“இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் - தேசமாக அல்ல. இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாநில மக்களையும் மன்னரைப் போல அடக்கியாள நினைக்க முடியாது. வெவ்வேறு மொழிகளையும் கலாச்சாரத்தையும் ஒடுக்கிவிட முடியாது. இது கூட்டுறவு அரசு, மன்னராட்சி அல்ல” என்று மக்களவையில் மிகத் தெளிவாகத்தான் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்தியாவுக்கே ராஜாவாகிவிட்டதைப் போல நடந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் அந்தப் பேச்சில் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இந்தியாவை ஆண்ட மன்னராட்சி, மக்களுடைய சுதந்திரப் போராட்டம் காரணமாக 1947-ல் நொறுங்கிவிட்டது, ஆனால் மீண்டும் மன்னரே நம்மை ஆள்வது போன்ற பிரமையை ஏற்படுத்தியதற்குக் காரணம் மோடிதான் என்றும் அந்தப் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல்.
ராகுல் காந்தியின் பொருள் செறிந்த அந்தப் பேச்சு, பாஜக தலைவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. அவர் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துகளை ஆதாரத்துடன் வைப்பதற்குப் பதிலாக, அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடி கண்டித்திருக்கிறார்கள் பாஜகவினர். அக்கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா, ட்விட்டரில் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினார். “இந்தியா ஒரே தேசமல்ல, மாநிலங்களின் ஒன்றியம்தான் என்று ராகுல் காந்தி கருதுவது நாட்டை ஆழ்ந்த பிரச்சினைகளுக்குப் பின்னாளில் கொண்டுபோய்விடும், மிகவும் ஆபத்தானதும்கூட. நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டும் இப்பேச்சு உணர்த்தவில்லை, சுதந்திர இந்தியாவின் அடிவேரையே அசைத்துப் பார்க்கும் வகையில் இருக்கிறது. இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரிப்பதற்கான விதையை இப்பேச்சு ஏற்படுத்துகிறது” என்று எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளார் அமித் மாளவியா.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறையும், அரசமைப்புச் சட்டம் உருவானதையும் போதிய அளவு தெரிந்துகொள்ளாதவரின் எதிர்வினை என்பதையே அப்பதிவு காட்டுகிறது. நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் இந்தியா என்பது புதிய, துடிப்பு மிக்க, மேம்பாட்டை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறும் கூட்டரசு என்றே கருதினார்கள். இந்தியா என்பது ஒரே நாடு அல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்று ராகுல் கூறியது மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வையும்கூட. இந்தியாவை இனிதான் ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்று அந்த இரு பெரும் தலைவர்கச்ளும் வலியுறுத்திச் சென்றுள்ளனர்.
எதிர்கால இந்தியாவுக்காக, ‘ஆக்கப்பூர்வ செயல்திட்டம்’ என்ற அறிக்கையை 1941-ல் தயாரித்தார் காந்தி. இந்து - முஸ்லிம் ஒற்றுமை, பொருளாதாரச் சமத்துவம், மகளிருக்குச் சம உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்று பல லட்சியங்கள் அந்தச் செயல்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்தச் செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டால், அதில் உள்ளபடி நாம் செயல்பட்டால், அகிம்சை முறையில் தானாகவே சுதந்திரத்தைப் பெற்றுவிடும் இந்தியா என்று குறிப்பிட்டார் காந்தி. ஆதிவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசுகையில், அவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். “நம்முடைய நாடு மிகப் பெரியது, இனங்களும் வெவ்வேறானவை. அப்பிரதேசங்களில் வாழும் ஆடவர், பெண்டிர் நிலை குறித்து நம்மில் மிகச் சிறந்த அறிஞர்களுக்குக்கூட எல்லாம் தெரிந்திருக்கும் என்று கூறிவிட முடியாது. நம்முடைய பிரதேசத்தில் உள்ள ஓர் இனக்குழு தொடர்பாகவே நமக்கு நிறையத் தெரியாது என்னும்போது நாடு முழுவதற்காகவும் எப்படி ஒருவரால் பேச முடியும்? மற்றவர்களுடன் இணைந்து வாழும் மனப் பக்குவத்தை உணரும் வரையில், நாமனைவரும் ஒரே தேசம் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமே இல்லை” என்று கூறியிருக்கிறார் காந்தி.
