கட்டுரை, வரலாறு, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு
அன்னிய வெறுப்பால் அடைபடும் சாளரங்கள்
மும்பை எனக்குப் பிடித்தமான நகரம், மும்பையில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் காம்தேவி பகுதியில் உள்ள மணி பவனம். காந்தி மும்பை வந்தபோதெல்லாம் தங்கிய இந்த இடம் இப்போது நினைவில்லமாகத் திகழ்கிறது. இங்கிருந்துதான் அவர் பல சத்யாகிரக போராட்டங்களைத் திட்டமிட்டார்.
மணி பவனத்துக்கு நான் முதலில் சென்றது 1990களின் தொடக்கக் காலத்தில். அங்கிருந்த முதிய பெண்மணியை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மஞ்சள் கலந்த வெளிர் வெண்ணிற சேலையை அணிந்திருந்த அவர் மிகக் குறைவாகவும், மிருதுவாகவும் பேசினார். வாழ்க்கையில் அவர் செய்த தீரமான சாகசங்களுக்கும் அவருடைய தோற்றத்துக்கும் பொருத்தமில்லாமல் அடக்கமாகத் திகழ்ந்தார். அவர்தான் உஷா மேத்தா.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாபெரும் உந்துசக்தியை அளிக்க, தலைமறைவாக இருந்துகொண்டே ‘காங்கிரஸ் வானொலி’ மூலம் இயக்கப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். 1942 ஆகஸ்ட் 9இல் காந்திஜியும் பிற தலைவர்களும் கைதுசெய்யப்பட்ட பிறகு, ரகசிய இடத்தில் இருந்துகொண்டு போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியத்தைத் தியாகிகளுக்கு வலியுறுத்தும் உணர்ச்சிமிக்க உரைகளை அவர் இந்த வானொலி வாயிலாக நிகழ்த்தினார். கைதாகாமல் வெளியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவருடைய ஒலிபரப்பு முக்கியத் தகவல்களையும் நெஞ்சுரத்தையும் அளித்தது.
உஷா மேத்தா
காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தா நிர்வகித்தபோது அவர் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த கல்லூரி மாணவி. பிரிட்டிஷ் அரசு அந்த வானொலி எங்கிருந்து செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை நடத்திய அனைவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார் உஷா மேத்தா. சிறையிலிருந்து விடுதலையான பிறகு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, பம்பாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக உயர்ந்தார். மணி பவனத்தின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். மணி பவனத்தின் புகைப்படங்கள், ஓவியங்களை நிறுவிப் பராமரிப்பதிலும், காந்தி தொடங்கிவைத்த சத்யாகிரக பாரம்பரியம் பற்றிய உரைகளைத் தொடர்வதிலும் முக்கியப் பங்காற்றினார். காந்தி முக்கியமாகக் கருதிய நகரத்தில், அவருக்குப் பிடித்தமான இடத்தில் அவர் தொடர்பான நினைவுகள் நிலைபெற, தன்னுடைய நடுத்தர வயது தொடங்கி இறுதிவரை பங்களிப்புகளைச் செய்தார் உஷா மேத்தா.
உஷா மேத்தா நிர்வகித்த காங்கிரஸ் வானொலி பற்றிய வரலாறு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் இணைந்த தொன்மக் கதையாகவே பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்போது அது உஷா தக்கர் என்பவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட, ‘காங்கிரஸ் வானொலி: உஷா மேத்தாவும் 1942ஆம் வருஷத்திய தலைமறைவு இயக்க வானொலியும்’ எனும் தலைப்பில் (Congress Radio: Usha Mehta and the Underground Radio of 1942) வரலாறாகவே பதிவாகிவிட்டது. உஷா மேத்தாவிடம் பயின்றவர்தான் உஷா தக்கர். மணி பவன நிர்வாகத்தில் உஷா தக்கரும் இணைந்து பணியாற்றினார். ஆவணக் காப்பகங்களில் இருக்கும் பதிவுகளைக் கவனமாக ஆராய்ந்து தொகுத்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இது நூலறிஞர்களுக்கும் வாசகர்களுக்கும் ஆர்வமூட்டக்கூடிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.
