கட்டுரை, அரசியல், வரலாறு 6 நிமிட வாசிப்பு

மகாதேவ் தேசாய்: மாபெரும் காந்தியர்

ராமச்சந்திர குஹா
22 Aug 2021, 12:00 am
2

ல்லா இந்தியர்களையும்போல, ஆகஸ்ட் 15 என்றாலே நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த முக்கியமான நாள் என்ற எண்ணத்தோடேயே வளர்ந்துவந்தேன். 1947 ஆகஸ்ட் 15 அன்றுதான் சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பதவியேற்றது. சமீப ஆண்டுகளாக அந்த நாளுக்கு வேறொரு முக்கியத்துவம் இருப்பதையும், சுதந்திர தினத்துக்கும் அதற்குமுள்ள நெருக்கமான தொடர்பையும் என் மனது அசைபோட்டுக்கொண்டே வருகிறது; அந்த நாளில்தான் மகாதேவ் தேசாய் சிறையில் தனது இன்னுயிரை நீத்தார். தேசாயின் பங்களிப்பு இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தே இருக்காது என்றுகூட சொல்வேன்; அந்த அளவுக்கு மிகச் சிறந்த இந்த தேசபக்தர்.

சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகமும் வாழ்க்கையும் பெரும்பாலான மக்களால் அறியப்படாமலும், எந்த விதத்திலும் கௌரவிக்கப்படாமலும் இருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட நிலையைத்தான் அவரும் விரும்பியிருப்பார். ஆமதாபாதில் காந்திஜியின் உதவியாளராகச் சேர்ந்த 1917 முதல், ஆகாகான் மாளிகையில் வீட்டுச் சிறையில் காவலில் இருந்தபோது இறந்த நாள் வரையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடைய முழு வாழ்க்கையையும் காந்திஜிக்குத் தனிப்பட்ட முறையில் தொண்டு செய்வதற்காகவே அர்ப்பணித்துவிட்டார். காந்திஜியின் செயலர், தட்டச்சர், மொழிபெயர்ப்பாளர், ஆலோசகர், தூதர், மொழிபெயர்ப்பாளர், பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர் என்று இன்னும் பல வேலைகளை இடைவிடாமல் செய்துவந்தார். தன்னுடைய பாபுஜிக்காக அவர் சமையல் வேலையைக்கூட மகிழ்ச்சியோடு செய்தார். அவர் தயாரிக்கும் கிச்சடிக்கு காந்தியிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைக்கும்.

வேலைப்பித்துக்காரர்

காந்திஜியின் விடுதலைப் போராட்டப் பணிகளுக்கும் பிரச்சாரங்களுக்கும் இன்றியமையாதவர் மகாதேவ் தேசாய் என்பதற்கான மிகச் சிறந்த சான்றிதழை மகாத்மாவே மனமுருகி வெளியிட்டிருக்கிறார். தேசாய் தன்னுடன் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு 1918இல் தன்னுடைய உறவினரான மகன்லாலிடம் பேசிக்கொண்டிருந்த காந்திஜி, “மகாதேவ் எனக்குக் கைகளாகவும் கால்களாகவும் மூளையாகவும் ஆகிவிட்டார். அவர் இல்லாமல் நான் கால்கள் இல்லாதவன்போலவும் பேச முடியாதவன்போலவும் உணர்கிறேன்; அவரைப் பற்றி நிறையக் கேள்விப்படக் கேள்விப்பட அவருடைய நற்குணங்களே அதிகம் வெளிப்படுகின்றன. எந்த அளவுக்கு நல்ல பழக்கவழக்கங்களுடன் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அறம் சார்ந்தவராகவும் இருக்கிறார்” என்று பெருமிதத்தோடு கூறியிருக்கிறார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள்கூட விடுப்பு எடுக்க மறுத்து அயராமல் உழைத்ததன் காரணமாக உடல்நிலை மோசமாகிப் படுக்கையில் விழும் அளவுக்கு தேசாய் சென்றுவிட்டார். அப்போது காந்திஜி அவரை மிகவும் அன்போடு பின்வருமாறு கடிந்துகொண்டிருக்கிறார். “வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பித்து உங்களுக்குப் பிடித்துவிட்டது என்று கூறலாமா? நீங்கள் உடல் நலமில்லாமல் படுத்துவிட்டால் நான் சிறகிழந்த பறவையாகிவிடுவேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் படுத்த படுக்கையாகிவிட்டால் நான் என்னுடைய நடவடிக்கைகளில் முக்கால்வாசியைக் கைவிட்டுவிட வேண்டும் (அல்லவா?)” என்று கேட்டிருக்கிறார்.

