கட்டுரை, வாழ்வியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் 4 நிமிட வாசிப்பு
‘அந்தரங்க’த்தைப் பணமாக்கும் சமூக ஊடகம்!
ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னால் உலகம் எப்படி இருந்தது என்பதே பலருக்கும் மறந்துவருகிறது.
அப்போதெல்லாம் வம்பளப்பதே மக்களுக்குச் செலவில்லாத பொழுதுபோக்காக இருந்தது. வாயாடிகள் சும்மா இருக்க முடியாமல், தங்களுடைய வீதியில் – சமூகத்தில் - வேலை செய்யும் இடத்தில், யார் – யாருடன் பேசுகிறார்கள், போகிறார்கள் என்பதையெல்லாம் - மிகவும் ரகசியமானதைப் பகிர்ந்துகொள்வதைப் போல - பேசுவார்கள்.
அதில் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்தே இருக்கும். கேட்பவர்களுக்கும் அது தெரியும் என்றாலும் அதை அறிவதிலும் மேற்கொண்டு தங்களுக்குள் அதைக் கற்பனையில் மெருகேற்றுவதிலும் அலாதியான ரகசிய கிளர்ச்சி இருந்தது என்பதே உண்மை. தங்களுடைய வாழ்க்கையை இன்னொருவருடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, தங்களுக்கு இல்லாத குறை அல்லது வராத சோதனை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்றால் அதில் ஏதோ தனக்கு வெற்றி ஏற்பட்டுவிட்டதைப் போன்ற சுபாவம் எல்லோருக்குமே இருக்கிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சமூக ஊடகங்களின் முதலீடு எது?
மனிதர்களின் இந்தப் பலவீனமான மனநிலையைத்தான் சமூக ஊடகங்கள் முதலீடாக வைத்து, காட்டுத்தீயென அவர்களுடைய உன்மத்தங்களைக் விசிறிவிட்டுக்கொண்டிருக்கிறது. நமக்கிருப்பதாக நாமே நம்பிக்கொண்டிருக்கும் ஆற்றல்கள், தனிப்பட்ட அழகுகள் ஆகியவற்றை வெளிக்காட்டி நம்மை நாமே விலைபேசிவருகிறோம். லாகூரில் வசிக்கும் குடும்பப் பெண் முதல் டொரான்டோவில் வாழும் இளநங்கை வரை, தன்னைப் பற்றிய காட்சிப் பதிவுகளையும் அந்தரங்கத் தகவல்களையும் - எவரும் கேட்காமலேயே - வெளியிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
அவர்கள் சொல்ல அல்லது காட்ட விரும்பும் தகவல்கள் மட்டுமல்ல, ‘மற்றவையும்’ சேர்ந்தே வெளியாவது குறித்துப் பலர் அறிந்திருக்கவில்லை, ஏனையோர் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. தங்களுடைய பதிவில் எதை வட்டமிட்டுக் காட்டுகிறார்கள், எதை ரசிக்கிறார்கள், எதற்கு உள்ளர்த்தத்துடன் விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மாறாக - எத்தனை பேர் பார்த்தார்கள், விரும்பினார்கள் என்ற எண்ணிக்கைக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.
அடுத்தவர்களைப் பார்க்கும் அல்லது ரசிக்கும் மனிதர்களின் உள்மன ஆசையே ஒரு ‘தொழிலாக’ வடிவெடுத்து வளர்ந்துவிட்டது. இப்போது இதில் யார் அதிகம் பேரை ஈர்ப்பது என்பதில் வரம்பில்லா போட்டியும் அதிகரித்துவிட்டது. இதனால் கோடிக்கணக்கானவர்கள் சமூக ஊடகங்களைப் பார்ப்பதில், படிப்பதில் அடிமைகளாகிவிட்டனர். ஏராளமானோர் காலையில் தூக்கம் கலைந்து எழுந்தவுடனேயே பல்லைக்கூட துலக்காமல் அல்லது முகத்தைக்கூட கழுவாமல் கைப்பேசியை எடுத்து அதில் வந்துள்ள தகவல்களை, படங்களைப் பார்க்கத் தொடங்குகின்றனர்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிக்கைகள் எப்படி உள்ளன?
