தேவை; அந்த ஓட்டுகளை பெற இத்தகு வேட்பாளர் பிம்பமும் உதவும். அதையும் சேர்த்தே தன் வியூகத்தை பாஜக அமைந்திருக்கிறது.
உண்மையான அதிகாரம் மிக்க பதவிகளில் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அமர்த்தப்படுகின்றனர்; அப்படி பதவியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும்கூட உண்மையான அதிகாரம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் முக்கியமானவை என்றாலும், இத்தகு அடையாள நிமித்த அறிவிப்புகள் உண்டாக்கும் முக்கியத்துவத்தையும் நாம் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிநபர் அந்தஸ்தில் உட்காருவது அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உண்டாக்கக் கூடிய மன மகிழ்ச்சியும், அடையாளவுணர்வும் குறைத்து மதிப்பிடக் கூடியன அல்ல.
நாம் உள்ளபடி கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும்கூட காங்கிரஸ் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து முன்னிறுத்தி இருக்கக்கூடிய வேட்பாளர் எப்படியான பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும்; எப்படியானவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத்தான். இன்று காங்கிரஸ் வழிமொழிந்திருக்கும் யஷ்வந்த் சின்ஹா வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், பாஜகவின் இன்றைய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்திருக்கக்கூடியவர்.
இருக்கட்டும், இப்போது சின்ஹா முழு பாஜக எதிர்ப்பாளராகவே மாறியிருந்துவிட்டு போகட்டும். ஆனாலும் பின்னணி எத்தகையது? உயர்சாதி பின்னணி, முன்னாள் ஐஏஎஸ்; பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர். கடைசியாக திரிணமுல் காங்கிரஸில் அடைக்கலம் ஆனவர். ஒரு பழங்குடி பெண் வேட்பாளருக்கு எதிரான வியூகம் இதுதானா!
பாஜகவால் திரௌபதி முர்மு அறிவிக்கப்படும் முன்னரே அவருக்கு முன்னதாக, அவரைக் காட்டிலும் நல்ல, மேம்பட்ட பின்னணி கொண்ட ஒரு பழங்குடி செயல்பாட்டாளரை அல்லது பொதுச் சமூகத்திலிருந்து பரவலாக விளிம்புநிலையினருக்கான சேவையில் நன்கறியப்பட்ட ஒருவரை அல்லது தன்னுடைய பெயரால் வேட்பாளர் தேர்வுக்குப் பலம் சேர்க்கக்கூடிய ஒருவரை காங்கிரஸால் ஏன் அடையாளம் கண்டு அறிவிக்க முடியவில்லை?
இந்த இடத்தில் சென்ற முறை ராம்நாத் கோவிந்துக்குப் போட்டியாக ஒரு தலித் பெண் - மீரா குமார் அறிவிக்கப்பட்டதையும் நினைவுகூர்கிறேன். பெரும் ஈர்ப்பு தரும் ஆச்சர்ய அறிவிப்பு இல்லை என்றாலும், அது நல்ல அறிவிப்புதான். இந்த முறை அப்படியான ஒரு தேர்வையும்கூட பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
விளிம்புநிலையினர் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி எது என்பது யாரும் அறியாதது இல்லை; காங்கிரஸ் அவர்களுக்காக செய்தது எதையும் மறப்பதற்கும் இல்லை. ஆனால், நீங்கள் அக்கறையோடு இருப்பதோடு, அக்கறைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செயல்பாடுகளில் வெளிபடுத்திக்கொண்டே இருக்க வேண்டிய களம் அரசியல். எல்லாவற்றுக்கும் மேல் வெற்றி - தோல்வியைக் காட்டிலும் அரசியலில் முக்கியம் மக்களுடைய கதையாடலை யார் உருவாக்குகிறார்கள் என்பதே ஆகும். அந்த இடத்தில் ஒவ்வொரு வாய்ப்பையும் வீணடிக்கின்றனர் ராகுலும் காங்கிரஸும்.
திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள்!
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.