கட்டுரை, சினிமா, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?
ராஜராஜ சோழன் இந்து மன்னனா அல்லது தமிழ் சைவ மன்னனா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பலருக்கும், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று வியப்பாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம். பெயரில் அரசியல் இருக்கிறது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதைத்தான் கூறினார். நமது இருப்பே அரசியல்தான் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். இதைத்தான் ‘ஆன்டு - பொலிடிக்கல்’ (onto-political) என்று கூறுவார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி.
வெற்றிமாறன் தன்னுடைய பேச்சில், எப்படி தமிழ் சினிமா திராவிட இயக்கத்தின் பங்கேற்பால் முற்போக்கான, மதச்சார்பற்ற அரசியலைப் பேசுவதாக மாறியது என்பதைக் கூறி, இன்றும் அந்த மரபைத் தொடர வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். நமது அடையாளங்கள் களவாடப்படுகின்றன என்று கூறிய வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது, ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்றும் கூறினார்.
ஏன் பேசினார் வெற்றிமாறன்?
உலகெங்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி பல்வேறு மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ‘ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்று வெற்றிமாறன் கூறியது பரவலாக விவாதத்தை உருவாக்கி உள்ளது. உள்ளபடி சொன்னால் வட இந்திய ஊடகங்களில் இந்தப் படத்தைக் குறித்து பேசும்போது, பலர் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளம் கண்டு பேசுவது உண்மை.
இன்றுள்ள அரசியல் சூழலில் இந்து அடையாளம் என்பது இந்துத்துவ கருத்தியலில் ஒற்றை அகில இந்திய அடையாளமாக, பெரும்பான்மை அடையாளமாக மாற்றப்பட்டு சிறுபான்மை மக்களுக்கும், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அதிகாரக் குவிப்பிற்கு, பாசிஸ அணுகுமுறைக்கு துணைபோகிறது என்பதுதான் இதில் முக்கிய பிரச்சினையாகும். வெற்றி மாறன் நமது அடையாளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதன் பொருள் தமிழகத்தில் இந்துத்துவ அரசியலின் ஊடுருவலைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.
ஆனால், இந்தக் கருத்தை வாசிக்கும் பலருக்கும் ஏற்படும் குழப்பம் இதுதான்: ‘சைவம், வைணவம் அனைத்தும் இந்து மதம் என்றுதானே இப்போது குறிப்பிடப்படுகிறது? அப்படி இருக்கும்போது சைவ சமயத்தை ஆதரித்த, தஞ்சை கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை இந்து மன்னன் அல்ல என்று எப்படி ஒருவர் கூற முடியும்?’
இந்தக் கேள்விக்குச் சரியான பதிலை நாம் பெற வேண்டும் என்றால், நாம் இந்து மதம் என்ற ஓர் அடையாளம் எப்படி, எப்போது உருவாகியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இந்து மதம் என்ற அடையாளத்தை உருவாக்கியது யார்?
சிந்து நதி தீரத்தை பாரசீக மொழியில் ‘ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். அரேபிய மொழியில் ‘அல்-ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். எட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அங்கு குடியேறியபோது, முஸ்லீம் அல்லாதவர்களைக் குறிக்க பாரசீக மொழியில் ‘ஹிந்து’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார் புகழ்பெற்ற ஆய்வாளரும் லங்காஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான காவின் ஃபிளட் (Prof.Gavin Flood). “பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சம்ஸ்கிருத நூல்களிலும் சிலர் இந்த ‘ஹிந்து’ என்ற அடையாளத்தைப் பயன்படுத்தினார்கள்” என்று அவர் சொல்கிறார்.
ஆனால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஹிந்து என்ற சொல்லுடன் இஸம் என்ற மேற்கத்திய பின்னொட்டைச் சேர்ந்து, ‘ஹிந்துயிஸம்’ என்ற வரலாற்று மத அடையாளம் உருவாக்கப்பட்டது. புத்திஸம், ஜெயினிஸம், சீக்கிஸம் என்று எல்லாவற்றிற்கும் இஸம் என்ற பின்னொட்டைக் கொடுத்து உலக வரலாற்று மதங்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். மேற்கத்திய பல்கலைகழகங்களில் இவற்றைக் குறித்து பாடங்கள் நடத்த ஆரம்பித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்தியர்கள் மெள்ள, மெள்ள இந்த வார்த்தையை ‘இந்துயிஸம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலானார்கள்.