16 May 2024
சமூக ஊடகங்களைப் பார்ப்பது பழைய வழக்கமாகிவிட்டாலும் அதில் விருப்பம், விருப்பமின்மையைத் தெரிவிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டபோதிலும் தங்களுடைய நட்பு வட்டத்திலும் உறவு வட்டத்திலும் யார் என்ன பதிவிட்டிருக்கிறார்கள் என்பதை உடனே தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தலைதூக்கி நிற்கிறது. யார் இன்றைக்கு அழகாக உடுத்தியிருக்கிறார்கள், ஒப்பனை செய்திருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். யாருடைய பதிவு வரவில்லை என்பதையும் உடன் கவனிக்கத் தயங்குவதில்லை, காரணம் - பதிவிடாதவர்களுக்கு ஏதோ துயரம் அல்லது சம்பவம் நடந்திருக்கும் என்ற ஊகம்தான்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூக ஊடக வாசிப்பு என்பது அன்றாடம் செய்தாக வேண்டிய கடமைகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக, அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தைப் பார்ப்பதில் பேரவா ஏற்பட்டுவிட்டது. தெரிந்தவர்கள் மட்டுமல்ல தெரியாதவர்களுடைய வாழ்க்கை விவரங்களும்கூட அதே ஆர்வத்துடன்தான் பார்க்கப்படுகின்றன.
ஒருவருடைய பதிவு நல்லதா கெட்டதா என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிட்டது; அதை எத்தனை பேர் பார்க்கின்றனர், எத்தனை பேர் எப்படியெல்லாம் விமர்சிக்கின்றனர் என்று பார்த்து, அதிக வரவேற்பு என்றால் பொறாமைப்படுவது அல்லது வாய்விட்டுப் பாராட்டுவது என்ற நிலைக்குச் சென்றுவிட்டது.
பிரபலம் எனும் பசி
சமூக ஊடகங்கள் வளர வளர, தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பசியும் பெருத்துவிட்டது. உங்களுடைய நண்பர் கல்லூரியில் இன்று என்ன செய்தார், டென்மார்க்கில் இருக்கும் உறவுக்காரர் என்ன செய்கிறார் என்று சாதாரணத் தகவல்களைத் தெரிந்துகொண்ட காலம் மலையேறிவிட்டது. இப்படிப் பார்ப்பவர்களின் தேவை அறிந்து, ‘தொழில்முறை’யாகவே காட்சிகளைப் பதிவேற்றுகிறவர்கள் அதற்கேற்ற ஆட்கள் - சாதனங்கள் - கருப்பொருள்களுடன் களமிறங்கிவிட்டார்கள்.
யூட்யூபர்களும் டிக்-டாக்கர்களும் சமூக ஊடக ரசிகர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டார்கள். ரசிகர்களை ஈர்க்கும் அல்காரிதம்கள் வலிமையடைந்துவிட்டன. கடையில் என்ன வாங்கினேன், வெளியில் என்ன சாப்பிட்டேன், நண்பனுடன் எப்படி – எதற்காக சண்டையிட்டேன், எப்படி பிறகு சமாதானமானேன் என்று - ஆயிரக்கணக்கான பேர் பார்க்க - பதிவிடுகிறார்கள்.
இவர்களில் பலர் காதலியுடன், மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைக்கூட கூச்சமில்லாமல் காட்டுகிறார்கள் - அது மற்றவர்களுக்கும் பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் என்ற பாவனையில். இவற்றைப் பார்த்தாவது மேலும் மேலும் தங்களுக்கு ரசிகர் கூட்டம் பெருகட்டும் என்ற நோக்கத்திலும் இதைச் செய்கின்றனர்.
