பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ‘ராஜ விசுவாசம்’ மிக்க இங்கிலாந்து மக்கள் துக்கம் அனுஷ்டிப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்து, இந்திய மக்களில் ஒரு பகுதியினர் கண்ணீர் மல்கியதையும், அவர்களில் சிலர் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேடுகளில் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கையெழுத்திட்டதும் விவாதத்துக்கு வித்திட்டது. பிரிட்டன் அரசியாக ஏறத்தாழ 70 ஆண்டுகள் கோலோச்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முதலாளியச் சுரண்டல், ராணுவ ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றுக்கு அந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் மொத்தம் 15 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் தந்தவர் இரண்டாம் எலிசபெத். ‘இத்தகைய கடந்த கால ஆக்கிரமிப்பாளர்களுக்கு இப்படியான இரங்கல் எப்படி சாத்தியமாகிறது?’ என்று அதிர்ச்சி கலந்த அதிருப்திக் கேள்வியை சமூக வலைதளங்களில் பார்க்கவும் முடிந்தது.
உண்மையில் நாம் இதில் அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை. ஏனெனில், நம்மை இரு நூற்றாண்டுகளாகச் சுரண்டி, ஒடுக்கிவந்த வெள்ளையர்களையும் உள்ளூர் அளவில் அப்படியான ஆதிக்கச் சாதியினரையும் மேன்மக்களாகப் பார்ப்பது இந்திய இயல்பு. அதேபோல, யாரெல்லாம் சுரண்டப்படுபவர்களாகவும் இந்தச் சுரண்டல் அமைப்பால் நம் சமூகத்தில் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்களைக் கீழானவர்களாகப் பார்ப்பதும் இந்திய இயல்பு. சொல்லப்போனால், தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடிகள் மீது இழைக்கப்படும் வன்முறைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் கடப்பதற்கான வேர் இதில் புதைந்துள்ளது. ஆம், பெரும்பாலான இந்திய மக்களுடைய இரட்டை ஆளுமையின் வெளிப்பாடுதான் இது.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு விவகாரத்தை எடுத்துக்கொள்வோம்.
2002இல் குஜராத்தில் முஸ்லிகளுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பலியானவர்களில் பில்கிஸ் பானுவும் ஒருவர். என்டிடிவி தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் பர்க்கா தத் வழி வெளியான பில்கிஸ் பானுவின் கதை சொன்ன எவரையும் நிலைகுலைக்கக் கூடியது. இதன்படி, அந்தக் கலவர நாட்களில் 21 வயதே நிறைந்திருந்த, ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, தன் தாயார் கண்ணுக்கு எதிராகவே கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்; பானுவின் கண்ணுக்கு முன்னால் அவரது தாயாரும் அவரது இரு சகோதரிகளும் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவின் மூன்று வயதுக் குழந்தையை மேலே தூக்கியெறிந்த வன்முறையாளர்கள், அக்குழந்தையின் தலை கருங்கல் மீது விழுந்து சிதறிப்போனதைக் கண்டு களித்தனர். பின்னர் பில்கிஸ் பானுவின் இரு சகோதரிகளையும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பேரையும் கொன்று குவித்தனர். பலரால் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானு இறந்துவிட்டார் என்று நினைத்த அந்த வன்முறைக் கும்பல் அவரை ஒரு புதருக்குள் தூக்கியெறிந்துவிட்டுச் சென்றது.
ஐந்து மணி நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த பில்கிஸ் பானு, தானும் இறந்திருக்கக்கூடாதா என்று அழுதிருக்கிறார். குப்பையில் கிடந்த சில கந்தலாடைகளை அணிந்துகொண்டு, உணவும் தண்ணீருமின்றி ஒரு நாள் முழுவதையும் மலையுச்சியொன்றில் கழித்த அவர், மறுநாள் அருகிலுள்ள பழங்குடி மக்கள் கிராமம் ஒன்றுக்குச் சென்று தான் இந்து என்றும் தனக்கு உணவும் இடையும் தர வேண்டும் என்றும் மன்றாடியிருக்கிறார். ஆனால், மதவாதத் தாக்கம் பெற்றிருந்த அந்தக் கிராம மக்கள் அவர் மீது காதால் கேட்க முடியாத வசைமொழிகளைப் பொழிந்திருக்கின்றனர். கொடுமை என்னவென்றால், அவரையும் அவரது சகோதரிகள், தாயாரையும் கூட்டுவன்புணர்ச்சி செய்தவர்களும் பின்னர் 14 பேரைக் கொன்றவர்களும் பில்கிஸ் பானுவின் சொந்த ஊர்க்காரர்கள். பில்கிஸ் பானு குடும்பத்தார் அவர்களுக்குப் பசும்பால் விற்றுவந்தவர்கள்.
