கட்டுரை, தொடர், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

பிராமணர் என்பது ஜாதியா, வர்ணமா?

ராஜன் குறை கிருஷ்ணன்
16 Dec 2023, 5:00 am
2

முதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். பிராமண அடையாளத்தை விவாதிக்கும்போது அதனை தனிப்பட்ட பிராமணர்களுக்கு எதிரானதாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக அந்த அடையாளத்தைக் குறித்து பிராமணரும், பிராமணர் அல்லாதோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. நான் இங்கே முன்னெடுக்கும் விவாதத்தை விருப்பு, வெறுப்பு சார்ந்த விவாதமாகக் கருத வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். 

தனிப்பட்ட பிராமணர்களில் எல்லா சமூகங்களையும்போலவே பலதரப்பட்ட மனிதர்களும் உண்டு. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் ஏராளமான முற்போக்கான பங்களிப்புகளை, சமூக சீர்திருத்த முயற்சிகளைச் செய்தவர்கள் தனிப்பட்ட பிராமணர்கள் என்பதைக் கருதாமல் இருக்க முடியாது. சனாதான பிராமணர்களை எதிர்த்து முற்போக்கு பிராமணர்கள் இயங்கியுள்ளார்கள். 

உதாரணமாக, பாபா சாஹேப் அம்பேத்கர் ‘ரானடே, காந்தி, ஜின்னா’ கட்டுரையில் பாராட்டும் மஹாதேவ் கோவிந்த் ரானடேகூட (1842-1901) பிராமணர்தான். பொதுவுடமை இயக்கங்களில் பலர் கணிசமாக பங்களித்துள்ளனர். சுதந்திரவாதிகளாக விளங்கியுள்ளனர். கல்வி, அரசியல், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளிலும் பங்களித்துள்ளனர். இது வர்ண பகுப்பு அடிப்படையில் கல்வியில் முன்னேறிய சமூகப் பிரிவில் இயல்பாக நடப்பதுதான். 

இந்த நிலைதான் பொதுப்படையான பிராமண அடையாளம் குறித்த விவாதத்தைச் சிக்கலாக்குகிறது. பலரும் அதில் ஈடுபட தயங்குகிறார்கள். யார் மனதையாவது புண்படுத்திவிடுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால் பொது நன்மை கருதி நாம் உடைத்துப் பேசத்தான் வேண்டும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிராமணர் – பார்ப்பனர்

பிராமணர் என்ற அடையாளம் ஜாதியைக் குறிப்பதல்ல. அது வர்ண அடையாளமே. இந்திய மாநிலங்களில் பல்வேறு ஜாதிகள் அந்த அடையாளத்தினுள் வருகின்றன. தமிழ்நாட்டில் ஐயர், ஐயங்கார் என்ற பிரிவுகள், கேரளாவில் நம்பூதிரிகள், வங்காளத்தில் பந்தோபாத்யாய், சட்டோபாத்யாய் எனப் பல பிரிவுகள் உள்ளன. இவற்றுக்குள்ளேயே அகமணமுறை உட்பிரிவுகளும் உள்ளன. ஆனாலும், பிராமணர் என்ற பொது அடையாளமும் சுலபமாக பேணப்படுகிறது! 

தமிழ்நாட்டில் சிவனை முதற்கடவுளாக வழிபடும் ஐயர்களும், விஷ்ணுவை முதற்கடவுளாக வழிபடும் ஐயங்கார்களும் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். சமீப காலங்களில் இதில் சிறிது தளர்வு இருக்கலாம் என்றாலும், பெரும்பாலும் அகமணமுறைதான் கடைபிடிப்பார்கள். ஆனால், இரண்டு பிரிவினருமே பிராமணர் என்று கூறிக்கொள்வர். அதாவது, ஜாதி அடையாளத்திற்கு இணையாக வர்ண அடையாளம் இருக்கிறது என்று கூறலாம்.  

