கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
இலங்கையைச் சேர்ந்த மானுடவியலாளர் எஸ்.ஜே.தம்பையா தன்னுடைய நாட்டில் நிலவும் இன மோதல்கள் தொடர்பில் 1980களில் எழுதியபோது, ‘சிறுபான்மை மனநிலையில் வாழும் பெரும்பான்மையினர் சிங்களர்கள்’ என்று வர்ணித்தார்.
அவர் எழுதினார், “மக்கள்தொகையில் சிங்களர்கள் 70%க்கும் மேல், நாட்டின் அரசியலை அவர்கள்தான் கட்டுப்படுத்துகின்றனர், அதிகார வர்க்கத்திலும் ராணுவத்திலும் அவர்களுடைய ஆதிக்கம்தான், அவர்களுடைய பௌத்த மதம்தான் அதிகாரப்பூர்வமான அரச மதம், அவர்களுடைய மொழியான சிங்களம்தான் நாட்டின் பிற மொழிகளைவிட அதிக செல்வாக்கும் அங்கீகாரமும் பெற்றுள்ளது.
இவ்வளவுக்குப் பிறகும், சிங்களர்களிடையே தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதைப் போன்ற மனோபாவம் நிலவியது. சிறுபான்மையினரான தமிழர்களால் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சினர். தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதால் பிரிட்டிஷ் ஆட்சியில் எந்தப் பதவிக்கும் பொறுப்புக்கும் அவர்களே தேர்வாகின்றனர். இந்தியாவின் ஆதரவு இருப்பதால் அவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்திப் பெறுகின்றனர், அவர்களுடைய ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு என்றிருக்கும் ஒரே நாட்டிலேயே சிங்களர்களைத் தமிழர்கள் அடையாளமில்லாமல் செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர்!”
இந்துத்துவ பரிசோதனைக் கூடங்கள்
உடுப்பியில் பெஜாவர் மடாதிபதி சமீபத்தில் நகரின் சில பிரிவினருடன் சமீபத்தில் நிகழ்த்திய சந்திப்பு தொடர்பில் நாளிதழ்களில் படித்தபோது எனக்கு இலங்கையின் பின்னணியில் சிங்களர் மனநிலை குறித்து தம்பையா எழுதியது நினைவுக்கு வந்தது. உடுப்பி நகரமும் உடுப்பி மாவட்டமும் சமீப காலமாக இந்துத்துவக் கொள்கைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைக்கூடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.
நகரில் உள்ளூர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தந்த ஆதரவில், ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வரக் கூடாது என்கிற தடை சமீபத்தில் – இதுவரை அமலில் இல்லாதது – கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து, மாநில அளவிலும் தேசிய அளவிலும் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்தன. சமூக அமைதிக்கு ஆழ்ந்த சேதத்தை இவை விளைவித்தன. உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தை சுழற்சி முறையில் நிர்வகிக்கும் எட்டு மடாலயங்களில் பெஜாவர் மடமும் ஒன்று.
ஹிஜாப் அணிவதை வெற்றிகரமாகத் தடை செய்த பிறகு - இதனால் பல முஸ்லிம் பெண்கள் கல்வி உரிமையை இழந்தனர் – இந்து ஆலயங்களிலும் திருவிழாக்களிலும் முஸ்லிம்கள் கடை வைத்து வியாபாரம் செய்யும் தடையையும் - தங்களுடைய ஏவலுக்குக் கட்டுப்பட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் அமல்படுத்தினர். இந்து ஆலயங்கள் அருகிலும் திருவிழாக்களிலும் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதை முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் அனைத்து மதத்தவர்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட முஸ்லிம்கள் சேவை செய்துவருகின்றனர். கர்நாடக மாநில அரசிடமிருந்தோ, நீதிமன்றத்திடமிருந்தோ தங்களுக்கு உதவி கிடைக்காது என்று தெரிந்துகொண்ட முஸ்லிம் சமுதாயத்தினர், இந்த விவகாரத்தில் தலையிட்டு வகுப்பு ஒற்றுமையை நிலைநாட்ட உதவுமாறும், முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறும் பெஜாவர் மடாதிபதியை அணுகினர்.
