கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

சமத்துவ மயானங்கள் அமையுமா?

ரவிக்குமார்
25 Nov 2022, 5:00 am
1

சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம். “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், சாதிவெறியின் தளைகளை நம்மால் உடைக்க முடியவில்லை, மதச்சார்பற்ற அரசாங்கம்கூட சாதி அடிப்படையில் தனித்தனி சுடுகாடு மற்றும் இடுகாடுகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சமத்துவம் என்பது குறைந்தபட்சம் ஒருநபர் தன்னை உருவாக்கியவரை (கடவுளை) நோக்கி இறுதிப் பயணம் போகும்போதாவது தொடங்க வேண்டும்” என்கிறது நீதிமன்றம்.

நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.குமரேஷ் பாபு இருவரும், “மகாகவி பாரதியார் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார். ஆனால், 21ஆம் நூற்றாண்டிலும் நாம் சாதிவெறியுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். இறந்தவர்களை அடக்கம் செய்யும் விஷயங்களில்கூட சாதி அடிப்படையிலான வகைப்பாடு செய்யப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும், மாற்றம் நல்லதாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளையாவது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக மாற்றுவதற்கு இன்றைய அரசாங்கம் முன்வரும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்” என்று அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 

இங்கே புதைக்கக் கூடாது!

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நாவாகுறிச்சி என்னும் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் சமூகத்தினருக்கும் தனித்தனியாக சுடுகாடுகள் இருக்கின்றன. வண்டிப்பாதைப் புறம்போக்கு இடத்தில் சடலம் ஒன்றைப் புதைத்துவிட்டதாகப் பிரச்சினை எழுந்துள்ளது. அது பட்டியல் இனத்தவருக்கான இடுகாட்டின் தொடர்ச்சியாக உள்ள இடம் ஆகும். 

அங்கு பட்டியல் இனத்தவரின் சடலத்தைப் புதைக்கக் கூடாது என்று மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவருடைய தூண்டுதலின் பேரில் வண்டிப்பாதை பொறம்போக்கு பகுதியில் யாரும் சடலத்தைப் புதைக்கக் கூடாது என அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி வண்டிப்பாதைப் புறம்போக்கில் புதைத்த சடலங்களைத் தோண்டியெடுத்து பட்டியல் சாதியினரின் இடுகாட்டில் புதைக்க வேண்டும் எனவும் மற்ற சாதியினர் வலியுறுத்தியுள்ளனர். 

இடுகாடு என வரையறுக்கப்படாத பகுதியில் சடலத்தைப் புதைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்ற அமர்வு அந்தத் தடையை ரத்துசெய்ததோடு பொது மயானங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறது.

நீதிபதி சந்துருவின் தீர்ப்பு

பொது மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சொல்வது தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே நீதிபதி சந்துரு இதேபோல ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார் (டி.பாலசுப்பிரமணியன், நாட்டாமை & தலைவர், ஆரிய வைசிய சமூகம் எதிர் ஆணையாளர், மதுரை மாநகராட்சி, நீதிப் பேராணை எண்: 3855/2005,2.9.2008). அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருந்தபோது 2008ஆம் ஆண்டு அவர் முன் ஒரு வழக்கு வந்தது. 

மதுரை தத்தனேரியில் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மயானத்தில் சாதிவாரியாகவும் மதவாரியாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மதுரையில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தினர் தங்களுக்கும் தனி இடம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியதால் அவரும் தனி இடம் ஒதுக்கித் தந்தார். அது தொடர்பாக மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவர் தனி இடம் ஒதுக்கியதை ரத்துசெய்தார். அதை எதிர்த்து ஆரிய வைசிய சமூகத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு ‘இந்த நீதிப் பேராணை மனு தகுதியற்றது’ என்று தள்ளுபடி செய்தார். அத்துடன் சாதி அல்லது சமூகங்களின் அடிப்படையில் தகன மேடைகள் ஒதுக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது எனவும் அறிவித்தார். எதிர்காலத்தில் நகராட்சி இந்த உத்தரவைக் கவனத்தில்கொண்டு சாதி அடிப்படையில் தகன மேடைகள் ஒதுக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

பொது தகன மேடைகளைக் குறிப்பிட்ட பகுதிகளின் தேவைக்காக நிர்வகிக்கும்படி நகராட்சிக்கு ஆணையும் பிறப்பித்தார். புகழ்பெற்ற திரைப்படப் பாடல் ஒன்றை நீதிபதி சந்துரு அந்தத் தீர்ப்பில் மேற்கோள் காட்டி இருந்தார் ’சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்பதுதான் அந்தப் பாடல். நீதிபதி சந்துருவின் தீர்ப்பு வெளியானபோது ஊடகங்கள் அதைப் பாராட்டிப் பேசின. 

