கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

கூட்டாட்சியைக் கொல்ல ஐந்து வழிகள்!

ராமச்சந்திர குஹா
17 Feb 2022, 5:00 am
1

ந்தியக் கூட்டாட்சி முறை சமீப காலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. தமிழ்நாடு, கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்கள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தயாரித்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன; இது பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகள் மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் சமீபத்திய கூட்டத் தொடர் வெறும் அடையாளமாக இல்லாமல், அர்த்தச் செறிவுள்ள விவாதங்களுக்கு இடம் தந்தது. அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள நியதிகள், கொள்கைகளை மீறும் வகையில் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் மத்திய அரசை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

ஆட்சிக் கலைப்பும் 356வது பிரிவும் 

இந்தியக் கூட்டாட்சி முறை மீதான முதல் பெரிய தாக்குதல், கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசை அப்போதைய மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 1959-ல் கலைத்தது ஆகும். அந்தக் கலைப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் இந்திரா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த். கூட்டாட்சிக்கு ஊறு விளைவித்த பழியிலிருந்து அப்போது பிரதமர் பதவி வகித்த  நேரு தப்பிக்க முடியாது. நேருவின் ஜனநாயகப் பண்புகளுக்கு ஒரு களங்கமாக இந்த மாநில அரசுக் கலைப்பு நடவடிக்கை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

நேருவின் பதினேழு ஆண்டு பிரதமர் பதவிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 356 பிரிவு மொத்தமாக எட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதை அடிக்கடிப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தார். இந்திரா காந்தியின் மொத்த பதவிக்காலத்தில் 50 முறை (1966-1977, 1980-1984) மாநில அரசுகள் 356வது பிரிவின்படி கலைக்கப்பட்டன. ஆண்டுக்கு மூன்று முறை என்று சராசரி வருகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, தன்னுடைய தலைமையிலான காங்கிரஸ் பிரிவு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக 1970-71 காலத்திலும், ஜனதா ஆட்சி உடைந்து மீண்டும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த 1980-க்குப் பிறகும் மாநில அரசுகளைக் கலைப்பது வெகு வேகமாகவும் அடுத்தடுத்தும் நடைபெற்றன. 1980-க்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்த மாநிலங்களை வெகு அனாயாசமாகக் கலைத்தார் இந்திரா காந்தி.

இந்திரா காந்தியின் சகாப்தம் முடிவுக்கு வந்த பிறகு பிரதமராகப் பதவி ஏற்ற ராஜீவ் காந்தி, பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதால் பதவியை இழந்தார். அதற்குப் பிறகுதான் இந்திய அரசியலில் கூட்டாட்சியின் பொற்காலம் தொடங்கியது.

மக்களவைப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்துவிடாமல் வாக்களித்த மக்களுடைய புத்தி சாதுர்யத்தால்தான், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகமாகி ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா ராஜ்யம்’ முடிவுக்கு வந்தது. பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணைந்து செயல்படும் கூட்டுறவு உணர்வு வலுப்பெற்றது. மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்துகொண்டன. எங்கும் பலன்கள் பரவின. 

கூட்டாட்சி வலுவிழப்பில் மோடியின் பங்கு

ஆயினும் 2014, 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு மட்டுமே கிடைத்த பெரும்பான்மை வலு காரணமாக, இந்திய கூட்டாட்சிமுறை மீண்டும் ஆபத்துக்குள்ளாகியது. மோடி பிரதமராகப் பதவி வகிக்கும் ஏழரை ஆண்டு காலத்தில் அரசமைப்புச் சட்டம் 356-படி எட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ஆண்டுக்கு சராசரியாக ஒரு முறை அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. இதை இந்திரா காந்தி காலத்துடன் ஒப்பிடும்போது, ஜனநாயக விழுமியங்களுக்கு மோடி அதிக மரியாதை தருவதைப்போலத் தோற்றமளிக்கும். ஆனால் அவர் வேறு வகையில், தனக்கு முன்னர் ஆண்ட பிரதமர்களைவிட இந்திய கூட்டாட்சி முறையை வலுவிழக்கச் செய்திருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அழிமானங்கள் எப்படி நடந்தன?

முதலாவது, முக்கியமான கொள்கை முடிவுகளும், சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்காமலேயே வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன. இப்போது திரும்பப் பெறப்பட்டுவிட்ட மூன்று வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை இது மிக வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிகிறது. கல்வி, கூட்டுறவு, வங்கிகள் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது மத்திய அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு மாநிலங்கள் மீது அந்த முடிவுகள் திணிக்கப்படுகின்றன.

இரண்டாவது, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க வேண்டியது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் வருவது என்றாலும், அதில் மாநில அரசுகளின் திறனைக் குலைக்கும் வகையிலும், அவற்றின் சுயாட்சித் தன்மையை மட்டம் தட்டும் வகையிலும், அவற்றின் சட்ட நிர்வாக வரம்புக்குள் குறுக்கிடும் வகையிலும் மத்திய அரசு நடந்துகொள்கிறது. ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்’ (யுஏபிஏ) உண்மையான பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதற்குப் பதிலாக - அரசியல் எதிர்ப்பை அடக்கவே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது; ‘தேசியப் புலனாய்வு முகமை’ (என்.ஐ.ஏ.) அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்காக மாநிலம் மாநிலமாக ஏவப்பட்டு, தண்டிக்கும் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ள மத்திய அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன (மும்பையில் 2008-ல் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு, குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் தேசியப் புலனாய்வு முகமை).

