கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

சர்வாதிகார ஜனநாயகம்

ராமச்சந்திர குஹா
17 Jun 2022, 5:00 am
1

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னால் (1937) சுயராஜ்யம் கிடைத்தால் நாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக சில மாகாணங்களில் பொதுத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் போட்டி போட அனுமதிக்கப்பட்டு ஆட்சிகளும் ஏற்பட்டன. இந்திய மக்கள் பிரதிநிதிகளுடன் பொறுப்புள்ள அரசு உருவாவதற்கான முதல் படியாக இது பார்க்கப்பட்டது. 

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தது. மிகச் சிறந்த தமிழ் அறிவுஜீவி ஒருவர், ஜனநாயகத்தில் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான ஓர் உரையை அந்தத் தருணத்தில் நிகழ்த்தினார், அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியாவின் இன்றைய அரசியல் கலாச்சாரத்தை முன்னதாகவே எதிர்பார்த்துப் பேசியதைப் போலவே இப்போதும் பொருத்தமாக இருக்கிறது!

இரு வகைத் தலைவர்கள்

அப்படிப் பேசிய அறிஞர் சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறைப் பேராசிரியர் கே.சுவாமிநாதன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1938இல் மாணவர்களிடையே பேசிய அவர், “இருவேறுவிதமான அரசியல் தலைவர்கள் உலகில் உண்டு” என்றார்.

தங்களை விட்டால் வழிநடத்த வேறு யாரும் தகுதியானவர்கள் கிடையாது – எனவே தான்தான் முக்கியமானவர் என்று கருதுவோர் ஒரு பிரிவு, அப்படி நினைக்காத உண்மையான தலைவர்கள் இன்னொரு பிரிவு. தன்னைவிட்டால் வேறு யாரும் கிடையாது என்று நினைக்காத தலைவர்களுக்கு அடையாளமாக அவர் மகாத்மா காந்தியைக் குறிப்பிட்டார். ‘காந்தி மிகவும் கவலைப்பட்டவராக, தனக்குப் பிறகு இபபணிகளை மேற்கொள்ள தகுதியானவர்கள் வர வேண்டும் என்கிற அக்கறையில் கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகப் பலரை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்து பொறுப்புகளை ஒப்படைத்துவருகிறார். அவருடைய கடைசி விருப்பம் எதுவென்றால், தனக்குப் பிறகு தலைமை தாங்கவும், வழிநடத்தவும் யாருமில்லை என்ற நிலைமை வரக் கூடாது என்பதுதான். காந்தி அடையாளம் கண்டு பொறுப்புகளை அளித்து பயிற்சி தந்திருக்காவிட்டால் ஜவாஹர்லால் நேருவோ, ராஜேந்திர பிரசாதோ கிடைத்திருக்க மாட்டார்கள். அவரால் அடையாளம் காணப்பட்டு கைதூக்கிவிடப்பட்டாலும் அவர்கள், அவர் சொல்வதெல்லாம் சரி என்று ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களாக இல்லை. வெறும் களிமண்ணைக் குழைத்தெடுத்து பெரிய செயல்வீரர்களைப் படைக்க காந்தியால் முடிந்தது, அப்படிப்பட்டவரால் உள்நாட்டிலேயே கிடைத்த தங்கத்தைக் கொண்டு எதைத்தான் செய்ய முடியாது? தன்னைப் போன்ற உருவம் இல்லாமல், தன்னுடைய குண நலன்களைக் கொண்ட சத்யாகிரகிகளை அவரால் உருவாக்க முடிந்தது.’

இப்படி ஆரோக்கியமான முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டிய சுவாமிநாதன் அடுத்து ஓர் எச்சரிக்கையையும் அந்த உரையிலேயே விடுத்தார். ‘இன்னொரு வகைத் தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களையே நம்ப மாட்டார்கள், யாரையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள், சுயமாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்களைத் தங்கள் அருகில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவரும் புளியமரங்களைப் போன்றவர்கள். அது வாழும் காலத்தில் உன்னதமாக இருக்கும், நல்ல பலன்களையும் அளிக்கும், தன்னைச் சுற்றிலும் வேறு எந்த மரமும் தாவரமும் வளர அனுமதிக்கவே அனுமதிக்காது.

