கட்டுரை, சினிமா, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

வெங்கடேஷ் சக்ரவர்த்தி: தமிழ்க் கலாசார ஆழ்மனதின் குரல்

ராஜன் குறை கிருஷ்ணன்
28 Jul 2022, 5:00 am
3

ரியதொரு சிந்தனையாளரும், தத்துவவாதியும், திரைக்கலை அறிஞரும், திரைப்படக் கல்வியாளருமான வெங்கடேஷ் சக்ரவர்த்தி (70), 26 ஜூலை, 2022 அன்று சென்னையில் காலமானார். ஃபேஸ்புக், வாட்ஸப் என சமூக ஊடகங்கள் அவரது வசீகரமான புகைப்படங்களாலும், அவரது நண்பர்களின் நெகிழ்ச்சியூட்டும் பதிவுகளாலும் நிரம்பி வழிந்தன. அவரது இணையர் பிரீதம் சக்ரவர்த்தியின் அபூர்வமான ஃபேஸ்புக் பதிவு அவர்கள் வித்தியாசமான வாழ்வின் விழுமியங்களின் மாண்பினை உணர்த்துவதாக இருந்தது. 

வெங்கடேஷ் சக்ரவர்த்தியை அறியாதவர்கள் பலரும் இந்த பதிவுகளைக் கண்டு வியந்திருப்பார்கள். யார் இந்த மனிதர்? அவரை ஏன் இவ்வளவு பேர் நேசிக்கிறார்கள், புகழ்கிறார்கள்? ஏனெனில் சக்ரவர்த்தி ‘கடலின் ஆழத்தில் உள்ள குகைகளில் ஒளிந்திருக்கும் வைரங்கள்’ (full many a gem of purest ray serene the dark unfathomed caves of ocean bear) என்று தாமஸ் கிரே எழுதிய வரிகளுக்கு உதாரணம்போல வாழ்ந்த ஒரு மனிதர். அவருடன் நேரில் பழகியவர்களுக்குத்தான் அந்த வைரங்களின் இருப்பும், அவருடைய சிந்தனையின் அழமும், பரிமாணங்களும் தெரியும். சும்மா வெறுமனே ‘இந்தத் திரைப்படங்களை எடுத்தார், இந்த நூல்களையெல்லாம் எழுதினார்’ என்று சுட்டிக்காட்டி விளக்கிவிடத் தக்க ஆளுமை அல்ல அவர்.

தன்னுடைய மனத்திரையில் சக்ரவர்த்தி அற்புதமான படங்களை எடுத்த வண்ணம் இருந்தார்; அருமையான நூல்களை உரையாடல்களில் எழுதிக்கொண்டே இருந்தார். எல்லையற்ற பிரதியாக்க பயிற்சியில் (metatextual practice) இருந்தார் என்று கூறலாம். அவருடன் தொன்னூறுகளின் பிற்பகுதியில் நெருங்கிப் பழகும் நல்வாய்ப்பு கிடைத்ததால் என் பார்வையிலிருந்து சில புரிதல்களைப் பகிர்வதும், பதிவுசெய்வதும் பொருத்தம் என்று நினைக்கிறேன். அவருடைய இழப்பினால் மனதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைச் சமன் செய்துகொள்ளவும் அஞ்சலி செலுத்துவது அவசியம்தானே. 

சில நினைவுகள் 

இந்திய திரைப்படச் சங்கங்கள் சம்மேளனத்தின் தென் மண்டலப் பிரிவு அதன் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, 1984இல் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கத்தில்தான் நான் சக்ரவர்த்தியை முதன்முதலில் சந்தித்தேன். இரு நாட்கள் நடந்த அந்தக் கருத்தரங்கில் மிருணாள் சென் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். அந்தக் கருத்தரங்கில் பலரும் வாசித்த வழமையான நல்ல சினிமா, கெட்ட சினிமா கட்டுரைகளுக்கு நடுவில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி கோட்பாட்டுரீதியான சிந்தனைகளுடன் வாசித்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. “ஏன் ஒரு திரைப்படத்தை விளக்குவது கடினம் என்றால் அதை புரிந்துகொள்வது சுலபம் என்பதால்தான்” (A film is difficult to explain because it is easy understand) என்ற கிரிஸ்டியன் மெட்ஸின் வரியுடன் அவர் கட்டுரையை நிறைவு செய்தபோது அவர் மீது நான் மாளா காதலில் விழுந்திருந்தேன். 

இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தபோது சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் விம் வெண்டர்ஸின் ‘எ ஸ்டேட் ஆஃப் திங்க்ஸ்’ (A State of Things - 1984) படத்தைத் திரையிட்டார்கள். படம் முடிந்த பிறகு சக்ரவர்த்தி விவாதங்களைத் தலைமையேற்று நடத்துவார். மீண்டும் அன்று அவர் கூறிய கருத்துக்களால் கவரப்பட்டு அவரை மறுநாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன். என் தோழி ஒருவருடன் மறுநாள் மதியம் அவர் இல்லத்திற்குச் சென்றபோது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் திரைப்படங்களும், அரசியலும் குறித்து பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் விடைபெற்று புறப்படும்போது வாசல் வரை வந்து வழியனுப்பியவர் திடீரென நினைத்துக்கொண்டவராக “நீங்கள் எங்கே பணிபுரிகிறீர்கள்?” என்று கேட்டார். இன்னாரென்று தெரிந்துகொண்டுதான் பேச வேண்டும் எனக் கருதாத அவர் பாங்கினை எண்ணியெண்ணி வியந்துள்ளேன். 

பின்னர் தொன்னூற்று நான்காம் ஆண்டு நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகுதான் அடிக்கடி சந்திக்கலானோம். இப்போது கம்பத்தில் உளவியல் மருத்துவ ஆலோசகராக உள்ள முஹம்மது சஃபி அப்போது என் நெருங்கிய நண்பர். சக்ரவர்த்தி லக்கானிய உளப்பகுப்பாய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார் சஃபி. ஒரு விடுமுறை தினம் காலை என்னைக் காண வந்தவர் சக்ரவர்த்தியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று சொன்னார்.

நாங்கள் கிளம்பினோம். போக்குவரத்து நெரிசலையெல்லாம் சமாளித்து சக்ரவர்த்தி வீட்டிற்குச் செல்லும்போது மணி மதியம் ஒன்றாகிவிட்டது. உள்ளே நுழைந்ததும் சக்ரவர்த்தி முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அடுத்த கணம் “ஹெகல் மிகவும் சிறப்பாகத்தான் சிந்தித்துள்ளார்… ஆனால் எங்கே பிரச்சினை உருவாகிறது தெரியுமா” என்று பேசத் துவங்கிவிட்டார். நாங்களும் அதை விவாதிக்கத்தான் வந்ததுபோல பங்கேற்றோம். பிற்காலத்தில் அதையெல்லாம் நினைத்துப்பார்த்து வியந்திருக்கிறேன். ஏன் வந்தீர்கள் என அவர் கேட்கவுமில்லை; நாங்கள் ஏன் வந்தோம் என்று சொல்லவுமில்லை. சஹ்ருதையர்கள் சந்தித்து பேச காரணமும் வேண்டுமா என்ன? பேரன்பின் வடிவமான பிரீதமும் அவருடன் சேர்த்து எங்களுக்கும் உணவளித்தார்.  

சக்ரவர்த்தியின் சிந்தனை ஊற்றுக்கள் 

சக்ரவர்த்தியை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்த பல நண்பர்கள் அவருடைய பெயர், உருவம், அவர் பேசும் ஆங்கிலம், கோட்பாட்டு சிந்தனைகள் ஆகியவற்றையெல்லாம் வைத்து அவர் ஒரு மேட்டுக்குடி மனிதரென முடிவு செய்துவிட்டதை நான் அறிவேன். சக்ரவர்த்தியின் வேர்கள் தமிழ் கலாசாரப் பரப்பின் பல்வேறு அடுக்குகளில் ஊடுறுவியவை. அடித்தட்டு மக்கள் வாழ்க்கை என்பது அவருக்கு அன்னியம் அல்ல. அவரது குடும்பம் திரைப்படத் துறை சார்ந்தது என்பதால், தமிழ்த் திரையுலகு சார்ந்த பலரையும் நன்கு அறிந்தவர் அவர். தமிழ்த் திரையுலகை ஐம்பதுகளிலிருந்தே அருகிலிருந்து பார்த்தவர், பங்கேற்றவர் என்று கூறலாம். அதேசமயம், ஹாலிவுட் திரைப்படங்கள், ஐரோப்பிய, உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றையும் தேடித்தேடி பார்த்தவர்.