இந்தியா ஒரே குடையின் கீழ் ஆளப்படும் மன்னராட்சி அல்ல என்று கூறியதற்காக ராகுலைக் கடுமையாக சாடியவர்கள், இந்தியாவை ஒரே நாடு என்று நிரூபிப்பது கடினம் என்று பேசிய மகாத்மா காந்தியையும் அதே வேகத்தில் கண்டிப்பார்களா? இந்தப் பேச்சுக்காக ராகுல் காந்தியை பல இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களும் பாஜக தலைவர்களும் இடைவிடாமல் கண்டித்து கருத்து தெரிவித்துவரும் வேளையில், தேசத்தின் மூத்த தலைவர்கள் வாயே திறக்கமாமல் மவுனம் சாதிக்கின்றனர். இந்திய தேசம் குறித்து காந்திஜி தெரிவித்த கருத்தும்கூட கண்டிக்கத்தக்கதே என்றே அவர்கள் கருதுவார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு தெரியாதவர்கள், ராகுலின் பேச்சு ஆழ்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று பேசியதில் வியப்பேதும் இல்லை.
இந்திய தேசம் பற்றி அம்பேத்கர்
ராகுல் காந்தியை வாய்க்கு வந்தபடி வசை பாடிய இந்துத்துவ – பாஜக தலைவர்கள், இந்திய தேசம் குறித்து அம்பேத்கர் என்ன கூறியிருந்தார் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது. “இந்தியாவை ஒரு தேசம் என்று சொல்லிவிட முடியாது, இதை மக்கள் விரைவாகப் புரிந்துகொள்வது நல்லது, அப்படிப் புரிந்துகொண்டால் இதை வலுவான ஒற்றுமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் தேசமாக உருவாக்க கடுமையாக உழைப்பார்கள்” என்று மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுகிறார் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டத்தை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட சிறப்புப் பேரவையின் கடைசிக்கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்க வரலாற்றை நினைவுகூர்ந்தார் அம்பேத்கர்: “அமெரிக்காவை ஒரு நாடு என்று கூறலாமா என்று அமெரிக்கர்களுக்குள்ளே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின. ‘ஓ தேவனே, எங்கள் நாட்டை ஆசீர்வதியும்’ என்றொரு வாசகம், தீர்மானமாக ஏற்கப்பட்டது. அடுத்த நாள் பலர் வந்து இது சரியில்லை என்று வாதிட்டனர். பிறகு ‘ஓ தேவனே, ஐக்கியமாகிவிட்ட இந்த மாநிலங்களை ஆசீர்வதியும்’ என்று அந்த வாசகம் மாற்றப்பட்டது. ‘தேசம்’ என்ற வார்த்தையைப் பாமரர்கள்தான் எதிர்த்தனர், தேசிய ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதில், ‘தேசம்’ என்ற வார்த்தை அதிக முக்கியத்துவம் பெறுவதாக, எதிர்ப்புக்குக் காரணம் தெரிவித்தனர். ‘இந்தியாவின் மக்கள்’ என்ற சொற்றொடரை, அரசியல் விழிப்புணர்வுள்ள இந்தியர்கள் பலர் ஏற்கவில்லை. ‘இந்திய தேசம்’ என்ற வார்த்தையே பொருத்தமாக இருக்கும், ‘இந்தியாவின் மக்கள்’ என்பதைவிட என்று அவர்கள் கருதினர் என்று பழைய சம்பவம் ஒன்றையும் நினைவுகூர்ந்தார் அம்பேத்கர்.
