கட்டுரை, இன்னொரு குரல் 7 நிமிட வாசிப்பு

சமஸ் சிந்திக்க வேண்டும்

ராஜன் குறை கிருஷ்ணன்
15 Nov 2021, 5:00 am
3

அன்புள்ள சமஸ்,

என் இடையீடு குறித்த உங்களுடைய, 'பாவம் ராஜன் குறை, பேராசிரியர் என்பதை மறந்துவிட்டார்' எதிர்வினையைப் படித்து வியப்பாக இருந்தது. என் இரண்டு இடையீடுகளுமே நீங்கள் வெளியிட்ட குறுந்தொடரை நான் ஏன் கண்டிக்கிறேன் என்பதைத் தெளிவாகவே கூறுவதாகத்தான் நினைத்தேன்.

வாழ்க்கை வரலாறு எழுதப்படக் கூடாது, அவை விவாதிக்கப்படக் கூடாது என்பதல்ல; அது வரலாற்றை ஆராய்வதில் குறுக்கிடக் கூடாது, குழப்பக் கூடாது என்பதுதான் என் கண்டனத்தின் அடிப்படை. இது தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதனால்தான் வியப்பு!

மிகச் சுருக்கமாக சில கருத்துகளைப் பதிவுசெய்கிறேன்.

முதலில் உங்கள் தலைப்பு. 'பேராசிரியர் என்பதை மறந்துவிட்டார்' என்றால் என்னவென்று புரியவில்லை. ஒரு குடிநபருக்கு பொதுக்கள விவாதங்களில் என்ன பண்புகளும், விழுமியங்களும் இருக்க வேண்டுமோ அதிலிருந்து வேறுபட்ட எதுவும் பேராசியருக்கு என்று இருப்பதாக தோன்றவில்லை. அப்படி இருக்கக் கூடியவை வகுப்பறை, மாணவர்களை மதிப்பிடல் எனத் தொழில் சார்ந்தவை மட்டுமே. பொதுக்களத்தில் உரையாடுவதில், குடிநபருக்கும் பேராசிரியருக்கும் வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இரண்டாவது நீங்களோ, உங்கள் பத்திரிகையோ எந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால், கட்டுரையாளரின் தேர்வில் நீங்கள் குறுக்கிட முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. நான் பார்ப்பன ஜாதி ஒன்றில் பிறந்தவன். அதனால் அந்தச் சமூகத்துடன் மட்டுமன்றி, அனைவருடனும் உரையாடு்ம்போது அந்தச் சமூகத்தை மிக நுட்பமாக விமர்சித்த தத்துவ மேதை பெரியாரும், மக்களாட்சிக் களத்தில் கருத்துரீதியாக எதிர்கொண்ட திராவிட இயக்கமும் தேர்வுசெய்த வார்த்தையை அதன் காரணங்களை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவதை சுய-விமர்சனத்தின் முதல் நிபந்தனையாகப் பார்க்கிறேன். சுயம்-மற்றமைக்கு இடையிலான அறம் குறித்தோ, லெவினாஸ் (Levinas, 1905-1995) சிந்தனைகளை நான் புரிந்துகொள்வது குறித்தோ சந்தர்ப்பம் வரும்போது எழுதுவேன்.

நீங்கள் நால் வர்ணத்திற்கு வெளியே அவர்ணர்களாக நிறுத்தப்பட்ட மக்கள் தங்களை 'தலித்' என்று திரட்டிக்கொள்வதையும், வர்ண அமைப்பை உருவாக்கி நிலைநிறுத்தியவர்கள் தங்களை பிராமண வர்ணத்தினராக நிலைநிறுத்திக்கொள்வதையும் ஒப்பிடுவது வியப்பிற்குரியது. 'பிராமணர்' என்பது ஜாதியா, வர்ணமா? பார்ப்பன ஜாதிகளை பிராமணராக ஒன்றுபடுத்துவது வர்ண ஒழுங்கை மீட்கிறதா, தகர்க்கிறதா என்பதெல்லாம் சிந்தனைக்குரியவை.

