கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!

ரத்தின் ராய்
28 Jul 2024, 5:00 am
0

ன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025 நிதியாண்டுக்காக அளித்துள்ள ‘பட்ஜெட்’ (நிதிநிலை அறிக்கை), வளமான பாரதத்தை உருவாக்காது; அதேசமயம் இது அரசின் செலவைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறது. வரிக்கும் – மொத்த உற்பத்தி மதிப்புக்குமான (ஜிடிபி) விகிதத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு, அரசின் செலவுகளைச் சுருக்குவதாக இருக்கிறது.

வரி மற்றும் வரியல்லாத வருவாய் இனங்கள் மூலம் வருவாயைப் பெருக்கவோ, அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் கூடுதல் வருவாயைப் பெறவோ எந்த முயற்சிகளும் இல்லை. மொத்த வரி வருவாய்க்கும் ஜிடிபிக்குமான விகிதம், நிதியாண்டு 2025இல் 11.77%, இதுவே நிதியாண்டு 2024இல் 11.68% ஆக இருந்தது. வருவாய் இனத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள 0.25% அதிகரிப்பு, அரசின் மொத்த செலவில் செய்யப்பட்ட வெட்டு, வரி வருவாய் அல்லாத பிற இன வருமானங்களில் லேசான உயர்வு ஆகியவை காரணமாக அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை கடந்த ஆண்டு 5.6% ஆக இருந்தது இப்போது 4.9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

நாடு வளமான நிலையில் இருந்தாலோ, பிற பொருளாதார அம்சங்கள் திருப்திகரமாக இருந்தாலோ இந்த நிதிச் சிக்கனத்தைப் பெருமையாகவே பாராட்டிப் பேசலாம். மக்களுடைய நுகர்வும், தனியார் துறை முதலீடும் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், அரசும் தனது செலவைக் கட்டுப்படுத்திக்கொள்வது வளர்ச்சிக்கு உதவாது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் துறையின் முதலீடு போதவில்லை. பொருளாதார ஆய்வறிக்கை மட்டுமல்ல, நிதியமைச்சரின் பட்ஜெட் உரையுமே, ‘லாபம் அதிகரித்துள்ள நிலையில் தனியார் தொழிலதிபர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்’ என்று விடாமல் வலியுறுத்துகின்றன. நாட்டு மக்களின் நுகர்வு வேகம், ஜிடிபி வளர்ச்சி வேகத்தைவிடக் குறைவாக இருக்கிறது. ஒருபுறம் பெரும் பணக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை நூற்றுக்கணக்கில் வாங்குகின்றனர், விமானங்களில் சொகுசு வகுப்புகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

மற்றொரு புறம் - சாதாரண மக்களுக்குத் தேவைப்படும் நுகர்பொருள்கள், வேலைவாய்ப்பு – ஊதியம் போதிய அளவுக்கு இல்லாததால் ‘கேட்பு’ இன்றி விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. தொழிலதிபர்களுக்கு லாபம் அபரிமிதமாகக் கிடைக்கிறது, ஆனால் தொழிலாளர்கள் – ஊழியர்களுடைய ஊதியம் அல்லது ஊதியத்தின் உண்மை பணமதிப்பு உயராமலேயே இருக்கிறது. வங்கிகளில் பணம் நிரம்பியிருந்தாலும் கடன் வாங்குவோர் அதிகம் இல்லை. தங்களுடைய ஊதியம் அல்லது சேமிப்பிலிருந்து வாங்க வேண்டிய பொருள்களைக்கூட, வங்கிகளில் கடன் வாங்கி, கொள்முதல் செய்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பொருளாதார அவலங்கள் கவனம் பெறுமா?

தீபா சின்ஹா 21 Jul 2024

ஒரே நிம்மதி

இத்தனை பேரியியல் துயரங்களுக்கு இடையில் அரசின் செலவாவது கட்டுக்குள் இருக்கிறதே என்று ஒரு வகையில் நிம்மதி அடைய வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் பாகிஸ்தான் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும். இப்போதிருக்கும் நிலையில் அரசின் இதே கொள்கைகள், அணுகுமுறைகளோடு ‘அம்ரித் கால்’ (அமுத காலம்), ‘விக்சித் பாரத்’ (வளமான பாரதம்) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடுவதாலேயே முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றைப் பெருக்க அரசு உடனடியாகவும் விரைவாகவும் செய்ய வேண்டிய செயல்கள் பல இருக்கின்றன.

இரண்டு முழு பதவிக்காலத்துக்குப் பிறகு இந்த முறைதான் அரசு இவற்றையெல்லாம் உணர்ந்ததைப் போல பட்ஜெட் உரை இருக்கிறது. நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி இலக்கு பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வழிமுறைகள் தெளிவில்லாமலும், காலத்துக்கு ஒவ்வாத பழங்காலத்துக் கட்டுப்பெட்டித்தனமாகவும், கிட்டத்தட்ட கம்யூனிஸ்டுகளுடைய சிந்தனையிலும் இருக்கிறது. வளர்ச்சிக்கான கொள்கையை வகுப்பதில் அரசின் அணுகுமுறை சரியாக இல்லை. பொருளாதார மாற்றம் அடைவதற்குச் சந்திக்க வேண்டிய வெவ்வேறு சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பொருளாதாரச் சட்டகம் தயாரிக்கப்படவில்லை.