தமிழில் பிராமணர் என்ற வர்ண அடையாளத்தைப் பயன்படுத்தாமல், பொது அடையாளமாக பார்ப்பனர் என்று சொல்லும் சாத்தியம் உள்ளது. பார்ப்பனர் என்ற தமிழ் வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அவை இழிவான பொருள் கொண்டவை அல்ல. 

ஆனாலும், பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பிராமணரை இழிவுபடுத்துவதாக பலர் நினைக்கின்றனர். பிராமண ஜாதி ஒன்றில் பிறந்த நான் பார்ப்பனர் என்ற சொல்லை வர்ண அடையாளத்தைத் தவிர்க்க விரும்பி பயன்படுத்தினாலும் சிலரால் கண்டிக்கப்படுவது உண்டு. 

வர்ண ஒழுங்கை ஜாதியமாக்கும் பிராமண அடையாளம் 

சென்ற வாரம் எப்படி வர்ண தோற்றவியலே ஜாதியின் தோற்றவியலாகவும் மாறுகிறது என்பதைப் பரிசீலித்தோம். அதாவது, ஒருவரது வர்ணம் பிறப்பிலேயே அடையாளமாவதும், அந்தப் பிறப்பு முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் அமைவதாகக் கூறுவதும் வர்ண அடையாளத்தை உடல் சார்ந்த சாராம்சமாக மாற்றுவதைப் பார்த்தோம்.  

அப்படி அது உடல் சார்ந்த சாராம்சமாக இருக்க வேண்டும் என்றால் அகமணமுறை இன்றியமையாததாக இருப்பதையும் நாம் வர்ண தோற்றவியல் என்றோம். அதுவே ஜாதியத்திற்குமான தோற்றவியலாக மாறியதால்தான் ஆயிரக்கணக்கான ஜாதிகள் இன்றும் தீவிரமாக அகமணமுறையைக் கடைபிடிக்கின்றன; அதாவது, ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் வாழ்கின்றன. 

இந்தப் பிறப்புசார் தோற்றவியல் பிணைப்புக்கு அடுத்தபடியாக பிராமணர் என்ற அடையாளம் வர்ண பாகுபாட்டுச் சிந்தனையையும், ஜாதியத்தையும் இன்றுவரை இணைக்கக்கூடியதாக இருக்கிறது. அதைத்தான் நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். 

உதாரணமாக, சத்திரியர்களை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் பல ஜாதிகள் தங்களைச் சத்திரியர்கள் என்று கூறிக்கொள்ளலாம். வன்னியகுல ஷத்திரியர் என்று அதிகாரபூர்வமாகவே பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பதிவாகியுள்ளது. ஆனால், அப்படி இரண்டு ஜாதிகள் சந்திக்கும்போது “நீங்கள் ஷத்திரியரா, நானும் ஷத்திரியர்” என்று பேசிக்கொள்வது சாத்தியமில்லை. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?

ராஜன் குறை கிருஷ்ணன் 18 Nov 2023

ஏனெனில், சத்திரிய அடையாளத்திற்கு அப்படி ஒரு தொடர்ச்சியில்லை. யார் சத்திரியர் என்று கூறிக்கொள்ளலாம் என்பதே ஒரு விவாதம்தான். அதனை அடுத்த வாரம் விரிவாக பரிசீலிப்போம். அதேபோல ஒரு செட்டியாரும், மார்வாடியும் சந்தித்தால் நீங்கள் வைசியர், நானும் வைசியர் என்று பேசிக்கொள்ள சாத்தியம் குறைவு. அந்த அடையாளத்திற்கும் அப்படி ஒரு தொடர்ச்சியில்லை. 

இதற்கு முக்கிய காரணம், சத்திரியர்களின் தொழில் என்பதோ, வைசியர்களின் தொழில் என்பதோ அவர்களுடைய ஏகபோக அடையாளமாக இல்லை. நாம் முன்னமே சொன்னபடி போர்த்தொழிலில் அனைத்து ஜாதியினரும் ஈடுபடுகிறார்கள். வர்த்தகத்தில் அனைத்து ஜாதியினரும் ஈடுபடுகிறார்கள். 