உலகத் திரைப்பட மேதைகள் பலரையும் விரிவாக விவாதிக்கக்கூடியவர் சக்ரவர்த்தி. அதனால் சக்ரவர்த்தியைப் பொறுத்தவரை வெகுஜன சினிமா, கலை சினிமா என்ற பாகுபாடுகளெல்லாம் சிந்தனைக்குக் குறுக்கீடாக வந்ததில்லை. திரைப்படக்கலை என்பது எப்படி பல்வேறு வடிவங்களில் இயங்குகிறது, எப்படி பார்வையாளர்களுடன், அவர்கள் உளவியலுடன் உறவுகொள்கிறது என்றெல்லாம் வெளிப்பட்ட அவர் சிந்தனை ஆழமும், விரிவும் கொண்டது. உள்ளபடி சொன்னால் எந்த நேரத்தில் அவர் ஒரு திரைப்படத்தின் எந்த அம்சத்தைப் பாராட்டுவார், எதை விமர்சிப்பார் என்று திட்டவட்டமாக கூற முடியாது. அது முக்கியமும் அல்ல. ஆனால், அவர் எதைச் செய்தாலும், எப்படி அணுகினாலும் அது சிந்தனையின் ஒரு அபூர்வ அசைவாக இருக்கும். பாய்ச்சலாக இருக்கும். ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் அது பிறர் சிந்தனைக்கு வளம் சேர்க்கும்.

திரைப்படக் கலையை ஒரு தொழில்நுட்பமாக மட்டுமே அணுகும் ஒருவரால் சக்ரவர்த்திபோல விரிவான தளத்தில் சிந்தித்திருக்க முடியாது. அவர் தத்துவத்தில் எம்.ஃபில். பட்ட மேற்படிப்பில் மொழியியல் தத்துவம் (நோம் சாம்ஸ்கி / விட்கன்ஸ்டைன்) குறித்து ஆய்வு மேற்கொண்டதாக அவர் கூறிய நினைவு. அதையும் கடந்து அவர் வாழ்வியலின் சகல பரிமாணங்கள் குறித்தும் ஆழமாக, இடையறாது சிந்தித்தார். தத்துவ, கோட்பாட்டு நூல்களைத் தொடர்ந்து தேடித்தேடிப் படித்தார். நவீன முதலீட்டிய வாழ்க்கை முறை வகுத்துள்ள வாழ்க்கை நியதிகளை ஏற்க மறுக்கும் கலக மனம் அவருக்குள் உருவாகியிருந்தது. ஆனால், மற்ற பலரைப் போல அது ஓர்  இளமைக்கால உத்வேகமாக மட்டும் இருந்து மறையவில்லை. இந்தக் கலக மனோபாவத்திலிருந்து சில விழுமியங்களை அவர் உருவாக்கிக்கொண்டார்.

சராசரி மத்தியதர வர்க்க  நியதியாக்கங்களிலிருந்து விலகி நடப்பது சக்ரவர்த்தி இயல்பானதாக அமைந்தது. அதற்கேற்றாற்போல அவர் இணையராக, அவர் சிந்தனைகளில் இணைந்து தொடர்ந்து பங்கெடுப்பவராக, பங்களிப்பவராக பிரீதம் அமைந்ததும் அபூர்வமானதுதான். இதெல்லாம் சேர்ந்துதான் வாழ்வியல், திரைபடக் கலை, தத்துவக் கோட்பாட்டுப் புரிதல்கள் ஆகியவற்றை இணைத்து சிந்திக்கும் விரிந்த பல தளங்களை அவர் மனதில் உருவாக்கியிருந்தன. அதுவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் நிலைபாடுகளுக்கும், அதற்கான வாதங்களுக்கும் ஓர் அலாதியான மதிப்பை உருவாக்கின.  