மகாதேவ் தேசாயைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அதிகம் தெரிந்து வைத்திருந்தவர் காந்திஜியின் ஆங்கிலேயச் சீடரான மீரா பென் (மேடலின் ஸ்லேட்). மேடலினை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ஆமதாபாத் ரயில் நிலையத்துக்கு 1925 நவம்பர் மாதம் சென்றபோதுதான் இருவரும் முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டனர். இருவரும் ஆகாகான் மாளிகையில் வீட்டுச் சிறையில் ஒன்றாக காந்திஜியுடன் இருந்தபோதுதான் மகாதேவ் இறந்தார். ‘எ ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ என்ற தன்னுடைய வாழ்க்கை நினைவுகள் பற்றிய புத்தகத்தில், மகாதேவ் தேசாய் குறித்து மீரா விவரித்திருக்கிறார். “மிகவும் உயரமாக, பார்ப்பதற்கு அழகாக, மீசையுடன், அறிவு முதிர்ச்சிக்கு அடையாளமாக முன் நெற்றியில் வழுக்கையோடிய குறைந்த முடியுள்ள தலையுடன் இருப்பார். இயல்பாக, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். அவருடைய நளினமான கைகளைப் பார்த்தாலே அது புரியும். அரசியல் களத்தில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைக்கூட எளிதில் கிரகித்து, சிக்கலான அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுமளவுக்கு ஆற்றல் பெற்றவர். அந்த வகையில், பாபுஜிக்கு அவர் வலதுகரமாகத் திகழ்ந்தார். எந்த ஒரு விவாதத்திலும் அனைத்துத் தரப்பு வாதங்களையும் விரைவில் குறிப்பெடுத்து, விவாதத்துக்குப் பின்னூட்டங்களை அளித்து, அறிக்கைகளைத் தயாரிக்க உதவி – எழுதி இறுதி வடிவம் தந்து, தெளிவாக வடித்துத் தந்துவிடுவார். இந்தத் திறமைகள் எல்லாவற்றையும்விட அவரிடம் இருந்த தனித்துவமான குணம் - பாபுஜி மீது அவருக்கு இருந்த பக்தி, அக்கறை. இதன் காரணமாகவே எங்கள் இருவருக்கும் இடையில் வலுவான பாசப்பிணைப்பு நிலவியது!”