பழைய வரலாற்றைத் தெரிவிக்கும் இந்த நூல், நிகழ்காலத்துடன் நேரடியாக பேசுகிறது. காங்கிரஸ் வானொலியில் 1942 அக்டோபர் 20இல் வெளியான ஒரு தகவல் நறுக்கின் சுருக்கம் இதோ:
‘உலக மனித குலத்துக்கு இந்திய மக்கள் நம்பிக்கை, சமாதானம், நல்லெண்ணம் கொண்ட செய்தியைத் தூதாக அனுப்புகிறோம். மனிதர்கள் ஒருவர் இன்னொருவர் மீது நிகழ்த்தும் வன்செயல்களை மறப்போம். உண்மையான அமைதியான – இப்போது இருப்பதைவிட மேன்மையான - உலகம் அமைய நாம் பரஸ்பரம் அன்புகொண்டவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களுடைய ஒத்துழைப்பையும் பெற்றாக வேண்டும்.
ஜெர்மனியின் தொழில்நுட்பத் திறனும் அறிவியல் ஞானமும் இசையும் நமக்கு அவசியம். இங்கிலாந்தின் தாராளச் சிந்தனையும் துணிவும் இலக்கியமும் வேண்டும். இத்தாலியின் நளினம் கைவரப் பெற வேண்டும். ரஷ்யா முன்பு நிகழ்த்திய சாதனைகளையும் புதிய வெற்றிகளையும் நாம் ஒருங்கே அடைய வேண்டும். எதையும் சிரித்தபடியே ஏற்கும் ஆஸ்திரியாவின் தனிச்சிறப்பு நமக்கும் கைகூட வேண்டும், அழகான சிரிப்பு அது. அவர்களுடைய கலாச்சாரம் கருணைமிக்க வாழ்க்கைமுறை நமக்கு வேண்டும். சீனாவைப் பற்றி என்ன சொல்ல? அவர்களுடைய அனுபவமுதிர்ச்சி மிக்க ஞானமும், துணிவும், புது நம்பிக்கையும் நமக்கு வேண்டும். இளம் அமெரிக்க நாட்டின் புத்தொளியும் சாகசங்களில் ஈடுபடும் உணர்வும் வேண்டும். அனைத்தையும் நாம் அறிய வேண்டும். ஆதி மனிதர்களின் குழந்தைத்தனமான எளிமை வேண்டும். அமைதியும் சமாதானமும் மீண்டும் நிலவ, மனிதகுலத்தின் மாண்புகள் நிலைபெற அனைத்து வகையான மனிதர்களும் நமக்கு வேண்டும்.’
நாடுகளுக்கிடையே மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய மோதல்கள் நிகழ்ந்த சூழலில் (இரண்டாவது உலகப் போர்) இந்த ஒலிபரப்பு நிகழ்ந்தது. இந்தச் செய்திக்கான உத்வேகம் – ஒரு காலத்தில் நிலவிய, இந்திய தேசிய எழுச்சி என்ற உணர்விலிருந்து பிறந்தது. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு காரணமாக, அரசியல் சுதந்திரத்துக்கான இந்தப் போராட்டத்தில் உயிரையும் உறுப்புகளையும்கூட காவல் துறையினரின் அடக்குமுறையால் இழக்க நேரிடும் என்கிற நிலையில்கூட இந்த விதமாகவே உலகுக்கு செய்தி அனுப்பப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும். கலாச்சாரங்கள் நிலவினாலும் திறந்த மனத்தோடு உலகின் பிற நாடுகளோடு உறவு வைத்துக்கொள்வது இந்தியாவுக்கு நன்மைகளையே தரும் எனும் புரிதலோடு இந்த செய்தி விடுக்கப்பட்டது. பிற நாடுகள் வழங்கக்கூடிய மிகச் சிறந்த கலாச்சார, அரசியல், அறிவார்ந்த ஆற்றல்களைப் பாராட்டும் விதமாக அவைத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
நாம் இப்போது வித்தியாசமான வகையில் விளக்கப்படும், வலியுறுத்தப்படும் – 'தேசியவாத' காலகட்டத்தில் வாழ்கிறோம். இதை அதிதீவிர தேசியவாதம் என அழைப்பதே பொருத்தம். இந்த தேசியவாதம் மிகவும் குறுகியதான, முழுமையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாத, பெரும்பான்மை மத மேலாண்மையை வலியுறுத்தும் தேசியவாதமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட அக நோக்கு, நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளிலும் எதிரொலிக்கிறது. இந்தியத் தொழில்முனைவை ஊக்குவிக்கும் சாக்கில் திறமைக் குறைவையும், சலுகைசார் மனப்பான்மையையும் மட்டுமே வளர்க்கிறது. நம்முடைய கல்விக் கொள்கைகளில் நவீன அறிவியல் கொள்கைகளை ஏற்பதற்குப் பதிலாக இந்துத்துவக் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரும் நயவஞ்சகமான போக்கு அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பிற நாடுகளுடனான உறவுக்கான சாளரங்களை மூடும் இந்தப் போக்குக்கு துணையாக, இந்தியாவுக்கு உள்ளேயே நிலவும் பலவித கலாச்சாரங்களையும் பன்முகத் தன்மையையும் கொடூரமாகத் தாக்கி சிதைக்கும் வேலைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியர்கள் எந்த வகையிலான உடைகளை அணிய வேண்டும் – அணியக் கூடாது, எதைச் சாப்பிட வேண்டும் – சாப்பிடக் கூடாது, யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் – செய்துகொள்ளக்கூடாது எனச் சீர்மை எனும் பெயரில் மேலிருந்து திணிக்கும் போக்கே வலுத்துவருகிறது.
