கட்டுரை, சர்வதேசம், விளையாட்டு 5 நிமிட வாசிப்பு

சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?

ராமச்சந்திர குஹா
10 Aug 2023, 5:00 am
0

முதன்முதலாக நான் படித்த கிரிக்கெட் புத்தகத்தில், கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் யார் என்று தன்னைக் கேட்டிருந்ததாக அந்த எழுத்தாளர் நினைவுகூர்ந்திருந்தார். அந்தக் கேள்விக்கு பதிலாக அந்த ஆட்டக்காரரின் பெயரைக் கூறாமல், ‘இடது கை வீச்சாளர், வலது கை மட்டையாளர், கிர்கீட்டன் கிராமத்தில் பிறந்தவர்’ என்று பதில் கூறியதாக எழுதியிருந்தார். 

புத்தகத்தின் தலைப்பு மறந்துவிட்டது, ஆனால் எழுத்தாளர் பெயர் நினைவிலிருக்கிறது. அவர் ஏ.ஏ.தாம்சன், யார்க்ஷையர் கிரிக்கெட்டர்கள் மீது முரட்டுத்தனமான விசுவாசம் கொண்டவர். வில்ஃப்ரட் ரோட்ஸ், ஜார்ஜ் ஹிர்ஸ்ட் என்ற இருவரும் யார்க்ஷையரின் கிர்கீட்டன் கிராமத்தில் பிறந்தவர்கள், அந்த கவுன்டிக்காக (பகுதி அணி) விளையாடியவர்கள், இருவரும் வலது கை மட்டையாளர்கள் இடது கை வீச்சாளர்கள், ஹிர்ஸ்ட் மிதவேகப் பந்து வீச்சாளர், ரோட்ஸ் சுழல் பந்து வீச்சாளர்.

இதுவரை கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்ற கேள்விக்கு அவர் சுற்றி வளைத்து அளித்த பதில் அவர்களைப் பற்றித்தான். அந்த இருவரில் ஒருவர் மட்டுமே சிறந்தவர் என்றுகூட கூற தாம்சன் விரும்பவில்லை, அவர்கள் இருவருமே அப்படி அழைக்கப்படத் தகுதியானவர்கள் என்றே அவர் நம்பினார்.

சிறு வயதில் நானும் ஏ.ஏ.தாம்சனைப் படித்த காலத்தில் கர்நாடக அணி மீது பிரதேசப் பற்று வைத்திருந்தேன். விளையாட்டில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு நாடு, தேசிய அணி என்பதைவிட உள்ளூர், மாநிலம் என்று பற்று வைக்க அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். ஆனால், அப்போதுகூட அது எனக்கு முரட்டுத்தனமான பக்தியாகவே தோன்றியது. 1960களில் தாம்சன் அந்தப் புத்தகத்தை எழுதினார்.

உலகின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று அழைக்கப்பட அப்போது ஒருவர் மட்டுமே தகுதி வாய்ந்தவராக இருந்தார். அவர்தான் சோபர்ஸ். பந்து வீச்சிலும் மட்டை வீச்சிலும் இடது கை ஆட்டக்காரராக இருந்தார், பார்படாஸில் இருந்த சிறிய கரீபியத் தீவில் பிறந்திருந்தார். ஹிர்ஸ்ட், ரோட்ஸ் இருவருமே கவுன்டியில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர்களுடைய பங்களிப்பு, கார்ஃபீல்ட் சோபர்ஸுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த கணித மேதையான ஜி.எச்.ஹார்டி ஒருமுறை குறிப்பிட்டார், “கிரிக்கெட் விளையாடிய பேட்ஸ்மேன்களிலேயே டான் பிராட்மேன் தனி ரகம்” என்று. ஹார்டி 1947இல் இறந்துவிட்டார். அவர் இன்னும் இருபது ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால், “கிரிக்கெட் உலக ஆல்-ரவுண்டர்களிலேயே சோபர்ஸ் தனி ரகம்” என்று புகழ்ந்திருப்பார்.

