கட்டுரை, கலை, சினிமா, வரலாறு 7 நிமிட வாசிப்பு

அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?

ராமச்சந்திர குஹா
03 Dec 2022, 5:00 am
0

ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய, காலத்தால் அழியாத திரைக்காவியமான ‘காந்தி’ வெளியாகி நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. லண்டனிலிருந்து ரயிலில் ஒரு மணி நேரம் பயணித்தால் அடையக்கூடிய இடத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில், அட்டன்பரோ ஆவணங்கள் பத்திரமாக உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் திரைப்படம் தொடர்பில் பல்வேறு வகை விமர்சனங்களைக் கொண்ட கோப்புகளும் உடன் உள்ளன. ‘அவர் இயக்கியதிலேயே உருப்படியான திரைப்படம் இது மட்டுமே’ என்றுகூட சிலர் குறிப்பிட்டுள்ளனர். பலர் கொண்டாடியும் இருக்கின்றனர். 

தவ்லின் – அம்ரிதா இருவேறு பார்வைகள்

தவ்லீன் சிங் ‘தி டெலிகிராப்’ நாளிதழில் எழுதியுள்ள விமர்சனம் குறிப்பிடத்தக்கது; “என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மூன்று அல்லது நான்கு மிகச் சிறப்பான திரைப்படங்களில் இதுவும் ஒன்று, மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். “அந்நியர்கள் என்றாலே வெறுக்கும் சிலர், ஒரு பிரிட்டிஷ் இயக்குநரின் திரைப்படத்துக்கு இந்திய அரசு நிதியுதவி செய்வதா என்று இந்தத் திரைப்படம் தயாரான காலகட்டத்தில் முணுமுணுத்துள்ளனர். “இந்த விமர்சனம் அர்த்தமற்றது, திரைப்படத்தைப் பார்த்ததால் சொல்கிறேன், அரசின் பணம் நல்ல காரியத்துக்காகத்தான் செலவிடப்பட்டிருக்கிறது. காந்தியைப் பற்றி உச்சபட்சமாக எடுக்கக் கூடிய திரைப்படத்தைத்தான் எடுத்திருக்கிறார், இந்தியா அவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும்” என்கிறார் தவ்லீன் சிங்.

அவருடைய தலைமுறையைச் சேர்ந்த இன்னொரு பெண் விமர்சகர், இத்திரைப்படத்தால் அவ்வளவு உற்சாகம் அடையவில்லை. அவர்தான் அம்ரிதா ஆப்ரஹாம். ‘சண்டே அப்சர்வற்’ இதழில் இப்படி விமர்சித்துள்ளார். “காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி சிறப்பாகச் செய்திருக்கிறார், காந்தி தவிர்த்த இதர கதாபாத்திரங்கள் - சிந்தனைகளிலும் செயல்திட்டங்களிலும் தீவிரப் பங்கேற்பு வகித்த சமகாலத் தலைவர்களாக இல்லாமல், திரைப்படக் காட்சிகளின் தொடர்ச்சிக்காக வரும் கதாபாத்திரங்கள்போலக்  காட்சி தருகின்றனர்; காந்தியும் இதர தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளில் உயிர்த்துடிப்பு இல்லை. பிற தேசிய தலைவர்களின் உணர்ச்சிகளையும் திரையில் வடிக்காமல் போனால் காந்தியையும் அவருடைய ஆன்ம பலத்தையும்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகும்.” 

அம்ரிதா ஆப்ரஹாம் கூறுகிறார், “காந்தியை மட்டுமே அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து காட்டுவதால், பன்முகம் கொண்ட இந்திய சுதந்திரப் போராட்டம், ஏதோ ஒன்றை மட்டுமே கவனம் குறித்துப் பார்க்க வைப்பதாகச் சுருங்கிவிடுகிறது. கதையின் பிரதான கதாபாத்திரத்தின் தார்மிக கண்ணோட்டத்துக்குக்கூட இத்தகைய சித்தரிப்பு, நியாயம் சேர்க்கவில்லை. மூன்று மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்தில் காந்தியின் மாபெரும் சிந்தனைகள் ஏதோ கடமைக்குப் பதிவுசெய்யப்பட்டதைப் போல இருக்கின்றன. சுதேசி, உலகாயதமான பொருள்களை நுகராமல் கைவிடுவது, தார்மிக – அரசியல் நோக்கங்களுக்காக அடையாள நிமித்தமாகச் சில செயல்களைச் செய்வது, சட்ட மறுப்பு இயக்கம் - அதேசமயம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக வன்முறையில் அல்லாமல் சாத்வீக நடவடிக்கையில் இறங்குவது போன்றவை முழு அளவில் உணர்த்தப்படவில்லை. காந்தியம் என்பது மையமான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டது; மக்களுடைய தனிப்பட்ட செயல்களை, அரசியல் விளைவுகளாக மாற்றும் வல்லமை பெற்றது; மனசாட்சிப்படி தேச நலனுக்காக நடந்துகொள்ள வைப்பது என்ற அம்சங்கள் முழுப் பார்வைக்கும் தெரியும்படி திரைப்படத்தில் கோர்வையாக இல்லாமல், ஆங்காங்கே எப்போதாவது தலைகாட்டுகின்றன!” 

ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல் 

படத்தைக் கடுமையாக விமர்சிக்கும் மேலும் பலருடைய கருத்துகளும் ஆவணங்களில் உள்ளன. ‘நியூயார்க் விக்லி’ இதழில் அமெரிக்கரான ஆண்ட்ரூ சாரிஸ் எழுதியுள்ளது அப்படிப்பட்டது. இக்காலத் திரைப்படக் கதைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட இப்படம், மிகவும் அந்நியமாக இருக்கிறதே என்பதற்காகவேகூட வணிகரீதியாக பெரிய சாதனையையும் படைக்கக்கூடும் என்று இவர் ஊகித்துள்ளார். 

ஆண்ட்ரூ சாரிஸ் எழுதுகிறார், “காந்தி திரைப்படம் ஒரு தனிநபரைப் பற்றியது மட்டுமல்ல, சத்தியாகிரகம் என்ற சாத்வீகப் போராட்டம் தொடர்பானதும்கூட; இந்திய சுதந்திரம், வன்முறையை விலக்கிய போராட்ட முறை, மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய துறவி போன்ற தலைவரின் செல்வாக்கு, நிறம் – மதம் அடிப்படையிலான தவறான கண்ணோட்டங்கள், காலனித்துவம், ஏகாதிபத்தியம், சுரண்டல் ஆகியவை மட்டுமல்ல - வரலாறு வீசியெறிந்த பழைய பக்கங்கள் ஆகியவற்றைப் பற்றியதும்கூட; இத்திரைப்படம் பேச எடுத்துக்கொண்ட உள்ளார்ந்த விஷயம் மிகப் பெரியது என்பதால் 188 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் அங்கும் இங்குமாக சிலவற்றை மட்டும் தொட்டிருப்பதுடன், முழுமை பெறாததைப் போன்ற தோற்றத்தையும் தருகிறது. இயக்குநர் அட்டன்பரோவும் திரைக்கதை எழுத்தாளர் ஜான் பிரிலேயும் முடிவில்லாததும், காலம்தோறும் வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளதுமான பல அம்சங்களில், சில சம்பவங்களையும் – எதிர்காலத்துக்கான சில காட்சிகளையும் மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்துள்ளனர். படத்தில் சில காட்சிகள் புத்துயிர்ப்போடு இருப்பதை மறுக்க முடியாது. மிகப் பெரிய குறை என்னவென்றால், சிக்கலான வரலாற்றை கலைநயம் மிக்க உருவகங்களால் விளக்க முற்பட்டிருப்பதுதான்!” 

மோசமான – கொடூரர்களான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியர்களை நல்லவர்களும் துணிச்சல் மிக்கவர்களுமான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும், இறுதியில் வெல்கிறார்கள் என்பதையும்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்.

ரிச்சர்ட் குக்கின் குறை

சில பிரிட்டிஷ் விமர்சனங்களும் அப்படிக் கடுமையாகவே இருந்துள்ளன. ‘நியூ மியூசிகல் எக்ஸ்பிரஸ்’ இதழில் ரிச்சர்ட் குக் எழுதிய விமர்சனம் அப்படிப்பட்டது. “சிறப்பான நடிப்பு இருந்தும், வரலாற்றில் வாழ்ந்த கதாபாத்திரங்களை ஜவுளிக்கடை பொம்மைகளைப் போல உலா வரச் செய்திருக்கின்றனர்; காநதியின் உள்மனப் போராட்டங்களைப் படம் போதிய வகையில் சித்தரிக்கவில்லை. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் மேற்கொண்ட முடிவுகளுக்கு அவை எப்படிக் காரணமாக இருந்தன என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். காந்திக்கும் அவருடைய மனைவிக்கும் இருந்த உறவு பற்றி மிகச் சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அட்டன்பரோவின் இந்தத் திரைப்படத்தை என்னால் நம்ப முடியவில்லை, வங்கத்தைச் சேர்ந்த சத்யஜித் ராயின் காந்தி படத்துக்காக (அவர் அப்படி இயக்கினால்…) காத்திருக்கிறேன்!”

