கட்டுரை, நூல் விமர்சனம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
பார்ப்பனரும் தீண்டாமையும்
சாதியத்தின் வேர்களைப் பிடுங்கி விவாத மேஜையின் மேல் கொண்டுவந்து வைத்துப் பேச்சைத் தொடங்க அழைக்கும் நூல் சீனிவாச ராமாநுஜத்தின் 'சந்நியாசமும் தீண்டாமையும்'. தமிழில் தீண்டாமை மற்றும் பிராமணியம் தொடர்பாக வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்களில் ஒன்று இது. தொடர்ந்து ஆங்கிலத்திலும் அதை விரித்து எழுதினார் சீனிவாச ராமாநுஜம் (Renunciation and Untouchability in India: The Notional and the Empirical in the Caste Order, Routledge Publication) இந்த நூலுக்கு, ‘இபிடபிள்யு’ இதழில் நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியின் பேராசிரியரும் ஆய்வாளருமான சுகன்யா சர்பாதிகாரி. தமிழ் நூலுக்கும் பொருந்தும் அந்த விமர்சனத்தை முக்கியத்துவம் கருதி மொழிபெயர்த்து இங்கே தன் வாசகர்களுக்கு 'அருஞ்சொல்' தருகிறது.
தீண்டாமையின் தோற்றப்பாட்டியல் குறித்தும், சாதிய ஒழுங்கு குறித்தும் சீனிவாச ராமாநுஜம் முற்றிலும் புதிய பார்வையை முன்வைக்கிறார். விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் வரலாற்றுரீதியான, சமூகரீதியான அக்கறைகளை உளவியல்ரீதியான, தத்துவார்த்தரீதியான அக்கறைகளோடு மிக லகுவாக இணைத்து, சாதியம் குறித்து சமூக அறிவியல்கள் இதுவரை துருவியகழாத இருப்பாய்வியலார்ந்த (ontological) கேள்விகளை எழுப்புகிறது. பண்டைய கால, மத்திய காலப் பனுவல்களின் வாசிப்பை அடிப்படையாக வைத்து, பயனிலையை மையமாகக் கொண்டிருக்கும் சுத்தம்-அசுத்தம் சார்ந்த புரிதலிலிருந்து எழுவாயை மையமாகக் கொள்ளும் தீண்டவியலாமை (touch-un-ability) அடிப்படையிலான புரிதல் நோக்கி நகர்த்துவதே இந்தப் புத்தகம் முன்வைக்கும் புதிய பார்வையாகும். தீண்டுதல் எனும் செயல் கொண்டிருக்கும் மிக ஆழமான பிரச்சினையையும், குழப்பமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சந்நியாசியின் நிலையையும் மிக நுட்பமாக அணுகி, பார்ப்பனர் என்ற கருத்தமைவே தீண்டாமையை வரையறுப்பதாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. பார்ப்பனர் என்ற கருத்தமைவே சாதிய ஒழுங்குக்கான ‘மூல’மாகிறது. மூலத்தின் தீண்டவியலாமையைத் தன்வயப்படுத்திக்கொள்வதன் ஊடாகவும், அதை மறுவரையறைக்கு உட்படுத்துவதன் ஊடாகவுமே (பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத) சாதிகளும் சமயங்களும் உருவாயின.
இப்படியாக, தீண்டாமையின் இருப்பாய்வியலார்ந்த, அறரீதியான நிலையிடம் மற்றமையிலிருந்து சுயத்துக்கு நகர்த்தப்படுகிறது. இந்த நகர்வு, எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், இந்தியாவில் சந்நியாசத்துக்கும் தீண்டாமைக்கும் இடையே காணப்படும் உள்ளியல்பான உறவு குறித்து, இந்த உறவு மறைக்கப்பட்டிருக்கும் பண்பு குறித்து, பார்ப்பனியத்துக்குள்ளாகக் காணப்படும் இறுக்கங்கள் குறித்து என்று, பல நுட்பமான வாதங்களுக்குக் கொண்டுவிடுகிறது. பொதுவாக, முறைமையிலிருந்து விலகியிருப்பதாகப் பார்க்கப்படும் சந்நியாசம், படிநிலை முறைமையோடு தோற்றப்பாட்டியல் அடிப்படையில் உள்ளார்ந்து இணைந்திருப்பதாகிறது.
