கட்டுரை, அரசியல், இலக்கியம் 10 நிமிட வாசிப்பு

நயன்தாரா: இந்திய மனச்சாட்சி

ராமச்சந்திர குஹா
11 May 2022, 5:00 am
1

மெரிக்காவின் வெல்லெஸ்லி கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு தில்லிக்குத் திரும்பிய அந்த இருபது வயது இளம் பெண் மாஸ்கோ நகரிலிருந்த தன்னுடைய தாய்க்கு 1948 பிப்ரவரி முதல் தேதி உணர்ச்சிமிக்கக் கடிதம் ஒன்றை எழுதினார். கணவரை இழந்த அவருடைய தாய், சோவியத் ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராக மாஸ்கோ நகரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்கிற தகவலைக் கேட்டதும் பதறித் துடித்த அந்த இளம் பெண், தில்லியில் இருந்த பிர்லா இல்லத்துக்கு ஜனவரி 30 மாலையே ஓடினார்.

பாபுவின் உடல் ரத்தம் தோய்ந்த துணியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டார். ஏதாவது அதிசயம் நடக்கும், பாபு உயிர் பிழைத்துவிடுவார் என அப்போதும்கூட நம்பிக்கொண்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார். காந்தி சாதாரணமானவர் அல்ல; நடக்காது என்று நினைத்த அதிசயங்களையெல்லாம் சமூக – அரசியல் தளங்களில் தன்னுடைய வாய்மையாலும் அகிம்சையாலும் நடத்திக் காட்டியவர். எனவே அதிசயம் நிகழ்ந்து அவர் பிழைத்துவிடுவார் என்று அந்த இளம்பெண் நம்பினார். 

படுகொலை நடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு தாய்க்குக் கடிதம் எழுதிய அந்த இளம் பெண் அதில் குறிப்பிடுகிறார்: ‘பாபுவைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப நெஞ்சில் அலைமோதிக்கொண்டிருந்தது. என்ன செய்தும் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. கொலைகாரர் பிடிபட்டுவிட்டார், ஆனால் கொலைக்குப் பின்னால் வேறு சிலரும் இருந்திருக்க வேண்டும். எந்த விதமான பைத்தியக்காரத்தனம் இந்த நாட்டை இப்படிப் பிடித்து ஆட்டுகிறது, பாபு இப்போது இல்லையே, இனி இதை எந்த விதமாகத் தடுத்து நிறுத்துவது?’

இப்படிக் கடிதம் எழுதும்போதே, இருபது வயதான அந்தப் பெண் தன்னை நிதானப்படுத்திக்கொண்டுவிட்டார், துயரமும் கவலையும் மனதில் உறுதியான ஒரு சபதம் உருவாகக் காரணங்களாகிவிட்டன. ‘தன்னுடைய மரணத்துக்காக இப்படித் தொடர்ந்து துக்கப்படுவதை பாபு விரும்பமாட்டார். அவருடைய பூத உடல் இருப்பதோ, மறைவதோ முக்கியமல்ல என்றே அவர் கருதியிருப்பார். அதற்குப் பதிலாக எந்தவிதமான லட்சியங்களோடு வாழ்ந்தோரோ, எவற்றையெல்லாம் சொன்னாரோ அவற்றுக்கே நாம் இப்போது முக்கியத்துவம் தர வேண்டும் இத்தனை காலம் நம்மோடு - நமக்காகவே வாழ்ந்த அவரால் நம்மைவிட்டுப் பிரியவே முடியாது.’

அந்தக் கடிதம் நம்முடைய சிந்தனைகளைக் கிளறிவிட்டுவிட்டுப் பின்வருமாறு முடிகிறது. ‘நாடு முழுவதும் பரவிவிட்ட இந்த மதியீனம் (மதவெறி உணர்வு) எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்து, இதை வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்கிற உறுதி நமக்குள் வளர வேண்டும் என்றே கடவுள் விரும்புவார். இனி என்ன செய்ய வேண்டும் என்று - இதற்கு முன்னால் கேட்டதைப் போல - பாபுவிடம் போய் கேட்க முடியாது, நாமே நம்முடைய அந்தராத்மாவைக் கேட்டுக்கொள்ள வேண்டும், நமக்கான பிரார்த்தனைகளைத் தொடர வேண்டும், நாமே நமக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.’