இவ்வாறு ஐரோப்பியர்கள் ஒற்றை அடையாளமாக இந்து மதத்தை உருவாக்கியபோது வேதம், உபநிதடம், பிராமணம், புராணம் எனப் பல்வேறு சம்ஸ்கிருத நூல்களை மையப்படுத்தியே இந்த மதத்தை அடையாளப்படுத்தினார்கள். அதனால், அவற்றுடன் சேர்த்து சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தர்மசாஸ்திரங்களும் இந்துக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்களாகக் கருதப்பட்டன. இது சம்ஸ்கிருதத்தை பேசிய, எழுதிய பிராமணர்களை இந்து மதத்தின் சகல சக்தி வாய்ந்த பிரிவினராக மாற்றியது.
பிராமணர் அல்லாதோரின் பிரச்சினை
இது பிராமணர்கள் அல்லாத பல்வேறு சமூகப் பிரிவினர், அவர்கள் வழிபாட்டு முறைகள், இறையியல் கோட்பாடுகள் எல்லாவற்றையும் திடீரென்று ஒரே அடையாளத்தில் சேர்த்துக்கட்டுவதாக மாற்றியது. ஓர் உதாரணமாக, தமிழில் சைவ சித்தாந்தத்தை தனிப்பட்ட சிந்தனை முறையாக வளர்த்துவந்த வேளாளர்களை பிராமணர்களுக்கு அடுத்து நிலையில் வைத்து சூத்திரர்கள் அல்லது சற்சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் நிலை உருவானதைச் சொல்லலாம்.
தனது ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் 1941இல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதில், ‘சூத்திரர்களை பிராமணர்கள் மணந்தால் அந்தத் திருமணம் இந்து தர்ம சாஸ்திரங்களின்படி செல்லாது’ என்று நீதிபதிகள் பாண்டு ரங்க ராவும், சோமையாவும் தீர்ப்பளித்துள்ளார்கள் (Appeal Number 33 of 1939) என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இது எத்தகைய சிக்கலை பிராமணரல்லாதோருக்கு ஏற்படுத்தும் என்பதே பிரச்சினை. அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்துக்கள் என்றுதான் அரசு அடையாளப்படுத்தும். அவர்கள் அப்படி இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் பிராமணர்களுக்குத் தாழ்வான சமூக அந்தஸ்துடனேயே வாழ வேண்டும். மேற்சொன்ன வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆண்டு ஏதோ பண்டைய காலமல்ல. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஆறு ஆண்டுகள் முன்னர்தான் இது நிகழ்ந்துள்ளது என்பது இங்கு எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது ஆகும்.
இந்துத்துவ அரசியலின் ஒற்றை இந்து அடையாளம்
இந்த சூழ்நிலையில்தான் தமிழ் சைவர்கள் தங்கள் மதம் தனித்துவமானது இந்து மதத்தைச் சேராதது என்று சொல்வதற்கு குறிப்பான பொருள் தோன்றுகிறது. இதுபோலவே தமிழ் தென் கலை வைணவர்களும் என்று கூறலாம். பிற கிராம தெய்வங்களை வழிபடுவோரும் தாங்கள் இந்துக்கள் அல்ல; கருப்பண்ணசாமியை வழிபடுபவர்கள் என்று கூறலாம்.
எதனால் இவர்கள் எல்லாம் சம்ஸ்கிருத மொழி நூல்களையும், பிராமணர்களையும் மையமாகக் கொண்ட இந்து மத்தினை தங்கள் மதமாக ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பானதுதானே?
இந்தப் பழைய பிரச்சினை போதாதென்று இப்போது இந்து மதம் சார்ந்த இந்தக் கேள்வியை அரசியல் அடையாளம் சார்ந்த கேள்வியாக இந்துத்துவம் மாற்றியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறைக் கிளர்ச்சி நடத்த விரும்பிய சாவர்க்கர், கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு 1920களின் துவக்கத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் இந்துத்துவம் என்ற கருத்தியலை விளக்கும் ‘தி எசன்ஷியல் ஆஃப் இந்துத்வா’ (The Essentials of Hindutva) நூலை எழுதினார். இதன் பின்னணியை விரிவாக அறிய கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழகப் பேராசிரியர் விநாயக் சதுர்வேதி எழுதிய ‘ஹிந்துத்வா அண்டு வைலன்ஸ்: வி.டி.சாவர்க்கர் அண்டு தி பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History) நூலைப் படிப்பது அவசியம்.