மகளிர் வேலைவாய்ப்பு

‘மகளிர், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் நலனில் அரசு அக்கறை செலுத்தும்’ என்று உரை குறிப்பிடுகிறது. மகளிரைப் பொருத்தவரை, வேலைவாய்ப்பில் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். வேலை செய்யும் மகளிருக்கு விடுதிகள் கட்டித்தரப்படும் என்பதற்கும் மேல் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. உள்ளாட்சி மன்றங்களில் பஞ்சாயத்துகள், நகராட்சிகளில் மகளிர் இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் இல்லை. அவ்விடங்களில் ஏதோ உச்சநிலையை அடைந்துவிட்டதைப் போன்ற அமைதியே நிலவுகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

காண முடியாததைத் தேடுங்கள்!

ப.சிதம்பரம் 21 Jul 2024

விவசாயிகள் நிலை

விவசாயிகளுடைய முக்கியமான பயிர்கள், விளைச்சல் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது, அரசியல்ரீதியாக இதை தவிர்க்கவே முடியாது. ஆனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, மும்மடங்காக்குவது என்ற இலட்சியங்கள் பரிதாபமாக கைவிடப்பட்டுவிட்டன. விவசாயிகளின் வருமானம் உயராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வேளாண் விளைபொருள்களைச் சந்தைக்கு விரைந்து எடுத்துச் செல்ல முடியாத போக்குவரத்து மற்றும் கிடங்கு வசதிகள் இல்லாமைதான். 

அடுத்தது அவசியமான காய்கறிகள், உணவு தானியங்களுக்குக்கூட அரசு அடிக்கடி விதிக்கும் ‘ஏற்றுமதித் தடைகள்’. வேளாண் பொருள்களுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகமாகி நல்ல விலை கிடைக்கும்போது, உள்நாட்டில் விலையுயர்வும் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சி - அரசியல் காரணங்களுக்காக - அரசு ஏற்றுமதிகளைத் தடைசெய்கிறது. பிறகு விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. விளைச்சல் அதிகரித்தாலும் இப்படி விலை சரிகிறது. பல்வேறு காரணங்களால் விவசாயம் செழிக்க முடியாமல் சுற்றுச்சூழல்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. 

அரசின் நிதி நிறுவனங்கள் விவசாயத்துக்குப் போதிய கடன்களை உரிய காலத்தில் கொடுப்பதில்லை, விதை – உரம் - பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் கிடைப்பதிலும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவை எதுவுமே முறையாகவும் தொடர்ச்சியாகவும் கவனிக்கப்பட்டு சீர்செய்யப்படுவதில்லை. இவற்றையெல்லாம் நிர்வகிக்க அரசிடம் ஒருங்கிணைந்த திட்டமும் இல்லை, இவற்றுக்கென்று நிதி ஒதுக்கலும் கிடையாது.

‘இரவல்’ வேலைவாய்ப்புத் திட்டம்

இளைஞர்களுடைய வேலைவாய்ப்பைப் பெருக்க சொந்தமாக திட்டம் ஏதும் இல்லாத அரசு, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து கடன் வாங்கியுள்ளது – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தைக் கடன் வாங்கியதைப் போல. இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறும்வகையில் தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது - அதற்கென்று நிதி எதையும் ஒதுக்காமலேயே! 

தொழிலாளர்கள், தொழில் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்குத் திறனைக் கூட்டும் திட்டமும் பலவிதக் குறைபாடுகளுடனேயே அறிவிக்கப்பட்டிருக்கிறது; எந்தப் பயிற்சி, எந்த வேலை என்பது தெளிவில்லை. அத்துடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பது தொடர்பான அடிப்படை கணக்குகூட சரியாக போடப்படவில்லை. இந்தியாவின் 500 உயர்தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு தலா 4,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு, வேறு மாதிரி கூறுவதானால், இது நிறைவேற்ற முடியாத திட்டம்!

வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் 80 கோடி ஏழைகளுக்கு பொது விநியோக திட்டத்தில் அரிசி – கோதுமை வழங்குவது ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வறுமைக்குக் காரணம் என்ன, அதை எப்படிப் போக்குவது என்று ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஏழைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட முந்தைய பட்ஜெட் உரைகளைப் போல அல்லாமல் - அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதுடன், ‘அவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

விஷச் சுழலை உடையுங்கள்

பிரபாத் பட்நாயக் 14 Jul 2024

ஆட்சியைக் காக்க அறிவிப்புகள்

பட்ஜெட்டில் எஞ்சிய பகுதி, அரசியல்ரீதியாக இந்த ஆட்சியைத் தக்க வைப்பதற்கான அறிவிப்புகள் பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசைத் தாங்கிப் பிடிக்கும் ஆந்திரம், பிஹார் மாநில அரசுகளுக்குப் பெருந்திட்டங்கள் மூலம் உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திரத்துக்கு அமராவதி பட்டணம் என்ற தலைநகரை அமைக்க ரூ.15,000 கோடி அளிக்கப்படவிருக்கிறது. அத்துடன் போலாவரம் அணை நீர் திட்டம் முழுமை பெற உதவி அளிக்கப்படும். தொழில் நகரங்கள், நெடுஞ்சாலைகள், மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற சிறப்புத் திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் அமராவதிக்கான ரூ.15,000 கோடி உலக வங்கி மூலம் பெறப்படக்கூடும்.

பிஹார் மாநிலத்துக்கு மொத்தம் ரூ.59,000 கோடிக்கு வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோழமைக் கட்சிகள் (தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம்) இரண்டும், ஆட்சிக்கு ஆதரவைத் தந்து தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுள்ளன. மோடி தலைமையிலான அரசு, அவற்றைப் பொருத்தவரை ‘பொன் முட்டையிடும் வாத்து’; எனவே வாத்துக்கு ஆபத்து வராமல் இரண்டு கட்சிகளும் பார்த்துக்கொள்வது உறுதி.

அடுத்து வரவுள்ள மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு மேலும் சோதனைகள் ஏற்பட்டு, கூட்டணி வலுவிழக்கும். ஒடிஷாவில் இப்போதே அதிருப்தி தொடங்கிவிட்டது.

இந்த பட்ஜெட் நிச்சயம் வளமான பாரதத்துக்கான பட்ஜெட் அல்ல. பிச்சைக்காரனுடைய ஒட்டுத் துணியைப் போல அங்குமிங்கும் சில திட்டங்களை அறிவித்து, அவற்றை இணைத்திருக்கிறார்கள். மிகவும் ஆழ்ந்து சிந்தித்து ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இதை உருவாக்கவில்லை. அரசுத் துறை முதலீட்டுக்கு இதில் திட்டமே இல்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்

ரேணு கோஹ்லி 30 Jun 2024

இப்போது ஒன்றிய அரசும் அரசுத் துறை நிறுவனங்களும் இணைந்து செய்யும் முதலீடு, ஜிடிபியில் வெறும் 3.6% ஆக மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டும் இதே அளவுதான், 2019இல் மட்டுமே இது இதைவிட அதிகமாக இருந்தது. தோழமைக் கட்சிகளுக்காகவும் விவசாயிகளின் தேவைகளுக்காகவும் சில செலவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் அறிவித்துள்ள திட்டங்கள் அக்கறையில்லாமலும் மோசமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரசின் வரவைவிட செலவு அதிகமாகாமல் கட்டுப்படுத்தப்பட அக்கறை காட்டுகிறார்கள் என்பதற்காக மட்டுமே பாராட்டலாம். நாட்டின் எதிர்காலம் குறித்து பட்ஜெட்டில் வாய் இனிக்கப் பேசினாலும், செயல்திட்டம் சிறப்பாக இல்லை.

© த டெலிகிராப்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

காண முடியாததைத் தேடுங்கள்!
பொருளாதார அவலங்கள் கவனம் பெறுமா?
கௌரவமான ஓய்வூதியம்: ஏழைகளின் உரிமை
பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்
பொருளாதாரத்தில் புதிய அணுகுமுறை தேவை
விஷச் சுழலை உடையுங்கள்
குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






சாப்பாட்டுப் புராணம் புரோட்டாகுலாப் சிங்சாந்தன்சிந்த்வாராகடல் வளப் பெருக்கம்ஆஸ்டியோபோரோசிஸ்ஆப்பிரிக்கன் ஐரோப்பாசோழக் கதையாடல்கோவை ஞானி சமஸ்மிஸோரம்: தேசம் பேச வேண்டிய விவகாரம்9 நீதிபதிகளின் ராஜதந்திரம்மலச்சிக்கல்கல்வி சந்தைப் பண்டம்மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்பொது விநியோகத் திட்டம்தாண்டவராயனைக் கண்டுபிடித்தல்சிவராஜ் சிங் சௌஹான்வகுப்புவாதம்தாற்காலிக சாதியம்மடங்கள்பதேர் பாஞ்சாலிதமிழகக் காவல் துறை அருஞ்சொல் தலையங்கம்எடித் கிராஸ்மன்மனம் திறந்து பேசுவோம்அக்னிவீர்: ஆதரிக்க 8 காரணங்கள்வட கிழக்கு மாநிலம்சாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்உண்மை விமர்சனம்பத்திரிகையாளர்களுக்கு யார் எஜமானர்?தாராளமயமாக்கல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!