கட்டுரை, அரசியல் 9 நிமிட வாசிப்பு

குஜராத் 2002 தழும்புகள் மறையவே மறையாது

ராமச்சந்திர குஹா
04 Jan 2022, 5:00 am
4

ல்வேறு ஆண்டு விழாக்களின் ஆண்டாக இருக்கப்போகிறது 2022. அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா ஆண்டு. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மகாத்மா காந்தி கைதுசெய்யப்பட்ட நூற்றாண்டு. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய 80வது ஆண்டு. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டு. முதலாவது பொதுத் தேர்தல் தொடங்கிய 70வது ஆண்டு. இந்தியா-சீனா போர் நடைபெற்ற 60வது ஆண்டு.

இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் பிரதமராலும் அவருடைய அரசாலும் நிச்சயம் பெரும் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் பிரதமரைத் தனிப்பட்ட முறையில் துதி பாடும் விழாக்களாகவும் கொண்டாடப்படும்.  அரவிந்தரின் ஆன்மிக மகோன்னதம் குறித்து எழுச்சிமிகு உரையை பிரதமர் நிகழ்த்துவார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டம் - தியாகம், இந்திய ஜனநாயகத்தின் ஆழ்ந்த – தொடர்கின்ற ஜனநாயக மரபுகள் பாராட்டப்படும்; வெளிநாட்டு எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் இந்தியத் துருப்புகள் தயார் நிலையில் இருப்பதை அரசு உறுதிசெய்யும் என்றெல்லாம் முழங்கப்படும்.

ஒரேயொரு ஆண்டு நிகழ்வு மட்டும் - துக்க அனுசரிப்புதான் - பிரதமரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் விடுபட்டுவிடும் என்று ஊகிக்கிறேன். குஜராத்தில் 2002 பிப்ரவரி – மார்ச்சில் நடந்த மாபெரும் வகுப்புக் கலவரங்களின் நினைவுதான் அது. ‘வகுப்புக் கலவரம்’ என்ற வார்த்தை உண்மையில் நடந்த பயங்கரத்தை மறைத்து, மென்மையாகக் குறிப்பிடும் இடக்கரடக்கலான சொல். பொருத்தமான வார்த்தை அதற்கு உண்டென்றால் அது ‘படுகொலைகள்’ என்பதே. அந்த வன்முறைச் சம்பவங்கள் ஒரேயொரு சமூகத்தை – முஸ்லிம்களை – குறிவைத்து நடந்தன.

வரலாற்றாசிரியன் என்ற வகையில் சொல்கிறேன், குஜராத்தில் 2002இல் நடந்த முஸ்லிம்கள் படுகொலைக்கும், அதற்கும் 18 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சீக்கியர்கள் படுகொலைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. 1984இல் பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்ற சம்பவம், அந்தப் படுகொலையுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைப் பழிவாங்குவதாக அமைந்துவிட்டது. 2002இல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 51 யாத்ரிகர்கள் ரயில் பெட்டியோடு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலைசெய்ய வழிவகுத்தது. இரண்டு சம்பவங்களிலும் அரசுகளும் ஆளுங்கட்சிகளும் வன்முறை பரவவுதையும், இலக்காகக் கருதப்பட்ட மதச் சிறுபான்மைச் சமூக மக்கள் படுகொலைகள்செய்யப்படுவதையும்  கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தன. இவ்விரண்டு சம்பவங்களிலும் அப்போது அதிகாரத்தில் இருந்த பிரதமர் ராஜீவ், முதலமைச்சர் மோடி ஆகியோர் உடனடியாக நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பெறும்விதத்தில் அரசியல் லாபம் அடைந்தனர். அவர்களுடைய பிரச்சாரம் யாரை எச்சரிக்க வேண்டுமோ அவர்களை எச்சரிக்கவே உதவிற்று. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகப் பொய்கள் பரப்பப்பட்டன.