சாவர்க்கரால் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்தார். சாவர்க்கர் ஹிந்து மகா சபையின் தலைவரானார். படித்தவர்கள், பெரிய மனிதர்களை ஹிந்து மகா சபை பிரதான உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. மத்தியதர வர்க்கத்தினரை அணிதிரட்டியது ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளுமே இந்துத்துவம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டவை. இன்று வரை இந்து அமைப்புகளின் அரசியல் சித்தாந்தமாக இந்துத்துவமே இருக்கிறது.
இந்துத்துவம் என்ன சொல்கிறது என்றால், ‘இந்தியா என்பது இந்துக்களின் தேசம். இந்திய அரசு என்பது இந்து ராஷ்டிரம். இந்து என்பது யாரென்றால் இந்தியாவை யாரெல்லாம் தந்தை பூமியாக, தாய் பூமியாக, புண்ணிய பூமியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என்பதுதான் வரையறை. வாடிகன், ஜெருசலேம், மெக்கா போன்ற இந்திய நிலப்பரப்பிற்கு வெளியில் உள்ள இடங்களைப் புனிதத் தலங்களாகக் கருதினால் அவர்கள் இந்து தேசத்தின் உண்மையான குடிமக்களாக இருக்க முடியாது என்பதே இந்தக் கருத்தாகும்.
இதன்படி இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் விலக்கப்படுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையென்றால், அனைவரும் இந்துக்கள் என்று ஒற்றை அடையாளமாக மாறும்போது பல்வேறு சமூகங்களின் நலன்கள், மாநில நலன்கள், மக்கள் தொகுதிகளின் கலாசார வேறுபாடுகள், அவர்களுடைய உரிமைகள் எல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. மிக முக்கியமாக பிராமணியத்துக்குக் கீழே இவை தள்ளப்படுகின்றன.
இப்படி பல்வேறு வித்தியாசங்களை, அடையாளங்களைக் கொண்ட மக்கள் தொகுதிகளை, பல்வேறு முரண்களைக் கொண்ட சமூக இயக்கத்தை, ஒற்றை அடையாளத்தில் கட்டுவதைத்தான் பாசிஸ அரசியல் என்று கூறுவார்கள். ‘ஃபஷாய்ரே’ (Fasciare) என்ற இத்தாலிய சொல்லுக்கு சேர்த்துக் கட்டுதல் என்பதே அடிப்படைப் பொருள்.
பலரும் என்ன நினைக்கலாம் என்றால், எல்லோரையும் இந்து என்று சேர்த்துக் கட்டுவது ஒற்றுமையைத்தானே வளர்க்கிறது என்று நினைக்கலாம். ஆனால், அது சரியான வழியல்ல. வித்தியாசங்களைப் புரிந்து ஏற்று நல்லிணக்கத்துடன் வாழ்வதுதான் நாகரிகமே தவிர வித்தியாசங்களை அழித்து, ஏதோ ஓர் அடையாளத்தின் கீழ் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டுவது அல்ல.
நவீன அரசியலில் ஒவ்வொரு குடிநபரும் இறையாண்மை பொருந்தியவர். தனக்கென உரிமைகளும், சுதந்திரமும் கொண்டவர். நான் விரும்பினால் என்னை வைணவன் என்று அழைத்துக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். நான் திருமாலைத்தான் வழிபடுவேன், சிவனை வழிபடமாட்டேன் என்று சொல்லும் சுதந்திரம் வேண்டும். வேறொருவருக்கு வேறொரு தெய்வம். இன்னொருவருக்கு தெய்வ நம்பிக்கையே கிடையாது. இப்படியிருக்க எல்லோரும் ஏன் இந்து என்று கூறிக்கொள்ள வேண்டும்?
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?
21 Oct 2022
எல்லோர் நலன்களும் ஒன்றல்ல!
