கட்டுரை, கலை, சினிமா, கலாச்சாரம், சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

மோன்டி பைதானின் பறக்கும் சர்க்கஸ்

ஆர்.சீனிவாசன்
21 Jul 2024, 5:00 am
0

‘நகைச்சுவை தர்க்கத்தின் விளைவு’ என்றார் நகைச்சுவை நடிகர் ஜஸ்பால் பட்டி. தொன்னூறுகளில் இந்தி தூர்தர்ஷன் காணொலியில் வெளிவந்த ‘ஃலாப்ஷோ’ என்ற தொடரின் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர். நகைச்சுவை, இலக்கியத்தின் மிகப் பழைமையான பிரிவு.

கிரேக்கர்கள் நகைச்சுவையைப் பெரிதும் போற்றினர். அரிஸ்டாட்டிலின் குறிப்புகளில் நகைச்சுவை நாடகங்கள் அந்தக் காலகட்டங்களிலேயே நடந்திருப்பதாக எழுதுகிறார். பாகாலியல் வழிபாடு கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரபூர்வ தர்மமாக இருந்தபோது, ஆணுறுப்பின் ஊர்வலத்திலிருந்து நகைச்சுவை படைப்புகள் பிறந்ததாக குறிப்பிடுகிறார். 

ரோமாபுரியை மையமாகக் கொண்ட கிறிஸ்துவ திருச்சபை பெரும்பாலும் அதன் சமூகத்திற்கு ஆன்மீக படைப்புகளையே கொடுத்தது. தீவிர ஆன்மீக சிந்தனைகளுடைய புத்தகங்களும், ஓவியங்களும்தான் ஊக்குவிக்கப்பட்டன. பதிமூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ பாதிரியான சாது தாமஸ் ஆகினாஸ் நகைச்சுவை இல்லாத வாழ்க்கை மனிதனைச் சோர்வடையச் செய்யும் எனக் குறிப்பிடுகிறார். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

டிவைன் காமெடியின் வருகை

அவரைப் பின்தொடர்ந்த தாந்தே ஆலிகேறி பதினான்காம் நூற்றாண்டில் ‘டிவைன் காமெடி’ எனும் வெண்பா தொகுப்பை வெளியிட்டர். இந்தப் புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதலாவது, அப்போதைய திருச்சபைகளின் அதிகார மொழியான லத்தின்னில் இல்லாமல் சாமான்ய இத்தாலிய மொழியில் எழுதப்பட்டது. இரண்டாவது, ஆன்மீக சூழலில் நடக்கும் கதை என்றாலும் காதலை மையமாகக் கொண்டதுமாகும்.

பதினான்காம் நூற்றாண்டில் நகைச்சுவையின் விளக்கம் தற்போதைய கற்பனை புனைவிற்குச் சமமாக இருந்தது. துயர முடிவைக் கொண்ட நாடகங்களை ட்ரஜிடி என்றும் ஆனந்த முடிவைக் கொண்ட படைப்புக்களைக் காமெடி என்று அழைத்தனர்.  கிரேக்கச் சமூகத்தில் போற்றப்பட்ட நகைச்சுவை, கிறிஸ்துவ சமூகத்தில் அதிகம் காண முடியவில்லை. இந்த நிலையில் வெளியானதுதான் ‘டிவைன் காமடி’ எனும் நூல். 

இறந்துபோன தன் காதலியை சொர்க்கம், நரகம் மட்டுமல்லாமல், கழுவத்திலும் (சொர்க்க – நரகத்துக்கு மத்தியில் கிறிஸ்துவர்கள் இருப்பதாகக் கிறித்துவர்களால் கருதப்படும் இடம்) தேடுகிறார் தாந்தே. இந்தத் தேடலில் அவருக்கு உறுதுணையாக இருப்பது ரோமானிய கவிஞரான விற்ஜில்.

