கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு
மாஸ்க்வா – மிரியா: பெருமிதங்களின் அழிவு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலில் உக்ரைன் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருப்பதையும், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பேரிடருக்கு உள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். எல்லாப் போர்களிலும் எதிர்த் தரப்பின் சில முக்கியமான இலக்குகளைக் குறிவைப்பதுபோலவே இந்தப் போரிலும் சில இலக்குகள் குறிவைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி இரு நாடுகளும் தங்கள் பெருமிதங்களாகக் கருதிவந்த இரு வாகனங்களின் அழிவு இரு நாடுகளிலும் பெரும் பேச்சை உருவாக்கியிருக்கிறது. மாஸ்க்வா - மிரியா எனும் அந்த இரு வாகனங்களின் கதையை இங்கே பார்ப்போம்!
கருங்கடல் மாஸ்க்வா
ரஷ்யாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ‘மாஸ்க்வா’ (Moskva). மிகப் பிரம்மாண்டமான போர்க் கப்பல் இது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. அப்போது உக்ரைன் மீதான கடல் வழித் தாக்குதலை மாஸ்க்வாதான் முன்னின்று நடத்தியது. இந்நிலையில் மாஸ்க்வா கப்பல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கருங்கடலில் மூழ்கியது. ‘தீ விபத்து ஏற்பட்டதால், கப்பல் மூழ்கியது’ என ரஷ்யா தெரிவித்தது. ‘நாங்கள்தான் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தோம்’ என அறிவித்தது உக்ரைன்.
பெரும் படை பலம் கொண்ட ரஷ்யாவின் பெருமைக்குரிய ஒரு போர்க் கப்பல், படை பலம் அற்ற, பெரும் அழிவுக்குள்ளான உக்ரைனால் தகர்க்கப்பட்டது என்கிற செய்தி உடனே சர்வதேச கவனம் பெற்றது. ரஷ்யா இந்த நிகழ்வைத் தனக்கு நேர்ந்த பெரும் அவமானமாகக் கருதியது. ரஷ்ய ஊடகம் ஒன்று ‘மாஸ்க்வா மூழ்கியதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது’ என அறிவித்தது என்றால், ரஷ்யர்கள் மாஸ்க்வாவை என்னவாகப் பார்க்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
ரஷ்யா எவ்வளவு பலம் கொண்டு உக்ரைனைத் தாக்கியபோதிலும், மாஸ்க்வாவின் இழப்பு உளவியல்ரீதியாக ரஷ்யாவைத் தடுமாறச்செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா சந்திக்கும் பெரும் இழப்பாக மாஸ்க்வா அழிப்பு பார்க்கப்படுகிறது. சமீபத்திய போரில் ரஷ்யா இழக்கும் இரண்டாவது போர் கப்பல் இது. முதல் போர்க் கப்பலான ‘சாரடோவ்’ மார்ச்சில் உக்ரைனால் தாக்கப்பட்டது.
மாஸ்க்வாவின் தனிச் சிறப்பு
இன்று உக்ரைனால் வீழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கப்பல், 1970களின் மத்தியில், அதாவது சோவியத் ஒன்றியக் காலகட்டத்தில் உக்ரைன் பிராந்தியத்தில் வைத்துதான் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு நிகராக தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இக்கப்பல், 1980களின் மத்தியில் பயன்பாட்டுக்கு வந்தது. அதிலிருந்து ரஷ்யாவின் படை பலத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாஸ்க்வா பார்க்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ‘ஸ்லாவா’. சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பிறகு, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவைக் குறிக்கும் வகையில், அது மாஸ்க்வா எனப் பெயர் மாற்றப்பட்டது.
மாஸ்க்வா கப்பல் 610 அடி நீளம் கொண்டது. அதாவது இரண்டு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்துக்குச் சமமானது. இதன் எடை 12,490 டன். எதிரிக் கப்பலை தாக்குவதற்கென்று 16 வல்கன் ஏவுகணைகள் இந்தக் கப்பலில் இருந்தன. தொலைதூர இலக்குகளையும் அருகமை இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் எஸ்-300எஃப், ஓஎஸ்ஏ - எம்ஏ ஏவுகணைகளும், ஒரு நிமிடத்தில் 5000 குண்டுகளை வெடிக்கும் துப்பாக்கிகளும் இதில் இருந்தன. உலகின் பலம் மிக்க போர்க் கப்பல்களின் ஒன்றாக மாஸ்க்வா பார்க்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு ஜார்ஜியாவுடனான மோதலில், 2014ஆம் ஆண்டு கிரைமியாவுடானான மோதலில், 2015இல் சிரியாவுடனான மோதலில் மாஸ்க்வாதான் முன்னின்றது. 2014இல் கிரைமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைத்துக்கொண்டபோதே, உக்ரைன் சுதாரித்துவிட்டது. அப்போதுதான் மோஸ்க்வாவை அழிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்க உக்ரைன் முடிவுசெய்தது. அந்த ஏவுகணையின் பெயர் ‘நெப்டியூன் - 2’. இந்த ஏவுகணையைப் பயன்படுத்திதான் தற்போது மாஸ்க்வாவை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் வீரர்கள், அதிகாரிகள் என 400க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் மாயமாகி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இறந்தது அந்தக் கப்பலின் கேப்டன்தான் என்கிறது உக்ரைன். ஆனால், கப்பல் தாக்குதலில் இறந்தவர்கள் குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
கனவு விமானம்
ரஷ்யாவின் பெருமைமிகு வாகனங்களில் ஒன்றான கப்பலை இந்தப் போரில் இழந்தது என்றால், உக்ரைன் தன்னுடைய பெருமிதங்களில் ஒன்றாகக் கருதிய பெரும் விமானத்தை இழந்திருக்கிறது. உக்ரைனின் தன்னுடைய பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகக் கருதிய சரக்கு விமானம் மிரியா (Mriya) என்று அழைக்கப்படும் அன்டோனோவ் ஏஎன் 225 (Antonov AN-225). அடிப்படையில் இது ஒரு சரக்கு விமானம். ஆனால், உலகிலேயே பெரும் சரக்கு விமானம். பிப்ரவரி 27ஆம் தேதி ரஷ்யாவால் இது உருக்குலைக்கப்பட்டது. கீவ் நகரத்தில் உள்ள விமானத் தளத்தில் அவ்விமானம் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்தத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டது.
