கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்கள் கற்க வேண்டிய பாடம்

ராமச்சந்திர குஹா
14 Jul 2022, 5:00 am
3

மெரிக்க அதிபராக, அனைவரும் வியக்கத்தக்க வகையில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு - ‘ஜனநாயகம் எப்படி மரணிக்கிறது?’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருவர் 2018இல் எழுதினர். பழமையான, நன்கு வேரூன்றிய ஜனநாயகங்கள்கூட தங்களுடைய அரசமைப்பு இப்படியே நீடிக்கும் எனக் கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது என்று அந்தப் புத்தகத்தில் இருவரும் வலியுறுத்தியிருந்தனர். “நாவன்மை மிக்க அரசியல் தலைவர் ஒருவர், அரசு அமைப்புகளின் மாண்பைச் சிறிதும் மதியாமல் - வாக்காளர்களின் அற்பமான உணர்வுகளைக் கிளப்பிவிட்டு (தேர்தலில் வென்று) சீரான ஜனநாயக நடைமுறைகளையே சீர்குலைத்துவிட முடியும்” என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். 

பிரிட்டனின் அரசியல் களம்

பிரிட்டனில் சமீபத்தில் நடந்துள்ள அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஹார்வர்ட் பேராசிரியர்களின் புத்தகத்தின் தொடர்ச்சியாக, “ஜனநாயகங்கள் எப்படி தப்பிப் பிழைக்கின்றன?” என்ற தலைப்பில் புத்தகம் எழுத வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. பிரிட்டனில் இப்போது நடந்துவரும் அரசியல் நிகழ்வுகளையே அதற்கு ஆய்வுக் களமாக எடுத்துக்கொள்ளலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மரபிய கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) அறுதிப் பெரும்பான்மை வலுவுடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சி பீடத்தில் அமர்த்திய பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் செய்த அரசியல் பாவங்களுக்காக அந்தப் பதவியிலிருந்தே விலகும்படி நேர்ந்திருக்கிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எப்போதுமே இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பிரதான கட்சிகளே போட்டியிடுகின்றன. அதிபர் பதவிக்கான தேர்தலைப் போல அங்கு அபூர்வமாகத்தான் நடக்கிறது; அதாவது பிரதமர் பதவி வேட்பாளரை மையமாக வைத்து தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவது அரிது. இருப்பினும் 2019 டிசம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் மரபிய கட்சியினர் போரிஸ் ஜான்சனுக்கு இருந்த அரசியல் கவர்ச்சி, மக்களிடையே அவர் மீதிருந்த நன்மதிப்பு ஆகியவற்றால் சிறப்பான வெற்றியைப் பெற்றனர்.

நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் உள்ளவர், தலையில் முடி எப்போதும் நகைப்புக்குரிய வகையில் கலைந்திருக்கும், அவர் உடையணியும் விதமும் நறுவிசாக இல்லாமல் ஏனோ-தானோவென்றே இருக்கும். இந்தத் தனித்துவமே போரிஸ் ஜான்சனை பிரிட்டிஷ் வாக்காளர்கள் விரும்பவும் காரணம் ஆகிவிட்டது. 1987க்குப் பிறகு மரபிய கட்சி அதிகபட்சமாக 365 இடங்களில் வென்றது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) 202 இடங்களில் மட்டுமே வென்றது. 1935க்குப் பிறகு அக்கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான இடங்கள் இவை. பிரிட்டனின் வடக்கில் எப்போதுமே தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்து வந்த உழைக்கும் வர்க்கமே, அந்தத் தேர்தலில் மரபியர் கட்சிக்குக் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக ஆதரவளிக்கும் அளவுக்குத் தேர்தல் முடிவுகள் தாறுமாறாக இருந்தன.

இப்படியான தேர்தல் வெற்றியானது போரிஸ் ஜான்சனுக்கு கட்சிக்குள் அபரிமிதமான செல்வாக்கை ஏற்படுத்தியது. கட்சி சார்பில் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அவர் ஒரு வழிபாட்டுத் தெய்வமாகவே காட்சியளித்தார். எந்தச் செயலுக்காகவும் அவரை விமர்சிப்பதைக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பாணியும் அவருக்கு அமெரிக்கர்களிடமிருந்த செல்வாக்கும் அவருக்குக் கிடைத்த தேர்தல் வெற்றியும் போரிஸ் ஜான்சனை வெகுவாக ஈர்த்திருந்தன. எனவே எதைச் சொல்வதாக இருந்தாலும் கட்சி அமைப்புகள் மூலமே பேசுவது என்ற பிரிட்டிஷ் வழக்கத்தையே மீறி, நேரடியாக நாட்டு மக்களிடம் பேசத் தொடங்கினார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சகாக்களிடம் ஆலோசனை கலக்காமல், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத – தனக்கு மிகவும் வேண்டப்பட்ட’ சிலரிடம் மட்டுமே ஆலோசனைகளைப் பெற்றார். பிரிட்டனை மீண்டும் மிகப் பெரிய வல்லரசாக உருவாக்கப்போவதாகப் பேசினார்.

