கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு

உலகின் மனசாட்சி

ராமச்சந்திர குஹா
20 Jan 2022, 5:00 am
2

தென்னாப்பிரிக்காவைச் சுற்றியே சில வாரங்களாக என்னுடைய சிந்தனை சுழன்றுகொண்டிருக்கிறது. முக்கியமான காரணம் எதுவென்றால், பேராயர் டெஸ்மாண்ட் டூட்டுவின் மறைவு. நிறவெறிக்கு எதிராகப் போராடிய உன்னதர்களில் கடைசி ஒருவரும் நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். தென்னாப்பிரிக்காவில் செய்த பணிக்களுக்காவே டூட்டு அதிகம் அறியப்பட்டிருந்தாலும், அவருக்குச் சொந்தமல்லாத நாடுகளில் நிகழும் அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் குரல் கொடுத்துவந்தமைக்காக அவர் சர்வதேச அரங்கில் இன்றளவும் மதிக்கப்படுகிறார். அவருடைய சமகாலத்தவர்களைவிட அதிக அளவுக்கு, உலகின் மனசாட்சியாகத் திகழ்ந்திருக்கிறார்.

டெஸ்மாண்ட் டூட்டுவை முதல் முறையாக தொலைகாக்காட்சியில்தான் 1986 ஜனவரியில் பார்த்தேன். அப்போது அமெரிக்காவில் பல்கலைக்கழக ஆசிரியராக இருந்தேன், அந்த நாட்டுக்கு அவர் வந்திருந்தார். நிறவெறி அரசுக்கு மறைமுகமாக அல்லது மௌனமாக – சில வேளைகளில் வெளிப்படையாகவும்கூட – ஆதரவு அளித்துவந்த அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் தார்மிகமான கேள்விகளால் பிடித்து உலுக்குவதற்காக வந்திருந்தார். மேற்கத்திய நாடுகள் தரும் பொருளாதார அழுத்தம் காரணமாக, நிறவெறியின்பாற்பட்ட, பாரபட்சமான நடவடிக்கைகளை அன்றைய தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு நிறுத்திக்கொள்ளும் என்று அவர் நம்பினார். ஜெனரல் மோட்டார்ஸ் உள்பட பெருந்தொழில் நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்தார். அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய, மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் தலைவர்களையும் இதே நோக்கில் சந்தித்து தென்னாப்பிரிக்க நாட்டில் செய்திருந்த மிகவும் கணிசமான, அதிகம் லாபம் தரும் முதலீடுகளைத் திரும்பப் பெறுமாறு இறைஞ்சினார்.

அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது தீரம் மிக்க, கவர்ச்சிகரமான மனிதராகக் காணப்பட்டார். அனைவருடனும் பேசினார். அவருடைய நகைச்சுவை உணர்வு அவருக்குள்ளிருந்த எஃகு போன்ற உறுதியான திட சித்தத்தை வெளிக்காட்டாமல் மறைத்தது. அதிகாரம் மிக்கவர்கள், பணக்காரர்கள் ஆகியோரைச் சந்தித்ததுடன் 1960களில் அமெரிக்க மக்களின் அடிப்படை சிவில் உரிமைகளுக்காகப் போராடிய பலரையும்  சந்தித்தார். பலரும், பலமுறை அவரை மார்ட்டின் லூதர் கிங்குடன் ஒப்பிட்டனர். ஆனால் அதை அவர் உடனுக்குடன் மறுத்தார். “மார்ட்டின் லூதர் கிங் என்னைவிட அழகாக இருக்கிறார், நான் குட்டையாக, குண்டாக, வாரப்படாத தலைமுடியுடன் இருக்கிறேன்” என்று நிருபர்களிடம் நகைச்சுவையாக மறுப்பார்.