பார்ப்பனர்–சூத்திரர், பார்ப்பனர்–துறவி, குடும்பஸ்தர்–சந்தியாசி, சடங்குநிலை–சடங்கற்றநிலை, பண்பாடு–எதிர்-பண்பாடு, குழுமம்–தனிமனிதர், காடு–நகரம், தொடுகை–தீண்டுதல், தீண்டுதல்–தீண்டவியலா, வாழ்வு–மரணம் ஆகிய அச்சுகள் ஊடாகப் பார்ப்பனியம் செயல்படுவதாக ராமாநுஜம் வாதிடுகிறார். ‘லட்சிய’ப் பார்ப்பனர் என்ற கருத்து இந்த இருமங்களுக்கு அப்பாலானதாவதால் ஒருவிதமான மரணத்தின் ஊடாகவே இது சாத்தியப்படுகிறது. இதன் விளைவாக, ‘லட்சிய’ப் பார்ப்பனர் என்ற கருத்து தீண்டும் புலனை இழக்க வேண்டியிருக்கிறது; தீண்டவியலாப் புலனைக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுத்தம்–அசுத்தம் குறித்தவை தொடுகைப் பிரச்சினையோடு தொடர்புடையவையாக இருக்கின்றன என்றால், தீண்டவியலாப் புலனே சாதிய முறைமையை ஒழுங்கமைக்கிறது. பார்ப்பனர் என்ற கருத்தமைவு அல்லது லட்சியப் பார்ப்பனர் என்ற கருத்து அல்லது உயிரற்ற உயிரி (dead being) என்ற நிலைக்கும், தீண்டாமை என்ற நடைமுறைக்கும் இடையில்தான் — அதாவது பார்ப்பனர், தீண்டப்படாதவர் என்ற வகைமைகளை நடைமுறையில் உறுதிப்படுத்துகிறவர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும்கூட — சாதிகள் தம்மைப் பொருத்திக்கொள்கின்றன. இது இந்தப் புத்தகம் முன்வைக்கும் முற்றிலும் புதிய பார்வை.
மிகவும் சுவாரஸ்யமாக, சாதிய நடைமுறைகளுக்குக் குடும்பஸ்தனே மையமாக இருக்கிறான் என்றாலும்கூட, சந்நியாசி மீது கவனம் குவிக்கும் பேட்ரிக் ஒலிவெல், வீணா தாஸ், சுந்தர் சருக்கை ஆகிய மூவரின் எழுத்துகளை ராமாநுஜம் அடைப்படையாக எடுத்துக்கொள்கிறார். சந்நியாச உபநிடதம், தர்மசாஸ்திரங்கள், தர்மாரண்ய புராணம் ((Dharmaranya Purna) குறித்த வீணா தாஸின் வாசிப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, குடும்பஸ்தன்–சந்நியாசி பிரச்சினை தொடர்பான விவாதங்களை மூன்று காலகட்டங்களாக ராமாநுஜம் அடையாளம் காண்கிறார்: சங்கரருக்கு முன், சங்கரருக்குப் பின், காலனியம்/பின்–காலனியம். இதில் முதல் இரண்டு காலகட்டங்கள் மீதே இவர் கவனம் குவிக்கிறார். முதல் கட்டத்தில், சமூக வேறுப்பாடுகள் சுத்தம்–அசுத்தம் சார்ந்தவையாக இருக்கின்றன. இந்தக் கட்டத்தில் பார்ப்பனரும் சந்நியாசியும் இரண்டு தனித்த வகைமைகளாகிறார்கள். இதில் பார்ப்பனர் என்பது சடங்குநிலையைச் சார்ந்திருக்கிறது என்றால், சந்நியாசி சடங்குகளற்ற நிலையைச் சார்ந்திருக்கிறது. இரண்டாம் கட்டத்தில், பார்ப்பனர், சந்நியாசி இரண்டு நிலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. தீண்டவியலாமை நடைமுறைரீதியாகவும் கருத்தாக்கரீதியாகவும் மெய்யான ஒன்றாகிறது. சுத்தம்–அசுத்தங்களும் சாதி வரையறைகளும் இதற்கேற்றாற்போல் மறுஒழுங்குக்கு உட்படுத்தப்படுகின்றன.