இதில் 2019 பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மரபியர் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தபோது ஜான்சனுக்கு வயது வெறும் 55 மட்டுமே. இந்தியப் பிரதமரானபோது நரேந்திர மோடிக்கு இருந்த வயதைக் காட்டிலும் 8 ஆண்டுகள் இளையவர், அமெரிக்க அதிபரானபோது ட்ரம்புக்கு இருந்த வயதைவிட 15 ஆண்டுகள் இளையவர். எனவே 2019இல் பிரதமரானபோது இரண்டு அல்லது மூன்று ஐந்தாண்டுகள்கூட தொடர்ச்சியாக பிரிட்டனின் பிரதமராக இருந்துவிட முடியும் என்று போரிஸ் ஜான்சன் நினைத்திருக்கக்கூடும். வயதும் அதிகமில்லை, கட்சியிலும் மக்களிடமும் அபார செல்வாக்கு, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியோ மக்களிடம் ஆதரவைத் திரட்ட முடியாமல் கடும் குழப்பத்தில் இருக்கிறது என்பதே அன்றைய நிலை.

இவ்வளவு இருந்தும் தன்னுடைய முதல் ஐந்தாண்டு பதவிக் காலத்தின் பாதியிலேயே, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்பட்டுவிட்டது; தன்னுடைய விருப்பத்தின்பேரில் இதை அவர் செய்யவில்லை, அவமானப்பட்டு பிறகே வெளியேறியிருக்கிறார். இது எப்படி நடந்தது? பிரிட்டிஷ் ஜனநாயகத்தில் இன்னமும் செயல்படும் நிலையில் உள்ள நிறுவனங்களால், தனது தவறுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஊடகமும் ஜனநாயகமும் 

இதில் முதலில் வருவது ஊடகங்கள். அரசியலுக்கு வருவதற்கு முன்னால், ட்ரம்பைப் போலவே ஜான்சனும் அதிக உண்மைகளைப் பேசிவிட மாட்டார். லண்டன் நகர மேயராக இருந்தபோது அவருடைய ‘பிளக்கும் கலை’ குறித்து ஊடகங்களும் மக்களும் அதிகம் கவலைப்பட்டதில்லை. வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோதும் அப்படியே. பிரதமர் பதவியை ஏற்றவுடன் ஊடகங்கள் அவரை மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கின. ‘உயிரைப் பறிக்கும் கோவிட்-19 பெருந்தொற்று பரவாமலிருக்க பொது முடக்கத்தை மிகவும் கவனமாகப் பின்பற்றுங்கள்’ என்று மக்களுக்கு அறிவுறுத்திவிட்டு, பிரதமருடைய அரசு இல்லத்திலேயே அந்த விதிகளை மீறியது தொலைக்காட்சிகளாலும் பத்திரிகைகளாலும் அடுத்தடுத்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது.

பிரதமர் அலுவலக ஊழியர்களும் இதர பிரமுகர்களும் முகக் கவசம் அணியவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவர் தள்ளியும் இருக்கவில்லை, மது குடித்துக்கொண்டும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கேலி செய்துகொண்டும் களியாட்டம் போட்டது வெளியானது.

ஜனநாயகத்தன்மை குறைவாக உள்ள நாடுகளில் (நம் நாட்டைப் போல) பிரதமரின் பொய்களும் மோசடிகளும் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றால் இந்த அளவுக்கு மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு மக்களிடம் அம்பலப்படுத்தப்படாமலேயே போகக்கூடும். பிரிட்டனிலும் தொழிலாளர் கட்சி சார்பு பத்திரிகைகள், மரபியர் கட்சி சார்பு பத்திரிகைகள் உண்டு என்றாலும், ஆட்சியாளர்களின் சொல்படி கேட்டு நடக்கும் இந்திய ஊடகங்களைப் போல ஏதும் இல்லை.

