எனக்கு நன்கு தெரிந்த இரண்டு இந்தியப் பெரியவர்கள் கடந்த மாதம் இயற்கை எய்தினர்; அவர்களில் ஒருவர் மும்பையிலும் மற்றொருவர் பெங்களூரிலும், இருவரும் தொண்ணூறு வயதைக் கடந்தவர்கள். முதலாமவர் உதய்பூர் சமஸ்தானத்தில் வளர்ந்தவர், இரண்டாமவர் அன்றைய மதறாஸ் மாகாண நகரங்களில் வளர்ந்தவர். இருவருமே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் வாலிபர்களானவர்கள். இருவருமே சிறு வயது முதலே அறிவியல், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே பொறியாளர்களாகப் பட்டம் பெற்றவர்கள்.
முதலில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிறகு பிரிட்டனிலும் படித்தனர். இருவருமே அவர்களுடைய கல்வித் தகுதிக்கு ஏதாவதொரு மேலை நாட்டில் தங்கியிருந்து கை நிறைய சம்பாதித்து மிகவும் சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், இருப்பினும் இருவருமே 1947க்குப் பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். சுதந்திர இந்தியாவில் வேலை பார்த்தனர் அப்போதும்கூட இந்தியாவிலிருந்த பெரிய பன்னாட்டுத் தொழில் நிறுவனத்திலோ இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட டாட்டா, கிர்லோஸ்கர் போன்ற நிறுவனங்களிலோ சேராமல், இந்திய அரசால் தொடங்கப்பட்ட அரசுத் துறை நிறுவனங்களில் சேர்ந்தனர். வருமானம் குறைவாக இருந்தாலும் கண்ணியமான வேலை என்று அவற்றைக் கருதினர்.
வாழ்ந்த காலத்தில் அவர்கள் இருவருக்குமே பரஸ்பரம் மற்றவரைப் பற்றி தெரியாது. அவ்விருவரையும் அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்களில் ஒருவர் என்னுடைய தந்தையின் தம்பி – அதாவது சித்தப்பா, இன்னொருவர் என்னுடைய நெருங்கிய நண்பரின் தந்தை. அதிசயப்படும்படியாக அவ்விருவரின் குடிப்பிறப்பு, வாழ்க்கைச் சூழல் ஒன்றுபோல இருந்ததாலும், வேலையும் ஒப்பிடும்படியாக விளங்கியதாலும் நாமிருக்கும் இன்றைய நம் நாட்டை உருவாக்கியவர்களில் அவர்களும் அடங்குவர் என்பதைச் சுட்டிக்காட்டவே எழுதுகிறேன்.
அர்ப்பணிப்பு…
இருவருமே பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும் கலாச்சாரரீதியாக நல்ல பாரம்பரியம் உள்ள குடும்பங்களில் பிறந்தனர். இருவருமே மேல் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வழங்கிய ஆங்கில மொழியை நன்கு கற்றவர்கள். தரமான கல்வி வழங்கும் பள்ளிக்கூடம், தரமான தொழில் கல்வி நிலையம், ஏராளமான வேலைவாய்ப்புகள் என்று எதுவுமே கிட்டாத லட்சக்கணக்கான இந்தியர்கள், அதிலும் பெண்களுக்குக் கிட்டாதவை - அவ்விருவருக்கும் கிட்டின. ஆனால், அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கல்வியையும் வேலைவாய்ப்பையும் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தாமல் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
சுதந்திரப் போராட்டம் ஊட்டியிருந்த தேசிய உணர்வு காரணமாகவும் காந்திஜி, நேருஜி போன்ற தலைவர்களின் தியாக வாழ்க்கையாலும் உந்துதல் பெற்ற இருவரும் தங்களுடைய கல்வியையும் திறமையையும் நாட்டின் வளர்ச்சிக்கான வேலைகளில் சேர்ந்து பயன்படுத்தினர்.
என்னுடைய நண்பரின் தந்தை உதய்பூரைச் சேர்ந்த பொறியாளர், இந்திய ரயில்வே துறையில் சேவை செய்தார். லட்சக்கணக்கான இந்தியர்கள் அன்றாடம் வேலைக்கும், கோடை விடுமுறை, பண்டிகைக் காலங்களில் கோடிக்கணக்கானவர்கள் சொந்த ஊருக்கும் செல்வதற்கு ரயிலைத்தான் பெரிதும் நாடுகின்றனர். மக்களைக் குறைந்த செலவில் விரைந்துகொண்டு சென்றுசேர்க்கவும், உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும் ரயிலைத்தான் இந்தக் குடியரசு பெரிதும் நம்பியிருக்கிறது.