தென்னாப்பிரிக்காவில் முதலீடுசெய்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், நான் பணிபுரிந்த யேல் பல்கலைக்கழகமும் ஒன்று. டூட்டுவின் பயணம் மாணவர்களையும் ஆசிரியர்களில் சிலரையும் சிந்திக்கவைத்தது. "தென்னாப்பிரிக்க நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளை டூட்டு கோருகிறபடி திரும்பப் பெறுங்கள்" என்று நிர்வாகத்திடம் அனைவரும் மன்றாடினர். நிர்வாகம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. உடனே நூலகத்துக்கு எதிரில் இருந்த பெரிய திறந்தவெளியில் மரம், தகரம் ஆகியவற்றைக் கொண்டு குடில் அமைத்து அங்கே அமர்ந்து மனித உரிமைகளுக்கான பாடல்களைப் பாடுவது, கோரிக்கை முழக்கங்களை எழுப்புவது, தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தாக வேண்டிய அவசியம் குறித்துப் பேசுவது என்று மாணவர்கள் எதிர்ப்புகளைத் தொடர்ந்தனர். இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறையிலேயே இருக்கும் நெல்சன் மண்டேலாவின் உருவப்படங்களை போராட்டக் களத்தில் நிறுவினர். நிறவெறிக்கு எதிரான போராட்டமும் தியாகங்களும் ஒன்று கலந்த கலவையாக, நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவரச் சிறையில் தவமிருந்தார் மண்டேலா.

யேல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அந்த சில மாதங்கள்தான் நான் இந்தியாவைவிட்டு வெளியே தங்கிய முதல் தருணம். வயதில் இருபதுகளின் இறுதிப் பகுதியில் இருந்தாலும் தென்னாப்பிரிக்க அரசியலில் என்ன நடக்கிறது என்பதை, டூட்டு அமெரிக்கத் தொலைக்காட்சியில் பேசியதை நேரில் கேட்டது வரையில் - அறிந்து வைத்திருக்கவில்லை. அரசியல் ஆர்வம் இல்லாதது காரணம் அல்ல, என்னுடைய நாட்டிலேயே நிலவும் சாதி, மதப் பூசல்கள் பதற்றங்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவன்தான். வியட்நாம், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் கொந்தளிப்பான அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து அறிந்து வைத்திருந்தேன்.

தென்னாப்பிரிக்கா குறித்து அறியாமல் இருந்ததற்கு நான் இந்தியப் பத்திரிகைகள் மீது ஓரளவுக்கு குற்றஞ்சாட்ட முடியும். நிறவெறி அரசு என்பதால் தென்னாப்பிரிக்காவுடன் தூதரக உறவு உள்பட நெருக்கமான உறவுகளை இந்தியா துண்டித்துக்கொண்டிருந்ததால், இந்தியப் பத்திரிகையாளர்களால் அங்கிருந்தபடி செய்திகளைத் தர முடியாமல் போயிருக்கலாம். தொலைக்காட்சியில் டூட்டு பேசியதைக் கேட்டது மட்டுமின்றி அவருடைய அறிக்கைகளைப் பத்திரிகைகளில் விரிவாகப் படித்ததன் மூலமும், அவருடைய வருகை வெள்ளையின மாணவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் உணர்ந்ததன் மூலமும் தென்னாப்பிரிக்க அரசியல் தொடர்பாக - காலம் கடந்துதான் என்றாலும் - என்னுடைய ஆர்வம் அதிகரித்தது.

இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, தென்னாப்பிரிக்க அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாகத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். தென்னாப்பிரிக்க அரசு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் இயக்கமும் இதற்கிடையில் வேகம் பெற்றது. பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் - அதற்கும் முன்னால் தென்னாப்பிரிக்க அரசை விமர்சிக்கத் தயங்கியவர்கள் - முதல் முறையாக எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கினர். நெல்சன் மண்டேலா அப்போதும் சிறையில்தான் இருந்தார். ஆனால், எப்போதாவது ஒரு முறை வெளிநாட்டுத் தலைவர்களைச் சிறையிலேயே சந்திக்க அனுமதிக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் பிரதமராக இருந்த மால்கம் பிரேசர். பிரேசரைச் சந்தித்தபோது மண்டேலா கேட்ட முதல் கேள்வி, கிரிக்கெட் ஜாம்பவான் ‘டான் பிராட்மேன் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா?’