ஆனால், பிராமணர்களின் ஏகபோக உரிமையாக, தொழிலாக கோயில் பூஜையும், புரோகிதமும் பரவலாக தொடர்ந்துவருகிறது. அதாவது, சடங்குரீதியான அவர்களின் தனித்துவம் பெரிதும் பேணப்பட்டுவருகிறது. இதில் மற்ற வர்ணங்களுக்கு இல்லாததொரு தொடர்ச்சி பிராமணர்களுக்கு இருக்கிறது. 

பிராமணர்கள் பிற தொழில்கள் பலவற்றிலும் ஈடுபட்டாலும். அவர்களுக்கு அடையாளமாக உள்ள மதம் சார், சடங்கு சார் தொழில்களில் அவர்களே பரம்பரையாக, பாரம்பரியமாக தொடர்கின்றனர். உதாரணமாக காசியிலோ, ராமேஸ்வரத்திலோ நீத்தார் நினைவாக ஒருவர் சடங்குகள் செய்ய வேண்டுமென்றால் அங்குள்ள பிராமணர்களிடம்தான் செல்ல வேண்டும். 

திருப்பதியிலோ, பூரியிலோ, குருவாயூரிலோ, காசியிலோ ஆலயங்களில் பூஜைகள் செய்பவர்களாக பிராமணர்களே இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களது வர்ண அடையாளம் உறுதிசெய்யப்படுகிறது. அந்த அடையாளம் காரணமாக பிற தொழில்கள் செய்யும் எல்லா பிராமணர்களுக்கும் அந்தத் தனித்துவமான வர்ண அடையாளம் சாத்தியமாகிறது. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?

ராஜன் குறை கிருஷ்ணன் 25 Nov 2023

வர்ண ‘தர்ம’ அடையாளமா? சமூக ஒழுங்கு அடையாளமா? 

வர்ண தர்மம் என்று பார்த்தால் மனுதர்ம சாஸ்திரத்தில் பிராமணர்களின் மிக முக்கியமான பணி வேதம் பயில்வது, ஓதுவது என்றுதான் கூறப்பட்டுள்ளது. இன்றுள்ள பிராமணர்களில் 95% பேருக்கு வேதமே தெரியாது எனக் கூறலாம். அதைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதுகூட கிடையாது. சம்ஸ்கிருத மொழியைப் பயில்வது கடினம் என்பதால் பெரும்பாலோர் அந்த மொழியையோ, வேதங்களையோ பயில முயற்சிப்பதில்லை. 

திருமணச் சடங்கு, ஈமச் சடங்குகளில் சம்ஸ்கிருத மந்திரம் சொல்பவர்களில்கூட பெரும்பாலோர் அவற்றிற்குப் பொருள் தெரிந்து சொல்வதில்லை. அதனால் தவறாகச் சொல்வதும், உச்சரிப்பதும் சகஜமாக இருக்கிறது. ஏனெனில், இவர்களுக்கு சம்ஸ்கிருதம் ஒரு மொழியாகத் தெரியாது. மனனம் செய்தே மந்திரங்களைச் சொல்கின்றனர். இப்போது சிலர் சம்ஸ்கிருத வார்த்தைகளைத் தமிழில் எழுதி சைக்ளோஸ்டைல் செய்து வைத்துக்கொண்டு பார்த்துப் படிக்கின்றனர். இதற்கு ஏதாவது செயலிகூட தோன்றியிருக்கலாம். 

இந்த நிலையில் பிராமணர்கள் வர்ண தர்ம பாகுபாட்டின்படி அந்த அடையாளத்தைப் பேணுவதாக சொல்ல வாய்ப்பேயில்லை. அதை ஒரு சமூக அடையாளமாகவே வைத்துள்ளனர். இப்படி ஒரு வர்ண அடையாளம், சமூக அடையாளமாகச் செயல்படுவதால் அது சுலபத்தில் ஜாதியத்தை வர்ண ஒழுங்கின் தொடர்ச்சியாக மாற்றுகிறது. 