தேசாயின் பெட்டி

‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்வைத்து 1942 ஆகஸ்ட் மாதம் புதிய சத்தியாகிரகப் போரை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தொடங்கியவுடன் காந்திஜியைக் கைதுசெய்து புணே நகரில் உள்ள ஆகாகான் மாளிகையில் வீட்டுச் சிறையில் வைத்தனர். இதற்காகவே அந்த மாளிகையை அதன் உரிமையாளர்களிடமிருந்து பிரிட்டிஷ் அரசு கேட்டுப் பெற்றிருந்தது. காந்திஜியுடன் மகாதேவ் தேசாய், மீரா பென் உள்ளிட்ட நெருக்கமான சகாக்களும் அதே மாளிகையில் உடன் இருந்தனர். இந்த முறை சிறை வாசம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று உணர்ந்த மகாதேவ் தேசாய், ஆகஸ்ட் 14 மாலை மீராவைச் சந்தித்தபோது, “ஆகா புத்தகங்கள் எழுத இது எவ்வளவு நல்ல சந்தர்ப்பம், ஆறு புத்தகங்கள் எழுத வெவ்வேறு தலைப்புகளில் தகவல்களை எனக்குள் வைத்திருக்கிறேன், அவற்றைத் தாளில் எழுத வேண்டியதுதான் பாக்கி” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அடுத்த நாள் ஆகஸ்ட் 15இல் மாரடைப்பு காரணமாக, தன்னுடைய ஐம்பதாவது வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார். அவர் மறைந்த அடுத்த நாள், மகாதேவ் தேசாய் தன்னுடன் எடுத்துவந்திருந்த பெட்டியைக் கொண்டுவரச் சொல்லி காந்தியே திறந்தார். அவருடைய உடைகளைத் தவிர கிறிஸ்தவர்களுடைய வேத நூலான விவிலியம் (அகதா ஹாரிசன் என்ற பிரிட்டிஷ்காரர் அவருக்குப் பரிசாக அளித்தது), செய்தித்தாள்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில கட்டுரைகள் – செய்திகள், சில புத்தகங்கள் ஆகியவை மட்டுமே இருந்தன. தாகூர் எழுதிய ‘முக்ததாரா’ என்ற நாடக நூல், ‘பேட்டில் ஃபார் ஆசியா’ என்ற ஆங்கில நூல் அவற்றில் அடங்கும்.

குஜராத்தி, ஆங்கில இலக்கியங்களை ஆழ்ந்து படித்தவர், வரலாறு, அரசியல், சட்டம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். காந்தியின் நெருக்கமான சீடர்களிலேயே அதிகம் படித்த அறிஞர். மகாதேவ் தேசாய் படித்து, குறிப்பெடுத்த நூல்களையெல்லாம் இயான் தேசாய் என்ற அமெரிக்க வரலாற்றாசிரியர் தன்னுடைய ஆய்வுக்காகப் படித்தார். தான் படித்த நூல்களிலிருந்து முக்கியமான கருத்துகளையும், மேற்கோள்களையும் மகாதேவ் தேசாய் எப்படி காந்திஜியின் பார்வைக்காகக் குறிப்பாகத் தயாரித்தார் என்பதை அவர் ஆய்வில் தொகுத்திருக்கிறார். அரசியல் சித்தாந்தங்கள், சர்வதேச அரசியல் குறித்து அதிகம் படித்தவர் அல்ல காந்தி. எனவே, அவருக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைத்ததுடன் சரியான முடிவுகளை எடுக்கவும் உதவியிருக்கிறார் மகாதேவ். இது பற்றி ‘வில்சன் குவார்ட்டர்லி’ என்ற சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் இயான் தேசாய். “சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சித்தாந்தப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாகவும் கோவையாகவும் முன்வைக்க காந்திஜிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார் மகாதேவ் தேசாய்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

புத்தகக் காதலர்

எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தேசாய்க்கு இருந்தது என்பதை ‘மான்செஸ்டர் கார்டியன்’ பத்திரிகையில் பிரசுரமான இரங்கல் கட்டுரை அழகாக வெளிப்படுத்தியிருந்தது. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டுக்காக பிரிட்டிஷ் தலைநகரமான லண்டனுக்கு வந்திருந்த காந்திஜியும் அவருடைய செயலரும் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது ஆங்கிலேயர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களுடைய கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்று நேரில் அறிந்துகொள்ள விருப்பமாக இருக்கிறது என்று மகாதேவ் தேசாய் நண்பரிடம் கூறினாராம். ‘சரி அதற்கு ஏற்பாடு செய்துவிடுவோம்’ என்று சொல்லி அழைத்துச் சென்றபோது, வீடுகளுக்குள் சென்றவுடன் அங்கு இருக்கும் நூலகம் அல்லது புத்தக அலமாரியைப் பார்த்தவுடன் நேராக அருகில் சென்று அங்கேயுள்ள புத்தகங்களையெல்லாம் எடுத்து அவை என்ன என்று ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவாராம். புத்தகங்களை அவர் எடுத்துப் படிக்கும் விதமே அவர் எப்பேர்ப்பட்ட புத்தகக் காதலர் என்பதை உணர்த்திவிடுமாம். ‘அவருக்கு வேலை இல்லை, ஓய்வாகக் கழிக்க சில நிமிஷங்கள் கிடைத்துவிட்டால் நிச்சயம் அவரை ஏதாவதொரு புத்தகக் கடையில் பார்க்கலாம்’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார் எழுத்தாளர்.