பார்ப்பனர் என்ற அடையாளத்தை வடிவமைக்கும் பார்ப்பனியத்தின் உள் உரையாடல்களையும் முரண்பாடுகளையும் மிக நுட்பமாக விவரிக்கிறது இயல்–1. வேதப் பார்ப்பனியத்தின் சமூக / இறையியல் சட்டகம் ஆண் குடும்பஸ்தன் என்பவன் பிரபஞ்சத் தளத்திலான வேள்வியில் ஈடுபடுவதாக வரையறுத்தது என்றால், துறவறமோ வேள்வியையும் இனப்பெருக்கத்தையும் நிராகரித்தது. இருந்தும், கி.மு. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் நகரம் சார்ந்த சமூக ஒழுங்கு ஒன்று புதியதாக உருக்கொண்டது. இது, சடங்குகளற்ற தன்மையையும், தனிமனிதர் ஒழுக்கத்திலான அறத்தையும் முன்வைத்தது. அரசர், வியாபாரி, துறவி போன்றவர்கள் தனிமனிதர்களாக வெளிப்பட்டார்கள். இந்தப் புதிய உலகத்துக்கு ஈடுகொடுக்க, பார்ப்பனர்களும் தங்களைத் தனிமனிதர்களாக வரையறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சடங்குகளற்ற நகர உலகத்துக்கு ஏற்றாற்போல் சடங்கு சார்ந்த கிராம ஒழுங்கு தன்னை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படி, பல நூற்றாண்டுகளாக உரையாடி பார்ப்பனியம் எவ்வாறு ‘லட்சிய’ப் பார்ப்பனர் என்ற கருத்தை வளர்த்தெடுத்தது என்று — அதாவது, பார்ப்பனக் குடும்பஸ்தன் எப்படி சந்நியாசியை உள்ளடக்கியவராகிறார் என்று — நூலாசிரியர் விவாதிக்கிறார். குடும்பஸ்தனின் உடல் பெளதிகத்தன்மையிலானது என்றால், சந்நியாசி பெளதிகத்தன்மையற்று பிரேதா நிலையின் (வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயானதாக இருப்பதால் இது தீண்டப்பட முடியாத நிலையாகிறது) திரளுருவாக வேண்டும் என்று சங்கரர் வாதிடுகிறார். பார்ப்பனியத்தின் பகுதியா அல்லது பார்ப்பனியத்திலிருந்து விலகியா என்று தீர்மானிக்க முடியாத குழப்பமான நிலைப்பாட்டின் திரளுருவாக ஒரு சந்நியாசி இருக்க வேண்டியுள்ளது; இதனால், சந்நியாசி நிலை என்பது நிரந்தரமாகத் தீண்டாப் புலனைக் கொண்டிக்கும் பிரேதா நிலையாகக் கருத்தாக்கம் செய்யப்படுகிறது. இங்கு, பெளதிக இருப்பைக் கொண்டிருக்கும் பார்ப்பனக் குமுகம் குறிப்பானாகிறது என்றால், பெளதிக இருப்பைக் கொண்டிராத உயிரற்ற உயிரியான சந்நியாசி குறிக்கப்படுவதாகிறது. இவ்விரண்டு நிலைகளும் ஒரே உடலுக்கு நிலைகொண்டிருக்க வேண்டும் என்றால், அந்த உடல் தீண்டாப் புலனைக் கொண்டிருக்கும் சடலமாக இருக்க வேண்டியுள்ளது.
