கட்டுரை, ஆளுமைகள், அறிவியல் 5 நிமிட வாசிப்பு

ஓப்பன்ஹைமர் கூறியபடிதான் இருந்தாரா ஐன்ஸ்டைன்?

ராமச்சந்திர குஹா
03 Aug 2023, 5:00 am
0

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர்

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தை இந்த வாரத் தொடக்கத்தில் பார்த்தேன். திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் இயற்பியலாளர், யூதர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இந்த வகையில் அவரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் போன்றவரே. இத்திரைப்படத்தில் ஐன்ஸ்டீனும் பல முறை தோன்றுகிறார்.

இருவருக்கும் இடையில் அறிவார்த்தமான கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் ஐன்ஸ்டீனை மிகவும் மதித்தார் ஓப்பன்ஹைமர். “அறிவியலுக்கு மாபெரும் ஆக்கங்களைச் செய்திருக்கும் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த மன உறுதிகொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர்; மனித குலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், சம்ஸ்கிருதத்தில் உள்ள ‘அகிம்சை’ என்ற வார்த்தையையே கையாள விரும்புகிறேன் – அதாவது யாருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பாதவர், தீங்கற்றவர்” என்று பாரீஸ் மாநகரில் உள்ள யுனெஸ்கோ இல்லத்தில் 1965 டிசம்பரில் நிகழ்த்திய உரையில் பாராட்டியிருக்கிறார் ஓப்பன்ஹைமர்.

அறிவியலுக்கு அப்பால்…

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் என்று அங்கீகரிக்கப்பட்டவர் ஐன்ஸ்டீன். தன் காலத்தில் வாழ்ந்த அறிவியலாளர்களைப் போல அறிவியல் ஆராய்ச்சியிலும் தன்னுடைய வளமான எதிர்கால வாழ்க்கையிலும் மட்டும் கவனம் செலுத்தாமல் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட உலகு குறித்தும் அக்கறையுடன் இருந்தார். ஐரோப்பிய சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஈடுபாடு மிக்கவர், அவரே நல்ல வயலின் கலைஞரும்கூட. தேசிய – சர்வதேசிய அரசியலை ஆழ்ந்து கவனித்துவந்தார். நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கு இடையிலும் மக்களுடைய உறவு எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கிருந்தது.

ஐன்ஸ்டீனின் அறிவியல் வாழ்க்கை குறித்து எழுதும் தகுதி எனக்கில்லை. அவர் எப்படி சிறந்த ஒழுக்கவாதியாகத் திகழ்ந்தார் என்பதை மட்டும் எழுதுகிறேன். பிரிட்ஸ் ஸ்டெயின் என்ற ஜெர்மானிய – அமெரிக்க வரலாற்று ஆசிரியர் ஐன்ஸ்டீன் குறித்து எழுதிய நூலில் படித்ததைக் கொண்டுதான் இதை எழுதுகிறேன். ‘ஐன்ஸ்டீனின் ஜெர்மனி’ என்பது புத்தகத்தின் தலைப்பு. 1999இல் முதலில் பிரசுரமானது. இருபதாவது நூற்றாண்டில் ஜெர்மனி எப்படி இருந்தது என்பதையும் வரலாற்றில் யூதர்கள் எந்த இடத்தில் இருந்தார்கள் என்பதையும் புத்தகம் விவரிக்கிறது.

புத்தகத்தின் முக்கியமான அத்தியாயம் ஐன்ஸ்டீன் மீது கவனம் செலுத்தியிருக்கிறது. வேறு அத்தியாயங்களிலும் அவரைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. கடிதங்கள், உரைகள் ஆகியவற்றிலிருந்து நூலுக்கான கருப்பொருள் முக்கியமாக எடுக்கப்பட்டாலும், ஸ்டெயினின் பெற்றோருக்கு ஐன்ஸ்டீன் நெருக்கமான நண்பராக இருந்தார் என்பதால் பல தகவல்கள் அவர்கள் மூலமும் பெறப்பட்டிருக்கின்றன.