அதைப் போன்றவர்கள் அந்தத் தலைவர்கள். தங்களுடைய கருத்துகளுக்கு எதிர்க் கருத்துகளைக் கூறுகிறவர்களை அவர்களுக்குப் பிடிக்காது, நட்புரீதியிலான விமர்சனங்களைக்கூட அவர்கள் வெறுப்பார்கள். துருக்கிய நாட்டு மன்னர்களைப் போலவே நடந்துகொள்வார்கள். சிம்மாசனத்துக்குப் பக்கத்தில் தன்னுடைய உடன் பிறந்தவர்கள்கூட வருவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் விடைபெறும் காலத்தில் தலைமைக்கு ஏற்ற வாரிசு இல்லாமல் தலைமையிடத்தை அப்படியே மலடாக்கிவிட்டுச் செல்வார்கள்.’

‘நம்முடைய நாட்டுக்கு இப்போது என்ன தேவை என்றால் – நம்முடைய (கல்லூரி – பல்கலைக்கழக) விடுதிகள் எந்த விதத்தில் உதவலாம் என்றால் சராசரியான திறமைகளுக்கும் சற்றே அதிகம் உள்ள அரசியல் தலைவர்களை உருவாக்குவதுதான். தனக்கு அடுத்திருப்பவர்களைவிட பல மடங்கு அறிவும் ஆற்றலும் தொலைநோக்கும் உள்ள மாபெரும் தலைவருக்கும் அவருடைய தொண்டர்களுக்கும் இடையே திறமையில் மிகப் பெரிய இடைவெளி ஏற்படுவதை நான் விரும்பவில்லை.’

சுவாமிநாதனின் உரைகள் அடங்கிய ஆய்வேடுகளைச் சமீபத்தில்தான் படித்தேன். 1938இல் தனது உரையில் அவர் விடுத்த எச்சரிக்கை 2022இல் இந்தியாவுக்கு அப்படியே பொருந்துவதை அதிர்ச்சியோடு அங்கீகரித்தேன். தன்னை உயர்வாக சித்தரிக்கும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க எந்தப் பிரதமரும் இந்த அளவுக்கு அரசு இயந்திரத்தையும் கட்சி அமைப்புகளையும் பயன்படுத்தியதில்லை. உலக வரலாற்றிலேயே இதுவரை அறிந்திராத துதிபாட்டு வழிமுறை இங்கே இருக்கிறது.

மோடியும் மம்தாவும்

நரேந்திர மோடி தன்னைத் தன்னிகரில்லாத் தலைவராக மக்களுடைய மனங்களில் பதியவைக்க எடுக்கும் நடவடிக்கைகளையும் அதனால் நேரக்கூடிய ஆபத்தான விளைவுகளையும் என்னுடைய முந்தைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். அவற்றை மீண்டும் எழுத விரும்பவில்லை. இப்படி அதிகாரத்தை ஒருநபர் கையில் மட்டுமே குவிக்கும் தனிநபர் வழிபாட்டு அரசியல் கலாச்சாரம் ஒன்றிய அரசில் மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளிலும் பரவியிருக்கிறது.

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்ற (மக்களவை) பொதுத் தேர்தலாக இருந்தாலும் நரேந்திர மோடியைக் கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒற்றை ஆளாக அவருக்கு ஈடுகொடுத்து நிற்கிறார். அவருடைய அரசியலும் மோடியின் அரசியல் பாணியைப் போலவே இருக்கிறது. அவர் தலைமையேற்று நடத்தும் திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க அரசு, வங்காளிகளின் கடந்த காலம் – நிகழ்காலம் – எதிர்காலம் என்று அனைத்துமே அவருக்குள்தான் அடக்கம் என்பதைப் போலச் செயல்படுகிறார்.