குடும்பஸ்தனும் சந்நியாசியும்
தர்மசாஸ்திரங்களின் அடிப்படையிலும், உள்ளே–வெளியே குறித்து சருக்கை முன்வைக்கும் கருத்தாக்கத்தின் அடிப்படையிலும், சுத்தம்–அசுத்தத்தைச் சார்ந்திருக்கும் குடும்பஸ்தனுக்கும் தீண்டாமையைச் சார்ந்திருக்கும் சந்நியாசிக்கும் இடையிலேயான வேறுபாடுகளை இயல்–2 விவாதிக்கிறது. உடலுக்கு வெளியே இருப்பதையெல்லாம் அசுத்தமாகப் பார்த்து, தொடுகை தொடர்பான விதிகளைப் பார்ப்பனக் குடும்பஸ்தனின் நிலை உருவாக்கியது என்றால், சந்நியாசி நிலையோ உடலை நிலையற்றதாகவும் அசுத்தமானதாகவும் பார்த்தது. சந்நியாசி இப்படியாகவே, தீண்டவியலாமையை இருப்பாய்வியலார்ந்து கைக்கொண்டு அவதிப்பட வேண்டியிருக்கிறது. பயனிலையை மையமாகக் கொண்டிருக்கும் தொடுகையில் தூய்மைப்படுத்திக்கொள்வதும் தூய்மையாவதும் தொடர்ந்து சாத்தியப்படுகிறது என்றால், தீண்டாமையில் தூய்மைப்படுத்திக்கொள்வது என்ற கருத்துக்கே இடமில்லை. தர்மசாஸ்திரங்கள் தொடுகை அடிப்படையிலான கதையாடல்களை முன்வைத்தன என்றால், தீண்டல் நோக்கி தன் கவனத்தை நகர்த்தியது மைத்ரேய உபநிடதம். அனுபவத்தின் உள்ளியல்பான ஒன்றாகத் தீண்டுதல் இருப்பதால், இது இன்னும் கூடுதலான பதற்றங்களை உருவாக்குகிறது. தத்துவார்த்தப் பிரதிகளைத் தோற்றப்பாட்டியலார்ந்த அக்கறைகளோடு இணைத்துப்பார்ப்பதே ராமாநுஜத்தின் அசலான பார்வையாகும். பார்ப்பனர் என்ற உடலுக்குள் இரண்டு வேறுபட்ட கதையாடல்கள் [பார்ப்பன குடும்பஸ்தன் மற்றும் சந்நியாசி] ஒன்றிணைக்கப்படுவதால், அந்த உடல் தீண்டவியலாப் புலனைக் கொண்டிருக்கும் பிணமாகிறது என்று ராமாநுஜம் சுட்டிக்காட்டுகிறார். ஆக, தீண்டாமையை நடைமுறை சார்ந்து தலித்துகள் மட்டுமே அனுபவிப்பதாகச் சுருக்காமல், பார்ப்பனியக் கதையாடலுக்குள்ளிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட கருத்தாக்கமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
குஜராத்தில் 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட தர்மாரண்ய புராணம் குறித்த வீணா தாஸின் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டது இயல்–3. இந்தப் புராணத்தில் சமணத் துறவிகள், பெளத்தத் துறவிகள் தனியே முன்வைக்கப்படுவதுபோல், சந்நியாசி குறித்து ஏதும் தனியே சொல்லப்படவில்லை. ஏனெனில், இந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனக் குடும்பஸ்தனும் சந்நியாசியும் ஒன்றெனக் கலந்துவிட்டதாக நூலாசிரியர் வாதிடுகிறார். அதாவது, சந்நியாசி பண்பின் திரளுருவாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்றால், சூத்திர வணிகர்கள் குடும்பஸ்தர்களாகிறார்கள். அதுவரை பார்ப்பனர், சந்நியாசி என்று இரண்டு தனித்த வகைமைகளாக இருந்தவை சங்கரருக்குப் பிறகான பார்ப்பனர்களிடம் ஒன்றெனக் கலந்திருப்பதால், இந்தப் புதிய பார்ப்பனர்கள் அரசனோடு தெளிவற்ற உறவைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. மேலும், சந்நியாசி என்பவர் முறைமைக்கு வெளியே இருப்பவராக அல்லாமல், ‘இருப்பதன் அளவீடாக’ மாறுகிறார் (p.63). ஏனெனில், சங்கரருக்குப் பிறகு [பார்ப்பன] குடும்பஸ்தனின் அந்தஸ்து சடங்குகளைச் சார்ந்திராமல், சந்நியாசிபோல் ஆவதைச் சார்ந்திருப்பதாகிறது. தீண்டவியலாப் புலனைக் கொண்டிருக்கும் பார்ப்பனர் என்ற கருத்தமைவே, மூலமான எழுவாயாக்கப்படுகிறது. குடும்பஸ்தப் பார்ப்பனர் தனது சமூக இருப்பில் இந்தத் தீண்டவியலாப் புலனைக் கொண்டிருப்பவராகிறார். சாதிகள் தீண்டாமை அடிப்படையிலேயே ஒழுங்கமைக்கப்படுகின்றன.