உலகக் கண்ணோட்டம்
நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் அனைவருமே உலகின் பல்வேறு நாடுகளுக்கு விரிவாக சுற்றுப்பயணம் செய்து அத்தகைய நாடுகளின் அறிமுகத்தால் கிடைத்த சிந்தனைகளில் மூழ்கினார்கள். அப்படி முதன்மையாகச் சிறந்து விளங்கிய பரந்த மனம்கொண்ட தாராளர் சமூக சீர்திருத்தர் ராஜா ராம் மோகன் ராய். ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தாலும் அவற்றின் வளமை, வலிமையால் அடிமையாகிவிடாமல் - அதேசமயம் அவற்றின் நல்ல சிந்தனைகளை உள்வாங்குபவராகத் திகழ்ந்தார் ராம் மோகன் ராய் என பிற்கால வங்காளி சிந்தனையாளர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ராயின் சிந்தனையில் வலுவின்மையோ வறுமையோ இருந்ததில்லை. எந்தப் பிரச்சினையிலும் - எந்த நிலையை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நன்மைதரும் மாற்றுக் கருத்துகளை எளிதில் கைக்கொள்பவராகத் திகழ்ந்தார். இந்தியாவின் உண்மையான அறிவுச் செல்வம் எதுவும் அவருக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்படவில்லை, அதை அவர் ஏற்கெனவே பெற்றிருந்தார். எனவே தன்னுடைய ஞானத்தால் பிற நாடுகளின் கருத்துச் செல்வங்களை உரசிப்பார்க்கும் உரைகல்லை அவர் தன்னகத்தே கொண்டிருந்தார்."
ராஜா ராம் மோகன் ராயின் உலகக் கண்ணோட்டத்தை இவ்வளவு அழகாக அடையாளம் கண்டவர் வேறு யாருமில்லை, கவியரசர் ரவீந்திரநாத் தாகூர்தான். ஆசியா, ஐரோப்பா, வடக்கு – தெற்கு அமெரிக்க கண்டங்களில் விரிவாக சுற்றுப்பயணம் செய்தவரான ரவீந்திரநாத் தாகூரும் அந்தந்த நாடுகள் இந்தியாவுக்கு அளிக்கக்கூடிய சிந்தனைக் கொடைகளை அடையாளம் பார்த்திருந்தார். ராயைப் போலவே வங்க மொழி, கலாச்சாரத்தில் ஊறியவரான தாகூரும் பிற நாடுகளின் கல்வி, கலாச்சார வளங்களை அளவிடும் உரைகல்லைத் தன்னகத்தே பெற்றிருந்தார்.
மிகச் சிறந்த தேச பக்தர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், கமலாதேவி, சட்டோபாத்யாய போன்றோரும் விரிவான வெளிநாடுகள் பயணத்தால் தங்களுடைய அகன்ற பார்வையை வளப்படுத்திக்கொண்டவர்களே. உலகம் என்கிற கண்ணாடி முன் இந்தியாவை நிறுத்திய அவர்களால் - இந்தியாவின் தோல்விகளையும், தவறு செய்யும் இடங்களையும் துல்லியமாக அடையாளம் காண முடிந்து அவற்றுக்குத் தீர்வுகளையும் கூற முடிந்தது. அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான படைப்பூக்கமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கூறலாம்.