பிற்போக்காளர்கள் மனம் புண்படாமல் சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியாது. முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது என்று ஒரு சொலவடை உண்டு. காரணங்கள் எதுவாக இருந்தாலும் 'பார்ப்பனர்' என்று எழுதுவது என் தேர்வு. உங்கள் பத்திரிகையில் எழுதினால் உங்கள் தேர்வின்படிதான் எழுத வேண்டும் என்றால் நான் எழுத மாட்டேன். அவ்வளவுதானே!

உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது, பத்திரிகை ஆசிரியரின் எல்லைகள் குறித்த கொள்கை. கட்டுரையாளருக்கு நீங்கள் எத்தகு சுதந்திரத்தை தரப்போகிறீர்கள்? அதேபோலத்தான் பிற கலைச்சொற்களும். அவை அனைத்துமே என் சிந்தனையின், அணுகுமுறையின் விளைபொருட்கள். உங்கள் பத்திரிகையின் மொழிக்கொள்கைக்காக என் கட்டுரையில் நான் பயன்படுத்தும் கலைச்சொற்களை மாற்றுவது என்பது என் சிந்தனையை, அதன் தொடர்ச்சியை சீர்குலைப்பது.

உங்களை நான் என்னைப்போல எழுதும்படி வற்புறுத்தவில்லை. என் எழுத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்றுதானே சொல்கிறேன்? உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘இஸம்’ (ism) என்ற பின்னொட்டை பரிசீலனையின்றி பயன்படுத்தியதால் மானுடச் சிந்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் ‘ஹிந்துயிஸம்’ (Hinduism) என்றெல்லாம் தனக்குள் முரண்பட்ட தத்துவச் சிந்தனைப் போக்குகளை, வரலாற்று வியக்திகளை சேர்த்துக் கட்டி சாராம்சப்படுத்தியது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்ட்ரக்சுரலிஸம்’ (Structuralism) போன்ற ஆங்கிலச் சொல்லாக்கங்களும் குழப்பமானவைதான்; சிந்தனைப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் எங்கே இஸம் (ism) என்ற ஆங்கிலப் பின்னொட்டை தமிழில், ‘இயம்’ என்று பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

முழு நூலே எழுதமளவு செய்திகள் உண்டு. ஒரு சிந்தனையாளனாக அது என் பயிற்சி, கடமை. உங்களுக்காகவோ, உங்கள் பத்திரிகைக்காகவோ நான் அதை மாற்றிக்கொள்ள முடியாது. நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் எப்போதாவது உங்களுக்கு தொலைபேசியிலோ, நேரிலோ, மின்னஞ்சலிலோ நீங்கள் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேனா? என் கட்டுரையில் கைவைக்காதீர்கள் என்றுதான் கோரியுள்ளேன். இப்போதும் கோருகிறேன். அதற்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், யார் அதிகாரத்தை யார் மீது செலுத்துகிறார்கள் என்பதை காந்தியரான நீங்களே சிந்தித்துப் புரிந்துகொள்ளலாம்.

சாவர்க்கர் குறித்து நீங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொடரை விமர்சித்தால், சாவர்க்கர் குறித்து நான் யாரும் ஆராயக் கூடாது என்று சொன்னதாகச் சொல்கிறீர்கள். நான் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் கவனமாகப் பாருங்கள். சாவர்க்கரின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்த மதிப்பீட்டையும், அவரது வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதைத்தான் வலியுறுத்தியுள்ளேன். ‘அருஞ்சொல்’ கட்டுரைத் தொடர் அதைச்செய்கிறது என்பதால்தான் தலையிட்டேன். வரி, வரியாக விமர்சிக்க அவசியமில்லை; அவகாசமுமில்லை. அந்தக் கட்டுரை தொடரை வாசித்தவர்கள் இந்தக் குழப்பம் நேர்வதாக உணர்கிறார்கள். என் எதிர்வினையைப் புரிந்துகொள்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன். வரலாறு, வாழ்க்கை வரலாறு இரண்டுமே தேவைதான். ஆனால், ஒருவர் எழுதும் முறையில்தான் தனி நபர் வாழ்க்கை என்பது வரலாற்றில் வைத்துப் பார்க்கப்படுகிறதா, வரலாறு தனி நபர் வாழ்க்கையில் வைத்துப் பார்க்கப்படுகிறதா என்பது நிர்ணயமாகும். காரண காரிய தொடர்ச்சி, நிர்ணயவாதம் குறித்த தத்துவார்த்த விமர்சனங்கள் நுட்பமானவை. விக்ரம் சம்பத்திற்கு பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், பேராசிரியர் ஜானகி பாக்ளே சாவர்க்கர் குறித்து எழுதினார். அப்போதே இந்த எச்சரிக்கைதான் என் மனதில் எழுந்தது. வேறு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவேன்.

