இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு
அரசு மருத்துவமனையின் சுத்தம் ஒரு கூட்டுப் பொறுப்பு: டீன் எதிர்வினை
திரு.வ.ரங்காசாரி எழுதிய ‘மழைநாளில் மருத்துவச் சித்திரவதைகள்’ கட்டுரைக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதன்மையர் டாக்டர் இ. தேரணிராஜன் மிகுந்த பொறுப்புணர்வோடு ஓர் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். மருத்துவமனையில் நோயாளிகள் - உடனிருப்பவர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டிருக்கிறார். கூடவே அரசு மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ‘அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் சமூகத்தின் முக்கியமான அங்கங்கள். அவற்றையும், அவற்றில் பணியாற்றுவோரின் உரிமைகளையும் பாதுகாப்பது சமூகக் கடமை’ என்ற உணர்வையே ‘அருஞ்சொல்’ கொண்டிருக்கிறது. இதே உரிமையுடனேயே குறைகளையும் அது சுட்டிக்காட்டுகிறது. டாக்டர் தேரணிராஜனின் கடிதம், மிக ஆக்கபூர்வமானது; வரவேற்புக்குரியது. அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் நிலவும் சிரமங்களைப் பொதுச் சமூகம் அறிந்துகொள்ள இந்தக் கடிதம் உதவுகிறது. உண்மையில் மக்களுக்கும் அரசின் அங்கத்தினருக்கும் இடையே இப்படியான ஒரு பாலமாக, உரையாடல் களமாகச் செயல்படவே ‘அருஞ்சொல்’ விரும்புகிறது. உரையாடல்கள் தொடரட்டும். - ஆசிரியர்
⁋
திரு.வ.ரங்காச்சாரி அவர்களுக்கு வணக்கம். ‘மழை நாளில் மருத்துவமனை சித்திரவதைகள்’ என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் கிடைக்கப்பெற்றேன்.
முதலில், உங்கள் சகோதரரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சஞ்சலமடைந்த மனநிலையில் தாங்கள் தெரிவித்துள்ள புகார்களுக்கு , மருத்துவமனையின் முதல்வர் என்ற முறையில், அவசியமான சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன் . ‘தூய்மையே இறைமை’ என்ற மனோபாவத்துடன் நானும் என் குழுவினரும், இம்மருத்துவமனையின் தூய்மையைப் பேண பற்பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.
பரந்து விரிந்துள்ள இம்மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியையும் தினந்தோறும் நானே நேரில் சென்று ஆய்வுசெய்வது, என் அன்றாடப் பணிகளில் மிக முக்கியமான ஒன்று. தாங்கள் குறிப்பிட்டுள்ள கழிப்பறையும் என் நேரடி ஆய்வில் தினந்தோறும் இடம்பெறும் ஒன்று தான் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். அக்கழிப்பறையை அடிக்கடி சுத்தம்செய்ய பிரத்தியேகமாக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கழிப்பறையின் வெளிப்புறச் சுவரில், முகம் பார்க்கும் கண்ணாடியைப் பொருத்தியதும், பல் துலக்க ஏதுவாக இரண்டு வாஷ்பேஸின் பொருத்தியதும் சமீபத்தில் நிகழ்ந்த ஏற்பாடுகள். பின் ஏன் இந்தக் குறைபாடுகள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இம்மருத்துவமனக்கு நாள்தோறும் 10,000 - 15,000 நபர்கள் வருகிறார்கள்.
இந்த எண்ணிக்கை, நகரின் ஆகப் பெரிய தனியார் மருத்துவமனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பற்பல மடங்கு அதிகம். மருத்துவமனைக்கு அன்றாடம் வரும் நபர்கள் பற்பல வகையினர். அவர்களில் பெரும்பாலோர் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை விதிகளைக்கூட அறவே பின்பற்றாதவர்கள் என்பது வேதனையும் விரக்தியும் தரும் அப்பட்டமான உண்மை.
அறியாமையால் அசுத்தம் செய்பவர் சிலர்; அலட்சியத்தால் தவறிழைப்பவர் சிலர்; ஆணவத்தால் விதி மீறுபவர் சிலர். மருத்துவமனை வளாகத்தில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதால், கழிப்பறையை, புகைப்பிடிக்கும் இடமாகப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. அதைவிடக் கொடுமை மது பாட்டில்களைக் கழிப்பறையில் வீசிச்செல்லும் அநீதி.