கிறிஸ்துவ ஆன்மீக தேடலில், பாகால் கவிஞரான விற்ஜில் தாந்தேயின் விழிகாட்டியாக இருப்பது தாந்தே விர்ஜில்லை உயர் பிரஞைக்கு உதாரணமாகவும் சொர்க்கம், நரகம் போன்ற தெய்வீக கருத்துக்களுக்கு பாகாலியல் விளக்கங்கள் கிறிஸ்துவ விளக்கங்களைவிடப் பொருத்தமாக இருப்பதையும் காட்டுகிறது. இது ஒருவகை கிறிஸ்துவ சமுதாய நையாண்டித்தனமாகப் பார்க்கப்படுகிறது. லேசான வரிகளுடன் முடிவில் தன் காதலியுடன் சேர்வதாகக் கதை அமைந்திருப்பதினால் இதனைப் காமெடி எனப் பெயர் சூட்டினார் தாந்தே.  

நகைச்சுவையின் விரிவாக்கம்

நூற்றாண்டுகள் போகப்போக நகைச்சுவையின் உள்ளடக்கங்கள் விரிந்துகொண்டே போனது. பதினேழாம் நூற்றாண்டில் சமகால ஆசிரியர்களான மிகுவேல் டே செர்வாண்ட்ஸ் மற்றும் ஷேக்ஸ்பியர் நகைச்சுவையை மையமாகவே கொண்டு படைப்புக்களை எழுதினார்.

மிகுவேல் ஸ்பானிய மொழியில் எழுதிய ‘டான் கொக்ஸைட்’ உலகின் முதல் உண்மை நாவல் எனக் கருதப்படுகிறது. குறைத்த பிரபுத்துவதில் பிறந்த அலோன்சோ என்பவர் வீர சாகச கதைகளைப் படித்துவிட்டு தன்னையும் ஒரு வீரனாக கருதி சாகச பயணத்தில் இறங்குகிறார். இந்தப் பயணத்தில் அவர் செய்யும் ஓவ்வொரு செயலையும் நகைச்சுவையாக காணபிக்கிறார் மிகுவேல்.

ஒரு முக்கியமான கட்டத்தில் காற்றாலையை அசுரனாக நினைத்து அதன் மேல் ஆக்ரமிக்கிறார் அலோன்சோ. காற்றாலையின் சிறகுகளில் சிக்கிய ஈட்டியை எடுக்க முடியாமல் ஒரு மரக்கட்டையை முந்தைய பயணத்திற்கு ஈட்டியாக எடுத்துக்கொள்கிறார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் நகைச்சுவை நாடகங்கள் மிக முக்கியமானவை. ‘த காமெடி ஆஃப் ஏரர்ஸ்’ இரு இரட்டையர்களின் பற்றியது. இதனைத் தொடர்ந்து பல நாடகங்கள் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எழுதியிருக்கிறார். எலிசபெத் மகாராணி ஆட்சிபுரிந்த காலத்தில் நகைச்சுவையின் உள்ளடக்கங்கள் சிரிப்பு, கேளிக்கை, நையாண்டி, கோமாளித்தனம், நகை போன்ற பல்வேறு பரிமாணங்களை எடுத்திருந்தது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேலிச்சித்திரங்கள் (cartoons / caricatures) இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. நகைச்சுவை பிரிவில் தமிழ் இலக்கியம் சளைக்கவில்லை. தமிழ் கவிஞர்களும் எழுத்தாளர்களும், திருக்குறள் தொடங்கி சமீப காலம் வரை நகைச்சுவையைத் தங்கள் படைப்புகளில் கையாண்டுள்ளனர். திருவள்ளுவர் நகைச்சுவை இல்லாத மனிதனுக்குப் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாது என்று ஒரு குறளில் குறிப்பிடுகிறார். 