2004இல் இந்த வழக்கின் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். அகதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. ஆனால், அப்போதிருந்த சிபிஐ சேகரித்திருந்த தகவல்கள் சிதைக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், சாட்சிகள் துன்புறுத்தப்படுவார்கள் என்றும் சரியாகவே கருதிய பில்கிஸ் பானுவின் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த வழக்கு விசாரணையை மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றியது. அங்குள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, போதிய சாட்சியங்கள் இல்லை என்று 7 பேரை விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணைக் காலத்திலேயே காலமானார். வழக்கு மேல் முறையீட்டுக்குப் போனபோது, மும்பை உயர் நீதிமன்றம் அந்த 11 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது.
இவர்கள்தான் சர்வோத்தமர்கள்!
இந்திய சுதந்திரத்தின் பவள விழாவின்போது (75ஆம் ஆண்டு) செங்கோட்டையில் ‘பெண் சக்தி’ பற்றி பிரதமர் மோடி பேசிய அதே காலகட்டத்தில் அந்த 11 பேரையும் விடுதலை செய்ய குஜராத் மாநில அரசாங்கம் முடிவு செய்தது. “அவர்கள் பிராமணர்கள், சர்வோத்தமர்கள்” என்று கொண்டாடியவர்களில் ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்; தண்டனைக் காலம் முடிவதற்கு முன் சட்டப்படியான காரணங்களை முன்னிட்டு சில கைதிகளை விடுவிக்கப் பரிந்துரைக்க அமைக்கப்படும் வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவர் அவர். இந்த விடுதலையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இவை மிக அண்மைச் செய்திகள்.
கொஞ்சம் பழைய செய்தி என்னவென்றால், ஆயுள் தண்டனை பெற்ற இந்த 11 பேரும் குஜராத் சிறையிலிருந்தபோதே ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டார்கள் என்பதும், அவர்களுடைய உறவினர்களின் / நண்பர்களின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காகக்கூட ஏராளமான முறை பரோலில் விடுவிக்கபட்டனர் என்பதும்தான்! அந்த பரோல் காலம் சில சமயம் 2 மாதம் வரை நீடித்திருக்கிறது. அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவரான மனித உரிமைச் செயல்பாட்டாளரும் பத்திரிகையாளருமான தீஸ்தா செதல்வாட் பண மோசடிக் குற்றச்சாட்டின்பேரில், கைதுசெய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் போராட்டத்துக்குப் பின் உச்ச நீதிமன்றம் தற்போது அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது என்றாலும், மற்றொருவர் - மூத்த வழக்குரைஞர் - இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
இந்த 11 பேர் விடுவிக்கப்பட்டதை, பீமா கோரெகவோன் வழக்கில் கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு காலம் விசாரணைக் கைதிகளாக உள்ள, இதுவரை குற்றப் பத்திரிகை வழங்கபடாத மனித உரிமைச் செயல்பாட்டடாளர்களின் அவலநிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருவர் – ஸ்டேன் சாமி – ஏற்கெனவே இறந்துவிட்டார். இன்னொருவர் நோய்வாய்ப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கிறார்!
எப்படியெல்லாம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன?
தண்டனைக் கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்வது அதற்கென அமைக்கப்படும் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது. அக்குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர். தண்டனைக் கைதிகளில் சிலர் தங்கள் பண பலம், சாதி பலம், அரசியல் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு தண்டனைக் காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்யப்படுவது பல மாநிலங்களிலும் நடக்கத்தான் செய்கிறது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அந்தக் குழுக் கூட்டத்தை நடத்தினார் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது). ஆனால், அவரது ஆட்சியில் எவருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் அங்கு 20 - 25 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். தற்போதைய முதல்வர் கெஜ்ரிவாலும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
ஹைதராபாத் மத்திய சிறையில் கணேஷ் என்ற நக்சலைட் 1997ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நன்னடத்தையின் பொருட்டு மாநில அரசாங்கமும் காவல் துறையும் அவரை விடுவிக்க விரும்புகின்றன. அவர் அந்தச் சிறை முழுவதிலும் பழ மரங்களை நட்டு, எல்லோருக்கும் பழங்கள் கிடைக்கும்படி செய்துள்ளவர்; மிகவும் நன்னடத்தைக் கொண்டவர் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அவர் மீது ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிஐ வழக்கு ஒன்று இருப்பதால், அவர் இன்னும் சிறையிலேயே இருக்க வேண்டியுள்ளது.