நடைமுறையானதும் கருத்தாக்கரீதியானதும்
தீண்டாமை குறித்து முற்றிலும் புதிய பார்வையை முன்வைக்கும் சருக்கையின் வாசிப்பைப் பெருமளவு சார்ந்திருக்கிறது இயல்–4. பயனிலையை மையமாகக் கொண்டு, தொடுகை அடிப்படையில் (சுத்தம்–அசுத்தம்) சாதியத்தை நடைமுறை சார்ந்து அணுகுவதற்கும், எழுவாயை மையமாகக் கொண்டு, தீண்டுதல்/ தீண்டவியலா என்ற கருத்தாக்கரீதியான புரிதலுக்கும் இடையே காணப்படும் முக்கிய வேறுபாட்டை ராமாநுஜம் நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறார். தீண்டாமையின் உண்மையான புலம் ஓர் எழுவாயை, அதாவது லட்சியப் பார்ப்பனர் என்ற கருத்தைச் சார்ந்திருக்கிறது என்பதே ராமாநுஜம் முன்வைக்கும் வாதமாகும். லட்சியப் பார்ப்பனர் என்பவர் சுத்தம்–அசுத்தம் அடிப்படையில் பயனிலையைத் தொடுவதோடு தொடர்புடைய தீண்ட முடியாத தற்காலிக நிலையைக் கொண்டிருப்பவர் அல்ல; அவர் நிரந்தரமாகத் தீண்டவியலாமையைக் கொண்டிருப்பவராகிறார். தீண்டாமைக்கான லட்சிய எழுவாய் என்பது தீண்டவியலாப் புலனைக் கொண்டிருக்கும் பிணமாகவே இருக்க முடியும். இப்படியாக, வேறு வழியில்லாமல் தீண்டப்படாதவர்கள் இதற்குப் பின்துணையாக்கப்படுகிறார்கள். ஆக, தீண்டாமை என்பது நடைமுறை சார்ந்து குறிப்பிட்ட சாதியைச் சார்ந்திருக்கும் ஒன்றாக இல்லாமல் அது சாதிகளைக் கட்டமைக்கும் அடிப்படைக் கொள்கையாகிறது. மேலும், இந்தியாவில் தீண்டாமை என்பது தீண்டுதல் என்ற தோற்றப்பாட்டியலோடு தொடர்புடையதாக இருப்பதால், இது மற்றமையைவிட சுயத்தைக் கேள்விகேட்க வேண்டியதாகிறது. மேலும், தீண்டுதல் என்ற அனுபவமே தீண்டவியலா என்ற மென்படலத்தை அதற்குள்ளாகக் கொண்டிருப்பதால், ஒரு சுயத்தைத் தீண்டாமை எப்போதும் பதற்றத்தில் வைத்திருக்கிறது; குமுகங்களுக்கு இடையேயான உறவை வடிவமைப்பதில் தொடர்ந்து பங்காற்றிவருகிறது.