மோன்டி பைதானின் தோற்றம்

இருபதாம் நூற்றாண்டில் தொலைக்காட்சியின் வரவு இலக்கியத்திற்கு வெகுவும் உறுதுணையாக இருந்தது. படைப்புகளை வெகுஜனருக்குக் கொண்டுசெல்ல தொலைக்காட்சியும் அதற்கு முன்னால் வானொலியும் பெரும்பங்கு வகித்தன. நகைச்சுவை நாடகங்களை அரங்கங்களுக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும் என்கிற நிலை மாறி சுலபமாக வீட்டிலேயே பார்க்க முடிந்தது. இந்நிலையில் 1960களில் இங்கிலாந்தில் உருவான நாடகக் குழுதான் ‘மோன்டி பைதான்’ (Monty Python). 

கிரகம் சாப்மேன், ஜான் இக்லீஸ், மைக்கேல் பாலின், எரிக் ஐடில், டெரி கிலியம், டெரி ஜோன்ஸ் ஆகியோரால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாடகக் குழுவிற்குப் பொருத்தமான பெயர் என்பதால் ‘மோன்டி பைதான்’ எனப் பெயரிட்டனர். இக்குழுவின் முதல் படைப்பு ‘பறக்கும் சர்க்கஸ்’ எனும் தொடர். அது 1969 முதல் 1974 வரை ஆங்கிலேய தொலைக்காட்சி நிலைய தயாரிப்பில் பிபிசி-1 (BBC-1) காணொலியில் நான்கு பருவங்களில் நாற்பத்தைந்து அத்தியாயங்களாக வெளிவந்தது. ஜெர்மனியிலும் இதன் மொழியாக்கம் 1970 - 1971 வெளிவந்தது. 

இங்கிலாந்தில் அக்கால நகைச்சுவை நிகழ்ச்சிகள் பெரும்பாலும், உரைநடை, சூழ்நிலை நகைச்சுவை, உடல்ரீதியான நடை போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் நினைவோடையின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் நாடகக் குழு மோன்டி பைதான். சிந்தையில் தோன்றும் எண்ணங்கள், உணர்வுப்பூர்வமாகவோ அல்லது கனவாகவோ உருவெடுத்து கண்களுக்குள் தோன்றிய காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தனர். 

காட்சி அமைப்பின் தாக்கம்

‘பறக்கும் சர்க்கஸ்’ தொடரின் நிகழ்ச்சி வடிவமைப்பு அக்காலகட்டத்திற்கு வித்தியாசமாக இருந்தது. உள்ளுணர்வின் பிரதிபலிப்புகள் அர்த்தமுள்ள நிகழ்வுகளாகவோ எண்ணங்களாகவோ இருப்பதில்லை. இத்தகைய சித்தரிப்புகள் விநோதமாகவும் சில சமயம் அபத்தமாகவும் தோன்றும். தீவிர தத்துவங்களை முட்டாள்தனத்தின் மூலம் சொல்வது பழமையான யுக்தி. ‘முல்லா நசீருதீன்’, ‘தெனாலி ராமன்’, ‘பீர்பல்’ கதைகளில் இந்த உத்தியை காணலாம். 

‘பறக்கும் சர்க்கஸ்’ இதே உத்தியைத்தான் காட்சி வடிவில் கையாண்டது. அப்போதைய ஆங்கிலேய அரசு, சமூகம், நுகர்வோர் கொள்கை, உலகப் போர், உளவியல், வெளியுறவு போன்ற விஷயங்களை நையாண்டித்தனத்தின் மூலம் விமர்சித்தது. அத்தியாயங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்திருந்தன, ஆரம்பக் காட்சிகளில் கிலியம் வரைந்த கேலிச்சித்திர அனிமேஷனுடன் தொடங்கி, குரல் அல்லது பேச்சாளர் அறிமுகங்களுடன் காட்சி ஆரம்பித்தது. பெரும்பாலும் ஒரு அத்தியாயத்தில் குறைந்தபட்சம் நான்கு காட்சிகள் இடம்பெற்றன. 