ஓர் உதாரணம். ‘கோதாரின் கிங் லியர்’ (1987) படத்தைச் சென்னையில் திரையிடப்பட்டபோது நான் பார்க்க இயலவில்லை. குரோசாவா கிங் லியர் கதையினை, ‘ரான்’ (1985) படமாக எடுத்திருந்ததைப் பார்த்திருந்தேன். சிறிது காலம் கழிந்து சக்ரவர்த்தியைச் சந்தித்தபோது ‘கோதாரின் கிங் லியர்’ எப்படி இருந்தது என்று கேட்டேன். அவர் சட்டென்று குரோசாவாவின் சாதனையை கோதாரால் நெருங்க முடியவில்லை என்றார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் ஃபிரெஞ்சு புதிய அலை குறித்த கட்டுரைத் தொகுப்பில், ஜேம்ஸ் மோனோகாவின் கோதார் குறித்த பகுப்பாய்வின் அடிப்படையில் நல்லதொரு கட்டுரையை சக்ரவர்த்தி எழுதியிருந்தார். அதனால் அவர் குரோசவாவைவிட கோதாரையே பாராட்டுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அன்றைக்கு செய்த தேர்வு என் நினைவில் பதிந்தது என்பதுடன் சக்ரவர்த்தி வெறும் கோட்பாடுகளில் சிறையுண்ட மனிதர் அல்ல என்பதையும் உணர்த்தியது.

இன்றுவரை என்னால் அந்த இரண்டு திரைப்படங்களில் எது சிறந்தது என்று முடிவுசெய்ய முடியவில்லை. அவரிடம் இன்று பேசினால் அவர் இந்தச் சிக்கலை ஏற்றுக்கொள்வார் என்றுதான் நினைக்கிறேன். இரண்டும் இரண்டு சிகரங்கள்; இரண்டு தரிசனங்கள். ஆனால், சக்ரவர்த்தியின் அன்றைய தேர்வும் அதற்கான விளக்கமும் முக்கியமானவை. எனக்குள் இயங்கிக்கொண்டு இருப்பவை. 

இப்படித்தான், மற்றொரு சமயம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், “என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” பாடல் காட்சியில், ‘பறவை பறந்து செல்லவிடுவேனா?’ என்ற வரி வரும்போது, கூண்டிலுள்ள ஒரு பறவையைக் கதாநாயகியின் முகத்தின் மீது சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டிருப்பது தொடர்பில் சக்ரவர்த்தியிடம் கிண்டலாகக் குறிப்பிட்டேன். அவருக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. ‘தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதரின் பங்களிப்பு என்ன தெரியுமா?’ என்று ஒரு மணி நேரம் உணர்ச்சி பொங்க பேசினார் அவர் கூறியதை எல்லாம் எழுதியிருந்தால் இன்றைக்குப் பாட நூலாகப் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும் பேசினார். 

உரையாடல் மேதைகள் ஏன் எழுதவதில்லை? 

சாக்ரடீஸ் எந்த நூலையும் எழுதவில்லை. அவர் பலருடன் நடத்திய உரையாடல்களைத் தொகுத்து பிளேட்டோதான் எழுதினார். இதில் அடங்கியுள்ள ஒரு செய்தி என்னவென்றால், உரையாடலாகவே சிந்திப்பது என்பது ஒரு வகையான பயிற்சி. அது ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது அல்லது கடல் போன்றது. தன் சிந்தனைகளைத் தொகுத்து, வடிவமைத்து, பிரதியாக்கம் செய்வது என்பது வேறொரு பயிற்சி. அது ஏரி, குளங்களில் நீரை தேக்குவது போன்றது.

கட்டற்ற, தீவிரமான சிந்தனையைப் பயிற்சி செய்யத் துவங்கிவிட்ட மனதால், அந்தச் சிந்தனையோட்டத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இயலில் செலுத்தி ஒரு பிரதியாக மாற்றுவது எளிது அல்ல. இதன் காரணமாகவே மாணவர்களால் கொண்டாடுப்படும் சிறந்த பேராசிரியர்கள் பலர் நூல்கள் எழுதியிருக்க மாட்டார்கள் அல்லது ஒப்புக்கு ஓரிரு நூல்களை மட்டும் எழுதியிருப்பார்கள். அவர்கள் வகுப்பறைகளில் நிகழ்த்திய சிந்தனைகளை அவர்கள் ஏன் நூலாக எழுதவில்லை என்று மாணவர்கள் வியப்பார்கள். அந்த மாணவர்களில் சிலர் பல நூல்களை எழுதுவார்கள்; அந்த ஆசிரியரை நன்றியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால், ஆசிரியரோ அந்த நூல்களையும் உள்ளடக்கி தன் உரையாடலைத் தொடர்ந்த வண்ணம் இருப்பார்.