தவறிழைக்கும் நபர்களிடம் அவர்களது தவறைச் சுட்டும் போது எங்கள் பணியாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் , பெரும்பாலும் மிக்க வருத்தத்தையும் மனச்சோர்வையும் ஒருங்கே தருவதாகவே இருக்கின்றன. பொதுநலன் கருதி அளிக்கப்படும் அறிவுறுத்தல்களை, தம் மீது ஏவப்பட்ட தனிநபர் விமர்சனங்களாகக் கருதும் அவலமான மனப்பாங்கு பரவலாக உள்ளது.
அநாகரிகமான பேச்சுகளையும் நியாயமற்ற ஏச்சுகளையும் கேட்டுக்கேட்டு எங்கள் ஊழியர்கள் பரிதவித்துப்போவது நிஜம். (இன்று மதியம் நான் ஆய்வு மேற்கொண்டபோதுகூட, ஒரு நபர், பீடித்துண்டை உள்ளே வீசிவிட்டு, தள்ளாடியபடியே வெளியில் வந்ததை எதிர்கொண்டேன்) நீங்கள் குறிப்பிட்டுள்ள உடைந்த கதவு, ஒரு தன்னிலை மறந்த பயனாளியின் அராஜகச் செயலின் விளைவுதான். கொசுக்கள் பெருக்கத்தைக் குறைக்க, கொசு மருந்துப் புகைத்தெளிப்பை அன்றாடம் மேற்கொள்கிறோம். அதில் மேலும் அதிக கவனம் செலுத்துவோம். நாய்களை அப்புறப்படுத்த ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஆனால், தற்போதைய வழிகாட்டுதல்களின்படி , நாய்களைப் பிடித்துக்கொண்டுபோய், கருத்தடை செய்து திரும்பவும் கொண்டு வந்து விட்டுச்செல்கிறார்கள். திரும்பவும் நாய்களை அகற்ற முயற்சி மேற்கொள்வோம்.
நோயாளிகளின் உடன் வருவோரின் நலன் காத்தல், மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே. இம்மருத்துவமனையில் 2,000 — 3,000 உள்நோயாளிகள் உள்ளனர். அனைத்து நோயாளிகளுக்கும் (உடன் இருக்கத் தேவையே இல்லாத மிதமான பாதிப்புடன் உள்ள நோயாளிகள் உட்பட) குறைந்தது ஒரு நபராவது உடன் உள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு வசதிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவால் என்பதை உணர்த்த விரும்புகிறேன். மருத்துவமனையின் அனைத்து வராண்டாக்களிலும், அடுக்குக்கட்டட வளாகங்களில் உள்ள காத்திருப்போர் அரங்கங்களிலும் மற்றும் வெளிப்புறப் பாதை ஓரங்களிலும், உடன் வருவோருக்காக வரிசை நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
முப்பத்தைந்து இடங்களில், உடன் வருவோருக்காகவென்றே அனைத்து வசதிகளுடன் (மேசை, நாற்காலி, மின்விசிறி, தூய்மையான குடிநீர், கை கழுவ வாஷ் பேசின்) கூடிய மிகத்தூய்மையான உண்ணும் அறைகள் சமீபத்தில் அமைக்கப்பட்டு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுதல்கள் கிடைக்கப்பெற்றோம். பயனாளிகளின் கருத்துகளையும் குறைகளையும் தெரிந்துகொள்ள 25 இடங்களில் புகார்/ ஆலோசனைப் பெட்டிகள் வைத்துள்ளோம். பெறப்படும் குறைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட செயல்கள். மேலும் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
⁋
இம்மருத்துவமனை யாருக்கும் அந்நியப்பட்டுவிடவில்லை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கையுடன் நாடிவரும் மருத்துவமனையாகவே திகழ்கிறது. தாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளில் நியாயம் இருந்தாலும், அக்குறைகளை, ஆகப் பெரிய இம்மருத்துவமனையின் மொத்தச் செயல்பாடுகளின் பிரதிபலிப்பாகச் சித்தரிப்பது ஆழ்ந்த வருத்தத்தையும் மனச்சோர்வையும் அளிக்கிறது. கழிப்பறை நிலவரம் குறித்தான எனது கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் . தனி நபர் ஒழுக்கம், தனி மனித உரிமை குறித்த சரியான புரிதல், பொது இடங்களில் விதிகளை மீறாத தன்மை போன்ற விழுமியங்களை ஊட்டுவதும் வளப்படுத்துவதும் தான் இதற்கான நிலையான தீர்வு. அந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த சமுதாயமும் முனைப்புடன் முயல வேண்டும். நன்றி. வணக்கம்.
- இ.தேரணிராஜன், முதன்மையர், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, சென்னை.







பின்னூட்டம் (8)
Login / Create an account to add a comment / reply.