ஒரு அத்தியாயத்தின் காட்சிகள் (sketches) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒருவிதச் சிதைந்த உரைநடை பாணியில் அமைந்திருந்தது. ஒரு சில பாத்திரங்கள் மட்டும் வெவ்வேறு அத்தியாயங்களில் தொடர்ச்சியின்றி காணப்பட்டனர். காட்சிகளின் மத்தியில் கேலிச்சித்திரங்களின் அனிமேஷன் காட்டப்பட்டது அல்லது அனிமேஷன் மூலமாகவே காட்சிகள் அமைந்திருந்தது. ‘பறக்கும் சர்க்க’ஸில் வெளிவந்த அனைத்து கேலிச்சித்திரங்களும் கிலியம்மின் படைப்புகள். அதில் பிரபலமானது ஒரு பிரமாண்டமான கால் நிழற்படங்களை மிதிப்பது போன்ற காட்சி. 

நேயர்களை அதிர்ச்சியின் மூலம் சிரிக்கவைக்க வேண்டும் என்பதே மோன்டி பைதனின் பிரத்யேக நோக்கம். பாத்திரங்களின் பின்னணி, சூழ்நிலை, உரையாடல் என்ற அடிப்படையில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறடி ஐந்து அங்குலம் உயரமான இக்லீஸ், தீவிர தோற்றமுடைய சாப்மன் இருவரும் பெரும்பாலும் ராணுவ வீரர், மேலாளர் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்தனர். கிலியம், மைக்கேல் மற்றும் ஐடில் லேசான பாத்திரங்களில் தோன்றினார். அத்தியாயங்களை எழுதுவதில் இக்லீஸ் மற்றும் சாப்மன் பெரும்பங்கு வகித்தனர்.  

பிரபலமான காட்சிகள் சில…

உலகத்திலேயே மிக பயங்கரமான ஜோக்: ஓர் எழுத்தாளர் (அவரை ஜோக் உற்பத்தியாளர் என அறிமுகப்படுத்துகிறார் தொகுப்பாளர்) ஜோக் ஒன்றை எழுதுகிறார். அதைப் படித்தவுடன், சிரிக்க ஆரம்பிக்கிறார், சிரிப்பு பலமாகி பித்துப் பிடித்ததுபோல சிரித்துக்கொண்டே செத்துப்போகிறார். 

சப்தம் கேட்டு அறைக்கு வந்த அவருடைய தாய், மகன் தற்கொலை செய்துகொண்டான் என நினைத்து அவன் கையில் இருக்கும் ஜோக்கை தற்கொலை கடிதம் என நினைத்து படிக்கிறார், சிரிக்க தொடங்குகிறார், அவரும் மறைகிறார். போலிஸார் வருகின்றனர், ஒப்பாரி பாடலுக்கு நடுவே, அந்த ஜோக்கை மீட்க முயல்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி ஆனால் அவரும் மாய்கிறார். 

செய்தி அறிந்த ராணுவம், ஜோக்கை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்கிறது. ஐம்பது அடி தூரத்திலிருந்து படிக்கமுடிந்த எவரையும் ஜோக் வீழ்த்துகிறது. உடனே அதன் ஜெர்மன் மொழியாக்கத்தை உருவாக்குகின்றனர் ஆங்கிலேய ராணுவம். பெரும் முயற்சிக்குப் பின் ஜோக்கின் ஜெர்மன் மொழியாக்கம் உருவாகிறது. 

போர்முனையில் அதனை ஜெர்மன் ராணுவத்திற்கு படித்துக் காண்பிக்கின்றனர் ஆங்கிலேய வீரர்கள், கொத்துக் கொத்தாக மாண்டு விழுகின்றனர் ஜெர்மானியர்கள். இதை அறிந்த நாஜி அரசு சொந்த ஜோக் ஆயுதத்தைத் தயாரிக்கிறது. ஆங்கிலேயர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் பயங்கர ஜோக் ஆயுத போட்டி உருவாகிறது. போர் முடிந்ததும், ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ் பயங்கர ஜோக் ஆயுத உற்பத்தி தடைசெய்யப்படுகிறது. 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