தன் வாழ்வின் பிற்பகுதியில் மலேசிய பல்கலைக்கழகத்தில் வருகைதருப் பேராசிரியராக சில ஆண்டுகளும், ஹைதராபாத் ராமா நாயுடு திரைப்படக் கல்லூரியில் பல ஆண்டுகளும், இடையில் சென்னையில் எல்.வி.பிரசாத் திரைப்படக் கல்லூரியில் சில ஆண்டுகளும் சக்ரவர்த்தி திரைப்படக் கலை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதை எண்ணிப்பார்க்கும்போது எத்தனை மாணவர்களிடம் சிந்தனைகளை விதைத்திருப்பார் என்று தோன்றுகிறது. அந்த மாணவர்கள் மூலமாக பல பிரதியாக்கச் செயல்பாடுகள் நடந்த வண்ணம் இருக்குமல்லவா! 

சமகாலத் தமிழ்க் கலாச்சார வெளியில் சமீபத்தில் மறைந்த வேறு இரண்டு பேர் நினைவிற்கு வருகிறார்கள். மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.என். நாகராஜன் ஒருவர்; அழகியல் சிந்தனையாளர் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் மற்றொருவர். எஸ்.என்.நாகராஜனை மிகவும் வற்புறுத்தி ஒரு கட்டுரை தொகுப்பை அவர் நண்பர்கள் பதிப்பித்தார்கள். அதேபோல, ஆல்பர்ட்டின் சில கட்டுரைகளை தொகுத்து அவர் நண்பர்கள் வெளியிட்டார்கள். ஆனால், இந்த நூல்களுக்குள் அடங்கும் சிந்தனைக்களம் அல்ல அவர்களுடையது; கூஜாவில் அடைக்க முயற்சிக்கப்பட்ட புயல்போலத்தான் அவை. 

சக்ரவர்த்தி லக்கானிய உளப்பகுப்பாய்வில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவ்விதமான சிந்தனையில் அன்-கான்ஷியஸ் (unconscious) என்பது சுயத்தின் எல்லைகளைத் தொடர்ந்து நிர்ணயிக்கும் குறியியக்கப் பெருங்கடல். அந்த விதத்தில் சொன்னால் சக்ரவர்த்தியின் உரையாடல் பிரவாகம் என்பது தமிழ்க் கலாசாரத்தின் நினைவிலி மனதின் வெளிப்பாடுகள் என்றே காணலாம். அதையே நான் ஆழ்மனது என்று இந்தக் கட்டுரையின் தலைப்பில் குறிப்பிடுகிறேன். அப்படியான தமிழ் வெகுஜன கலாசாரத்தின் ஆழ்மனதின் குரலாக ஒலித்ததும் பிரதியாக்கத்திற்கு சுலபத்தில் அகப்படாத எல்லையற்ற குறியியக்மாக அவர் சிந்தனையை மாற்றியது என்றுதான் கருதத் தோன்றுகிறது. சக்ரவர்த்தியிடம் மீன் குழம்பு குறித்து பேசத்தொடங்கினால் அந்த உரையாடல் சிறிது நேரத்தில் தாஸ்தேவ்ஸ்கியிடம் சென்று முடியுமா அல்லது ஃபெலினியிடம் செல்லுமா அல்லது அம்பேத்கர், பெரியார் என்று விரியுமா என்று கூற முடியாது.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆங்கிலத்திலும், தமிழிலும் சில கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளார். முக்கியமான கட்டுரைகள்தான். ஆனால், அவை குடுவைகளில் அடைக்கப்பட்ட நதிநீர்தான். அதேபோல, சில தொலைக்காட்சி தொடர்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். ‘சித்திரம் பேசுதடி’ என்ற பெயரில் தூர்தர்ஷனில் தொன்னூறுகளின் துவக்கத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழ் திரைப்படங்களை அலசி ஆராயும் தொடர் ஒன்றை அவரும், பிரீதமும் தயாரித்து அளித்தார்கள். பின்னர் சென்னை – ‘தி ஸ்பிளிட் சிடி’ (2006) என்ற ஆவணப்படுத்தை எடுத்தார். அவையும் குறிப்பிடத் தகுந்தவைதான். ‘தினமணி’ தீபாவளி மலர், ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட பல அச்சு ஊடகங்களில் தமிழ் சினிமா குறித்த குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். வெகு நாள் எத்தனங்களுக்குப் பிறகு அவர் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை ‘சுவடுகள்’ என்ற பெயரில் ‘பிரக்ஞை பதிப்பக’த்தில் விலாசனி பதிப்பித்தார். அதற்கான பின்னட்டை மதிப்புரைக் குறிப்பு ஒன்றை என்னிடம் எழுதச்சொல்லிக் கேட்டிருந்தார்கள். அதில் நான் எழுதிய வரிகளைக் கீழே தந்து என் அஞ்சலி கட்டுரையை நிறைவு செய்கிறேன். சக்ரவர்த்தியின் சிந்தனைகள் தொடர்ந்து பயிலப்பட்டு குடுவை நீர் மீண்டும் நதிகளாகப் பிரவாகம் கொள்ள வேண்டும். 