“இப்படி விரிவாகவும் ஆழமாகவும் வாசிக்கும் பழக்கம் இருந்தபோதும் தன்னுடைய முழுமுதல் கடமையான காந்திஜிக்கு ஆலோசனைகள் கூறுவது, உதவிகளைச் செய்வது என்பதிலிருந்து அவர் எப்போதும் தவறியதே இல்லை. பாபுஜி என்ன சொல்கிறார், என்ன செய்தார் என்பதை எதிர்காலம் அறிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து அவர் பதிவுசெய்துகொண்டே இருந்தார். முக்கியமானதோ – அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாததோ, எதுவாக இருந்தாலும் – காந்திஜி விழித்திருந்தபோது நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் தொகுத்தி எழுதிவந்தார். மகாதேவ் தேசாயின் நாட்குறிப்புகளை வாசித்தால், அவரும் அவருடைய குருவான மகாத்மாவும் ஒவ்வொரு கணத்தையும் வரலாறாகப் பதிவுசெய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரியும். பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரையும் மகாதேவ் தேசாயையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்ற அளவுக்கு அவர் மீதும் அவருக்கு ஈடுபாடு இருந்தது” என்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி.

தேசாய்க்கு ஏன் சிலை வைக்கவில்லை?

மகாதேவ் 1942 ஆகஸ்ட் 15 அன்று இறந்தார். அவரைவிட 23 வயது மூத்தவரான காந்திஜி, அதற்குப் பிறகு ஏழாண்டுகள் உயிர் வாழ்ந்தார். மகாதேவ் தேசாயின் இழப்பைப் பல தருணங்களில் உணர்ந்து, வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். தன்னுடைய வாழ்நாளின் கடைசி வாரங்களில் இந்துக்கள் – முஸ்லிம்களிடையில் அமைதியை ஏற்படுத்தும் பணியிலும், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட மனக்கசப்பை ஆற்றும் பணியிலும் இடைவிடாது ஈடுபட்டார். அப்போது மனு காந்தியிடம் மகாத்மா காந்தி பின்வருமாறு குறிப்பிட்டார், “இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத வகையில் மகாதேவின் இழப்பை உணர்கிறேன்; அவர் நம்மோடு இருந்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகப் போக விட்டிருக்க மாட்டார்”.

நாற்பதாவது வயதை நெருங்கும் வரையில் எனக்கும் மகாதேவ் தேசாயின் முக்கியத்துவமோ, அவருக்கும் காந்திக்கும் இருந்த நெருக்கமோ, இந்தியாவுக்கு அது எந்த வகையில் பயனளித்துவந்தது என்பதோ தெரியவில்லை. மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து எழுதும் பணியில் இறங்கிய பிறகு – அதுவும் அதுவரை அறிஞர்களுக்குக் கிட்டியிராத சில ஆவணங்கள் கிடைக்கத் தொடங்கிய பிறகு – நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் மகாதேவ் தேசாய் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பு புரியவந்தது. காந்திஜியின் செயல்களுக்குப் பின்னால் மூளையாகவும் இதயமாகவும் அவர் செயல்பட்டிருப்பது தெளிவானது. என்னுடைய புத்தகம் வெளியான பிறகு, அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய உறவினர் சுப்பு அதை வாசித்துவிட்டு எனக்குக் கடிதம் எழுதினார். “உன்னுடைய புத்தகத்தை வாசிக்கும் வரை மகாதேவ் தேசாய் குறித்தோ அவருடைய முக்கியத்துவம் குறித்தோ எனக்கு எதுவுமே தெரியாது” என்று குறிப்பிட்டிருந்தார். “மகாதேவ் தேசாய் இல்லாமல் ‘இந்திய’ காந்தி இருந்திருக்கவே மாட்டார்; நாடு முழுக்க பல தேசத் தியாகிகளுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன; ஏன் மகாதேவ் தேசாய்க்கு ஒரு சிலைகூட வைக்கப்படவில்லை என்பது புரியவில்லை” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சுப்பு.