ஆஷிஸ் நந்தியை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மகிழ்ச்சி. அவர்தான் சாவர்க்கர், கோட்ஸே விமர்சனத்தின் முக்கியமான முன்னோடி. ஆனால், அதை புரிந்துகொள்ள நவீனம் (modernity) என்பதை ஆஷிஸ் நந்தி எப்படி மதிப்பிடுகிறார் என்பதை அறிய வேண்டும். இதற்கு முன் இன்னொரு ஊடகவியலாளர் (மாற்றாமல் பிரசுரிக்கவும்) அன்று ‘அவுட்லுக்’கில் பணியாற்றிய -இன்று 'நவயானா' பதிப்பக எஸ்.ஆனந்த், ஆஷிஸ் நந்தி சாவர்க்கர் ஆதரவாளர் என்று ‘புரிந்துகொண்டு’ எழுதியதும் நடந்தது. நான் அவருக்கு நட்புரீதியாக தொலைபேசி செய்து விளக்கிய பிறகும் அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அவரவர் தேர்வு.

என் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நான் நந்தியை அணுகும் விதம் தெரியும். இந்த விவாதத்திற்குத் தொடர்பில்லாத என்னுடைய நிலைபாடுகள், உணர்வுகள் தொடர்பான செய்திகளை எழுதியுள்ளீர்கள். அதற்கெல்லாம் நான் எதுவும் எதிர்வினை புரியப்போவதில்லை. அதற்கு ஈடாக உங்களை மதிப்பு குறைக்கும், சீண்டும் செயலிலும் இறங்கப்போவதில்லை. நான் உட்பட தனி நபர்களை மதிப்பிட என் சொற்களை வீணாக்குவதில்லை. நன்றி.

அன்புடன்,

ராஜன் குறை

ராஜன் குறை பரிசீலிக்க வேண்டும்: சமஸ்

அன்புள்ள ராஜன் குறை அவர்களுக்கு, வணக்கம்.

உங்களது விரிவான கடிதத்துக்கு, விளக்கத்துக்கு நன்றி. தொடரை வெளியிட்டதற்கான உங்கள் கண்டனத்துக்கு, உரிய பதிலை முன்னரே எழுதிவிட்டேன் என்பதால், அதைப் பற்றியோ, தொடரின் உள்ளடக்கத்தைப் பற்றியோ எழுத விழையவில்லை. இந்தக் கடிதத்தில் நீங்கள் எழுப்பியிருக்கும் இரு கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பதோடு முடித்துக்கொள்கிறேன்.

1. பிராமணர் - பார்ப்பனர் சொல்லாடலை வரலாற்றுரீதியாகவும் அணுக முடியும்; சமகாலரீதியாகவும் அணுக முடியும். சாதியாக, வர்ணமாக இப்படியெல்லாம் உள்ளர்த்தப்படுத்தி ‘பிராமணர்’ எனும் சொல்லை நான் குறிப்பிடவில்லை. இன்றைக்கு, இந்தியாவில் துலக்கமாக மூன்று பெரும் அரசியல் சமூகங்கள் இருக்கின்றன: பிராமணர்கள், இன்னும் பெயர் சூட்டிக்கொள்ளாத ‘பிற்படுத்தப்பட்டோர்’, தலித்துகள். உட்பிரிவு, சாதி, வர்ணம் எல்லாவற்றையும் உண்டு செரித்த அரசியல்  சமூகங்களாக இன்று இவையே உருவாகி நிற்கின்றன. இவற்றுக்குள்தான் எந்த உரையாடலும் முதன்மையானது ஆகிறது.