கோவிட் பெருந்தொற்றானது, மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை கலந்து இணைந்து செயல்பட பெரிய வாய்ப்பை வழங்கியது. அதற்குப் பதிலாக மோடி அரசு தொடக்கத்திலிருந்தே தன்னிச்சையாகவே செயல்படத் தொடங்கியது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்து, பாஜக அரசு பதவியேற்கும் வரையில் காத்திருந்துவிட்டு பிறகே பெருந்தொற்று நோய் அபாயம் குறித்து நாட்டுக்கு அறிவித்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை மாற்றியதே சொல்புரட்டாலும், நெருக்குதலாலும் என்பது தனிக்கதை. நாடு முழுவதற்கும் நான்கே மணி நேர அவகாசம் தந்து, ‘பொது முடக்க’ அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. அதற்கும் முன்னதாக மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை, ஏன் - மத்திய அமைச்சரவையைக்கூட ஆலோசனை கலக்கவில்லை.

பொது முடக்க அறிவிப்போடு, தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டமும் (என்டிஎம்ஏ) உடன் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது – அதுவும் மாநில அரசுகளுடன் எந்தவித ஆலோசனையும் கலக்கப்படாமலேயே. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வைரஸைக் கட்டுப்படுத்திவிட்டதாக அரசு தம்பட்டம் அடிக்கும் நிலையிலும் இந்த அறிவிப்புகள் திரும்பப் பெறப்படாமல் அமல் நிலையிலேயே இருக்கின்றன. மக்களுடைய - சரக்குகளுடைய நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசுக்கு இந்தச் சட்டங்கள் ஏராளமான அதிகாரத்தைத் தருவதால், மேலும் சில காலத்துக்கு இது அமலிலேயே இருக்கும். இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் மீட்பு – உதவிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ளவும், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் வடிவமைக்கப்பட்ட இச்சட்டம், இந்த அரசின் கீழ் மாநிலங்கள் மீதான அதிகாரத்தை அதிகமாகச் செலுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.

மூன்றாவதாக, மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமல் பிரிவு இயக்குநரகம் (ஈ.டி.) போன்ற புலனாய்வு முகமைகளைத் தங்களை எதிர்க்கும் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளை எச்சரிக்கவும், வலுவிழக்க வைக்கவும் ஏவுகிறது மத்திய அரசு. ஊழல் செய்த எவரும் சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துவிட்டதால் அவர்கள் கங்கையில் மூழ்கிய பலனால் பாவங்களைத் தொலைத்துவிடுவதைப் போல குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுகிறார்கள் என்று சமீபத்தில் வெளியான 'மீம்' மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

நாலாவதாக, மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் அல்லது ஒத்துவராத மாநில அரசுகள் மீதான மற்றொரு தாக்குதலாக, அந்த மாநிலங்களின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டே நடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்போதைய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார அமைப்பை உருவாக்கிய நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல், அவற்றை மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வலுவான பாலங்கள் என்று கருதினார். இப்போது அவருடைய இருக்கையில் அமர்ந்திருக்கும் அமித் ஷாவோ மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த அதிகாரிகள் தங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், தங்களுடைய சித்தாந்தங்களுக்குக் கட்டுப்பட்டும் விசுவாசம் காட்ட வேண்டும் என்று நெருக்கடி தருகிறார். தன்னுடைய கட்சி சார்ந்த நிலையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை நெருக்கும் கண்ணோட்டமானது மத்திய-மாநில கூட்டாட்சித்தன்மைக்கு நேர் முரணாக இருப்பதுடன், அரசமைப்புச் சட்டப்படியான ஆட்சி என்பதையே சீர்குலைப்பதாகவும் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளை வலிமையிழக்க ஆளுநர் அலுவலகங்களை மோடி – ஷா இணை தவறாகவே பயன்படுத்துகிறது. குடியரசின் வரலாற்றில் இதுவரை இருந்திராத வகையில் வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் தங்களுடைய எஜமான விசுவாசத்தை வெளிப்படையாகவே பேட்டிகள், செயல்கள் மூலம் நிரூபிக்கின்றனர்.

