கட்டுரை, கலை, வரலாறு, ஆளுமைகள், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு
புகழப்பட வேண்டிய மேதைகள்!
வாழ்க்கை வரலாற்று நூல்களில் சுவாரசியமான தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது; ஒரு துறையின் மிகச் சிறந்த மேதையை அல்லது நிபுணரை, அதே துறையைச் சேர்ந்த இன்னொரு மேதை அல்லது நிபுணர் சிலாகித்து அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதுவது. இதற்கு உதாரணங்களாக நான் படித்த புத்தகங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். ஜான் மேனார்டு கெய்ன்ஸ் பற்றி ராய் ஹேரட் எழுதியது; கிளாரி கிரிம்மெட் பற்றி ஆஷ்லே மாலட் எழுதியது; ரிச்சர்ட் எவன்ஸ் பற்றி எரிக் ஹாப்ஸ்பாம் எழுதியது; வி.எஸ்.நைபால் பற்றி பால் த்ரூ எழுதியது.
எழுத எடுத்துக்கொண்ட பொருள், விவரிப்பு, இலக்கியத் தரம் ஆகியவற்றில் இவை ஒவ்வொன்றுமே வெவ்வேறானவை. ஆனால், மூன்று அம்சங்கள் இவற்றில் பொதுவானவை.
மூன்று அம்சங்கள்
முதலாவது, இன்னொரு மேதையைப் பற்றி எழுதியவர் வயதில் இளையவர்; கெய்ன்ஸைவிட ஹேரட் 18 ஆண்டுகள் இளையவர்; கிரிம்மெட்டைவிட மாலட் 44 ஆண்டுகள் இளையவர்; ஹாப்ஸ்பாமைவிட எவன்ஸ் 30 ஆண்டுகள் இளையவர்; நைபாலைவிட பால் த்ரூ 9 ஆண்டுகள் இளையவர்.
இரண்டாவதாக, யாரைப் பற்றி எழுதினரோ அவரோடு தனிப்பட்ட முறையில் அறிமுகமாகி இருந்தனர். கெய்ன்ஸுடன் ஹேரட்டும் நைபாலுடன் த்ரூவும் மிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் நட்புகொண்டிருந்தனர். கிரிம்மெட் -மாலட், எவன்ஸ் - ஹாப்ஸ்பாம் இடையே திடீரென்று ஏற்பட்ட சந்திப்பு சிறிது காலத்துக்கே நீடித்தது.
மூன்றாவதும் முக்கியமானதுமான அம்சம், மேதையைப் பற்றி எழுதியவரும் அந்தந்தத் துறையில் நிபுணர்கள்தான் என்றாலும் அதிகம் கொண்டாடப்படாதவர்; ஹேரட் நன்கு பிரபலமான பிரிட்டிஷ் பொருளியல் அறிஞர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே அதிக காலம் பணியாற்றியவர்; கெய்ன்ஸ் கேம்பிரிட்ஜில் பணியாற்றினார், இருபதாவது நூற்றாண்டின் செல்வாக்கு மிக்கப் பொருளியல் நிபுணர். மேலட் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடிய ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளர், மிதமான வெற்றிகளைப் பெற்றவர். கிரிம்மெட் பந்தை மணிக்கட்டை அசைப்பதன் மூலமே சுழலவைப்பதில் உலகின் முதலாவது வெற்றி வீரர்.
அவருக்குப் பிறகு பில் ஓரெலி, ரிச்சி பீனாட் – எல்லோருக்கும் மேலாக ஷேன் வார்ன் என்று பலர் அவரது பாணியைப் பின்பற்றினர். எவன்ஸ் எழுதிய வரலாற்றுப் புத்தகங்கள் நன்கு விற்பனையாயின, இருபதாவது நூற்றாண்டு ஜெர்மனி குறித்துப் பல நூல்கள் எழுதினார். ஹாப்ஸ்பாம் உலக அளவில் புகழ்பெற்றவர், வரலாற்றுத் துறையில் நிபுணத்துவத்தைப் பெற்று உலகின் பல நாடுகளில் ஆய்வுகளுக்கு ஊக்கசக்தியாகத் திகழ்ந்தவர். பால் த்ரூ ஏராளமான நாவல்களை எழுதினார், சுற்றுலாப்பயணக் கட்டுரைகள் மூலமும் பிரபலமானவர். நிறையப் பணமும் சம்பாதித்தார். நைபால் இதே வகையில் எழுதி, ஒரு எழுத்தாளர் அடையக்கூடிய உச்சமான இலக்கியத்துக்கான நோபல் பரிசையே பெற்றார்.