வாதம் - முரண்பாடு: ஒரு ருபாய் கட்டணம் காட்டினால் ஒருவருடன் ஐந்து நிமிடம் வாதத்தில் ஈடுபடலாம் என விளம்பரப்படுத்துகிறது ஒரு நிறுவனம். அதைப் படித்த ஒருவர், அர்த்தமுள்ள வாதத்தில் இனொருவருடன் ஈடுபட வருகிறார். வந்தவரை ஒரு அறைக்கு வழிகாட்டுகிறார் அலுவலக பெண். அந்த அறையில் நுழைந்தவுடனேயே அங்கிருப்பவர் கடுமையாக வந்தவரை கொச்சை வார்த்தைகளில் சாட ஆரம்பிக்கிறார். 

வந்தவர் நடப்பது புரியாமல், “ஏன் என்னைச் சாடுகிறீர்கள்? வாதம் செய்ய வந்திருக்கிறேன், ஒரு ரூபாயும் கட்டியிருக்கிறேன்” என்றபோது, “மன்னிக்கவும் இது சாடும் அறை, வாதத்திற்கு அடுத்த அறைக்குப் போங்கள்” என்கிறார். அடுத்த அறைக்குள் நுழைந்தவுடனேயே அங்கிருப்பவர் வந்தவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் மறுப்பு பேசுகிறார். “இது வாதம் இல்லை நீங்கள் செய்வது முரண்பாடு. வாதம் என்பது அர்த்தமுள்ள செயல்” என்கிறார் வந்தவர். “மன்னிக்கவும் உங்கள் நேரம் முடிந்துவிட்டது” எனச் சொல்லி மேலும் பேச மறுக்கிறார் இனொருவர். 

ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் நடுக்கும் வாதங்கள் பெரும்பாலும் முரண்பாடுகளில் முடிவதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் காட்சி. 

செத்த கிளி: ஒருவர் செல்லப்பிராணி கடையிலிருந்து ஒரு நார்வேஜியன் நீல நிற கிளியை வாங்கிச் சென்ற அரை மணி நேரத்திலேயே திரும்பிவருகிறார், வந்தவர் கடைக்காரரைப் பார்த்து, “இந்தக் கிளியை அரை மணிநேரத்திற்கு முன்னால்தான் இந்தக் கடையிலிருந்து வாங்கிச் சென்றேன்”

“ஆமாம். நார்வேஜியன் கிளி, நல்ல இறக்கைகள், என்ன ஆனது இதற்கு?”

“சொல்கிறேன்… இது செத்துவிட்டது, அதுதான் ஆனது. இதை வாங்கும்போது ஏன் நகரவில்லை என்பதற்கு நீங்கள் நார்வேயிலிருந்து பறந்துவந்த களைப்பில் தூங்கிக்கொண்டிருக்கிறது என்றீர்கள்” எனத் தொடங்கி கடைக்காரரை அவர் கொடுத்த கிளி வாங்கும்போதே இறந்திருந்ததை ஒப்புக்கொள்ள வைப்பதற்குள் அந்த மனிதர் பெரும்பாடுபடுகிறார். 

“நண்பா, கூண்டிலிருந்த கிளியைக் கதவைத் திறந்து உற்றுப் பார்த்தேன். அது நின்றுகொண்டிருப்பதற்குக் காரணமே அது கூண்டுடன் ஆணியால் அறையப்பட்டதினால்தான்” என்றாலும் கடைக்காரர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். 

கடைசியில், “இந்தக் கிளி செத்துவிட்டது, உயிரற்றது, கட்டை, சவம், போய்விட்டது, இதை பூமியில் புதைத்தால் டைசி பூக்கள் பூக்கும், கர்த்தாவைப் பார்க்க போய்விட்டது. இது ஒரு மாஜி கிளி!” என மூச்சுவிடாமல் கத்திய பிறகுதான் கடைக்காரர் ஒப்புக்கொள்கிறார்.