ஐந்தாவதாக, பிரதமரைச் சுற்றி தனிமனித பிம்பம் - அரசின் நிர்வாக இயந்திரத்தின் ஆற்றலில் பெரும்பகுதியைச் செலவிட்டு - கட்டமைக்கப்படுகிறது. இதுவும் இந்தியா மத்திய, மாநிலங்கள் இணைந்து செயல்படும் கூட்டரசு என்ற தத்துவத்தை வெகுவாக வலுவிழக்க வைக்கிறது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பாக மத்திய அரசின் திட்டங்களில் மோடியின் புகைப்படங்களைப் பொறித்து, மாநிலங்களால் செய்யப்பட வேண்டிய பணிகளுக்குப் பயன்படுத்துமாறு செய்வது சர்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. அத்துடன் இந்தச் செயல்களுக்கான பலனை அல்லது பாராட்டை தான் மட்டுமே அடைய வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் பங்குக்கு வந்துவிடக் கூடாது என்ற அச்சமும் ஒருங்கே சேர்ந்து வெளிப்படுகிறது.

பிரதமரைச் சுற்றி வளர்க்கப்படும் தனிமனித பிம்பம் காரணமாக மத்திய அரசின் நிதி நிர்வாகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘பிஎம்-கேர்ஸ் ஃபண்ட்’ என்ற ஏற்பாட்டையே எடுத்துக்கொள்வோம். இந்த நிதி தொடர்பாக வெளியில் தெரிவதைவிட மூடுமந்திரமான செயல்களே அதிகம். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகவே இந்த நிதித் திட்டம் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதிக்குத் தொழில் நிறுவனங்கள் தரும் நன்கொடைகள், ‘நிறுவனங்களின் சமூகப் பொறுப்புச் செலவு’ என்று கருதப்பட்டு அவற்றுக்கு வருமான வரி வரம்பிலிருந்து விலக்கு உண்டு. முதல்வர்ர் நிவாரண நிதிக்கு நன்கொடை தந்தால், அதற்கு வரிவிலக்கு கிடையாது.

இறுதியாக, அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்திய ஒரு அம்சத்தில் மட்டும் ஒப்பிட்டால் இந்திரா காந்தியைவிட மோடி நல்ல ஜனநாயகவாதியாகத் தெரிவார். ஆனால், சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு மாநிலத்தையே இல்லாமல் செய்த பெருமை அவரையே சாரும்.

கோவா, அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, இமாசலப் பிரதேசம் ஆகிய அனைத்தும் மத்திய ஆட்சிக்குட்பட்ட நேரடிப் பகுதிகளாக இருந்து பின்னர் மாநிலங்களாக அந்தஸ்து உயர்ந்தவை. ஜம்மு-காஷ்மீரோ மாநிலமாக இருந்தது, மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மோடி அரசில் அந்தஸ்து குறைக்கப்பட்டுவிட்டது. மதம் சார்ந்த கண்ணோட்டத்துடன் - அகம்பாவம், ஆணவம் தலைதூக்க - எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கூட்டாட்சி நடைமுறையின் மீதான மிகக் கொடூரமான தாக்குதலாகும். இதுவரை எந்தப் பிரதமரும் மேற்கொள்ளாத நடவடிக்கை இது.

ஜம்மு - காஷ்மீருக்கு அப்பால் மோடி - ஷா இணை, அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப்போல கூர்மையான ஆயுதமாக அல்லாமல், பலத்த உள்காயம் ஏற்படுத்தக்கூடிய இதைவிட வலிமையான ஆயுதங்களையே பயன்படுத்தி மாநிலங்களின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்கிறது. அதில் வெளிப்படையாக வெற்றிகளையும் பெறுகிறது. இதில் செய்தி ஊடகங்களை கூட்டு சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது, தலைசிறந்த பல்கலைக்கழகங்களை நாசப்படுத்துகிறது, ராணுவத்தை அரசியல் மயமாக்குகிறது, பெரும்பான்மையினவாதத்தை ஊக்குவிக்கிறது. குடியரசின் கூட்டாட்சியமைப்பு மீது நடத்தும் இத்தகைய தாக்குதல்கள்தான் புதிய இந்தியாவின் சாதனைகளாகும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

5

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

நான் இதே கருத்தை பல வருடங்களாக கூறிவருகின்றேன். பல கட்சிகள் கூட்டாட்சியில் CMP தான் உண்மையான பிரதமர். ஒரு கட்சி ஆட்சி என்பது empty vessels make great noise போன்றது. பாசக கடைசிக்கு தான் ஆளும் மாநிலங்களின் கருத்தை கேட்டு நடந்தால் கூட போதுமானது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

கல்சுரல் காபிடல்எத்தியோப்பிய உணவுபேட்டிஇந்துத்துவமா?மாநில முதல்வர்கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்றுமூலநோய்ஆர்பிஐசந்தேகப்பட வைக்கிறது ‘வக்ஃப்’ மசோதா!நிராகரிப்புரவிக்குமார் பேட்டிசொற்கள்அருஞ்சொல்.காம்ரௌத்திரம் பழகு!உபி தேர்தல் மட்டுமல்ல...பரிணாம மானுடவியல்வார இதழ்சமஸ் செந்தில்வேல்காடுகள்குடும்பம்ஆதிக்கச் சாதிவடகிழக்குதொன்மம்எழுத்துபஜ்ரங் பலிஇரு பெரும் முழக்கங்கள்ஹீமோகுளோபின்வண்டி எங்கே போகும்?கோணங்கிமேற்கத்திய மருந்துகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!