இந்த நான்கு உதாரணங்களிலும் குறிப்பிடத்தக்கது எதுவென்றால், தமது துறையின் மேதைக்கு இந்த நால்வரும் புத்தகம் எழுதி புகழஞ்சலி செலுத்தியதுதான்.
இடம்பெற்ற இந்தியா…
இந்த வகை எழுத்தில் இந்தியர்களும் இடம்பெற்றுவிட்டனர் என்பதை பெருமகிழ்ச்சியோடு கூற விழைகிறேன். பத்திரிகைகளில் கருத்துப்படம் வரையும் இ.பி.உன்னி, இன்றளவும் புகழப்படும் ஆர்.கே.லட்சுமணைப் பற்றி எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாற்று நூல் அத்தகையது. உன்னியும் மிகவும் திறமைசாலி, வெற்றிபெற்றவர். லட்சுமணை சந்தித்தாரா உன்னி என்று தெரியவில்லை. ஆனால், தன்னுடைய துறையில் மூத்த சகாவை மிகச் சிறப்பாக புத்தகம் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆர்.கே.லட்சுமண் மைசூரு நகரில் பிறந்து வளர்ந்தவர். அவர் நினைவு தெரிந்து முதலில் வரைந்த ஓவியம், பள்ளிக்கூட ஆசிரியரான அவருடைய தந்தையைத்தான், அதையும் வீட்டுத் தரையில்தான் வரைந்திருக்கிறார். அன்றைய பம்பாயில் மிகவும் பிரபலமாகி இருந்த ஜேஜே கலைக்கூடக் கல்லூரியில் சேர்ந்து படிக்க லட்சுமண் மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறார்.
ஆனால், அங்கே சேர்த்துக்கொள்வதற்கு முன்னால் அவர்கள் வைத்த தேர்வில், அவர் தோல்வியடைந்தார். மைசூரு திரும்பி பி.ஏ. இளங்கலை பட்ட வகுப்பு படித்து முடித்தார். ஓய்வு நேரங்களில் மைசூரு நகரின் வெவ்வேறு அடையாளச் சின்னங்களை நோட்டுப் புத்தகத்தில் ஓவியமாக வரைந்துகொள்வார். தினசரிகளிலும் பருவ இதழ்களிலும் வரும் கேலிச்சித்திரங்களை ஊன்றிக் கவனிப்பார். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் லோ, லண்டனிலிருந்து வெளியாகும் ‘ஈவினிங் ஸ்டேண்டர்ட்’ என்ற நாளிதழில் கார்ட்டூன்கள் வரைவார். அதை அன்றைய ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அப்படியே மறுபிரசுரம் செய்யும்.
திருவாளர் பொதுஜனம்
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, மும்பை ஜேஜே கலைக் கல்லூரியின் நிகழ்ச்சிக்கு ஆர்.கே.லட்சுமணை தலைமை விருந்தினராக அழைத்திருந்தனர். “இதே கல்லூரியில் எனக்கும் இடம் கிடைத்து படித்திருந்தால் ஏதேனும் ஒரு விளம்பர நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும் கலை இயக்குநராக வேலை பார்த்து நிறைய சம்பாதித்திருப்பேன், ஆனால் நாடு முழுக்கப் பிரபலமாகி இருக்க மாட்டேன்” என்று லட்சுமண் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
லட்சுமணிடம் திறமை இல்லை என்று கூறி அவரை நிராகரித்ததன் மூலம் வரலாற்றில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தவிருக்கும் ஒரு செயலைச் செய்திருக்கிறது ஜேஜே கலைக் கல்லூரி; ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அவர் தகுதியில்லாதவர் என்று அன்றைக்கு முடிவுசெய்த கலையாசிரியர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்!