ரயில் துறையின் திறமையைக் கூட்டவும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் என்னுடைய நண்பரின் தந்தை கடுமையாக உழைத்திருக்கிறார். மும்பை – வடோதரா மார்க்கத்தில் நீராவி என்ஜின் ரயில்கள் ஓடியதை மாற்றி மின்சார ரயில்கள் ஓடும்படியான வளர்ச்சி திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். மிகவும் முக்கியமான அந்த வழித்தடத்தில் அயராமல் பணிபுரிந்து லட்சக்கணக்கான பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தி, பாதுகாப்பாக செல்ல வழி செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கரி ரயில் என்ஜின்களின் பயன்பாட்டை மின்சார ரயிலுக்கு மாற்றி காற்று மாசு பெருமளவு குறையவும் உதவியிருக்கிறார்.
தென்னிந்தியரான என் சித்தப்பா தனது பணிக்காலத்தின் முற்பகுதியை இந்திய விமானப் படையில் செலவிட்டார். பிறகு போர் விமானங்களைத் தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் என்ற பெயருள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் செலவிட்டார். அந்த வகையில் இந்திய ராணுவம் வலிமை பெற உழைத்திருக்கிறார். ‘எச்எஃப்-24’ போன்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானங்களை வடிவமைக்கும் குழுவில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பிறகு ‘மிக் 21’ ரக விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவர் தயாரித்த விமானங்கள் இந்திய விமானிகளுக்கு பாதுகாப்பையும் நாட்டுக்கு சுயசார்பையும் அளித்துள்ளன.
தொழில்நுட்ப ஆலோசனைகள்
சித்தப்பா மீது எனக்கு மதிப்பும் பாசமும் அதிகம். இந்தியாவிலயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பட அவர் முக்கியக் காரணம். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்திய அறிவியல் கழகத்தில் மாணவர்களுக்கு விமானப் பொறியியல் பற்றிச் சொல்லிக்கொடுத்தார், இந்திய விமானவியல் சங்கத்தின் புரவலர்களில் ஒருவராக இருந்தார். மனிதாபிமானியாக என்னை நான் வளர்த்துக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய தொழில்நுட்ப வேலை எப்படிப்பட்டது என்று அறியாமல் இருந்தேன், ஆனால் அவரிடம் சாதிப் பெருமையோ, மத உணர்வோ இல்லாமலிருந்ததைக் கவனித்திருக்கிறேன்.
சாதிப் பெருமை இல்லாத குணம் அவருக்கு தந்தைவழி உறவினரும் கர்நாடகத்தின் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவருமான ஆர்.கோபாலசுவாமி ஐயரிடமிருந்து வந்திருக்க வேண்டும்; மைசூர் சமஸ்தானத்தில் பட்டியல் இனத்தவர்களின் (தலித்) முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் கோபாலசுவாமி; என்னுடைய சித்தப்பா ஐஏஎஃப்பில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சாதி உணர்வற்று இருந்தார். இந்த நாட்டின் கலாச்சாரப் பன்மைத்துவம் குறித்து நல்ல புரிதலும், அதன் மீது மரியாதையும் அவருக்கு இருந்தது. மங்களூருவில் வளர்ந்த அந்தச் சிறுவன் பனாரஸ் (காசி) பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பு படித்தார்.
அவருடைய கடைசி வேலை ஒடிஷா மாநிலத்தின் பழங்குடிகள் பிரதேசத்தில் அமைந்திருந்த எச்ஏஎல் ஆலையில் ஒட்டுமொத்த உற்பத்திப் பணிகளை மேலாண்மைச் செய்வதாக இருந்தது. எம்.ஏ. படித்தபோது சில வாரங்கள் அவருடன் அங்கே சென்று ஆலையில் களப்பணியாற்றியிருக்கிறேன். அங்கே நிர்வாக இயக்குநர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருமே அவரை மரியாதையுடனும் பாசத்துடனும் நடத்துவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
உதய்பூரைச் சேர்ந்த அந்தப் பொறியாளர் குறித்து எனக்கு அதிகம் தெரியாது என்றாலும், அவரிடம் பழகிய சில கணங்களிலிருந்தே நாட்டைப் பற்றி அவருக்கிருந்த பரந்த அறிவும், அன்பும் எப்படிப்பட்டது என்று புரிந்தது. உதய்பூரில் வித்யா பவன் என்ற தேசியப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அங்கே பாடத்துடன் கையால் கருவிகளைச் செய்யும் கைவினைக் கலைகளையும் இதர பாரம்பரியக் கலைகளையும் பயின்றார்.