இவ்விரண்டிலும் கண்ணுக்குத் தெரிந்த சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன. 1984இல் சீக்கியர்கள் மீது விஷம் கக்கியதற்கான பரிகாரங்களை காங்கிரஸ் கட்சி செய்துவிட்டது. அதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது என்பது உண்மைதான். காங்கிஸ் கட்சியின் தேசியத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட உடனேயே 1999இல் சோனியா காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்றார். மன்னிப்பு கோரவில்லையே தவிர, தங்களுடைய நெஞ்சார்ந்த வருத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004இல் பதவிக்கு வந்தவுடன் அதன் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முந்தைய காங்கிரஸ் பிரதமருடைய கண் எதிரில் நடந்த படுகொலைகளுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். “சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சீக்கிய சமூகத்திடம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துச் சமூகங்களிடமும், நடந்தவற்றுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன், காரணம் தேசம் என்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுகளுக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன” என்று நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 2005இல் பேசுகையில் மன்மோகன் சிங் குறிப்பிட்டார் (1).

டாக்டர் மன்மோகன் சிங் இப்படி மன்னிப்பு கோரிய காலத்தில் சீக்கியர்கள் பெரும்பாலும் நடந்த சம்பவங்களை மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஏப்ரல் 2005இல் நான் பஞ்சாப் சென்று ஏராளமான சீக்கிய பள்ளிக்கூட ஆசிரியர்கள் நிரம்பியிருந்த கூட்டத்தில் பங்கேற்றேன். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகவும், ஜே.ஜே.சிங் (முதலாவது சீக்கிய) தரைப்படை தலைமை தளபதியாகவும், மான்டேக் சிங் அலுவாலியா மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் (அப்போது மிகவும் செல்வாக்கான பதவி) இருந்ததன் மூலம், சீக்கியர்களும் மற்றவர்களுக்குச் சமமாக நடத்தப்படுவது உறுதி என்பது செயல்வடிவிலேயே காட்டப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சி இப்படித் திட்டமிட்டு மூன்று பெரிய பதவிகளில் சீக்கியர்களை அமர்த்தவில்லை என்றாலும் அரசியல், ராணுவம், பொருளாதார ஆணையம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளில் சீக்கியர்கள் தலைமை வகித்தது முக்கியத்துவம் வாய்ந்த அடையாளமாகத் திகழ்ந்தது.

சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுபான்மைச் சமூகத்தினரின் காயப்பட்ட உணர்வுகள் பெருமளவுக்கு (முழுதாக இல்லாவிட்டாலும்) ஆற்றப்பட்டது. ஆனால் மறுபக்கத்தில், குஜராத் முஸ்லிம்கள் 2002இல் இருந்த  நிலையிலேயே அச்சத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் – ஏன், அதைவிட அதிகமான அளவிலும், கலக்கத்திலேயே இருக்கின்றனர். மோடியிடமிருந்தோ அல்லது பாரதிய ஜனதாவின் பிற தலைவர்களிடமிருந்தோ வருத்தமோ, தவறுசெய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வோ, பாதிக்கப்பட்டவர்கள் மீது இரக்கமோ ஏற்பட்டு மன்னிப்பு கேட்கவே இல்லை. மன்மோகனும் காங்கிரஸும்  செய்ததற்கு நேர்மாறான பாடத்தையே மோடியும் அவருடைய கட்சியினரும் பின்பற்றுகின்றனர். வெளிப்படையான வன்முறை மூலம் சிறுபான்மைச் சமூகத்தவரான முஸ்லிம்களை அச்சுறுத்தி அடக்கிய பிறகு, பெரும்பான்மைச் சமூகத்தவரான இந்துக்களின் விருப்பங்களை ஏற்று நடக்க வேண்டும் என்று பிற சிறுபான்மைச் சமூகத்தவரை – குறிப்பாக முஸ்லிம்களை - மிரட்ட அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மெத்தக் கடினம் – ஆனால் செயல்படுத்த முடியாததல்ல – பாஜக ஆளும் இந்தியாவில் ஒரு முஸ்லிம் பிரதமர் பதவிக்கோ, ராணுவத் தலைமை தளபதி பொறுப்புக்கோ – எல்லாத் தகுதிகளும் இருந்தாலும்கூட – வருவதை கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. இருந்தாலும் அவர்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகமாகிக்கொண்டேவருகின்றன. மக்களவையில் பாஜகவுக்கு இருக்கும் 300+ உறுப்பினர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. தங்களுக்கு வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களில் முஸ்லிம்களும் உண்டு என்ற வாய்ப்பையே நிராகரித்து, ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் தேசியத் தேர்தலிலும் ‘இந்து சமூகத்துக்கு ஆபத்து’ என்றே கூவுகின்றது பாஜக (சமீபத்திய உதாரணம் உத்தர பிரதேசம்). அன்றாட வாழ்க்கையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குழுக்கள் சாலைகளில் எங்காவது முஸ்லிம்கள் தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டே திரிகிறது. அப்படித் தென்பட்டால் அவர்களை ஏகடியம்செய்கிறது, மிரட்டுகிறது, அவமானப்படுத்துகிறது, அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது.