ஜெர்மனும் இந்தியாவும்

பிரிட்ஸின் ஆய்வில் கிடைத்தவற்றிலிருந்து ஐன்ஸ்டீன் கொண்டிருந்த கருத்துகளை அடுத்தடுத்து தெரிவிக்கிறேன். இவை அறிவியல் பற்றியவை அல்ல ஒழுக்கம், அரசியல் ஆகியவை தொடர்பானவை. என்னுடைய முதலாவது மேற்கோள் 1901ஆம் ஆண்டில் வெளியானது. “அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான கண்மூடித்தனமான விசுவாசம் உண்மைக்கு விரோதமாகவே முடியும்” என்று தன்னுடைய இருபதுகளின் தொடக்கத்திலேயே கூறியிருக்கிறார். ஐன்ஸ்டீன் இங்கே அறிவியலில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பற்றித்தான் கூறியிருப்பார் என்று பலரும் ஊகிக்கலாம்.

விடலைப் பருவத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பெற்றோர் சொல்வதையெல்லாம் முட்டாள்தனமாக அப்படியே நம்பி பின்பற்றுவது தவறாகிவிடும் என்றும் அவர் சொல்லியிருக்கலாம். எல்லா வயதினருக்கும் எல்லா நாட்டினருக்கும் ஆண் – பெண் வேறுபாடு இல்லாமல் சொல்ல வேண்டியது எதுவென்றால் - அரசியல் தலைமையிடம் வைக்கும் கண்மூடித்தனமான விசுவாசம் நல்லதல்ல என்றும் கொள்ளலாம்.

ஜெர்மானியப் பேரரசு நாட்டில் பிறந்த ஐன்ஸ்டீன் அவருடைய வளரிளம் வயதில் சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறினார். அவருடைய தொடக்கக் கால அறிவியல் ஆய்வுகள் ஜூரிச் நகரில்தான் நிகழ்ந்தன. முப்பது வயதுக்கு மேல் 1913இல் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினுக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொண்டனர். அங்கே புதிய தோழர்களை அவர் விரும்பினார், ஆனால் ஜெர்மானியர்கள் பேரரசரையும் தாய்நாட்டையும் கண்மூடித்தனமாக விசுவாசித்து, கேள்வி எதுவும் கேட்காமலேயே ஆணைகளைப் பின்பற்றியதை அவர் சிக்கலானதாகவே பார்த்தார்.

சுதந்திரமாக – தடையற்ற வகையில் எதையும் கேள்விக் கேட்டு தெரிந்துகொள்ளும் பழக்கம் ஜெர்மானியர்களிடம் இல்லையே என்று 1914 ஜனவரியில் எழுதியிருக்கிறார். ஜெர்மானியர்களுடைய ரத்தத்திலேயே ஊறிய அடிமை புத்தியைக் குறித்தும் பேசியிருக்கிறார். (இன்றைய இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் இது மிகவும் பொருந்துகிறது).

போரும் உளவியலும் 

அந்த ஆண்டின் பிற்பகுதியில் முதலாவது உலகப் போர் தொடங்கியது. ஜெர்மானியர்களின் தீவிர தேசப்பற்றைக் கண்டு அவர் திகைத்தார். அதிகார வெறியும் செல்வம் சேர்க்கும் பேராசையும், வெறுப்புணர்வும், போர் வெறியும் வெறுக்கத்தக்க தீச் செயல்கள் என்பதை கற்றுக்கொள்ளுமாறு ஜெர்மானியர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஜெர்மானியர்கள் தங்களை விசுவாசம் மிக்க கிறிஸ்தவர்கள் என்றும் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக எதையும் செய்ய சித்தமாக இருப்பவர்கள் என்றும், அந்த உணர்வுகளுக்கு ஏற்பத்தான் செயல்படுவதாகவும் கூறிக்கொண்டனர். ஐன்ஸ்டீன் இதன் பின்னால் உள்ள கபட வேடத்தைச் சுட்டிக்காட்டினார். “உங்களுடைய ஆண்டவர் இயேசு நாதரைப் பிரார்த்தனையாலும் பாடல்களாலும் துதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவருடைய போதனைகளைச் செயலில் முழுமையாகப் பின்பற்றுங்கள்” என்றார்.