சட்டத்தையும் ஒழுங்கையும் பிரதமரே எப்படி மீறினார் என்று ஊடகங்கள் ஆவணப்படுத்தி ஆதாரங்களுடன் வெளியிட்ட பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றம் அதைத் தீவிரமாக ஆராயத் தொடங்கியது. சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் எல்லா பிரச்சினைகளையும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்க்கமாக விவாதிக்கிறது. நம் நாட்டில் முக்கியமான மசோதாக்கள்கூட சில நிமிஷங்களுக்குள் விவாதமின்றி, வாக்கெடுப்பு நடத்தி ஏற்றதாக அறிவிக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரதமர் நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்பது இப்போது வழக்கத்திலேயே இல்லை. ஆனால், பிரிட்டனிலோ பிரதமரிடம் கேள்விகள் என்ற மரபு காரணமாக, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரான சர் கியர் ஸ்டார்மர், போரிஸ் ஜான்சனை வெவ்வேறுவிதமான கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தக்க விளக்கம் அளிக்கவும் களங்கத்தைத் துடைக்கவும் பிரதமருக்குப் போதிய வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. அவரால் போதிய அளவுக்கு, அனைவரும் ஏற்கும் வகையில் அந்த முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க முடியவில்லை.

ஸ்டார்மர், கவர்ச்சிகரமான அரசியல் தலைவர் அல்ல என்றாலும் அவருக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த தொழிலாளர் கட்சியின் ஜெரிமி கோர்பினைவிட எடுத்துக்கொண்ட வேலையில் அதிக கவனம் செலுத்துகிறவராகவும் கடினமான உழைப்பாளியாகவும் இருக்கிறார். அரசின் கொள்கைகளை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி தோல்வி கண்ட பிறகு, ‘சிறந்த தலைவர்’, ‘நல்ல பேச்சாளர்’, ‘மக்களைக் கவரும் ஆற்றல் உள்ளவர்’ என்றாலும், ஜெரிமி கோர்பினைத் தூக்கி எறிய அந்தக் கட்சி தயங்கவில்லை.

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியிலோ எத்தனை தோல்விகளுக்குப் பிறகும், கட்சியின் மீது பிதுரார்ஜிதமாக ஆதிபத்திய உரிமை பெற்ற முதல் குடும்பத்தை விலக்க முடியாமல் மீண்டும் மீண்டும் அவர்களிடமே தலைமையைக் கொடுக்கும் மரபு தொடர்கிறது. மக்களிடையே ஆதரவைத் திரட்ட முடியாதவர் என்பது நிரூபணமானபோதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது.

உத்தர பிரதேசத்தில் தங்களுடைய குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமாக இருந்த மக்களவைத் தொகுதியிலேயே கடந்த முறை தோற்றும்விட்டார் ராகுல். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ‘இடைக்காலத் தலைவராகவே’ கட்சிக்குத் தலைமை வகிக்கும் சோனியா காந்தி, தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடியவர் ராகுலே என்று நம்புகிறார். கோர்பின் தொடர்ந்து தங்களுடைய கட்சித் தலைவராக இருப்பது மரபியர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது என்று உணர்ந்த தொழிலாளர் கட்சியினர், தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு அவரிடம் கூறிவிட்டனர்.

நரேந்திர மோடியும் பாரதிய ஜனதாவும் தொடர்ந்து வெற்றி பெறவும் ஆட்சியில் இருக்கவும் இயற்கை தந்த கொடை ராகுல் காந்தி என்பதை காங்கிரஸ்காரர்கள்தான் இன்னமும் உணராமல் இருக்கின்றனர் (இந்தக் கட்டுரையை எழுத உட்கார்ந்தபோதுதான் செய்தி வந்தது – ஐரோப்பாவுக்கு குறுகிய காலப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி என்று. பாஜகவின் நம்பகமான அரசியல் கூட்டாளி ராகுல் காந்திதான் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று!) 

பிரிட்டனில் ஊடகங்களில் பிரதமரின் முறைதவறிய நடவடிக்கைகள் குறித்து உண்மைகள் வெளியான பிறகு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதனால் அதிகாரப்பூர்வமாகவே விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்பட்டது. விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் பிரிட்டிஷ் அதிகாரிகள் – காவல் துறை முழுத் திறமையையும் நடுநிலையையும் நேர்மையையும் காட்டி விசாரித்து அறிக்கை அளித்தனர். ஆட்சியில் இருப்பவர்களின் தவறுகளை ஆதாரப்பூர்வமாகத் திரட்டி ஆவணப்படுத்த அவர்கள் தயங்கவில்லை, தவறவில்லை.