வாழ்வியல் நெறிமுறை என்றால் அகமணமுறை எதற்கு? 

இந்த நிலையில் பிராமணியம் என்பது வாழ்வியல் முறைதான், கலாசாரம்தான் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அது ஒரு இலட்சிய உருவகம் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு. இதைக் குறித்து பின்னால் ஒரு அத்தியாயத்தில் ஒரு சில உதாரணங்களுடன் விரிவாகக் காண்போம். 

இங்கே நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி என்னவென்றால் அப்படி அது ஒரு வாழ்வியல் முறைதான் என்றால், பிராமண ஆண்களும், பெண்களும் யாரை திருமணம் செய்துகொண்டாலும் அந்த முறையைக் கடைபிடிக்கலாம் அல்லவா? ஏன் அவசியம் ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? பிறப்பு ஏன் கலாசாரத்தைத் தீர்மானிக்க வேண்டும்? 

எண்பதுகளின் துவக்கத்தில் நன்றாக வேதமெல்லாம் படித்த ஒரு அய்யங்கார் பெரியவர் தன் மகள் ஒரு ஐயர் இளைஞரைக் காதலித்தபோது, அவனை திருமணம் செய்துகொண்டால் ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வேன் என்று மிரட்டியதைக் கண்டுள்ளேன். 

அப்படியென்றால் பிராமணரல்லாத ஒருவரை திருமணம் செய்வதை நினைத்தே பார்க்க முடியாது அல்லவா? (விதிவிலக்குகள் விதியல்ல; ஜாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன – ஆனால் கணிசமான சதவீத்தில் இல்லை). 

வர்ண ஒழுங்கு உருவாவதற்கு முன்பே நிலவிய சமூக அடையாளம் பிராமண அடையாளம் என்று பார்த்தோம். பிராமணர்களே வர்ண ஒழுங்கை உருவாக்கினார்கள். இன்றளவும் அந்த சமூக அடையாளம் தொடர்ந்து பேணப்பட்டுவருகிறது. அது அகமணமுறையின் மூலம் உடல் சார்ந்த தோற்றவியலாக உறுதிசெய்யப்படுகிறது. 

இந்த அடையாளச் சிறை என்பது பிராமணர்களுக்கு தேவையா என்பதை அந்தச் சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். பிறர் என்ன கூறுகிறார்கள் என்பது மட்டுமல்ல. அந்தச் சமூகமே தங்கள் வரலாற்று அடையாளத்தை கவனமாக பரிசீலிக்கக் கற்க வேண்டும். குற்ற உணர்வுகொள்வது தேவையில்லை; பிறரை குற்றஞ்சாட்டவும் தேவையில்லை. தேவை தெளிவான சமூக நோக்கிலான பொது நன்மை குறித்த சிந்தனையே.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன் 09 Dec 2023

மற்ற ஜாதியினர் அகமணமுறையைக் கடைபிடிக்கிறார்களே, அது மட்டும் சரியா என்று கேட்பதன் மூலம் பிராமணர்கள் தங்கள் வர்ண தோற்றவியல் சமுக முன்னுதாரணத்தைத் தவிர்க்க முடியாது. எங்கிருந்து துவங்கியதோ, எதன் மூலம் தொடர்ச்சி பேணப்படுகிறதோ, அந்தப் பிராமண அடையாளத்திற்குத் தனித்த சமூக முக்கியத்துவம் இருப்பதை ஏற்க வேண்டும். 