அதே ஆண்டு – 1915 – பெர்லின் நகரைச் சேர்ந்த கலைஞர்கள் – அறிவியலாளர்களுக்கான கூட்டமைப்பான கோதேபண்டில், உலகப் போர் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள். “ஆண்களின் மூர்க்கத்தனமான குணத்தில்தான் போருக்கான உளவியல் வேர்கள் ஆழப் படிந்திருக்கின்றன என்று உயிரியல்ரீதியாகக் கருதுகிறேன்” என்றார்.

வன்செயல்களில் மேலும் மேலும் ஈடுபடும் ஆண்களின் வக்கிர ஆசைகள் நாடுகளுக்கிடையிலான போர்க் காலத்தில் மட்டும் விசுவரூபம் எடுப்பதில்லை, மதம் தொடர்பான மோதல்களிலும் அரசியல் களங்களிலும்கூட வெளிப்படுகின்றன, இன்றைய இந்தியாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்களேன்.

ஆளுமைகளுடனான நட்பு

ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்து – பிரெஞ்சு நாவலாசிரியரான ரோமன் ரோலண்டுடனும் கடித உறவில் இருந்தார்.  காந்திஜி, ரவீந்திரநாத் தாகூருக்கும்கூட நண்பராகத் திகழ்ந்தவர் ரோலண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 1917 ஆகஸ்டில் ரோமன் ரோலண்டுக்கு எழுதிய கடிதத்தில் ஐன்ஸ்டீன் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். “பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் போரில் கிடைத்த வெற்றியானது அதிகாரத்தில் நாட்டம் கொண்ட விசுவாசத்தையே மதம்போல வளர்த்துவிட்டது, அதற்கு நல்ல உதாரணம் தீவிர தேசியவாதியும் யூத வெறுப்பாளருமான வரலாற்றாசிரியர் டிராய்ட்ஸ்க. அவர் மிகைப்படுத்தப்பட்ட உதாரணம் அல்ல, அவர்தான் இப்போதைய ஜெர்மானியர்களின் உளப் போக்குக்கு சரியான உதாரணம்.

கலாச்சாரரீதியாக மேல்தட்டில் உள்ள அனைவரையுமே இந்த மதம்தான் (போர் வெறி) ஆள்கிறது, கோதே - ஷில்லர் சகாப்த நல்ல இலட்சியங்களை இது முழுக்க வெளியேற்றிவிட்டது” என்று வருந்தியிருக்கிறார். இன்றைய இந்தியாவும் கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் இருக்கிறது என்பது வெளிப்படை. அதிகாரப் பசி கொண்ட இந்துத்துவ மதம், தாகூர் – காந்தி காலத்துக்கு நல்ல கொள்கைகளை வெளித்தள்ளிவிட்டது.

தேசியவாதம் என்ற குறுகிய எண்ணம் எவரிடம் இருந்தாலும் அதைக் கண்டிக்கும் குணம் ஐன்ஸ்டீனிடம் இருந்தது என்கிறார் பிரிட்ஸ் ஸ்டெயின். அதேசமயம் யூதர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவதால் அவர்கள் தங்களுக்கென்று தனி தாயகத்தைத் தேடிச் செல்வது நியாயமே என்றும் ஆதரித்திருக்கிறார். பாலஸ்தீனம் நோக்கி யூதர்கள் செல்வதை ஆதரித்த ஐன்ஸ்டீன், ‘நம்முடைய குடியைச் சேர்ந்தவர்கள் அன்னியர்கள் என்று கருதப்படாத ஓரிடத்தில் சேர்ந்து வாழ்வது நல்லது’ என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம் ஜெர்மானியர்களைப் போல இன உணர்வுள்ளவர்களாகவும் சுயநலக்காரர்களாகவும் யூதர்கள் இருக்கக் கூடாது என்றும் விரும்பியிருக்கிறார். தங்களுடைய இன நலனைப் புறக்கணிக்காமல் அதேசமயம் சர்வதேசியவாதியாக (உலகக் குடிமகனாக) ஒருவர் இருப்பது சாத்தியமே என்று 1919 அக்டோபரில் எழுதியிருக்கிறார். (இதே கருத்தை தாகூரும் வெளிப்படுத்தியிருக்கிறார்).