இந்திய நிலையுடன் இதை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. முக்கியமான மசோதாக்களைக்கூட நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் பரிசீலனைக்கு மோடி அரசு அனுமதிப்பதில்லை, இப்படி ஆட்சி மீது ஏதேனும் குறைகள் - குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் அதை எங்கே விசாரணைக்கு ஏற்பார்கள்? அப்படியே தவறிப்போய் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுவிட்டாலும் உயர் அதிகாரிகள் தங்களுடைய கூச்சம் அல்லது கோழைத்தனம் காரணமாக உண்மைகள் வெளிவரும் வகையில் தீர்க்கமாக விசாரித்துவிட மாட்டார்கள், தாங்கள் இப்போது பார்த்துவரும் வேலைக்கும் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பதவி உயர்வு – நீட்டிப்புகளுக்கும் ஆபத்து வராமல் பார்த்துக்கொண்டுவிடுவார்கள். பிரதமர் மீது துளியளவும் களங்கத்தின் சாயல் படிந்துவிடாமல் காப்பாற்றிவிடுவார்கள்.

செல்வாக்கை இழந்த ஜான்சன்

பிரிட்டனில் இந்த விசாரணைகள் நடந்தபோதும், நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் வளர்ந்தபோதும், ஜனநாயக நடைமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிடும் வகையில் – தன்னை உலக ராஜதந்திரியாக காட்டிக்கொண்டு உலக அரங்கில் பிரிட்டனுக்குப் பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுப்பதைப்போல பாவனை செய்தார் போரிஸ் ஜான்சன். ரஷ்யாவால் ராணுவ நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் கிவிவ் நகருக்குச் சென்று அந்நாட்டு மக்களுக்கு பிரிட்டிஷ் மக்களும் அரசும் ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

போரிஸ் ஜான்சன் என்னுடைய சிறப்பு நண்பர் என்று கூறிய இந்தியப் பிரதமரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவை உன்னதமாக்கப் போவதாக சூளுரைத்தார்.

இப்படியெல்லாம் உலக அரங்கில் நடந்துகொண்டு கட்சிக்குள் சரிந்துவரும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த முயன்றார். ஆனால், அது இயலாத காரியமாகிவிட்டது. தங்களை 2019 பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி மூலம் ஆட்சிபீடத்துக்குக் கொண்டு வந்திருந்தாலும் மோசடியான செயல்களில் ஈடுபட்டதை ஊடகங்கள் ஆவணங்களாகப் பதிவுசெய்ததையும், நாடாளுமன்றத்தில் வெளிச்சம்போட்டுக் காட்டியதையும், நடுநிலையான காவல் துறை – சிவில் சர்வீஸ் அதிகார வர்க்கம் சான்றுரைத்ததையும் பார்த்த ஆளும் மரபியர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிது சிறிதாக விலகினர்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அவருக்குள்ள ஆதரவைத் தெரிந்துகொள்ள வாக்கெடுப்புகூட நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் அவரை ஆதரிக்கவே செய்தனர். ஆனால், அந்த வெற்றி அவருக்கு அங்கீகாரத்தைத் தரவில்லை. இந்த அறிகுறிகளையெல்லாம் பார்த்த பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒவ்வொருவராகத் தங்களுடைய ராஜிநாமா கடிதங்களை அளித்தனர். இறுதியாக, தான் விரும்பாவிட்டாலும் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு போரிஸ் ஜான்சன் தள்ளப்பட்டார்.

பிரிட்டிஷ் மக்களின் ஜனநாயகம் 

குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பைப் போல, பாரதிய ஜனதாவின் மோடியைப் போல மரபியர் கட்சிக்குள் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்க முயன்றார் போரிஸ் ஜான்சன். அவர்களைப் போல அதில் வெற்றி காணாமல் தோற்றுவிட்டார். இதற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ்காரரர்கள் எப்போதுமே நாயக பிம்ப ஆராதனையில் ஈடுபடுகிறவர்கள் அல்லர். இரண்டாவது உலகப் போரில் நாஜிகளைத் தோற்கடிக்க வைத்த அஞ்சா நெஞ்சன் வின்ஸ்டன் சர்ச்சிலையே அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். மோசடியில் ஈடுபட்டதால் தங்கள் கட்சிக்குத் தலைமை வகிக்கவோ, நாட்டுக்குப் பிரதமராக இருக்கவோ தகுதியற்றவர் போரிஸ் ஜான்சன் என்று கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவுசெய்துவிட்டனர்.