“சக்ரவர்த்தி கலைநோக்குடன் தத்துவ சிந்தனைகளை இணைத்து தமிழ் சினிமாவை அணுகுபவர். அவரது பல்வேறு இழைகளைக் கொண்ட சிந்தனைகளின் ஒட்டுமொத்த தன்மையை யோசிக்கும்போது சமூக வரலாற்று யதார்த்தம் என்னும் பெரும் பாறையில் மோதும் பேரலைகளை உருவாக்கும் ஆழ்கடல் என்ற உருவகம் மனதில் எழுகிறது, அந்த அலைகளின் சிதறல்களாக வெளிப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு தருணங்களில் பரிசீலிக்கும்போது அசாதாரணமான சிந்தனை வீச்சுக்களை வெளிப்படுத்துகின்றன. படிக்க வேண்டிய கட்டுரைகள் என்பதைவிட பயில வேண்டிய கட்டுரைகள், பயின்று விவாதிக்க வேண்டிய கட்டுரைகள் என்று சொன்னால் மிகையாகாது!”

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


2

4





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

அன்புள்ள ஆசிரியரே, "சொன்னது நீதானா" பாடலில் "பறவை பறந்து செல்ல விடுவேனா" என்ற வரிகள் இல்லையே!!!!

Reply 1 0

ராஜன் குறை கிருஷ்ணன்   2 years ago

பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ஜெய்குமார். அது “என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” என்ற பாடலில் இடம்பெற்ற வரி. அந்த படத்தின் இந்த இரண்டு பாடல்களுமே மிகுந்த வரவேற்பை பெற்றவை - கிட்டத்தட்ட ஒரே விதமான சூழலை பேசுபவை என்பதால் நினைவுப் பிசகாக குறிப்பிட்டு விட்டேன்.

Reply 3 0

J. Jayakumar   2 years ago

Thanks Sir! So kind of you! I forgot to check it even though I checked it in " Mutthana mutthallavo" lyrics! Sorry!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

தணிக்கைச் சட்டம்எலும்புகள்விஜயகாந்த்: ஒரு மின்னல் வாழ்க்கைநுகர்வுச் செலவுபெரியார் இயக்கம்மேண்டேட்இயர் மஃப்கல்வான் பள்ளத்தாக்குநினைவு நாள்அமர்ந்தே இருப்பது ஆபத்துகுற்றவாளிஜே.ஆர்.டி.டாடாவிஜய் வரட்டும்… நல்லது!ராம்நாத் கோயங்காசுயமரியாதைப் போராட்டம்விழிஞ்சம் துறைமுகம்நிலக்கரி இறக்குமதிஇந்திய மருத்துவமுறைஇளங்.கார்த்திகேயன்சங்கராச்சாரியார்டேவிட்சன் தேவாசீர்வாதம்எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டிதவறான முன்னுதாரணங்கள்விரல் இடுக்குகளில் புண்Eyesஅண்ணாமலையின் அதிரடி... காங்கிரசுக்குக் கை வராதது ஏடிக்-டாக்கர்கள்புத்தகம் வாங்குதல்தகவல் தொடர்புஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத்தின் கண்டனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!