லண்டனில் கோபாலகிருஷ்ண காந்தியின் இல்லத்தில் 1991-ல் டிரெவர் ஹடல்ஸ்டன் என்ற ஆங்கிளிகன் ஆயரைச் சந்தித்தேன். நிறவெறிச் செயல்களைக் கண்டித்ததற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து 1950-களில் வெளியேற்றப்பட்டவர் அவர். ஜோகன்னஸ்பர்கில் திருச்சபை ஆயராக இருந்தபோது டெஸ்மாண்ட் டூட்டு, ஜாஸ் இசைக் கலைஞர் ஹியூஜ் மசகேலா உள்பட பலரை நிறவெறிக்கு எதிராகப் போராடும் உணர்வூட்டி வளர்த்தார். விருந்தின்போது, “உங்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது” என்று இன்னொரு விருந்தாளி ஹடல்ஸ்டன்னைப் பார்த்துக் கேட்டார். “நான் இறப்பதற்கு முன்னால் (தென்னாப்பிரிக்காவில்) நிறவெறி மடிவதைப் பார்க்க விரும்புகிறேன்” என்று அவர் பதில் அளித்தார். ஹடல்ஸ்டனின் விருப்பம் நிறைவேறியது. 1994இல் நெல்சன் மண்டேலா அதிபரான பிறகு ஹடல்ஸ்டன் தென்னாப்பிரிக்கா சென்று அவரைச் சந்தித்துவிட்டு சில நாள்கள் அங்கே தங்கியிருந்தார்.

1997 முதல் 2009 வரையில் தென்னாப்பிரிக்காவுக்கு ஐந்து முறை சென்று வந்தேன். அப்போது நிறவெறிக்கு எதிராகப் போராடிய குறிப்பிடத்தக்க சில ஆளுமைகளை நேரிலேயே சந்தித்தேன். கவிஞர் மோங்கனே வாலி செரோட்டே, சமூகவியலாளர் பாத்திமா மீர், நீதியாளர் ஆல்பி சாக்ஸ், வரலாற்றாசிரியர் ரேமாண்ட் சுட்னர் ஆகியோர் அவர்களில் சிலர். கலை-கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்றக் குழுவில் மோங்கனே இடம்பெற்றிருந்தார். தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படையினர் வீசிய குண்டால் வலது முழங்கையையும் ஒரு கண்ணையும் இழந்தவர் ஆல்பி சாக்ஸ். ரேமாண்ட் சுட்னர் கல்வித்துறைக்கான பத்திரிகையை நடத்தி வந்தார். சிறையில் அவர் அனுபவித்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளை அவருடைய முகத்திலிருந்த வடுக்கள் அடையாளம் காட்டின. அவர்களும் அவர்களைப் போலவே பலரும் தங்களுக்கு நேரிட்ட காயங்களின் வரலாற்றை மறந்துவிட்டு அனைத்து இன, மத, நிற மக்களுக்கான ஜனநாயக நாட்டை உருவாக்குவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவருமே அவர்களுடைய துணிச்சல், உள்ள உறுதி, அறிவுக்கூர்மை ஆகியவற்றுக்காகவும், இவற்றையெல்லாம் விட முக்கியமாக – எவர் மீதும் வெறுப்பு பாராட்டாமைக்காகவும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். வெவ்வேறு இனப் பின்னணிகளிலிருந்து வந்தவர்கள். ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள். அவர்கள் ‘வானவில் நாட்டை’ பிரதிநிதித்துவப்படுத்தினர். டெஸ்மாண்ட் டூட்டுதான் இந்த வார்த்தையையும் பயன்படுத்தினார். இப்படிப்பட்ட உணர்வுதான் 1940களிலும் 1950களிலும் இந்தியாவிலிருந்த ஆசிரியர்கள், சமூகத் தொண்டர்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கும், அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்த தலைவர்களின் லட்சியங்கள் வழியாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றபோதெல்லாம் எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்றோருடன்தான் அதிக நேரத்தைச் செலவிட்டேன், எனவே டூட்டுவைச் சந்திக்கவோ பேசவோ முடிந்ததில்லை. ஆனால் 2005-ல், டூட்டு இந்தியாவில் பெங்களூருக்குத் தனிப்பட்ட முறையில் வந்திருந்தார். அவரைக் கௌரவப்படுத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சிறிய விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

டூட்டு என்னுடன் மட்டும் தனியாக இருபது நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு முதலில் சச்சின் டெண்டுல்கர் பற்றியிருந்தது. அப்போது நடந்த டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொள்ளும் அவருடைய லாகவத்தை டூட்டு வியந்து புகழ்ந்தார். டிரெவர் ஹடல்ஸ்டனை லண்டனில் சந்தித்தது குறித்து அடுத்து அவரிடம் தெரிவித்தேன். இதைக் கேட்டதும் அவருடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது, “டிரவர் எப்போதும் ஆப்பிரிக்கர்களைப் போலவே சிரிப்பார் – சிரிக்கும்போது முழு உடலும் குலுங்கும்” என்று அவருடைய நினைவுகளில் மூழ்கியவராகப் பேசினார்.