இத்துடன் இந்திய நிலையை ஒப்பிட்டால் மனச்சோர்வுதான் ஏற்படும். முன்னூறுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் பாஜகவில் இருந்தாலும் ஒருவர்கூட பிரதமரை அவருடைய நடவடிக்கைகளுக்காகத் துணிந்து கேள்வி கேட்பவராகவோ கண்டிப்பவராகவோ இல்லை. பணமதிப்பு நீக்கம், கோவிட் பெருந்தொற்றின் முதல் கட்டத்தில் அவசர அவசரமாக பொது முடக்கம் அறிவித்து கோடிக்கணக்கான மக்களைப் பரிதவிக்கவிட்டது குறித்து மிக மெலிதாகக்கூட விமர்சிக்கும் நெஞ்சுரம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அதேசமயம், மக்களிடையே அவரைப் புகழந்து துதி பாட தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள்.

அதிகாரமிக்க பதவியிலிருந்து போரிஸ் ஜான்சனைத் தூக்கி எறிந்திருப்பதில் பிரிட்டிஷ் ஜனநாயக அமைப்பின் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. அது குறித்து அவை பெருமைப்படலாம். எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படி அவையவை செயல்பட்டன. ஊடகங்கள், நாடாளுமன்றம், அரசு உயர் நிர்வாக அதிகாரிகள் – காவல் துறை, எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி என்று அனைத்துமே ஜனநாயக மரபுகளை நிலைநாட்டுவதில் சிறப்பாகத் தங்களுடைய கடமைகளைச் செய்தன.

பிரிட்டனின் அரசியல் அமைப்பு பிழைத்திருக்கவும் தன்னைப் புதுப்பிக்கவும் இவை வழி செய்துள்ளன. இந்தியாவிலோ இந்த ஐந்தும் தங்களுடைய கடமைகளைச் செய்யத் தவறுகின்றன அல்லது சமரசம் செய்துகொள்கின்றன. பிரிட்டிஷ்காரர்களை அவர்களுடைய ஏகாதிபத்திய செயல்களுக்காக எவ்வளவுதான் வசை பாடினாலும், ஜனநாயகத்தைக் காக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர்களிடம் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

2

4





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   2 years ago

There is a basic level of 'disrespect' towards authority in Britain. In India, we have sycophancy.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

இந்திய மக்கள் எல்லாம் கடும் மனச்சோர்வுக்கும் விரக்திக்கும் தான் ஆளாகி இருக்கிறோம். எங்கள் மனதில் உள்ளதை சொன்னதற்கு நன்றி. அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அடிக்கும் ஜால்ராவைக் கண்டு மனம் வெதும்பி நிற்கிறோம். இதெல்லாம் ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கிறது பாருங்கள்.. அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதைக்கு ஒரு அதிகாரமும் இல்லாத, எந்த ஊடகமும் கவனம் கொடுக்காத, எவராலும் மதிக்கப்படாத மக்கள்தான் எதிர்க்கட்சி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

இந்தியாவில் இது போல நடப்பது கானல் நீர்.. ஐயா ராமச்சந்திர kuha. தயவு செய்து பத்திரமாக இருங்கள்.. இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி வாசகர்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பதவி விலகவும் இல்லைஆர்மரி ஸ்கொயர்விமான நிலையக் காவல்: காவலன் காவான் எனின்தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைகவிஞர் விடுதலை சிகப்பிகருப்பை வாய்மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டிஅட்டிஸ்அண்ணா சாலைவரிப் பணம்பாலஸ்தீன விடுதலை இயக்கம்மனிதர்கள் மீது மரணம் இடும் முத்திரைபாப்பாநக்ஸலைட்திருக்குறள்ஒழுக்கம்குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வறிக்கைசேகர் பாபுஉணவுத் திருவிழாமூ.அப்பணசாமிகாந்தியின் உடை அரசியல்குடியுரிமைச் சட்டம்கல்யாணராமன் கட்டுரைபசவராஜ் பொம்மைபுலிகள்சரிவுநவீன இந்திய இலக்கியம்ஆர்என்ஜி அல்காரிதம்மூலமும் திருத்தங்களும்சிக்கிம் அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!