நுகர்வோர் கொள்கை இங்கிலாந்தில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்தக் காட்சியின் வாயிலாக விமர்சிக்கின்றனர். 

மரபின் தொடர்ச்சி

‘பறக்கும் சர்க்கஸ்’ஸின் வெற்றி, பிரபலம் அதன் கருத்துருவாக்கத்தில் இருக்கிறது. ஐரோப்பா அக்காலகட்டத்தில் கலை புத்துணர்ச்சியின் பிடியில் கலை மரபு வரம்புகளைத் தாண்டிக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் முன் விதைக்கப்பட்ட கலை இயக்கங்கள் அறுபதுகளில் வேரூன்றி சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன. சர்ரியலிஸம், பண்பியல் வெளிப்பாட்டியம் (abstract expressionism) போன்ற கலை இயக்கங்களின் பாதிப்பு மோன்டி பைத்தானின் பறக்கும் சர்க்கஸ்ஸில் வெளிப்படையாகத் தெரிகிறது. 

முக்கியமாக சர்ரியலிஸத்தின் பாதிப்பு காட்சி கருத்துருவாக்கத்திலிருந்து, பின்னணி அமைப்பு, அனிமேஷன் என எல்லாத் துறைகளிலும் காண முடிகிறது. டெரி கிலியம் அமெரிக்கர் என்பதால் அமெரிக்காவில் உருவெடுத்த பாப் ஆர்ட் முறையை அனிமேஷனுக்கு வெகுவாக பயன்படுத்தினார். மோன்டி பைத்தானின் அபத்தவியல் (absurdism) நிலைப்பாடுகள் அதன் பாத்திரங்களின் இல்லாமையின் மூலம் வெளிப்படுகிறது. ஒரு சமூகத்தின் பிரச்சினை அதன் குடிமக்களின் பிரச்சினைகளின் கூட்டாக காணபிக்க முயல்கின்றனர்.

வெகுஜனத்தின் சிந்தனைக்கும் அரசின் கொள்கைகளுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிய விமர்சனம் எனவும் எடுத்துக்கொள்ளலாம். அறிவியல், கலை போன்றவற்றில் அதிவேக முன்னடைவுகளின் மத்தியில், இன்னும் ஆங்கிலேய சமூகம் மரபு வழிகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இது. 

தொடரைத் தொடர்ந்து திரைப்படங்கள்

‘பறக்கும் சர்க்கஸ்’ வெற்றியைத் தொடர்ந்து திரைப்படங்களும் வெளிவந்தன. ‘மோன்டி பைத்தானும் புனித குவளையும்’ (Monty python and the holy grail - 1975), ‘பிரையனின் வாழ்க்கை’ (The life of Brian - 1979), ‘வாழ்க்கையின் அர்த்தம்’ (The meaning of life - 1983) என்ற மூன்று திரைப்படங்கள் வெளியாயின.

இதில் ‘மோன்டி பைத்தானும் புனித குவளையும்’ (1975) திரைப்படத்தில்  இங்கிலாந்தின் புகழ்பெற்ற அரசரான ஆர்தரும் அவரது வீரர்களும் கர்த்தருடன் நேரடி தொடர்புடைய புனித குவளையின் தேடலில் இறங்குகின்றனர். இதிகாசத்திலும் கவிதையிலும் குறிப்பிடும் ஆர்தர் நிஜமாகவே இருந்தாரா என்பதே ஒரு கேள்விக்குறி. அவரைப் பற்றிய புனைவுக் கதையை ஆதாரமாகக் கொண்ட திரைக்கதை பல கற்பனை காட்சிகளின் மூலம் இந்தத் தேடலைச் சித்தரிக்கிறது. 