டூட்டுவை அந்த சில நிமிஷங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே போயிருந்தாலும் அவருடைய மறைவு எனக்குப் பெரிய சோகத்தையே உண்டு பண்ணியிருக்கும். அவருடைய அமெரிக்க வருகைக்குப் பிறகு யேல் பல்கலைக்கழக மாணவர்கள் என் கண் முன்னர் நிகழ்த்திய போராட்டங்களும், என்னுடைய சொந்த ஊருக்கு இருபதாண்டுகளுக்குப் பிறகு அவர் வந்து சென்றதும் நிகழவில்லையென்றாலும் டூட்டு எனக்குள் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியிருப்பார். அவருடைய நாட்டிலும் பிற நாடுகளிலும் தவறுகளைக் கண்டிக்கக் கூடிய தார்மிக உரிமையுள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஆளுமையாக அவர் இருந்தார். தென்னாப்பிரிக்காவின் மனசாட்சியாக எப்போதுமே செயல்பட்டார். நிறவெறி அரசின் கொடூரத்தை அவர் நேரடியாக எதிர்கொண்டார்.

மண்டேலாவின் மறைவுக்குப் பிறகு அமைந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் ஊழலையும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் முறைகேடுகளையும் கண்டிக்க அவர் தவறவில்லை. பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதக் குடியேறிகள் நிகழ்த்திய அநீதியையும், மியான்மரில் ரோங்கியாக்களுக்கு எதிராக ஆங்சான் சூச்சி காலத்து அரசு நிகழ்த்திய தாக்குதல்களையும் கண்டிக்க அவர் தவறேவேயில்லை. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஆங்கிளிக்கன் திருச்சபையினர் கொண்டிருந்த வெறுப்பையும்கூட அவர் கண்டித்தார்.

டூட்டுவின் வாழ்க்கையும் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியமும் நம்முடைய நாட்டுக்கும் பாடமாக விளங்கக் கூடிய அம்சங்களைக் கொண்டது. மதங்களுக்கிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற அவருடைய பெருவிருப்பம் இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது.

முதலில் ஆயராகவும் பிறகு திருச்சபை பேராயராகவும் உயர்ந்திருந்தாலும் கிறிஸ்துவத்தைக் கையாள்வதில்கூட வெறும் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் இயேசு அறிவுறுத்தியபடி அன்பின் வெளிப்பாடாகத் திகழ்ந்தவர். பிற மதங்களைச் சேர்ந்த தனித்துவமான மனிதாபிமானிகளையும் அவர் நேசித்தார், பாராட்டினார். அதற்காக அவர் சொன்ன வாக்கியம், ‘கடவுள் கிறிஸ்தவர் அல்ல!’

ஆம், கடவுள் இந்துவும் அல்ல!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.


2

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

கட்டுரைத் தலைப்பில் அருஞ்சொல் மேற்கொள்கிற கவனம் பாராட்டத்தக்கது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Fazhul Rahuman   3 years ago

கடைசி வரி நிகழ் கால இந்தியநின் கன்னத்தில் விழுந்த அடி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அதிநாயக பிம்பமான நாயகன்உதயசந்திரன்கார்ட்டோம் தீர்மானம்நிதியாண்டுதாற்காலிக சாதியம்மகிழ் ஆதன்ஜொஹாரி பஜார்வெறுப்புக்கு இடையே அன்புஜெனோசைட்சிறு மருத்துவமனைவினைச்சொல்என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?அறிவியல் நிபுணர்கள்மாலை டிபன்ஜெயலலிதாவின் அணுகுமுறைசீர்குலைவு முயற்சிகள்வெளியேற்றம்துள்ளோட்டம்சென்னை மாநகராட்சிசோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?சேரன்இன்னொரு சிதம்பரம் உருவாவது யார் பொறுப்பு?தமிழ் கலாசார ஆழ்மனதின் குரல்ரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?அதிகபட்ச அநீதிஅரசமைப்புச்சட்ட அதிகார அமைப்புகள் எதிர் அரசமைப்புசமுதற்பெயர்காந்திய வழிஜார்ஜ் ஆர்வெல்சமஸ்தானங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!