சமகால அநீதிகளுக்கும், அசமத்துத்துக்குமே போராடவும் உரையாடவும் உயிரைவிட வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் கடந்த கால அநீதிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து உரையாடல் மேஜையில் உட்காருவதில் என்ன அனுகூலம் இருக்கிறது என்ற அயர்வும் இந்தச் சொல் பயன்பாட்டுக்கான தேர்வில் இருக்கிறது.

உங்களுடைய சொல்லாடலை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்ல நான் யார்? மேலும், அப்படிச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? சிக்கல் எங்கே வருகிறது என்றால், நான் ‘பிராமணர்’ என்று குறிப்பிடுவது ‘இந்து மரபுப்படி’ என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதற்குத்தான் இவ்வளவையும் நான் எழுத வேண்டியிருந்தது. திருமாவளவன் ‘பிராமணியம்’ எனும் சொல்லாடலைத் தவிர்த்து, ‘சனாதனம்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதுகூட ‘இந்து தர்மப்படி’ என்றுதான் கூறுவீர்களா, உங்களைப் போலவே ஏனையோருக்கும் சில அக்கறைகள் - முனைப்புகள் இருக்கலாம் என்று ஏன் உங்களுக்குத் தோன்ற மறுக்கிறது என்று நான் கேட்க வேண்டியிருந்தது.

2. "என் கட்டுரையில் கை வைக்காதே என்றுதானே கேட்கிறேன்; கட்டுரையாளருக்கு நீங்கள் எத்தகு சுதந்திரத்தைத் தரப்போகிறீர்கள்" என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் முன்னுக்குப் பின் எவ்வளவு முரணாகப் பேசுகிறீர்கள் என்பதையும், பத்திரிகை ஆசிரிய இலாகாவின் பொறுப்புதான் என்ன என்பதை என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையும் தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.

உங்கள் முதல் பதிவில் உள்ள குறிப்பு இது: “கருத்துக்களுக்கு கட்டுரையாளரே பொறுப்பு, ஆசிரியரல்ல என்று நீங்கள் கூற முடியும்தான். ஆனாலும் இந்த ஒப்பீடு வன்மையான கண்டனத்திற்குரியது!”

இப்படி பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரைக்கு, என்னை நீங்கள் குற்றஞ்சாட்டியதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்தக் கதை. அப்படியென்றால், உங்கள் நியாயம்தான் என்ன?

இந்த ‘பார்ப்பனர் - பிராமணர்’ விஷயத்துக்கு வெளியே வருவோம். உங்களுடைய கட்டுரைகளில் எந்தச் சொல்லையும் மாற்றக் கூடாது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. “உங்கள் பத்திரிகையின் மொழிக்கொள்கைக்காக என் கட்டுரையில் நான் பயன்படுத்தும் கலைச்சொற்களை மாற்றுவது என்பது என் சிந்தனையை, அதன் தொடர்ச்சியை சீர்குலைப்பது” என்று எழுதுகிறீர்கள். நல்லது. இப்படி ஒரு பத்திரிகை, தன்னுடைய வாசகர்களுக்கான தொடர்ச்சி அறுந்துவிடக் கூடாது என்றும் கருதலாம்தானே!

பத்திரிகையாசிரியர் அல்லது பிரதிநோக்குநர் பணி என்பது, கட்டுரையாளர் தருவதை அப்படியே ஒற்றுப்பிழை பார்த்து, வெளியீட்டுக்கு அனுப்புவது இல்லை. கட்டுரையாளருக்கும் வாசகருக்கும் பாலமாக ஆசிரியர் இலாகா செயல்பட வேண்டும். எங்களுடைய முதலும் முற்றுமான அக்கறை, வாசகருக்குப் புரியும்படி சொல்லப்பட வேண்டும் என்பதே ஆகும். முந்தைய என் எதிர்வினையில் சுட்டிக்காட்டிய ஆதித்தனார் அரசு மருத்துவமனையை ‘பெரிய ஆஸ்பத்திரி’ என்று குறிப்பிட்ட உதாரணத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன். சமூக அறிவியல் துறை இன்னும் இங்கு வளர்ந்துவிடவில்லை. அதற்கான கலைச் சொல்லாக்கம் எல்லாம் அறுதியிடப்படவும் இல்லை.  