பொன்.முத்துக்குமார் 3 years ago
முதலில் பொறுப்போடு பதில் தந்திருக்கும் மருத்துவர் அவர்களுக்கு பாராட்டுகள். // அறியாமையால் அசுத்தம் செய்பவர் சிலர்; ....... அநாகரிகமான பேச்சுகளையும் நியாயமற்ற ஏச்சுகளையும் கேட்டுக்கேட்டு எங்கள் ஊழியர்கள் பரிதவித்துப்போவது நிஜம். // இவை நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கவும் படலாம். பிழையே அல்ல. பெரும் சவால்களுக்கிடையே ‘பொது மக்கள் சேவை’ என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இப்படி அலட்சியமாக சீரழிக்கப்படுவதற்கல்ல. அப்படி அதன் மதிப்பு தெரியாமல் சீரழிப்பவர்கள் அதனுள்ளே காலடி வைக்கவும் தகுதியற்றவர்கள். அப்படி செய்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினாலும் - ஏன் சிறையில் வைத்தாலும், பிழையே அல்ல. இதுபோன்ற விஷயங்களிலாவது செட்டிநாட்டுக்கவி சொன்னதுபோல, ‘ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி சவுக்கெடுக்கவேண்டும்’. ஆம், நாம் இன்னமும் கோலெடுத்தால் மட்டுமே ஆடும் குரங்குகள்தான். இதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நோயாளிகளோடு உடன் வருவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் நலம். நோய் வகைமையைப்பொறுத்து மருத்தவமனையே இத்தனைபேர்தான் உடன் இருக்கலாம் என்று ஒரு முறைமையைக்கொண்டுவரலாம். இதை மிகத்தீவிரமாக கண்காணித்து அமல்படுத்தலாம். அப்படி உடன் வருவோர்க்கு டோக்கன் போல ஏதாவது அடையாள அட்டை கொடுத்து, அதை வைத்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகள், 10,000 - 15,000 பேரில் தேவையின்றி வருபவர்களை வருவதை நிறுத்தும்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Melkizedek 3 years ago
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிய கோபுரத்தில் கழிவறைகள் கொஞ்சம் பரவாயில்லை மற்ற இரு கோபுரங்களிலும் கழிவறைகள் படு மோசம்.... மொத்தம் 40 அல்லது 50 படுக்கைகள் கொண்ட அறைக்கு ஐந்து கழிவறைகள், இரண்டு குளியல் அரைகள், ஒன்று அல்லது இரண்டு வாஷ் பேசின் உள்ளது. இவைகளில் உடைந்து போன கோப்பை, உடைந்த கதவு, தாழ்பாழ் இன்மை இன்னும் பிற காரணங்களால் ஒன்றிரண்டு பயன்படுத்த முடிவதில்லை. மீதம் இருப்பது மட்டுமே நோயாளிகள்,உடன் இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்களால் ஆண் பெண் பேதமின்றி பயன்படுத்தபடுகின்றது.தினமும் ஒரு வேலை மட்டும் சுத்தம் செய்யபடுகிறது. கழிவறையானது சுத்தம் செய்யப்பட்ட இரண்டு மூன்று மணி நேரங்களிலேயே குமட்டல் நாற்றதுடன் சளி மற்றும் வாந்தி துளிகளுடன் , சில வேலைகளில் சிதறிய மலம் போன்ற அசுத்தங்களுடன் காணப்படுகிறது.குளியல் அறையோவெனில் சிதறிய உணவுகள் மற்றும் சளி போன்ற அசுத்தங்களும் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன நாற்பது நோயாளிகள் என்றால் நாற்பது உதவியாளர்கள் இது தவிர பார்வையாளர்கள் பணியாளர்கள் பயன்படுத்துவதால் நிச்சயமாக கழிவறைகளின் எண்ணிக்கை போதாதுதான்... ஆனால் கழிவறைகளை பராமரிக்க இன்னும் கூடுதல் நிதி செலவிட வேண்டும், மூன்று வேலை சுத்தம் செய்தல் வேண்டும், பாத்ரூம்களில் உணவு பாத்திரங்களை கழுவ தடை செய்ய வேண்டும், அண்டு உருண்டைகள் பயன்படுத்த வேண்டும், தரமான பக்கெட் கப் வைக்க வேண்டும், கழிவறைகளுக்கு ஒரு பாதுகாவலர் போட வேண்டும், அலட்சியத்தால் ஆணவத்தால் மீறுவோரிடம் கட்டணம் வசூழிக்க வேண்டும் நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் .... நன்றி 🙏🏻
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