விட்டாச்சியின் பரவசம்

அட்டன்பரோ திரைப்படத்தை வரவேற்றும் பாராட்டியும் எழுதிய கட்டுரைகளையும்கூட ஆவணத்தில் வெகு இயல்பாகச் சேகரித்து வைத்திருக்கிறார். பெருவியப்பும் மகிழ்ச்சியும் பொங்க, ‘ஆசியா வீக்’ இதழில் இலங்கைப் பத்திரிகையாளர் தார்ஜி விட்டாச்சி எழுதிய விமர்சனம் அப்படிப்பட்ட ஒன்று. நியூயார்க்கில் நடந்த சிறப்புத் திரையிடலைக் காண அழைக்கப்பட்ட 49 விருந்தினர்களில் விட்டாச்சியும் ஒருவர். “திரைப்படங்களுக்கு அடிமையாகி, கடந்த ஐம்பதாண்டுகளாக எல்லாவற்றையும் பார்த்துவிடும் எனக்கு இது மிக மிக உணர்ச்சிகரமான படமாக இருக்கிறது. திரைப்படம் காட்டப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்தபோது எல்லோரையும் ஒருவித ஆன்மிக உணர்வு ஆட்கொண்டது, குதிகால் பூமியில் பாவாமல் பரப்பதைப் போல உணர்ந்தோம். துப்பாக்கி முனையிலிருந்து அரசியல் அதிகாரம் பிறப்பதில்லை,  சாமான்ய மக்களின் சாத்வீகப் போராட்டங்களால் – அகிம்சை முறையால் அதை சாதிக்க முடியும் என்பதைப் பார்த்த பிறகு எல்லை கடந்த ஆச்சரியமே எங்களுக்குள் ஏற்பட்டது!”

காந்தியின் வாழ்க்கைபோலப் படமும்

தன்னுடைய வாழ்நாளில் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டதைப் போலவே சில ஆயிரக்கணக்கானவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், தீவிரமாக கண்டிக்கப்பட்டும் இருந்திருக்கிறார் காந்தி. எனவே அவருடைய இறப்புக்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இத்திரைப்படமும் அதே போன்ற விமர்சனங்களுக்கு உள்ளானதில் வியப்பதற்கு ஏதும் இல்லை. திரையரங்கில் இதைத் திரையிட்டபோது பார்த்தேன். பிறகு காந்தி விட்டுச் சென்ற பாரம்பரியம் குறித்த பாடத்தை மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக அவர்களுடன் சேர்ந்தும் பல முறை பார்த்தேன். காந்தியின் கருத்துகளை அவருக்குப் பின் வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுடன் வெளிநாட்டவர்களுக்கும் தெரிய வைக்க உதவுகிறது. 

மிக நல்ல நோக்கத்துக்கு இந்தத் திரைப்படம் பயன்படுகிறது. காந்தியாக பென் கிங்ஸ்லி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வகுப்பு ஒற்றுமையை நிலைநாட்ட தன்னுடைய வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் காந்தி காலவரம்பற்ற உண்ணாவிரதம் இருந்த காட்சிகள் நெஞ்சை உருக்குவதாகவும் உணர்ச்சிமயமாகவும் இருக்கின்றன. அதேசமயம், திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிற கதாபாத்திரங்கள் அதிக ஈடுபாட்டுடன் நடிக்க வைக்கப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. காந்தியின் சமகாலத்தவர்களான அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் திரைப்படத்தில் இடம்பெறாதது மர்மமாக இருக்கிறது.

இந்திரா என்ன நினைத்தார்?