யூட்யூபராகவோ டிக்-டாக்கராகவோ ஆகிவிட வேண்டும் என்று பல பாகிஸ்தானியர்கள் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம், ஆதிகாலத்திலிருந்தே இப்படிப்பட்ட வம்புகளை விரும்பும் சமூகமாக இருப்பது மட்டுமல்ல, சிலருக்கு இதன் மூலம் கைச் செலவுக்குப் பணமும் கிடைக்கிறது.
டாலர்கள் கணக்கில் மிகக் குறைவுதான் என்றாலும் பாகிஸ்தானிய ரூபாய் கணக்கில் கணிசமாக இருப்பதாலும், இதற்கெல்லாம் வரி போட முடியாது என்பதாலும் ஆர்வமாகப் பதிவிடுகிறார்கள். அக்கம் பக்கத்தில் இல்லாவிட்டாலும் சமூக ஊடக வட்டாரத்தில் பிரபலமாகிவிட முடிகிறது என்பதாலும் பலரும் இதை விரும்புகின்றனர்.
அந்தரங்கமா? வணிகமா?
இதில் வியப்பு என்னவென்றால், ஏற்கெனவே வெவ்வேறு துறைகளில் புகழ் சம்பாதித்துவிட்ட பலரும் அவர்களுடைய வழித்தோன்றல்களும்கூட இதில் இறங்கியிருப்பதுதான். இந்தப் பிரபலங்களும்கூட தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை இதன் மூலம் பிரபலப்படுத்திக்கொள்வதுடன் மற்ற பிரபலங்களுடன் சேர்ந்து ‘அயல் மகரந்த சேர்க்கை’யிலும் ஈடுபடுகின்றனர்.
இவர்கள்தான் இப்படி என்றால், இதை தினமும் கவனித்து கருத்து பதிவிடும் ஆர்வலர்களும் அதிகமாக இருக்கின்றனர். இந்தப் பதிவுகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் பெரும்பாலானவர்கள் இதை விரும்புவதில்லை என்பதை அவர்களுடைய கருத்துகளிலிருந்து எப்போதுதான் இவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை.
பதிவை வெளியிட்டுவிட்டு, ‘என்னை ஏன் யாரும் பார்க்கவுமில்லை – கருத்தும் தெரிவிக்கவில்லை’ என்று மண்டையை உடைத்துக்கொண்டவர்கள் இப்போது தங்களுடைய அந்தரங்கத்தைக்கூட பகிர்ந்துகொள்வதாகவே தெரிகிறது. அதையும்கூட மிகச் சிலர்தான், பார்த்த பிறகு விமர்சனங்களைப் பதிவிடுகின்றனர். இப்படித் தன்னையே விலைபேசி காட்சிப்படுத்துவது அவசியமா என்று பதிவிடுவோர் சிந்திக்க வேண்டும்.
மனதை அடக்கத் தெரியாதவர்கள்தான் இப்படிக் காட்சிகளைப் பதிவிடுகிறார்கள் என்றால், அதேபோல சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் தினசரி இந்தக் காட்சிகளையெல்லாம் தேடித்தேடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வினோதமான மனப் பிறழ்வுதான். வெறும் வம்புப் பேச்சாக இருந்த பழக்கம் இப்போது விபரீதமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இது நமக்கு அவசியமா, இது எந்த வகையில் நமக்குப் பயன்படப்போகிறது என்று ஒவ்வொருவரும் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். அடுத்தமுறை பொழுதுபோக்குக்காக இப்படி இன்னொருவருடைய அந்தரங்கத்தைப் பார்க்க முற்படும்போது, இதன் பின்னால் உள்ள வணிக நோக்கத்தையும் நினைவில் கொள்வது நல்லது.
© த டான்
தொடர்புடைய கட்டுரைகள்
சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிக்கைகள் எப்படி உள்ளன?
‘ஸ்மார்ட்போன்’ தடையால் மேம்பட்டது படிப்பு!
குக்கீ திருடன்கள்
திரை அடிமைகள் ஆகிறோமா?
நீங்கள் லைக் போடும் கருத்து யாருடையது?
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.