அதேசமயம், குஜராத்தில் 2002இல் நடந்த வன்செயல்கள், முதலமைச்சர் தன்னுடைய ராஜ தர்மத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் ஏற்பட்டது என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கருதினார். அதன் பிறகு மோடியின் அரசியல் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தனக்கு முந்தைய பிரதமர்களின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுச் செயல்படுகிறவராக இருக்கிறார் என்பது புரிகிறது. மோடி – அமித் ஷா தலைமையில் பாஜக என்பது, இந்துக்களால் இந்துக்களுக்காகவே நடத்தப்படுவதாக இருக்கிறது. இந்த வகையில் 2002இல் குஜராத்தில் நடந்த வன்செயல்கள், இப்போது தேசிய அளவில் முயற்சிக்கப்படுவதற்கு முன்னதான ஒரு வெள்ளோட்டம் என்றும்கூட கருதலாம்.

தேசம் என்றால் என்னவென்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறதோ அதை நிராகரிக்கும் வகையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நிகழ்ந்துவிட்டன என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். மோடியின் கண்ணெதிரில் குஜராத்தில் 2002இல் நிகழ்ந்தவையும் அரசமைபுச் சட்டம் எதைக் கூறுகிறதோ அதை அப்படியே நிராகரித்த சம்பவங்கள்தான். இருந்தும் நடந்தவற்றுக்காக மன்னிப்புக் கோருவது அவசியம் என்று மோடி நினைக்கவில்லை. அதற்கு ஓரளவுக்குக் காரணம் அவருடைய அகம்பாவம், மற்றொன்று தேசியம் என்பதற்கு அவர்களுடைய அகராதியில் உள்ள பொருள், அரசமைபுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுக்குப் பொருந்துவது அல்ல.

‘நன்மைக்கு - தீமை தெரிவிக்கும் அஞ்சலிதான் இருப்பதிலேயே மிகப் பெரிய பாசாங்கு’ என்று பதினேழாவது நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு எழுத்தாளர் லா ரோச்பௌகால்ட் (La Rochefoucauld) வர்ணித்தார். இந்தியர்கள் இந்தக் கூற்று நிகழ்வதை 2022இல் அடிக்கடி பார்க்கப்போகிறார்கள். மோடியோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு பங்களிப்பையும் செய்யவில்லை என்றாலும், இந்தப் போராட்டம் குறித்து பிரதமர் மோடி பேசுவதை அடிக்கடிக் கேட்கப்போகிறோம்.

இந்துத்துவம் கூறும் பெரும்பான்மையினவாதமானது, காந்தி வலியுறுத்திய அனைவரையும் அரவணைக்கும் கொள்கைக்கு நேர் முரணானது என்றாலும், காந்திக்கு மோடி அடிக்கடி புகழஞ்சலி செலுத்துவதையும் கேட்கப்போகிறோம். நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் வர வர குறைந்துகொண்டே வந்தாலும் (புதுதில்லியில் மாசு சேர்வது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டேவருகிறது) புதிய இந்தியாவின் ஜனநாயக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புதிய கட்டிடத்தை பிரதமர் தொடங்கிவைக்கப்போவதையும் பார்க்கப்போகிறோம். இறுதியாக, தார்மிகத்திலும் அறிவார்ந்த சிந்தனையிலும் அரவிந்தருடன் தனக்கு உறவிருப்பதாக மோடி உரிமை கோருவார். விளம்பரப் பிரியரான மோடிக்கும் மிகப் பெரிய அறிவாளியும் தனிமை விரும்பியுமான அரவிந்தருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடுகள்  என்பதே உண்மை.