இப்படி அரசியல் கட்சி, மாநில அரசு, மக்கள் ஆகிய அனைத்தையும் கலந்து அவற்றுக்குத் தான் மட்டுமே அடையாளம் என்பதைப் போல மம்தா பானர்ஜி செயல்படுவது - தலைவர், கட்சி, அரசு, மக்கள் ஆகிய அனைத்துமே நானே என்று தேசிய அளவில் பிரதமர் மோடி செயல்படுவதன் கண்ணாடி பிம்பம் போலவே இருக்கிறது. ஒப்புமைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய முதல்வரைப் பற்றிப் பேசும்போது அச்சம் கலந்த மரியாதையுடனும், விதந்தோதும் விதமாகவும்தான் பேசுகிறார்கள்.

தனக்கு விசுவாசமான, தான் சொன்னபடி கேட்டு நடக்கும் அதிகாரிகளை மட்டுமே பிரதமர் மோடி பக்கத்தில் வைத்துக்கொள்வதைப்போல மம்தாவும் செயல்படுகிறார். பத்திரிகைச் சுதந்திரம் குறித்தும் அரசு அமைப்புகள் சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உதட்டளவில் மம்தாவும் பேசுகிறார், செயல்பாட்டிலோ சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறார், நிறுவனங்கள் சுயமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை, அப்படி அனுமதிப்பது தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என்று கருதுகிறார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி என்னவெல்லாம் செய்கிறாரோ அதையே அர்விந்த் கேஜ்ரிவால் தில்லியில் (மாநிலத்தில்) செய்கிறார். பினராயி விஜயன் கேரளத்தில் அமல்படுத்துகிறார், ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் அரங்கேற்றுகிறார். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரத்தில் அவ்வண்ணமே செயல்படுகிறார். தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவும் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும் அவ்வாறே செயல்படுகின்றனர்.

இந்த ஏழு முதல்வர்களும் இந்தியாவின் வெவ்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தனித்தனியாக ஏழு மாநிலங்களில் ஆட்சி செய்கிறவர்கள். ஆனால், ஏழு பேருமே அடிப்படையில் சர்வாதிகாரிகளாகவும், ஆட்சி செய்யும் முறையில் அதே பாணியைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். (என்னுடைய பட்டியல் முழுதானது அல்ல, கோடி காட்டுவது மட்டுமே; இன்னும் பல முதல்வர்கள் தங்களுடைய மாநிலத்துக்கு ஏகப் பிரதிநிதி தானே என்கிற தோரணையில் செயல்படுவதோடு மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன் எனும் கண்ணோட்டத்திலேயே நடந்துகொள்கின்றனர்).

பேராசிரியர் சுவாமிநாதன் இப்போது உயிரோடு இருந்திருந்து இந்த முதல்வர்களையெல்லாம் உற்று கவனித்து வந்திருந்தால், ‘இந்த முதல்வர்கள் மாற்றுக்கருத்துகளைக் கூறக்கூட அனுமதிக்க மனமில்லாத சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், நட்புரீதியிலான விமர்சனங்களைக்கூட தாங்கும் மனப்பக்குவமற்றவர்களாக இருக்கின்றனர்’ என்று கூறியிருப்பார்.

சர்வாதிகாரம்...

சுதந்திரமாகச் சிந்தித்து தாங்களாகச் செயல்படும் தொண்டர்களைவிட, தான் சொல்கிறபடி நடப்பவர்கள் மட்டுமே தங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று இத்தகைய தலைவர்கள் விரும்புவர். மற்றவர்களுடைய வாழ்க்கையையும் வளர்ச்சியையும் இத்தலைவர்கள் நசுக்கிவிடுவார்கள்.