“தாங்கள் ஒரு தேசம் என்று அமெரிக்கர்களால் உணர முடியவில்லை என்றால், நாம் ஒரே நாட்டவர் என்று உருவாக வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் சிந்தித்து லட்சியத்தை எட்டுவோம்” என்றார் அம்பேத்கர். அம்பேத்கரின் அத்தகைய சிந்தனைகளை அப்படியே எதிரொலிக்கும் விதத்தில்தான் பேசியிருக்கிறார் ராகுல்.
தேச விரோதமானவை - சாதிகள்
“இந்தியாவை ஒரு தேசமாக்குவது என்ற லட்சியத்தை அடைவது மிகவும் கடினமாக இருக்கும், அமெரிக்காவில் இருந்ததைவிட மெத்தக் கடினமாக இருக்கும். அமெரிக்காவில் மக்களைப் பிரிக்க சாதிகள் இல்லை. இந்தியாவில் சாதி உணர்வு தலைதூக்கி நிற்கிறது. சாதியுணர்வு தேச நலனுக்கு விரோதமானவை” என்கிறார் அம்பேத்கர்.
சாதிகள் எப்படி தேசத்தை வளரவிடாமல் தடுக்கின்றன என்றும் விளக்கியிருக்கிறார் அம்பேத்கர். முதலில், சமூக வாழ்க்கையில் அது மக்களை ஒற்றுமையாக இருக்கவிடாமல் பிளவுபடுத்துகிறது. ஒரு சாதி இன்னொரு சாதியைப் பார்த்து பொறாமையையும் வெறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்கிறது. இந்தத் துயரங்களையெல்லாம் நாம் வெகு கவனமாகக் கடந்துவந்தால்தான் ‘நாம் ஒரு நாடு’ என்ற எண்ணம் உண்மையாகும். சகோதரத்துவம் என்ற கொள்கை நிலவ, தேசம் ஒன்று அவசியம். சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவமும் சுதந்திரமும் மட்டுமே இருந்தாலும் அவை ஆழமற்ற வெளிப்பூச்சாகவே காலப்போக்கில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
இன்னொருவரிடத்தில் எழுதுகிறார்: “தேசியம் என்பது சமூக உணர்வு. நாம் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள், சகோதரர்கள் என்ற கூட்டுணர்வுதான் தேசிய உணர்வு. இந்த தேசிய உணர்வானது இரண்டுபக்கமும் கூர்மையான வாளைப் போன்றது. நம்மைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்துகொள்ள அந்த உணர்வு உதவும், அதேசமயம் நம்மைச் சேராதவர்களிடம் ஆழ்ந்த பகைமையை ஏற்படுத்திவிடும். தேசிய உணர்வு உள்ளவர்கள் தங்களுக்கிடையில் சமூகப்படிநிலையில் உள்ள வரிசைகள் குறித்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் கவனம் செலுத்தி தங்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். தேசிய உணர்வுடன், நாமெல்லாரும் ஒரே தேசத்தவர்கள் என்று ஒற்றுமை பாராட்டுவார்கள்” என்கிறார் அம்பேத்கர்.
இந்தியா குறித்தும் தேசியவாதம் குறித்தும் அம்பேத்கர் என்ன நினைத்தார் என்பதைத் தெரிந்துகொண்டால், ராகுல் காந்தியை வசைபாடும் பாஜக தலைவர்கள் அம்பேத்கரையும் அதே பாணியில் கண்டித்துப் பேசுவார்கள். இருந்தாலும் இந்திய தேசம் குறித்து காந்தியும் அம்பேத்கரும் என்ன கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். மாநிலங்களின் ஒன்றியம் என்ற சட்டகத்துக்குள்ளேயே இந்தியா வடிவமைக்கப்படுகிறது, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் வகுத்திருப்பதைப் போல மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா.
தமிழில்: வ.ரங்காசாரி
2
3
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
பிரிந்து போகும் உரிமை கண்டிப்பாக பிரியமாட்டார்கள். அடக்கி ஆள முயற்சி செய்தால் பிரிவினைவாதம் கண்டிப்பாக தலையெடுக்கும். Overdose. நாமார்க்கும் குடியல்லோம்........
Reply 0 0
Ganeshram Palanisamy 3 years ago
...உரிமை இருந்தால்.....
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.