குறைந்தபட்சம் முதலில் அகமணமுறையைத் தவிர்ப்பதன் மூலம் பிறப்பின் தோற்றவியல் சாராம்சத்தைத் தவிர்க்க முன்வர வேண்டும். பூணூல் போடுவதோ, மந்திரம் சொல்வதோ, கோயிலில் பூஜை செய்வதோ எல்லோருக்குமான உரிமையானால் பெரிய பிரச்சினையல்ல. 

ஆனால், முதலில் ஆணும், பெண்ணுமான மனித உயிரிகள் ஜாதி குறித்த கவலையின்றி மணம் செய்து வாழ வகைசெய்ய வேண்டும். பிராமண அடையாளத்தின் பிறப்பு சார் தோற்றவியல் சிறை தகர்ப்பட்டு, புதிய சமூக முன்னுதாரணமாக வேண்டும்!

அதற்கான ஒரு சமகால தர்ம சாஸ்திரத்தை சம்ஸ்கிருதத்திலும், பிற மொழிகளிலும் எழுத வேண்டும். ‘இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! தனியிருவர் மணம் புரிய வர்ணம் / ஜாதி தடையில்லை என்போம்!’ என்ற புரிதலை, நடைமுறையை உருவாக்க வேண்டும்.  

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?
வர்ண ஒழுங்கு என்பது தர்மமா?
ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்?
வர்ண அடையாளம் உடலுக்கா, ஆன்மாவிற்கா?
வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


5

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   7 months ago

வர்ண, சாதி அமைப்பின் கர்த்தாக்கள் பிராமணர்கள் என்றாலும் அவர்களின் பெண்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதை, தலித் சாதி இளைஞர்கள் உட்பட, காண முடிகிறது. எனக்குத்தெரிந்து பல திருமணங்கள் இவ்வாறு நடந்துள்ளன. அப்பெண்களின் பெரும்பாலான பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதையும் காணமுடிகிறது.. நன்கு படித்த பக்குவப்பட்ட சமூகமான பிராமணர்கள் ஆணவக்கொலை போன்ற வன்செயல்களில் ஈடுபடுவதில்லை. இவ்வன்செயல்களில் ஈடுபடுவோர்களில் பெரும்பாலாணவர்கள் படிக்காத குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, குறிப்பாக இடைநிலைச் சாதிகளைச் சேர்தவர்களே. வறட்டுக்கவுரவமும், ஆதிக்கசாதி மனப்பான்மையும், வீண்ஐம்பமும் கொண்டவர்களே ஆணவக்கொலைகளில் ஈடுபடுகின்றனர். கட்டுரையாளர், பிராமணர்கள் சாதி இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லும் ஆலோசனை, பிராமணர்களைவிட மற்ற சாதியினருக்கு மிகவும் பொருந்திப்போகிறது எனலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   7 months ago

Brahims thinking differently. And quit interesting that they universally supporting modi....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பேரிடர் மேலாண்மைகூகுள் ப்ளேஸ்டார்உலகம் ஒரு நாடக மேடைராமச்சந்திர குஹா கட்டுரைகள்அசோகா: போர்ட்ரைட் ஆஃப் ஏ ஃபிலாஸபர் கிங்கலைஞர் மு கருணாநிதிதுளசி கவுடாபுதிய முழக்கங்கள்மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் சகோதமோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்மானுட செயல்கள்பிரேசில்: மீண்டும் லூலா ராஜ்ஜியம்தேசத்தின் அவமானம்கழிவுகட்டுப்பாடு இல்லையா?பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அருஞ்சொல்புதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைஉமர் அப்துல்லாமஹாராஷ்டிரம்: தான் வைத்த கண்ணியில் தானே சிக்கிய பாமுலாயம் சிங்மனப் பதற்றம்பிற்படுத்தப்பட்டோர்பாடநூல் மரபுஇந்திய சோஷலிஸம்சமூக ஜனநாயகக் கட்சிபத்திரிகையாளர் சுவாமிநாத ஐயர்தமிழ் உரையாடல்சா.விஜயகுமார் கட்டுரைகோதுமைமிதவாதியுமல்ல

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!