தங்களை விட்டால் வழிநடத்த யாருமில்லை எனும் நிலையையே அவர்கள் விரும்புவார்கள், தங்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்ப்பதில் ஆர்வமோ, ஈடுபாடோ இல்லாமல் இருப்பார்கள். தங்களைச் சுற்றி இருப்பவர்களைவிட எல்லாவிதத்திலும் தங்களை உயரமான பீடத்தில் ஏற்றிக்கொள்வார்கள். யாருக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களோ அவர்களுக்கும் தங்களுக்கும் இடையில் மிகப் பெரிய அந்தஸ்து இடைவெளி இருக்குமாறு செயல்படுவார்கள்.

எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள் என மற்றவர்கள் என்னை குற்றஞ்சாட்டக்கூடும், இந்தச் சர்வாதிகாரிகளுக்குள்ளும் சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் அங்கீகரித்தாக வேண்டும். மோடி தேசிய அளவில் என்றால் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தில் சர்வாதிகாரத்தையும் பெரும்பான்மையினவாதத்தையும் இணைத்துச் செயல்படுகிறார். மதச் சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி, தண்டிக்கிறார் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் அரசியல் எதிரிகளைச் சிறையில் தள்ளுவதிலும் மோடியும் ஆதித்யநாத்தும் இரக்கமே இல்லாமல் செயல்படுகிறவர்கள்.

அதேசமயம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் தனியதிகாரத்தையும் சொந்த செல்வாக்கையும் அரசு அதிகாரம் – அரசு நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களைச் செல்வாக்குள்ளவர்களாக வளர்த்துக்கொள்கிறார்கள் என்று யாராவது சொன்னால் அதை ஆட்சேபிக்கவே முடியாது.

சர்வாதிகாரம் கோலோச்சுகிற ஆட்சிகளில் அதாவது ராணுவ ஆட்சிகளில், பாசிஸ்டுகளின் ஆட்சியில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் பதவியில் இருக்கும் தலைவரைப் போற்றித் துதிக்கும் கலாச்சாரம் கட்டாயமாகப் பின்பற்றப்படும். நாட்டின் உச்சபட்ச அரசியல் அதிகாரமுள்ள பதவியை வகிப்போர், அனைத்து மக்களின் கருத்துகளையும் நேரடியாக அவரே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவிக்கப்படும், இது ஜனநாயக சிந்தனைகளுக்கு அப்படியே நேர் முரணானது. 

நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நுழைந்துள்ள நாம் சர்வாதிகாரியின் பண்புக்கூறுகளை அவ்வப்போது வெளிப்படுத்தும் தனிநபர் தலைவர்களை அதிகம் கொண்ட ஜனநாயக நாடாகத் திகழ்கிறோம். இது நம்முடைய மனங்களுக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்க முடியாமல் மனச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடக்கிறோம். சுதந்திரமாகவும் நாம் விரும்புவதை அப்படியேயும் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். சுய வளர்ச்சியிலும் அதிகாரத்திலும் மட்டும் அக்கறை உள்ள தலைவர்கள் நாட்டின் நிர்வாகத்திலும் வளர்ச்சியிலும் தங்களுக்குரிய அன்றாடக் கடமைகளை நிறைவேற்றாமல் புறக்கணிப்பார்கள்.

எல்லா அதிகாரங்களையும் தங்களுடைய கைகளிலேயே குவித்துக் கொண்டு, அமைச்சர்கள் அல்லது அரசு அதிகாரிகளை நம்பாமல் – அவரவர் துறைகளில் செயல்படுவதற்குக்கூட சுதந்திரம் தராமல் இருப்பவர்கள் மக்கள் தொகை அதிகமுள்ள மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தை ஆளத் தகுதியற்றவர்கள் – அதைவிடப் பல மடங்கு பெரிதான இந்தியாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இடைவிடாமல் தங்களைச் சுற்றி துதி பாடிக்கொண்டே இருக்கும் விசுவாசிகளைக் கொண்டவர்கள் மோசமான

பிரதமராக (அல்லது முதல்வராக) வரலாற்றில் இடம்பெறுவார்கள். மக்களுடைய கருத்தென்ன, தன்னுடைய கட்சியில் உள்ள தலைவர்களின் கருத்துகள் என்ன, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் விமர்சனங்கள் எப்படிப்பட்டவை, சுதந்திரமான ஊடகம் என்ன சொல்கிறது என கவனித்து, கருத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுகிற தலைவர்கள் ஜனநாயகர்களாகவும் நல்ல தலைவர்களாகவும் வரலாற்றில் இடம்பெறுவார்கள்.