விமர்சனங்களைப் பற்றிய விமர்சனமாக இருக்கும் இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னால், இந்தத் திரைப்படத்துக்கு இந்திய அரசின் நிதியுதவியை அளித்தவரான அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்ன சொன்னார் என்பதையும் பதிவுசெய்கிறேன். வினோத் மேத்தாவுக்குப் பேட்டியளித்த இயக்குநர் அட்டன்பரோ இதைக் கூறியிருக்கிறார். “திரைப்படத்தை எடுக்கத் தொடங்கியதும் சில காட்சிகளை இந்திரா காந்திக்குத் திரையிட்டுக் காட்டினேன். அவர் இரண்டு ஆலோசனைகளை மட்டும் முன்வைத்தார். ‘பாபுஜியின் நீண்ட வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேரம் மட்டுமே திரையில் ஓடும் காட்சிகள் வாயிலாகச் சொல்ல வருகிறீர்கள் என்பதைத் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்குச் சொல்லிவிடுங்கள்; கஸ்தூர் பா கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இக்காலத்திய மொழி நடையிலும் பாணியிலும் இருக்கிறது. 90 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் தங்கள் கணவர்களிடம் இந்த விதத்திலும், இந்த தொனியிலும் பேச மாட்டார்கள், இதைக் கொஞ்சம் சரி செய்யுங்கள்!’ நான் அவர் சொன்ன இரண்டு யோசனைகளையும் ஏற்றுச் செயல்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அட்டன்பரோ.

இந்தத் திரைப்படம் தொடர்பில் இந்திரா காந்தியின் கருத்து என்ன என்பதை, இயக்குநர் அட்டன்பரோ சொல்லாமலே நாம் தெரிந்துகொண்டுவிட முடிகிறது. அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சிநேகிதி டோரதி நார்மனுக்கு பிரதமர் இந்திரா காந்தி 1982 டிசம்பர் 2இல் எழுதிய கடிதத்தில் இது இடம்பெற்றுள்ளது: “காந்தி திரைப்படத்தை எல்லோரும் பெருத்த உற்சாக வரவேற்போடு பார்க்கிறார்கள். திரைப்படம் எல்லோரையும் ஈர்த்துவிட்டது. காந்தி எந்த லட்சியங்களுக்காகப் பாடுபட்டார் என்பதை உலகமே அறிவது நல்லது. அவர் வாழ்ந்த காலத்தில் உடன் வாழ்ந்தவர்களுக்கு இந்தத் திரைப்படம் அரிய காட்சி; மிகவும் பிரம்மாண்டமானது, வலிமையானது; இருந்தும் இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் தன்மை இத்திரைப்படத்தில் போதாமல் இருக்கிறது. இந்திய திரைப்படைத் துறையைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட சுதந்திரப் போராட்டம் பெரிய உத்வேகமாக இருக்கவில்லை, இந்த அரிய நிகழ்வு குறித்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நாட்டின் விடுதலைக்காக தாங்களாகவே முன்வந்து போராடி தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தேச பக்தியோடு மக்கள் திரண்ட அந்த மகத்தான எழுச்சி அலையின் உச்சமாக காந்தி திகழ்ந்தார். இந்தத் திரைப்படம் அவரை மாபெரும் நட்சத்திரம்போலச் சித்தரிக்கிறது, அவரோ சாத்வீகப் போராட்டத்தை உலகுக்கே வலியுறுத்தும் சமாதானத் தூதராக விளங்கினார். அதைவிட அதிகமும் இல்லை, குறைவும் இல்லை. இத்திரைப்படம் ஆழமற்ற – மேலோட்டமான சித்தரிப்பு, ஆனால் பார்க்கலாம்!” 

அதுவே உண்மையும்கூட!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





ஆறுகள்ஏ.ஏ.தாம்சன்தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்கிழக்கும் மேற்கும்திருவாவடுதுறை ஆதீனம்சட்டப்பேரவைபத்திரிகைச் சுதந்திரம்அரசு கலைக் கல்லூரிகள்சென்னைப் புத்தகக்காட்சிசிறுநீரகக் கல்மிஸோரம்: தேசம் பேச வேண்டிய விவகாரம்ஊடகர்முதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்நாகர்வரி நிர்வாக முறைசமூக ஊடகம்பாரத் ஜோடோ நியாய யாத்திரைதன்னாட்சி இழப்புகொலீஜியம்பட்டினிராகுல் பஜாஜ் அருஞ்சொல்மாபெரும் தோல்விகவிஞர்காந்தி கிணறுமதுக் கொள்கைஅருஞ்சொல் உருவான கதைஉணவியல்மனிதவளத் துறைசாவர்க்கர் வரலாறுஅருஞ்சொல் ஜல்லிக்கட்டு பெருமாள் முருகன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!