“இந்து சமூகம் கடந்த காலங்களில் நிறைய துயரங்களை அனுபவித்துவிட்டது” என்று அப்போது அவர்களிடம் கூறியிருக்கிறார் மடாதிபதி. “சமூகத்தின் ஒரு பகுதி தொடர்ந்து அநீதியையே சந்தித்துவரும் நிலையில், விரக்தியும் கோபமும் வெளிப்படுகின்றன. அநீதிகளால் இந்து சமுதாயம் மனம் வெதும்பிக்கிடக்கிறது” என்று கூறியிருக்கிறார் மடாதிபதி.
இந்து சமுதாயம் கடந்த காலங்களில் மிகவும் துயரம் அடைந்திருப்பதாக அவர் தனது பேச்சைத் தொடங்கியிருப்பதைக் கவனியுங்கள். இங்கே அவர் குறிப்பிடுவது பொ.ஆ. 13ஆவது நூற்றாண்டு முதல் 16ஆவது நூற்றாண்டு வரை! முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட இடைக்காலத்தில் நடந்த சம்பவங்களை இந்துத்துவர்களின் மேடைப் பேச்சுகளில் இத்தகைய குறிப்புகள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன.
அரவணைப்பற்ற அரசியல் களம்
சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இவற்றை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தனர்.
லக்னௌவிலும் உடுப்பியிலும் 2022இல் வாழும் முஸ்லிம்கள் - எந்த வகையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர்களுடனோ திப்பு சுல்தானுடனோ நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. இரு தரப்பாரும் கடைப்பிடிப்பது ஒரே மதம் என்பதால், இவர்களைத் தாக்கிப் பேசவும் அவமானப்படுத்தவும் அது பயன்படுத்தப்படுகிறது.
முகலாய மன்னர்களும் அல்லது திப்பு சுல்தானும் செய்ததற்கு (அல்லது செய்யாமல் விட்டதற்கும்) இப்போதுள்ள முஸ்லிம்களைக் குற்றவுணர்வுள்ளாக்குவது நாசகரமான நடவடிக்கைகள் ஆகும்.
இந்துக்கள் இப்போதும் தொடர்ந்து துயரங்களை அனுபவிப்பதாக மடாதிபதி அதே மூச்சில் பேசியிருப்பதையும் கவனியுங்கள். யாரிடமிருந்து - எந்த விதத்தில்? மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையில் சிங்களர்கள் இருந்த நிலையைவிட இந்தியாவில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர்.
அரசியல் நிர்வாகத்திலும் காவல்துறை நிர்வாகத்திலும் இந்துக்களின் மேலாதிக்கம் பேரளவில் இருக்கிறது. கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம்கள் அரசியல் – பொருளாதாரம் – சமூகம் – கலாச்சார – தளங்களில் வெகுவாக அதிகாரமற்ற எளிய பிரிவினர்.
சட்டமன்றத்திலும், அரசு நிர்வாகத்திலும், காவல் துறை, நீதித் துறை, சொந்தமாகத் தொழில் செய்யக்கூடிய மருத்துவம் – பொறியியல் – பட்டயக்கணக்கு ஆகிய துறைகளிலும் மக்கள்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் பெற்றவர்கள் அல்லர். அவர்களுடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமானது. இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அரசியல் கட்சி (பாஜக) மாநிலத்திலும் ஒன்றியத்திலும் ஆட்சியில் இருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் பெஜாவர் மடாதிபதியால், இந்துக்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் அநீதிக்கு ஆட்படுகிறவர்களாகவும் சித்தரிக்க முடிகிறது. மிகவும் தொன்மையான, நன்கு நிலைபெற்றுவிட்ட, மிகவும் மதிக்கப்படுகிற, மதரீதியாக மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய மடத்தின் அதிபர் இந்த வகையில் பேசுகிறார் என்றால் ‘சிறுபான்மை மனநிலையில் பெரும்பான்மைச் சமூகம் இருக்கிற சூழலில்தான்’ நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது.