நகைச்சுவை, தத்துவ சிந்தனை, அரசியல் நையாண்டி போன்றவையின் மூலம் கிறிஸ்துவ தர்மத்தை விமர்சிக்க முயல்கின்றனர் மோன்டி பைத்தான் குழுவினர். இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் திரைப்பட விசிறிகளுக்கு என்றும் அழியா நினைவாக இருக்கிறது. 

சில உதாரணங்கள், ஆர்தரும் அவர் படையும் ஒரு குகைக்கு வருகின்றனர். புனித குவளை அந்த குகைக்குள் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. வழிகாட்டியாக வருபவர் அந்த குகையின் வாயில் ஒரு பயங்கர பிராணியால் காக்கப்படுகிறது எனக் கூறுகிறார். மறைந்து நின்று பார்க்கையில் ஒரு முயல் குகையிலிருந்து வெளியில் வருகிறது. அதைப் பார்த்த வழிகாட்டி “அதுதான் அந்த பயங்கர பிராணி” என்கிறார். “என்ன ஜோக் அடிக்கிறாய், முட்டாள் வீரனே… போ! அந்த முயலைக் கொல்!” என்கிறார் ஆர்தர். வீரன் நெருங்கியவுடன் முயல் அவனைக் கடித்துக் குதறுகிறது. பயந்துபோன ஆர்தர் என்ன செய்யலாம் என யோசிக்கும்போது புனித கைக்குண்டை (Holy hand grenade of Antioch) அதன் மேல் பயன்படுத்தலாம் என நினைக்கிறார். போப் பாண்டவரின் தூதர்கள் அந்தக் கைக்குண்டை எடுத்துவந்து ப்ரோக்ஷணம் செய்து ஆர்தரிடம் கொடுக்க அதை முயலின் மீது வீசுகிறார். 

இன்னொரு காட்சி: ஆர்தர் ஒரு வயல்வெளியில் போய்க்கொண்டிருக்கும்போது இரு பாட்டாளிகளிடம் வழி கேட்கிறார். “நீங்கள் யார்?” பாட்டாளிகளின் ஒருவன் கேட்கிறான். “நான் ஆர்தர் உங்கள் அரசன்.” “அரசனா? நான் உனக்கு வாக்களிக்கவில்லையே, யார் உன்னை அரசனாக நியமித்தது?”

“தாமரை தடாகத்தில் வீற்றிருந்த தேவதை தன் புனித கைகளினால் ஏக்ஸ்காலிபர் எனும் வாளை என்னிடம் ஒப்படைத்தாள். அதனால் நான் உன் அரசனானேன்”

"நீர் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஓணான் அரசாளும் அதிகாரத்தை உன்னிடம் கொடுக்க முடியாது. ஆளும் அதிகாரம் மக்களிடமிருந்து பெறப்பட வேண்டும். தண்ணீர் பூரான் ஒன்று எனக்கு ஒரு நீர்க் காயை கொடுத்தால் நான் அரசனாகிவிடுவேனா?"

“டேய் வாயை மூடு”

“என்னை ஒடுக்குகிறார்கள், அடிக்கிறார்கள், பாருங்கள் நண்பர்களே இதுதான் அரசின் ஆதிக்கம்... ஆ”

கர்த்தரின் வாழ்க்கை!

அடுத்துவந்த ‘பிரையனின் வாழ்க்கை’ (The life of Brian - 1979) கர்த்தரின் வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டது. பிரையன் கோஹன் என்ற யூதர் ஜெருசலத்தில் கர்த்தரின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் பிறக்கிறார். தேவதூதனாக தப்பாக நினைக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார். 

படப்பிடிப்பின்போதே கடும் எதிர்ப்புக்குளானது இந்தத் திரைப்படம். இதனைத் தயாரித்த நிறுவனம் பாதியிலேயே பின்வாங்கியது. இதை அறிந்த பீடில்ஸ் இசைக் குழுவின் உறுப்பினரான ஜார்ஜ் ஹாரிசன் தன் சொந்த பணத்தில் படத்தைத் தயாரித்து வெளியிட்டார். 