தேசாயின் வரலாறு எழுதப்படட்டும்

மிகவும் போற்றத்தக்க மகாதேவ் தேசாய்க்கு சிலை வைக்கப் பணம் திரட்டுவதும், ஏற்பாடுகளைச் செய்வதும் கடினமான செயலாகக்கூட இருக்கலாம், குஜராத்தி – ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமையுள்ள இளம் குஜராத்திய இளைஞர்கள் இனியாவது அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆய்வுசெய்து விரிவாக எழுத வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னால் மகாதேவ் தேசாயின் மகன் நாராயண், தன்னுடைய தந்தையின் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். படிக்கும்போதே கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உணர்ச்சிப் பெருக்காகவும் பல தகவல்களை உள்ளடக்கியதாகவும் அந்த நூல் இருக்கிறது. அவருடைய குடும்பத்தைச் சாராத, வரலாற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் நல்ல அறிஞர் ஒருவர் மகாதேவ் தேசாயின் வாழ்க்கை வரலாற்று நூலை இப்போது விரிவாக எழுதுவது அவசியம். அவரைப் பற்றிய தரவுகள் இப்போது ஏராளமாகக் கிடைக்கின்றன. காந்திஜியைப் போலத்தான் மகாதேவ் தேசாயும் குறுகிய எண்ணம் ஏதுமில்லாதவர், மக்களை இனம் பிரித்துப் பார்க்காதவர். மகளிரை மிகவும் மதித்தவர் அவர்களுக்கு நல்ல நண்பராக விளங்கியவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் குறித்தும் நேரடியாகவே சுற்றிப்பார்த்து நன்கு தெரிந்துகொண்டவர். பெரும்பான்மையினவாதத்தை வெறுத்த – எதிர்த்த இந்து அவர். உலகின் பிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தவர். ஆற்றல்மிக்க, சரளமான நடையில் எழுதிய எழுத்தாளர். நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர். காந்திக்காகவும் காந்தியுடனும் சேர்ந்து அவர் செய்த தொண்டுகள் நாட்டின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இடம்பெறத்தக்க அளவு முக்கியமானவை. வாழ்க்கை வரலாறு நூல் எழுதுவதற்கு அவர் அற்புதமான கருப்பொருள்.

காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுத நேர்ந்தபோது மகாதேவ் தேசாய் குறித்தும் எழுத வேண்டிய அளவுக்கு முக்கியமானவராகத் திகழ்ந்தார். அவருக்கு இருந்த கடிதத் தொடர்புகளை ஆராய்ந்தபோது பலதரப்பட்ட அறிஞர்களுடனும் பிரமுகர்களுடனும் அவருக்கு இருந்த அசாதாரணமான தொடர்பு புலனாகியது. ஆங்கிலமயமாகிவிட்ட காஷ்மீர்க்காரரான ஜவாஹர்லால் நேரு, இந்தியராகிவிட்ட ஆங்கிலேயப் பெண் மீரா பென், தமிழ்நாட்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, வைஸ்ராயின் தனிச்செயலராக இருந்த கில்பர்ட் லெய்த்வைட் அவர்களில் சிலர். அந்த ஆய்வின்போது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு புகைப்படம் – சேவா கிராமத்தில் 1936இல் காலை நேர நடைப்பயிற்சியின்போது காந்தியுடன் எல்லை காந்தி கான் அப்துல் கஃபார்கானும் மகாதேவ் தேசாயும் கதராடை அணிந்து சேர்ந்துநிற்பது. நெடிது வளர்ந்த கான் அப்துல் கபார்கான், தன்னுடைய கைகளைக் குட்டையான உருவம் கொண்ட, புன்னகை தவழும் மகாதேவ் தேசாயின் தோளைச் சுற்றிவளைத்து அன்போடு பிடித்துக்கொண்டிருக்கிறார்.