அம்பேத்கர் வெளிநாடுகளில் பெற்ற சட்ட, சமூகவியல் கல்விகளின் கூறுகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும் அவருடைய சகா பி.என். ராவ் உள்ளிட்ட சகாக்களுடன் நிகழ்த்திய ஆலோசனைகளும் இந்திய அரசியல் சட்டம் உருவாகக் காரணங்களாகத் திகழ்ந்தன. வெளிநாடுகளுக்குச் செல்லவோ, கல்வி பயிலவோ வாய்ப்பு கிடைக்காத அந்நாளைய இந்தியர்கள்கூட, முற்போக்கான சிந்தனைகள் அவை எந்த நாடுகளிலிருந்து, கலாச்சாரப் பகுதிகளிலிருந்து கிடைத்தாலும் அவற்றை ஏற்கும் மனப் பக்குவத்தோடு இருந்தார்.கள். அப்படித்தான் 19வது நூற்றாண்டில் ஜோதிபாய் பூலே, அடிமை வாழ்க்கை முறையை ஒழிக்க முற்பட்ட அமெரிக்க முற்போக்காளர்களின் செயல்களிலிருந்து உத்வேகம் பெற்று இந்தியாவில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான போரைத் தொடங்கினார். ஐரோப்பா, ரஷ்யா, இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தன்னுடைய தாய்நாடு எத்தகைய நன்மைகளையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று இளம் தேச பக்தையான உஷா மேத்தாவால் 1942களில் வானொலி செய்தி – தகவல் அறிக்கைகளில் பட்டியலிட முடிந்தது.
முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்திய தேச பக்தர்கள் பிற நாடுகளின் கலாச்சாரங்களிலிருந்து நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டதுடன் நம்மிடமுள்ள நன்மைகளையும் அளித்தார்கள். அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என 19வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இங்கிலாந்தில் வாதாடினார் ராம் மோகன் ராய். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சீனா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் சிந்தனையாளரக்ளையும் தன்னுடைய எழுத்தாற்றாலால் ஊக்குவித்தார் ரவீந்திரநாத் தாகூர். காலனியாதிக்கத்துக்கு எதிராக நேரு நடத்திய போராட்டங்கள் ஆப்பிரிக்க நாடுகளின் இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்தன (நெல்சன் மண்டேலா அவர்களில் ஒருவர்). ஜனநாயகம், சகோதரத்துவம் தொடர்பாக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள், அவர் பிறந்த நாட்டைவிட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை இப்போது அதிகம் கவர்ந்து வருகிறது.
பிற நாடுகளின் கலாச்சாரங்களைத் திறந்த மனதுடன் இந்திய தேச பக்தர்கள் ஏற்றுக்கொண்டது, இன்றைய இந்தியத் தலைவர்களில் சிலர் பெற்ற பயிற்சிகளுக்கு (போதனை என்பது சிறந்த வார்த்தையாக இருக்கலாம்) நேர் முரணாக இருக்கிறது. நரேந்திர மோடி, அமித் ஷா போன்றவர்களை உருவாக்கிய ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் (பயிற்சிக் களங்கள்) அன்னியர்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவை, பிற நாடுகள் – கலாச்சாரங்களின் நல்ல அம்சங்களை ஏற்கக்கூடாது என்கிற மனோபாவம் உள்ளவை. தங்களுடைய மூதாதையர்களின் நம்பிக்கைகளே சிறந்தவை என்று உருவேற்றப்பட்டவர்கள், கற்பனையான எதிரிகளை ஒழிக்க வேண்டும் என சபதம் பூண்டவர்கள், உலக சமுதாயத்துக்கு இந்துக்கள் விஸ்வ குருவாக வருவார்கள் என்ற கேலிக்கூத்தான கற்பனையை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள உலகத்துக்கு ஏதுமில்லை, அதைவிட சோகம் – உலகத்திடமிருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று அவர்களும் முடிவுசெய்துவிட்டதுதான்!
தமிழில்: வ.ரங்காசாரி
7
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Satheesh Kumar 3 years ago
கமலாதேவி, சட்டோபாத்யாய என்று இரண்டு பேரும் வெவ்வேறு நபர் போல தெரிகிறது. ஒரே நபர் அவர்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Ramesh Ramalingam 3 years ago
A very insightful article to start a day with. Nowadays I feel we are closing ourself more from others.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.