ஒவ்வொரு வர்க்கத்தின் நலன்களும், ஒவ்வொரு மக்கள் தொகுதிகளின் நலன்களும் வேறுபட்டவை. தலித்துகளின் தேவைகள் வேறு; பிராமணர்களின் தேவைகள் வேறு. அவர்களுக்குள் முரண்கள் இருக்கலாம். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் முரண்கள் நிலவத்தான் செய்யும். அந்த முரண்களையெல்லாம் ஒற்றை அடையாளத்தை முன்வைத்து புதைத்து வைக்க முயற்சிக்கக் கூடாது.
அதேபோல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமிக்கவை. அவற்றின் அரசியல் தன்னுணர்வு தனித்துவமானது. அதனால் அந்தந்த மாநிலங்களின் அடையாளங்களையும் பொது அடையாளத்தில் அழித்துவிடக் கூடாது. மாநில சுயாட்சி உரிமைகளை மறுக்கக் கூடாது.
இதையெல்லாம் புரிந்துகொண்டால் ஏன் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜராஜன் தமிழ் சைவன் என்பதே சரியானது என்பதையும், அவன் வாழ்ந்த காலத்தில் இல்லாத சொல்லான இந்து என்ற அடையாளத்தை அவனுக்கு வழங்க ஒருவர் விரும்பாததையும் புரிந்துகொள்ள முடியும்!
8
11
1
1
பின்னூட்டம் (11)
Login / Create an account to add a comment / reply.
venkatesh 2 years ago
ராஜராஜசோழன் இந்து மன்னன் தான். இந்து விரோத அரசியலுக்கு பணம் பெற்று கொண்டு வெறுப்பை உமிழ்வது தமிழகத்தில் அதிகம்.. வெவ்வேறு தத்துவங்களாய் மதங்களாய் இருந்த சைவம் வைணவம் சாக்தம் உள்ளிட்ட மார்க்கங்கள் காலப்போக்கில் சமரசம் கொண்டது புராண காலமான 12ம் நூற்றாண்டு வாக்கில் தான். காரணம் அந்நிய (இஸ்லாமிய ) படையெடுப்புகள் அச்சமயத்தில் இருந்து அதிகமானது. இம்மதங்கள் ஒருங்கிணைய வேண்டிய தேவை எழுந்தது. இப்போது சோழன் இந்துவல்ல என்பது அவனது சமய நெறியை நீர்த்துப்போக செய்யும் நோக்கத்துடனேயே பார்க்கப்பட வேண்டும். இது போன்ற பேச்சுக்கள் இந்துத்வம் வளர்வதற்கே வழி செய்யும். தமிழகத்தில் அட்ரஸே இல்லாமல் இருந்த பாஜக 4 MLA க்கள் பெற்றது இது போன்ற பிரச்சாரங்களால் தான்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
nandhakumar muthusrinivasan 2 years ago
I think we should move on with Hunduism as a religion. All the gods and goddesses are related. More than anything else, if we fan this debate, it will lead to issues like why should we accept Tamil Nadu as an identity since it was never like that in the past. Was Vetrimaran speaking due to professional jealousy? And why did he raise this issue at a political function? Why he has not taken a legal recourse if he was fully convinced?
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.
Murthy 2 years ago
சதுர்வேதி மங்களமோ, பார்ப்பனர்களுக்கு இறைஇலியோ ராஜராஜனால் கொடுக்கப்படவில்லை.....ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Sangamithran 2 years ago
ராசராச சோழன் பார்ப்பனிய அத்வைத ஆச்சார வைதீக வேள்வி கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அரசன் தான். உழைக்கும் மக்களின் நிலங்களை "சதுர்வேதி மங்கலம் " என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நில தானம் வழங்கியவர் ராசராச சோழன், இதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் மற்றும் ஆய்வுகள் உள்ளது, கரிகாற்சோழன் கல்லனை கட்டினார், ஆனால் அவர் வழிவந்த இராசராச சோழன் கோவில் கட்டினான் என்பதை தாண்டி அனைத்து மக்களுக்குமான பொதுவான திட்டத்தை ஏதாவது செயல் படுத்தி உள்ளாரா...?? என்பதை கற்றறிந்த அறிவிற்ச் சிறந்தோர் சிந்திக்க வேண்டும், உழைக்கும் மக்களின் நிலங்களை, உழைக்காத உழைப்பின் வாடையே அறியாத அடுத்தவர்க்கு நில தானம் வழங்கியவர் ராசராச சோழன் .