பம்பாயில் ‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ என்ற பத்திரிகையில் 1947ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமண். நாடு சுதந்திரம் பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் இது நிகழ்ந்தது. அதற்குப் பிறகு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் சேர்ந்து எஞ்சிய காலம் முழுவதும் அங்கேயே தொடர்ந்தார். லட்சுமண் எப்படி நேர்த்தியாக கருத்துச் சித்திரங்களை வரைவார் என்று உன்னி மிக அழகாக விவரிக்கிறார். லட்சுமண் வரையும் ஓவியங்களில் மை அப்பியோ, கறை போலவோ இருக்காது. தூரிகையை அவ்வளவு லாகவமாகக் கையாண்டிருப்பார்.
அச்சிடும்போது செய்தித்தாளில் அது மிக அழகாகக் காட்சியளிக்கும். அன்றாட அரசியலையும் சமூக வாழ்க்கையையும் கேலிசெய்யும் விதத்தில் அவர் தேர்ந்தெடுத்த ஒரு நடைச்சித்திரம்தான் ‘திருவாளர் பொதுஜனம்.’ அன்றைய பெரும்பாலான இந்தியர்களைப் போல கீழ்ப்பாய்ச்சி கட்டிய எட்டு முழம் வேட்டி, கட்டம்போட்ட கோட், கண்ணாடி, அப்பாவித்தனமான முகம் அவருடைய அடையாளம். பெரும்பாலான கார்ட்டூன்களில் அவர் எதுவும் பேசாமல் முகபாவம் மூலமே எதிர்வினையாற்றிவிடுவார். இந்தியர்களின் வாழ்க்கையில் எதிர்ப்படும் சிக்கல்களையும் தருமசங்கடங்களையும் வெகு அழகாக வெளிப்படுத்துவார் லட்சுமண்.
லக்சுமணும் சங்கரும்
ஆர்.கே.லட்சுமணையும் அவருக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கேரளீயரான கே.சங்கர் பிள்ளையையும் ஒப்பிட்டு ரசமான அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார் உன்னி. இருவரும் தென்னிந்தியாவில் சமஸ்தானங்களாக இருந்த ராஜ்யங்களிலிருந்து வந்தவர்கள். இருவருமே மேல் சாதி இந்துக்கள். இருவருமே ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள், அவர்கள் படித்த கல்லூரிகள், நல்ல நூலகங்களுடன் இணைக்கப்பட்டவை.
இருவருமே இரு வெவ்வேறு விதமான கேலிச்சித்திரக்காரர்கள். “லட்சுமணின் ஓவியங்கள் மென்மையாகவும் நமுட்டுச் சிரிப்பு முதல் அகன்ற புன்னகை வரை பலவிதமான பாவங்களை வாசகர்களுடைய முகங்களில் ஏற்படுத்தும்; சங்கரின் கேலிச்சித்திரங்களோ வெடித்துச் சிரிக்க வைத்துவிடும்” என்கிறார் உன்னி. இருவருடைய கார்ட்டூன்களுக்கும் ரசிகன் என்ற வகையில், உன்னியுடன் இது பற்றி சண்டைக்குப் போகலாம் என்றிருக்கிறேன்! புத்தகத்தில் உன்னியே சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, லட்சுமணின் பல கேலிச்சித்திரங்கள் கூர்மையான அரசியல் விமர்சனங்களாகவே வெளிப்பட்டுள்ளன.
இருவருக்கும் உள்ள பெரிய வேறுபாடு எதுவென்றால் ஆர்.கே.சங்கரின் அரசியல் சித்தாந்தம் அவர் வரைந்த கார்ட்டூன்களிலும் தலைகாட்டிக்கொண்டே இருக்கும். அவர் காலனியாதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்த தேசியவாதி, சுதந்திரம் கிடைத்த பிறகு, சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்களைக் காங்கிரஸ் கைவிட்டுவருகிறது என்ற கோபம் சங்கரிடம் இருந்தது. லட்சுமண் எந்த அரசியல் கட்சிக்கும் நண்பனும் அல்ல எதிரியும் அல்ல. அதேசமயம், அரசியல் சார்பு இல்லாத அரசியல் விமர்சகர். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எந்தச் சித்தாந்தத்தைச் சேர்ந்த அரசியலராக இருந்தாலும் அவரைக் குத்திக்காட்ட அவர் தயங்கியதே இல்லை.