தேச விடுதலைகாக்கப் போராடிய ஆண்களையும் பெண்களையும் நினைவுகூர்வோம் – பி.ஆர்.அம்பேத்கர், அபுல்கலாம் ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ், கமலாதேவி சட்டோபாத்யாய, பிஸ்ரா முண்டா, தாதாபாய் நவ்ரோஜி, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பகத் சிங் இன்னும் பலர். இந்தப் பட்டியலில் இடம் பெறத்தக்க அளவுக்குப் போற்றுதலுக்குரியவரும் கண்ணியமிக்கவரும்தான் மகாதேவ் தேசாய். சுயநலமின்றியும் தியாக உணர்வோடும் அவர் போராடிய தேச விடுதலை நாள், அவர் இறந்த ஐந்து ஆண்டுகள் கழித்து – அதே நாளில் கிடைத்ததுதான் தனிச்சிறப்பு.

தமிழில்: சாரி

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

அருமையும் பெருமையும் மிக்க மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வாழ்ந்து இருந்த இடம் தெரியாமல் சென்றிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் மகாத்மியத்துக்குப் பின்னால் இருந்த மனிதர்களின் வரலாறு சரிவர ஆவணப்படுத்தப் படவில்லை. SS Gill அவர்கள் எழுதியுள்ள GANDHI: A SUBLIME FAILURE என்ற நூலில் காந்தியார் தனது ஆளுமையின் பல பரிமாணங்களில் தோற்றவர் என்றாலும் அவரது தோல்விகள் மிக மேன்மையானவை என்றும், வரலாற்றுப் பிரக்ஞையுடன் எதிர்காலம் குறித்து அவர் கண்ட உதோப்பியன் (Utopian) கனவுகள் நிராசையாகப் போனதால் விளைந்தவை என்றும் குறிப்பிடுகிறார். காந்தியாரின் அந்த கனவுகளைப் பகிர்ந்து கொண்டவராக மகாதேவ் தேசாய் இருந்திருக்கிறார். ஒரு மாபெரும் கனவைப் பகிர்ந்து கொண்டவர்களாக கஸ்தூரிபா அன்னை, மீரா பென், காஃபர் கான் உள்ளிட்டோர் இருந்தனர். அந்தக் கூட்டுக் கனவின் பங்காளிகள் அனைவரைப் பற்றியும் முழுமையான சரித்திரங்கள் எழுதப்பட வேண்டும். குஹாவின் கட்டுரை மன எழுச்சியையும் நெகிழ்வையும் தரக் கூடியது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

S.Sivaprakasam   3 years ago

அருமையான கட்டுரை மகாதேவ் தேசாய் அவர்களைப் பற்றி இதுவரை தெரிந்திராத பல விஷயங்கள் தற்போது தெரியவந்தது மகாத்மாவின் வலதுகரமாக திகழ்ந்து வந்தது இதுவரை தெரியாமல் போனது மனதுக்கு வருத்தம் இருந்தாலும் தற்போது தெரியவந்தது மிக மிக மகிழ்ச்சி மிக்க நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சுஷில் ஆரோன்நகரமாசென்னை உணவுத் திருவிழாஆர்.எஸ்.சோதிமீன் வளம்கிராமமாகணினிமயமாக்கல்புதுமைவெண்முரசுபொதுத் துறைப் பொன்னுலகின் சிற்பிடாடா நிறுவனம்பீமா கோரெகவோன்உத்திஎந்தச் சட்டம்பெருநகரங்கள்பருக்கைக் கண்அகாலி தளத்தின் பல்தேவ் சிங்பல்லுயிர் காக்கும் உறுப்பு தானம்!கடிதங்கள்வர்ண ஒழுங்குபத்திரிகையாளர்கள்கலாபினி கோம்காளிஈரோடுநீரிழிவுகேள்வி நீங்கள் - பதில் சமஸ்நோர்வேபூர்வாஞ்சல்மாரி செல்வராஜ்கேசவானந்த பாரதி தீர்ப்புதூத்துக்குடி வெள்ளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!