Reply 6 3
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
தொல் திருமாவளவன் மணிவிழாவில் இயக்குனநர் வெற்றிமாறன் பேசியதைக் கேட்டவர்களில் நானும் ஒருவன். ராஜ ராஜனை இந்து மன்னன் என்று குறிப்பிடுவதையும், அதையே துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு இந்துத்துவாவை தூக்கிப்பிடிப்பதையும், சமூகங்களிடையே வெறுப்பை வளர்ப்பதையும் அரசியல் யுக்தியாக மடைமாற்றம் செய்யமுயலும் இக்காலத்தில் வெற்றிமாறனின் பேச்சு வரவேற்கப்படவேண்டியது மட்டுமல்ல கொண்டாடப்ப்படவேண்டியதும்கூட! ராஜ ராஜனை இந்து மன்னன் என்று சித்தரிப்பது வரலாற்றுப்பிழை என்பதைப்பேசும் பொருளாக்கிய வெற்றிமாறனை பாராட்டுவதை விட்டுவிட்டு குறைகாண்பது ஏற்கத்தக்கதல்ல.
Reply 14 1
Login / Create an account to add a comment / reply.
Yasar Arafat 2 years ago
எல்லோரையும் இந்து எனும் அடையாளத்துக்குள் சேர்த்துக் கட்டுவதன் மூலம் யார் பயனடைந்தார்கள்...?? யார் இழப்பை சந்தித்தார்கள் போன்ற கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் கட்டுரை அமைந்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்...
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Thangamani 2 years ago
சங்ககாலத்திலும், சோழப்பேரரசு எழுவதற்கு முன்னும் அந்நியர், பொதுவானவர், கற்றறிந்தவர் என்ற வகையில் வேதியர் இங்கு சமூக மரியாதையைக் கொண்டிருந்த போதிலும், அரசியல் அதிகாரமெதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. சோழப்பேரரசு கட்டமைக்கப்படும் போதே அவர்கள் பெருமளவில் நில உடமையாளார்களாகவும், அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே பெற்றவர்களாக ஆனாலும், சமய அடுக்குமுறையில் அவர்கள் தலைமைப் பொறுப்பெதையும் அனுபவித்ததாகத் தெரியவில்லை. அதற்கு கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளபடி தமிழச்சமூகத்தின் மெய்யியல் பலவகைப்பட்டனவாகவும் ஒற்றைக் கருத்தியல்/ தத்துவார்த்த அடித்ததளமெதையும் கொண்டிராத நாட்டார் வழிபாடுகளையும், பழங்குடி, சமண, ஆசீவ, பெளத்த தத்துவ விவாதங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட பொது அறத்தை நோக்கிய நகர்வையும் கொண்டிருந்ததால்தான். இந்தப் பன்மைத்தன்மை நாடு விடுதலை பெறும்வரையிலும்.கூட அதன் தடயங்களைக் கொண்டிருந்தது. விடுதலைப்போரில் கூட தமது சமூகத்துக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வழியாகவே இந்துத்துவம் உருவாக்கப்பட்டதாக கருத இடமிருக்கிறது. ஏனெனில் இந்துதுவம் என்பது உண்மையில் புதிய இந்திய தேசியத்திற்கான வழியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தால் அது எல்லா இந்திய ஆன்மீக, சமய, மக்கள் பிரிவுகளையும் சமநோக்கில் அணுகி எல்லோருக்கும் பொதுவான ஒரு இந்து சமூக அமைப்பைப் பற்றிய கனவைக் கொண்டிருந்திருக்கும். அதற்கு முன்மாதிரியான தத்துவ/ மத சிந்தனைகளுக்கு இந்துத்துவ நிறுவனர்களான சாவர்க்கர் போன்றோர் அறிமுகமாகி இருஃதனர். உண்மையில் மேலைசமூகத்தில் அவர்கள் வாழ்ந்த அனுபவத்தைக்கூட பெற்றிருந்தனர், வர்ண மேலாதிக்கம் நிலவாத ஒரு மதத்சமூகம் மற்ற சமூகத்தின் மேல் பெறக்கூடிய வெற்றியை கிருஸ்தவ சமூகம் ஒரு பாகன் சமூகமாகிய இந்தியர்கள் மேல் பெற்றிருந்ததைக் கொண்டு அப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கலாம். சிலர் அப்படி முயலாமல் இல்லை. கற்றறிந்த, தங்கள் சமூமத்துக்கு வர்ணாசிர அடிப்படையில் அரசியல் அதிகாரம் பெறுவதைப்பற்றி கவலைப்படாமல் ஒன்றுபட்ட இந்து சமூக நிர்மாணத்தைக் கனவுகண்டவர்கள் இருந்தனர். அவர்கள் தான் பிரம்ம சமாஜம் போன்றவற்றை நிறுவினர். ஆனால் இந்துத்துவத்தின் நிறுவனர்கள் அதில் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் இந்திய விடுதலைக்குப் பிறகு வர்ணாசிரம அடிப்படையில் தங்களுக்கு.