இயல்–5 விளக்குவதுபோல், ‘லட்சிய’ப் பார்ப்பனர் என்ற கருத்தமைவே மூலமாகிறது. மத்திய காலத்திலிருந்து பல்வேறு சமயங்களும் மடங்களும் இந்த மூலத்தை பல்வேறு விதமாக மொழியாக்கம் செய்து அதன் உண்மையான அர்த்தத்தை மீட்டெடுக்க முயன்றன. ஆனால், இந்த முயற்சிகளெல்லாம் நடைமுறை சார்ந்து பார்ப்பனர்களை விமர்சித்தனவே தவிர பார்ப்பனர் என்ற கருத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இப்படியாகவே இவை பார்ப்பனியச் சட்டகத்தைத் தக்கவைத்துக்கொண்டன. இப்படி, உயிரற்ற உயிரியின் சாரத்தை மீட்டெடுக்க முயலும் ஒரு எழுவாய், அதன் சாரமான தீண்டவியலாமையைத் தன்வயப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், ‘லட்சிய’ப் பார்ப்பனருக்கும் தீண்டவியலாமைக்கும் இடையேயான உறவு தன்வயப்படுத்திக்கொள்ளும் செயலில் மறைக்கப்பட்டிருப்பதாக இருக்கிறது. மறைக்கப்பட்டிருக்கும் காரணத்தால், ஒவ்வொரு மொழியாக்கமும் அதை ‘மூல’மாகக் கோரும் அந்தஸ்தை சாத்தியப்படுத்துகிறது. இதுவே, பார்ப்பனியத்தை மேலும் பலம்கொண்டதாக்குகிறது. எழுவாயை மையமாகக் கொண்ட தீண்டவியலாமையை மொழியாக்கம் செய்ய முடியாது என்பது கருத்தாக்கத் தளத்தில் — அதாவது, ஒரு மூலமாகக் கணிதவியலின் புனிதத்தன்மை எப்படிக் கடந்த நிலையைச் சார்ந்திருக்கும் ஒன்றாகிறதோ, மற்றவற்றிடமிருந்து மூடிக்கொண்டு உயிரற்ற உயிரியாகும் ஆற்றலைச் சார்ந்திருக்கும் ஒன்றாகிறதோ, அதுபோல் தீண்டவியலாமையும் இருப்பதால், அது கணிதவியலுக்கு மிக நெருக்கமானதாகிறது.
சாதியத்தை சுயதூய்மை சார்ந்து கருத்தாக்கம் செய்த காந்தியமும், சுயமரியாதை சார்ந்தும் கருத்தாக்கம் செய்த அம்பேத்கரியமும்கூட, ஒரு எழுவாய் கொண்டிருக்கும் தீண்டவியலாமையின் தோற்றப்பாட்டியல் அக்கறைகளுக்கு ஓரளவுக்கு மேல் முகம்கொடுக்கவில்லை என்கிறார் ராமாநுஜம். காந்தி தீண்டுதலை மக்கள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் பயனிலையை மையமாகக் கொண்டிருந்தார் என்றால், அம்பேத்கர் தீண்டுதல் அல்லது தீண்டவியலா ஆகிய இரண்டுக்குமே பயனிலையாக இருக்க மறுத்துவந்தார். அதே சமயத்தில், ஒரு எழுவாயின் இருப்பாய்வியலார்ந்த அடிப்படையை அம்பேத்கரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆக, நவீனக் கல்விபுல முன்வைப்புகள் பயனிலையை மையமாகக் கொண்டிருக்கும் சுத்தம்–அசுத்தம் அடிப்படையில் நடைமுறை சார்ந்து சாதியத்தை அணுகுகின்றன என்றால், சாதிய சுயங்களைத் தோற்றப்பாட்டியல் அடிப்படையில் மிக நுட்பமாகக் கருத்தாக்கம் செய்கிறார் ராமாநுஜம். அதாவது, பார்ப்பனக் குடும்பஸ்தர்கள் தீண்டவியலாமையைக் கொண்டிருக்கும் எழுவாயாகிறார்கள். அதே சமயத்தில், பார்ப்பனர் என்ற கருத்தமைவு கொண்டிருக்கும் தீண்டவியலாமை பின்துணையாக்கப்படுகிறது. பிற சாதிகள் எல்லாமும் நடைமுறை சார்ந்த தீண்டாமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இந்த நூல் வரலாற்றுரீதியாக தீண்டாமையைத் தோற்றப்பாட்டியல் அடிப்படையில் வாசிக்கும் மிக நுட்பமான, அசலான வாசிப்பாகிறது. சாதியம் குறித்து வாசிப்பவர்களும், பொதுவாக இந்தியாவின் சமூக வாழ்வு குறித்து வாசிப்பவர்களும் இந்த நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