சங்கரைப் பின்பற்றி பலர் அவர் பாணியில் கார்ட்டூன்கள் வரைந்தனர், ஆனால் லட்சுமணுக்கு அப்படி வாரிசு ஏற்படவில்லை. லட்சுமண் தனக்கென்று சீட கோடிகளை உருவாக்கவுமில்லை, உருவாக்கியிருக்கவும் முடியாது. அவர் ஒப்புமையற்ற தனித்துவர். அவர் காலத்தில் வாழ்ந்தவர்களாலேயே அவரைப் போல வரைய முடிந்ததில்லை. ஒற்றை வரியில் மிகப் பெரிய செய்தியை அல்லது விமர்சனத்தைச் செய்துவிடும் சாமர்த்தியம் அவருடையது. அவர் மட்டும் ஜேஜே கலைக் கல்லூரியில் சேர்ந்து விளம்பரத் துறைக்குப் போயிருந்தால் நட்சத்திர எழுத்தாளராகி இருப்பார், கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பார்.
தனி மனப்போக்கு கொண்ட லட்சுமண் நகைச்சுவையை மட்டுமல்ல, வாழ்க்கையின் அபத்தங்களையும் சுட்டிக்காட்டியவர். அவருடைய மேதமையின் இதர அம்சங்களை விளக்கவும் முடியாது, ஆராயவும் இயலாது. அவரைப் போல இன்னொருவரால் படைக்கவும் முடியாது, அவரை அப்படியே நகலெடுக்கவும் முடியாது. கிரிக்கெட் உலகில் ஒரேயொரு கேரி சோபர்ஸ்தான் இருக்க முடியும், அதைப் போலவே ஒரேயொரு ஆர்.கே.லட்சுமண்தான் இருக்க முடியும்.
அரசியலர்களை அம்பலப்படுத்திய தூரிகை
லட்சுமண் காலத்து இந்தியாவில் 12 பேர் பிரதமர்களாகப் பதவி வகித்தனர், அவர்கள் அனைவரையும் அவர் கேலிசெய்திருக்கிறார். பிரதமர்கள்தான் என்றில்லை, அடுத்த நிலை அரசியலர்களையும் அவருடைய தூரிகை விட்டுவைத்ததில்லை. கட்சியின் அங்கமாகவே தொடக்கத்தில் இருந்த அத்வானி, பிறகு ரத யாத்திரை மூலம் விஸ்வரூபம் எடுத்த பிறகு அவருடைய உண்மையான உருவத்தைச் சித்திரங்களில் வெளிப்படுத்தியவர் ஆர்.கே.லட்சுமண். லட்சுமணின் கேலிச்சித்திரங்களில் இன்றளவும் அதிகம் ரசிக்கப்படுவது இந்திரா காந்தியை அவர் வரைந்தவைதான்.
இந்திரா காந்தியின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் அவர் ஓரிரு வார்த்தைகளில் அல்லது வார்த்தைகள் இல்லாமல் மிகச் சிறப்பாகச் சித்தரிப்பார். “இந்திரா காந்தியை வைத்து அவர் வரைந்த கேலிச்சித்திரங்களை நாள் – மாத - ஆண்டு வாரியாகத் தொகுத்தாலே அது இந்திராவின் அரசியல் வரலாற்றைச் சொல்லிவிடும்” என்கிறார் உன்னி.
அது முழுக்க முழுக்க உண்மைதான். கண்களை அகல விரித்துப் பார்க்கும் அரசியல் கற்றுக்குட்டியாக, பொருளாதாரம் என்கிற கண்ணிவெடி புதைக்கப்பட்ட பூமியில் நடனமாடும் தேவியாக, கட்சியின் மூத்த சகாக்கள் மீது கல்லெறியும் சாதாரண அரசியலராக, நீதி தேவதையைக் கேலிசெய்யும் விதமாக கையில் வாளோடு தோன்றும் தலைவியாக, பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இளைய மகன் சஞ்சய் காந்தியைக் குழந்தைக்கான தள்ளுவண்டியில் போட்டு ஊரைவிட்டு வெளியேறும் பாசமுள்ள அரசியல் தாயாக அவர் வரைந்தவை எல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.