ஐன்ஸ்டீனின் போதனை

(ஆரிய) இன அடிப்படையிலான ஜெர்மானியர்களின் தேசியவாதத்தை நிராகரித்த ஐன்ஸ்டீன், புதிய தாயகத்தில் யூதர்களும் இதே நிலையை எடுப்பது சரியல்ல என்றே கருதியிருக்கிறார். 1929இல் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே வன்மம் நிறைந்த மோதல்கள் நிகழ்ந்தன.

யூதர்களின் தலைவர்களில் ஒருவரான சைம் வெய்ஸ்மானுக்கு ஐன்ஸ்டீன் அப்போது எழுதிய கடிதத்தில், ‘நேர்மையான பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் அராபியர்களுடன் நாம் மேற்கொள்ளாமல் போனால், 2,000 ஆண்டுகளாக நாம் பட்ட துயரங்களிலிருந்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவே இல்லை, இப்படி எல்லோராலும் விரட்டப்படும் நிலை நமக்கு உகந்ததுதான் என்றே நாம் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வெய்ஸ்மான்தான் பிறகு இஸ்ரேல் நாட்டின் முதல் அதிபராக பதவியேற்றார். இஸ்ரேலில் இப்போது நடக்கும் சம்பவங்களும் ஐன்ஸ்டீன் எவ்வளவு தீர்க்கதரிசனமாக அன்றே எச்சரித்திருக்கிறார் என்பதையே உணர்த்துகின்றன. இஸ்ரேலில் ஆட்சியிலிருக்கிறது மத வெறிகொண்ட வலதுசாரி அரசு, தாராளச் சிந்தனையுள்ள யூதர்கள் எதையும் சொல்லத் தயங்கி மறைந்துகொள்கிறார்கள். முன்பு எல்லாக் காலத்தையும்விட இப்போதுதான் இஸ்ரேல் நேர்மையான பேச்சுகளை அராபியர்களுடன் நடத்தி, சுமுகமான ஒத்துழைப்புக்கான பாதையைக் கண்டாக வேண்டும்.

ஒரு தனிநபர் எப்படி உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாள் முழுக்க தியானித்தவர் ஐன்ஸ்டீன். மனித உறவுகளை மிகவும் விரும்பியவர், தங்களுடைய தொழிலிலும் வளத்திலுமே அக்கறை காட்டிய பிற அறிவியலாளர்களைப் போல அல்லாமல் பல்வேறு துறைகளையும் சேர்ந்த பலரை நண்பர்களாகப் பெற்றவர் ஐன்ஸ்டீன்.

தனிநபர் மற்றவர்களுடன் இணக்கமாக நட்புடன் வாழ்வதில்தான் வாழ்க்கையே முழுமையடைகிறது என்று உணர்ந்தவர் அவர். ஆனால், அன்றைய மேற்கத்திய முதலாளித்துவ உலகமோ, நாவலாசிரியர் அய்ன் ரேண்ட் எழுதியபடி, ‘சுயநலம் என்ற உலகாயத அறத்தில்’ மூழ்கிக்கிடந்தது.  ஐன்ஸ்டீனோ, தன்னலம் கருதாமை என்ற அறத்தை போதித்துக்கொண்டே இருந்தார்.

நான் – நாங்கள் - நீங்கள்

இனவாதம், மதவாதம், சுயகாதல் ஆகிய குணங்களை கடுமையாக வெறுத்தார் ஐன்ஸ்டீன். அவருடைய சக விஞ்ஞானி ரூடால்ஃப் லேடன்பர்க் இறந்தபோது 1954இல் பிரின்ஸ்டனில் அவர் நிகழ்த்திய இரங்கல் உரை மிகவும் பொருள் பொதிந்தது.

