கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 3 நிமிட வாசிப்பு
அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?
ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வது இன்னொன்று. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பது எளிது. பெரும்பாலான தலைவர்களுக்கு இந்த முதல் பிரிவைச் சேர்ந்த ஆதரவாளர்களே உள்ளனர். ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே அவர்களது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வாய்க்கின்றனர். அப்படியான நல்வாய்ப்பைப் பெற்றவர் அம்பேத்கர்.
இந்தியாவில் தனது சமகாலத்தில் வாழ்ந்திருந்த மேதைகளையெல்லாம் மிஞ்சக்கூடிய மேதமையோடு திகழ்ந்தவர் அம்பேத்கர். இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு எத்தனையோ நிபுணர்கள் இந்தியாவில் உருவாகிவிட்டார்கள். ஆனால் அவரைப் போல சமூகத்தின் சகல அம்சங்களையும் கணக்கில்கொண்டு மாற்றத்துக்கான வழிகளை முன்மொழியும் ஆற்றல்கொண்ட சிந்தனையாளர் எவரும் உருவானதாகத் தெரியவில்லை. அவர் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார் என்றபோதிலும் சட்டத் துறையில் அவருக்கிருந்த அறிவுத் திறன் அபாரமானது என்பதை நாடு அறியும்.
சட்டத்தின் முதன்மையான பணி
சட்டத்தின் முதன்மையான பணி என்னவென்று கேட்டால் சமூக ஒழுங்கைக் காப்பதுதான் என நாம் தயங்காமல் பதில் சொல்வோம். ஆனால் ‘சமூகத்தின் குறைபாடுகளைக் களைவதுதான் சட்டத்தின் பணி’ என்றார் அம்பேத்கர். ஒரு நாட்டின் நாகரிகத்துக்கும் அதன் சட்டங்களுக்கும் இருக்கும் தொடர்பைச் சுட்டிக்காட்டிய அவர், “பண்டைய சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், பண்டைய சமூகங்களில் சட்டம் என்பது தெய்வீகத்தன்மை கொண்டதாகவும் மாற்றப்பட முடியாததாகவும் கருதப்பட்டது. ஆனால், நவீன சமூகங்களிலோ காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப அது மாற்றம் அடைகிறது” எனக் குறிப்பிட்டார். “சட்டத்தைத் தெய்வீகத் தன்மை கொண்டதாகக் கருதிய சமூகங்கள் வளர்ச்சி காணாமல் தேங்கிப் போய்விட்டன. அப்படியான நாட்டுக்கு இந்தியா நல்லதொரு உதாரணம்” என்றும் அவர் விமர்சித்தார்.
இந்திய சமூகம் எல்லா காலங்களிலும் அப்படி இருக்கவில்லை. “உலகில் இந்தியாவைப் போல புரட்சிகள் பலவற்றைக் கண்ட நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஐரோப்பியர்கள் போப் ஆண்டவரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கு முன்பே தெய்வீகத்தன்மை பொருந்தியது என்று கூறப்பட்ட சட்டத்துக்கும் மதச்சார்பற்ற சட்டத்துக்கும் இடையிலான மோதலை இந்தியா பார்த்துவிட்டது. மதச்சார்பற்ற சட்டத்துக்கான அடித்தளத்தை நாம் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் பார்க்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கே ‘தெய்வத்தின் சட்டம்’ வென்றுவிட்டது. அதுதான் இந்தியா சந்தித்த பேரழிவுகளிலேயே முக்கியமானது” என்றார் அம்பேத்கர். தான் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அந்தப் பேரழிவிலிருந்து இந்தியாவை மீட்க அம்பேத்கர் முயற்சித்தார்.
மதச்சார்பின்மை எனும் ஆன்மா
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டுப் புதிதாக எழுதுவதற்கு முயற்சித்த பாஜக, அதில் தோல்வி கண்டதால் இப்போது அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்குவதற்கு அது முயற்சிக்கிறது. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளுக்கும் முரணானதாகும்.
ரஷ்யா போன்ற நாடுகள்கூட சிதறித் துண்டு துண்டாகிவிட்ட நிலையில் இந்தியாவை ஒரே நாடாகக் காப்பாற்றிக்கொண்டிருப்பது அரசமைப்புச் சட்டம்தான். அதன் ஆன்மாவாக இருப்பது மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கம்.
ஆக, மதச்சார்பின்மையை அழிக்கும்விதமாக முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டையே சீர்குலைத்துவிடும்.
இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி
20 Jun 2018
மதச்சார்பின்மை வேண்டாம் என்றாரா அம்பேத்கர்?
மதச்சார்பின்மை என்ற சொல்லை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சேர்ப்பதை அம்பேத்கரே ஏற்றுக்கொள்ளவில்லை என இப்போது பாஜகவினர் ஒரு வலுவான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றனர். அம்பேத்கர் அப்படிக் கூறியது உண்மைதான். 1948 நவம்பர் மாதத்தில் அரசமைப்புச் சட்ட அவையில் பிஹாரைச் சேர்ந்த உறுப்பினர் கே.டி.ஷா “மதச்சார்பினமை, சோஷலிஸம் ஆகிய சொற்களை முகவுரையில் சேர்க்க வேண்டும்” என்ற திருத்தம் ஒன்றை முன்மொழிந்தார். இதற்கு அம்பேத்கர் கூறிய பதில்: “மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது, அனைத்து மதங்களைச் சேர்ந்த குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என ஆக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிலேயே மதச்சார்பின்மை என்பது உள்ளார்ந்து கலந்திருக்கிறது. எனவே அதைத் தனியே குறிப்பிடுவது தேவையற்றது!”
மதச்சார்பின்மை என்னும் நிலைபாடு தேவை இல்லை என்ற பொருளில் அம்பேத்கர் தன் கருத்தக் கூறவில்லை என்பதையும் பாஜகவின் நோக்கமும் அம்பேத்கரின் கருத்தும் எதிரெதிரானவை என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். பாஜகவினர் அந்தச் சொல்லை அகற்றச் சொல்வது அந்தக் கருத்தாக்கத்தின் மீதே அவர்களுக்கு உடன்பாடு இல்லாததால்தான்!
இந்தியாவில் மேற்கொள்ளவேண்டிய தேர்தல் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்த இந்திய சட்ட ஆணையம் தனது 170ஆவது அறிக்கையில் “ஜனநாயக நெறிமுறைகளைத் தன்னளவில் மதிக்காத ஓர் அரசியல் கட்சி இந்த நாட்டை ஆளும்போது, அதைப் பின்பற்றும் என நாம் எதிர்பார்க்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தது.
எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றிய அரசு (S.R.Bommai v. Union of India (1994 (3) SCC1) வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல வகைகளில் முக்கியமானது. அதில் நீதிபதிகள் குறிப்பிட்ட விஷயங்களில் ஒன்று, “சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என்ற இந்திய மரபால் உந்தப்பெற்று நவீன இந்தியாவின் மாபெரும் புதல்வரான மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சி உறுதியளித்த மதச்சார்பின்மையைக் காப்பதற்காகத் தனது உயிரை அர்ப்பணித்தார். நமது தேசத்தை நிர்மாணித்த தலைவர்கள் சமயச்சார்பற்ற நோக்கும் சமத்துவ நடைமுறையும் கொண்ட ஓர் அரசை உருவாக்கவே உழைத்தனர். தேர்தலில் ஒரு கட்சி மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கையைச் சொல்லிப் போட்டியிடுமானால் அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்… அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்!”
இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருக்கும் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கு பாஜக ஆட்சி ஓர் உதாரணம். புரட்சியாளர் அம்பேத்கரை நினைவுகூரும் இன்றைய சூழலில் அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை என்ற உள்ளீட்டை சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு நாம் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
குலசாமி அம்பேத்கர்
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி
அம்பேத்கரின் 10 கடிதங்கள்
7
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
M P Ganesan 12 months ago
மதச்சார்பின்மை என்பதை "பாகுபாடு காட்டக்கூடாது, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும்" எனக் கூறுவதில் போதாமை உள்ளது. இதில் மதம் சாராத, மத நம்பிக்கைகள் அற்ற சமூகம் உருவாக வலியுறுத்தப்படவில்லை. அனைத்து மதங்களையும் ஆதரிக்கும் நாடு பன்மதச்சார்பு (multitheocratic) நாடாகச் செயல்படும். மதச்சார்பற்ற கருத்துக்கள் இயற்கைப் புறம்பான எந்த ஒன்றையும் அங்கீகரிக்கக் கூடாது என்பதில் இருந்து தொடங்குகிறது. மதத்தின் பிடியில் இருந்து அரசை, சமூகப் பொருளாதார வாழ்க்கையை, அரசியல் மற்றும் கலாச்சார இயக்கத்தை விடுவிக்க வேண்டும். இதுவே மதச்சார்பின்மையின் கோட்பாடு ஆகும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.