விமர்சனபூர்வமாகச் சிந்திப்பதென்றால், இந்தக் கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள முடியும்: தீண்டவியலாமை ‘லட்சிய’ப் பார்ப்பன நிலையாக இருப்பதால், இதுவே விருப்புறுதி நிலையாகவும் இருக்கிறதா? சருக்கையும் (‘விரிசல் கண்ணாடி’ நூலில் உள்ள ‘தீண்டாமையின் தோற்றப்பாட்டியல்’ இயல்) ராமாநுஜமும் தீண்டவியாப் புலனை, தீண்டும் அனுபவத்திலேயே உள்ள மறக்கப்பட்ட மென்படலமாகக் கருத்தாக்கம் செய்வதால், இது எழுவாயின் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒன்றைக் குறிப்பதாக இல்லையா? தீண்டவியலாப் புலனே சாதிய சுயங்களை ஒழுங்கமைக்கிறது என்றால், அது உள்ளியல்பானதாகவும், கைக்கொள்ள முடியாததாகவும், மொழியாக்கம் செய்ய முடியாததாகவும், அறரீதியாக நிலைநிறுத்தப்படுவதாகவும் இருக்கிறது என்றால், சுத்தம்–அசுத்தம் அடிப்படையிலான கதையாடலோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மேலும் கடினமாகச் செயலாகிறதா? என்னுடைய புரிதலில் இந்த நூல், அது முன்வைக்கும் வாதங்களுக்குள்ளிருந்து சொல்வதென்றால், முற்றிலும் வேறு விதமான அரசியலை முன்வைக்கிறது. சாதிய உறவுகளைத் தீண்டாமையே வடிவமைக்கிறது என்றால், எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான பாகுபாடும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது. வரலாற்றுரீதியாகச் சமூக இயக்கங்கள் எவையும் எழுவாயை மையமாகக் கொண்டிருக்கும் தீண்டாமையின் பண்பை மொழியாக்கம் செய்ய முடியாததால், அவை கருத்தாக்கத் தளத்தில் பார்ப்பனியத்தின் பகுதியாகவே தொடர்கின்றன. இப்படியாகத்தான் தோற்றப்பாட்டியல் அடிப்படையிலான உலகம் மீண்டும்மீண்டும் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆக, இந்த நூல் தீண்டவியலா சுயத்தின் இக்கட்டான நிலையை நாம் மிக நுட்பமாக அணுக வேண்டிய அறத்துக்குக் கருத்தாக்கரீதியாக வாதிடுகிறது என்றே சொல்வேன்.
நூல்: ரினென்சியேசன் அண்ட் அன்டச்சபிலிட்டி இன் இந்தியா
ஆசிரியர்: சீனிவாச ராமநூஜம்
பதிப்பகம்: ரௌட்லெட்ஜ்
பக்கம்: 172
விலை: 995
இந்நூல் முதன்முதலாக ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ எனும் தலைப்பில் தமிழில் எழுதப்பட்டு, பிறகு ஆங்கிலத்தில் வெளியானது.
நூல்: சந்நியாசமும் தீண்டாமையும்
ஆசிரியர்: சீனிவாச ராமநூஜம்
பதிப்பகம்: மாற்று
பக்கம்: 244
விலை: 200
தொடர்புக்கு:
பரிசல் புத்தக நிலையம்,
71-ஏ, ஆர்.கே. மட் சாலை,
மைலாப்பூர், சென்னை.
எண்: 9382853646
தமிழில்:
சீனிவாச ராமாநுஜம்

1

3





பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 3 years ago
I think that this Review is on the English version of the book and the translation of its content in Tami is somewhat harder to comprehend.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ezhil 3 years ago
இந்தக் கட்டுரைக்கே ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு தேவை என்பதுதான் இதன் சிறப்பு
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.
SUNDARAN M 3 years ago
விமர்சிக்கும் பாங்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. எழுவாய், பயனிலை என ஒரு மொழியின் இலக்கணத் தன்மையோடு ஒப்பிட்டு பண்பாட்டுத் தளத்தை விமர்சித்திருப்பது வியப்பளிக்கிறது. எழுவாயை, பயனிலையைப் பலவிடங்களில் ஒப்பீடு செய்யும் விமர்சகர்.செயப்படுபொருளையும் ஒப்பிட்டிருந்தால்...... செயப்படுபொருளமைந்த ஒரு சொற்றொடர் எவ்வாறு தெளிவாக முழுமை பெறுமோ அது போல விமர்சனமும் இன்னும் முழுமை பெற்றிருக்கும். நூல் விமர்சனம் நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. 🎉
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.