தீயூழாக நீதிமன்றங்கள்கூட மனிதாபிமானம் இன்றி, அரசமைப்பு விரோத கருத்துகளைக் கூறும் அளவுக்கான நீதிபதிகளையும் கொண்டிருக்கின்றன.
கல்விக்கூடங்களுக்குச் சீருடையுடன் ஹிஜாபும் அணிந்து செல்ல அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் “இந்தக் கோரிக்கையை தர்க்கரீதியாக விரிவுபடுத்தினால், உடையணியாமல் இருப்பதும்கூட அரசமைப்புச் சட்டம் 21இன்படி ஓர் அடிப்படை உரிமை என்று சொல்வீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.
கேரளத்தைச் சேர்ந்த ஒரு இடதுசாரிக் கவிஞர் சிவிச் சந்திரன் மீது தலித் பெண்னொருவரைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறும் புகாரின்பேரில் வழக்கு நடந்துவருகிறது. அவரைப் பிணையில் விடுவித்த நீதிபதி கூறிய காரணம் இது: “குற்றஞ்சாட்டியவர் பட்டியலினப் பெண் என்பதை நன்கு தெரிந்திருந்த சிவிக் சந்திரன் அந்தப் பெண்ணின் உடல் மீது தன் கையை வைத்திருப்பாரா?”
பெண்ணியர்களில் சிலரும்கூட படித்த, உயர்சாதிப் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுவதற்கு எதிராகக் கொடுக்கும் வலுவான குரலுக்கு இணையாக தலித், முஸ்லிம், பழங்குடி போன்ற சாமானிய பெண்கள் மீது அன்றாடம் நடத்தப்பட்டுவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை.
அன்றே சொன்னார் அம்பேத்கர்
நம் நாட்டிலுள்ள சாதிய அமைப்பு எல்லோருக்கும் பொதுவான அறவியலைக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அறம், மறம் என்பன அவரவர் சாதி அளவுகோல்படியே தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் அம்பேத்கர் 1936ஆம் ஆண்டிலேயே பேசியிருந்தார். நம் நாட்டின் பழம்பெரும் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவர்கள், தங்கள் வீட்டிலுள்ள ஒரு நாற்காலியோ உணவுத் தட்டோ உடையும்போது அடையும் வருத்தத்தின் அளவைக்கூட முஸ்லிம்களும் தலித்துகளும் அனுபவிக்கும் துன்பங்கள் மீது காட்டுவதில்லை. ஒருகாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிழல்படுவதுகூடப் பாவம் என்று நினைத்தவர்களின் வழித்தோன்றல்களால் அந்தப் பாவத்தைச் செய்தவர்களைத் தண்டிக்க முடியாததற்குக் காரணம், அவர்களது மனமாற்றம் அல்ல; மாறாக, நம் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளிடம் சிறிது ஜனநாயக உணர்வு இருந்தபோது உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் காரணம்!
பில்கிஸ் பானு வழக்கைப் பொறுத்தவரை, அன்றிருந்த தேசிய மனித உரிமை ஆணையம், அவரது வழக்கை வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது. இன்றுள்ள தேசிய மனித உரிமை ஆணையம் அந்த 11 பேரை விடுதலை செய்ததைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது. ஆனால், ஆணையத்திலுள்ள உறுப்பினர்கள் எவரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை; அதைப் பற்றிய தங்கள் கருத்துகளைக் கூறவுமில்லை. அந்த ஆணையத்தில் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களாக (ex officio) உள்ளவர்கள் தேசிய சிறுபான்மை இனத்தவருக்கான ஆணையத்தின் தலைவர், தேசியப் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான ஆணையத்தின் தலைவர் ஆகியோர். அவர்களும்கூட எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதன் பின்னணியில் எல்லாம் மேல் - கீழ் இந்திய மனம் திட்டவட்டமாக இருக்கிறது.
முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலையினர் கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது மட்டும் இல்லை; சமூகத்துக்கு அவர்கள் மகத்தான பங்களிப்பைச் செலுத்தும்போதும் இதே மனம் வெளிப்படுகிறது. இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பங்கேற்றவர்களில் விளிம்புநிலையினரின் பங்களிப்பு இடதுசாரி வரலாற்றாசிரியர்களாலும்கூட உரிய வகையில் பேசப்படவில்லை அல்லது அவர்கள் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டுள்ளனர் என்று சிந்தனையாளர் கோபாட் காந்தி அண்மையில் ஓர் ஆங்கில ஏட்டில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது. மஹாராஷ்டிரத்தில் 1860களில் தொடங்கி உறுதியான போராட்டத்தை முன்னெடுத்த இனாயத் அலி, விலாயத் அலி, கர்மத் அலி, ஜௌனுதீன், ஃப்ர்ஹட் ஹுஸேன்; தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கிய இப்ராஹிம் கான், பல்வந்த ஃபட்கெ போன்று இந்நாட்டு விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை இழந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் முற்றிலுமாக உதாசீனப்படுத்தப்பட்டனர் அல்லது மறக்கடிக்கப்பட்டுவிட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காகப் போர்க்களத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இறங்கித் தங்கள் இன்னுயிரை மாய்த்துகொண்ட தலித் பெண்மணிகளான உதா தேவி, ஜால்காரி பாய், ராணி கய்டின்லியு, குயிலி ஆகியோரை முதன்மை நீரோட்ட வரலாற்றாசிரியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்ற கேள்விகளை கோபாட் காந்தி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வியின் வரலாற்று நீட்சிதான் பில்கிஸ் பானு இன்று எதிர்கொள்ளும் அநீதி.
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த எலிசபெத் ராணியின் மரணத்துக்குக் கண்ணீர் வடிப்பதும், பில்கிஸ் பானு யார் எனக் கேட்பதும் ஒரே இந்திய மனம்தான். அதன் அறம் அன்றும் ஒன்றுபோல் இல்லை; இன்றும் ஒன்றுபோல் இல்லை!
4
3
1
2
பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
மு.வசந்தகுமார் 2 years ago
வர்க்க சமூகத்தில் அறம், நீதி எல்லாம் வர்க்கம் சார்ந்ததுதான். ஆண்டைகளின் உயிரும் உணர்வுகளும் வானளவு உயர்ந்தவை. அடிமைகளின் உயிரும் உணர்வுகளும் ஒரு பொருட்டே அல்ல.. இலக்கியங்களும் சரி, இன்றைய ஊடகங்களும் சரி அந்தக் கருத்துகளைத்தான் சமூகத்தில் தொடர்ந்து நிலைக்க வைக்க இடையறாத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றைய சமூகத்தில் முதலாளிய வர்க்கத்தின் ஆதிக்கத்தில் உள்ள காட்சி ஊடகங்களும் எழுத்து ஊடகங்களும் அதைத் திறம்படச் செய்து வருகின்றன. இந்த ஊடகங்களின் ஆதிக்கத்தில்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சிந்தனையையும் பண்பாட்டையும் இந்த ஊடகங்களே இன்று கட்டமைத்து வருகின்றன. ஆளும் வர்க்கத்தையும் அதன் ஊடகங்களின் ஆதிக்கத்தையும் வீழ்த்தாமல் மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியாது. சமூகத்தில் உண்மையான அறத்தையும் நிலை நாட்ட முடியாது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 2 years ago
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.....
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
வைகை சுரேஷ் 2 years ago
அருமையான, ஆழமான, அவசியமான கட்டுரை.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 2 years ago
எதன் மீதும் நம்பிக்கையற்று போகிறது. குறிப்பாக நீதித்துறையின் மீது. குழந்தைகளுக்கு எதைச் சொல்லி நம்பிக்கை தருவது? பில்கிஸ் பானுவின் கண்ணீருக்கு சமூகம் கொடுக்க வேண்டிய விலையை பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள் குற்றவாளிகளை விடுவித்தவர்களும் அவர்களைக் கொண்டாடியவர்களும். எதிர்ப்புகளுக்கு அசைகிறதா அரசாங்கம்? மக்களாட்சியில் மக்கள் குரலுக்கு தரப்படும் மதிப்புக்கு மற்றொரு உதாரணம் இது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Raja.N 2 years ago
நல்ல கட்டுரை.. இந்தியர்கள் ரட்சிக்க பட வேண்டும்...
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.