இந்திய நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் தில்லியிலிருந்துகொண்டு ஒரே பெரிய மகா தலைவர் நிர்வகிப்பதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திவிட முடியாது, நம்முடைய சமூக ஒற்றுமையைக் காப்பாற்றிவிட முடியாது, தேசிய பாதுகாப்பை உறுதிசெய்துவிட முடியாது. சர்வாதிகாரப் போக்குள்ள பிரதமருக்கு, சர்வாதிகாரப் போக்குள்ள பல முதல்வர்கள் வாய்த்திருப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய ஆபத்துகளாகவே இருக்க முடியும்.

நம் நாட்டைச் சேர்ந்த நிபுணர்களும், எங்கெங்கோ பரந்துகிடக்கும் நம் நாட்டு மக்களும் சொல்வதைக் கேட்டும் கவனித்தும் செயல்படும் தலைவர்களால் நாடு பல வகையிலும் நன்மைகளையே பெறும். அப்படிப்பட்ட தலைவர்கள் தங்களுடைய அமைச்சரவை சகாக்களுக்கு அதிகாரங்களையும் செயல்படும் சுதந்திரத்தையும் வழங்கி அவர்கள் நன்றாகச் செயல்படும்போது அதற்குரிய பாராட்டையும் அவர்களுக்கு வழங்குவார்கள்.

பொது நிறுவனங்களின் தனித்தன்மையை அங்கீகரித்து, சுயாதிகாரத்தை அவை நன்கு பயன்படுத்த அனுமதிப்பார்கள். பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து அவற்றுக்கு உரிய மரியாதை அளிப்பார்கள், மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் முத்திரை குத்தாமல், அவர்களுடன் ஆக்கப்பூர்வமாகப் பேசி பிரச்சினைகளுக்குப் பொதுக் கருத்து மூலம் தீர்வு காண்பார்கள்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.


2

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

எல்லாம் pk உருவாக்கிய மோடிகள் ஒருவேளை நவீன முறையிலான ஆளுகை என்று கருதி உள்ளனரா என தெரிய வில்லை. ஸ்டாலின் எந்த முறை ஆளுகை என குறிப்பிடாமல் கடந்து விட்டார்.. ஜன நாயக முறை ஆட்சி செய்த காங்கிரஸ் இன்று படும்பாடு ஒரு எச்சரிக்கை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

கர்நாடக அரசியல்கெட்டதுசாஃபய் கரம்சாரி அந்தோலன்ஒரே மாதிரியான குழுகேட்கும் திறன்அரசுபிரிட்டிஷ்காரர்கள்மராத்தா இடஒதுக்கீடுமது தண்டவடேபேரினவாதம்ஜாட்பொது விநியோக திட்டம்சுவாரசியமான தேர்தல் களம் தயார்நார்வேமுத்துசுவாமி தீட்சிதர்தமிழ்நாடு ஆளுநர்ஜெர்மானிசத்தான உணவுபட்டப் பெயர்எச்எம் நஸ்முல் ஆலம் கட்டுரைமெட்றாஸ்மிஸோ தேசிய முன்னணிஇந்தி ஆதிக்கம்மாதையன்சமஸ் செந்தில்வேல்மார்க்ஸிய ஜிகாத்ஒரு கம்யூனிஸ்டின் வார்த்தைவேறு இரு சவால்கள்பள்ளிஅம்பேத்கர் எனும் குலச்சாமி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!