இப்படிப் பல்வேறு ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் மோடி பேசும்போது வரலாற்றைத் திரித்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வார். அதேசமயம், பொதுவெளியில் நிச்சயமாக அவர் ஒன்றைப் பற்றி மட்டும் கருத்து ஏதும் தெரிவிக்க மாட்டார். தனிப்பட்ட முறையிலும் அரசமைப்புக் கண்ணோட்டத்திலும், அவரைப் பொருத்தவரை மிகவும் முக்கியமான ஆண்டு நிகழ்வான குஜராத் கலவரம் பற்றி வருந்தியோ வேறு விதமாகவோ பேசவே மாட்டார். அதன் கரிய நிழல்கள் இந்தியக் குடியரசு மீது இன்றுவரை நீண்டு கொண்டே இருக்கிறது.

பின்குறிப்பு: குஜராத்தில் 2002இல் உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள பின்வரும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் படியுங்கள்:

1. https://www.thehindu.com/news/the-cables/Manmohan Singhs-apology-for-anti-sikh-riots-a-lsquoGandhian-moment-of-moral-clarity-says-2005-cable/article14692805.ece

2. Revati Laul, The Anatomy of Hate

3. Ashish Khetan, Undercover: My Journey into the History of Hindutva

4. R.B. Sreekumar, Gujarat: Behind the Curtain;S. Varadarajan, editor, Gujarat: The Making of a Tragedy.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Jameelah Razik   3 years ago

வணக்கம் . தெளிவான கட்டுரை . குஜராத் படுகொலைகள் , சிறுபான்மையினர் தம் அரசு மீது கொண்டிருக்கும் நம்பிக்கையிலும் , நம்முடைய மதநல்லிணக்கத்திலும் விழுந்துவிட்ட கரும்புள்ளியாய் இருந்துகொண்டிருக்கிறது . புள்ளி மறைய இயலாது எனினும் காரணமானவர்கள் தங்கள் கரங்களைக் கழுவவேனும் முயற்சிக்கவில்லை என்பதைக் கட்டுரை சுட்டுகிறது .இந்தியர்கள் பொறுமையானவர்கள் .பார்ப்போம் .

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   3 years ago

வணக்கம்! அருஞ்சொல் பிற மொழிகளிலும் வெளிவருகிறதா? அப்படி வந்தால், நாடு நலம் பயக்கும் என நம்புகிறேன். நன்றி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   3 years ago

Ramachandra Guha is known for his frankness in all matters he is writing about or dealing with. The same spirit is in this article also. The two riots, he is comparing in the article were situationally and emotionally different. The personalities were different. In the Gujarat case, Hindu fundamentalists and the BJP rulers in the State were waiting for an opportunity to take on the Muslims and carried out the pre-planned riots. Delhi riots were different. It was spontaneous judged by the developments then. Therefore, expecting Narendra Modi or any BJP leader worth the name to seek apology for Gujarat riots is too much of an expectation, going by the left-oriented, hard-core nature of the rioters .

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   3 years ago

1984 க்கும், 2002 க்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். மொழியாக்கம் எனத் தெரியாத வகையில் இருப்பதே ரங்காசாரி அவர்களின் பங்களிப்பின் மேன்மை. அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

முதலிடம்முதியவர்கள்மிக்ஜாம்நிராசை உணர்வுநீதிபதிகூட்டாச்சிபொருளாதார ஆய்வறிக்கைதீன் மூர்த்தி பவன்சிறை தண்டனைபன்மைத்துவ அரசியல்நுகர்வுதிருப்பாவைசுந்தர் சருக்கைஅருஞ்சொல் ஜல்லிக்கட்டு பெருமாள் முருகன்உப்புப் பருப்பும்அராத்து கட்டுரைசாதி ஒழிப்புசனாதனம் என்றால் என்ன?: சமஸ் பேட்டிமரணத்தோடு தொடர்புகொண்டவையா மடங்கள்?மடாதிபதிஅரசியல் தலைவர்கள்மனுதர்ம சாஸ்திரம்சாதி உணர்வுநாடகசாலைத் தெருமுரசொலி வரலாறுகடின உழைப்புசுருக்கிகழுத்து வலியால் கவலையா?வணிகர்கள்பற்றாக்குறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!