கட்டுரை, சட்டம், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு
அமில வீச்சு என்னும் பயங்கரம்: சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?
டெல்லியில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்டபோது நாடே கொதித்தெழுந்தது. அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தமது மனிதநேயத்தை நிரூபித்துக்கொள்ளும்விதமாக பேசினார்கள். ஊடகங்களும் அந்தப் பிரச்சினையை முக்கியத்துவம் தந்து விவாதித்தன. ஆனால், இப்போது எல்லாமே மறைந்துபோய்விட்டது. ஊடகங்களுக்குப் போதும் போதும் என்னுமளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செய்தி தானம் செய்துகொண்டிருக்கிறார்.
பெண்களின் பாதுகாப்பு இப்போது செய்தி மதிப்பை இழந்துவிட்டது. பெண்கள் மீதான வன்முறையின் வடிவங்களில் மிகவும் குரூரமானது அமில வீச்சு. அதற்கு ஆளானவர்கள் வாழ்நாள் முழுவதும் நடை பிணங்களாக ஆக்கப்படுகின்றனர். 2020இல் மட்டும் இந்தியாவில் 182 அமில வீச்சுத் தாக்குதல்கள் நடந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
டெல்லி வழக்கு…
பாலினப் பாரபட்சம் துலக்கமாகத் தெரியும் நமது உச்ச நீதிமன்றம் அவ்வப்போது பெண்கள் குறித்து அக்கறை காட்டுவது உண்டு. அப்படியான அபூர்வமானதொரு சந்தர்ப்பம் 2015 ஏப்ரல் 10இல் அதற்குக் கிடைத்தது. அமிலவீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாநில அரசு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் ஒரு லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் 2005ஆம் ஆண்டு அமில வீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில்தான் (லட்சுமி எதிர் இந்திய ஒன்றியம் - Laxmi vs Union Of India & Ors) அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“அமில வீச்சுக்கு ஆளானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது என்பதற்காக, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள், அந்தந்த மாநில / யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுடனும் தீவிரமாக விவாதித்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், உணவு, படுக்கை மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சைகள் உட்பட முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அமில வீச்சுக்கு ஆளானவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, ‘அமில வீச்சுக்கு ஆளானவர்’ என்பதற்கான சான்றிதழை அவருக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் நாங்கள் வழங்குகிறோம். இந்தச் சான்றிதழைப் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசத்தில் உரிமையுள்ள பிற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்” என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.
அமில வீச்சு என்பது பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. காதலை நிராகரித்தவர்கள், திருமணம் செய்ய மறுத்தவர்கள், வரதட்சிணைக் கொண்டுவர இயலாதவர்கள் - எனப் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவருகிறார்கள். உலகின் பல நாடுகளிலும் அமில வீச்சு என்னும் வன்முறை நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்தான் இது அதிக எண்ணிக்கையில் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அமில வீச்சு எனும் கொடுமை
இந்திய சட்ட கமிஷன் 2008ஆம் ஆண்டு சமர்ப்பித்த தனது 226 ஆவது அறிக்கையில் அமில வீச்சு என்னும் வன்முறை குறித்து விரிவாகக் குறிப்பிட்டு அதைத் தடுப்பதற்கென சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அமில வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்; அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் இருக்க வேண்டும் என்றும் அது கூறியிருந்தது.
ஆனால், மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. டெல்லி பாலியல் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் தனது அறிக்கையில் சட்ட கமிஷனின் கருத்துகளை எடுத்துக்காட்டி தனியே இதற்கென சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கெனச் சட்டம் இயற்றிய ஒன்றிய அரசு அமில வீச்சு வன்முறையைத் தடுப்பதற்கென தனியே சட்டம் இயற்றாமல் அலட்சியம் செய்துவருகிறது.
அபாயகரமான முறையில் கொடுங்காயம் ஏற்படுத்துவது என்ற வகையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326தான் இந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால், அமில வீச்சு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் காரணத்தால் இதர பிரிவு 307ஐ பயன்படுத்த வேண்டும் என 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டிய பிறகே காவல் துறை அதைப் பயன்படுத்துகிறது.
குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 மூலம் இந்திய தண்டனைச் சட்டம், 1860இல் அமில வீச்சு தொடர்பாக இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டன. 326ஏ அமில வீச்சுத் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை எனக் கூறுகிறது. பிரிவு 326பி அமிலத்தை “அமிலத்தன்மை கொண்ட அல்லது அரிக்கும் தன்மை அல்லது எரியும் தன்மை கொண்ட எந்தவொரு பொருளும், வடுக்கள் அல்லது சிதைவு அல்லது தற்காலிக அல்லது நிரந்தர இயலாமைக்கு வழிவகுக்கும் உடல் காயத்தை ஏற்படுத்தும் திறன்கொண்டது" எனக் குறிப்பிடுகிறது.
சிறப்புச் சட்டம் தேவை
சிஆர்பிசியில் செய்யப்பட்ட திருத்தம் அமில வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது பற்றி விவரிக்கிறது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கும் சில நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நச்சுப் பொருட்கள் குறித்த 1919ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் அமில விற்பனையை வகைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. இதற்காக மாநில அரசுகள் தனியே விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தர தீர்வு அல்ல. சட்ட கமிஷனும், வர்மா கமிட்டியும் அளித்த பரிந்துரைக்கேற்ப தனியே இதற்கென சட்டம் இயற்றுவதே இதில் மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய காரியமாகும். சிறப்புச் சட்டம் இயற்றிவிட்டாலே இத்தகைய குற்றங்கள் குறைந்துவிடுமா எனக் கேட்கப்படலாம். பங்களாதேஷில் 2002ஆம் ஆண்டு அப்படி கடுமையானதொரு சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு அமில வீச்சு வன்முறை குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்திய ஒன்றிய அரசு அமில வீச்சைத் தடை செய்து சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்!
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.