நவீன இந்திய இலக்கியம், நவீன இந்திய வரலாற்று மாணவர்கள், இந்தக் கடிதத்தை எழுதியவர் யார், இது யாருக்கு எழுதப்பட்டது என்பதை இந்நேரம் அடையாளம் கண்டிருப்பார்கள். இந்தக் கடிதத்தை எழுதியவர் நயன்தாரா சேகல் (பண்டிட்) பின்னாளில் மிகப் பெரிய நாவலாசிரியராகப் பாராட்டுகள் பெற்றவர், விஜயலட்சுமி பண்டிட் (நேரு) இந்திய தேசியர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன் ஆகிய பெரு நகரங்களில் இந்தியத் தூதராக மிகச் சிறப்பாகப் பணியாற்றி பெருமை சேர்த்தவர்.

விஜயலட்சுமி பண்டிட் பொதுச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு வசித்த டேராடூன் நகரில்தான் நான் வளர்ந்தேன். அந்தக் காலத்தில் நான் அவரைச் சந்தித்ததே இல்லை. எங்களிருவரின் சமூக இருப்பிடங்களும் வெவ்வேறானவை. ஒரு காலத்தில் என்னுடைய பெற்றோர் வசித்த பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில்தான் விஜயலட்சுமி வசித்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது 1977 மார்ச்சில் அரசியல் கூட்டமொன்றில் அவருடைய பேச்சை அங்கே கேட்டேன். நாட்டில் காங்கிரஸ் அரசு அறிவித்த நெருக்கடி கால அறிவிப்பு முடிவுக்கு வந்திருந்தது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனதா அரசுக்கு தன்னுடைய ஆசியை வழங்க விஜயலட்சுமி வந்திருந்தார். தன்னுடைய மாமன் மகளான இந்திரா காந்தியைவிட, அவருடைய குடும்ப உறவைவிட நாட்டின் அரசியல் சட்டமே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

என்னுடைய பெற்றோர் 1984இல் டேராடூன் நகரிலிருந்து குடிபெயர்ந்துவிட்டனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் அந்த நகருக்குச் சென்றேன். இந்தியாவின் பெட்ரோ ரசாயனத் துறையை வளர்த்ததில் ஒருவரான லவ்ராஜ் குமார் என்ற தொழில்நுட்ப நிபுணருடன் தில்லியிலிருந்து டேராடூனுக்குக் காரில் சென்றேன். போகும் வழியில் ரூர்க்கி என்ற இடத்தில் போலாரிஸ் என்ற ஹோட்டலில் காபி சாப்பிடச் சென்றோம். அந்த இடத்தில் மிகவும் வசீகரமான – அறுபதுகளின் தொடக்கத்திலிருந்த - ஒரு மாதுவைச் சந்தித்தோம். அவர்தான் நயன்தாரா சேகல். மும்பையில் வசித்தபோதே அவருக்கு அறிமுகமாயிருந்த லவ்ராஜ் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். சேகல் இப்போது டேராடூனிலேயே குடியேறிவிட்டார், தில்லிக்குச் சென்றுகொண்டிருக்கிறார், எங்களைப் போலவே காபி குடிப்பதற்காக அந்த ஹோட்டலுக்கு வந்தார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

நாவல்களைத் தவிர சில முக்கியமான ஆக்கங்களையும் நயன்தாரா படைத்திருக்கிறார். உயர் வகுப்பு தேசியர்களின் இல்லக் குழந்தையாக வளர்ந்த அனுபவம் பற்றிய நினைவு நூல் அதில் குறிப்பிடத்தக்கது. ‘சிறையும் சாக்லேட் கேக்கும்’ (Prison and Chocolate Cake) என்று அதை அழைக்கலாம். நயன்தாரா அவருடைய இரண்டாவது கணவர் இ.என்.மங்கத் ராய் எழுதிக்கொண்ட கடிதங்களின் தொகுப்பு அந்த நூல். இந்திரா காந்தியின் அரசியல் பாணி பற்றி அதில் நிறையத் தகவல்கள் இருக்கின்றன, அவை எனக்குப் புத்தகம் எழுதப் பேருதவியாக அமைந்தன.