மேலான அரசியல் அதிகாரம் வழங்கக்கூடிய ஒன்றையே கட்டமைக்க விரும்பினார்கள். அந்தச் சிந்தனையே அதிகாரத்துக்கும் வரவிரும்பினார்கள். அதனால்தான் காந்தி கொல்லப்பட்டார். காந்தியின் மரணம் என்பது ஒரு பன்மைத்தன்மை கொண்ட இந்திய சமூக நிர்மாணத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல். அதன் தொடர்ச்சிதான் இராசராசனை இந்துவாக மதம் மாற்றுவதும், வர்ணாசிரம அடுக்குமுறையை ஊக்குவிக்கும் இந்துமதம் என்ற ஒற்றை அரசியல் வடிவத்தை மேலிருந்து சுமத்துவதும்.
Reply 13 0
Login / Create an account to add a comment / reply.
ThirumalaiRaja 2 years ago
சைவர்களையும் வைணவர்களையும் இந்து அடையாளப்படுத்துவதில் நாத்திக மற்றும் திராவிட அரசியல் பேசுபவர்க்ஃள் ப்ஃங்கு மிக அதிகம். குறிப்பாக பெரியார் அரசியல் எழுச்சியின் ஆரம்பத்தில் சைவ சித்தாந்தம் வேளாளர்கள் அவருடனே பயணித்தார்கள் பின்னர் நாத்திக வாதத்தில் சைவ சித்தாந்தம் மட்டும் குறிவைத்து தாக்கப்படுவதாக உணர்ந்த பின்னர் மெல்ல மெல்ல விலகிநிற்கிறார்கள். இப்போது கூட சைவ சித்தாந்தங்கள் ஆரோக்கியமற்ற வகையில் திராவிட அரசியலால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும்போது. சித்தாந்தம் பற்றிய்ஃ முழு உணர்தல் அல்லாது பக்தி வசம் கொண்ட பக்தர்கள் தங்களுக்கான ஆதரவு தளமாக இந்துத்துவத்தை நோக்கி நகர்கிறார்கள். இது உண்மை.
Reply 7 3
Login / Create an account to add a comment / reply.
Vivek 2 years ago
இந்தியா தற்போது எதிர்கொண்டு மதம் சார்ந்த அரசியலையொட்டி இத்தகையதொரு விவாதத்தை எழுப்பிய அய்யா முனைவர் திருமாவளவர் அவர்களுக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply 7 2
Login / Create an account to add a comment / reply.
Satheesh Kumar 2 years ago
அருமையான கட்டுரை சார். காலத்தின் தேவை
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.
S.SELVARAJ 2 years ago
நல்ல கட்டுரை... இங்கு யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ, கிருத்துவர் இல்லையோ, சீக்கியர் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்ற ஆங்கிலேய அரசின் அறிவிப்பினால் சைவம், வைணவம் உள்பட பல்வேறு மதங்கள் அழிந்து தொன்மையான அடையாளங்களை இழந்து நிற்கிறது. இந்துமயப்படுத்தும் அரசியல் இங்கிருந்தே தொடங்குகிறது. இது ஒரு திட்டமிட்ட அரசியல். சைவ, வைணவ போர்கள்... வன்முறைகள் எல்லாம் அரசர்கள் காலத்தில் நடந்திருப்பதை வரலாறு சொல்கிறது. ஆனாலும் தொடர்ந்து இராஜராஜ சோழன் போன்ற மன்னர்களை இந்து என்கிற கூட்டுக்குள் நிறுவும் முயற்சியின் முலம் இந்துத்துவம் காலகாலமாக இருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கும் திரிபு அரசியலுக்கு இந்த கட்டுரை நல்ல விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
Reply 17 2
Login / Create an account to add a comment / reply.