“நம்முடைய வாழ்நாள் மிகவும் குறுகியது. புதிய வீட்டில் குடியிருக்க சில நாள்களே வந்திருக்கிறோம். நாம் செல்ல வேண்டிய பாதையில் போதிய வெளிச்சமில்லை, அணையத் துடிக்கும் விளக்கு போன்ற மனசாட்சியோடு வாழ்கிறோம், அதன் மையமோ வரையறைக்கு உள்பட்டது, தான் என்ற அகந்தையிலிருந்து தனித்து நிற்பது. வாழ்க்கை தொடர்பாக நம்முடைய ஆழ்ந்த உணர்வுகளும் நம்முடைய அம்மணமான இருப்பும் உள்ள நிலையை நோக்கும்போது, ‘நான்’ என்பதற்கான வரையறை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. ‘நான்’ என்ற அகந்தைதான் ‘நீங்கள்’ என்றும் ‘நாங்கள்’ என்றும் வேறுபடுத்திப் பார்க்கச் செய்கிறது. இது மட்டுமே நாம் யார் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. ‘நான்’ என்பதிலிருந்து ‘நீங்கள்’ என்ற உறவை இணைக்கும் பாலம் மிகவும் மெல்லியது, நி்ச்சயமற்றது, வாழ்க்கையின் சாகசத்தைப் போல. குழுவாக சிலர் சேர்ந்து ‘நாம்’ என்று வாழத் தொடங்கி அது பரவி விரிந்தால் உன்னதமான இடத்தை நாம் அடைவோம்.

இந்தக் கட்டுரையை ஐன்ஸ்டீனின் வார்த்தைகளோடு முடிப்போம், நூலாசிரியர் எழுதியுள்ளபடி: “எந்த நாடும், எந்த சமூகமும் தீமைகளிடமிருந்து தாக்கப்படாத கவசத்தைக் கொண்டிருக்கவில்லை, அதை நாகரிகமுள்ள மனிதர்களால் மட்டுமே அளிக்க முடியும். இருபதாவது நூற்றாண்டுக்கு ஜெர்மனி கற்றுத் தந்த பாடம் இது – நம் அனைவருக்கும்தான்” என்று நூலாசிரியர் பிரிட்ஸ் ஸ்டெர்ன் நினைவுகூர்கிறார். பிரிட்ஸுமே ஹிட்லரிடமிருந்தும் நாஜிகளிடமிருந்தும் தப்பி ஓடியவர்தான் என்பதால் அந்தக் கசப்பான அனுபவங்கள் அவருடைய எழுத்திலும் வெளிப்படுகின்றன.

 

தொடர்புடைய கட்டுரை

ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3






எல்லைப் பிரச்சினைமகிழ்ச்சியடையும் மக்கள்தமிழ் மக்களின் உணர்வுஉள்ளதைப் பேசுவோம் உரையாடல்சமாதான பேச்சுவார்த்தைவிதி எண் 267வார இதழ்முதலாம் உலகப் போர்வினோத் கே.ஜோஸ்பிரெஞ்சு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்அறிவியல் தமிழ்விஜயலட்சுமி பண்டிட்ஐடிமத்திய பிரதேசம்: காங்கிரஸுக்குச் சாதகம்உயர் நீதிமன்றங்களில் அலுவல்மொழி யாது?அரிப்புபிராணிகள்முக்கடல்தேர்தல் முடிவுஆண்கள் ஏன் 'அலைஞ்சான்'களாகவே இருக்கிறார்கள்?!இந்திய பொருளாதாரம்சல்மான் ருஷ்டிக்காக ஒரு பிரார்த்தனைபெரிய கோயில்தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைசம்ஸ்கிருதம்இன்றைய இசையில் இருக்கிறார்கள் சோழர்கள்: எஸ்.சிவக்கஆண்சாவர்க்கர் அருஞ்சொல்முதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்வழக்கொழிந்து போன வர்ண தர்மமும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!