‘நயன்தாரா சேகல்’ என்கிற எழுத்தாளரையும் அவருக்குள்ளிருக்கும் ‘தாரா’ எனும் மனுஷியையும் மிகவும் மதிக்கிறேன். அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. இலக்கிய மாநாடுகளிலும் டேராடூனுக்குச் சென்ற போதெல்லாமும் அவரைச் சந்தித்தேன். நாட்டின் நடப்பு விஷயங்கள் குறித்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். தொலைபேசியிலும் நேரம் கிடைக்கும்போது பேசுவோம். ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும் அவர் மீதான அன்பும் மரியாதையும் எனக்குள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. நான் பார்த்தவர்களிலயே கனிவும் துணிச்சலும் அதிகமாக ஒருசேரக் கொண்டவர் அவர். வலிமையான சுயமரியாதை உணர்வும், தன்னைவிட வறியவர்கள் மீது ஆழ்ந்த இரக்கமும் கொண்டவர்.

எங்களுடைய நட்பின்போது அறிவார்ந்த கருத்துகள் மூலம் அவர் எனக்களித்தவை ஏராளம், நானோ பழங்கால ஆவணக் காப்பகங்களில் அவருடைய தந்தையார் ரஞ்சித் சீதாராம் பண்டிட் குறித்துப் படித்தவற்றில் நறுமணம் வீசும் சில நினைவுகளையே பரிசாக அளித்தேன். மிகச் சிறந்த அறிஞரும் தேசபக்தருமான அவர் நயன்தாராவுக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது இயற்கை எய்திவிட்டார். காங்கிரஸ்காரர்களில் பெரும்பாலானவர்கள் பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தபோது, ரஞ்சித் பண்டிட் அவரை மிகவும் போற்றினார். அவருடன் பேசவும் நேரம் கேட்பார். இருவரும் சந்தித்தபோது ஆங்கிலத்தில் உரையாடுவதைவிட தங்களுடைய மண்ணின் மொழியான மராட்டியிலேயே அதிகம் பேசியிருப்பார்கள் என்று ஊகிக்கிறேன்.

மீரட் சதி வழக்கில் சிக்கிய கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக வழக்காட நிதி திரட்டுமாறு தன்னுடைய மாமனார் மோதிலால் நேரு, மைத்துனர் ஜவாஹர்லால் நேரு ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ரஞ்சித் பண்டிட். அந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்களில் ஒருவரான முசாஃபர் அகமது, ‘ரஞ்சித் பண்டிட்டுக்கு பரந்த கண்ணோட்டம், இளகிய மனது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வர்ணனை ரஞ்சித் பண்டிட்டின் மகள் நயன்தாராவுக்கும் அப்படியே பொருந்துகிறது. வலதுசாரிகளால் நாட்டில் அதிகரித்துவரும் வெறுப்புணர்வுக் குற்றங்களைக் கண்டிக்க, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை அரசிடமே திரும்ப ஒப்படைத்தார் நயன்தாரா. ‘சமூக – கலாச்சார தளத்தில் இந்தியா பின்னோக்கிச் செல்கிறது’ என்று வருத்தமுடன் குறிப்பிட்டார். ‘நம்முடைய மிகப் பெரிய பாரம்பரியமான கலாச்சாரப் பன்மைத்துவத்தையும் பரந்த மனதுடனான விவாதங்களையும் நிராகரித்துவிட்டு, ஹிந்துத்துவா என்கிற பெயரில் குறுகிய கண்ணோட்டத்தில் ஆழ்கிறது’ என்றார். ‘எப்படிப் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவரான நம்முடைய பிரதமர் (மோடி), எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும்போதும் மவுனம் காக்கிறார்’ என்று சுட்டிக்காட்டினார். ‘அவருடைய சித்தாந்தத்தை ஆதரிக்கும் தீங்காளர்களை விரோதித்துக்கொள்ள மாட்டார் (மோடி) என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது’ என்றார்.

இப்படி எதிர்க் கருத்து சொன்னதற்காக, பாஜகவின் பூத பரிவாரங்கள் சமூக வலைதளங்களில் அவரைக் குதறி எடுத்தன. சந்தர்ப்பவாத பத்திரிகையாளர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். ‘நெருக்கடிநிலையைக் கொண்டுவந்து அடிப்படை உரிமைகளையே பறித்த இந்திரா காந்தியின் அத்தை மகளும் நேருஜியின் தங்கை மகளுமான நயன்தாராவின் இந்தக் கண்டனங்கள் செல்லாது’ என்று அவை சாடின. உண்மை என்னவென்றால், 1970களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கு தலைகாட்டத் தொடங்கிய வேளையிலேயே அதை வன்மையாகக் கண்டித்தவர் நயன்தாரா. அதற்காக தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டார். இந்து – முஸ்லிம் ஒற்றுமையில் தன்னுடைய அம்மான் ஜவாஹர்லால் நேருவின் கொள்கைகளின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தார், உலகளாவிய அவருடைய பார்வைக்கு காந்தி உருவாக்கிய பாரம்பரியத்தின் செல்வாக்கு முக்கிய காரணமாக இருந்தது.