விமர்சனத்துக்கு நேர்மையாக முகங்கொடுத்து பிரச்சினையின் இன்னொரு பக்கத்தையும் உணர்த்தியமைக்கு நன்றி. பிரச்சினை ஊழியர் பற்றாக்குறை அல்ல; குடியுணர்வின்மை. இது பொதுச்சொத்து என்பதால் வரும் மெத்தனம். ஒப்புநோக்கினால் திருமண மண்டபம் முதல் எல்லாப் பொதுக்கழிப்பறைகளிலும் உள்ள பிரச்சினை. கழிப்பறையைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் குறையைச் சுட்டிக்காட்டுகையில் வரும் எதிர்வினைகள் இழிவானவையென்றால் அது சமூகக்குற்றம். உடலுழைப்பையே இழிவாகப்பார்க்கும் சமூகத்தில் துப்புரவாளர்களுக்கு நிகழும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுக்கு பணி நிரந்தரமும், மதிப்பூதியமும் அதிகாரமும் வழங்கப்படுவதை நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். படத்திலுள்ளதுபோலல்லாமல் சுகாதார நோக்கிலேனும் ஷுவுடன் ஒரு சீருடையும் கையில் ஒரு தடியும் - யாரையும் தாக்க இல்லையென்றாலும் - கொடுப்பது எதிராளியின் எதிர்வினையை நிச்சயம் மாற்றும். பாவனைகளாலானது இவ்வுலகு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Abdul azeez 3 years ago
பரந்து விரிந்து பலன் கொடுக்கும் அரசு நிர்வாக மருத்துவ மருத்துவமனைகள் , தன்னலமற்ற மருத்துவர்கள் , தியாகம் செய்யும் மருத்துவ பணியார்கள் ஆகியோரின் செயல்பாட்டில் குறை கூற முடியாது . இது போன்ற சுகாதார சீர் குறைகளு க்கும் பொது மக்களாகிய நாமும் ஒரு காரணம். நோயாளிகளை தவிர்த்து விசிடர்கள் மற்றவர்களையும் அவசியம் கருதி வளாகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
K Chitra 3 years ago
இது ஒரு முக்கியமான பார்வை. நம் பொது மக்கள் பெரும்பாலும் பொது நோக்கே அற்றவர்கள். எங்கும் தம் நலனே முக்கியம். இது நிச்சயமாக பெரும் மன சோர்வையும் அயர்ச்சியையும் தரும் பணியாகும். சுழற்சி முறையில் பணியாட்களை நியமிக்கலாம். மிகவும் தேவைப் பட்டாலொழிய உடன் வருபவர்களை அனுமதிக்கவே கூடாது.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 3 years ago
மருத்துவமனையின் கழிவு நீக்கம் துப்புரவு போன்ற பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு மூன்று மாதம் என்ற குறைந்த நாள் காலக்கெடுவில் டென்டர் அளிக்கலாம். சேவை தரமாக இருக்கும்பட்சத்தில் நீட்டிப்பு செய்யலாம். கழிவறைகளை பயோடாய்லெட் முறைக்கு மாற்றும் போது தண்ணீர் சிக்கனம் முதல் கண்ட பொருட்களையும் அதில் போடுவதை தடுக்க முடியும்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Sudanthirathasan 3 years ago
பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைத்து கொள்வது, பொது இடங்களை அசுத்த படுத்தாமல் இருப்பது போன்றவை மக்களுக்கு தானாக தெரிய வேண்டுமா? அல்லது கற்று கொடுக்க வேண்டுமா? தானாக தெரிய வேண்டும் என்பது பதிlலானால் அதற்கு வாய்ப்பே இல்லை. கற்று கொடுக்க வேண்டும் என்றால் அதை யார் எங்கு எப்போது கற்று கொடுப்பது? கற்று கொடுத்தால் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு போய் விடுவார்கள். இதற்கு ஒரே வழி பள்ளிகளில் கற்று கொடுத்து சுத்தம் செய்ய பழக்க வேண்டும். அதுவே நிரந்தரமான வழி. ஆனால் சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லை. அதனால் இது இப்படித்தான் இருக்கும் எத்தனை வருடம் ஆனாலும்.
Reply 7 0
VIJAYAKUMAR 3 years ago
ஏன் பள்ளி? வீட்டிலிருந்தே துவங்கலாம். நம் குழந்தைகளுக்கு நாம்தான் கற்பிக்க வேண்டும். வாசிப்பு முதல் கழிவறைச்சுத்தம் வரை வீட்டிலிருந்துதான் துவங்கவேண்டும். எல்லாவற்றையும் பள்ளியின் கைகளில் ஒப்படைக்கக்கூடாது. அது இயலாததும்கூட.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.