அனைவரின் குரலான சித்திரங்கள்
ஆர்.கே.லட்சுமணுக்கு கர்மபூமியாக அமைந்துவிட்ட பம்பாயுடன் அவருக்கிருந்த உறவு பற்றியும் எழுதியிருக்கிறார் உன்னி. நகரங்களுடன் சேர்ந்து வளர்பவைக் கேலிச்சித்திரங்கள். மும்பை தன்னுடைய கேலிச்சித்திரக்காரருக்காக அனேக ஆண்டுகள் காத்திருந்தது. அன்றாடம் பல பிரச்சினைகளோடு மல்லுக்கட்டும் லட்சக்கணக்கான நகர வாசகர்களை எதிர்கொண்டார் லட்சுமண்.
நகரில் நிலவும் பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமே பிரச்சினையாகத் தெரியும் தனிப்பட்ட விஷயமல்ல, நகரமே இதில் திண்டாடுகிறது என்ற உண்மையை உணர்த்தி அவர்களைச் சிரிக்க வைத்து, பிரச்சினையின் சுமையைக் குறைத்தார் லட்சுமண். அதேசமயம், இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் தொலைதூர நகரமான தில்லியில் உட்கார்ந்திருக்கும் ஆட்சியாளர்கள்தான் என்று தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வந்தார். கார்ட்டூனில் வரும் பொதுஜனத்தில் தங்களையே பார்த்தார்கள் வாசகர்கள். நெரிசல் மிக்கதும், சந்தைக்கடை இரைச்சல் உள்ளதுமான மும்பை மாநகரில் காலந்தள்ளுவது எளிதல்ல என்றாலும் அதையே சவாலாக நினைத்து வாழ்கிறவர்கள்தான் நகரவாசிகள்.
உன்னியின் இந்தப் புத்தகத்தை வாசித்தவுடன் கார்ட்டூனிஸ்டுகளுக்கும் கடற்கரையோரங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். நவீன இந்தியாவின் கேலிச்சித்திரக்காரர்களில் பலர் கடற்கரையோர மாநிலமான கேரளத்திலிருந்து வந்தவர்கள். ஆர்.கே.சங்கர், அபு ஆப்ரஹாம், ஓ.வி.விஜயன், மஞ்சுளா பத்மநாபன், உன்னி. கோவாவிலிருந்து மரியோ மிராண்டா. இன்றைய இளம் கார்ட்டூனிஸ்டுகளில் சதீஷ் ஆச்சார்யா, கர்நாடகத்திலிருந்து வந்தவர்.
லட்சுமண் பிறந்த மைசூரு, கடலோரத்தில் இல்லாமல் மாநிலத்தின் உள்புறத்தில்தான் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக அவர் கடற்கரையோர பெருநகரமான மும்பையில் குடியேறிவிட்டார். லட்சுமணுக்கு ஆரம்பக்கால ஆதர்சமாகத் திகழ்ந்த டேவிட் லோ, நியூசிலாந்தின் உப்பங்கழி நகரத்தில் பிறந்திருந்தாலும் பின்னாளில் லண்டனில் குடியேறிவிட்டார். சொந்த ஊரிலேயே வாழ்ந்திருந்தால் அவர்களுக்கு சமூக - பொருளாதாரப் பன்மைத்துவம் குறித்த தெளிவும், உலக விவகாரங்கள் பற்றிய புரிதலும் கிடைத்திருக்காது. அவர்களிடம் கலாபூர்வமான ஆக்கத்திறனும் அறிவார்ந்த சிந்தனையும் வளர்ந்திருக்காது, கடலோரப் பெருநகரங்கள் இந்தப் பண்புகள் வளர நல்ல களமாக இருந்து அரவணைத்து ஊக்குவிக்கின்றன.
தொடர்புடைய கட்டுரைகள்
இயான் ஜேக்: தனித்துவமான ஆளுமை
மாதவ் காட்கில்: மக்களுக்கான சூழலியலாளர்
சாய்நாத்: இந்திய இதழியலின் மனசாட்சி
தமிழில்: வ.ரங்காசாரி
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.