நீங்கள் கட்டுரைகள் எழுதுகிறீர்கள், அதை ஒரு புத்தகமாகக் கொண்டுவருகிறீர்கள் என்றால், எப்படியும் அதை எழுதலாம். ஏனென்றால், புத்தக ஆசிரியர் சம்பந்தமான புரிதலோடு, குறிப்பிடத்தக்க வாசகர்களால் புத்தகம் வாங்கப்படுகிறது. ஒரு வெகுஜனப் பத்திரிகை நோக்கி வரும் வாசகர்கள் இப்படிக் குறிப்பிடத்தக்கவர்கள் இல்லை. ஆயிரக்கணக்கானோர். அவர்களும் பல்வேறு தரப்பினர். எங்கள் தளத்தின் கணிசமான வாசகர்கள் இளைஞர்கள், மாணவர்கள். இதையெல்லாமும் யோசித்துதான் ஒரு பிரதியைக் கையாளுகிறோம். இதற்காக, யாருடைய கருத்தையும், சொல்லையும் மாற்றலாம்; இஷ்டப்படி திருத்தலாம் என்பது இல்லை. வாசகர்களைச் சென்றடைய பிரதி இலகுவாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம். இரு தரப்பும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய களம் இது.

உங்களுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு, கலைச்சொல்லாக்கத்தில் நீங்கள் காட்டும் அக்கறை எதையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதுபோலவே ஊடகங்களின் மொழிக் கொள்கைக்கும் சில நியாயங்கள் இருக்கலாம் என்பதைப் பரிசீலியுங்கள். இது அதிகாரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வாசிப்பு சம்பந்தப்பட்ட அக்கறை.

உங்களது மதிப்பைக் குறைக்கும் அல்லது சீண்டும் எண்ணமோ, இந்த விவாதத்தை இழுத்துக்கொண்டேபோகும் எண்ணமோ எனக்கும் இல்லை. ஜனநாயகப் பயணம் எல்லோரையும் உள்ளடக்கியது. உங்களை வெளித்தள்ளிப் பேச நான் முற்படவில்லை.

அன்புடன்
சமஸ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.




1




பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   3 years ago

பார்ப்பனர் என்ற சொல் தமிழ் சமூகத்தில் பட்டி தொட்டிகளில் கூட மிக நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும் சொல்தான். மாறாக பிராமணர் என்ற சொல் பெரும்பான்மையான மக்களின் பேச்சு வழக்கில் இல்லை. எனவே ராஜன்குறை அவர்கள் தனது கட்டுரையில் பயன்படுத்திய பார்ப்பனர் என்ற சொல்லை மாற்றாமல் அப்படியே அருஞ்சொல் பிரசுரித்திருக்க வேண்டும்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