டேராடூனுக்குக் கடைசி முறையாகச் சென்றபோது, ராஜ்புத் சாலையில் நயன்தாராவுக்காக அவருடைய அம்மா கட்டிய வீட்டில் அவரைச் சந்தித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் கடுமையான புற்றுநோய்க்கு அவர் ஆட்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு புனைகதைகளை எழுதுகிறார். இந்துத்துவ மத வெறியால் இந்தியக் குடியரசுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்துத் தொடர்ந்து பேசினார். அவரிடம் விடைபெறும்போது, இந்தத் தள்ளாத வயதில் தனியாக வாழ்கிறாரே என்று அவருடைய பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டது.

புற்றுநோயிலிருந்து மீண்டவர், வயதில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருக்கிறார். வெறிச்சோடிப்போன அந்த வீதி இரவில் இருளோ என்று கிடக்கிறது. இப்போதுள்ள அரசோ பழிவாங்கும் அரசு மட்டுமல்ல, இரக்கமற்ற அரசும்கூட. “உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள் தாரா” என்று புறப்படும்போது சொன்னேன். “உடல் நலமின்றி படுக்கக்கூட எனக்கு நேரம் கிடையாது, சுகக் கேடாக இருப்பதற்கு இது உகந்த நேரமும் அல்ல” என்று பதிலளித்தார். 

இம்மாதம் 10ஆம் நாள் அவருக்கு 95 வயதாகிறது. மகிழ்ச்சியான பிறந்த நாள் என்று வாழ்த்த இது உகந்த காலமும் அல்ல. எனவே அவர் என்னவாக இருக்கிறாரோ, அதற்காக அவருக்கு நன்றி செலுத்திவிடுகிறேன். எழுத்தாளராகவும் குடிமகளாகவும் இந்தக் குடியரசின் உயரிய விழுமியங்களுக்கு உதாரணராக இருக்கிறார். காந்தியின் வாழ்வுக்கும் மரணத்துக்கும் சாட்சியாக இருந்தவர்.

அவருடைய வாழ்நாளில் அவர் செய்தவற்றுக்கெல்லாம் காரணம், காந்திஜியிடமிருந்து அவர் பெற்ற உத்வேகம்தான். காந்திஜியை நான் அறிஞராகத்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறேன், ஆவணக் காப்பகங்களில் உள்ளவற்றில் அவருடைய ஆக்கங்களை வாசித்திருக்கிறேன். நயன்தாரா சேகல் போன்ற இந்தியர்களுடனான தனிப்பட்ட அறிமுகமும் நட்பும்தான் நான் செய்வதற்கும் எழுதுவதற்கும் பெரும் ஊக்க சக்திகளாக இருக்கின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   3 years ago

மிக அருமையான தேர்வு. ராமச்சந்திர குஹா எழுதும் நபர் அறிமுகம் மட்டுமே தனித் தொகுப்பாகும் உள்ளடக்கம் கொண்டதை ஆசிரியர் கவனித்து அடுத்த புத்தகக் கண்காட்சியில் பரிசீலனை செய்யலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மாநிலத் தலைகள்thulsi goudaதென் இந்தியர் கடமைவேங்கைவயல்எஸ்.சந்திரசேகர் கட்டுரைவிஷ்வேஷ் சுந்தர் கட்டுரைபுனித மரியாள் ஆலயம்வேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?நீராற்றுகல்வெட்டுகள்மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்செயற்கை நுண்ணறிவுதம்பதிமு.க.ஸ்டாலின் கட்டுரைஸ்ரீநிவாசன்சோனியா காந்தி கட்டுரைமேவானிதமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டம்கருத்துரிமை தினம்!கல்வியாளர்இஸ்லாத்துக்கு மறுப்புகவிஞர் விடுதலை சிகப்பிகோடையில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்வாக்குப் பெட்டிஉலக வர்த்தகம்படுகொலைகள்தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5நோட்டோஇசை நிகழ்ச்சிமோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!