அதன் பின்னர், வழக்கறிஞர் பொ.ரத்தினம் ‘பட்டியல் சமூக மக்களுக்குப் போதுமான மயான வசதிகள் செய்து தர வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அது பி.கே.மிஸ்ரா தலைமையிலான இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன்னால் விசாரணைக்கு வந்தது (பி.ரத்தினம் எதிர் தமிழ்நாடு அரசு மற்றும் இதரர்கள் 2009 (2) சிஜிசி 405) அதில் 2009ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சட்டப் பிரிவு 17 உணர்த்துவது என்ன? 

சாவுக்குப் பின்னும் தனி ஒதுக்கீடுகள் செய்வது பற்றி கண்ணோட்டங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என வருத்தப்பட்ட நீதிபதிகள் “அனைத்து விதமான தீண்டாமைகளும் ஒழிக்கப்பட வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17இன்படி தீண்டாமையினால் விளையும் அனைத்து ஊனங்களையும் கடைப்பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17இல் கூறப்பட்டுள்ள உணர்வுகளுக்கு ஏற்ப குடிமை உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. இந்நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17இல் உள்ளவற்றை நிறைவேற்றும் கடமைப் பொறுப்பு பொது அதிகாரிகள் அனைவருக்கும் உண்டு என்பதும், அவை உண்மை நோக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. அதேபோல குடிமை உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தையும், 1989ஆம் வருடத்திய பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் கறாராக அமல்படுத்த வேண்டும். எனவே, அரசமைப்புச் சட்டப் பிரிவும், குடிமை உரிமைப் பாதுகாப்புச் சட்டமும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் கடமை பொது அதிகாரிகளுக்கு உண்டு” என உறுதியாக அந்தத் தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும், அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டுகளாகத் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டுவருவது, முற்றிலும் அழிக்கப்படாதது துரதிஷ்டமானது என்பது பற்றி எவ்வித ஐயமும் இல்லை. மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வெகு சீக்கிரத்தில் இத்தகைய பொல்லாத நடைமுறைகள் ஒழிக்கப்படுவதும், எங்கெல்லாம் தடைசெய்யப்பட அந்த நடைமுறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் அவை அழிக்கப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்” என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

முதல்வருக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பு!

இந்தத் தீர்ப்புகள் வெளியான 2008, 2009 ஆகிய இரு ஆண்டுகளில் கலைஞர் மு.கருணாநிதிதான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாமல் இருந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துகளில் தேர்தலை நடத்தி அவற்றில் ஆதிதிராவிட சமூகத்தினரைத் தலைவர்கள் ஆக்கியதோடு அவர்களை அழைத்து சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழாவையும் நடத்திக் காட்டியவர் அவர். சமத்துவபுரங்களை அமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். வாழிடங்களில் சாதியை ஒழித்து சமத்துவபுரம் கண்ட அவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயம் பொது மயானங்களையும் உருவாக்கியிருப்பார். அந்த வரலாற்று வாய்ப்பு இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது. 

நகரப் பகுதிகளில் பெரும்பாலும் பொது மயானங்களே இருக்கின்றன. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் பிரிவு 116இல் பொது மயானங்களை உருவாக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே மயானங்களை அரசாங்கமே அமைப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17க்கு எதிரானது என்பதையும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டத்தையும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் செயல்படுத்திட தமிழ்நாடு முதல்வர் முன்வர வேண்டும். 

ஜாதியில் மேலோரென்றும், தாழ்ந்தவர் கீழோரென்றும்
பேதமில்லாது, எல்லோரும் முடிவினில் 
சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே
தூங்கிடும் வீடு!
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே.” 

என 1956இல் ஒலித்த பாடல் வெறும் திரைப்படப் பாடல் அல்ல, அதுதான் வாழ்வின் உண்மை என்பதை நிலைநாட்ட வேண்டும். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


4

2





ராஜேந்திர சிங்துர்நாற்றம்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்இந்தியா டுடேஎல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?ஜிசியாஆகார் படேல்சிஓபிடிபசுமை விருதுநாடு தழுவிய ஊரடங்குபத்ம விருதுகள் அருஞ்சொல்ஏ.கே.பட்டாசார்யா கட்டுரைசம்பாதேசிய அரசியல் கட்சிஅண்ணன் பெயர்விவிபாட்காங்கிரஸ் தலைவர்; கட்சியின் தலைவர்பின்நவீனத்துவம்மக்கள் திரள்வாக்காளர்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரஹண்டே - சமஸ் பேட்டிஉளவியல் காரணங்கள்சலுகைசார் முதலாளித்துவம்டி.கே.சிவகுமார்எருமைத் தோல்கோதுமைபாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டம்தென்னைமலக்குடல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!