சோவியத் ஒன்றியம் 1960, 1970களில் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்திவந்தது. அமெரிக்காவுக்குப் போட்டியாக செயல்பட்டுவந்த சோவியத் யூனியன், நவீன ரக செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஓரிடத்தில் தயாரிக்கப்படும். பிறகு அவை மற்றோர் இடத்துக்குக் கொண்டுவந்து பொருத்தப்படும். அந்தப் பாகங்கள் எடை மிகுந்தவை. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டுசெல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.
இத்தகைய எடை மிகுந்த பாகங்களை ஏற்றிச் செல்வதற்கென்று தனியே ஒரு விமானத்தை உருவாக்க சோவியத் ஒன்றியம் திட்டமிட்டது. உக்ரைன் நகரான கீவ்வைத் தலைமையிடமாகக் கொண்ட அன்டோனோவ் நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது. அப்படியாக உருவானதுதான் மிரியா. மிரியா என்றால் ‘கனவு’ என்று அர்த்தம். 1988ஆம் ஆண்டு மிரியா செயல்பாட்டுக்கு வந்தது.
வீழ்த்தப்படும் வரை உலகின் எடை மிக்க விமானமாக மிரியாதான் அடையாளப்பட்டுவந்தது. 290 மீட்டர் நீளம் கொண்ட இவ்விமானம் 250 டன் வரையில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன்கொண்டது. மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மிரியா போலவே கூடுதலாக இரண்டு விமானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கிய சமயத்தில்தான், சோவியத் ஒன்றியம் உடைந்தது (1991). அதையெடுத்து இந்த விமானம் உக்ரைன் வசம் வந்தது. அப்படியாக உக்ரைனின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக இவ்விமானம் மாறியது. இப்படித் தனிச்சிறப்பு மிக்க விமானத்தைத்தான் ரஷ்யா தாக்கி அழித்தது.
உள்ளபடி சரக்கு விமானத்தை வீழ்த்துவதற்கான தேவை என்று ஏதும் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், உளவியல்ரீதியாக உக்ரைனைப் பலவீனப்படுத்த மிரியாவைப் பயன்படுத்திக்கொண்டது ரஷ்யா. ‘எங்கள் கனவு விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால் வலிமையான, சுதந்திரமான உக்ரைன் எனும் எங்கள் கனவை ரஷ்யாவால் அழிக்க முடியாது’ என இதற்கு உக்ரைன் எதிர்வினையாற்றினாலும் எல்லா சோகங்களுக்கு மத்தியிலும் இந்தச் சோகமும் அதனைச் சூழ்ந்துகொண்டது உண்மை. ரஷ்யாவும் மாஸ்க்வாவின் அழிவால் அதே விதமான சோகத்துக்குள்ளானது.
இத்தகு பெருமிதங்கள் எல்லாமே ஆயுத வியாபாரிகளால் உருவாக்கப்படும் பெருமிதங்கள்தான். சாமானிய மக்களுக்கு இவற்றால் ஆகப்போவது எதுவுமே இல்லை என்றாலும், இப்படியான போலி பெருமிதங்கள் வாயிலாகவே அரசியல் வியாபாரிகளும் பிழைக்கிறார்கள் என்ற குரல்களும் இரு தரப்பிலும் கேட்காமல் இல்லை. ஆனால், இரு நாடுகளுமே வீழ்த்தப்பட்டதை விஞ்சும் ஒன்றை உருவாக்கும் சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கின்றன. ஆக ஆயுத வியாபாரிகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும் மேலும் இரு புதிய வியாபாரங்கள் காத்திருக்கின்றன!
3
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 3 years ago
The last sentence in the article that new business opportunities are awaiting for arms and political merchants is the crux of the war game going on between Russia and Ukraine. These self-seeking merchants would see that the war is prolonged to the extent possible so that their merchandise finds a market. They will not allow the war to end soon and their respective governments would continue to play mediation role and at the same time encourage arms sale.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.