ரயில்வே துறையில் சேர்ந்த பிறகு நாட்டைப் பற்றிய புரிதல் அவருக்கு மேலும் ஆழமாயிற்று; ராணுவத்தின் முப்படைகளைவிட ரயில்வே துறையில் இந்தியாவின் அனைத்துப் பகுதி, அனைத்துத் தரப்பு மக்களும் பணிபுரிகின்றனர். அவர் சொந்த மாநிலமான ராஜஸ்தானிலிருந்து வெகு தொலைவில்தான் ரயில்வே துறையில் பணியாற்றினார். அவருக்குக் கிடைத்த பல்வேறு சமூக, பொருளாதார பின்னணி கொண்ட மக்களின் பின்புலம் பற்றிய அறிவால் ரயில்வே துறைக்கு பல தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி போக்குவரத்தை விரிவுபடுத்த உதவியிருக்கிறார்.
வடக்கும் தெற்கும்
வடக்கிலிருந்து வந்த பொறியாளரும் தெற்கிலிருந்து சென்ற பொறியாளரும் பொதுச் சேவையில் நிறையவே ஈடுபட்டனர். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும்கூட மற்றவர்கள் பின்பற்றத்தக்க நல்லதொரு உதாரணமாகவே இருந்தன. இருவருமே தங்களுடைய பொறியியல் புத்தகங்களைத் தவிர புனைவுகளற்ற பொதுப் புத்தகங்களை விரும்பி வாசித்தனர்.
படித்த பெரும்பாலான இந்தியர்களைப் போல அல்லாமல் இருவருமே தான் என்ற அகங்காரமும், படித்தவர்கள் என்ற கர்வமும், அந்தஸ்து தந்த செருக்கும் இல்லாமல் கனிவானவர்களாக, எளிமையானவர்களாக வாழ்ந்தார்கள். என்னுடைய சித்தப்பா மறைந்தபோது அவரை நாற்பதாண்டுகளாக அறிந்துவைத்திருந்த என்னுடைய மனைவி சொன்னார், “எப்படிப்பட்ட சுகந்தமான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார் சித்தப்பா” என்று. இது காந்தி குறித்து ஜார்ஜ் ஆர்வெல் கூறியதற்கு ஒப்பானது. அதையேதான் என்னுடைய நண்பரின் தந்தையைப் பற்றியும் கூறியாக வேண்டும்.
அந்த இருவரின் பெயர்களையும் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கர்நாடகத்தைச் சேர்ந்த அந்தப் பொறியாளர் சுப்பிரமணியம் சென்னகேசு. ராஜஸ்தானைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கோபால் திரிவேதி. அவ்விருவரையும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத் தோழர்கள் பெரிதும் விரும்பினர், அவர்களுடனான நினைவுகளை அசை போட்டு நெகிழ்ந்தனர். அவர்களைப் பற்றி நான் எழுதக் காரணம், அவர்களைத் தெரியாதவர்கள்கூட அவர்களுடைய வாழ்க்கையால் உந்துதல் பெறக்கூடும். அவர்கள் இந்த நாட்டை உருவாக்கிய கோடிக்கணக்கான சிற்பிகளில் இருவர்.
மோடியின் சுயதம்பட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சமீபத்திய உரைகளில் ஏதோ இந்த நாடு கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில்தான் வளர்ந்ததைப் போல பெருமைப்படுகிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்களைக்கூட அவர் பாராட்டுவதில்லை. தங்க நாற்கரச் சாலை போன்ற அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் வாஜ்பாய் அரசு நன்கு செயல்பட்டது.
மோடியின் தலைமையில் நாடு அடைந்த முன்னேற்றங்களையே அவருடைய அமைச்சரவை சகாக்களும் வியந்தோதுகின்றனர், கட்சியின் சமூக ஊடக தளமும் அதைப் பெரிதுபடுத்துகின்றன. 2014 மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்னால் இந்தியா அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியே இன்றி புதைந்து கிடந்ததைப் போலப் பேசுகின்றனர்.