ராஜ கைலாசம்   3 years ago

பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் பேச்சில் அவர் தரப்பு நியாயம் வெளிப்பட்டு உள்ளது. ஆனால், சமஸ் அவர்களின் நியாயத்துக்கு ராஜன் குறை அவர்கள் மதிப்பளிப்பதாகவே தெரியவில்லையே? உலகளாவிய அளவில் பத்திரிகைகளுக்கு என்று மொழிக் கொள்கை இருக்கிறது. இதை சமஸ் அவர்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டி உள்ளார். ராஜன் குறை அவர்கள் கூறுவதைப் பார்த்தால், பத்திரிகைகளுக்கு என்று மொழிக் கொள்கையே இருக்கக் கூடாது என்று எண்ணுவார்போல உள்ளது. எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தினமணியில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது நிறைய மாறுதல்கள் நடந்தன. ஜெ என்ற எழுத்தே பிரசுரிக்க மாட்டார்கள். ஜெயங்கொண்டம் என்று வாராது. ஜயங்கொண்டம் என்றே பிரசுரிப்பார்கள். ஜயலலிதா என்று பெயர் போட்டு, அதனால் சங்கடப்பட்ட ஜெயலலிதா அம்மையார் பத்திரியாசிரியரை அழைத்துப் பேசினாராம். அதற்குப் பின்னால் ஜெயலலிதாவின் பெயரை மட்டும் விதிவிலக்காகப் போடுவார்கள். இதை பின்பு ஆசிரியரான திரு.இராம.சம்பந்தம் அவர்களே ஒரு கூட்டத்தில் வாசகர்களிடம் தெரிவித்தார்கள். இதற்கு என்ன காரணம், நியாயம் என்பது தனிக் கதை. பத்திரிகையாசிசிரியருக்கும் மொழிக் கொள்கையில் இப்படி உரிமை உண்டு. மிகவும் தன்மையாகவே சமஸ் அவர்கள் இதைக் குறிப்பிட்டு உள்ளார்கள். பேராசிரியர் ஆய்வு மொழியிலேயே எழுதி அப்படியே வர வேண்டும் என்று எண்ணுவது தானே எழுதி தானே படிக்கத்தான் உதவும். இப்போது ராஜன் குறை அவர்கள் எழுதியிருக்கிற கட்டுரையை இன்றைய கல்லூரி மாணவர்களிடம் கொடுத்து அவர் படிக்கச் சொன்னால், எவ்வளவு புரிபடுகிறது என்று அவருக்கு புரிந்துவிடும். நான் நான் என்றே ராஜன் குறை அவர்களின் பேச்சு உள்ளது. சமஸ் அவர்கள் வாதம் சரியானது.

Reply 4 2

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது, பத்திரிகை ஆசிரியரின் எல்லைகள் குறித்த கொள்கை." - என்ற ராஜன் குறை அவர்களின் கூற்றில் முற்றிலும் உடன்படுகிறேன். ராஜன் குறை அவர்களின் இந்த எதிர் வினையானது மிகுந்த செய்திகளை - அரசியல் விஞ்ஞானம், விமர்சனக் கோட்பாடுகள், தத்துவம் - கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு செயற்பாட்டாளருக்கு உரிய தன்மைகளைப் பெற்றோர் editorial board-ல் இடம்பெறும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் விசித்திரமானவை. வாசிப்போர் நயந்து வியக்கும்படி பிரதிகளை ஆக்கும் அரிய திறன் கொண்டோர் கருத்தியலிலும் தம்மை ஒரு authority என்று கருதுவது மனித இயல்பு சுழற்சியில் நடப்பதுதான். எப்படியோ ஒரு ஊடக தலவெளியில் ராஜன் குறை போன்ற தீவிர வாசிப்பாளர்களை சம்பந்தப் படுத்துவது என்ற அளவில் இந்த சர்ச்சை நன்மையைத் தந்திருக்கிறது.

Reply 9 1

Login / Create an account to add a comment / reply.

ஜான் க்ளாவ்ஸர்பள்ளியில் அரசியல்இந்துவாக இறக்க மாட்டேன்சிந்தனை உரிமையின் மேல் தாக்குதல் கூடாதுசெயலிபெரியார்இந்திரா நூயி அருஞ்சொல்சேவை நோக்கம்உத்தவ் தாக்கரேதமிழ் தாத்தாகாலனித்துவத்தை எப்படி எதிர்கொள்வது?ஹேக்கர்மக்களவைத் தேர்தல் 2024கோடி மீடியாமுகமதி நபிகால் வலிஇந்திய சோஷலிஸம்2019 ஆகஸ்ட் 5மதச்சார்பற்ற ஜனதா தளம்மோதும் இரு விவகாரங்கள் பீட்டருக்கே கொடு!தாண்டவராயனைக் கண்டுபிடித்தல்தேர்தல் தோல்விமெய்நிகர் நாணயம்நிறுவனங்கள் மீது தாக்குதல் மோடி 2.1!கடன்நயத்தக்க நாகரிகம்இஸம்தூசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!