சோபர்ஸின் திறமையையும் தனித்துவத்தையும் நான் வெகு விரைவாகவே கவனித்து பின்பற்றத் தொடங்கிவிட்டேன். 1966இல் இங்கிலாந்தில் கோடைக்காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையை வானொலியில் கேட்டு ரசிப்பேன். மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிகளில் வென்றது. அணியின் தலைவரான சோபர்ஸ் 700க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தார், 20 விக்கெட்டுகளைச் சாய்த்தார், பத்து கேட்சுகளையும் பிடித்தார். அடுத்த குளிர் பருவத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்தது, அந்த அணியின் வெற்றியில் சோபர்ஸ் முக்கியப் பங்கு வகித்தார்.

அவரவர் துறைகளில் பிராட்மனும் சோபர்ஸும் நிச்சயம் தனி ரகமாகத்தான் இருந்திருக்கின்றனர், ஆங்கில இலக்கிய உலகில் வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு இருந்த ஆளுமை, செல்வாக்குக்கு இணையானது அவர்களுடைய இருப்பு. அப்படியானால் இரண்டாவது இடத்தைப் பிடிக்கக்கூடிய ஆங்கில எழுத்தாளர் யார் என்ற விவாதம் உடனே தொடங்கிவிடும்; அது வேர்ட்ஸ்ஒர்த்தா, சாசரா, ஜார்ஜ் எலியட்டா, சார்லஸ் டிக்கன்ஸா அல்லது வேறு யாராவதா? அதைப் போலவே கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இரண்டாவது மட்டையாளர் (பேட்ஸ்மன்) யார், மிகச் சிறந்த இரண்டாவது ஆல்-ரவுண்டர் யார் என்ற கேள்விகளும் எழும். இந்தக் கட்டுரையில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் பற்றி மட்டும் பார்ப்போம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?

தினேஷ் அகிரா 20 Feb 2023

பல ஆல்-ரவுண்டர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சோபர்ஸ் முதன் முதலாக 1954இல் விளையாடத் தொடங்கினார். உலகின் முதல் கிரிக்கெட் டெஸ்ட் அதற்கும் எட்டு தசாப்தங்களுக்கு முன்னால் 1877இல்தான் தொடங்கியது.

சோபர்ஸுக்கு முன்னால் ஆல்-ரவுண்டர்கள் யார் என்ற கேள்விக்கு தாம்சன் கூறிய ஹிர்ஸ்ட், ரோட்ஸ் தவிர அதே யார்க்ஷையரைச் சேர்ந்த எஃப்.எஸ். ஜாக்சன், ஆஸ்திரேலியாவின் மான்டி நோபிள், தென்னாப்பிரிக்காவின் ஜி.ஏ. ஃபாக்னர் ஆகியோர் மதிப்புக்குரிய வகையில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுத்தவர்கள். 1940களின் பிற்பகுதியில் டான் பிராட்மனின் அணியில் விளையாடிய கீத் மில்லரும் சிறந்த ஆல்-ரவுண்டர். எந்தவித வீச்சையும் அஞ்சாமல் விளாசுவார், எதிராளி நடுங்கும் வகையில் வேகமாகப் பந்து வீசுவார், ஸ்லிப் என்ற இடத்தில் மிகச் சிறப்பாக ஃபீல்ட் செய்வார்.

சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்-ரவுண்டர்கள் யார் என்று பார்க்கும்போது, 1970களிலும் 1980களிலும் விளையாடிய நான்கு தலைசிறந்த ஆட்டக்காரர்களையும் பரிசீலித்தாக வேண்டும். அவர்களுடைய கிரிக்கெட் வாழ்வு சம காலத்தில் அல்லது சற்று முன் பின்னாக அமைந்திருந்தது. நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி, பாகிஸ்தானின் இம்ரான் கான், இங்கிலாந்தின் இயான் போதம், இந்தியாவின் கபில் தேவ் அந்த நால்வர்.