இங்கிலாந்தில் பதினெட்டு மாவட்டங்களில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அயர்லாந்து மற்றும் நார்வே இந்தப் படத்தை திரையிட மறுத்தனர். 

இந்தத் தடையை நையாண்டி செய்யும் வண்ணம் நார்வேயின் அண்டை நாடான சுவீடனில் இப்படத்தை வெளியிடும்போது, ‘இந்தப் படம் எவ்வளவு சிரிப்பானதென்றால், நார்வே இதைத் தடைசெய்திருக்கிறது’ என விளம்பரப்படுத்தினர். இப்போதும் இந்தப் படம் உலகின் தலைசிறந்த நூறு படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

மோன்டி பைத்தானின் வெற்றி எது?

1989இல் சப்மன் புற்றுநோயில் இறந்தபோதுகூட, அவர் நெருங்கிய நண்பரும் குழு உறுப்பினருமான இக்லீஸ், சப்மனின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் இப்படிச் சொன்னார்:

“நீங்கள் நினைப்பது என்னவென்று எனக்குத் தெரியும், ‘சப்மன் போன்ற ஒரு அன்பான அழகான நபரை இந்தச் சின்ன வயதில் கடவுள் ஏன் அழைத்துக்கொண்டார் என எனக்குப் புரியவில்லை’ என்றுதானே? 

ஆனால் நான் சொல்கிறேன். பரதேசி, தே. மகன் எண்ணெய் கொப்பளத்தில் பொறியட்டும்.  நான் ஏன் இப்படிச் சொன்னேன் என்றால், அவன் என்னை இப்படித்தான் சொல்ல வேண்டும் என நினைத்திருப்பான். இரங்கல் கூட்டத்தில் அமைதியாக இருக்கும் உங்களை சிரிக்கவைக்க அவன் நிச்சயமாக நினைத்திருப்பான்.”  

மோன்டி பைத்தானின் சமூகத் தாக்கம் பீடில்ஸ் குழு இசையின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கு ஈடாக கருதப்படுகிறது. மோன்டி பைத்தானை பற்றி இருத்தலியல், தத்துவம், உளவியல் போன்ற தளங்களிருந்து பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சலில் அளவுக்கு அதிகமாக வந்து நிரம்பும் அஞ்சல்களை ‘ஸ்பேம்’ (Spam) எனக் குறிப்பிடுவது, பறக்கும் சர்க்கஸின் ஒரு காட்சியின் விளைவாகத்தான்.

‘எப்போதுமே வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பாருங்கள்’ (Always look at the bright side of life) என்கிற பாடல் காலம் தாண்டிய பிரசித்தம் அடைந்துள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நேயர்களைத் தவிக்கவிட்டதே மோன்ட்டி பைத்தானின் மிகப் பெரிய வெற்றி.    

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






தவ்லின் – அம்ரிதாஒரு தலைவன்கிழக்கு சட்டமன்றத் தொகுதியாழ்ப்பாண நூலகம்பார்ப்பனர்களை பெரியார் வெறுத்தாரா?ஹெம்லிமருத்துவர் கணேசன்இரா.செழியன் கட்டுரைபர்தாதமிழ் கலாசார ஆழ்மனதின் குரல் மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்செய்தித் தொலைக்காட்சிகள்கொள்கைநிதிக் குறைப்பாடு அல்லஜொமெட்டோகலை அறிவியல் கல்லூரிகள்இந்திய ரயில்வேவிவசாயக் குடும்பங்கள்ஸரமாகோ: நாவல்களின் பயணம்பாண்டியன்சமஸ் வி.பி. சிங்ராமச்சந்திர குஹா நரேந்திர மோடிஅரசுப் பணிகள்நன்மாறன்சிந்தனைத் தளம்மஞ்சள்நாவல்கள்தனிச்சார்பியல் கோட்பாடுஎல்.ஆர்.சங்கர் கட்டுரைஎதிரியாகும் ‘ஜிம்’ பயிற்சிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!