பெரும்பான்மை அணிதிரட்டல்
இந்துத்துவம் கோலோச்சும் இந்தக் காலத்தில், சிறுபான்மைச் சமூகத்தின் தாழ்வு மனப்பான்மையில் பெரும்பான்மைச் சமூகம் வாழ்கிறது, தங்களை எல்லா வகைகளிலும் மட்டம்தட்டி துன்புறுத்துகிறார்கள் என்ற மனநிலையில் அது ஆழ்ந்துள்ளது. ஆனால், நடைமுறையில் எப்படி இருக்கிறது என்றால் தங்களுடைய பெரும்பான்மை எண்ணிக்கையைப் பயன்படுத்தி, பேரினவாத அணுகுமுறையோடு மாநில அரசையும் அரசு நிர்வாகத்தையும் ஊடகங்களையும் – நீதித் துறையின் ஒரு பகுதியையும்கூட - தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தாங்கள் விரும்பும் நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
மிகவும் கொடூரமான இந்த முயற்சிகளின் சமீபத்திய உதாரணம்தான் - ஹிஜாபுக்குத் தடை, ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உள்ளிட்ட பண்டங்களை இந்துக்கள் பயன்படுத்தக்கூடாது என்கிற பிரச்சாரம், தொழுகைக்கு நேரமாகிவிட்டது வர வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அன்றாடம் ஐந்து முறை கூவி அழைக்கும் பாங்கு அறைகூவலுக்கான எதிர்ப்பு போன்றவை ஆகும். இந்திய முஸ்லிம்களை சிறுமைப்படுத்தவும் அடக்கி ஆளவும் வேறு பல நடவடிக்கைகளும்கூட எடுக்கப்படுகின்றன.
இந்திய முஸ்லிம்கள் மீது இந்துத்துவத்தின் தாக்குதல்கள் இரு தெளிவான வழிகளில் - ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக - நிகழ்த்தப்படுகின்றன.
முதலாவது, அரசியல் தளத்தில். நயவஞ்சகமான சூழ்ச்சிகள் மூலம் இந்து வாக்கு வங்கி வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது. பட்டியல் இனத்தவரையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இதில் இணைத்து முஸ்லிம்களைவிட கலாச்சார, சமூகரீதியாக மேம்பட்டவர்கள் எனும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் 80% வாக்காளர்கள் இந்துக்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களில் 60% வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றாலே எளிதில் ஆட்சியைப் பிடித்துவிட முடிகிறது. ‘முஸ்லிம்களை விலக்கிவிடுங்கள், இந்துக்களை முதலில் கவனியுங்கள்’ என்கிற அணுகுமுறை இதற்கு உதவுகிறது (ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில், இந்துக்களில் 50% வாக்காளர்கள் ஆதரித்தால்கூட பாஜகவால் வெற்றி பெற்றுவிட முடிகிறது).
சிறுபான்மையினர் மீது இந்துத்துவத்தின் இரண்டாவது பரிமாண தாக்குதலானது சித்தாந்தரீதியிலானது. இந்துக்கள்தான் இந்த மண்ணின் உண்மையான, அங்கீகாரமுள்ள, நம்பிக்கைக்குரிய குடிமக்கள், இந்திய முஸ்லிம்கள் (கிறிஸ்தவர்களும்கூட) இந்தியாவின் உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் அல்ல.
காரணம், அவர்களுக்கான புனிதத் தலம் இந்தியாவில் இல்லை, அவர்கள் பிறந்த பித்ரு பூமியாக இந்தியா இருந்தபோதிலும் என்கிறது அந்த சித்தாந்தம். இது (சாவர்க்கர் ஊட்டிய போதனை). மண்ணின் மைந்தர்கள் நாங்கள்தான், இந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களும் நாங்கள்தான் எனும் மனோபாவமே இந்துத்தவர்களை - ஆடைகள், சமையல்முறை, பழக்கவழக்கங்கள், பொருளாதார வாழ்முறை ஆகியவற்றுக்காக முஸ்லிம்களைக் கேலிசெய்யவும் சீண்டவும் முடிகிறது.