அந்த நால்வரில் மிகச் சிறந்த வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லி. கபில்தேவ் காலத்தில் ஸ்லிப் திசையில் நன்றாக ஃபீல்ட் செய்யக்கூடியவர்கள் யாரும் இந்திய அணியில் இல்லாத நிலையிலும், இந்திய ஆடுகளத்திலும் உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீசியவர் கபில்தேவ். ஆனால், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நால்வரில் இம்ரான் கானையோ போதமையோ சிறந்த ஆல்-ரவுண்டர்களாகக் கருதக்கூடும், காரணம் அவ்விருவரும் பேட்டிங்கிலும் வீச்சிலும் சமமாக திறமை பெற்றவர்கள்.

காலிஸ்

ஹாட்லி, இம்ரான், போதம், கபில்தேவ் ஆட்டங்களை நிறையப் பார்த்து பெரிதும் வியந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் சிறந்தவர்கள்தான் என்றாலும் அவர்களுடைய வரிசையில் தென்னாப்பிரிக்காவின் ஷாக் காலிஸையும் (Jacques Kallis) சேர்த்துக்கொள்வேன். காலிஸ் கூச்ச சுபாவம் மிக்கவர், அவருடைய முழுத் திறமையையும் யாரும் சரியாக எடை போட்டதில்லை.

அவருடைய சமகாலத்தவர்களான ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையான் லாரா, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ரசிகர்களால் மிகவும் ஆராதிக்கப்பட்டவர்கள். அதனாலேயே கல்லிஸ் போதிய அளவில் உலக ரசிகர்களிடம் ஆதரவையும் மரியாதையையும் பெறவில்லை என்பேன். ஆனால், என்னைப் பொருத்தவரை என்னுடைய மனதிலும் இதயத்திலும் அவருக்கு நிரந்தர இடம் உண்டு.

‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் 2012இல் எழுதிய கட்டுரையில், அவருடைய மட்டையடித் திறன், வேகப்பந்தை அலையவைத்து வீசும் பாங்கு, ஸ்லிப் திசையில் பந்து வரும் என்று முன்கூட்டியே கணித்து அதைப் பிடிக்கும் லாகவம் பற்றி விவரித்திருந்தேன். ‘உலக கிரிக்கெட்டின் அதிக மதிப்புவாய்ந்த வீரர்’ என்று குறிப்பிட்டிருந்தேன். பேஸ்பால் விளையாட்டு வீரர்களைத்தான் விமர்சகர்கள் அப்படிப் பாராட்டுவார்கள், அதைக் கடன் வாங்கியிருந்தேன். ஈடு இணையற்ற சோபர்ஸுக்குப் பிறகு மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் கல்லிஸ்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

தினேஷ் அகிரா 13 Dec 2021

பென் ஸ்டோக்ஸ்

கல்லிஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றைய கிரிக்கெட் உலகில் அவரைப் போல மிகவும் மதிப்புமிக்க வீரர் யார்? என்னுடைய ஆதரவு இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸுக்குத்தான். இப்போது நடந்துவரும் ஆஷஸ் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய அசாதாரணமான திறமைகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் அவருடைய விளையாட்டைப் பார்த்தபோது 1981இல் ஹெடிங்லியில் நடந்த டெஸ்டில் இயான் போதம் விளையாடியது நினைவுக்கு வந்தது, ஆனால் அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மகிழும்படியான வெற்றி கிட்டியது. என் மனதைப் பொருத்தவரையில் போதமைவிட, ஸ்டோக்ஸ் சிறந்த ஆட்டக்காரர். களத்தின் எல்லா பக்கங்களிலும், எல்லாவித கள – பருவநிலைகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டோக்ஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிகம் சோபிக்காதவர் போதம்.

போதமைவிட ஸ்டோக்ஸ் உடலளவிலும் துணிச்சலானவர். டெஸ்ட் போட்டியானாலும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளாக இருந்தாலும் ஸ்டோக்ஸ் நன்றாக விளையாடுவார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் போதம் சுமாராகத்தான் விளையாடுவார். அணிக்கு உத்வேகம் ஊட்டக்கூடியவர் பென் ஸ்டோக்ஸ், போதம் அப்படிப்பட்டவர் அல்ல.