ஆனால், அவருடைய காலத்துக்கும் முன்னதாகவே விழிப்புணர்வு பெற்று, திருப்புமுனையான கட்டத்தை நாடு எட்டியதை பலரும் இப்போது பதிவிட்டுவருகின்றனர். தடையற்ற வர்த்தகச் சந்தை ஆதரவாளர்கள், 1991 கோடைக்காலத்துக்குப் பிறகு இந்தியாவின் தாராளமயக் கொள்கையால் இந்தியா வளர்ச்சி பெறத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
நரேந்திர மோடி சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதைவிட அவர்களுடைய இந்தக் கூற்று அர்த்தமுள்ளது. ஆனால், மோடியோ தனக்கு முன் ஆண்ட அனைவரையும் இகழ்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் வந்த பிறகு நாட்டின் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தம் பெற்று நாடு வளர்ச்சி காணத் தொடங்கியது.
தனிக் குடிமக்கள்!
நாடு சுதந்திரம் அடைந்த 1947இல் இந்தியா மிகவும் வறிய நாடாகவும் ஆழ்ந்து பிளவுபட்டதாகவும் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியும் இருந்தது. அதன் பொருளாதார நலிவு காரணமாகவும் சமூக முரண்பாடுகள் காரணமாகவும் வெகு விரைவிலேயே நாடு நொறுங்கிவிடும், உள்நாட்டுப் போர் மூளும் அல்லது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்றெல்லாம் பல வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் நிலவின. கெடு மதியாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை, நாடு ஒற்றுமையாகவும் வளமாகவும் வளரத் தொடங்கியது. மிகச் சிறந்த ஜனநாயக நாடானது, உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு கண்டது, வலிமையான தொழில்நுட்ப, தொழில் துறை கட்டமைப்பு உருவாகிவிட்டது.
இப்படி நாட்டை ஒற்றுமைப்படுத்திய நிறுவனங்களையும் அடித்தளக் கட்டமைப்புகளையும் 1947 முதல் 1991 வரையில் உருவாக்காமல் இருந்திருந்தால் இங்கே தகவல் தொழில்நுட்பப் புரட்சியோ மரபணு மாற்றப் புரட்சியோ வந்திருக்காது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தலையெடுத்திருக்காது. தேசிய அளவில் தொழிலாளர் சந்தையோ, மூலதனச் சந்தையோ உருவாகியிருக்காது. அவையெல்லாம் இல்லையென்றால் இந்தியா என்ற நாடே இருந்திருக்காது.
இந்த இடத்தில்தான் சுப்பிரமணியம் சென்னகேசு, ஸ்ரீ கோபால் திரிவேதி போன்ற தனிக் குடிமக்களும் நாட்டை உருவாக்கியவர்கள் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இப்படி கோடிக்கணக்கானவர்கள் மத்திய, மாநில அரசுப் பணியிலும் ராணுவத்திலும் ரயில்வே துறையிலும், ராணுவ தளவாட ஆலைகளிலும், விவசாயப் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும், பள்ளி – கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும், அறிவியல் – தொழில்நுட்ப ஆய்வகங்களிலும் ஆற்றிய சேவைகளால்தான் இந்தியா உருவாகியிருக்கிறது, இதை வருங்கால சந்ததி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதற்கு முன்பு பாடுபட்ட தலைமுறையினரின் எதிர்பார்ப்பு.
தமிழில்: வ.ரங்காசாரி
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 1 year ago
நல்ல கட்டுரை. சுப்ரமணியம் சென்னகேசு மற்றும் திரிவேதிகளுக்குப் பெயர் உள்ளது. அவர்களின் பங்களிப்பு காத்திரமானது. அவர்களது சந்ததிகள் அவர்களை விதந்து எழுதுவார்கள். இந்தக் கட்டுரை போல.. ஆனால், உணவுக்காக உலகெங்கும் கையேந்திக் கொண்டிருந்த நாடு தன்னிறைவை எட்ட உழைத்த ஒடுக்கப்பட்ட சமூக வேளாண் கூலிகள், உழவர்கள் - இந்தியாவில் 60% மக்கள் - கட்டுரையின் இறுதிப் பத்தியில், போகிற போக்கில், உதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு முகமிலிகளாகக் கடக்கப்படுகிறார்கள். குறைந்த பட்சம் 50% நேரமாவது குஹா போன்றவர்கள் அந்த முகமிலிகளின் பிரச்சினைகளையும் பேச வேண்டும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 1 year ago
நல்ல கட்டுரை ஐயா.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.