வெறுப்பு அரசியல்
இந்துத்துவ குண்டர்கள் விதித்த தடையை மீறி கன்னட எழுத்தாளர் தேவனூர் மகாதேவா, மைசூரு நகரில் ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை முஸ்லிம்களின் கடைகளில் வாங்கி மற்றவர்களுக்கும் கொடுத்து தடையை முறியடித்தார். துணிச்சல் மிக்கவரான மகாதேவா எல்லோராலும் விரும்பப்படும் எழுத்தாளர். அப்படிச் செய்தபோது அவர் கூறிய வார்த்தைகள், ‘வெறுப்புதான் வலதுசாரிகளின் ஊக்க பானம்’ என்பதாகும்.
இந்த ஒரு வாக்கியமே இந்துத்துவர்கள் பற்றிய சுருக்கமான விவரணையாகும். இதற்கு நான் மேலும் சிலவற்றைச் சேர்க்க விரும்புகிறேன். இந்த வெறுப்பு என்ற ஊக்க பானத்துடன் மனநோய் என்பதும் கலக்கப்படுகிறது. இந்துத்துவ ஆதிக்கத்துக்கு உள்படும் இந்துக்கள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று அச்சப்படுவதுடன், முஸ்லிம்கள் உள்ளிட்ட சக குடிமக்கள் மீது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வகையில் வெறுப்பையும் வளர்த்துக்கொள்கின்றனர்.
குறுகிய காலத்துக்கு (அதாவது இப்போதைக்கு) இந்த சித்தாந்தமானது கடைப்பிடிக்கப்பட்டால் அது இந்திய முஸ்லிம்களை மிக மோசமாக பாதிக்கும் (ஏற்கெனவே பாதித்துக் கொண்டிருக்கிறது). நீண்ட காலத்துக்குப் பிறகு இவை இந்துக்களையே சுற்றிச் சுழன்று பாதிக்கும்.
இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் வெறுப்பதும், பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள், ஷியாக்களை சுன்னி முஸ்லிம்கள் வெறுப்பதும், மியான்மரில் ரோங்கியாக்களை பௌத்தர்கள் வெறுப்பதும் இதே வகையிலான எச்சரிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளாகும்.
இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுமே மதப் பேரினவாதத்துக்கு ஆள்படாமல் இருந்திருந்தால், இன்று உலக அளவில் இன்னும் மேம்பட்ட நிலையை அடைந்திருக்கும். வெறுப்பு – சித்தபிரமை கொண்ட அணுகுமுறையால் அமைதியும் வளமும்கொண்ட சமூகங்களை உருவாக்கவும், வளர்க்கவும், காக்கவும் முடியாது.
7
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
B velumani 3 years ago
கட்டுரை மிக அருமை,பாராட்டுகிறேன் ஐயா,இது போன்ற உண்மையான தகவல்கள் தினசரி நாளிதழில் வாரப் பத்திரிகை களில் வருவதில்லை,உண்மையை மக்களிடமிருந்து மறைத்தே வைக்கிறார்கள் அன்றும் இன்றும் உஙுகளைப் போன்றவர்களால் இன்று சிறிதாய் வெளி வருகிறது தொடர்ந்து உண்மையை சொல்லி மக்களை விழிப்புணர்வு தருக என கேட்டுக்கொள்கிறேன் நன்றி நலமுடன் வாழ்க வேலுமணி கோவை எனக்கு அருஞ்சொல் இதழ் வேண்டும்9894057773
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 3 years ago
சமூகத்திற்கு தேவையான கட்டுரை..... நன்றிகள் பல அய்யா
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 3 years ago
அருமையான கட்டுரை. நன்றி arunchol
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.