2019 வரையில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று இயான் போதமைக் கூறலாம். 2019க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் நிகழ்ந்தவற்றைப் பார்க்கும்போது போதம், அந்தப் பட்டத்துக்கு தொடர் உரிமையாளர் அல்ல என்று புரியும். இங்கிலாந்து அணிக்காக இதுவரை விளையாடிய ஆல்-ரவுண்டர்களிலேயே சிறந்தவர் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் பிறந்தவர், இடது கை மட்டையாளர், வலது கைப் பந்து வீச்சாளர், களத்தின் எந்த இடத்திலிருந்தாலும் நன்றாக ஃபீல்ட் செய்யக்கூடியவர், ஆம் – அவர்தான் பென் ஸ்டோக்ஸ். 

விக்கெட் கீப்பர்கள்

ஆல்-ரவுண்டர்கள் என்பதில் நாம் மட்டை பிடிக்கக்கூடிய, பந்து வீசக்கூடியவர்களை மட்டுமே இதுவரை பார்த்துவருகிறோம். இன்னொரு வகை ஆல்-ரவுண்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விக்கெட்டுக்கு முன்னாலும் பின்னாலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள் மட்டையுடன் மட்டுமல்லாமல் கையுறையோடும் அணிக்கு வெற்றியைத் தரக்கூடியவர்கள் – ஆம் விக்கெட் கீப்பர்கள். இவர்களையும் ஆல்-ரவுண்டர்களாகக் கருதினால் விவாதம் மேலும் சுவையாகிவிடும். இலங்கையின் குமார் சங்கக்கார, இந்தியாவின் மகேந்திர சிங் தோனி இதில் வருவார்கள், அவர்கள் மட்டுமல்ல ஆடம் கில்கிறைஸ்டும் இடம்பெறுவார்.

கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்-ரவுண்டர் யார் என்று கேள்வி கேட்டு பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்களுடைய பெயர்களைச் சொல்லிவிட்டேன். இந்தப் பெயர்களிலிருந்து ஒன்று அல்லது இரண்டை மட்டும் தேர்வுசெய்வது எப்படி? கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதுமே தங்களுடைய நாடு, மாநிலம், கவுன்டி பாசம்தான் முன்னிலை வகிக்கும். அத்துடன் தங்களுடைய தலைமுறையைச் சேர்ந்த வீரர்களைத்தான் அதிகம் தெரிந்துகொண்டு பாராட்டுவார்கள்.

சிறுவனாக இருக்கும்போது யார் மனதை ஆக்கிரமிக்கிறார்களோ அவர்களுடைய கவர்ச்சி அவ்வளவு எளிதில் போகாது. எனவேதான், தாம்சன் தனது தேர்வில் பாரபட்சமாக ஹிர்ஸ்ட், ரோட்ஸ் ஆகியோர் பெயரைச் சொன்னார். கேரி சோபர்ஸுக்குப் பிறகு யார் சிறந்த ஆல்-ரவுண்டர் என்ற கேள்விக்கு விடையாக ஷாக் காலிஸ், ஆடம் கில்கிறைஸ்ட் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அலைக்கழிப்புக்கு ஆளாகிவிட்டேன். இந்த இருவரும் இந்தியர்களும் அல்ல, அவர்கள் என்னைவிட வயதில் மிகவும் இளையவர்கள் என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?
விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





மாத்திரைகரிகாலன்திராவிடப் பேரொளிதனிப் பெரும் கட்சிகாதலின் விதிகள்பிராமணரல்லாதோர்சவிதா அம்பேத்கர்சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?கருங்கடல் மோஸ்க்வாநீராற்றுஇந்திய அரசியலுக்குத் தேவை புத்தாக்கச் சிந்தனைகள்!சமஸ் அதிமுகஎல்ஐசிசண்முகம் செட்டிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகன்னட எழுத்தாளர்அப்பாஉயர்ஜாதியினர்தலைவர்கள்அண்ணாமலையின் அதிரடி... காங்கிரசுக்குக் கை வராதது ஏகோர்பசேவ் மரணம்க்ரெடிட் கார்டுஅதிகார வாசம்பாஜக வெல்ல இன்னொரு காரணம்ஃபருக்காபாத்சூர்யா ஞானவேல்அசோவ் பட்டாலியன்மாநிலத்தின்வீழ்ச்சிமின்வெட்டுமு.இராமநாதன் அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!